மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumMembersActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumMonisha Completed novels: Muran KavithaigalMuran Kavithaigal - 13Post ReplyPost Reply: Muran Kavithaigal - 13

Quote from monisha on September 19, 2022, 1:08 PM

13
என்னதான் ரேணுகா முகம் திருப்பினாலும் பார்வையிலும் பேச்சிலும் வெறுப்பை வாரி இறைத்தாலும் ஜோஷிகாவிற்கு அவரைப் பிடித்திருந்தது. நிரஞ்சன் ஓயாமல் அம்மா அம்மா என்று எப்போதும் அம்மா புராணம் பாடியதினால் ஏற்பட்ட பிடித்தமா அல்லது தனக்கு இப்படியொரு அம்மா இருக்கவில்லையே என்று உள்ளுர எங்கோ ஒளிந்து கொண்டிருக்கும் ஏக்கமா என அவளுக்குத் தெரியவில்லை. அதுவும் திருமணமாகி வந்த நாளிலிருந்து பார்க்கிறாள். அவர் ஒவ்வொரு வேலைகளையும் அத்தனை அர்பணிப்புடன் செய்கிறார். அதே நேரம் அவருக்குத் தன்னைப் பிடிக்கவில்லை என்பதையும் அவள் உணர்ந்திருந்த காரணத்தாலே அவரிடமிருந்து அவள் விலகி இருந்தாள். ஆனால் நேற்று எதார்த்தமாகப் பேச போய் அது அவளுக்கும் நிரஞ்சனுக்கு இடையில் மனத்தாங்கலை உண்டாக்கிவிட்டது. ‘ஏற்கனவே அம்மா நம்ம கல்யாணத்தால ரொம்ப கோபத்துல இருக்காங்க… இதனால எனக்கும் எங்க அம்மாவுக்கு இடையில பெரிய கேப் உருவாகிடுச்சு… நீ உன் ஸில்லியான பிகேவியரால அதை இன்னும் பெருசு பண்ணி பிரிவா மாத்திடாதே’ என்றவன் நேற்று எச்சரிக்கையாக சொன்னதை இப்போது எண்ணிய போது அவளுக்கு ஒரு யோசனை உதித்தது. தான் ஏன் அவருடன் நல்ல நட்பை வளர்த்துக் கொள்ள கூடாது என்று. காலம் காலமாகக் குடும்பங்களில் மிகச் சிக்கலான உறவு மாமியார் மருமகள் உறவுதான். அது நட்புடன் மலர்வது எந்தளவு சாத்தியம் என்றெல்லாம் அப்போது ஜோஷி ஆராயவில்லை . யோசனை வந்த மறுகணம் அவள் அதனை செயல்படுத்தும் முயற்சியில் இறங்கிவிட்டாள். மாடியிலிருந்து துள்ளிக் குதித்து இறங்கியவள் நேராக ரேணுவின் சாம்ராஜ்ஜியமான சமையலறையில் சென்றுதான் நின்றாள். ரேணு சூடான தேநீரைக் கோப்பையில் ஊற்றிக் கொண்டிருக்கும் போது பின்னே சென்று நின்று, “ஆன்டி…” என்று விளித்து அவரை அதிர செய்ததோடு அல்லாமல், “எனக்கும் டீ கிடைக்குமா?” என்று கேட்டு வைத்து அவரின் முறைப்பைப் பெற்றுக் கொண்டாள். ஆனால் அவர் பார்வையை ஒரு பொருட்டாக மதியாமல், “நைட்டு சரியாவே தூங்கல… அதான் லைட்டா தலைவலி… எப்பவும் நான் க்ரீன் டீ போட்டுதான் குடிப்பேன்… ஆனா இங்கே அந்தப் பழக்கம் இல்லன்னு நிரு சொல்லி இருக்கான்… அதான்” என்றவள் பாட்டுக்குப் பேசுவதைக் கடுப்புடன் எதிர் கொண்டவர்,  ‘காலங்காத்தால என்னை டென்ஷன் படுத்தவே இவ வந்திருக்கா போல… டீ வேணும்னா இவளே போட்டுக்க வேண்டியதுதானே’ உள்ளுர ஆத்திரம் பொங்கிய போதும், ‘இப்படி உதய் கேட்டால் போட்டுத் தர மாட்டோமோ?’ என்ற எண்ணம் எழவும் அவர் கைத் தானாக மற்றொரு கோப்பையை எடுத்து அதில் தேநீரை நிரப்பப் போகவும் அவள் பதறிக் கொண்டு அவர் கையைப் பற்றி, “ஓ மை காட்… ஆன்டி… உங்க விரல அடிப்பட்டு இருக்கு… என்னாச்சு… கட் பண்ணிக்கிட்டீங்களா?”என்று அக்கறையும் அதிர்ச்சியுமாகக் கேட்டாள். அவருக்கு வியப்பாக இருந்தது. யாருமே தன் விரலிலிருந்த காயத்தை இதுவரைக் கவனிக்கவில்லை. இப்படி அக்கறையாக விசாரிக்கவும் இல்லை. சட்டென்று உருகிப் போன மனதைத் திடப்படுத்திக் கொண்டு,  “சின்ன காயம்தான் ஒன்னும் இல்ல” என்று அவள் கையிலிருந்த தன் கையை இழுத்துக் கொண்டார். அவளோ விடாமல், “காயம் சின்னதா இருந்தாலும் ஆழமா இருக்கு ஆன்டி… மருந்து போடலனா செப்டிக் ஆகிடும்” என்று சொல்ல, “இந்த மாதிரி நூறு தடவை அடிப்பட்டு இருக்கு… அப்ப எல்லாம் ஆகாத செப்டிக் இப்போ ஆகிட போகுதாக்கும்” என்றவர் அலட்சியமாகச் சொல்லிவிட்டு அவளுக்கான கோப்பையை நிரப்பி, “இந்தா டீ… குடிச்சிட்டுக் கிளம்பு” என்றார். அவள் முகம் வேதனையாக மாறியது. “ஏன் நீங்க என்கிட்ட கோபமாவே பேசுறீங்க… நேத்து கூட நான் உங்ககிட்ட நார்மலாதானே செர்வன்ட் வச்சுக்கலாம்னு சொன்னேன்… ஆனா நீங்கதான் நான் சொன்னது தப்பா புரிஞ்சுக்கிட்டீங்க” என்றவள் வருத்தமாகப் பேச, அவருக்கு எரிச்சல் மூண்டது. ‘இந்த வீட்டுல ஒரு டீ யை நிம்மதியா போட்டுக் குடிக்க முடியுதா?’ என்றவர் சத்தமாகப் புலம்ப, அதற்கு மேல் அவள் எதுவும் பேசவில்லை. அமைதியாக அந்தத் தேநீரைக் குடித்து முடித்து, “தேங்க்ஸ் ஆன்டி… டீ உங்களை மாதிரியே ஹாட்டா இருந்துச்சு… ஆனா நீங்க… உங்க டீ மாதிரி ஸ்வீட்டா இல்ல” என்றாள். ரேணு அவள் சொன்னதைப் புரிந்து திரும்புவதற்குள் அவள் கோப்பையைக் கழுவி வைத்துவிட்டு அங்கிருந்து நழுவிவிட்டாள். ஏன் இந்தப் பெண் வலிய வந்து தன்னை வெறுப்பேற்றிவிட்டு போகிறாள் என்று கோபமேறியது. அந்தக் கடுப்புடன் அவர் வேலை செய்யவும் பாத்திரங்கள் எல்லாம் தாறுமாறாக உருண்டன. “குழந்தைங்க எல்லாம் தூங்கறாங்க… கொஞ்சம் மெதுவா வேலை செய்ய கூடாதா ரேணு?” என்று மாதவன் தூக்கம் களைந்த எரிச்சலில் எழுந்து வந்து கேட்க, கடுப்புடன் திரும்பியவர், “நான் அப்படிதான் உருட்டுவேன்… வேணா என்னைய வேலையை விட்டுத் தூக்கிட்டு… சத்தமில்லாம வேலை செய்ற வேலைக்காரியா பார்த்து வேலைக்கு வைச்சுக்கோங்க” என்று வெடுக்கென்று பதில் சொல்ல, அவர் முகம் வாடிப் போனது. “அன்னைக்கு நான் ஏதோ தெரியாம சொல்லிட்டேன்… அதுவும் நான் அதைச் சொல்லியே மூணு மாசம் மேல ஆகி இருக்கும்… இன்னும் ஏன் டி அதையே பிடிச்சிட்டுத் தொங்கற” “ஓ! நீங்க என்ன வேணா பேசுவீங்க… அப்புறம் மன்னிச்சிரும்பீங்க… நாங்க அதை அப்படியே மறந்துடணும்… அதெப்படி குத்திட்டு நீங்க மறந்திடுவீங்க… குத்து வாங்கின நாங்களும் அதை அப்படியே மறந்துடணும் இல்ல” என்றவர் கடுகடுப்பாய் கேட்டுவிட்டு இன்னும் சில பாத்திரங்களை வேண்டுமென்றே உருட்டினார். “தப்புதான்… அன்னைக்கு அப்படி சொல்லி இருக்கக் கூடாது… வேணா உன் கால விழறேன்… அந்த விஷயத்தை விடு” என்று மாதவன் பரிதாபமாகக் கேட்க, “ஐயா சாமி… இது உங்க வீடு… நான் உங்க கிட்ட வேலை செய்ற வேலைக்காரி… நீங்க போய் என் காலில விழலாமா?” என்றவர் பவ்யமாகச் சொன்னாலும் அவர் பார்வை மாதவனைக் குத்திக் கிழித்தது. கிட்டத்தட்ட நிரஞ்சன் திருமணம் நிச்சயிக்கபட்ட நாளிலிருந்து இருவருக்கும் இடையிலான உரையாடலில் இப்படிதான் எள்ளும் கொள்ளும் வெடித்துக் கொண்டிருந்தது. மாதவன் தான் பேசிய வார்த்தை தவறு என்று ஒப்புக்கொண்டு ரேணுவிடம் மன்னிப்பு கேட்ட போதும் அவர் அதை விடுவதாக இல்லை. அதற்கு மேல் மாதவனுக்கும் என்ன செய்வதென்று புரியவில்லை. தலையைப் பிடித்துக் கொண்டு சோஃபாவில் அமர்ந்து கொள்ள, ரேணு தேநீர் கோப்பை எடுத்து வந்து அவர் முன்னே வைத்துவிட்டுப் போனார். ரேணுவின் கோபமெல்லாம் வார்த்தைகளில் மட்டும்தான். வேலையிலும் கவனிப்பிலும் கொஞ்சமும் அதன் தாக்கம் இருக்காது. எப்போதும் போல காலை உணவு டான்னென்று உணவு மேஜைக்கு வந்தது. கொரானாவில் தொடங்கி இந்தியப் பொருளாதார நிலை என்று தோன்றியதை எல்லாம் விவாதித்துக் கொண்டே மகள்கள் மாப்பிளை மாமனார் என்று அனைவரும் உணவருந்தினர். அங்கே நிரஞ்சனும் ஜோவும் மட்டும் இல்லை. எப்போதும் தாமதமாகவே அவர்கள் கீழே இறங்கி வருவார்கள் என்பதால் யாரும் அதைக் கண்டு கொள்ளவில்லை.  ஆனால் உதய் அன்று கேலியாக, “கொரானா லாக்டௌன்ல கல்யாணம் பண்ணிக்கிட்டு உன் தம்பி வாழுறான்…” என்று மனைவி காதில் ரகசியமாக ஓதினாலும் அது எல்லோருக்கும் கேட்டிருந்தது. “சும்மா இருங்க” என்று மிருதுளா அவன் கையைக் கிள்ள, “உண்மையைதானே சொன்னேன்” என்றவன் சாப்பிட்டு எழுந்து கொள்ள, ரேணுவின் முகம் உச்சபட்ச எரிச்சலைக் காட்டியது. அதைக் கண்டும் காணாதவராக மாதவன் சாப்பிட்டுக் கொண்டிருக்க, இடையில் தருண், “நான் போய் மாமாவை சாப்பிட கூட்டிட்டு வரேன்” என்று இதுதான் வாய்ப்பு என்று அவன் மாடிக்குச் செல்லத் திட்டமிட்டான். “அடி பின்னிடுவேன்… க்ளாஸ் ஸ்டார்ட் ஆகப் போகுது… ஒழுங்கா போய் லாக் இன் பண்ணு” என்று மிருதுளா அவன் திட்டத்தை முறியடித்தாள். இந்த சம்பாஷனைகளைத் தொடங்கியதும் சாதனாவின் முகம் தொங்கிப் போனது. அதற்குப் பிறகு சிரத்தையே இல்லாமல் ஒரு மாதிரி மௌனகெதியில் சாப்பிட்டுவிட்டு எழுந்து கொண்டாள். ஒரு வகையில் அவர்களும் திருமணமான இளம் தம்பதிகள்தானே. ஆனால் கொரானா, குழந்தை என்ற காரணங்களால் இருவரும் ஒருவரை ஒருவர் பார்க்கக் கூட முடியாமல் வெகுதூரம் தள்ளி இருக்க நேரிட்டது. அவர்களின் பிரிவு காலம் மாதங்கள் தாண்டி நீடித்துக் கொண்டிருந்ததில் அவள் மனமும் உடலும் ஒரு மாதிரி கணவனின் அருகாமைக்கு ஏங்கித் தவித்தது. அதுவும் தம்பியும் தம்பி மனைவியும் நெருக்கமாக இருப்பது அவளுக்குள் இருந்த ஏக்க உணர்வைக் கிளறிக் கொண்டிருந்ததை அவள் மறைக்க முயற்சி செய்த போதும் ரேணு அதனைத் துல்லியமாக கண்டுகொண்டார். இதற்கிடையில் மாதவனுக்கு இரண்டாவது தேநீரைக் கொண்டு வந்து வைத்த மனைவியின் பார்வையில் தெரிந்த கடுப்பைப் பார்த்ததும்தான் மகனும் மருமகளும் இன்னும் இறங்கி வரவில்லை என்பது உரைத்தது. அதன் பின் மகனின் கைப்பேசிக்கு அழைக்க, “ஹெலோ” என்று ஜோதான் எடுத்துப் பேசினாள். அவளிடம் என்ன பேசுவது என்று அவர் தயக்கத்துடன் மௌனமாகிட, “யாரு ஜோ ஃபோன்ல?” என்று நிரஞ்சனின் குரல் அருகே ஒலித்தது. “உங்க டேட்” என்றவள் அலைப்பேசியைக் கை மாற்ற அவன் அடித்துப் பிடித்துப் போர்வையைத் தள்ளிக் கொண்டு எழுந்தமர்ந்தான். “ப்பா” என்றவன் சொன்னதுதான் தாமதம். “மணி என்னடா ஆகுது… ஒரு நாள் இரண்டு நாள் சரி… தினமும் இப்படியேவா” என்றவர் கொஞ்சம் காரசாரமாக காலையில் ரேணு காட்டிய கடுப்பை எல்லாம் சேர்த்து வைத்து அவன் மீது ஏற்றிவிடவும், “சாரி ப்பா சாரி ப்பா… தோ வரோம் ப்பா” என்று பயபக்தியுடன் பேசி அலைப்பேசியைத் துண்டித்தவனின் முகம் தந்தையின் வார்த்தைகளில் துவண்டு விழுந்தது. “ஐயோ கடவுளே… மணி பதினொண்ணா” என்றவன் தலையில் அடித்துக் கொள்ள, “என்னடா ஆச்சு” என்றவள் சாவகாசமாகப் புரண்டு படுத்தபடி கேட்டாள். “ஏன் இன்னும் எழுந்திருச்சு வரலன்னு அப்பா திட்டுறாரு…சீக்கிரம் குளிச்சிட்டுக் கீழே போகணும்… சை… நான் அலாரம் வைச்சேன்… அது அடிக்கவே இல்ல…” என்றவன் புலம்பிக் கொண்டே படுக்கையிலிருந்து எழுந்து கொண்டான். “அலாரம் அடிச்சுதே… நான்தான் அதை ஆஃப் பண்ணேன்” என்றவள் சாதாரணமாகக் கூற, “ஏன் டி” என்றவன் அதிர்ந்து அவளைப் பார்த்தான். “என்னை என்ன செய்ய சொல்ற… நான் நைட்டெல்லாம் தூங்கவே இல்ல… அப்பதான் கொஞ்சமா தூக்கம் வந்துச்சு… அதுக்குள்ள இந்த நான்சென்ஸ் அலாரம் அடிச்சு என்னை எழுப்பி விட்டுடுச்சு… நான் அதை ஆஃப் பண்ணிட்டேன்” என்றவள் அலட்டிக் கொள்ளாமல் சொல்ல, “அடிப்பாவி உன்னை” என்று படுக்கையில் விழுந்து அவளை அவன் உலுக்கி எடுக்க, “டேய் விடுடா” என்று பதிலுக்கு அவளும் அவனைத் தள்ளிவிட்டுப் பிராண்டி வைக்க, என்று எப்படியோ அடித்துப் பிடித்து இருவரும் குளித்துத் தயாராகிக் கீழே வரும் போது குட் மார்னிங் குட் நூன் ஆகியிருந்தது. வாயிலில் நின்று உதய் அலைப்பேசியில் கதை அளந்து கொண்டிருந்தைப் பார்த்தும் பார்க்காமல் ஜோ உள்ளே சென்றுவிட, நிரஞ்சனுக்குதான் பக்கென்றானது. அவன் கவனத்தைக் கலைக்காமல் உள்ளே சென்றுவிடலாம் என்பதற்குள், “என்னடா மச்சான் இவ்வ்வ்வ்வ்ளோ சீக்கிரமா எழுந்து வந்துட்ட” என்று அவனைப் பிடித்துக் கொண்டுவிட்டான். “இல்ல மாமா கொஞ்சம் ஆஃபிஸ் வொர்க்… முடிச்சிட்டுப் படுக்க கொஞ்சம் லேட்டாகிடுச்சு”  “ஓஓஓ! ஆஃபிஸ் வொர்க் பார்த்த” என்றவன் இழுத்ததில், “மாமா பசிக்குது மாமா… சாப்பிட்டு வந்துடுறேன்” என்றவன் கெஞ்சலாகப் பார்த்ததில், “காலைல டிஃபனையே நீ பன்னண்டு மணிக்கு சாப்பிட்டா… நீ மதிய சாப்பாட எப்படா சாப்பிடுவ” என்று கேலி செய்ய, அவன் என்ன பதில் சொல்வதென்று புரியாமல் விழிக்க,  “சரி சரி போ… போய் சாப்பிடு… அப்புறமா பேசிக்கலாம்” என்று அனுப்பி வைத்தான். ‘தப்பிச்சேன்டா சாமி’ என்று உள்ளே வந்தவன் தன்னைப் பற்றிக் கொஞ்சமும் கவலை இல்லாமல் உணவு மேஜையில் அமர்ந்து தோசையை வெளுத்து வாங்கிக் கொண்டிருந்த மனைவியைப் பார்த்துக் கடுப்பாகி, ‘செய்றதெல்லாம் செஞ்சிட்டு எப்படி உட்கார்ந்து கொட்டிக்கிட்டு இருக்கா பாரு’ என்று எண்ணியபடி அவள் அருகில் அமர்ந்து தோசையில் கை வைக்கும் போது சீரியலை சீரியஸாகப் பார்த்துக் கொண்டிருந்த மாதவன் அவன் புறம் திரும்பி, “ஏன் இரண்டு பேரும் கொஞ்சம் சீக்கிரம் எழுந்திருச்சு கீழ வரக் கூடாதா?” என்று கேட்டு வைக்க அவனுக்கு முகம் வெளிறிப் போனது. எச்சிலை விழுங்கிக் கொண்டு, “இல்ல பா” என்று அவன் தடுமாறும் போது இடையில் ஜோ, “நான் அஞ்சு மணிக்கே எழுந்துட்டேன் அங்கிள்… இவர்தான் லேட்டு” என்று போட்டுக் கொடுத்தாள். “எது?” என்றவன் மனைவியைப் பார்த்து முறைத்து, “நீ எப்போடி அஞ்சு மணிக்கு எழுந்த” என்று மெல்லிய குரலில் கேட்க, “எழுந்தேனே… ஆன்டிகிட்ட டீ வாங்கிக் குடிச்சேனே” என்றவள் சொன்னதைக் கேட்ட நிரஞ்சன் நம்பாமல், “நிஜமாவா” என்று கேட்க, “ஆமா ஆன்டியைக் கேட்டுப் பாருங்களேன்… ஆன்டிஈஈ” என்று வேறு சத்தமாக அழைத்து வைத்தாள். “ஜோ சும்மா இரு”என்று நிரஞ்சன் அவள் கையை அழுத்த மாதவனோ அவள் ரேணுவை அழைத்ததில் பதட்டமானார். ‘இவ எதுக்கு இப்போ ஏழரையைக் கூட்டுறா’ என்று எண்ணியவர் இவளுக்கு சீரியல் பெண்களே பரவாயில்லை என்று தலையைத் திருப்பிக் கொண்டு பழையபடி டிவியில் ஐக்கியமாகிவிட்டார். இதற்கிடையில் இந்த சம்பாஷனையை சமையலறையிலிருந்து உன்னிப்பாகக் கேட்டுக் கொண்டிருந்த ரேணுவிற்குச் சிரிப்பு தாங்கவில்லை. வாயை மூடி அவர் சிரித்துக் கொண்டிருக்கும் போது நிரஞ்சன் சாப்பிட்ட தட்டை எடுத்துக் கொண்டு வரவும் அப்படியே அவர் தன் சிரிப்பைக் கட்டுப்படுத்திக் கொண்டு காய்களை நறுக்கிக் கொண்டிருந்தார். ‘நல்ல வேளை அம்மாவுக்கு அவக் கூப்பிட்டது கேட்கல’ என்று நிம்மதி பெருமூச்சு விட்டு வெளியே வருவதற்குள் ஜோ அடுத்தப் பிரச்சனை கிளப்பியிருந்தாள். “என்ன அங்கிள் நீங்க எப்பப் பாரு அந்த மொக்க சீரியலே பார்த்திட்டு இருக்கீங்க… ஆன்டிக்கு பாவம் கையில அடிப்பட்டு இருக்கு… ரொம்ப ஆழமா கட் ஆகி இருக்கு… நீங்க கொஞ்சம் அதை என்னனு பார்க்கக் கூடாதா? அதுவும் அந்தக் காயத்தோட எல்லா வேலையும் அவங்களே செய்றாங்க” என்று கேட்டு வைத்து உண்மையிலேயே அப்போது ஏழரையைக் கூட்டிவிட்டாள். “என்ன… அடிப்பட்டு இருக்கா?” என்று மாதவன் அதிர்ந்து விசாரிக்கும் போதே நிரஞ்சன் பதறித் துடித்து சமையலறைக்குள் சென்று, “என்ன ம்மா ஆச்சு… கையைக் காட்டுங்க… எங்க அடிப்பட்டு இருக்கு” என்று அவர் கையைப் பிடித்துப் பார்த்தான். அவர் சின்ன காயம்தான் என்று சொல்வதற்குள் பின்னோடு வந்த மிருதுளா, “பார்த்து வேலை செய்ய கூடாதாம்மா?” என்றவள் வருத்தம் கொள்ள, அடுத்து சாதனா வந்து நின்று, “ம்மா இப்படி கையைக் காட்டுங்க” என்று முந்திக் கொண்டு வந்து மருந்திட்டு ஒரு வெள்ளைத் துணியில் கட்டுப் போட்டு தான் ஒரு மருத்துவர் என்பதை நிரூபித்தாள். இதற்கிடையில் மனைவியின் காயத்தை வந்து எட்டிப் பார்த்து விட்டுப் போன மாதவனுக்கு, ‘இதுக்காகவா நம்ம சீரியல பார்க்கிறதைப் பத்தி எல்லாம் பேசிட்டு போனா… இந்தாலும் இந்தப் பொண்ணுக்கு வாய் கொஞ்சம் அதிகம்தான்… ஹ்ம்ம்… இந்தப் பொண்ணு விஷயத்துல ரேணு சொன்னதைக் கேட்டிருக்கணுமோ?’ என்று எண்ணிப் பெருமூச்செறிந்தார். ஆனால் காலம் கடந்துவிட்டது. ரேணுவிற்கு ஐயோ என்றானது. “எப்படிறி இந்தக் கட்டோட வேலை செய்வேன்…” என்று ரேணு ஆயாசமாக அவர்களைப் பார்த்து கேட்க, “இன்னைக்கு ஒன்னும் நீங்க எந்த வேலையும் செய்ய வேண்டாம்… எல்லாம் மிருது பார்த்துப்பா” என்றான் நிரஞ்சன். ‘எது? நானா?’ என்று மிருது உள்ளுர அதிர்ந்தாலும், “ஆமா நான் பார்த்துக்கிறேன்… நீங்க ரெஸ்ட் எடுங்கம்மா” என்றவள் ஒப்புக்குச் சொல்லிவிட்டு வெளியே வந்ததும் தம்பியைப் போட்டு உலுக்கி எடுத்தாள். “ஏன்… உன் பொண்டாட்டியை வேலை செய்ய சொல்லேன்… அவ வெட்டியாதானே இருக்கா” “உனக்கு தெரியாதா… அவளுக்கு அவ்வளவா சமைக்க வராது” “ஏன்? அது உனக்கு காதலிக்கும் போதே தெரியாதா… அவளுக்கு சமைக்க வராதுன்னு… எல்லாம் தெரிஞ்சுதானே சார் லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க” “இப்ப என்ன பிரச்சனை… உன்னால வேலைப் பார்க்க முடியாதா விடு… நான் பார்த்துக்கிறேன்” “அப்படியே நல்லவன் மாதிரி சீன் போடுறதுல உன்னை மிஞ்ச ஆளே இல்லாடா… அம்மா அம்மான்னு அப்படியே வாயாலயே உருகுவான்” “மிருது நீ ரொம்ப ஓவரா பேசுற” “உன் பொண்டாட்டிக் கூடதான் ஓவரா பேசுறா… உலகத்துலயே அவதான் நல்லவ மாதிரி ஒரு சீனைப் போட்டா பாரு… சும்மா சொல்ல கூடாது பொண்டாட்டியும் புருஷனும் நல்லாவே பண்றீங்க” என்று முடிந்த மட்டும் அவனிடம் ஏறி விட்டுச் செல்ல அடுத்ததாக ரேணு வந்து பிடித்துக் கொண்டார். “என்னடா பிரச்சனை உன் பொண்டாட்டிக்கு… காலைல இருந்து என்கிட்ட வம்பு பண்ணிட்டு இருக்கா? இப்ப என்னடான்னா ஒன்னுமில்லாத விஷயத்தைப் பெருசு பண்ணிட்டுப் போயிருக்கா… அவ செஞ்ச இந்த வேலையால என் வேலை கெட்டதுதான் மிச்சம். இத பாரு… லாஸ்டா சொல்றேன்… பெங்களூர் போற வரைக்கும் இரண்டு பேரும் ஒழுங்கா இருந்துக்கோங்க… முடிஞ்சா உங்க ரூம்லயே இருந்துக்கோங்க… உங்களுக்கு வேண்டிய சாப்பாடு தண்ணி எல்லாம் நான் மேலேயே கொடுத்து அனுப்பிடுறேன்” என்றவர் எச்சிரிக்கையாக சொல்ல, நிரஞ்சன் வலியுடன் அங்கிருந்து தன்னறைக்கு வந்துவிட்டான். நடந்ததை எல்லாம் பார்த்துவிட்டு அவன் பின்னோடு அறைக்குள் நுழைந்த ஜோ அவன் படுக்கையில் தலை கவிழ்ந்து அமர்ந்திருப்பதை பார்த்து, “சாரி… நிரு…” என்று மெதுவாக சொல்லியபடி அவள் அருகில் வர, அவன் மனைவியின் இடையைக் கட்டிக் கொண்டு குழந்தை போல அழத் தொடங்கிவிட்டான். “அம்மா என்னைப் புரிஞ்சுக்கவே மாட்டாங்க போல… எனக்கு புரியல… நான் அப்படி என்ன தப்பு செஞ்சிட்டேன்… லவ் பண்ணது என்ன அவ்வளவு பெரிய குத்தமா” என்றவன் கண்ணீரில் கரைய அவன் தோளைத் தடவிக் கொடுத்தவள்,  “எல்லாம் சரியாகிடும் நிரு” என்றாள். அவள் முகத்தை நிமிர்ந்து பார்த்தவன், “நானும் அப்படிதான் நினைச்சேன்… ஆனா இப்போ அந்த நம்பிக்கையே எனக்கு இல்ல ஜோ” என, “கம்மான் நிரு… இதெல்லாம் ஒரு சின்ன பிரச்சனை… நீ நம்பிக்கையோட இரு… எல்லாம் தானா சரியாகிடும்… பாரு” என்றவள் அவன் அருகில் அமர்ந்து தேற்ற அவள் முகத்தை வாஞ்சையுடன் பார்த்துவிட்டு, “உன் டேடி… உன்னை பிரின்ஸஸ் மாதிரி பார்த்துக்கிட்டாரு… ஆனா இங்கே எல்லோரும் உன்னை இன்ஸல்ட் பண்ற மாதிரி நடந்துக்கிறாங்க… ஏன் நானே கூட” என்றவன் பேசும் போது அவள் இடை நிறுத்தி, “என்னால புரிஞ்சிக்க முடியுது… டேடி என்கிட்ட முன்னாடியே சொன்னாரு… உன்னால அந்த ஃபேமிலியோட செட்டாக முடியாதுன்னு… ஆனா ஐ பிலீவ் இன் மை லவ்… ஐ பிலீவ் இன் யூ” என்றவள் அழுத்தமாகச் சொன்னதில் அவன் நெகிழ்ந்து அவளை இறுக்கமாக அணைத்துக் கொண்டான். பெரும்பாலான குடும்பப் பிரச்சனைகளால் கணவன் மனைவி உறவுக்கு இடையில் மனஸ்தாபம் உண்டாகிறது. சில நேரங்களில் அதே பிரச்சனைகளால்தான் நெருக்கமும் உண்டாகிறது. ஜோவும் ரஞ்சனும் ஒருவருக்கு ஒருவர் ஆறுதலாக அணைத்துக் கொண்டிருக்கும் போது அவர்கள் அறை வாசலுக்கு வந்த சாதனா கதவு திறந்திருந்த காரணத்தால் அவர்கள் இருந்த கோலத்தைப் பார்த்துவிட்டு சங்கடத்துடன் திரும்பிச் செல்ல எத்தனிக்கும் போது ஜோ அவளைப் பார்த்துவிட்டாள். “நிரு… உங்க சிஸ்டர்” என்றபடி அவனை விட்டு விலகி, அவன் திரும்பி பார்த்து, “சாதனா” என்று அழைத்தான். படிகளில் இறங்கப் போனவள் திரும்பி நின்று, “உன்கிட்ட பேசலாம்னுதான் வந்தேன்” என்று ஆரம்பிக்க, “சொல்லு சாதனா” என்றவன் கேட்க, “கௌஷிக் போன் பண்ணாரு… அவர் ஃபிரண்டுகிட்ட பேசி வைச்சு இருக்காராம்… எங்கேயோ ஒரு ஸ்கூல் பேர் சொன்னாரு… என் ஃபோன்ல லொகேஷன் கூட அனுப்பி இருக்காரு… அம்மா அப்பாவை இன்ஜெக்ஷன் போடக் கூட்டிட்டு வரச் சொன்னாரு… அப்பாக்கிட்ட சொன்னா கேட்கவே மாட்டிராரு… நீதான் எப்படியாவது கன்வின்ஸ் பண்ணி அவங்க ரெண்டு பேரையும் கூட்டிட்டுப் போகணும்” என்றாள். “நான் பேசுனா அவங்க கன்வின்ஸ் ஆவாங்களா?” என்றவன் கவலையுடன் கேட்க, “ப்ச்… பிரச்சனையோட சீரியஸ்னஸ் தெரியாம… நீ வேற இப்படி பேசாதே… மத்த எல்லா பிரச்சனையும் விட… இப்ப அவங்க வேக்ஸினேஷன் போட்டுக்கிறது ரொம்ப முக்கியம்… கண்டிப்பா நாம எல்லோரும் சேர்ந்து சொன்னா அவங்க கேட்பாங்க” என்றவள் அழுத்தமாகச் சொல்லவும் நிரஞ்சனும் நிலைமை புரிந்து தலையசைத்தான். “சரி… நீ கீழே வா… பேசுவோம்” என்று விட்டு இறங்கிச் செல்லவிருந்த சாதனா மீண்டும் திரும்பி, “ஜோஷிகாவோட அப்பாகிட்டயும் இன்ஃபார்ம் பண்ணு… அவருக்கும் அபௌவ் ஃபிப்டி ஆகுது இல்ல” என, “ஹ்ம்ம் சொல்றேன்” என்றவன் ஜோவிடம் திரும்பி இந்த விஷயத்தைச் சொல்லி அவள் தந்தையிடம் பேச சொன்னான். “ஓகே நான் வீட்டுக்குப் போய் அவர்கிட்ட பேசிட்டு வரேன்… இரண்டு நாளா இந்த இஷுல நானும் அவரைப் பார்க்கவும் இல்ல பேசவும் இல்ல” என்றபடி இறங்கிச் சென்றாள். அப்போதுதான் அவளுக்கு அவரும் தன்னை அழைத்துப் பேசாதது நினைவுக்கு வந்தது. ‘ஏன் டேடி நமக்கு கால் பண்ணல’ என்று எண்ணிக் கொண்டே அவள் வீட்டின் கேட்டிற்கு நடந்து வந்திருக்கவும் அது பூட்டியிருந்தது. ‘எங்கப் போயிருப்பாரு?’ என்று யோசித்தபடி மீண்டும் அறைக்குத் திரும்பியவளுக்கு அப்போதுதான் கதவு உள்பக்கமாகப் பூட்டியிருந்ததோ என்ற சந்தேகம் எழுந்தது. உடனடியாக செல்பேசி எடுத்து தன் தந்தைக்கு அழைத்தாள். இரண்டு முறை அடித்து ஓய்ந்து மூன்றாவது முறை அழைக்கும் போது அவர் குரல் ஒலித்தது. “ஹெலோ ஜோஷி” என்றவர் பேசும் போதே அவர் குரல் சுரத்தையே இல்லாமல் ஒலிக்க, “டேடி என்ன… என்னாச்சு உங்களுக்கு? ஆர் யூ ஃபீலிங் வெல்” என்றவள் பதட்டத்துடன் கேட்க, “டென்ஷன் ஆகாதமா… ஐம் பைன்” என்றார். அவர் குரலை வைத்தே அவளுக்குப் புரிந்துவிட்டது. “நோ யுவர் நாட்” என்றவள் சொல்ல, “லேசா கோல்ட்… அவ்வளவுதான்… நான் நம்ம டாக்டர்கிட்ட கூட பேசிட்டேன்… அவர் மருந்து பிரஸ்கிரைப் பண்ணி இருக்காரு… சாப்பிட்டா சரியாயிடும்… நீ ஒன்னும் டென்ஷன் ஆகாதே… எனக்கு ஒன்னும் இல்ல” என்றவர் சொல்லும் போதே அவளை அச்சம் தொற்றிக் கொண்டது. “ஒன்னும் இல்லன்னா… எதுக்கு கேட்டைப் பூட்டி வைச்சு இருக்கீங்க… நீங்க கேட்டை திறங்க… உங்களுக்கு ஒன்னும் இல்லையானு நான் வந்து பார்க்கிறேன்” என்றவள் சொல்லவும், “எனக்கு ஒன்னும் இல்ல ஜோஷி… நான் நல்லா இருக்கேன்” என்றவர் மீண்டும் சொல்ல, “நான் கீழே வரேன்… நீங்க கேட்டை திறங்க” எனும் போது, “ஜோ ப்ளீஸ் வேண்டாம்… நான் பால்கனிக்கு வரேன்” என்றவர் எதிரே அவளின் அறை வாசலில் வந்து நின்றார். அவர் முகத்தில் தெரிந்த களைப்பைப் பார்த்து, “டேடி உங்களுக்கு கொரானா சிம்ப்டம்ஸ் இருக்கா?” என்று கேட்கும் போதே அவள் தொண்டை அடைத்தன. “ஜோ நான் நல்லா இருக்கேன்… லேசா கோல்ட் இருக்கு அவ்வளவுதான்” “நீங்க சமாளிக்கிறீங்க டேடி… நான் வீட்டுக்கு வரேன்” என்றவள் படியில் இறங்க, “ஜோஷி… எனக்கு கொரானா இருக்கு… நீ வர வேண்டாம்” என்றவர் அழுத்தமாகச் சொன்னதில் அவள் அதிர்ந்து நின்றாள். “ப்ளீஸ் ஜோஷிமா புரிஞ்சிக்கோ… அங்கே உன் வீட்டுல சின்ன குழந்தை இருக்கு… நீ இப்போ இங்கே வரக் கூடாது” என்றவர் தெளிவாகச் சொல்ல, “இட்ஸ் ஓகே டேடி… நான் இங்கே திரும்பி வரல… அங்கேயே உங்க கூட இருந்து பார்த்துக்கிறேன்… நீங்க கேட்டை திறங்க... இல்லனா நான் எகிறிக் குதிச்சு வந்திருவேன்” என்றாள். “அப்படினா… நான் காரை எடுத்துக்கிட்டு எங்கேயாச்சும் தூரமா போயிடுவேன்… எங்கன்னு உன்கிட்ட சொல்லவும் மாட்டேன்” எனவும் அவள் தவிப்புடன், “டேடி… சீரியஸ்லி” என்று கேட்டாள். “சீரியஸ்லி” என்றவர் மேலும், “நான் இப்போ நல்லாதான் இருக்கேன்… உன் ஹெல்ப் வேணும்னா நான் கண்டிப்பா கேட்கிறேன்… ப்ளீஸ் நீ அங்கேயே இரு… டேடி சொல்றதைக் கேளு” என்றவர் சொன்னதைக் கேட்டு அவள் அப்படியே படிக்கட்டில் அமர்ந்து அழத் தொடங்கிவிட்டாள். அவள் அழுது கொண்டிருப்பதைப் பார்த்த தருண், “என்னாச்சு ஜோ” என்று விசாரிக்கவும் அவள் தன் கவலையை அவனிடம் கொட்டிவிட, அவன் அடுத்த நொடியே, “ஜோவோட அப்பாவுக்கு கொரானாவாம்” அந்தத் தகவலை வீட்டில் உள்ள எல்லோரிடமும் பரப்பிவிட்டான். அந்தச் செய்தியைக் கேட்ட நொடி பூகம்பம் வந்ததைப் போல அந்த வீடே அதிர்ச்சியில் குலுங்கி நின்றது போன்ற உணர்வு. எங்கேயோ நெருப்பு பற்றிக் கொண்டு எரியும் போது அது நமக்கெல்லாம் வெறும் செய்தி. ஆனால் அதே நெருப்பு நம் எதிர் வீட்டுக் கூரைக்கு பரவியதும்தான் அந்தப் பிரச்சனையின் தீவிரம் தெரியும்.

Cancel “தூரமில்லை விடியல்” என்னுடைய புத்தம் புது தொடர் துவங்கப்பட்டுள்ளது. வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா