மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumMembersActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumMonisha Completed novels: Muran KavithaigalMuran kavithaigal - 9Post ReplyPost Reply: Muran kavithaigal - 9

Quote from monisha on September 13, 2022, 11:45 AM

9
நிரஞ்சனின் திருமண விஷயத்தில் ஒரு வாரமாக அவர்கள் வீட்டில் சண்டையும் வாக்குவாதங்களும்தான் நிகழ்ந்து கொண்டிருந்தன. மாதவனும் ரேணுவும் ஆளுக்கொரு பக்கம் முறுக்கிக் கொண்டு நின்றார்கள். எப்போதும் ரேணுதான் மகனுக்காகப் பரிந்து பேசுவார். ஆனால் இந்தத் தடவை நேருக்கு மாறாக மாதவன் மகனுக்காக நின்றார். என்னவோ அவன் விருப்பத்தில் நியாயம் இருப்பதாக அவருக்குத் தோன்றியது. ஆனால் ரேணு கொஞ்சமும் இறங்கிவரவில்லை. ஜோஷிகாவை மருமகளாக யோசித்து பார்ப்பது கூட இயலவே இயலாத காரியமென்று பட்டது. உதய்க்கு நடப்பதெல்லாம் விசித்திரமாக இருந்தது. அதுவும் இந்தளவு ரேணு தன் எதிர்ப்பையும் கோபத்தையும் காட்டியது அவனுக்குப் புதிதாக இருந்தது. “நீயும் சாதனாவும் கொஞ்சம் உங்க அம்மாகிட்ட பேசி கன்வின்ஸ் பண்ணக் கூடாதா?” என்றவன் மிருதுளாவிடம் கேட்க, “அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்ல… எங்க அம்மாவுக்கு அந்த பொண்ணைக் கண்டாலே பிடிக்காது… அப்புறம் எப்படி அவங்களை சமாதானப்படுத்த… அதுவுமில்லாம எனக்கும் சாதனாவுக்கும் கூட அந்தப் பொண்ணு ரஞ்சனைக் கட்டிக்கிறதுல விருப்பம் இல்ல” என்றாள். “உங்க விருப்பமா முக்கியம்… ரஞ்சன் விருப்பம்தான் முக்கியம்… அவன் அந்தப் பொண்ணைக் காதலிக்கும் போது” என்றவன் பேசும் போது, “நானும் சாதனாவும் காதல் கல்யாணமா பண்ணிக்கிட்டோம்… வீட்டுல பார்த்த மாப்பிளையைக் கட்டிக்கிட்டோம்… அவனுக்கு மட்டும் என்னவாம்” என்றாள். தம்பியின் மீதான அப்பட்டமான வெறுப்பு தெரிந்தது அவள் குரலில். “அவன் உங்கள மாதிரி இல்ல… காதலிச்சுட்டான்… இப்போ அதை எப்படி மாத்த முடியும்” என்று உதய் புரிய வைக்க முயல, “நீங்க அவனுக்காக சப்போர்ட் பண்ணாதீங்க உதய்… அவன் எவ்வளவு கமுக்கமா இருந்து நம்மல எல்லாம் ஏமாத்தி இருக்கான்… அதுவும் போயும் போயும் அந்த பொண்ணை போய் காதலிச்சிருக்கான்… என்னைக் கேட்டா அம்மாவோட கோபம் நியாயம்தான்” என்று மிருதுளா தீர்மானமாகக் கூறினாள். இதற்கு மேல் இவளிடம் பேசுவது வீண் என்று அந்தப் பேச்சை அவன் அதோடு நிறுத்திக் கொண்டான். ரேணு எப்போதும் போல அன்று தோட்டத்திற்கு காய் பறிக்கச் செல்ல, “அம்மா” என்று ரஞ்சன் அருகே வந்து நிற்க, அவர் அவனைத் திரும்பி கூட பார்க்கவில்லை. ஒரு வாரமாக இப்படிதான் பாராமுகமாக இருக்கிறார். முன்பை விடவும் அதிக வேலைகளை இழுத்துப் போட்டுக் கொண்டு செய்கிறார். அதிக நேரம் சமையல்கட்டில் அடைந்து கிடக்கிறார். யாரிடமும் பேசாமல் பார்க்காமல் இருப்பதற்கான ரேணுவின் யுக்தி அது.  ஆனால் ரஞ்சனால் தாங்க முடியவில்லை. அவரிடம் மீண்டும் மீண்டும் பேசி அவனுக்கு ஏமாற்றம்தான் மிச்சமானது. “ப்ளீஸ் என்கிட்டே பேசுங்கமா” என்றவன் மன்றாடிய போதும், அவர் அவனைக் கண்டு கொள்ளவில்லை. “ம்ம்மா நான் செஞ்சது தப்புதான்மா… ஜோவை லவ் பண்ணதை முன்னாடியே உங்ககிட்ட சொல்லி இருக்கணும்” என, அவர் திரும்பி அவனை முறைத்துவிட்டு மீண்டும் திரும்பி தக்காளிகளைப் பறித்துக் கூடையில் போடத் தொடங்கினார். “ம்மா என்ன பண்ணா என்கிட்ட பேசுவீங்க” என்றவன் கேட்ட நொடி அவர் முகம் யோசனையாக மாறியது. மகனைத் திரும்பி பார்த்தவர், “உனக்கு அந்தப் பொண்ணு வேண்டாம் ரஞ்சன்” என்றவர் மிகத் தெளிவாகவும் தீர்க்கமாகவும் உரைத்தார். அவன் அதிர்ந்து நின்றான். ஜோஷிகா இல்லாத வாழ்க்கையை அவனால் கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை. கண்களில் நீர் நிரம்பியது. ரேணு அவன் பதிலை எதிர்பார்க்காமல் காய்களைப் பறித்துக் கொண்டு கீழே இறங்கிவிட்டார். அவன் காதலுக்கு தன் அம்மாவிடமிருந்து இந்தளவுக்கான எதிர்ப்பையும் பிடிவாதத்தையும் அவன் எதிர்பார்க்கவில்லை. எந்தப் பக்கமும் போக முடியாமல் அவன் மனம் அல்லாடியது. என்ன செய்வதென்று புரியாமல் தீவிரமாக யோசித்தபடி அவன் தன் அறையிலேயே அடைந்து கிடக்க, அப்போது அவன் அறைக்கு வந்த சாதனா, “சாப்பிட வா… கூப்பிட்டாங்க” என்றாள் விட்டேற்றியாக. “எனக்கு வேண்டாம்” என்றவன் சொல்ல, அவள் முகம் கோபமாக மாறியது. “இப்போ எதுக்கு நீ ஓவரா பண்ணிட்டு இருக்க… என்னைக் கேட்டா நடக்கிற எல்லா பிரச்சனைக்கும் நீதான் காரணம்… உன்னால தான் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் தேவையில்லாத சண்டை… அப்படி என்ன உனக்கு அந்தப் பொண்ணு முக்கியமா போயிட்டா… அம்மா உனக்காக எவ்வளவு எல்லாம் பார்த்து பார்த்து செஞ்சு இருக்காங்க… இன்னும் கேட்டா எங்களை விட நீதான் அவங்களுக்கு ஸ்பெஷல்… ரஞ்சன் உங்கள மாதிரி இல்லன்னு எப்பவும் உன்னோட கம்பேர் பண்ணி எங்களை மட்டம் தட்டிப் பேசுவாங்க… ஆனா நீ என்ன பண்ணி இருக்க… அம்மாவை விட்டுக் கொடுத்துட்ட… அம்மாவை விட உனக்கு அந்தப் பொண்ணுதான் முக்கியமா போச்சா” என்றவள் படபடவென பட்டாசு போல பொரிந்து தள்ள, “நான் அம்மாவை விட்டுக் கொடுக்கணும்னு நினைச்சதே இல்ல… நீ பாட்டுக்கு ஏதாச்சும் பேசாதே” என்றவன் பதிலுக்குக் கத்தினான். “அதான் விட்டுக் கொடுத்திட்டியே” என்றாள். “சாதனா இப்படி எல்லாம் பேசாதே” அவன் குரல் உடைய துவங்க, “ஒழுங்கா சாப்பிட வா… தேவையில்லாத சீன் கிரியேட் பண்ணிட்டுப் பிரச்சனை பண்ணாதே” என்றவள் வெடுக்கென சொல்லிவிட்டு அகன்றுவிட்டாள். ஏற்கனவே மனதளவில் உடைந்திருந்த நிரஞ்சன் சாதனாவின் வார்த்தைகளால் சில்லுச்சில்லாக நொறுங்கிப் போனான். அவன் அந்த மனநிலையோடு கீழே உணவு உண்ணச் சென்ற போது யாரும் அவன் முகம் பார்த்துக் கூட பேசவில்லை. எல்லோர் கண்களிலும் அவனைக் குற்றச்சாட்டும் பார்வைதான் இருந்தது. அது அவனை மேலும் மேலும் குற்றவுணர்வின் அடி ஆழத்தில் தள்ளியது. மாதவன் பார்வை மட்டும் அவனைப் பரிதாபமாக ஏறிட்டது. கூடவே அவர் கண்களில் ஒரு வித இயலாமையும். அவர் ரேணுவின் முடிவை எதிர்த்து எதுவும் செய்ய முடியாத தவிப்பில் இருந்தார். அதனால் அவர்கள் இருவருக்குள்ளும் சண்டைப் பெரிதாகி இருந்தது. மாடியறைக்கு வந்தவனின் மூளை ஏதேதோ யோசித்து குழம்பியது. அம்மாவிற்காக ஜோஷிகாவை விட்டுக் கொடுப்பதென்றால் அது அவனுக்கே அவன் செய்து கொள்ளும் துரோகமாகும். அதிக உணர்ச்சிவயப்படும் போது அவன் மனதளவில் ரொம்பவும் பலவீனப்பட்டுப் போய்விடுவான். ஒரு வகையில் அது அவனுடைய இயல்பு. நிரஞ்சனைப் பொறுத்த வரை கோபம், அழுகை, சந்தோஷம் என்று எந்த உணர்வுகளிலும் ஒரு சமநிலை கிடையாது. அவனின் அந்தப் பலவீனம் அவனை எத்தகைய எல்லைக்கும் தள்ளிவிடும். அப்படிதான் அவன் எந்த யோசனையுமின்றி தற்கொலை முடிவை எடுத்திருந்தான். அன்று காலை தருண் அவன் அறைக்கு வந்த போது அறை மூடி கிடந்தது. ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தான். எதுவுமே தெரியவில்லை. நன்கு அவன் கம்பிகளைப் பிடித்து ஏறிப் பார்த்த போது நிரஞ்சன் தரையில் குருதி பெருக்கில் விழுந்து கிடந்தது பார்த்து நடுங்கிவிட்டான். “மாமா” என்று கதறியவன் உடனடியாகக் கீழே போய், “அப்பா அப்பா” என்று படபடப்புடன் விஷயத்தைத் சொல்ல எல்லோருமே அவன் சொன்ன தகவலைக் கேட்டு அதிர்ந்துவிட்டனர். மாதவனும் உதய்யும் கதவை உடைத்து அவனை அவசரமாக மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றனர். ரேணு கண்ணீரும் கம்பலையுமாக மருத்துவமனை அறை வாசலில் வெளியே அமர்ந்திருந்தார். மகனை அந்தக் கோலத்தில் பார்த்த போது அவர் உயிரே போய்விட்டது. ரஞ்சன் பிறந்த போது மிகவும் பலவீனமாக இருந்தான் என்று ரேணுவுக்கு குடும்பக் கட்டுப்பாடு ஆப்ரேஷன் செய்ய மருத்துவர் மறுத்துவிட்டார். இதனால் அவர் மகனை கண்ணும் கருத்துமாகப் பார்த்துக் கொண்டார். தன் உள்ளங்கையில் வைத்து தாங்கினார். அவனுக்குச் சின்னதாக ஒரு தும்மல் வந்தால் கூட கசாயம் வைத்துக் கொடுப்பார். காய்ச்சல் ஏதாவது வந்துவிட்டால் உறக்கம் கூட இல்லாமல் அவனை தன் இமைகளுக்குள் வைத்து கவனித்து கொள்வார். அப்படி அவர் தன் உயிரைக் கொடுத்து அவனைக் காப்பற்றியிருக்கும் போது எப்படி அவனால் கொஞ்சமும் யோசிக்காமல் அவனின் உயிரைப் போக்கிக் கொள்ள முடிந்தது? அவன் தன் காதலுக்காகத் துச்சமாகத் தூக்கி எறிய இருந்தது அவன் உயிரை இல்ல. அவர் அவன் மீது கொண்டிருந்த அன்பையும் பாசத்தையும். அதுவும் அந்த ஜோஷிகா மீது கொண்ட காதலுக்காக… பெற்றத் தாயை விடவும் இவர்களுக்கு எவளோ ஒருத்தி முக்கியமாகப் போய்விடுகிறாள். மனம் கிடந்து தவித்தது. புலம்பியது. அழுது வெதும்பி ஓய்ந்து போன நிலையில் மருத்துவர் அவன் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லையென்று தெரிவித்துவிட்டுப் போனார்.  சிகிச்சை முடிந்து அவனை அறைக்கு மாற்றினார். அதேநேரம் எப்போதும் போல தாமதமாக காலையில் எழுந்து வந்த ஜோஷிகாவிடம் தருண் எல்லா விஷயத்தையும் ஒன்று விடாமல் ஒப்புவித்துவிட்டான். உடனடியாக தந்தையை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தாள்.  நேராக அவன் அறைக்கு வந்ததும் யார் இருக்கிறார்கள் என்னவென்றெல்லாம் பார்க்காமல் சோர்வுடன் படுத்திருந்தவன் கன்னத்தில் பளாரென்று அறைந்துவிட்டாள். ரேணுவும் மாதவனும் அதிர, ஜோசப் மகள் செய்த காரியத்தைப் பார்த்து சங்கடமாகத் தலையைப் பிடித்துக் கொண்டார். அவளோ யாரையும் பொருட்படுத்தாமல், “ஹவ் டேர் யூ?” என்று கோபமாக ஆர்பரித்து கத்தியவள் பின் அப்படியே உடைந்து அழத் தொடங்கிவிட்டாள். “எப்படி நிரு… என்னை விட்டுப் போக மனசு வந்தது உனக்கு… என்னைப் பத்தி யோசிக்கவே இல்லயா நீ” அவள் அங்கிருந்த யாரையும் கண்டு கொள்ளவில்லை. “சாரி ஜோ… நான்” என்றவன் பலவீனமாகப் பேச, “பேசாதே… கொன்னுடுவேன்… நீ என்னைப் பத்தி யோசிக்கவே இல்ல… ஒரே ஒரு நிமிஷம் யோசிச்சிருந்தா கூட இப்படி எல்லாம் செஞ்சிருக்க மாட்ட” என்று சொல்ல, அவளை சமாதானப்படுத்தும் வழி தெரியாமல் அவன் விழித்தான். அவள் அவன் தோள் மீது சாய்ந்து அழ, வேறு வழியின்றி மூவரும் அறையை விட்டு வெளியே வந்துவிட்டனர். ரேணுவிற்கு அந்த நொடி மகனுடன் இருந்த உறவும் அன்பும் மொத்தமாகக் கழன்றுவிட்டது போன்ற உணர்வு. அதன் பின் அவனும் ஜோவும் பேசி ஒரு வழியாக சமாதானமடைந்திருக்க தூரமாக நின்று அறைக்குள் நடந்து கொண்டிருக்கும் இருவரின் ஊடலையும் காதலையும் பார்த்திருந்த மாதவன் மனம் ஒரு தீர்மானத்திற்கு வந்தது. அவர் தயக்கத்துடன் நின்றிருந்த ஜோசப்பை நெருங்கி, “இவங்க கல்யாணத்தை இதுக்கு மேலயும் தாமதிக்க வேண்டாம்னு தோனுது… சீக்கிரம் முடிச்சுடலாம்” என, அவரால் என்ன சொல்ல முடியும்? அவர்தான் மருத்துவமனை வந்து சேரும் வரை மகளிடமிருந்த தவிப்பையும் அழுகையையும் பார்த்தாரே. அப்போதே இவர்கள் உறவைப் பிரிக்க முடியுமென்று எண்ணத்தை மாற்றிக் கொண்டார். ஆனால் ஜோசப்பிற்கு இப்போதும் நிரஞ்சன் மீது மதிப்பு ஏற்படவில்லை. அதுவும் இந்தத் தற்கொலை முயற்சி அவன் மீதான எரிச்சலை அதிகப்படுத்தியதே தவிர குறைக்கவில்லை. ஆனால் மகளின் விருப்பம் என்பதில் அவரின் எண்ணங்கள் எல்லாம் பின்னுக்குத் தள்ளப்பட்டுவிட்டன. இந்த நிலையில் அங்கே நின்று நடப்பதைப் பார்த்துக் கொண்டிருந்த ரேணு, கணவன் பேசியதெல்லாம் கேட்டு உள்ளுர தோற்றுப் போன உணர்வுடன் நின்றார். அப்படியெனில் இந்தப் பெண்தான் தன் வீட்டிற்கு மருமகளா என்ற எண்ணம் அவருக்குள் ஒருவித கலவரத்தை ஏற்படுத்தியது. அன்று மாலை நிரஞ்சனை மருத்துவமனையிலிருந்து அவர்கள் வீட்டிற்கு அழைத்து வர, “ஏன் டா இப்படி பண்ண… நாங்கெல்லாம் இல்ல… உனக்கு அந்தப் பொண்ணைக் கட்டிவைக்க மாட்டோமா… அதுக்குள்ள அவசரப்பட்ட...” என்று அவனிடம் உரிமையாகச் சண்டையிட்டான் உதய். “சாரி ரஞ்சு… நான் அப்படி பேசி இருக்கக் கூடாது” என்று சாதனா மன்னிப்புக் கோரினாள். “நீ யார வேணா உன் விருப்பம் போல கல்யாணம் பண்ணிக்கோ… ஆனா ப்ளீஸ் இனிமே இந்த மாதிரி எந்த முடிவும் எடுக்காத” என்று மிருதுளா தம்பியின் கைகளைப் பிடித்துக் கொண்டு அழுதே விட்டாள். சகோதரனுக்கு தாங்கள் கொஞ்சமாவது ஆதரவாக நின்றிருக்க வேண்டுமோ என்ற மிகத் தாமதமாக அவர்கள் மூளைக்கு உரைத்ததன் விளைவு. அந்தப் பேச்சை எல்லாம் கேட்காமல் ரேணு அமைதியாக வந்து அறைக்குள் அமர்ந்து கொண்டார். அவருக்கு இந்த வீட்டில் தான் தனித்து விடப்பட்டது போன்ற உணர்வு உண்டானது. அவர் பின்னோடு வந்த மாதவன், “நாளைக்கே போய் கல்யாணத்துக்கு நல்ல நாள் பார்த்துட்டு வந்துடலாம் ரேணு” என்றார். கணவனை நிமிர்ந்து பார்த்தவர், “நான் வரல… நீங்கதான் முடிவு பண்ணீங்க… நீங்களே போய் பார்த்து முடிச்சிட்டு வாங்க” என்று விட்டேற்றியாகப் பேசி விட்டு எழுந்து செல்லப் பார்க்க, “என்னதான் ரேணு உன் பிரச்சனை” என்று அவரை மறித்து கொண்டு முறைப்பாகக் கேட்டார். “எனக்கு அந்தப் பொண்ணைப் பிடிக்கல… அவ இந்த வீட்டுக்கு மருமகளா வர்றதுல எனக்கு இப்பவும் உடன்பாடில்லை” என்றவர் அழுத்தமாக தன் முடிவைச் சொல்ல, “இப்பவும் நீ வீம்பு பிடிச்சிட்டு இருக்க… விட்டிருந்தா உன் பையன் செத்துப் போயிருப்பான்” சொல்லும் போதே அவர் தொண்டை அடைத்து குரல் நடுங்கியது. “அவன் என் பையனே இல்ல… வேற யாரோ” அவர் கண்கள் கலங்கிய போதும் முகத்தில் எந்தவித உணர்ச்சிகளும் இல்லை. “உனக்கு பைத்தியம் பிடிச்சு போச்சா? ஏன் இப்படி எல்லாம் பேசிட்டு இருக்க?” மாதவன் குரலை உயர்த்த, “யாருக்குப் பைத்தியம் பிடிச்சிருக்கு…? எனக்கா அவனுக்கா? நாம யாருமே வேண்டாம்… அந்தப் பொண்ணுதான் வேணும்னு அவன் இப்படி ஒரு காரியம் பண்ணி இருக்கான்னா… அப்புறம் என்ன உறவு இருக்கு அவனுக்கும் எனக்கும்?” என்ற ரேணு மனம் தாங்கமல் படுக்கையில் சரிந்து அமர்ந்து கண்ணீர்விட, “இப்படியே பேசிட்டு இருந்தா… இந்தப் பிரச்சனைக்குத் தீர்வே வராது ரேணு… ஏதோ அவன் அந்தப் பொண்ணைக் காதலிச்சிட்டான்… பெரியவங்களா அவன் விருப்பத்தை நிறைவேத்தி வைக்கதான் நாம யோசிக்கணும்” என்றவர் நிதானமாக எடுத்துரைத்தார். “வேற எந்தப் பொண்ணை அவன் காதலிச்சிருந்தாலும் நான் ஏத்துக்கிட்டு இருந்திருப்பேங்க… ஆனா இந்தப் பொண்ணு” என்றவர் குரல் உடைய, “இந்தப் பொண்ணுக்கு என்ன? பொறுப்பில்லாம இருக்கா… காலையில பதினொரு மணிக்கு எழுந்துக்கிறா… இந்த உப்புக்குப் பெறாத காரணத்தைதானே சொல்ல போற” என்றவர் முகம் சலிப்புடன் ஏறிட்டது. ரேணு அதிர்ச்சியுடன், “உப்புக்குப் பெறாத காரணமா? நாளைக்கு அவ இப்படி எல்லாம் இருந்தா என் பையன்தான் கஷ்டப்படுவான்… ஏன் நாளைக்கு உங்களுக்கோ எனக்கோனா கூட யார் செய்றது? இந்த வீட்டு மருமகதானே செய்யணும்… அவ இப்படி பொறுப்பிலாம இருந்தா?” என, “என்ன பேசிட்டு இருக்க நீ… அந்தப் பொண்ணு படிச்சு இருக்கா… அவங்க அப்பா அந்தப் பொண்ணு பேர்ல கோடி கோடியா சம்பாதிச்சு பேங்க்ல போட்டு வைச்சிருக்காரு… அந்தப் பொண்ணு சமைக்கணும் வீட்டு வேலை செய்யணும்னு என்ன இருக்கு? எல்லாத்துக்கும் அவங்க வேலைக்ககாரங்க வைச்சுப் பார்த்துப்பாங்க” என்றார். அந்த வார்த்தை ரேணுவை அழுத்தமாகக் காயப்படுத்தியது. ஒருவித அவமானப்படுத்தலும் அலட்சியமும் அவர் வார்த்தையில் இருந்தது போல தோன்ற, “அப்போ… இந்த வீட்டுல தினைக்கும் சமைக்கிற பாத்திரம் தேய்க்கிற நான் இந்த வீட்டோட வேலைக்காரியா என்ன?” என்று கணவன் முகத்தை ஆழ்ந்து பார்த்தபடி வினவ, “நான் அப்படி சொல்லல” என்றார் மாதவன். “வேற எப்படி சொன்னீங்க? நீங்க பேசனது எல்லாம் வைச்சுப் பார்த்தா நான் இந்த வீட்டோட வேலைக்காரின்னுதான் தோனுது” “நீ விதண்டாவாதம் பண்ற ரேணு” “நான் விதாண்டாவதம் பண்ணல… நீங்கதான் இப்போ என்ன அசிங்கப்படுத்துற மாதிரி பேசுனீங்க… அதென்ன வீட்டு வேலை செய்றதுன்னா உங்களுக்கு அவ்வளவு கேவலமா போச்சா… இத்தனை நாளா உங்க எல்லோருக்கும் என்ன வேணும்னு பார்த்து பார்த்து செஞ்சு போடுற நான் என்ன வேலைகக்காரியா அப்போ” என்றவர் முகம் கோபத்தில் சிவக்க, பேசும் போதே கண்ணீரும் பெருகியது. “நான் ஒன்னும் உன்னை வேலைக்காரின்னு சொல்லல… அப்படி உனக்கா தோனினா அதுக்கு நான் பொறுப்பாக முடியாது… சும்மா தேவையில்லாம பேசிக்கிட்டு” என்று மாதவன் கடுப்புடன் சொல்லிவிட்டு, “நான் ரஞ்சு கல்யாண விஷயத்தைப் பத்திதான் உன்கிட்ட பேச வந்தேன்… ஆனா நீ ஏதேதோ பேசிப் பேச்சை மாத்துற” என்றார். ரேணு அவசரமாக தன் முகத்தைத் துடைத்துக் கொண்டு, “நான்தான் அவன் என் பையனே இல்லன்னு சொல்லிட்டேனே… அப்புறம் அவனுக்கு நீங்க யாரை கல்யாணம் பண்ணி வைச்சா எனக்கு என்ன? எப்படியோ பண்ணி வைச்சுக்கோங்க… ஆனா அவங்க இரண்டு பேரும் இந்த வீட்டுல என் கண் முன்னாடி இருக்கக் கூடாது சொல்லிட்டேன்” என்றவர் தீர்க்கமாகச் சொல்ல, “அதெப்படி நீ சொல்லலாம்… இந்த வீடு நான் உழைச்சு கஷ்டப்பட்டுக் கட்டினது… இங்கே யார் இருக்கணும் இருக்க கூடாதுங்குறதை நான்தான் முடிவு பண்ணுவேன்” என்றவர் முடிவாகச் சொல்லிவிட்டு அகன்றார். அந்த வார்த்தைகளில் ரேணுவிற்கு ஒரு நொடி இந்த ஒட்டுமொத்தமே உலகமே இடிந்து அவர் தலையில் விழுந்துவிட்டது போன்றிருந்தது. தன்னுடைய இத்தனை வருட வாழ்க்கையும் உழைப்பும் வெறுமையாகிவிட்ட வலி. உள்ளுர கோபம் தகித்தது. அந்த நொடியே அந்த வீட்டை விட்டுச் சென்றுவிட வேண்டுமென்று மனம் கொதித்தது. ஆனால் எங்கே செல்வது… அம்மா அப்பா இறந்துவிட்டனர். சகோதரர்கள் என்று யாரும் இல்லை. எங்கே போவது யார் வீட்டிற்குப் போவது. இருண்டு போய்விட்ட அந்த இரவு நேரத்தில் யாரைத் தேடிப் போவது. வாழ்க்கையே இருண்டு போய்விட்ட உணர்வு. பார்த்துப் பார்த்து பராமரித்து கண்ணும் கருத்துமாக அவர் வாழ்ந்து புழங்கிய வீடு இன்று அந்நியப்பட்டுப் போனது. அந்த ஒரு வார்த்தையில்… என் வீடு! ஆம்… இது என்னுடைய வீடு இல்லையென்று ஒரு குரல் அவருக்குள் ஒலித்தது. அப்போது எனக்கு என்று எதுவுமே இல்லையா என்றவர் மனம் சுய பச்சாதாபத்தில் ஆழ்ந்தது.  கணவனின் சட்டையைப் பிடித்துக் கொண்டு, “என்னுடைய இத்தனை வருட வாழ்க்கையை உடம்பை… உழைப்பை எல்லாவற்றையும் உனக்காக உன் பிள்ளைங்களுக்காகதானே கொடுத்தேன்” என்று கத்த வேண்டும் போலிருந்தது. ஆனால் முடியவில்லை. இரவெல்லாம் கண்ணீர் விட்டு அவர் அழுதபடியே படுத்திருந்தார். அவருடைய அழுகையை வேதனையை கண்ணீரை அங்கே கவனிப்பாரில்லை. காலையில் விடிந்ததும் ஏதோ ஒரு உந்துதலில் எழுந்து அந்தப் பூங்காவில் வந்து அமர்ந்துவிட்டார். ஆனால் அவர் மனம் என்னவோ அந்த வீட்டை விட்டு வர மறுத்துவிட்டது. கைக் குழந்தையை வைத்திருக்கும் மகளின் நினைவு வந்தது. மாமியார் மாமனாருக்குச் சண்டை என்றால் வீட்டு மருமகன்கள் என்ன நினைப்பார்கள் என்ற யோசனை வந்து போனது. இப்படியாக குடும்பம் வீடு என்று ஆயிரமாயிரம் சஞ்சலங்கள் மனதில் எழ, அவர் கால்கள் அனிச்சையாக வீட்டை நோக்கி நடந்து வந்திருந்தன. செக்கு மாடு போல வருட காலமாகக் குடும்பத்தைச் சுற்றியே யோசித்து யோசித்து அவர் மூளையும் மனதும் அவ்வாறே பழக்கப்பட்டுவிட்டது. இனி அவரே நினைத்தாலும் அதைவிட்டு வெளியே யோசிக்க முடியாது. அவர் இல்லாத அந்த சில நிமிடத்தில் கூட யாரும் அவரைத் தேடவில்லை. எல்லோரும் ஆழந்த உறக்கத்தில் இருந்தனர்.  நேராக அவர்கள் கால்கள் சமையலறைக்குதான் சென்றன. மௌனகோலம் பூண்டிருந்த அந்த அறை அவருக்காகவே காலம் காலமாகக் காத்திருந்தது போன்ற உணர்வு. இத்தனை நாள் இல்லாமல் இன்று அது ஏதோ கம்பிகள் இல்லாத மாயச்சிறைப் போல தோன்றிற்று. விரும்பியோ விரும்பாமலோ தானாக அதற்குள் தன்னைப் பூட்டிக் கொண்டுவிட்டோம். கணவனின் கைப் பிடித்தக் கையோடு கரண்டிகளைப் பிடித்துக் கொண்டோம். கடிவாளமில்லாமல் பயணித்த எண்ணங்களைச் சிரமப்பட்டுக் கட்டுக்குள் நிறுத்தியவர் எப்போதும் போல தனக்கானத் தேநீரைத் தயாரித்து இரண்டு வாய் பருகும் போது உதய் வந்து நின்றான். “மாமி கொஞ்சம் டீ கிடைக்குமா? நைட்டெல்லாம் நிறைய வேலை… செஞ்சுட்டு அப்படியே லேப் டாப் மேல படுத்துத் தூங்கிட்டேன்… இப்போ தலை பயங்கரமா வலிக்குது” என்றவன் விளக்கம் கொடுக்க, “இதோ போட்டுத் தரேன் மாப்பிளை” என்றவர் தன் தேநீரை மூடி வைத்து அவனுக்கான தேநீரை தயாரித்துக் கொடுத்தார். எல்லா நாட்களையும் போல அந்த நாளும் தொடங்கியது.

Cancel “தூரமில்லை விடியல்” என்னுடைய புத்தம் புது தொடர் துவங்கப்பட்டுள்ளது. வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா