மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumMembersActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumMonisha Completed novels: Meendum UyirthezhuMeendum Uyirthezhu - 9 & 10Post ReplyPost Reply: Meendum Uyirthezhu - 9 & 10

Quote from monisha on August 10, 2022, 6:11 PM

9

அவனின் பிம்பம்
விஷ்ணுவர்தனையும் அக்னீஸ்வரியையும் அரங்கநாதன் திருக்கோயிலுக்கு அழைத்துச் சென்ற பின்னர் பிறந்த வீட்டில் இருந்து விஜயவர்தனுடனும் வைத்தீஸ்வரியுடனும் நீலமலை குடிலுக்கு முறைப்படி அனுப்பி வைக்கத் தீர்மானித்தனர். அவ்வாறே நால்வரும் கோயிலுக்கு வர, அக்னீஸ்வரிக்கோ அரங்கநாதனை தரிசிக்கும் விருப்பமே இல்லை. எத்தனையோ வண்ணமயமான மாலைகளை அரங்கநாதனுக்காகக் கட்டி அணிவித்து அழகு பார்த்திருக்கிறாள். ஆனால் அந்த அரங்கநாதன் தன் வாழ்வை இரு ஆடவர் கையில் சிக்க வைத்து பொருளற்றதாக மாற்றிவிட்டார் என்று அவர் மீது அபரிமிதமான கோபத்திலிருந்தாள். இருப்பினும் எல்லோருக்காகவும் விருப்பமின்றி அவள் கோயிலுக்குள் நுழைந்தாள். கருவறை மண்டபத்திற்குள் நுழைந்து எல்லோரும் இறைவனை மனமுருகி வேண்ட, அவள் மட்டும் தன் மனதில் நினைத்த கேள்வியை மௌனமாகக் கேட்டாள். "எதற்காக இதே திருத்தலத்தில் என்னை இளவரசரை சந்திக்க வைத்தாய்? பின் இங்கேயே எனக்கு விருப்பமில்லாத திருமணத்தை முடித்தும் வைத்தாய்? இரண்டில் ஒன்றையாவது நீ தடுத்து நிறுத்தி இருக்கலாமே... ஏன் இவ்வாறு செய்தாய்? நான் தினந்தோறும் உனக்கு மாலைக் கட்டிச் சாற்றியதற்கு இது நீ எனக்குச் செய்யும் உபகாரமா? இப்பிறவி இல்லை... இனி எப்பிறவியிலும் உன்னை வணங்கவும் மாட்டேன். உனக்காக மாலையும் கோர்க்கமாட்டேன்" என்று சபதமாய் உரைத்துவிட்டு தீபாராதனையைக் கூட தொட்டு வணங்காமல் மண்டபத்தை விட்டு அவள் வெளியே வர, அங்கே அவள் தோழி ரங்கநாயகி அவளைப் பார்த்து பிரியப் போவதை எண்ணி வருத்தம் கொண்டு புலம்பித் தீர்த்தாள். "இனி உன்னைப் போல் அரங்கநாதனுக்கு யார் அழகாய் மாலை கட்டுவார்கள்" என்று ரங்கநாயகி கேட்க, "அரங்கநாதனுக்கு அழகழகாய் மாலை அணிவித்து நான் என்ன பயனைக் கண்டேன்?" என்று விரக்தியோடு உரைத்தாள் அக்னீஸ்வரி. அக்னீஸ்வரியின் முகத்தில் தெரிந்த சோகத்தைக் கவனித்த ரங்கநாயகி, "ஏன் உன் முகத்தில் இவ்வளவு கலக்கம். என்னவாயிற்று?!" என்று பதட்டமாய் கேட்க, "அதெல்லாம் ஒன்றும் இல்லை. உங்கள் எல்லாரையும் விட்டுப் பிரிந்து போகிறேன் என்ற வருத்தம்தான்" என்று அக்னீஸ்வரி சமாளிக்கும் போது விஷ்ணுவர்தன் பின்னோடு வருவதை ரங்கநாயகி கவனித்தாள். ஆதலால் அவள்அவசரமாய் தன் தோழியிடம் விடைப்பெற்று அகன்று விட, விஷ்ணுவர்தன் அக்னீஸ்வரியின் அருகில் வந்து நின்றான். "ஏன் இப்படி சோகமே உருவமாய் இருக்கிறாய்? நீ இப்படி இருப்பதால் எல்லோரும் கேட்கும் கேள்விக்கு என்னால் பதில் சொல்லவே முடியவில்லை. நான்தான் உன்னிடம் சரியாக நடந்து கொள்ளவில்லை எனப் பார்ப்பவர்கள் எல்லோரும் எனக்கு அறிவுரை கூறுகிறார்கள். யாருக்குமே என் நிலைமை புரியவில்லை. இப்போது உன் கவலைதான் என்ன அக்னீஸ்வரி? ருத்ரதேவனை மணந்து கொள்ள முடியாத ஏக்கமா? இல்லை... என்னைப் போன்ற ஒருவனை மணந்து கொண்டோம் என்ற ஏமாற்றமா?" என்று அவன் கோபாவேசமாய் வினவவும் அவள் பதறிப் போனாள். "போதும். இப்படி வார்த்தைகளால் என்னைக் கொஞ்சம் கொஞ்சமாய் கொல்வதற்குப் பதிலாக, உயிரை மாய்த்துவிடும் ஏதேனும் நஞ்சு நிறைந்த மூலிகைகள் இருந்தால் கொடுங்கள். உண்டுவிட்டு நிம்மதியாய் போய் சேர்ந்து விடுகிறேன்" என்றாள். அவள் இவ்வாறு சொன்னதைக் கேட்டு விஷ்ணுவர்தன் கோபத்தை விடுத்துச் சிரித்து, "அத்தகைய மூலிகைக் கிட்டியதும் முதலில் நான் உண்டு பரீட்சித்து பார்த்துவிட்டு, நிச்சயம் உனக்கும் தருகிறேன். ஆனால் ஒன்று அக்னீஸ்வரி... மீண்டும் தப்பித்தவறி பிறவி எடுத்தால் உன்னைப் போன்ற ஒருத்தியை நான் அப்பிறவியில் சந்தித்துவிடவே கூடாது. அப்படியே சந்தித்தாலும் அவள் என் மனையாளாய் இருக்கவே கூடாது" என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே வைத்தீஸ்வரியும் விஜயவர்தனும் அங்கே வந்து நின்றனர். "என்ன விஷ்ணுவர்தா? ஏதோ பிறவி எடுத்தால் என்று பேசிக் கொண்டிருந்தாய்... எதை பற்றி?" என்று விஜயவர்தன் வினவ விஷ்ணுவர்தன் என்ன பதில் சொல்வதென்று யோசித்தபடி நின்றான். அக்னீஸ்வரி தன் வேதனையை மறைத்துக் கொண்டு முறுவலித்து, "அது ஒன்றும் இல்லை அத்தான்... மீண்டும் பிறவி எடுத்தால் நானே இவருக்கு மனையாளாய் வர வேண்டுமாம்" என்றாள். விஷ்ணுவர்தன் அவளை முறைத்துப் பார்க்க வைத்தீஸ்வரி தன் கணவனின் புறம் திரும்பி, "நேற்று திருமணம் ஆன தங்கள் தம்பி இவ்விதம் சொல்கிறார். நீங்கள் என்றாவது என்னைப் பார்த்து இவ்வாறு சொல்லி இருக்கிறீரா?" என்று கேட்டு கணவனிடம் கோபித்துக் கொண்டு அவள் கோயிலைச் சுற்ற முன்னேறிச் செல்ல, விஜய்வர்தனும் அவளைச் சமாதானம் செய்தபடி பின்னோடு சென்றான். அந்த நொடி விஷ்ணுவர்தன் அக்னீஸ்வரியைச் சீற்றமாய் நோக்கி, "நான் அவ்வாறா உன்னிடம் சொன்னேன்" என்று கேட்க, "நீங்கள் சொன்னதை அப்படியே அத்தானிடம் சொல்ல சொல்கிறீரா?" என்று பதிலுக்கு கேட்டாள் அவள். விஷ்ணுவர்தன் அதற்குமேல் அவளிடம் விவாதம் மேற்கொள்ளவில்லை. மௌனமாய் கோயிலை வலம் வந்தான். இருவரின் உறவிலும் கோபதாபங்களும் ஏமாற்றங்களும் நிரம்பியிருந்தாலும் நிலைமையை உணர்ந்து அவர்களின் உறவைப் புரிதல் இல்லாமல் பெயரளவிலாவது சுற்றியுள்ளவர்களின் நலனிற்காகப் பிணைத்து வைத்திருந்தனர். அவர்களின் திருமணம் முடிந்து ஒரு திங்கள்(மாதம்) முடிந்த நிலையில் அக்னீஸ்வரி அந்த நீலமலை அடிவாரத்தில் இருந்த ரம்மியமான சூழலை ரசித்தபடி மெல்ல நடந்து வந்து குளக்கரையில் தண்ணீர் எடுக்க வந்து கொண்டிருந்தாள். அங்கே வரும் போதெல்லாம் ருத்ரதேவனின் நினைவு அவளை வாட்டிக் கொண்டேதான் இருந்தது. ஆனால் சில நாட்களாக அக்னீஸ்வரி மெல்ல மெல்ல அவனின் நினைவிலிருந்து மீண்டு இயல்பான நிலைக்கு மாறியிருந்தாள். தண்ணீர் எடுக்க குடத்தைக் குளத்திற்குள் நுழைக்க அதில் தெரிந்த பிம்பம் அவள் நெஞ்சை உலுக்கிவிட்டது. ருத்ரதேவன் குதிரையின் மீது அமர்ந்திருக்க இது தன் பிரமையோ என்று எண்ணி அந்தத் தண்ணீரைக் கைகளால் சலனப்படுத்தினாள். ஆனால் அந்தப் பிம்பம் மறையவில்லை. ஏனோ திரும்பி நோக்க அவள் அச்சம் கொள்ள, படபடவென அவள் இதயம் வேகமாய் துடிக்கத் தொடங்கியது. "என்னைத் திரும்பி நோக்க ஏன் இத்தனைத் தயக்கம் அக்னீஸ்வரி? காதல் உணர்வா இல்லை குற்றவுணர்வா?” என்றவன் கேட்க அவள் தேகமெல்லாம் சில்லிட்டுப் போனது. அவனை நேர்கொண்டு பார்க்க முடியாமல் அவள் அப்படியே சிலையாய் சமைந்துவிட அவன் மேலும், “அக்னீஸ்வரி... நான் வந்ததும் மாலை அணிவிப்பதாக வாக்கு கொடுத்தாயே...நினைவிருக்கிறதா இல்லை அதையும் மறந்து விட்டாயா?!" என்று ருத்ரதேவன் நிறுத்தி நிதானமாய் கேட்க, அவனின் சொற்கள் அவள் மீது செந்தழலை வாரி இறைத்தது போல் தோன்றியது. எல்லாவற்றையும் அவன் அறிந்து கொண்டே இவ்விடம் வந்திருக்கிறான். இனி தான் சொல்ல என்ன இருக்கிறது? அப்படியே தன் நிலைமைக் குறித்து உரைத்தாலும் அது அவனைப் பொறுத்தமட்டில் நியாயமற்றதாகவே இருக்கும் என்று எண்ணமிட்டுக் கொண்ட அக்னீஸ்வரி, அவனைப் பார்க்க விருப்பமின்றி தண்ணீரைக் கூட குடத்தில் நிரப்பாமல் அங்கிருந்து வேகமாக அகன்று செல்ல எத்தனித்தாள். "நில் அக்னீஸ்வரி" என்று அவன் கம்பீரமான குரலில் அடங்கா கோபத்தோடும் அதிகாரமாகவும் அவளை அழைத்தான்.
10

ருத்ரனின் முடிவு

அக்னீஸ்வரி அவன் வார்த்தைகளுக்குச் செவிமடுக்காமல் முன்னேறிச் செல்ல ருத்ரன் மீண்டும், "அக்னீஸ்வரி... என் கேள்விக்குப் பதில் சொல்லிவிட்டு பின்னர் செல்" என்றான்.
"என்னை மன்னித்துவிடுங்கள். தங்களுக்குப் பதில் சொல்லும் நிலைமையில் நான் இல்லை. என்னை இனிமேல் தாங்கள் சந்திக்க வராமல் இருப்பதே உசிதம்" என்று உரைத்துவிட்டு அக்னீஸ்வரி மீண்டும் முன்னே நடந்து வேகமாய் செல்ல அவள் பாதத்தில் பெரும் முள் தைத்து அவளை முன்னேறிச் செல்ல முடியாமல் தடுத்து நிறுத்தியது. மேலே நடக்க முடியாமல் அவள் வலியால் வேதனையுற்றாள். அப்போது ருத்ரதேவன் தன் குதிரையில் இருந்து தாவி இறங்கினான். அவன் நெருங்கி வரும் காலடி ஓசையை உணர்ந்த அக்னீஸ்வரி, "அவ்விடமே நில்லுங்கள் இளவரசே... நாம் இருவரும் மீண்டும் நேருக்கு நேராய் பார்த்துக் கொள்ள வேண்டாம். தங்களை எதிர்கொள்ளும் துணிவு எனக்கில்லை" என்றாள் தழுதழுத்தக் குரலோடு! அக்னீஸ்வரி சுதாரித்தபடி அந்த வலியிலிருந்து மீண்டு மெல்ல நிற்க ருத்ரதேவன் முன்னேறி வராமல் பின்னோடு நின்றபடி, "என் மனதின் அரசியாய் உன்னை நான் வைத்து ஆராதித்துக் கொண்டிருக்க... இன்று இன்னொருவனின் மனையாளாய் உன்னை எதிர்கொள்ளும் துணிவு எனக்குமே இல்லை அக்னீஸ்வரி" என்றான் அவனும். "உங்கள் வேதனை எனக்குப் புரிகிறது... ஆனால் தெரிந்தோ தெரியாமலோ ஒரு உறவோடு பிணைக்கப்பட்டுவிட்டேன்... அந்த உறவைக் காப்பாற்றவும் தங்கள் உணர்வுகளைக் காயப்படுத்தாமல் இருக்கவும் நாம் மீண்டும் சந்தித்துக் கொள்ளாமல் இருப்பதே நலம்!" என்றவள் அவனை பாராமலே பொறுமையாக எடுத்துரைக்க, அவன் அவள் வார்த்தைகளில் சீற்றமானான். "என் உணர்வை உயிரற்றதாகச் செய்துவிட்டு இனிமேல்தான் நீ அதைக் காயப்படுத்த போகிறாயாக்கும்” அவள் தவிப்போடு, "தங்களிடம் மன்னிப்பு வேண்டுவதைத் தாண்டி வேறென்ன நான் செய்ய முடியும்?" என்று உரைக்க, "உன் மன்னிப்பு எனக்கு தேவையில்லை... நான் கேட்கும் கேள்விக்கு மட்டும் பதில் உரைத்துவிட்டுச் செல்" என்றான் அழுத்தமாக! அக்னீஸ்வரி மௌனமாய் நிற்க ருத்ரதேவன் அவளின் பாரா முகத்தை எண்ணி ஏக்கமுற்று, "மனதை எனக்கு கொடுத்துவிட்டு இன்னொருவனுக்கு மனையாளாய் எவ்விதம் உன்னால் இருக்க முடிகிறது அக்னீஸ்வரி" என்று கேட்க, அந்த வார்த்தைகளின் வன்மையால் இன்னும் தான் ஏன் உயிருடன் வாழ்கிறோம் என்று அக்னீஸ்வரி மனமுடைந்து போனாள். "இத்தகைய கேள்வியைக் கேட்பதற்குப் பதிலாய்... உங்கள் கூரிய வாளால் என் உயிரை மாய்த்திருக்கலாம்" அவன் கோபம் பொங்க, “உன் அழகால் என் கண்ணியத்தைக் களங்கப்படுத்தினாய். இன்னொருவனை மணம் செய்து என் காதலைக் களங்கப்படுத்தினாய். உன் உயிரை மாய்த்து என் வீரத்தையும் வாளையும் வேறு களங்கப்படுத்திக் கொள்ளச் சொல்கிறாயா?!" என்றவன் உச்சபட்ச கோபத்தோடு தன் வார்த்தைகளால் அவளை குத்திக்கிழிக்க, அவள் கண்ணீர் மடை திறந்தது. "எனக்கு அப்படி ஒரு எண்ணமில்லை. என்னால் இதுவரை தங்களுக்கு ஏற்பட்ட களங்கங்கள் போதும். உங்களின் குணத்திற்கும் களங்கம் ஏற்பட வேண்டாம். இவ்விடம் விட்டு தாங்கள் முதலில் செல்லுங்கள்" என்றாள். "இந்நாட்டின் இளவரசனான என்னையே இவ்விடம் விட்டுச் செல்ல சொல்கிறாயா? இத்தகைய உரிமையை உனக்கு யார் கொடுத்தது அக்னீஸ்வரி?!" என்று அவன் கட்டுக்கடங்கா கோபத்தோடு சற்றே கடுமையாகக் கேட்க, "தவறுதான்... எனக்கு அத்தகைய உரிமை இல்லை... நானே இங்கிருந்து செல்கிறேன்" என்று சொல்லி தன் பாதத்தில் பட்ட காயத்தைப் பொறுத்துக் கொண்டு அவள் அங்கிருந்து அகன்றுவிட்டாள். அவன் அவள் செல்வதையே கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டு நின்றான். இருவரின் உரையாடலும் ஒருவரை ஒருவர் பார்க்காமலே நிறைவடைந்தது. அவளின் கண்ணீரை அவன் எவ்விதம் காண முடியவில்லையோ அதே போல் அவனின் முகத்தில் தோன்றிய உணர்ச்சி மாற்றங்களை அவளால் காண முடியவில்லை. ‘பாரா முகமாய் என்னையும் என் காதலையும் நீ உதாசீனப்படுத்தி விட்டுச் செல்கிறாய்... இந்தச் செயலுக்காகக் கூடிய விரைவில் நீ ரொம்பவும் வருத்தப்படுவாய் அக்னீஸ்வரி... இதுவரையில் உன் வாழ்க்கையை விதி தீர்மானித்திருக்கலாம்... ஆனால் இனி உன் விதியை நான் தீர்மானிப்பேன்’ என்று சொல்லிக்கொண்டே ருத்ரதேவன் தன் குதிரையின் மீது ஏறி அமர்ந்தான்.  ருத்ரனின் முகத்தில் அத்தனை கோபமும் துவேஷமும் வன்மமும் ஒன்றாய் குடிகொண்டிருந்தது. அக்னீஸ்வரியை உரிமையாக்கிக் கொள்ள முடியாமல் போன ஏமாற்றத்தால் முற்றிலும் அவனின் நற்குணங்களைத் தொலைத்து அவளைப் பழிதீர்க்க எத்தகைய எல்லைக்கும் செல்லத் துணிந்திருந்தான். அக்னீஸ்வரி ருத்ரதேவனின் கண்களைப் பார்த்து பேசி இருந்தால் அவனின் முகத்தில் ஏற்பட்ட மாற்றத்தைக் கவனித்திருக்கலாம். நெஞ்சைப் பதற வைக்கப் போகும் அவனின் செயல்களால் அக்னீஸ்வரி விவரிக்க முடியாத துயருக்கு ஆட்படப் போகிறாள். சூரியனில் ஆக்கப்பூர்வமான சக்தி நிரம்பி இருக்கும் அதே சமயத்தில் அழிக்கும் சக்தியும் அபரிமிதமாய் இருப்பதை எல்லோருமே அறிவோம். சூரியனின் அனல் தெறிக்கும் செந்தழல் தேகத்தை நாம் எதிர்கொள்ளவும் முடியாது. எதிர்த்து நிற்கவும் முடியாது. அத்தகைய குணங்கள் பொருந்தியவனே ருத்ரதேவன். அக்னீஸ்வரியின் மீது தீவிரமான காதலைக் கொண்டவன் அதே தீவிரத்தோடு அவளிடம் தன் பழியுணர்வையும் காட்டுவான். அந்தக் கோபத்தை எத்தகைய விதத்தில் வெளிப்படுத்துவான் என அக்னீஸ்வரி யூகிக்கவும் முடியாது.

Cancel “தூரமில்லை விடியல்” என்னுடைய புத்தம் புது தொடர் துவங்கப்பட்டுள்ளது. வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா