மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumMembersActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumMonisha Completed novels: Muran KavithaigalMuran kavithaigal - PreFinalPost ReplyPost Reply: Muran kavithaigal - PreFinal

Quote from monisha on September 21, 2022, 3:56 PM

15
அந்த வீட்டின் அமைதியும் தனிமையும் மாதவனைப் பயங்கரமாக மிரட்டியது. ரேணு இல்லாத அந்த சில மணிநேரங்களிலேயே ஏதோ அந்த வீடு சூனியம் பிடித்தது போன்ற உணர்வை ஏற்படுத்தியது. அவள் இல்லாமலே போய் விடுவாளோ என்ற எண்ணமே இதயத்தைக் கசக்கிப் பிழிந்தது. இரவு தலைவலி என்று தைலத்தைத் தேய்த்துக் கொண்டு விரைவாக ரேணு படுக்கைக்குச் சென்றுவிட்டார். ஆனால் அவரோ எப்போதும் போல சீரியல் பார்த்துவிட்டுப் படுக்கையில் விழுந்த போது தைல வாசனை குப்பென்று வீசியது. ரேணுவின் குரலில் ஹீனமான முணங்கல் சத்தம் எழுந்தது போலிருந்தது. எட்டிப் பார்த்த போது அவர் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதாகத் தோன்ற எதுவும் விசாரிக்காமல் அமைதியாகப் படுத்தார். படுத்ததும் உறங்கியும்விட்டார். பின் நாராசமாக ஒரு கடுமையான இருமல் சத்தம் அவர் உறக்கத்தைக் கலைக்க, “தண்ணிக் குடிச்சிட்டுப் படு ரேணு” என்று சொல்லிவிட்டு மீண்டும் கண்களை மூடிக் கொள்ளும் போது டம்ளர் உருளும் சத்தம் கேட்டது. அவர் பதறிக் கொண்டு எழுந்த போது ரேணு தரையில் விழுந்து கிடந்தார். ஓடிப் போய் தொட்டுத் தூக்கிய போதுதான் உடம்பு அனலாகக் கொதிப்பது தெரிந்தது. “என்ன இப்படி ஜுரம் அடிக்குது… சொல்லக் கூடாதா?” என்று அதிர்ந்து கேட்கும் போதுதான் அவர் அரைகுறை மயக்கத்தில் ஒரு மாதிரி மூச்சுக்குத் திணறுவதை உணர்ந்தார். கொரானா நுரையீரலைத் தாக்கி ஏற்படுத்தும் பாதிப்புகளை தொலைக்காட்சி செய்திகளில் பார்த்ததெல்லாம் இப்போது நிழற்படமாக நினைவில் ஓடியது. உடனடியாக மகனுக்கு அழைத்து விவரத்தைத் தெரிவிக்க நிரஞ்சனும் ஜோஷியும் அடுத்த நொடியே ஓடி வந்து நின்றனர். அம்மாவைத் துவண்ட நிலையில் பார்த்த கணமே நிரஞ்சன் துடிதுடித்துப் போனான். “ஐயோ என்ன ப்பா ஆச்சு அம்மாவுக்கு” என்றவன் அந்த நொடியே நிலைமையின் தீவிரத்தை உணர்ந்தவனாக, “ஹாஸ்பிட்டல் கூட்டிட்டுப் போயிடுவோம் ப்பா” என்றான். “ஆமா ரஞ்சு… போய் காரை எடு” என்றவர் சொல்லிவிட்டு மனைவியின் தோள் பிடித்துத் தூக்க வரவும், அத்தனை நேரம் அதிர்ச்சியில் நின்ற ஜோ இடையில் வந்து, “அங்கிள் நீங்க இந்த மாதிரி நேரத்துல ஹாஸ்பிட்டல் வர வேண்டாம்… அது உங்களுக்கு சேஃப் இல்ல… நானும் நிருவும் போயிட்டு வரோம்” என்றாள். “ஆமா பா ஜோ சொல்றது சரி” என்று ரஞ்சனும் ஆமோதிக்க, “இல்ல இல்ல நானும் வரேன்” என்றவர் பிடிவாதமாக நின்றார். “அப்பா ப்ளீஸ்… வேண்டாம்… நீங்க இங்கயே இருங்க” என்றவன் அவரைக் கட்டாயப்படுத்தி விட்டுச் சென்றதில் அவருக்கு அப்படியொரு கோபம் மூண்டது. மெல்ல மெல்ல அந்த வீட்டின் அமைதி அவரை ஆட்கொண்டது. மூழ்கடித்தது. மிரட்டியது. என் வீடு… என்று ரேணுவிடம் திமிராகச் சொன்னது அவர் நினைவுக்கு வந்தது. திரும்ப திரும்ப அந்த வார்த்தை காதில் விழுந்தது. என் வீடு… அந்த வீட்டின் ஒவ்வொரு செங்கலிலும் அவரின் உழைப்பு இருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மைதான். என் வீடு… ஒரு இடத்தை வாங்கிப் படாதபாடுப்பட்டு பல நாள் உறக்கமின்றி வெயிலிலும் மழையிலும் நின்று கடனில்லாமல் கட்டி முடித்தது. என் வீடு… அங்கே குடிபெயர்ந்த முதல் நாள் அவர் வாழ்வின் மிகப் பெரிய சாதனையை சாதித்துவிட்டதாக உணர்ந்தது. என் வீடு… என் உழைப்பால் பணத்தால் எழும்பி நின்றது. மனதிலிருந்த இந்த கர்வ எண்ணம்தான் ரேணுவிடம் என் வீடு என்ற் தெனாவட்டாகச் சொல்ல வைத்தது. ஒரு வகையில் ரேணுவும் இந்த வீட்டைக் கட்டி முடிப்பதற்குள் தன்னாலான அனைத்தையும் செய்திருக்கிறார். வீடு வீடு வீடு என்று பித்துப் பிடித்தவன் போல இந்த வீட்டை அவர் கட்டி முடிக்கும் வெறியில் இருந்த போது ரேணுதான் குடும்பத்தில் ஏற்பட்ட பண கஷ்டங்களைப் பிரச்சனைகளை குழந்தைகளின் படிப்புக்களை என்று ஒற்றையாளாக நின்று சமாளித்தார். ஆனால் அதெல்லாம் அப்போது வார்த்தையை விடும் போது யோசிக்கவில்லை, மனைவியின் உழைப்பை மதிக்கவில்லை. அப்படி மதித்திருந்தால் ‘என் வீடு’ என்று சொல்லி இருக்கமாட்டார். பணத்திற்குதான் இவ்வுலகில் மதிப்பு. சன்மான இல்லாத குடும்ப பெண்களின் உழைப்பிற்கு மதிப்பு இல்லை என்ற இந்த ஆணாதிக்க சமூகம் உருவாக்கி வைத்திருக்கும் ஈனத்தனமான எண்ணம் அவர் மனதினோரத்திலும் இருந்திருக்கிறது. ஆனால் பணம் மட்டும்தான் இந்த வீடு இப்படி உயர்ந்து கம்பீரமாக நிற்க காரணமா? இல்லவே இல்லை. ரேணுதான் நமக்கும் பிள்ளைங்களுக்கும் சொந்த வீடு வேண்டுமென்ற எண்ணத்தை அவருக்குள் தோற்றுவித்தார். இன்று யோசித்துப் பார்த்தால் ரேணுதான் ஒவ்வொரு படியாக அவர் உயர காரணம். ரேணுவைத் திருமணம் செய்த பிறகுதான் அவருக்கென்று தனி அடையாளமும் அங்கீகாரமும் உருவானது. திருமணமான நாளிலிருந்து அவரின் அத்தனை ஏற்றத்தாழ்வுகளிலும் உடன் நின்றவர் அவர்தான். அப்படி இருக்கும் போது ரேணு இல்லாமல் எப்படி வந்தது இந்த வீடு. தவறென்று உணர்ந்து மன்னிப்பு கேட்ட போது கூட அந்த வார்த்தையின் தீவிரத்தை உணர்ந்தெல்லாம் அவர் மன்னிப்பு கோரவில்லை. இப்போது… இந்த நொடி… தனியாளாக இந்த வீட்டில் அமர்ந்திருக்கும் போது புரிகிறது. என் வீடு… என்பது எத்தனை சுயநலமான வார்த்தை என்று. என் வீடு… இல்லை ரேணு இல்லாத வீடு வீடே இல்லை. வெறும் உயிரில்லாத கூடு மட்டும்தான். ரேணு இல்லாத இந்த வீடும் தனிமையும் அவருக்குள் எதிர்காலத்தின் பயத்தைத் தோற்றுவித்தன. தினம் தினம் டிவிகளில் பார்த்த கொத்துக் கொத்தான மரணங்கள்…. அமெரிக்காவில் குவிந்த உடல்கள்… இத்தாலியில் எரிக்கப்பட்ட உடல்கள்…. கங்கா நதியில் தூக்கி வீசப்பட்ட உடல்கள்… எல்லாம் ஒரு நொடியில் கண்முன்னே தோன்றி மறைந்தன. செய்திகளில் காட்டப்படும் கொரானா மரணங்களும் ஓலங்களும் நம் வீட்டிலும் நடக்கும் என்பதை எண்ணும்போதே பக்கென்றானது. மனைவி இல்லாத உலகத்தை கற்பனையில் கூட அவரால் வரித்து பார்க்க முடியவில்லை. இதுவரை சுயமாக ஒரு தேநீர் கலந்து குடித்ததில்லை. எல்லாவற்றிற்கும் ரேணு ரேணு ரேணு என்று அவரைச் சார்ந்தே இத்தனை வருட காலமாக வாழ்ந்தாகிவிட்டது. ஆனால் திடீரென்று தனியாக நின்றுவிட்டால்… நினைத்துப் பார்க்க நரகத்தைவிட கொடூரமாக இருந்தது. அன்று ஜோ இதே இடத்தில் அவர் எதிரே நின்று கொண்டு, “ஆன்டிக்கு அடிப்பட்டு இருக்கு… நீங்க என்ன இந்த மொக்க சீரியல் பார்த்துட்டு இருக்கீங்க” என்று கேட்ட போது உரைக்கவில்லை. இப்போது மண்டையில் ஆணி அடித்தது போல உரைக்கிறது. அவள் சரியாகச் சொல்லி இருக்கிறாள். ரேணுவின் உடல் நிலை இந்தளவு மோசமாகிப் போகும் வரை தான் அவரைக் கவனிக்காமல் விட்டிருக்கிறோம். எல்லாம் தன்னுடைய தவறுதான். தன்னுடைய அலட்சியம்தான் என்று தலையிலடித்துக் கொண்டு அழுதார். மனதில் எழுந்த குற்றவுணர்வு அவரைக் கொல்லாமல் கொன்றது. எழுந்து நேராகப் பூஜையறைக்குச் சென்றார். கோவிலுக்குச் சென்றாலும் பெரிதாக கடவுளிடம் கேட்க அவருக்கு எதுவும் தோன்றியதில்லை. காரணம் அவருக்கும் சேர்த்து ரேணு வேண்டி கொள்வார். பூஜை விரதமென்று அனுஷ்டிப்பார். மனைவிக்கு எதுவும் ஆகிவிட கூடாது என்று கர்மசிரத்தையாக இமைகளை மூடி மனமுருகி வேண்டிய போது கண்களில் கண்ணீர் ஆறாகப் பெருகி ஓடியது. நெற்றியில் விபூதியைப் பட்டையாகத் தீட்டிக் கொண்டு அங்கேயே அமர்ந்துவிட்டார். கண் கெட்ட பிறகான சூரிய நமஸ்காரங்கள். இருள் சூழ்ந்த அந்த தனிமையும் சூனியமாகிப் போன அந்த வீடும் அவருக்குள் ஆழமாக வேரோடி இருந்த ஆண் என்ற கர்வத்தைப் பொசுக்கியிருந்தது. அந்த வீட்டின் கூரையாக நின்று தான்தான் எல்லோரையும் காத்து ரக்ஷிக்கிறோம் என்ற அவரது திமிரான எண்ணத்திற்கு அப்பால் ரேணுதான் அஸ்திவாரமாக அவரையே தாங்கி நின்றிருக்கிறார் எனபது இன்று விளங்கிற்று. வாழ்க்கையில் திடீர் திடீர் என்று ஏற்படும் ஞானோதயங்கள். அதே போன்றதொரு ஞானோதயம் ரேணுவிற்கும் அன்று ஏற்பட்டது. ஜோ பின்னிருக்கையில் அமர்ந்து ரேணுவை தம் தோள் மீது சாய்த்து பிடித்தபடி, “ஆன்டி உங்களுக்கு ஒன்னு இல்ல… நீங்க நார்மலாகிடுவீங்க” என்று தைரியம் சொல்லிக் கொண்டே வந்தாள். ரேணுவிற்கு மூச்சு திணறி கண்கள் இருட்டிக் கொண்டு வரும் போதெல்லாம் அவளின் அந்தக் குரல் அவரை உலுக்கிற்று. கடமைகள் எல்லாம் முடிந்து பிள்ளைகளுக்கு எல்லாம் திருமணம் செய்துவிட்டோம் என்ற மனம் அமைதி நிலையை எட்ட முயன்றாலும் கணவனின் நினைவு அலைக்கழித்தது. மாதவன் ஒன்றிரண்டு வார்த்தைகள் கோபத்தில் விட்டிருந்தாலும் அவர் ஒரு நல்ல கணவன்தான். இதுநாள் வரை தனக்கு வேண்டியதெல்லாம் அவர் செய்து கொடுத்திருக்கிறார். மரியாதையாகவும் அன்பாகவும் நடத்தியிருக்கிறார். மகனின் திருமண விஷயத்தில் ஆயிரம் கோபமும் வருத்தமும் இருந்தாலும் அவரை அப்படி தனியாக விட்டுச் செல்லுமளவுக்காய் அவர் மனதில் குரூரம் இல்லை. அவருக்காகவாவது தான் பிழைத்து எழுந்து விட வேண்டுமென்று முதல் முறையாக கடவுளிடம் தன்னுடைய ஆரோக்கியத்திற்காகக் கோரிக்கையும் வேண்டுதல்களும் வைத்தார். அம்மாவின் நிலையை முன் கண்ணாடியில் பார்த்தபடி பதட்டத்துடன் வண்டி ஓட்டிய நிரஞ்சன் ஒவ்வொரு மருத்துவமனையாக நின்று விசாரித்துவிட்டு ஏமாற்றத்துடன் வண்டியைக் கிளப்பினான். “என்னாச்சு நிரு…?” “கொரானா பேஷன்ட் எல்லாம் இங்கே அட்மிட் பண்ண மாட்டாங்களாம்” “டேமிட்” என்று சீறியவள் சட்டென்று நிதான நிலைக்கு வந்து, “ஆக்சிஜனாவது கொடுக்க சொல்லாம் இல்ல” என்று தவிப்புடன் கேட்ட போது, “கேட்டுட்டேன் ஜோ… ஏதோ ஆடு மாடை விரட்டுற மாதிரி விரட்டுறாங்க” என்றவன் ஏமாற்றத்துடன் உரைத்தான். அவள் யோசித்துவிட்டு, “ஏன் நிரு… உன் சிஸ்டரோட ஹஸ்பென்ட் டாக்டர்தானே… அவர்கிட்ட பேசுனியா?” என்று விசாரிக்க,  “கால் பண்ணேன்… எடுக்கல… ஒரு வேளை டியூட்டில இருக்கலாம்… முடிச்சிட்டுப் பேசுவாரு… மெசேஜ் போட்டு விட்டுருக்கேன்… ப்ச்… என்ன பண்றதுன்னே தெரியல… அப்பாவை வேற தனியா விட்டுட்டு வந்துட்டோம்” என்றான். “நான் இப்பதான் என் டேடிகிட்ட பேசுனேன்… அவர் அங்கிளை பார்த்துகிறேன்னு சொல்லி இருக்காரு… அப்புறம் டேடி கூட அவரோட கான்டெக்ட்ஸ் மூலமா ஏதாச்சும் ஆக்ஸிஜன் பெட் அரேஞ் பண்ண பார்க்கிறேன்னு சொல்லி இருக்காரு” “சீக்கிரம் ஏதாச்சும் வழி கிடைச்சா நல்லா இருக்கும்… கண்ணைக் கட்டிக் காட்டுல விட்ட மாதிரி இருக்கு… எனக்கு இப்ப எங்கே போறதுன்னே புரியல… அம்மாவுக்கு ஏதாச்சும் ஆகிட்டா என்னால தாங்கவே முடியாது ஜோ” என்றவன் கண்ணீரில் கரைய, “ஷட் அப் நிரு… அப்படி எல்லாம் ஆன்டிக்கு எதுவும் ஆகாது… தைரியமா இரு” என்று அதட்டி தைரியம் கூறினாள். அந்த சமயத்தில் ரேணு சுயநினைவுடன்தான் இருந்தார். அவர் காதில் மகன் மருமகளின் சம்பாஷனைகள் கேட்டன. மகனுக்கும் தனக்கும் தைரியம் சொல்லிக் கொண்டு வருபவளை எண்ணும் போது வியப்பு ஏற்பட்டது. தன் கணிப்பு தவறென்று தோன்றியது. ‘அவகிட்ட என்ன இருக்கு அழகைத் தவிர’ வெறும் வெளிப்புறமான பார்வையில் தான் ஏற்படுத்திக் கொண்ட கணிப்பு. புரிந்து கொள்ள இயலாமல் அவளைத் தவறான கண்ணோட்டதிலேயே பார்த்திருக்கிறோம். அவளைப் புரிந்து கொள்ள கொஞ்சமாவது முயன்றிருக்கலாம். ஆனால் அதற்கான வாய்ப்பு கிட்டாமலே போய்விடுமோ? இப்படியே ஒரு வேளை இறந்தும் போய்விட போகிறோமோ? என்ற எண்ணம் எழுந்த போது ஜோஷியின் குரல் கேட்டது. “எதுவும் தப்பா நடக்காது… நீ ஸ்ட்ராங்கா இரு… பாஸிட்டிவா திங் பண்ணு” என்றவள் திடமாகச் சொல்ல ரேணுகாவின் மனமும் அந்த வார்த்தையை ஆத்மார்த்தமாகப் பிடித்துக் கொண்டது. அவர்களின் அந்தப் பயணமும், இரவும் முடிவுறாமல் அனுமார் வால் போல நீண்டு கொண்டே சென்றன. மரண பீதியுடன் ஒவ்வொரு நொடியும் நரகமாக நகர்ந்தன. என்ன நேர்ந்துவிடுமோ என்ற பரபரப்புடன் கழிந்தன. வானம் மெல்ல மெல்ல வெளுக்கத் தொடங்கியது. நிரஞ்சன் வெறிச்சோடிப் போன அந்த மாநகர வீதிகளில் எங்கெங்கோ இலக்கில்லாமல் சுற்றினான். எங்கேயாவது ஒரு சின்ன உதவியாவது கிடைத்துவிடுமா என்று? ஆனால் எந்த மருத்துவனையிலும் அனுமதி கிடைக்கவில்லை. சில மருத்துவமனைகள் மூச்சுத் திணறல் என்றதுமே பின்வாங்கிக் கொண்டன. எல்லாவற்றிற்கும் மேல் கண்ணுக்குத் தெரியாமல் கடவுளைப் போல சஞ்சரிக்கும் உயிர் காற்றிற்கே பஞ்சமாகிப் போனது. ரேணுவின் மூச்சு திணறல் அதிகமாகிப் போனது போன்று தோன்றியது ஜோவிற்கு! நிரஞ்சனிடம் சொன்னால் பயந்துவிடுவான். அவளுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. அவசரமாக தன் கைப்பேசி எடுத்து அவர்கள் இருவரையும் ஒரு செல்ஃபி எடுத்து கைப்பேசி எண்ணுடன் அவசரமாக ஆக்ஸிஜென் பெட் தேவை என்று முகநூல் டிவிட்டர் என்று அவளின் சமூக ஊடகக் கணக்குகளில் பதிவிட்டாள். அடுத்த பத்து நிமிடத்தில் நூறு பகிர்வுகள். நிறைய பேர் தங்களுக்கு தெரிந்த உதவி எண்ணங்களை கமெண்ட்டில் பகிர்ந்து கொண்டனர். அவள் அனைத்திற்கும் ஒன்றுவிடாமல் பொறுமையாக முயற்சி செய்தாள். இதற்கிடையில் கௌஷிக் நிரஞ்சனின் குறுந்தகவலைக் கண்டுவிட்டு அழைத்துப் பேசினான். “அத்தைக்கு என்னாச்சு ரஞ்சன்?” என்று பதறியவன் மேலும் நிரஞ்சன் சொன்ன விளக்கத்தை எல்லாம் கேட்டுவிட்டு, “இங்கே எங்களுக்கே மூச்சு திணறுது… பெட் இல்ல… ஆக்ஸிஜனுக்குத் தட்டுப்பாடு.. இதுபோல ஒரு மோசமான சிட்டுவேஷனை நான் பார்த்ததே இல்ல… இங்கே வாசலில் அவ்வளவு ஆம்புலன்ஸ் நிற்குது… இங்கே நீங்க கொண்டு வந்தாலும் உள்ளே கூட வர முடியுமான்னு தெரியல” என்று அப்பட்டமாக தற்போதைய சூழ்நிலையை விவரிக்கும் போது நிரஞ்சனுக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. டிவி செய்திகள் காட்டுவதைத் தாண்டி எதார்த்தம் மிகப் பயங்கரமாக இருந்தது. உள்ளுக்குள் இருந்த நம்பிக்கையெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக வடிந்து கொண்டிருந்தன. மேலும் கௌஷிக், “இப்படியொரு மோசமான நிலையில அம்மாவை வைச்சுட்டு இப்படி அலையாதீங்க… இன்னும் அவங்களோட உடல் நிலை மோசமாகலாம்… பெட்டர் வீட்டுக்குப் போய் நான் வீடியோல அனுப்புற ட்ரீட்மெண்ட்டை கொடுங்க… ஆக்சிஜன் லெவல் கொஞ்சம் பெட்டராகும்… அதுக்குள்ள நான் என் ஃப்ரண்ட்ஸ் க்ரூப்ல சொல்லி ஆக்சிஜென் பெட் ஏற்பாடு பண்றேன்” என்று அறிவுரை கூறினான்.  ஜோவிடம் பேசிய ஜோசுப்பும் கூட அதே போன்றதொரு விளக்கத்தைதான் கொடுத்தார். “என்னால ஆன முயற்சியை செஞ்சிட்டு இருக்கேன்… இன்னும் பாஸிட்டிவா எந்த தகவலும் இல்ல” வேறு வழியின்றி நிரஞ்சனும் ஜோவும் பேசி வீட்டிற்குப் போய்விடலாம் என்று முடிவெடுத்தனர். சூரியன் அந்த இருள் போர்வையை விலக்கிக் கொண்டு எழ, அவர்கள் நம்பிக்கையின் ஒளி மெல்ல மெல்ல கரைந்து கொண்டே போன போது ஜோவின் அலைப்பேசி வழியாக அவர்களுக்கு உதவி கிடைத்தது. பதவி பணம் எதுவும் கைக் கொடுக்காத போது மனிதநேயம் கைக் கொடுத்தது. அவளின் பகிர்வைப் பார்த்துவிட்டு அழைத்த மருத்துவர் ஒருவர் உடனடியாக அவரின் மருத்துவமனையின் விலாசத்தை தந்து வரச் சொன்னார். அங்கே சென்று சேரும் வரை கூட அவர்களுக்கு நம்பிக்கை இல்லை. சேர்த்து கொள்வார்களா என்று பயமும் சந்தேகமும் மனதில் நின்றிருந்தது. ஆனால் அங்கே சென்றடைந்ததும் ரேணுகாவை மருத்துவமனையில் அனுமதித்து அவசர சிகிச்சை மையத்தில் சேர்த்த கையோடு ஆக்ஸிஜனும் தந்தனர். நிரஞ்சனின் கைகள் சில்லிட்டு நடுங்கிக் கொண்டிருக்க அவனது கலங்கிய விழிகளைப் பார்த்த ஜோ, “பாஸிட்டிவா இரு… ஆன்டி நல்லாகிடுவாங்க” என்றபடி அவன் கரத்தைக் கோர்த்துக் கொண்டாள். சட்டென்று அவன் உடலுடன் சேர்த்து மனதிலும் கதகதப்பாய் ஒரு உஷ்ணம் பரவியது. நம்பிக்கை ஊற்றெடுத்தது. அவனது கை நடுக்கம் மெல்ல அடங்கியது. அவளின் அந்த வார்த்தைக்கு ஏதோ சக்தி இருந்தது. அம்மாவுக்கு எதுவும் ஆகிவிடாது என்ற ஆழமான நம்பிக்கையை விதைத்தன. அவள் தோள் மீது அப்படியே சாய்ந்து கொண்டான். அவனுக்கு அந்த ஆசுவாசமும் ஆறுதலும் அப்போது தேவையாக இருந்தது. எப்படி அத்தனை தூரம் அவன் இந்த நடுங்கிய கரங்களுடன் காரை இயக்கிக் கொண்டு வந்தான் என்று அவனுக்கே தெரியவில்லை. கண்கள் சொருகிக் கொண்டு வந்தது. ஏதேதோ நினைவுகள் மனதை அலைகழித்தன. உறக்கத்திலும் அம்மாவின் முகமே வந்து போனது. அந்த முகத்திலிருந்த தேஜஸ் சட்டென்று காணாமல் போய் வெளுத்துக் கண்டதும் பதறித் துடித்து அவன் விழித்துப் பார்க்க, அவன் மருத்துவமனை இருக்கையில் சாய்ந்து அப்படியே உறங்கிப் போயிருந்ததை உணர்ந்தான். அவன் எழுந்த வேகத்தைப் பார்த்த ஜோ, “நிரு… ரிலேக்ஸ்… ஆன்டிக்கு ஒன்னும் இல்ல… நல்லா இருக்காங்க? இப்பதான் டாக்டர் கிட்ட பேசினேன்” என்று கூற தலை முடியைக் கோதிக் கொண்டு மீண்டும் இருக்கையில் அமர்ந்து, “ஐய்யயோ! அப்பாவுக்கு ஃபோன் பண்ணவே இல்ல” என்றவன் கைப்பேசியை எடுக்க, “நான் பேசிட்டேன்… எங்க டாடியும் அப்பாவும் ஒன்னா இருக்காங்க… ஒன்னும் பிரச்சனை இல்ல” என்றாள். நிரஞ்சன் விழிகள் அவளை நன்றியுடன் பார்த்தன. ‘சில்லி பிகேவியர்’ என்று அவளைச் சொன்னது எத்தனை பெரிய முட்டாள்தனமென்று உரைத்தது. ஜோசப் தான் தயாரித்த தேநீரை தன் வீட்டின் சோஃபாவில் அமர்ந்திருந்த மாதவனிடம் கொடுத்தார். வீட்டில் தனியாக இருக்க வேண்டாமென்று அவர்தான் கட்டாயப்படுத்தி இங்கே அழைத்து வந்துவிட்டார். ஆனாலும் அவர் மனதிலிருந்த தவிப்புக் குறையவில்லை. ”அவங்களுக்கு ஒன்னும் ஆகாது மாதவன்… நீங்க டீ எடுத்துக்கோங்க” என்று அவர் கொடுத்தத் தேநீரைப் பார்த்ததும் மனைவியின் நினைவு வந்து அவர் கண்களில் நீர் திரையிட்டது. தன் வாழ்வில் எதைப் பார்த்தாலும் அதில் முழுக்க முழுக்க ரேணுவின் நினைவுதான் இருக்கும்.  “மாதவன்” என்றவர் தோளைத் தட்டி அந்த தேநீரைக் கையில் கொடுக்க அதனை வாங்கிப் பருகினார். ஜோசப்பும் சோஃபாவில் அமர்ந்து கொண்டு, “உங்க மனைவி அளவுக்குப் போட முடியாது… என்னால முடிஞ்சளவுக்கு ட்ரை பண்ணி இருக்கேன்” என்றதும் மாதவன் மிதமாகப் புன்னகைத்து, “நல்லாதான் இருக்கு…. எனக்கு இவ்வளவு கூட போடத் தெரியாது… கிச்சன்ல எது எது எங்க இருக்குன்னு கூட தெரியாது… எல்லாமே ரேணுதான்… ஒரு வேளை” என்றவர் அடுத்து சொல்ல வந்த வார்த்தையைச் சொல்வதற்குள் தொண்டை கம்மிற்று. கப்பென்று ஒரு பயம் நெஞ்சை அழுத்தியது. “நீங்க கவலையே படாதீங்க… அவங்களுக்கு ஒன்னும் ஆகாது.” மாதவன் அவரை நெகிழ்ச்சியுடன் பார்த்தார். அவரது ஆறுதல் வார்த்தைகள்தான் இப்போதைக்கான ஒரே வெளிச்சம். ஒரு வகையில் ரேணுவுக்கு என்னவாகிவிடுமோ என்று பயந்து பயந்து அந்த வீட்டின் தனிமையிலேயே மூச்சு முட்டிச் செத்துவிடுவோமோ என்று நிலையில்தான் ஜோசப் ஆபத்பாந்தவனாக வந்து அந்தக் கொடுமையான தனிமையிலிருந்து அவரைக் காப்பாற்றினார். ஆனால் தானோ அவர் கொரானாவால் பாதித்து தனியாகச் சிரமப்படுவதைக் கேள்விப்பட்ட போதும் சுயநலத்துடன் நடந்து கொண்டோம் என்றவர் மனம் குற்றவுணர்வில் ஆழ்ந்தது. அந்த நிலையிலும் ரேணுதான் தீர்க்கமாக யோசித்து ஜோசப்பின் தேவைகளை செய்து கொடுத்து உதவியது. தன் வாழ்வின் ஒவ்வொரு நல்லது கெட்டதிலும் ரேணுவின் பங்கு அளப்பரியது என்று அறிந்து கண்கள் கலங்கிய போது ஜோசப் அவரை சமாதனாப்படுத்தினார்.  மாதவனிடம் பேசிப் பேசி கொஞ்சமாக இயல்புக்கு கொண்டு வந்திருந்தார் ஜோசப்.

Cancel “தூரமில்லை விடியல்” என்னுடைய புத்தம் புது தொடர் துவங்கப்பட்டுள்ளது. வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா