மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumMembersActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumMonisha Completed novels: Meendum UyirthezhuMeendum Uyirthezhu - 16Post ReplyPost Reply: Meendum Uyirthezhu - 16

Quote from monisha on August 16, 2022, 11:15 AM

16

இரு துருவங்கள்
ருத்ரதேவன் தன் மனதில் எந்தளவுக்குக் கோபத்தையும் வஞ்சத்தையும் சுமந்து கொண்டு அந்தப் பயங்கரமான கோட்டைச் சிறைக்குள் பிரவேசித்தான் என்பதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அவன் உள்ளே நுழையக் காவலர்கள் வரிசையாக கைகளில் ஆயுதம் ஏந்தியபடி நின்றிருந்தனர். வழியே நெருப்புப் பந்தங்கள் அனலைக் கக்கியபடி வெளிச்சத்தை உண்டாக்கிக் கொண்டிருக்க, ருத்ரதேவன் அத்தகைய கோபத்தோடு உள்ளே நுழைவதைப் பார்த்த வீரர்கள் எல்லோருமே கலவரம் கொண்டனர். இந்தளவுக்குக் கோபத்தோடு இதுவரை யாரும் அவனைக் கண்டதே இல்லை. ஆதலால் எல்லோருக்குமே அவனின் சினம் தாங்கிய முகத் தோற்றம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. சிறைக்குள் இருந்த விஷ்ணுவர்தன் தன் கம்பீரம் குறையாமல் எத்தகைய ஆபத்து வந்தாலும் அதைத் துணிவோடு எதிர்நோக்கிக் காத்திருந்தான். அவன் மனம் ஓயாமல் அக்னீஸ்வரியைப் பற்றியே நினைவு கூர்ந்திருக்க, அதனால் ஏற்பட்ட ஏக்கத்தின் தாக்கம் அவன் முகத்தில் வேதனையைப் படரச் செய்தது. ஏன் இத்தனை நாள் அவளை தான் உறவு கொள்ளாமல் ஒதுக்கி வைத்துவிட்டோம் என்று உள்ளூரக் குற்றவுணர்வில் பரிதவித்துக் கொண்டிருந்தான். அந்தச் சமயம் ஒரு காவலாளி அவனிருக்கும் சிறையின் கதவைத் திறந்தான். அங்கே வெளிச்சம் மங்கி இருந்தபடியால் அவனால் எதையும் கூர்மையாக நோக்க முடியவில்லை. ஆனால் அவன் மனம் நடக்கப் போவதை உணர்ந்து கொள்ள, நடப்பது எதுவாயினும் தான் அச்சம் கொள்ளக் கூடாது என்று அழுத்தமாய் எண்ணிக் கொண்டான். விஷ்ணுவர்தனின் கைகள் சங்கிலியால் பிணைக்கப்பட அந்தக் காவலாளி அவனை சிறைக்கதவின் வழியே வெளியே அழைத்துக் கொண்டு வந்தான். ருத்ரதேவனை எதிர்க் கொள்ளப் போகிறோம் என்பதை விஷ்ணுவர்தன் தன் புத்திக்கூர்மையால் யூகித்தான். இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் ஏற்கனவே தெரிந்தவர் எனினும் அவர்கள் நேர்கொண்டு சந்திப்பது இதுதான் முதல்முறை. இருவரும் முற்றிலும் மாறுப்பட்ட குணங்கள் கொண்ட இரு துருவங்கள். ருத்ரதேவன் வேகம் என்றால் விஷ்ணுவர்தன் விவேகம். அவன் கர்வத்தின் உச்சத்தில் நிற்க, இவன் பணிவின் ரூபமாயிருந்தான். அவன் கோபத்தில் மூழ்கியிருக்க, இவன் எதையும் பொறுமையோடு எதிர்கொண்டான். இப்படி எல்லாவற்றிலும் வெவ்வேறு குணங்களோடு இருக்கும் இவர்கள் புத்திக்கூர்மையிலும் பலத்திலும் சரிசமமானவர்களாய் இருக்க, அவர்கள் தேர்ந்தெடுத்த பாதை வெவ்வேறாய் இருந்தது. ஆனால் ருத்ரதேவனின் பதவியும் அவன் இருக்கும் இடமும் அவன் கையை மேலோங்கச் செய்திருந்தது. அந்தக் காவலாளி விஷ்ணுவர்தனை ருத்ரதேவன் முன்னிலையில் அழைத்து வந்து நிறுத்த தீப்பந்தங்களால் ஆன வெளிச்சம் அந்த இடத்தை முழுவதுமாய் ஆக்கிரமித்திருந்தது. ருத்ரதேவனின் முகம் கோபத்தில் கனலேறியிருந்தது. ருத்ரதேவன் மீது அக்னீஸ்வரி வீசிய கோபமான வார்த்தைகளும் அவள் விஷ்ணுவர்தனைப் பற்றி பேசும் போது அவள் முகத்தில் வெளிப்பட்டக் காதலும், ருத்ரதேவனுக்கு விஷ்ணுவர்தன் மீது அதீத வெறுப்பை வளர்த்துவிட்டது. இந்த எண்ணத்தோடு ருத்ரதேவன் விஷ்ணுவர்தனை நோக்க, அவன் முகமோ சிறு சலனமில்லாத தெளிந்த ஓடைநீராய் இயல்பான புன்னகையைத் தாங்கி நின்றது. அவன் பார்வை அமைதியைப் பிரதிபலித்தது. அந்த முகம் ஆதுர சாலை தலைமை வைத்தியர் சுவாமிநாதனை முன்னிறுத்த, ருத்ரதேவனின் எண்ணம் மாறி சற்றுத் தயங்கியபடி நின்றான். ருத்ரதேவனின் ஆழ் மனம், 'நீ செய்ய நினைப்பது பெரும் குற்றம்' என்று எச்சரித்தது. அவன் தன் உரையிலிருந்த வாளின் மீதிருந்த கையை யோசனையோடு எடுக்க, விஷ்ணுவர்தன் புன்னகைத் ததும்பிய முகத்தோடு, "என்ன ருத்ரதேவா... நீ செய்வது தவறு என்று உன் மனம் எச்சரிக்கிறதோ?!" என்றான். இவ்விதம் அவன் உரைத்ததும் ருத்ரதேவன் அதிர்ந்தபடி பார்த்தான். அப்போது அருகில் இருந்த வீரன் கோபம் கொண்டு, "இளவரசர் என்ற மரியாதை இல்லாமல்" என்று தன் வாளை உறையில் இருந்து எடுத்தான். உடனடியாக ருத்ரதேவன் தலையசைத்துத் தன் கண்பார்வையாலேயே அந்த வீரனை மிரட்டி விலகிப் போகச் சொன்னான். சூழ்ந்திருந்த வீரர்களையும் அங்கிருந்து செல்லச் சொல்ல, விஷ்ணுவர்தன் மீண்டும் இயல்பான புன்னகையோடு, "ஏன் எல்லோரையும் செல்லச் சொன்னாய்... உன் வஞ்சமான எண்ணம் எல்லோருக்கும் தெரிந்துவிடும் என்ற அச்சமோ?" என்று கேள்வி எழுப்பினான். "பரவாயில்லையே... வைத்தியர்கள் உடலில் உள்ள நோய்களைத்தான் கண்டறிவார்கள்... ஆனால் நீ மனதில் உள்ள எண்ணங்களைக் கூட கண்டறிந்து கொள்கிறாய்... திறமைசாலிதான்" என்று ருத்ரதேவன் விஷ்ணுவர்தனைப் பாராட்டினான். "உன் எண்ணத்தை... நான் இன்று கண்டறியவில்லை... எப்போது நீ என் தமையனைக் கொன்றாயோ... அன்றே கண்டறிந்து கொண்டேன்" என்று கோபத்தை முன்னிறுத்தி விஷ்ணுவர்தன் உரைக்க, "நான்... உன் தமையனைக் கொன்றேனா!" என்று ருத்ரதேவன் அலட்சியமாய் கேட்க, "பின் வேறு யார் கொன்றது... எங்களின் ஒரே மாதிரியான முக ஒற்றுமையால் உன் வஞ்சக எண்ணத்திற்கு என் தமையன் பலியானார்... அவரைக் காட்டு மிருகங்கள் கொல்லவில்லை என்பதை நான் முன்னமே அறிந்து கொண்டேன்... நானும் என் தமையனும் பார்க்காத காட்டு விலங்குகளா? அவற்றை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று இருவருக்குமே நன்காகத் தெரியும்... அது மட்டுமின்றி... நீலமலை காடு எங்களுக்கு ரொம்பவும் பழக்கப்பட்ட ஒன்று... அங்கே இப்படி ஒரு விபத்து என் தமையனுக்கு நேர்ந்தது எனில் ஏதோ சூழ்ச்சி நடந்திருப்பதை நான் யூகித்தேன்... என்னைக் காணாமல் தேடி வந்த என் தமையனை நான் என்று எண்ணி மனித மிருகங்கள் தன் பழியைத் தீர்த்து கொள்ள, சூழ்ந்து கொன்ற பின்னரே... காட்டு விலங்குகள் தம் பசியைத் தீர்த்துக் கொள்ள எத்தனித்திருக்க வேண்டும்" என்றான். ருத்ரதேவன் வியப்புக் குறியோடு, "உன் புத்திக்கூர்மை அபாரம் விஷ்ணுவர்தா... இதே புத்திக்கூர்மை நீ அக்னீஸ்வரியை மணம் முடிக்கும் போது எங்கே போயிற்று... அவள் மனதின் எண்ணத்தை நீ கண்டறிய மறந்தாயா... இல்லை தெரிந்து கொண்டே அவள் கழுத்தில் மாலையிட்டாயா?!” என்று உக்கிரமான பார்வையால் தன் சினத்தை வெளிப்படுத்தினான். இப்போது விஷ்ணுவர்தன் சிரித்தபடி, "நான்தான் அக்னீஸ்வரிக்கு மணவாளனாக வேண்டும் என்பதும்... அவளுக்கு என் கரத்தால் மாலை சூடப்பட வேண்டும் என்பதும் விதிக்கப்பட்ட ஒன்று... இதில் யார் எண்ணத்தைக் கண்டறிந்து என்ன நேரப் போகிறது?" என்றான். ருத்ர தேவனுக்கு அந்த வார்த்தைகள் வெறி கொள்ளச் செய்ய, "அப்படியெனில் உன் மரணமும் என் கரத்தாலேயே நிகழ வேண்டும் என்பதும் விதிக்கப்பட்ட ஒன்று" என்று தன் வாளை வெளியில் எடுக்க அதன் மினுமினுப்பு கண்களைப் பறித்தது. விஷ்ணுவர்தன் எதற்கும் தயாராக நின்றிருப்பதால் அவன் மாறாத புன்னகையோடு, "நான் மரணிக்கப் போவதை எண்ணி சிறிதும் அச்சம் கொள்ளவில்லை... ஆனால் இந்த ஆரை நாட்டு மக்கள்... உன்னைப் போன்ற ஒருவன் மீது அன்பும் நம்பிக்கையும் கொண்டிருப்பதை எண்ணியே நான் அச்சம் கொள்கிறேன்" என்றான். ருத்ரதேவன் கண்களில் வெறியோடு, "என் மீது அன்பும் நம்பிக்கையும் கொண்டிருப்பவர்களுக்கு நான் எந்தத் தீங்கும் இழைக்க மாட்டேன்... அதே நேரத்தில் என் நம்பிக்கையை உடைத்து என்னை வஞ்சித்தவர்களை நான் நிம்மதியாக வாழ விடமாட்டேன்" என்று சொல்ல இருவரின் கண்களிலும் வந்து நின்றது அக்னீஸ்வரியின் முகம்தான். விஷ்ணுவர்தன் அக்னீஸ்வரிக்கு இவனால் மேலும் துன்பங்கள் வருமோ என்ற கவலை ஏற்பட, "அக்னீஸ்வரி கள்ளங்கபடமில்லாதவள்... யாரையும் வஞ்சிக்கவோ ஏமாற்றவோ தெரியாதவள்... அவள் சூழ்நிலை அவ்விதம் அமைந்துவிட்டது. கண்ணைக் கவரும் அழகிய மலர்கள்... தான் சென்று சேர்கின்ற இடம் குறித்து ஆசை மட்டும் கொள்ளலாம்... ஆனால் அவை இறைவனின் தோளை அலங்கரிக்கப் பட வேண்டுமா... இல்லை காய்ந்து சருகாகிட வேண்டுமா என்பதை எல்லாம் தீர்மானிக்கும் உரிமை அந்த மலரிடம் இல்லை. கிட்டத்தட்ட பெண்களின் நிலையும் அதுதான்... அப்படியிருக்க என் மனையாள் மட்டும் விதிவிலக்கா என்ன? அவளுமே அவள் விரும்பிய இடத்தை அடைய முடியாமல் விதிக்கப்பட்டதை ஏற்றுக் கொள்ள நேரிட்டது... இதில் நீ அவள் மீது வஞ்சம் கொள்ளவோ பழித் தீர்க்க நினைப்பதோ நியாயமில்லை" என்றான். ருத்ரதேவன் அவன் பதிலைக் கேட்டு அமைதியான முகப்பாவனையோடு, "அந்த கள்ளங்கபடமில்லாதவள் சற்று முன்பு என்னை மதிக்காமல் என்னென்ன பேசி விட்டாள் என்று தெரியுமா... அவள் பெண்ணாக இல்லையெனில் அவள் சிரம் துண்டாயிருக்கும்... இப்போது அவளால்தான்... நான் சினம் கொண்டு உன்னைக் கொல்லத் துடிக்கின்றேன்... உன் மீது அவளுக்கு உண்மையிலேயே அன்பு இருந்தால் என்னிடம் மன்றாடி உன் உயிரை மீட்டிருப்பாள்... இப்படி என் சினத்தைத் தூண்டிவிடுவாளா... சரியான அகந்தைக் கொண்டவள்" என்றான். விஷ்ணுவர்தனின் அமைதியும் பொறுமையும் கரைந்து போக அவன் கோபத்தோடு, "ருத்ரதேவா!" என்று குரலையுயர்த்தி அவன் எதிர்பாராத போது அவனைக் கீழேத் தள்ளிவிட ருத்ரதேவனின் வாள் தரையில் வீழ்ந்து சத்தம் எழுப்பியது. அந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்தி விஷ்ணுவர்தன் தன் சங்கிலி பிணைத்த கரங்களால் ருத்ரதேவன் கழுத்தில் இறுக்கியபடி, "என் தமையனைக் கொன்றதற்கே உன் மீது நான் அளவில்லா கோபத்தைத் தேக்கி வைத்திருக்க... நீ மேலும் மேலும் அக்னீஸ்வரியின் மீது இத்தனை துவேஷம் கொண்டிருப்பாய் எனில் உன்னை உயிருடன் விடக் கூடாது" என்று வெறியோடு சொல்ல, அதற்குள் ருத்ரதேவன் தன் கரங்களால் சங்கிலியைப் பிடித்து இழுத்து விஷ்ணுவர்தனைக் கீழேத் தள்ளிவிட்டு சுதாரித்தபடி எழுந்து நின்று கொண்டான். ருத்ரதேவனின் வாள் கீழே வீழ்ந்து கிடக்க அதை விஷ்ணுவர்தன் எடுப்பதற்குள் அதை ருத்ரதேவன் எடுத்துக் கொண்டான். விதி இப்போது ருத்ரதேவனுக்கு சாதகமாய் நின்றது. "என்னைக் கொல்ல முயிற்சி செய்கிறாயா விஷ்ணுவர்தா... அது இப்பிறவியில் நடவாது... அடுத்த பிறவியில் வேண்டுமானால் முயற்சித்துப் பார்... அப்போதும் உன்னால் முடியாது" என்று அழுத்தமாய் சொல்லியபடி அவனால் இறுகப்பட்ட தன் கழுத்தைச் சரி செய்துகொண்டு உக்கிரமாய் சிரித்தான். "மரணம் என்பது முடிவல்ல... என் மனதில் உன் மீது நான் கொண்ட கோபம் நான் மரணித்தாலும் மாறாது" என்று விஷ்ணுவர்தன் ஆக்ரோஷமாய் உரைக்க, "என்னைக் கொல்ல மீண்டும் பிறவி எடுத்து வருவேன் என்கிறாயா" என்று சிரித்தபடிக் கேட்டான் ருத்ரதேவன் . விஷ்ணுவர்தனின் மனம் ஏனோ சஞ்சலப்பட மன எண்ணங்களை வார்த்தைகளாகக் கொட்டினான். "ஆம்! அப்படி ஒன்று நிகழ வேண்டும்... நீ எத்தகைய இடத்தில் இருந்தாலும் அன்று உன் விதியை நான் முடிக்க வேண்டும்... ஈருடல் ஓர் உயிர் என நானும் என் தமையனும் ஒரு தாய் கருவறையில் மீண்டும் ஒன்றாய் சஞ்சரித்து ஜனிக்க வேண்டும்... மீண்டும் அக்னீஸ்வரியின் மீது காதல் கொண்டு அவளையே என் மனையாளாய்" என்று அவன் இறுதியான ஆசைகளைச் சொல்லி முடிக்கும் முன்னரே ருத்ரதேவன் தன் வாளைக் கோபத்தோடு வீசி அவன் சிரத்தைத் துண்டாக்கினான். ருத்ரதேவன் எண்ணம் ஈடேறிவிட அவன் பயங்கரமாய் நகைத்தபடி துண்டான சிரத்தைப் பார்த்து, "என்னைக் கொல்வேன் என்று நீ சொன்னதைக் கூட நான் மன்னிப்பேன்... ஆனால் இன்னொரு பிறவி எடுத்து வந்து மீண்டும் அக்னீஸ்வரியை மணந்து கொள்வேன் என்று சொன்னாயே... அது மன்னிக்க முடியாத குற்றம்... இப்பிறவியில் அல்ல... எப்பிறவியிலும் அவளுக்கு உரிமையானவன் நான் மட்டும்தான்... வேறு யார் அவள் மீது உரிமை கொண்டாடினாலும் உயிரற்று மடிந்து கிடப்பர்... உன்னைப் போல" என்று உரைத்துவிட்டு தன் குரலை உயர்த்தி, "மாறா!" என்று அழைத்தான். அப்போது ஒரு வீரன் அவன் முன்பு பணிவாக வந்து நின்றான். அவன் விஷ்ணுவர்தன் மடிந்து கிடப்பதை அதிர்ச்சியாக நோக்க ருத்ரதேவன் இறுக்கமான முகத்தோடு, "விஷ்ணுவர்தன் சிறைக்காவலர்களை வெறிக் கொண்டு தாக்கினான் என்றும் தப்பிக்க முயற்சி செய்தான் என்றும்... அந்தச் சூழ்நிலையில் வேறுவழியின்றி நீ அவன் சிரத்தைக் கொய்து விட்டாய் என்றும் அரசரிடம் சொல்லிவிடு... நான் இங்கே வந்தது குறித்து யாருக்கும் தெரியக் கூடாது... இவன் மீதான குற்றத்தை நிரூபிக்க வேற்று நாட்டு பொக்கிஷம் ஆதுர சாலையில் கிடைக்கப்பெற்றதாக வதந்தியைப் பரப்பிவிடு" என்றான். "ஆகட்டும் இளவரசே! ஆனால் நம் மக்கள் ஆதுர சாலை மீதும் வைத்தியர் சுவாமிநாதர் மீதும் அதிக மரியாதையும் நம்பிக்கையும் கொண்டிருக்கின்றனர்... இந்த வதந்தியை எவ்விதம்" என்று தயங்கினான். "திரும்பத் திரும்ப ஒரு பொய் உரைக்கப்படும் போது அது உண்மையின் ரூபமாகவே மாறிவிடும்... நான் சொல்வதை அப்படியே செய் மாறா! மற்றதை நான் பார்த்துக் கொள்கிறேன்" என்று ருத்ரதேவன் சொல்ல அந்த வீரன் தலையசைத்து ஆமோதித்தான்.

Cancel “தூரமில்லை விடியல்” என்னுடைய புத்தம் புது தொடர் துவங்கப்பட்டுள்ளது. வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா