மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumMembersActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumTamil katooraigal: Vithai panthuVithai Panthu - 12Post ReplyPost Reply: Vithai Panthu - 12

Quote from monisha on October 16, 2022, 7:33 PM

பாடிக்கரம்மா!
எண்பதுகளின் தொடக்கத்தில் பழைய மாம்பலத்தில் வாழ்ந்த நடுத்தட்டு பெண்கள் மத்தியில் பாடிக்காரம்மா மிகப் பிரபலம்.  உள்பாவாடை, பாடி போன்ற உள்ளாடைகளை விற்பனை செய்துகொண்டிருந்ததால் இவருக்கு இப்படி ஒரு பெயர் . பெண்களின் தேவைக்கேற்ப வீட்டிற்கே கொண்டு வந்து கொடுத்துவிட்டு, பணத்தையும் இரண்டு தவணைகளாகப் பெற்றுக்கொள்வார். அவரிடம் வாடிக்கையாக உள்ளாடைகளை வாங்கும் எல்லோருக்குமே அவரிடம் ஒரு நட்பும் மரியாதையும் இருந்தது. திருமதி நயன்தாரா, அவர்கள் வாடகைத் தாய் மூலம் பிள்ளைகள் பெற்றுக்கொண்ட செய்தி சமூக வலைத்தளங்களில் 'வைரல்' ஆகி பெரும் சர்ச்சையைக் கிளப்பிக்கொண்டிருக்கும் நிலையில் எனக்கு திடீரென்று அவரது நினைவு வந்தது. இன்றளவும் கூட என் மனதில் அவருடைய தோற்றம் ஒரு நிழல் போல நினைவில் இருக்கிறது, ராஜேஷ் & லட்சுமி நடித்த 'தாலி தானம்' படத்தை ஸ்ரீநிவாஸா தியேட்டரில் போய் பார்த்துவிட்டு வந்து, என் அம்மா, பெரியம்மா, இன்னும் சில மாமிகளும் பாட்டிகளும் அந்தப் படத்தைப் பற்றிப் பேசிப் பேசி மாய்ந்தது இன்னும் என் நினைவில் இருக்கிறது. தன்னால் பிள்ளை பெற்றுக்கொள்ள இயலாது எனக் கணவனுக்கு வேறொரு பெண்ணை திருமணம் செய்து வைத்த ஒரு பெண்ணைப் பற்றிய படம் அது. அந்த படத்தைப் பார்த்துவிட்டு தேம்பித் தேம்பி அழாத பெண்களே இல்லை எனலாம்.  அப்பொழுது அவர்கள் பேச்சின் நடுவே கொஞ்சம் எட்டிப் பார்த்தார் 'பாடிக்காரம்மா', காரணம் அவரும் அதே போல, பிள்ளைக்காக, தானே ஒரு பெண்ணைப் பார்த்து தன் கணவனுக்கு மறுமணம் செய்துவைத்தவராம். அவருடைய மன நிலை எப்படி இருந்திருக்கும் என்பதான விவாதங்கள் அவர்கள் பேச்சினூடே எழுந்தது. அன்றைய நிலையில் எதுவும் புரியவில்லை என்றாலும், அது ஒரு துயரம் என்பதை நன்றாகவே உணர முடிந்தது. என் பெரியம்மா(அப்பாவின் தமையன் மனைவி) ஒரு ஆகச்சிறந்த பரோபகாரி. நான்கு பிள்ளைகள் உள்ள குடும்பத்தில் இரண்டாவது மருமகளாக வாழ்க்கைப் பட்டு, எல்லோரையும் நன்கு அரவணைத்துச் சென்றவர். அவருக்கும் பிள்ளைகள் இல்லை. அது கொண்டு முக்கிய சந்தர்ப்பங்களில் எங்கள் குடும்பத்துக்குள்ளேயே என் பெரியப்பாவும் அவரும் ஒதுக்கப் பட்டத்தை நான் கண் கூடாக பார்த்திருக்கிறேன். ஆதங்கத்தில், பெரியப்பாவுக்கு இரண்டாம் திருமணம் செய்வது பற்றி என் பாட்டி பேசக் கேட்டும் இருக்கிறேன். என் சொந்த பாட்டியாகவே இருந்தாலும் அவர் மீது சினம் பொங்கும். பெரியப்பா அதற்கு உடன்படவில்லை, இன்னும் சொல்லப் போனால் இப்படி ஒரு விஷயத்தை அவருடைய முகத்துக்கு நேராகப் பேசும் தைரியம் பாட்டிக்கும் இல்லை என்பது வேறு கதை. குழந்தையின்மைக்கு முழு பொறுப்பாளி பெண்கள் மட்டுமே என்றுதான் கொள்ளப்பட்டது. அதனால்தான் 'மலடி' என்கிற அமில வார்த்தை பெண்களுக்கான வார்த்தையாகவே இன்றளவும் புழக்கத்தில் உள்ளது. அதுவும் சென்ற தலைமுறை வரையும் குழந்தையின்மைக்கான மருத்துவத்திற்கென்று செல்லும்போது, ஆண்கள் தங்களைப் பரிசோதித்துக் கொள்வது மிக மிக அரிதான நடைமுறையாகவே இருந்துவந்தது.. எது எப்படி இருந்தாலும் குழந்தையின்மை என்று வரும்போது, வாழ்வியல் ரீதியாகவும் சரி உடல் ரீதியாக, உளவியல் ரீதியாகவும் சரி ஒரு மிகப்பெரிய சுமை பெண்களின் மீது மட்டுமே சுமத்தப்படுகிறது. ஒரு குழந்தைக்காகப் பெண்கள் யாரேனும் மறுமணம் செய்த கதையை என்றாவது நாம் கேள்விப்பட்டிருக்கிறோமா? பிள்ளை இல்லை என்றால், அதற்கும் பெண்தான் பொறுப்பாளி, பெற்றுக் கொண்டாலும் அவள் தான் பொறுப்பாளி, வேண்டாம், போதும் என்று முடிவெடுத்தாலும் அவள் மட்டுமே பொறுப்பாளி. ஆண்கள் குடும்ப கட்டுப்பாடு செய்து கொள்வது இயன்றளவிலும் கூட அரிதினும் அரிதாகத் தானே புழக்கத்தில் உள்ளது. குழந்தையின்மை சிகிச்சைக்கான வசதி வாய்ப்புகள் பெருகி இருக்கும் இந்த காலகட்டத்தில் பெண்களின் இத்தகைய மன உளைச்சல்கள் சற்று மட்டுபட்டிருக்கிறது என்பதுதான் உண்மை. மட்டுப்பட்டிருக்கிறதே தவிர மொத்தமாகத் தீர்ந்தபாடில்லை. காரணம் 'Fertility treatements' என்பது அவ்வளவு சுலபமானதொன்றும் இல்லை. ஏற்கனவே புனிதம் தலைப்பில் விதைப்பதில் நான் எழுதிய கட்டுரையில் சொல்லி இருப்பது போல, இயற்கையின் விதிப்படி, தன் மரபணுவை வளர்க்க ஆண்களுக்கு ஒரு பெண்ணின் தேவை கட்டாயம் இருக்கிறது. எனவே இதை இயல்பான ஒன்றாக நம்மால் ஏற்றுக்கொள்ள முடிகிறது. ஆனால் இதையே ஒரு பெண் செய்யும் பட்சத்தில் இதை நம்மால் ஏற்க இயலவில்லை. அதனால்தான் நயன்தாராவை ஒவ்வொருவரும் அவரவர் வாய்க்கு வந்தபடி தாறுமாறாக விமர்சித்துக் கொண்டிருக்கிறார்கள். மற்றவர்களைக் காட்டிலும் திரைத்துறையில் இருக்கும் பெண்கள், விளையாட்டுத் துறை சார்ந்திருக்கும் பெண்கள் போன்றோருக்கு தன் உடலை பேணிக் காக்க வேண்டிய அவசியம் அதிகம் இருக்கிறது தானே? உண்மையைச் சொல்லப்போனால், இங்கே இரண்டு பெண்கள் பயனடைந்து இருக்கிறார்கள் என்று தான் எடுத்துக் கொள்ள வேண்டும். ஒன்று நயன்தாரா- தன்னுடைய அன்றாட வாழ்க்கை எந்த விதத்திலும் மாறுபடாமல் அவர் தனக்காக ஒன்றைச் செய்து கொண்டிருக்கிறார். மற்றொரு பெண் அந்த பிள்ளை பெற்றுக் கொடுத்த வாடகைத் தாய். அவருக்கு என்ன நெருக்கடியோ யார் கண்டார். இதன் மூலம் அவர் ஈட்டிய வருவாய் மூலம் அவர் எத்தகைய செலவுகளை கையாண்டாரோ? வீட்டில் யாருக்கேனும் மருத்துவம் செய்திருக்கலாம், பிள்ளையைப் படிக்க வைத்திருக்கலாம், அன்றாட சாப்பாட்டிற்குக் கூட அந்த பணத்தை அவர் உபயோகப்படுத்தி இருக்கலாம். ஆக எதையும் உணராமலே, இதையெல்லாம் விமர்சிக்கும் தகுதியோ அல்லது உரிமையோ யாருக்கும் கிடையாது. 'கல்யாண வயசு தாண்டிட்டே போகுது ஏன் உங்க பொண்ணுக்கு/பிள்ளைக்கு இன்னும் கல்யாணம் செய்யல?' 'கல்யாணம் முடிஞ்சு இவ்வளவு வருஷம் ஆச்சு நீ ஏன் இன்னும் குழந்தை பெத்துக்கல?' பெண் குழந்தை பிறந்திருந்தால், 'அடடா பெண்ணா போச்சே உங்களுக்கு ஒரு ஆண் பிள்ளை இருந்திருக்கலாம்?' ஆண் குழந்தை பிறந்து இருந்தால், 'அடடா பையனா போச்சே உங்களுக்கு ஒரு பெண் குழந்தை இருந்திருக்கலாம்!' இப்படிப்பட்ட கேள்விகளை எப்பொழுது நாம் தூக்கித் தூர எரியப் போகிறோம்? திருமணம், ஆண் பெண் உறவு,மக்கட்பேறு போன்றவற்றை ஒரு தனிநபர் சார்ந்த அவரவர் தனிப்பட்ட விஷயமாக நாம் பார்க்க பழகினால்தான், தனி நபராக நாமும், நாம் சார்ந்திருக்கும் சமுதாயமும் மேம்பட்டிருக்கிறது என்று பொருள். திருடிய இதயத்தைத் திருப்பி கொடுத்துவிடு நாவலில் நான் திலகா கதாபாத்திரத்தை வைத்து எழுதி இருக்கும் பகுதி ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டதுதான். சமீபத்தில் ஈரோட்டில் ஒரு 16 வயது சிறுமியைப் பெற்றவர்களே கருமுட்டை விற்பனைக்காகத் தவறாகப் பயன்படுத்தியதும், பல கருத்தரிப்பு மையங்கள் சீல் வைத்து முடக்கப்பட்டதும் நாம் அறிந்ததே.எனவே, இதில் மிக முக்கியமாகக் கையாளப்பட வேண்டிய ஒரு விஷயம், இத்தகைய சிகிச்சைகளை யாருக்கும் தீங்கில்லாத முறையில் பாதுகாப்பாகச் செய்யப்பட வேண்டும் என்பது மட்டுமே. மற்றபடி வாழ்க்கையைச் சிக்கலாக்கிக் கொள்ளாமல் இலகுவாக வாழ நமக்கு கைக்குக் கிடைத்திருக்கும் நவீன வசதிகளை நாம் பயன்படுத்திக் கொள்வதில் தவறேதும் இல்லை. நடிகை ரேவதியும் கூட இப்படி ஒரு சர்ச்சைக்குத்தான் ஆளானார், ஆனாலும் அதையெல்லாம் ஒரு தூசியாகத் தட்டிவிட்டு, இயல்பாகக் கடந்துபோகும் துணிவும் பக்குவமும் அவருக்கு இருந்ததால்தான் அப்படி ஒரு விஷயத்தை அவரால் நடைமுறைப்படுத்த இயன்றது. அதேபோல்தான் நயன்தாராவும். இதெல்லாம் அவர்களை பாதிக்காது. ஆனால் விவாதப் பொருளாக்கிப் பேசுபவர்கள் என்ன சாதித்தார்கள்? என்ன சாதிக்கப் போகிறார்கள்? போன்ற கேள்விகள் மட்டுமே மிஞ்சுகிறது. இறுதியாக... 'இப்படி ஒரு முறையில் பிள்ளை பெற்றுக் கொண்டால், அந்த குழந்தைக்கு அன்னையின் மீதோ, அல்லது அன்னைக்குப் பிள்ளைகளின் மீதோ உணர்வு ரீதியான பற்றுதல் உண்டாகுமா?' 'ஒரு தகப்பனுக்குப் பிள்ளையின் மீதும், பிள்ளைக்குத் தகப்பனின் மீதும் உண்டாகும் பற்றுதல் தன கருவில் வைத்துச் சுமப்பதால்தான் உண்டாகிறதா என்ன? அதுபோல்தான் இதுவும்!

Cancel “தூரமில்லை விடியல்” என்னுடைய புத்தம் புது தொடர் துவங்கப்பட்டுள்ளது. வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா