மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumMembersActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumMonisha Completed novels: Nijamo NizhaloNijamo Nizhalo - Episode 26Post ReplyPost Reply: Nijamo Nizhalo - Episode 26

Quote from monisha on July 11, 2023, 10:45 AM

26
டைகரின் தீடீர் மரணம் வீட்டிலிருந்த எல்லோரையுமே அதிர்ச்சியில் ஆழ்த்தியிருந்தது. நந்தா டைகரின் உடலை தங்கள் தோட்டத்திலேயே வைத்து புதைத்திருந்தார். மறுவீடு சென்ற வெங்கட்டின் மனதை வருத்த வேண்டாமென்று நந்தா அவனிடம் சொல்லவில்லை. வந்தப் பிறகு சொல்லிக் கொள்ளலாம் என்று விட்டுவிட்டார். வீட்டிலிருந்த குழந்தைகளிடம் டைகர் காணாமல் போய்விட்டதாகச் சொல்லி சமாளிக்க, அமிர்தா ஒரே அழுகை. டைகரைப் பார்க்காமல் சாப்பிடமாட்டேன் என்றவள் அழுது ஆர்ப்பாட்டம் செய்ய, அவளைத் தேற்றுவதற்குள் வீடே ரெண்டாகிவிட்டது. சவி, நகுல், சகாவை விடவும் அமிர்தாதான் டைகரிடம் அதிக நெருக்கமாக இருந்தாள். சாப்பாடு ஊட்ட விளையாட என்று எல்லாவற்றிற்கும் டைகர் வேண்டும். டைகரும் கூட அவளிடம் அன்பாக விளையாடும். யாராலும் டைகரின் இந்த திடீர் மரணத்தைத் தாங்க முடியவில்லை. மல்லியோ இன்னும் அந்த அதிர்ச்சியிலிருந்து மீளவேயில்லை. நேற்று வரை பேய் பூதத்தின் மீதெல்லாம் நம்பிக்கை இல்லாதவருக்கு இன்று அப்படியும் இருக்குமோ என்று சந்தேகம் வந்திருந்தது. எதுவும் நம் கண்ணெதிரே தோன்றாத வரைதான்… ஒரு வேளை அப்படி தோன்றிவிட்டால்…? மல்லியின் மனநிலையும் அதுதான். நேற்று இரவு பார்த்தது மனித ரூபம் இல்லையென்று மட்டும் அவருக்கு உறுதியாகத் தெரிந்தது. ஆனால் அது என்ன? அது யார்? ஒரு வேளை அவனோ? மல்லி தன் கைகள் இரண்டையும் பார்த்துக் கொண்டார். மனதைப் பிசைந்தது. இன்னும் அந்தக் கரங்களில் இரத்தக்கரைப் படிந்திருப்பது போன்றதொரு உணர்வு. திக்கற்றவனுக்கு தெய்வம் துணை என்பது போல மல்லிக்குப் பெருமாளே துணை. ஆதலால் அன்று மாலை நந்தாவை அழைத்துக் கொண்டு பார்த்தசாரதி கோவிலுக்குச் சென்றார். அங்கே சென்று இறைவனை தரிசித்தப் பிறகுதான் மல்லியின் மனம் கொஞ்சம் தெளிந்திருந்தது. தரிசனம் முடித்துவிட்டு இருவரும் கோவில் மண்டபத்தில் வந்து அமர்ந்தனர். அப்போது மல்லி, “வீட்டுல இப்பதான் ஒரு நல்லது முடிஞ்சுருக்கும்போது… இப்படி உடனே ஒரு கெட்டது நடக்கிறது எனக்கு ஒன்னும் சரியாப்படல… பேசாம வீட்டுல ஒரு பூஜை ஏற்பாடு பண்ணிட்டா என்ன?” என்று கேட்க, “நானும் அதைப் பத்திதான் யோசிச்சிட்டு இருந்தேன்” என்றார் நந்தாவும். “அப்போ இந்த வாரமே ஏற்பாடும் பண்ணிடலாம்… நீங்க நம்ம சாஸ்திரிகிட்ட பேசுங்க” “ம்ம்ம்” என்று நந்தா தலையசைக்க, அதன் பின் இருவரும் தங்கள் பேச்சை முடித்து பிரகாரம் முன்னே விழுந்து வணங்கிவிட்டு புறப்பட எத்தனித்த போதுதான் மல்லிக்கு நினைவு வந்தது. அதே இடத்தில் வைத்ததுதான் ஸ்ரீலக்ஷ்மியை அவர் பார்த்தது. பெருமாள் சந்நிதியில் பார்த்ததாலோ என்னவோ அவளை பெருமாளே தன் மகனுக்காக அனுப்பி வைத்தது போலதான் எண்ணினார். அந்த நம்பிக்கையில்தான் பெரிதாக எதுவும் விசாரிக்காமல் மகனுக்கு அவசரமாக திருமணம் முடித்துவிட்டார். இப்போது அந்த முடிவு தவறோ என்று பயமாக இருந்தது. “உன் மேல இருக்க நம்பிக்கையிலதானே என் பையனுக்கு அந்தப் பொண்ணைக் கட்டி வைச்சேன்… இப்படி பண்ணிட்டியே” என்று புறப்படும் தருவாயில் பெருமாளையும் கூட விடாமல் காய்ச்சிவிட்டுதான் போனார் மல்லி. அதுவும் ஸ்ரீயை நினைத்தாலே அப்படியொரு கோபம் வந்தது அவருக்கு. அதுவும் வந்த முதல் நாளே மாமியாரிடம் எந்தப் பெண்ணாவது இப்படியெல்லாம் பேசுவாளா என்ன? எவ்வளவு நெஞ்சழுத்தம் அவளுக்கு. அவளைப் பற்றி யோசித்தபோது அர்ச்சனாவும் லலிதாவும் எவ்வளவு மேல் என்று தோன்றியது. அவர் எவ்வளவோ அவமானப்படுத்திய போதும் ஒரு முறை கூட எதிர்த்து பேசியது கூட இல்லை. ஏன்? ஒரு முகத்திருப்பல் கூட கிடையாது. முதல் முறையாக மருமகள்களின் நற்குணங்களைப் பற்றி யோசித்து கொண்டே வந்த மல்லியின் மௌனத்தை வித்தியாசமாகப் பார்த்த நந்தா, “அதான் உன் பெருமாளைப் பார்த்துட்டியே அப்புறம் என்ன?” என்று கேட்க, மல்லிக்கு கணவனை எண்ணிதான் பயமாக இருந்தது. ஸ்ரீ அப்படி பேசியது தெரிந்தால் நந்தா அவரை ஒரு வழிச் செய்துவிடுவார். பெண் பார்க்கிறேன் என்று தான் கொஞ்சம் நஞ்சமா செய்திருக்கிறோம். குற்றவுணர்வோடும் பயத்தோடும் அவர் கணவனை ஏறிட, “நடந்ததையே நினைச்சிட்டு இருக்காதே மல்லி… விடு” என்றவர் மனைவி டைகர் இறந்த கவலையில் இருப்பதாக எண்ணி ஆறுதல் உரைத்தார். மல்லியும் அப்போதைக்கு ஸ்ரீயைப் பற்றிக் கூறாமல், “இல்லங்க… வெங்கட்டுக்கு திருப்பதில கல்யாணம் பண்ணலாம்னு ஒரு எண்ணம் இருந்துச்சு… நான் மனசுல நினைச்சிட்டு இருந்தேன்” என, “அதுக்கென்ன விடு… ஒரு நாள் குடும்பத்தோட திருப்பதிக்குப் போயிட்டு வந்திருவோம்” என்றார். “ம்ம்ம் போயிட்டு வரணும்” என்று தயக்கத்துடன் இழுத்த மல்லிக்கு மீண்டும் இரவு நடந்த சம்பவமும் அந்த சிவந்த கண்களும் நினைவுக்கு வந்தது. இந்தப் பேய் பிசாசு எல்லாம் உண்மையா என்ற எண்ணம் எழவும் அது பற்றிய நந்தாவின் எண்ணத்தைக் கேட்க நினைத்தவர், “நான் உங்ககிட்ட ஒன்னு கேட்கட்டுமா?” என்று மெல்ல ஆரம்பிக்க, “ஒன்னு என்ன மல்லி… நீ எத்தனைக் கேட்டாலும் நான் தருவேன்… ஆனா வீட்டுக்குப் போய் தர்றேன்” என்று பதிலளித்த நந்தாவின் குறும்பு பார்வையில் மல்லிக்கு கடுப்பேறியது. “பிள்ளைங்களுக்கு எல்லாம் கல்யாணம் ஆயிடுச்சு… இப்பவும் இப்படியெல்லாம் பேசுறீங்களே உங்களுக்கு வெட்கமாவே இல்லயா” “என் பொண்டாட்டிக்குக் கொடுக்க எனக்கென்ன வெட்கம்… இதுக்கெல்லாம் வெட்கப்பட்டா ஒன்னுக்கு மூணா பெத்திருக்க முடியுமா?” என்றவர் கேட்க மல்லி தலையிலடித்துக் கொண்டு, “என்ன பேச்சு இதெல்லாம்… வயசாவுதே ஒழிய கொஞ்சம் கூட உங்களுக்கு விவஸ்த்தையே இல்ல” என்றார். “ரொமான்ஸுக்கு ஏது மல்லி வயசு?” என்ற கணவனை முறைப்பாகப் பார்க்க அவர் கொஞ்சமும் அசராமல், “இதான்… இந்த லுக்லதான்… நான் விழுந்துட்டேன்… வாட் அ ரொமான்டிக் லுக்?”என்றாரே பார்க்கலாம். அவ்வளவுதான். மல்லிக்கு அதற்கு மேல் தாக்குப் பிடிக்க முடியவில்லை. “நீங்க முதல வண்டியை நிறுத்துங்க நான் கேப்ல போய்கிறேன்… நிறுத்துங்க சொன்னேன்… நிறுத்துங்க” என்றவர் எரிச்சலாகவும், “சரி சரி டென்ஷனாகாதே விடு... நீ ரொம்ப மூட் அப்செட்ல இருந்தியா அதான்… கொஞ்சம் ஜாலியா விளையாடுனேன்” என்றார். மல்லி முகத்தைத் திருப்பிக் கொண்டு வர, “சரி சரி… ஏதோ ஒன்னு கேட்கணும்னு சொன்னியே… கேளு” என்று நந்தா மீண்டும் விட்ட இடத்திலிருந்து தொடங்கவும், “நான் ஒன்னும் கேட்கல சாமி… என்னை விட்டுடுங்க… வீட்டுக்குப் போய் சேர்ந்தா போதும்னு இருக்கு” என்று மல்லி கையெடுத்துக் கும்பிட, “ஓகே ஃபைன்” என்று நந்தா காரை ஓட்டிக் கொண்டு வந்து வீட்டில் நிறுத்தினார். மல்லிக்கு உண்மையில் கணவனுடன் கோவிலுக்குச் சென்றுவிட்டு வந்ததில் மலையளவு தெரிந்த பிரச்சனையெல்லாம் மறந்தே போய்விட்டது. அடுத்த நாள் காலை மறுவீடு முடித்து வெங்கட் வீடு வந்து சேர்ந்திருந்தான். அவனுடன் வீட்டிற்குப் போகவே கூடாது என்று ஸ்ரீ எவ்வளவோ முயற்சித்தாள். ஆனால் அவன் முகம் பார்த்து மறுப்பது அவளுக்கு அத்தனை சங்கடமாக இருந்தது. அவனின் சின்னதாய் ஒரு சிரிப்பிலேயே அவள்தான் கிளீன் போல்ட் ஆகிவிடுகிறாளே! ‘ஐம் சாரி மாயா… ஐம் சாரி மாயா’ என்று ஸ்ரீராமஜெயம் போல அவள் வாயிற்குள் சொல்லிக் கொண்டிருந்தாலும் மனம் என்னவோ வெங்கட் வெங்கட் என்று அவன் பின்னேதான் போய் கொண்டிருந்தது.  கார் வந்து வீட்டில் நின்றதும் அவள் மற்றதை எல்லாம் மறந்து அவளை வேறொரு பயம் தொற்றிக் கொண்டது.  “இறங்கு ஸ்ரீ” என்ற வெங்கட் சொல்வதைக் கேட்காமல் அவள் பிடிவாதமாக உள்ளேயே அமர்ந்திருந்தாள். “என்னாச்சு உனக்கு… இறங்கு” என்றவன் சொல்ல, “உங்க வீட்டு நாய்… நான் இறங்குனதும் என் மேல பாய்ஞ்சுருச்சுனா” என்றவள் பயத்துடன் கூற, “அவனுக்கும் சொல்லிடுவோம்… அன்னைக்கு வந்தது நீ இல்ல மாயாதான்னு” என்றவன் நக்கலாகச் சொல்லி சிரிக்கவும், அவள் காரிலிருந்தபடியே முறைத்தாள். “போதும் முறைச்சது… இறங்கி வா” “மாட்டேன் மாட்டேன்… நீங்க உங்க வீட்டு நாய் இருக்கான்னு பாருங்க” என, அப்போதுதான் வெங்கட் கவனித்தான். டைகரை எங்கேயும் காணவில்லை. அவன் காரின் ஹாரன் சத்தம் கேட்டாலே அடித்துப் பிடித்து ஓடி வருபவன் இப்போது எங்கே சென்றான் என்று சுற்றும் முற்றும் பார்த்தவன் ஒரு வேளை தோட்டத்தில் இருக்கிறானோ என்று எண்ணி, “அவனைக் காணோம்… நீ வெளியே வா” என்றான். அப்போதும் அவள் பயத்துடன், “எனக்கு பயமா இருக்கு” என்று சொல்ல, “அதெல்லாம் நான் இருக்கேன் இல்ல… அவன் ஒன்னும் பண்ண மாட்டான்” என்று சொல்லி அவள் கையைப் பிடித்து வெளியே இழுக்க, இறங்கியவள் அச்சத்தில் அவன் கைகளை தன் கைகளுக்குள் இறுகக் கோர்த்துக் கொண்டாள். ஹார்ன் சத்தம் கேட்டு மகன் வந்து விட்டான் என்று எண்ணி சந்தோஷமாகப் பார்க்க வந்த மல்லியின் முகம் ஸ்ரீயின் கைகள் வெங்கட்டின் கையினை நெருக்கத்துடன் பற்றியிருந்த காட்சியைக் கண்டதுமே சுருங்கிவிட்டது. “அம்மா” என்று வெங்கட் புன்னகைத்த அதேநேரம் ஸ்ரீயிடம், “கையை விடு… அம்மா” என்று சொல்லி அவன் கையை உருவிக் கொள்ள முயல, அவள் எங்கே விட்டால்தானே. “நாம சீக்கிரம் உள்ளே போயிடலாம்… அந்த நாய்” என்றவள் கவனமெல்லாம் டைகர் வந்துவிடுவானோ என்றுதான். ஆதலால் அவள் எதிரே நின்ற மல்லியைக் கண்டுகொள்ளவே இல்லை. வெங்கட் சொல்வதையும் காது கொடுத்துக் கேட்கவில்லை. அவன் கையைப் பிடித்துக் கொண்டே வர, மல்லி கடுப்புடன் உள்ளே சென்றுவிட்டார். ‘நான் வந்து நின்னதைக் கூட சரியா பார்க்கல… அப்படி என்ன அவ… இரண்டு நாளில எல்லாம் அப்படியா மாறி போயிடுமா?’ என்றவர் உள்ளுர கறுவிக் கொண்டே தன்னறைக்குள் புகுந்து கொண்டார். ஸ்ரீயோ வீட்டிற்குள் வந்தப் பிறகுதான் அவன் கையை விலக்கினாள். “ஒரு வேளை டைகர் உள்ளே இருந்தா” என்றவன் சொன்னதுதான் தாமதம் மீண்டும் அவன் கையைப் பற்றிக் கொள்ள அவன் சிரித்துவிட்டு, “சும்மா சொன்னேன்… டைகர் உள்ளே எல்லாம் வர மாட்டான்” என, அவள் அவனை முறைக்க, “நீ இவ்வ்வ்வ்வளவு நெருக்கமா இருப்பன்னு தெரிஞ்சா டைகரை கூட கூட்டிக்கிட்டே சுத்தலாம் போலவே” என்று கல்மிஷ்மாகச் சொல்லிப் புன்னகைக்க, ‘சிரிச்சே கொல்றானே’ என்றவள் முகத்தைத் திருப்பிக் கொண்டு தவித்தாள். அப்போது நந்தா மகன் மருமகள்களைப் பார்த்துவிட்டு புன்னகையுடன் வரவேற்றார். “எப்படிடா போச்சு… மறுவீடு சம்பிராதயம் எல்லாம்” என்று விசாரித்துக் கொண்டே மகனின் தோளில் கைப் போட்டு ரகசியமாக, “என்னடா அந்த ஹல்க் பிரதர்ஸ் எல்லாம் உன்னை நல்லா கவனிச்சாங்களா?” என்று கேட்க, “அதெல்லாம் நல்லா கவனிச்சாங்கப்பா” என்றான். “ஆமா அந்தக் கெழவி இங்கிலீஷ்ல பேசியே உன் காதுல ரத்தம் வர வைச்சிருக்குமே” என்று கிண்டலாகச் சொல்ல, வெங்கட் சத்தமாகச் சிரித்துவிட்டான். அவர் சொன்னது போலவே நடந்ததே. அப்பாவும் மகனும் இத்தனை நெருக்கமாகப் பேசிக் கொண்டிருப்பதைப் பார்க்க ஸ்ரீக்கு ஆச்சரியமாக இருந்தது. அவள் வீட்டில் இப்படியெல்லாம் பார்த்ததில்லை. தங்கள் வீடு போலவே அவர்கள் வீடும் இருக்கும் என்று நினைத்திருந்தாள். அதுவும் மல்லி இருக்கும் வீடு அல்லி ராஜ்ஜியமாகதான் இருக்கும் என்ற அவள் கணிப்புத் தவறென்று தோன்றியது. மகனிடம் பேசிக் கொண்டிருந்த நந்தா, “மல்லி… வா… உன் மகனும் மருமகளும் வந்துட்டாங்க… இன்னும் நீ உள்ளே என்ன பண்ற” என்று கூவ, “அம்மா நான் வாசலில் வரும் போதே பார்த்துட்டாங்கப்பா” என்றான் வெங்கட். “அப்புறம் எங்கே போனா… காலையில இருந்து வாசலுக்கும் வீட்டுக்கும் நீங்க எப்போ வருவீங்கன்னு நடந்துட்டே இருந்தா” “நானே உள்ளே போய் அம்மாவைப் பார்த்துட்டு வரேன்” என்று அவன் அவர் அறைக்குள் செல்ல எத்தனித்தபோது அவன் முன்னே வந்து குதித்த அமிர்தா, “பெரிப்பா… டைகரைக் காணோம்” என்று தன் கவலையைச் சொன்னாள். “டைகரைக் காணோமா? என்னடா குட்டிச் சொல்ற?” என்றவன் விசாரிக்க, “ஆமா… நேத்துல இருந்து டைகரைக் காணோம்” என்றவள் மீண்டும் அழத் தொடங்கிவிட்டாள். வெங்கட் புரியாமல் தன் தந்தையைப் பார்க்க, அவர் அமிர்தாவை சமாதானம் செய்து உள்ளே அனுப்பி விட்டு அவனிடம் நடந்தவற்றைக் கூற அவன் அதிர்ந்துவிட்டான். “என்ன பா சொல்றீங்க?” என்று கேட்க, “எனக்கும் ஒன்னும் புரியல… எப்படி நடந்ததுன்னு தெரியல… காலையில எழுந்ததும் டைகரை வாக்கிங் கூட்டிட்டுப் போகலானு போன போதுதான் பார்த்தேன்… அப்புறம் எனக்கு எதுவுமே ஓடல… இரண்டு நாளா எல்லோருமே அப்செட்… அமிர்தா வேற அழுதுட்டே இருந்தா” என்று அவர் நடந்தவற்றைச் சொல்ல, “ஏன் ப்பா என்கிட்ட சொல்லல?” என்றவன் வருத்தத்துடன் கேட்டான். “மாமியார் வீட்டுக்கு மறுவீடு போயிருக்க… உன்னை வேற இதை சொல்லி கஷ்டபடுத்தச் சொல்றியா?” வெங்கட்டின் முகம் வாடிப் போனது. ஸ்ரீயும் கூட இந்தச் செய்தியைக் கேட்டு அதிர்ச்சியில் இருந்தாள். டைகர் தோட்டத்தில் புதைக்கப்பட்டிருந்த இடத்தைக் கேட்டறிந்த வெங்கட், அங்கே சென்று அப்படியே மண்டியிட்டு அமர்ந்துவிட்டான். அவன் கண்களில் கண்ணீர் பெருகிவிட்டது. அவனையும் ஒரு சகோதரன் போலதான் பாவித்தான். தாள முடியா துயருடன் டைகரை நினைத்து அவன் மனம் கலங்கியிருந்த போதும்தான் எதேச்சையாக அதனைப் பார்த்தான். டைகரைப் புதைத்திருந்த இடத்திற்கு அருகிலிருந்த அட்டை போன்ற ஒரு வடிவம் வெளியே நீட்டிக் கொண்டிருந்தது. அது அவன் பிறந்த நாளுக்கு ஸ்ரீ கொடுத்த வாழ்த்தட்டைப் போலவே இருந்தது. அந்த சமயத்தில் அவன் எத்தனை தேடியும் கிடைக்காதது இப்போது அவன் கண்ணில் பட்டிருந்தது. டைகர் ஏதோ ஒரு கோபத்தில் அதை உள்ளே மண்ணிற்குள் புதைத்துவிட்டிருக்கிறான். வெங்கட் அதனை வெளியே எடுத்தான். மண்ணிற்குள் இருந்த காரணத்தால் அது கரை படிந்த நிலையில் அதேநேரம் கொஞ்சம் ஓரமெல்லாம் கிழிந்த நிலையிலும் இருந்தது. மேலே ஹாப்பி பர்த்டே என்று இருந்த அந்த அட்டையைப் பிரித்து பார்த்த நொடி வெங்கட் ஸ்தம்பித்து நின்றுவிட்டான். அதில் அவனுடைய தற்போதைய வரைப்படம் இருந்தது. அதுவும் மிக தத்ரூபமான பென்சில் ஸ்கெட்ச். அன்று மாயா வரைந்து கொடுத்தது போலவே. கீழே ஐ லவ் யூ வெங்கி என்ற வாசகம் எழுதப்பட்டிருந்தது. அதுவும் அச்சு அசல் மாயாவின் கையெழுத்துப் போலவே… ஏற்கனவே அவள் ஒரு முறை அவன் புத்தகத்தின் பின்னே எழுதிய போது இதே போலதான் எழுதிக் கொடுத்தாள். வெங்கியில் இருக்கும் ‘வீ’ வளைவாக நீண்டு சுழன்றிருக்கும். அவள் மட்டுமே அப்படி எழுதுவாள். வேறு யாரும் அந்த வகையில் எழுதி அவன் பார்த்ததே இல்லை. ஸ்ரீ சொன்ன ஆத்மா கதைகளை அவன் இப்போது வரை நம்பவில்லை. இது எப்படி சாத்தியமாகும். அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை. குழப்பமாக இருந்தது.

Cancel “தூரமில்லை விடியல்” என்னுடைய புத்தம் புது தொடர் துவங்கப்பட்டுள்ளது. வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா