மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumMembersActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumMonisha Completed novels: SrushtiSrushti - Episode 4Post ReplyPost Reply: Srushti - Episode 4

Quote from monisha on January 4, 2023, 11:36 AM

4
வகுப்பறையிலிருந்த கண்காணிப்பு கேமராவில் லித்திக்காவின் கைக்குத் துப்பாக்கி எப்படி வந்தது என்று தெரிய வந்திருந்தது. லித்துவின் சக வகுப்பு மாணவன் ஜித்தேஷ் வைத்திருந்த நவீன ரக துப்பாக்கி அது. இணையத்தில் கேம் விளையாடும் தோழர்கள் மூலமாக அவன் வாங்கிய துப்பாக்கியை ஒரு வித சுவாரசியத்துக்காக தன் நண்பர்களிடம் காட்ட எடுத்து வந்திருந்தான். மேலும் அதை பயன்படுத்துவது குறித்த விவரங்களையும் அவன் அவர்களிடம் விவரிக்க, அதனைக் கவனித்து கொண்டிருந்த லித்திக்கா அவன் பையிலிருந்து அவனுக்கே தெரியாமல் அதனை எடுத்துவிட்டாள். இவை யாவும் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் தெள்ளத் தெளிவாகப் பதிவாகியிருந்தது. மேலும் எல்லோரும் வகுப்பறை விட்டு வெளியேறிய பின் லித்து அந்தத் துப்பாக்கியைத் தன் நெற்றியில் வைத்து சுட்டுக் கொண்ட காட்சியும் பதிவாகியிருந்ததைப் பார்த்த தியா நொறுங்கிதான் போனாள். ஆனால் விசாரணையில் போலிஸ் ஜித்தேஷ் பள்ளிக்குத் துப்பாக்கி எடுத்து வந்ததை அத்தனை முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதவில்லை. ஆயுதங்கள் முதல் போதை மருந்து வரை இணையத்தில் கைக்கெட்டிய தூரத்தில் கிடைப்பதை எல்லாம் எந்த அரசாங்கத்தாலும் தடுக்க முடிவதில்லை. மிஞ்சிப் போனால் துப்பாக்கி வைத்திருந்த மாணவ மாணவியரைக் காப்பகத்திற்கு அனுப்பிவிட்டு பெற்றோர்களைக் கைது செய்வார்கள். அதனால் எல்லாம் இந்தக் குற்றங்கள் எல்லாம் கட்டுப்படுத்தப்படவில்லை.  ஆனால் ஜித்தேஷ் விஷயத்தில் அதுவும் நடக்காது. ஏனெனில் அவன் ஒரு அரசியல்வாதியின் மகன் என்பதால் மீடியாவில் இந்த விஷயம் வராமலே சுலபமாக மூடி மறைத்து விடுவார்கள். எல்லா காலத்திலும் அரசியல்வாதி அரசியல்வாதிதான். இதனாலயே லித்துவின் வழக்கை மிகச் சுலபமாகத் தற்செயலாக நடந்த விபத்து என்று மூடியும் மறைத்துவிட்டார்கள். அப்போதிருந்த மனநிலையில் தியாவும் இதையெல்லாம் யோசிக்கவில்லை. மகள் இழந்த துக்கத்தைத் தாண்டி வேறெதுவும் அவள் மூளைக்குள் செல்லவில்லை. யார் மீது குற்றம் சொல்வது? கண்காணிப்பு கேமராக்கள் வைத்துவிட்டு அதனைக் கண்காணிக்காமல் விட்ட பள்ளியின் மீதா அல்லது பதிமூன்று வயது மகன் கைகளுக்குத் துப்பாக்கிக் கிடைக்குமளவுக்கு வைத்திருந்த அந்த அரசியல்வாதியின் மீதா அல்லது பொறுப்பைத் தட்டிக் கழித்த தன் மீதேவா?  அழுதழுது தியாவின் கண்களில் கண்ணீர் வற்றிப் போனதுதான் மிச்சமே தவிர அவள் வேதனை கொஞ்சமும் குறையவில்லை. மேலும் குற்றவுணர்வில் அவள் மனதளவில் ரொம்பவும் குன்றிப் போயிருந்தாள். ஒரு பக்கம் தன் மீதே அவளுக்கு வெறுப்பும் கோபமும் வந்ததென்றால் இன்னொரு பக்கம் சிஷு… இவ்வளவு நடந்த பிறகும் எவ்வித உணர்வுமின்றி அது கல்லாக நின்றிருப்பதைப் பார்க்க, அவளுக்குக் கோபம் கோபமாக வந்தது. தன் மகளை மொத்தமாக விழுங்கி ஏப்பம் விட்டுவிட்ட ஒரு கொடூர ராட்சஸியைப் போலவே அவள் கண்களுக்கு அது புலப்பட்டது. அதனைப் பார்க்க பார்க்க லித்துவின் இழப்பின் வலி அதிகரிக்க, அவளுக்கு வெறியேறியது. “எல்லாம் இதாலதான்… இதாலதான்… என் பொண்ணு செத்து போயிட்டா… போயிட்டா… என்னை விட்டுப் போயிட்டா… எல்லாமே இதாலதான்” அழுகையோடும் ஆக்ரோஷத்தோடும் தியா அந்த இயந்திரத்தை உடைத்து நொறுக்கிவிட்டாள். “தியா ப்ளீஸ்” கரண் அவளைக் கட்டுபடுத்த முடியாமல் திணறினான். சிஷு பாகம் பாகமாகச் சிதறிக் கிடக்க, தலையைப் பிடித்துக் கொண்டு அழுத தியாஅப்படியே மயங்கி சரிந்துவிட்டாள். மருத்துவர் வந்து பார்த்துவிட்டு அவள் சரியாக உணவு உண்ணாமல் பலவீனமாக இருப்பதாகச் சொல்லி, அவள் உடலுக்குத் தேவையான சத்தை ஒரே ஊசியில் ஏற்றிவிட்டார். அதேபோல கவலையை மறக்கடிக்கும் ஒரு ஊசி இருந்தால் நன்றாக இருக்கும். ஆனால் அந்தளவுக்காய் இன்னும் அறிவியல் வளரவில்லை.  கரணுக்கு ஒரு பக்கம் மகளை இழந்த வேதனை என்றால் இன்னொரு பக்கம் மனைவியின் அவல நிலை. சில நிமிட மயக்க நிலைக்குப் பின் தியா மெல்ல கண் விழித்தாள். படுக்கைக்கு அருகில் கரண் அவள் கையைப் பிடித்துக் கொண்டு உறங்கி கொண்டிருந்தான். கணவனைப் பார்த்ததும் அவள் உள்ளம் கலங்கியது. மரணமும் இது போன்ற உணர்ச்சிகளும்தான் மனிதனை இயந்திரத்திடம் இருந்து பிரித்து காட்டுகிறது.  “கரண்” என அவன் கரத்தில் அவள் அழுத்தம் கொடுத்ததும் பதறித் துடித்து விழித்தவன், “தியா… இப்போ எப்படி இருக்கு… ஓகேவா?” என்று விசாரித்தான். “ம்ம்ம்” என்று தலைசைத்தாள். “இரு நான் உனக்கு ஜூஸ்… எடுத்துட்டு வரேன்” என்றவன் அவசரமாகச் சென்று ஒரு கண்ணாடி டம்ளரில் பழச்சாறுடன் திரும்பி வர, “உனக்கும் எடுத்துட்டு வா கரண்” என்றாள் அவள். “யா ஷுர்” என்றவன் மற்றொரு கண்ணாடி குவளையில் பழச்சாறுடன் வர இருவரும் பருகினர். லித்துவின் இழப்பை எண்ணித் தானும் வருந்தி கணவனையும் வருத்துவதில் எந்த உபயோகமும் இல்லையென்று புரிந்த போதும் அவளால் இயல்பாக இருக்க முடியவில்லை.  லித்துவின் பொருட்களையும் உடைகளையும் பார்த்து அவள் தாங்க மாட்டாமல் அழ, கரண் அவளை சமாதானப்படுத்தும் வழித் தெரியாமல் தவித்துப் போனான். மெல்ல மெல்ல தியாவே சரியாகி விடுவாள் என்று கரண் எண்ணியிருக்க, அவளோ முப்பொழுதும் லித்துவின் அறையிலேயே அடைந்து கிடந்தாள். இரவு நேரங்களில் அங்கேயே படுத்துக் கொண்டாள். அவன் என்ன சொல்லியும் அவள் கேட்கவில்லை. ஒரு மாதம் கடந்த போதும் தியாவிடம் பெரிதாக எந்த மாறுதலும் இல்லை. “தியா எழுந்திரு… நம்ம ரூம்ல வந்து படு” என்றவன் கூற, “உஹும்” என்றவள் மறுத்துவிட்டாள். “நீ செய்றது பைத்தியக்காரத்தனமா இருக்கு… நீ அவ ரூம்ல படுத்துக்கிட்டா அவ என்ன திரும்பி வந்துற போறாளா?” என்றவன் சீறலாகக் கேட்க, தியா அழத் தொடங்கிவிட்டாள். “தியா” “நான் அவளைத் தனிமைல தவிக்கவிட்டுட்டேன் கரண்… அதான் அதான் அவ என்னை விட்டுப் போயிட்டா… திரும்பி வராத தூரத்துக்குப் போயிட்டா” என்று சொல்லி முகத்தை மூடிக் கொண்டு குலுங்கி குலுங்கி அழ, “தியா போதும்” என்றவன் சீற்றமாகக் கத்திவிட்டான். அவள் அதிர்வுடன் நிமிர, “எனக்கு நீ அழுறதைப் பார்க்க பார்க்க இர்ரிட்டேட் ஆகுது… இட்ஸ் இனாஃப்… இதுக்கு மேல என்னால முடியாது” என்று அவன் சொல்ல, அவள் கண்களின் கண்ணீர் உறைந்துவிட்டது. கரண் சட்டென்று இறங்கி அவள் கைகளை மிருதுவாகப் பற்றிக் கொண்டு, “சாரி தியா… உன்கிட்ட கோபமா பேசணும்னு நான் நினைக்கல… எனக்கு உன் வேதனை புரியது… ஏன்? எனக்கும் லித்துவோட இழப்பு கஷ்டமாதான் இருக்கு… ஆனா எவ்வளவு நாளைக்கு… இப்படியே…” என்று கேட்க, அவள் மௌனமாக அமர்ந்திருந்தாள். “சைக்காட்டிரிஸ்ட் வினய் கிட்ட அபாய்ன்மெண்ட் ஃபிக்ஸ் பண்ணி இருக்கேன்… நாளைக்கு ஈவனிங் நம்ம போய் அவரைப் பார்த்துட்டு வரலாம்” என்று கரண் சொல்ல, அவள் மறுக்கவில்லை. அவனுடன் சென்றாள். அந்த மனநல மருத்துவர் நிறைய அறிவுரைகளையும் மாத்திரைகளையும் எழுதிக் கொடுத்தார். அதெல்லாம் அவள் சோகத்தைக் கரைத்துவிடுமா என்ன? இறுதியாக அவர், “நீங்க கில்டியா ஃபீல் பண்றதுக்கு எல்லாம் எதுவும் இல்ல… இங்கே பதிமூணுல இருந்து பதினைந்து வயசு குழந்தைங்க இப்படி தற்கொலை செய்றது கொஞ்ச நாளாவே அதிகரிச்சிட்டு இருக்கு… பத்துல ஐந்து குழந்தைங்க இப்படி இறந்து போறாங்க… இதுக்கு சிஷு கூட காரணம்னு சொல்லிக்கிறாங்க” என்று கூற, தியா அதிர்ச்சியுடன் கேட்டிருந்துவிட்டு, “சிஷுதான் காரணம்னா அதை கவர்மென்ட் தடை செய்யலாம் இல்ல” என்று வினவினாள். “சிஷு காரணம்கிறது ஒரு அரசல்புரசலான தகவல்தான்… மத்தபடி யாரும் அதை ப்ரூவ் பண்ணவும் இல்ல… சிஷுவை கம்ப்ளைன்ட் பண்ணவும் இல்ல… அதுவும் இல்லாம சிஷுவை தடை செய்றது எல்லாம் நடக்கிற காரியம்னு எனக்கு தோணல” என்றார். வீட்டிற்கு வந்ததிலிருந்து தியா அந்த மனநல மருத்துவர் சொன்ன விஷயங்களைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தாள். அன்று சேனலில் பார்த்த செய்தி அவள் நினைவுக்கு வந்தது. சிஷுவை பற்றி வந்த செய்தியைக் குறித்து கரணிடம் அவள் புலம்ப, “இனிமே யார் காரணம்னு பேசி என்ன ஆகப் போகுது தியா… ப்ளீஸ் இந்த விஷயத்தை விட்டுடேன்… எனக்காக… எனக்காக விட்டுடு” என்றவன் அவள் கன்னங்களை ஏந்திக் கொண்டு, “எனக்கு என் தியா வேணும்… என் பழைய தியா வேணும்… எப்பவும் என்கிட்ட சண்டைப் போட்டுக்கிட்டு வாக்குவாதம் பண்ணிக்கிட்டு… கியூட்டா சிரிச்சுக்கிட்டு… ஐ வான்ட் ஹேர் பேக்” கண்ணீருடன் அவள் இதழ்களில் முத்தமிட்டான். கரணின் அன்பும் காதலும் அவள் வேதனையைக் கொஞ்சம் மட்டுப்படுத்தியிருந்தது. அவனின் அணைப்பில் ஒரளவு அமைதி பெற்று உறங்கிவிட்டாள். ஆனால் அது வெகுநேரம் நீடிக்கவில்லை. லித்துவின் வயதை ஒத்த பல நூறு குழந்தைகள் கூட்டம் கூட்டமாகச் செத்து மடிவது போன்ற காட்சியைக் கனவில் பார்த்ததில் அவள் பதறித் துடித்து விழித்துக் கொண்டாள். அத்துடன் அவள் உறக்கம் தொலைந்து போனது. அவசரமாக லித்துவின் அறைக்குச் சென்று அவளுடைய பொருட்களை எல்லாம் புரட்டிபோட்டாள். தன் மகளின் தற்கொலைக்கு சிஷுதான் காரணம் என்பது போன்ற ஆதாரம் ஏதாவது கிடைக்கிறதா என்று மும்முரமாக தேடினாள். தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்த லித்து ஏன் தனக்காக எந்தத் தகவலையும் விட்டு வைக்கவில்லை என்ற கேள்வி எழுந்தது. லித்துவின் மரணத்திற்குப் பிறகு பலமுறை இந்தக் கேள்விக்கு அவள் விடை தேடியும் அவளுக்குக் கிடைக்கவில்லை. என்ன தேடுகிறோம் எதை தேடுகிறோம் என்று புரியாமல் அவள் தலையைப் பிடித்து உட்கார்ந்திருக்கும்போது கரண் அங்கே வந்திருந்தான். அலங்கோலமாக கிடந்த அந்த அறையைப் பார்த்துவிட்டு, “திரும்பியும் முதல இருந்தா தியா” அவன் விரக்தியுடன் கேட்க, “இல்ல கரண்… நான்” என்றவள் பேச வரும் போதே இடைமறித்தவன், “போதும் தியா… திஸ் இஸ் தி லிமிட்… இதுக்கு மேல என்னால முடியல” என்று ஆக்ரோஷமாகக் கத்திச் சென்றான். அடுத்த சில நிமிடங்களில் அவன் பார்மல்ஸில் வந்து நின்று, “நான் ஆஃபீஸ் கிளம்புறேன்… நீயே எப்போ நார்மலாகிட்டேன்னு உனக்கு தோணுதோ அப்போ எனக்கு கால் பண்ணு… நான் திரும்பி வரேன்” என்று சொல்லிவிட்டுச் செல்ல, தியா அதிர்ந்துவிட்டாள். “கரண் ஐம் சாரி… ப்ளீஸ் என்னைத் தனியா விட்டுப் போகாதே” என்றவள் குரல் காற்றோடு தேய்ந்து போனது. அவன் கார் அதிவேகமாக அவ்விடம் விட்டு அகன்றுவிட, தியாவிற்கு அந்த நொடி என்ன செய்வதென்று புரியவில்லை. ஒரு பக்கம் துயரம் அவளைக் கொன்றது என்றால் மறுபுறம் தனிமை அவளைத் தின்றுக் கொண்டிருந்தது. ஒரு நிலைக்கு மேல் பொறுக்க முடியாமல் நேகாவிற்கு அழைத்துப் பேசினாள். “வீட்டுக்கு வந்துட்டுப் போறியா? எனக்கு ரொம்ப ஒரு மாதிரி லோன்லியா ஃபீல் ஆகுது” என்று சொல்ல, “ஷுர்… இதோ இப்பவே கிளம்பி வரேன்” என்றாள். கரணுக்கு அழைத்துப் பேச அவளுக்கு விருப்பமில்லை. தனக்கு இருக்கும் வேதனையும் குற்றவுணர்வும் அவனுக்கு ஏன் இல்லையென்று இப்போது யோசிக்க தோன்றியது.  அதுவும் ஒரே மாதத்தில் மகளின் இழப்பை மறந்துவிட்டு அவனுடன் தான் சுமுகமாக வாழ வேண்டுமென்று அவன் எப்படி எதிர்பார்க்கிறான் என்று அவளுக்கு உண்மையிலேயே புரியவில்லை. வாசலின் அழைப்பு மணி ஒலித்தது. நேகா வந்திருப்பதாக எண்ணி அவள் கதவைத் திறக்க வாசலில், அர்ஜுன் நின்றிருந்தான்.

Cancel “தூரமில்லை விடியல்” என்னுடைய புத்தம் புது தொடர் துவங்கப்பட்டுள்ளது. வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா