மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumMembersActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumMonisha Completed novels: Meendum UyirthezhuMeendum Uyirthezhu - 6Post ReplyPost Reply: Meendum Uyirthezhu - 6

Quote from monisha on August 4, 2022, 10:25 AM

6

பூமாரி பொழிந்தது
வைத்தீஸ்வரி உடல் நலம் குன்றியதாக அவளின் தந்தை சோமசுந்தரத்திற்கு செய்தி வந்தது. ஆதலால் வைத்தீஸ்வரியின் தாய் கண்ணாம்பாள் ரொம்பவும் பதற்றமடைந்தாள். இருவரும் வைத்தீஸ்வரியின் குடிலுக்குப் புறப்பட, அக்னீஸ்வரியும் வருவதாகப் பிடிவாதம் பிடித்து அவர்களுடன் சென்றாள். பல நோய்களைக் குணப்படுத்தும் சிறப்பான வைத்தியர் சுவாமிநாதன் எனினும் தாயிற்கு நிகரான அரவணைப்பையும் அக்கறையையும் எந்த மருந்தும் தர முடியாது. அந்த எண்ணத்தோடே விஜயவர்தன் அவர்களுக்குச் செய்தி அனுப்பினான். வைத்தீஸ்வரிக்குதான் உடல்நிலை சரியில்லை என்ற பொழுதும் உண்மையிலேயே நோயுற்றவனாகக் காட்சியளித்தது விஜயவர்தன்தான். போனமுறை சந்தித்த போது அவனிடம் இருந்த குறும்புத்தனமும் புன்னகையும் துளி கூட இல்லை. வைத்தீஸ்வரியின் மீது அவன் கொண்ட அன்பும் காதலும் அளவற்றது. அவன் அத்தனை தூரம் வேதனையுடன் காட்சியளிக்கக் காரணமும் இருந்தது. அவனின் தாய் ஒரே பிரசவத்தில் இரு பிள்ளைகளைப் பெற்றுவிட்டு உயிர் துறந்தாள். அவள் குழந்தைகளைப் பெற்றெடுப்பதற்கு முன்னமே இரட்டைக் குழந்தையைப் பிரசவிப்பது சிரமமெனச் சுற்றி இருந்தவர்கள் அவள் மனோதிடத்தைத் தகர்த்துவிட, பிள்ளைப்பேற்றின் போது அச்சம் கொண்டதால் விஜயவர்தனின் தாய்க்கு அத்தகைய நிலை ஏற்பட்டது. வைத்தீஸ்வரி கருவுற்ற போது சுவாமிநாதன் நாடிப் பிடித்து இரட்டைக் குழந்தை எனக் கணித்துவிட்டார். அவர் தன் மனைவிக்கு நேரிட்டது போல் மருமகளுக்கும் நிகழக் கூடாதென ரொம்பவும் அக்கறையாய் கவனித்துக் கொண்டார். விஜயவர்தனும் இரட்டைக் குழந்தை என யாரிடமும் சொல்லாமல் அவளைப் பார்த்து பார்த்து கவனித்துக் கொண்டான். அக்னீஸ்வரியிடம் மட்டும் மூலிகை எடுத்து வர பயணம் மேற்கொண்ட போது உரைத்திருந்தான். வைத்தீஸ்வரிக்கு மனதளவில் இரட்டைக் குழந்தைகளைப் பிரசவிப்பதால் ஆபத்து என்ற அச்சம் தலைத் தூக்கினால் தன் தாய்க்கு நேர்ந்த நிலை மனைவிக்கும் நேரிடுமோ என அவன் ரொம்பவும் பயந்திருந்தான். தன் அத்தானுக்கு அக்னீஸ்வரி தைரியம் சொல்லி அவனைச் சமாதானம் செய்தாள். அதேநேரம் கண்ணாம்பாளும் வந்ததில் இருந்து மகளுக்கு அவருக்குத் தெரிந்த கை வைத்தியங்களெல்லாம் செய்து கொண்டிருந்தார். அவரின் கவனிப்பில் வைதீஸ்வரியின் உடல்நிலையும் ஒருவாறு முன்னேற்றம் அடைந்திருந்தது. இவை எல்லாம் ஒரு புறமிருக்க அக்னீஸ்வரி விஷ்ணுவர்தன் மீது கொண்ட கோபத்தைக் கிஞ்சிற்றும் மாற்றிக் கொள்ளவேயில்லை. அவள் நடந்த நிகழ்வை மனதில் கொண்டு விஷ்ணுவர்தனிடம் பேசுவதையே தவிர்த்தாள். அவன் இயல்பாய் பேச வரும் போதெல்லாம் பேசுவதற்கான வாய்ப்பைத் தராமல் அந்த இடத்தை விட்டு விலகி வந்தாள். விஷ்ணுவர்தனைக் கண்டாலே வெறுப்பைக் காட்டியவள் மனதளவில் யாரும் அறியா வண்ணம் ருத்ரதேவனை ஆராதித்துக் கொண்டிருந்தாள். நிலமகள்… அருகாமையில் சுழன்று வரும் சந்திரனைக் கவனிக்காமல் தொலைவில் இருக்கும் சூரியன் மீது மையல் கொண்டு சுற்றி வருவதுதானே இயற்கையின் படைப்பு! இந்தச் சூழ்நிலையில் விஜயவர்தன் விஷ்ணுவர்தனை அக்னீஸ்வரி தவிர்ப்பதைக் கவனித்துக் கொண்டுதான் இருந்தான். அவளிடம் எப்படியாவது தன் தம்பியின் மனதைச் சொல்லி புரிய வைக்க அவன் எண்ணிய போது, விஷ்ணுவர்தன் இடைபுகுந்து அவள் மனதைக் காயப்படுத்தியதிற்காக தானே அவளிடம் மன்னிப்பு கோர வேண்டும் எனப் பிடிவாதமாய் உரைத்து தன் தமையனை அவளிடம் பேசவிடாமல் தடுத்துவிட்டான். அன்று காலை சூரியன் உதித்து இளஞ்சிவப்பு நிறத்தால் வான் வீதியை வண்ணமயமாய் மாற்றிக் கொண்டிருக்க, அக்னீஸ்வரி ஒவ்வொரு நாளின் தொடக்கத்திலும் ருத்ரதேவனின் சந்திப்பை எதிர்நோக்கிக் காத்திருந்தாள். அவளின் எண்ணம் அன்று ஈடேறியது.  அக்னீஸ்வரியின் செவிகளில் வெகுதூரத்தில் கேட்ட குதிரையின் கனைப்பு சத்தம் ருத்ரதேவனை அவளுக்கு நினைவுப்படுத்தியது. முதல் முறையாய் தான் அவனைக் குளக்கரையில்தான் சந்தித்தோம் என்பதை நினைவுக் கூர்ந்தவள் குதிரையின் சத்தம் அந்தத் திசையில் ஒலிப்பதை எண்ணி அவ்விடத்திற்கு விரைந்தாள். யாரிடமும் சொல்லாமல் ஓட்டமும் நடையுமாய் முட்கள், கற்கள் என்றும் பாராமல் அவள் குளக்கரையில் மூச்சிறைக்க வந்து நிற்க, அங்கே யாருமே இல்லை. அந்த இடம் வெறிச்சோடியிருந்தது. அவள் மனம் எந்தளவுக்கு ஏமாற்றம் கொண்டது என்பதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அவள் விழிகளில் நீர் பெருகிவிட, அந்தத் தருணத்தில் அவளின் தலை முதல் பாதம் வரை பூமாரி பொழிந்தது. வண்ணமயமான பூக்கள் அவள் தேகத்தை வருடி பாதத்தில் சமர்ப்பணமாகிட, ருத்ரதேவன்தான் இவ்வாறு பூக்களை தன் மீது தூவினான் என்பதை உணர்ந்து நெகிழ்ந்து போனாள். ருத்ரதேவன் அப்போது தன் குதிரையிலிருந்து தாவி இறங்கி கம்பீரமாய் அக்னீஸ்வரியின் அருகில் வந்து நிற்க, அவளோ தன் தேகத்தின் மீது தங்கிவிட்ட மலர்களைத் துடைத்து விட்டபடி, "இதென்ன விளையாட்டு" என்றாள். ருத்ரதேவன் முக மலர, "என் காதலியைக் காண வரும் போது வெறுங்கையோடு வருவதா?! அதனால்தான் நான் வந்த வழித்தடம் எல்லாம் அழகாய் மலர்ந்திருந்த பூக்களை உனக்காகப் பறித்து வந்தேன்" என்றான். "நீங்கள் ஆசையாய் பறித்த மலர்களை என் மேல் கொட்டி இப்படி வீணடித்துவிட்டீர்களே!" என்றாள். அவன் சத்தமாய் சிரித்து, "வீணடித்தேனா... இந்த மலர்களை எல்லாம் உன்னைப் போல் அழகான மாலையாய் என்னால் கட்ட முடிந்திருந்தால் கோர்த்து உன் தோள்களில் சூடியிருப்பேன். ஆனால் அவ்விதம் எனக்குத் தெரியாது என்பதால் என் மனதில் குடி கொண்ட அழகு தேவதையான உனக்கு மலர்களால் அர்ச்சனை செய்துவிட்டேன்" என்று உரைத்தான். இவன் வீரம், அறிவில் மட்டும் சிறந்தவனல்ல, காதல் புரிவதிலும் வல்லவன் என்று எண்ணி வியந்த அக்னீஸ்வரி, இத்தகைய அழகான காதலைப் பெற தான் பெரும் பாக்கியம் செய்தோம் என உள்ளுர மகிழ்வுற்றாள். "சரி... உன் தமக்கைக்கு உடல் நிலை சரியில்லை என்று கேள்விப்பட்டேன். இப்போது நலமா?!" என்று அவன் விசாரிக்க அவன் எல்லாத் தகவல்களையும் அறிந்தே இங்கு தன்னைக் காண வந்திருக்கிறான் என்பதை எண்ணி அவள் மேலும் வியப்படைந்து, "ம்... நலம்தான்" என்றாள். "சரி அக்னீஸ்வரி, நான் உன்னிடம் ஒரு விஷயம் சொல்ல வேண்டும். அது யாதெனில்..." என்று ருத்ரதேவன் பேசி முடிக்கும் முன்னரே, அக்னீஸ்வரி முந்திக் கொண்டு, "தங்கள் தந்தையிடம் நம் காதலைக் குறித்துப் பேசி விட்டீரா?!" என்று கேட்டாள். அவள் ஆர்வத்தைப் பார்த்து பேச வந்ததை உரைக்காமல் மீண்டும் யோசித்துவிட்டு, "இல்லை அக்னீஸ்வரி தந்தையிடம் எதுவும் சொல்லவில்லை. இப்போது நிலைமை சரியில்லை. வேறு ஒரு செய்தி பற்றி உன்னிடம் தெரிவிக்கவே வந்தேன்" என்றான். "எதைக் குறித்து?!" என்றவள் அவனைக் கேள்வியோடு நோக்க, "நான் நம் படைகளோடு உம்பல் காடு வரை போகிறேன். அங்கே அந்நியப் பிரவேசங்கள் நிகழ்வதாகத் தகவல். அதனை முன்னமே நாம் தடுத்து நிறுத்த வேண்டும். இல்லையெனில் நம் ஆரை நாடு மற்றும் அதனை சுற்றியுள்ள மற்ற சிற்றரசுகளுக்கும் ஆபத்து நேரிடும். ஆதலால் நம் நாட்டின் பாதுகாப்பு நிமித்தமாய் சில சிற்றரசர்களோடு சேர்ந்து நானும் நம் படைக்காவலர்களோடு அங்கே செல்ல இருக்கிறேன்" என்று அப்போதைய மோசமான சூழ்நிலையை அவளிடம் தெளிவுபடுத்தினான். இதனைக் கேட்ட மாத்திரத்தில் அக்னீஸ்வரியின் விழிகளில் நீர் தேங்கி நின்றது. உடனே ருத்ரதேவன் தன் கரங்களால் அவள் முகத்தை நிமிர்த்தி, "என்னவாயிற்று? நான் என்ன போருக்கா செல்கிறேன். வெறும் பாதுகாப்புக்காகத்தான் படைகளைத் திரட்டிச் செல்ல இருக்கிறேன். அப்படியே போருக்குச் சென்றால்தான் என்ன? என் வீரத்தின் மீது உனக்கு நம்பிக்கை இல்லையா?!" என்று வினவ அக்னீஸ்வரி அவனிடம் இருந்து விலகி வந்தாள். "தங்கள் வீரத்தைக் குறித்து எனக்குச் சந்தேகம் இல்லை. நீங்கள் சொன்னதைக் கேட்டு என்னையும் அறியாமல் ஏதோ ஒரு இனம் புரியாத சோகம் கண்ணீரை வரவழைத்துவிட்டது" என்றாள். "கவலை கொள்ளாதே அக்னீஸ்வரி. நான் விரைவில் வந்து விடுவேன். வந்த பிறகு நம் திருமணம்தான். தயாராக இரு" என்று ருத்ரதேவன் தீர்க்கமாய் உரைத்து, தைரியம் சொல்ல ஏனோ மனதில் ஆட்கொண்ட சோகம் அக்னீஸ்வரிக்கு அகலவேயில்லை. "உன் கவலை தோய்ந்த முகத்தையும் உன் கண்ணீரையும் காணவா நான் இத்தனை தூரம் வந்தேன்" என்று அவன் சூசகமாய் சொல்லி அவளைப் பார்வையால் அளவெடுத்தான். "நீங்கள் வெகுதூரம் செல்லப் போகும் செய்தியைச் சொல்லி என்னை வேதனைப்படுத்ததானே இங்கு வந்தீர்கள்" என்றவள் அவனை நிமிர்ந்து நோக்காமல் கோபத்தோடு உரைத்தாள். "இல்லை அக்னீஸ்வரி" என்று அவன் பாதங்கள் அவளை நெருங்கி வர, "வேறு எதற்கு வந்தீர்கள்?" என்று கேட்டு அவனை அவள் நிமிர்ந்து நோக்கிய போது அவன் தன் பாதங்களை முன்னெடுத்து வைத்து கொண்டே, "நான் உன் மான் விழிகளில் மயக்கம் கொள்ள... உன் செவ்விதழ்களில் தேன் பருக... மென்மையான உன் தேகத்தை என் வன்மையான கரங்களால் சிறை எடுக்க" என்றபடி இறுதியாய் எட்டி அவளை அணைக்க முற்பட்டான். அவள் சுதாரித்து அவனிடம் இருந்து விலகி நின்று கொள்ள அவன் ஏமாற்றத்தோடு, "நானே வெகு தூரம் உன்னை விட்டுச் செல்ல இருக்கிறேன். இப்போதே விலகிச் செல்வானேன்" என்று கெஞ்சலோடு சொல்லி மீண்டும் அவள் அருகில் வர எத்தனித்தான். "எட்டி நில்லுங்கள் இளவரசே... என்னை நீங்கள் காதல் சிறையில் ஆட்படுத்திவிட்டீர்கள்... இப்போதைக்கு அது போதும்" என்றவள் அவனை நெருங்கவிடாமல் மீண்டும் விலகி ஓட, "இளவரசரின் ஆணை... அவ்விடமே நில்" என்று அவன் கட்டளை விதித்தான். "இளவரசர் அல்ல... ஈரேழு லோகங்களை ஆளும் அரசர்களே வந்தாலும் என் பெண்மைக்கு இழுக்கு ஏற்படுத்தும் செயலை நான் செய்யத் துணியமாட்டேன்" என்றாள். அவன் அதிர்ந்த பார்வையோடு, "உன் காதலனாகிய நான் உன்னை அணைப்பது உன் பெண்மைக்கு இழுக்காகிவிடுமா அக்னீஸ்வரி?!" என்று கேட்க, "காதலனுக்கு என் மனதின் மீது மட்டுமே உரிமை. கணவன் என்ற உறவிற்குதான் சகல உரிமையும்" என்றாள். ருத்ரதேவன் முகத்தில் புன்னகை அரும்பியது. அவளின் பண்பை எண்ணி பெருமிதம் கொண்டவன், "ஆகட்டும்... அத்தகைய உரிமை எனக்குக் கிட்டும் போது உன்னை இது போன்று தப்பிச் செல்ல விடமாட்டேன்" என்றான். "நான் அப்போது நிச்சயம் தப்பிச் செல்ல முயலமாட்டேன்" என்று அழகாக இதழ்கள் விரியப் புன்னகை செய்தவளை ஏக்கத்தோடு பெருமூச்செறிந்தபடி பார்த்தவன், "என்னை ஏக்கத்தோடும் ஏமாற்றத்தோடும்... நீ வழியனுப்புகிறாய் அக்னீஸ்வரி" என்றான். "ஆகட்டும்... நீங்கள் மேற்கொள்ளும் பணியைச் செவ்வனே முடித்துவிட்டு வாருங்கள். என் கரங்களால் பல வண்ண மலர்களால் மாலை கோர்த்து உங்கள் தோள்களில் சூடக் காத்திருப்பேன்" என்றாள். "உன் அழகிய வளைக்கரங்களால் மாலையைச் சூடிக் கொள்ள நானும் விரைந்து திரும்புவேன்" என்று உரைத்த ருத்ரதேவன் தன் குதிரை மீது தாவி ஏறி அவளின் அழகைப் பார்த்து ரசித்தவாறு அதன் கயிற்றைப் பிடித்து இழுத்து ஓடச் செய்தான். அக்னீஸ்வரி அவனைத் தன் விழிகளில் இருந்து மறையும் வரை பார்த்து விட்டு, பின் குடில் நோக்கி மெல்ல நடந்தாள். அவள் எண்ணமெல்லாம் அவனின் காந்தமான புன்னகை ஒளிர்ந்த வதனத்திலேயே நிலைப்பெற்றுவிட்டது.

Cancel “தூரமில்லை விடியல்” என்னுடைய புத்தம் புது தொடர் துவங்கப்பட்டுள்ளது. வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா