மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumMembersActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumMonisha Completed novels: Vilakilla Vithigal AVANVilakilla Vithigal Avan - E11Post ReplyPost Reply: Vilakilla Vithigal Avan - E11

Quote from monisha on May 16, 2023, 6:29 PM

11
கருணா, யசோதரன், ஜமால், பாரதி இவர்கள் நால்வரும் நெருங்கிய நண்பர்கள். நண்பர்கள் என்றால் நேரம் போகாமல் அரட்டை அடிக்கும் கூட்டமல்ல அவர்கள். தங்கள் பகுதியில் உள்ள இளைஞர்கள் சிலரை இணைத்துக் கொண்டு நண்பர்கள் குழு என்ற ஒரு அமைப்பை நடத்தி வந்தனர். அவர்கள் பகுதியில் தண்ணீர் வரவில்லை, சாக்கடை தேங்கி நிற்பது, கொசுத் தொல்லை, டெங்குகாய்ச்சல் பரவுவது என்று சிறியதிலிருந்து பெரியது வரை பிரச்சனைகள் எந்த அளவிலிருந்தாலும் அவர்கள் குழு அதனைத் தீர்த்து வைக்க தங்களால் இயன்ற முயற்சிகளைச் செய்யும். தேவையிருப்பின் அரசு அலுவலகம் சென்று போராட்டம் கூட நடத்துவார்கள். இத்தகைய போராட்டங்களில் மட்டும் யசோ பங்கு கொள்ள மாட்டான். அவன் சார்பதிவாளர் அலுவலகத்தில் க்ளர்காக பணி புரிகிறான். அரசு ஊழியன் என்பதால் இத்தகைய போராட்டங்களில் அவனால் பங்கேற்க முடியாது. ஆனாலும் மக்கள் நலனுக்காக குரல் கொடுப்பதில் அவனுக்கு ஆர்வம் அதிகம். அதனாலேயே ஐ. ஏ. எஸ் படிப்பது அவனது லட்சியமாக இருந்தது. பாரதியும் அவனும் இணைந்து படித்து ஆரம்ப கட்ட நிலையில் தேர்வாகி அடுத்த கட்ட தேர்வான மெய்ன்ஸ் தேர்விற்கு தயாராகி கொண்டிருந்தனர்.  அடுத்தபடியாக இவர்கள் நண்பர்கள் குழுவில் முக்கியத்துவம் வாய்ந்தவனாக இருக்கும் மற்றொருவன் கருணா. வியாசர்பாடி பகுதியில் அவன் தந்தை கொஞ்சம் பெரிய கை. அரசியல் பின்புலம் சார்ந்த பிரச்சனைகள் போன்றவற்றில் தலையிட்டு தீர்ப்பது அவன்தான். ஏதேனும் பெரிய வழக்குகளில் காவல் துறை வரை கூட சென்று கட்ட பஞ்சாயத்து செய்வார். அதனாலேயே கருணாவிற்கு அரசியல் மீது ஆர்வம்! ஆனால் பாரதி கருணாவிடம் கண்டிப்பாகச் சொல்லியிருந்தான். இந்த நண்பர்கள் குழு வெறும் மக்கள் சேவைக்காக மட்டும்தான். எந்த காரணத்துக்காகவும் இந்த குழுவின் பெயரை அரசியலுக்குப் பயன்படுத்தக் கூடாது என்று! இதனால் பாரதியின் மீது கருணாவிற்கு உள்ளூர கடுப்பு இருந்த போதும் அதனை அவன் காட்டிக் கொள்ளமாட்டான். அவர்கள் நண்பர்கள் குழுவின் ஆணிவேரே பாரதிதான். கருணாவின் அரசியல் கனவிற்கு இந்த குழுவிற்கு இருக்கும் மக்கள் செல்வாக்கு மிக முக்கியம்.  இப்படியான சூழ்நிலையில் முதல் முறையாக துர்காவின் பிரச்சனைக்காக கருணாவிடம் உதவி கேட்டுச் சென்றான் பாரதி. பொதுவாக எந்த பிரச்சனையாக இருந்தாலும் அவர்கள் நண்பர் குழுவில் அனைவரும் இணைந்து விவாதிப்பதுதான் வழக்கம்.  ஆனால் பாரதி தனிப்பட்ட முறையில் தன்னை அணுகி உதவி கோரியது கருணாவிற்கே வியப்பாகத்தான் இருந்தது. பாரதி துர்காவிற்கு நடந்தவற்றைப் பற்றி முழுவதுமாக அவனிடம் விவரித்து,  "அந்த பொண்ணுக்கு எந்த பிரச்சனையும் வராம நீதான் உங்க அப்பா கிட்ட இதைப் பத்தி பேசி முடிச்சு கொடுக்க சொல்லனும் கருணா” என்றான். “இதுக்கு எதுக்கு பாரதி எங்க அப்பா? சப்ப மேட்டரு… நானே பேசி முடிச்சு கொடுக்கிறேன்” என்ற கருணா மேலும் ஆர்வத்தோடு, “ஏன் பாரதி… அந்த பொண்ணு உனக்கு ரொம்ப வேண்டிய ஆளா?” என்றான். “அப்படி எல்லாம் இல்ல… நல்லா படிக்கிற பொண்ணு… ஆதரவில்லாத அந்த பொண்ணுக்கு நம்மால முடிஞ்ச ஏதாவது உதவி செய்யலா ம்னுதான்.” “செஞ்சிருவோம் பாரதி… ஆனாலும் அந்த பொண்ணை உன் வீட்டுலேயே தங்க வைச்சிருக்கியே… அதான் வேண்டியவங்களோன்னு கேட்டேன்” அவன் கேள்வியில் ஏதோ உள்ளர்த்தம் இருப்பது போல தோன்றிய போதும் பாரதி இயல்பாகவே பேசினான். “இல்ல கருணா… இந்த கேஸ் இருக்கும் போது துர்காவை வெளியே தங்க வைக்குறது ஃசேப் இல்லன்னு தோணுச்சு… அதான்” “அது என்னவோ உண்மைதான்… அதுவும் இல்லாம பொண்ணு வேற செம ஃபிகரா?” அவன் வாக்கியத்தை முடிப்பதற்குள் பாரதியின் முறைப்பைப் பார்த்து, “இல்ல… பொண்ணு செக்கசெவலுன்னு அழகா இருக்கா… வெளியே பாதுகாப்பு இருக்காதுன்னு சொன்னேன்” என்று கருணா தான் சொல்ல வந்ததை மாற்றி சொல்லி சமாளித்துவிட்டான். பாரதியின் பார்வையிலேயே அவனுக்கு இத்தகைய பேச்சுக்கள் பிடிக்கவில்லை என்பதை உணர்ந்து கொண்ட கருணா அதோடு நிறுத்தி கொண்டான்.  அதேநேரம் கருணா சொன்னது போல இரண்டே நாளில் துர்காவின் பிரச்சனையை முடித்தும் கொடுத்தான். மேலும் அந்த மேஸ்திரியையும் இனி துர்காவின் வாழ்க்கையில் தலையிடக் கூடாது என்று மிரட்டியும் வைத்தான். பாரதி இந்த செய்தியை துர்காவிடம் பகிர்ந்து கொண்டான். “இனிமே அந்த இஞ்சினியர் கேஸ்ல உனக்கு எந்த பிரச்சனையும் வராது துர்கா… எல்லாமே பேசி முடிச்சாச்சு… நீ நிம்மதியா இருக்கலாம்” என்றவன் உரைத்த போது அவளால் நம்பவே முடியவில்லை. மேலும் பாரதி அவளிடம், “முதல உன்னோட மார்க் ஷீட் வாங்கணும்… எந்த காலேஜ்ல நீ சேரணும்னு ஆசைபடுறன்னு சொல்லு… அங்கேயே ஃபார்ம் வாங்குவோம்… அப்புறம் அம்மா உனக்காக ஒரு மகளிர் காப்பகத்துல பேசி இருக்காங்க துர்கா… உன் மார்க்ஸ் எல்லாம் கேட்டுட்டு அவங்களே உனக்கு எல்லா ஹெல்ப்பும் பண்றேன்னு சொல்லிட்டாங்க” அவன் சந்தோஷமாக இவற்றை எல்லாம் அவளிடம் விவரிக்க, அவள் கண்களில் கண்ணீர் ஆறாக பெருகியது. “அட… சந்தோஷமான விஷயம்தானே சொன்னேன்… அதுக்கும் அழுகுற… முதல இப்படி அழற பழக்கத்தை நிறுத்து துர்கா” “இல்ல… நான் உங்களை புரிஞ்சிக்காம தப்பா பேசிட்டேன்” அவள் அழுது கொண்டே பேச, “ஒ! கில்டி பீலிங்? சரி பரவாயில்ல நான் அதெல்லாம் மறந்துட்டேன்” என்றவன் சொன்ன போதும் அவள் சமாதானமான வழியில்லை.  “இல்ல… என் மனசு தாங்கல… நான் உங்களை அப்படி பேசி இருக்க கூடாது” என்றவள் சத்தமாக மூச்சை இழுத்து விட்டுத் இன்னும் சத்தமாக அழ தயாராக,  “சரி… நீ பொறுமையா அழுது முடிச்சிட்டு சொல்லு… நான் அப்புறம் வரேன்” என்று சொல்லி பாரதி கிளம்ப முற்பட்டான். “இல்ல இல்ல… நான் அழல” என்றபடி அவள் முகத்தைத் துடைத்து கொண்டாலும் குழந்தை போன்ற அவள் தேம்பல் நிற்கவில்லை. “நடந்த எல்லாத்தையும் மறந்துடு துர்கா” என்று அவளுக்கு சமாதானம் உரைத்தவன், “இனி நடக்கிறது எல்லாம் நல்லபடியா நடக்கும்… உங்க அம்மா ஆசைப்பட்ட மாதிரி நீ நல்லா படிச்சு பெரியாளா வரணும்… இனிமே உன் நினைப்புல அது மட்டும்தான் இருக்கணும்” என்றான் தெளிவாக. பாரதியின் பேச்சைக் கேட்டு அவள் உள்ளம் நெகிழ்ந்தாள்.  “நான் உங்ககிட்ட அன்னைக்கு அப்படி பேசினதுக்கு என்னை மன்னிச்சிடுங்க” என்றவள் மனமுருகி மன்னிப்பு வேண்ட, “இன்னும் நீ அந்த விஷயத்தை விடலயா? நான் எப்பவோ அதை மறந்துட்டேன்… நீயும் மறந்துடு… அப்புறம் ஒரு விஷயம்” என்று சற்று நேரம் தயங்கியவன், “இன்னும் ஒரு இரண்டு மூணு வாரத்துக்கு நீ இங்கதான் தங்க வேண்டி இருக்கும்… உனக்கு சங்கடமா இருந்துதுன்னா என் ப்ரெண்ட் மாலதி தங்கி இருக்க ஹாஸ்ட்டில வேணா நீ தங்கிக்க அரேஞ் பண்ணட்டுமா?” என்றான். “இல்ல இல்ல… நான் இங்கேயே தங்குறேன்” என்றவள் முகத்தில் நம்பிக்கையும் தெளிவும் ஒளிர்ந்தது. சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ளும் ஆண்களுக்கு இடையில் அவள் கண்களுக்கு பாரதி வித்தியாசமானவனாக தோன்றினான். அவளின் பேதை மனம் அவனை ஆதர்ச நாயகனாக போற்றியது. அடுத்து வந்த வாரங்களில் துர்கா உற்சாகமாக மாறியிருந்தாள். வீட்டில் வித்யாவிற்கு அனைத்து வேலைகளிலும் உதவி செய்தாள். காலனியில் உள்ள எல்லோரிடமும் இயல்பாகக் கலந்து பழகினாள். வசுவிடம் முன்பு நடந்ததற்காக மன்னிப்பு கேட்டு அவளுடனும் தோழமையை வளர்த்துக் கொண்டாள். எப்போதும் மாலை நேரங்களில் அவர்கள் குடித்தன வாசல் கொண்டாட்டமாகவும் குதுகலமாகவும் இருக்கும். அதுவும் மின் துண்டிப்பு ஏற்பட்டால் எல்லோரும் வெளியே கூடிவிட, ஒரே ஆரவாரம் அதகளம்தான். அத்தகைய சமயங்களில் அவர்கள் குடியிருப்பில் பாரதியை வைத்து பாட்டுக் கச்சேரிகள் நடக்கும். அப்படி ஒரு சமயத்தில்தான் துர்கா முதல் முறையாக பாரதி பாடி அவள் கேட்டது. “அண்ணா சூப்பரா பாடுவாங்க தெரியுமா?” என்று வசு அவனை பாராட்டிய அதேசமயம் பாரதி பாடிய ஒவ்வொரு பாடலும் துர்காவின் மனதைத் தொட்டுச் சென்றது. அதிகம் பாடல் கேட்காதவள் அன்றுதான் இன்னிசையின் சுகந்தத்தை உணர்ந்தாள். நேயர் விருப்பங்களை கேட்டு பாடி கொண்டிருந்தவன் இறுதியாக பாடிய பாடலில் துர்காவின் உள்ளம் மொத்தமாக அவனிடம் சரிந்தது.  “அசைத்து இசைத்தது வளைக்கரம்தான் இசைந்து இசைத்தது புது ஸ்வரம்தான் சிரித்த சிரிப்பொலி சிலம்பொலிதான் கழுத்திலிருப்பது வலம்புரிதான் இருக்கும் வரைக்கும் எடுத்து கொடுக்கும் இருக்கும் வரைக்கும் எடுத்து கொடுக்கும் மனதை மயிலிடம் இழந்தேனே மயங்கி தினம் தினம் விழுந்தேனே மறந்து இருந்து பரந்து தினம் மகிழ… உன் பார்வையில் ஓராயிரம் கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே!” தன்னை பார்த்து அவன் பாடுவது போல ஒரு பிரேமையில் ஆழ்ந்து இமைக்கவும் மறந்தாள். அப்போதுதான் பாரதி எதேச்சையாக அவள் நின்றிருந்த திசையில் தன் பார்வையைச் செலுத்தினான். கதவின் மறைவில் அவளின் ஒற்றை விழி அவனை ஆழமாக உள்ளிழுத்துக் கொள்ளத் துடித்தது.. உண்மையில் அலைகள் இல்லா நடுக்கடலின் ஆழம் அவள் விழிகள். மூழ்கி முத்தெடுக்க விழையத் தூண்டும் அவ்விழிகள் ஆழியின் ஆழத்தை விட மிகவும் ஆபத்தானது என்ற எச்சரிக்கை உணர்வில் சட்டென்று தன் பார்வையை அவ்விடமிருந்து விலிக்கி கொண்டான். ஆனால் அவளால் அது முடியவில்லை. அவன் குரல் தரும் போதையிலும் இசைந்து வரும் காதல் வரிகளிலும் புதுவிதமான மயக்கம் தொனித்தது. அவள் பெண்மையை உயிர்க்கச் செய்தது. கள்ள கபடமில்லா அப்பெண்ணுக்குள் ஹார்மோன்கள் கலவரம் செய்தன. உடலெல்லாம் உஷ்ணமாக தகிக்க அவளுக்குள் காதல் தீ காட்டு தீயாக பரவ தொடங்கியது. பாரதி இயல்பாகவே அழகை ரசித்து ஆராதிக்கக்கூடியவன்.  துர்காவையும் உயிருள்ள அழகான ஓவியத்தை ரசிக்கும் ஒரு ரசிகனின் நோக்கத்தோடு மட்டுமே பார்த்தானே ஒழிய அவன் பார்வையிலும் பேச்சிலும் எந்தவிதமான கல்மிஷமும் இல்லையென்பதை முதிர்ச்சி இல்லாத அச்சிறியவளுக்கு புரியவில்லை. இந்த நிலையில் துர்கா காப்பகத்திற்குச் செல்ல வேண்டிய நாள் வந்தது. “நாளைக்கு நீ காப்பகத்துக்கு போகணும் துர்கா… உன்னுடைய டிரஸ் திங்க்ஸ் எல்லாத்தையும் இந்த பெட்டில எடுத்து வைச்சுக்கோ” என்று வித்யா அவளிடம் ஒரு பெட்டியை எடுத்துத் தந்துவிட்டு அவர் வேலைக்கு சென்றுவிட்டார். பாரதி தேர்வு நாள் நெருங்குவதால் யசோ வீட்டில் தீவிரமாகப் படித்துக் கொண்டிருந்தான். அச்சமயம் வசு அவனிடம் ஓடி வந்து, “அண்ணா… துர்கா ரொம்ப அழுதிட்டு இருக்கா? நீங்க வாங்க அண்ணா” என்று அழைக்க, அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. “என்னாச்சு? ஏன் அழற” என்ற அவன் கேள்விக்குப் பதில் சொல்லாமல், “நீங்க வாங்க அண்ணா” என்று கை பிடித்து அவனை வீட்டிற்கு அழைத்து சென்றாள். “என்னாச்சு? என்ன பிரச்சனை வசு?” என்று கேட்டபடி உள்ளே வந்தவன் துர்கா அழுதபடி தரையில் அமர்ந்திருப்பதை பார்த்துக் குழம்பினான். “துர்கா” என்றவன் அழைப்பிற்கு அவள் நிமிர்ந்து பார்க்கவில்லை. ஆனால் அழுகையின் சத்தம் அதிகமானது.  “நீயாச்சும் சொல்லு வசு… என்ன விஷயம்?” என்று அவன் வசுவைப் பார்க்க, “துர்காவை காப்பகத்துக்கு அனுப்பாதீங்க அண்ணா… அவ இங்கேயே இருக்கட்டும்” என்றாள். “என்ன பேசிட்டு இருக்க வசு நீ… அதெப்படி துர்கா இங்க இருக்க முடியும்” “ஏன் இருக்க முடியாது? வேணா நான் துர்காவை எங்க வீட்டுல வைச்சுக்கட்டுமா? எங்க அப்பாகிட்ட வேணா நான் பேசறேன்”  “புரியாம பேசாதே வசு? முதல் நீ வீட்டுக்கு போ… நான் துர்காகிட்ட பேசிக்கிறேன்” என்றவன் சொல்ல, “அண்ணா” என்று வசு தயங்கியபடி நிற்கவும், “வசு போ” என்று அதட்டவும் அவள் சென்றுவிட்டாள். அதன் பின் அவன் துர்காவிடம், “எழுந்திரு துர்கா… போய் முகத்தை கழுவிட்டு வா… எப்ப பாரு அழுமூஞ்சி மாதிரி அழுதுக்கிட்டு” என்றவன் கண்டிப்பான குரல் கேட்டு கோபமாக மறுவார்த்தை பேசாமல் சென்று முகம் கழுவி வந்தாள். “உட்காரு… என்ன பிரச்சனை உனக்கு… என்கிட்ட சொல்லு” என்றவன் விசாரிக்க அவளோ அவன் முகத்தை பாராமல் வேறுபுறம் திரும்பி நின்று கொண்டாள். “இங்க இருந்து போக உனக்கு கஷ்டமா இருக்கா?” என்றவன் மெதுவாகக் கேட்க, “ம்ம்ம்” என்று தலையை மட்டும் அசைத்தவள் அவன் விழியை பார்த்து பேச துணிவில்லாமல் முகத்தை தாழ்த்தி கொண்டிருந்தாள். “நீ கவலைப்படாதே… நானும் அம்மாவும் உன்னை அடிக்கடி வந்து பார்க்கிறோம்… வசுவை கூட அழைச்சிட்டு வரேன்… ஏதாச்சும் பண்டிகை நாளில நீ இங்க வந்து போகலாம்… சரியா” என்றவன் நிதானமாக அவளுக்கு புரிய வைக்க முயற்சி செய்ய, அவளிடம் அழுத்தமான மௌனம்! “ஏதாச்சும் சொல்லு துர்கா?” என்றவன் கேட்கவும் “நான் இங்க உங்க கூடவே இருக்கிறேனே” என்றவள் மெல்ல பேச, “எனக்கு உன் வருத்தம் புரியுதும்மா… ஆனா நீ இங்கேயே இருக்க முடியாது… அது சரியா வராது” என்றவன் தயங்கித் தயங்கி சொல்லி முடிக்கும் போதே, “நீங்க சொல்றது சரிதான்… நான் இங்க தங்க முடியாது… எனக்கு இங்க தங்க எந்த உரிமையும் இல்ல… அப்படிதானே?” என்றவள் அழுகையினூடே அவனை நிமிர்ந்து பார்க்க, அவன் மனம் இளகியது. “என்ன துர்கா நீ? உரிமை அது இதுன்னு பேசிக்கிட்டு… நாங்க அப்படியெல்லாம் யோசிக்கல… உன் நல்லதுக்குதான் அம்மா இந்த முடிவே எடுத்திருக்காங்க” “உங்களுக்கும் நான் இங்கிருந்து போகணும்னுதான் தோணுதா?” ஏக்கமாக அவன் விழிகளை அவள் ஏறிட்டாள். “நீ போகணும்னு நாங்க யோசிக்கல… ஆனாலும் நீ இங்க இருக்க முடியாது இல்ல” “நீங்க நினைச்சா கூட நான் இங்க இருக்க முடியாதா?” “நான் நினைச்சாவா? நான் எப்படி?” அவன் புரியாமல் விழிக்க, “நீங்க மறைக்காம சொல்லுங்க… உங்க மனசுல நான் இல்லன்னு” என்று அவள் கேட்ட நொடி அவன் அதிர்ந்துவிட்டான். எப்படி அவள் மனதில் இப்படியொரு எண்ணம் வளர்ந்தது என்று அவன் புரியாமல் நிற்க, அவன் மௌனத்தை தவறாகப் புரிந்து கொண்டவள். “எனக்கு தெரியும்… நான் உங்க மனசுல இருக்கேன்… ப்ளீஸ் என்னை அனுப்பிடாதீங்க… நான் உங்க கூடவே இருக்கேன்” என்று சொல்லி துர்கா அவன் தோள் மீது சாய்ந்து தேம்ப, அவன் திகைத்தான். செய்வதறியாமல் அவன் திணற, “துர்கா” என்று வித்யா உரக்க அழைத்தார். அவள் அதிர்ந்து அவனை விட்டு விலகி நின்றாள். தன் அம்மா தன்னை தவறாக நினைத்துவிட்டாரோ என்ற பதட்டத்தில், “அம்மா நான்” என்று பாரதி நிலைமையை விளக்க முற்பட, “நான் எல்லாத்தையும் கேட்டுட்டுதான் இருந்தேன் பாரதி… நீ போ… துர்காகிட்ட நான் பேசறேன்” என்று வித்யா துர்காவை கூர்மையாக பார்த்து கொண்டே மகனை அங்கிருந்து அனுப்பி விட்டார்.  பாரதியும் மறுவார்த்தை பேசாமல் அங்கிருந்து அகன்றுவிட்டான். துர்காவிடம் அவன் அம்மா என்ன பேசினார் என்பது அவனுக்குத் தெரியாது. ஆனால் அடுத்த நாள் அவள் எதுவும் பேசாமல் காப்பகத்திற்குச் செல்ல தயாராகிவிட்டாள். ஆனால் செல்வதற்கு முன்பாக காலனியில் உள்ள எல்லோரிடமும் சொல்லிவிட்டு சென்றவள் பாரதியை மட்டும் ஏமாற்றத்தோடு பார்த்துவிட்டு அகன்றாள். அந்தப் பார்வை அவன் உள்ளத்தை அசைத்தன.

Cancel “தூரமில்லை விடியல்” என்னுடைய புத்தம் புது தொடர் துவங்கப்பட்டுள்ளது. வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா