மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumMembersActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumMonisha Completed novels: Vilakilla Vithigal AVANVilakilla Vithigal Avan - E 50Post ReplyPost Reply: Vilakilla Vithigal Avan - E 50

Quote from monisha on August 14, 2023, 12:20 PM

50
பௌர்ணமி இரவு. நிலவின் உயரத்தை எட்டி பிடிக்குமளவுக்கான கடலலைகளின் ஆக்ரோஷம். உயர எழும்பி கொந்தளிக்கும் கடலுக்கும் மஞ்சளும் சிவப்புமாய் ஜொலிக்கும் அந்த முழு நிலவுக்கும் இடையில் ஏதோ ஓர் ஈர்ப்பு சக்தி இருக்கிறது. உணர்வுகள் பொங்கும் போது தூரங்கள் எல்லாம் ஒரு பொருட்டே இல்லை என்பதற்கான எடுத்துக்காட்டு… நிலவுக்கும் கடலுக்குமான ஆழமான தொடர்பு.  பாரதியின் செவிகளைத் துளைத்துக் கொண்டு அந்த கடலலைகளின் பேரிரைச்சல்கள் கேட்டன. துரத்தி வந்த ஆட்களிடமிருந்து தப்பி வந்த பாரதி மாநகரத்தின் எல்லைப் பகுதியிலிருந்து இருளடர்ந்த சவுக்கு தோப்பிற்குள் பைக்கை விட்டான். படபடப்போடு நின்றவன் சற்றே ஆசுவாச நிலையை எட்டிய போது அலைகளின் சத்தம் அவனை இழுத்தது. அமைதியாக அந்த தோப்பிற்குள் நடந்தான். தன் தோளில் மாட்டியிருந்த பையினை திறந்து நந்தினி அவனுக்காகப் பரிசளிக்கத் தயாரித்திருந்த பொம்மையை வெளியே எடுத்தான்.  மெல்ல அதனை கீழே வைத்து பாடச் சொல்லிக் கேட்டான். அவன் மனதிற்கு அப்போது அமைதி தேவைப்பட்டது. அதில் பாடல் ஒலிக்க தொடங்கிய நொடி அவன் கண்களில் நீர் ஊற்றாகச் சுரக்கத் துவங்கியது. பாடியதென்னவோ அவன் குரல்தான். ஆனால் உணர்த்தியது அவளின் ஆழமான காதலை! மிக மோசமான தோல்விகள் வஞ்சங்களும் துரோகங்களும் அவனுக்குள்ளிருந்த இசை ஞானத்தை என்றோ கொன்று புதைத்து விட்டன. மனதில் இரத்தம் வடியும் போது குரலில் ஸ்வரங்களும் ராகங்களும் எங்கனம் தோன்றும். துப்பாக்கிக் குண்டு நந்தினியின் கழுத்தை துளைத்து இரத்தம் பீறிட்டு வெளிவந்த அந்த நொடி… “நந்தினி” என்றவன் அதிர, “பா… ர… ” என்றவள் குரல் மெல்லத் தேய்ந்து, அவள் தலை அவன் மடியில் துவண்டு சரிந்தது. “நந்தினிஈஈஈ” என்றவன் கத்தலும் கதறலும் அந்த காட்டின் ஒவ்வொரு மூலையிலும் எதிரொலித்த அதேநேரம் ஒரு பயங்கரமான புலியின் கர்ஜனை மிக நெருக்கமாகக் கேட்டது.  முகுந்தனும் அவனுடைய ஆட்களும் பதறியடித்து அச்சம் மேலிட அங்கிருந்து தப்பித்தால் போதுமென ஓடிவிட்டனர். பாரதி அவள் உடலைக் கட்டியணைத்துக் கொண்டு அழுதான்.  அந்த நொடி அவள் இதயத் துடிப்பை அவன் உணர நேர்ந்தது. அழுகையை நிறுத்திவிட்டு அமைதியாகக் கேட்டான். அத்தனை நேரமிருந்த வேதனையெல்லாம் மறைந்து போனது. அவள் துடிப்பு அவனுக்குள் நம்பிக்கையை விதைத்தது. ஆனால் அந்த நம்பிக்கை துளிர்விட்டு எழுவதற்குள் காலடி ஓசை ஒன்று அவனை நெருங்கி வர, அவனை அச்சம் தொற்றிக் கொண்டது.  அவர்களெல்லாம் சொன்னது போல புலிதான் அவர்களை நெருங்கி வருகிறதோ? தன் உயிரைப் பற்றி அவன் கவலைப்படவில்லை. நந்தினியை காப்பாற்ற வேண்டும். அவள் உயிர் பிழைக்க வேண்டும் என்று எண்ணினான். அப்போது அவன் தோளில் ஒரு கரம் பதிய, பதட்டத்தோடு யாரென்று நிமிர்ந்து பார்த்தான். லெனினும் விஜ்ஜுவும் நின்றிருந்தார்கள். அவனுக்கு அப்போதுதான் மூச்சே வந்தது. லெனின் நந்தினியின் நிலையை பார்த்து கண்ணீர் பெருக, “நான் நந்தினியை விட்டுட்டு போயிருக்கவே கூடாது… பெரிய தப்பு செஞ்சுட்டேன்” என்றான்.  அவர்கள் தப்பிக்க முயன்று பாதி தூரத்துக்கு மேல் சென்ற பிறகு ஈனஸ்வரத்தில் நந்தினியின் வலியால் கதறும் குரல் கேட்டது. உயிர் வேதனையில் அவள் குரலைக் கேட்ட நொடி அவனால் முன்னேறிச் செல்ல முடியவில்லை. மீண்டும் இருவரும் வந்த பாதையில் திரும்பினர். அவர்கள் வந்து சேர்வதற்குள் நிறைய விபரீதங்கள் நடந்தேறிவிட்டன. இரக்கமே இல்லாமல் நந்தினியை கொடூரமாக அடித்துக் காயப்படுத்தியிருந்தனர். முகுந்தன் துப்பாக்கியுடன் நின்றிருந்தான். சுற்றிலும் காவலர்கள். அவர்களைத் தாண்டி சென்று நந்தினியும் பாரதியையும் காப்பாற்றுவது இயலாத காரியம். ஒரு வேளை அப்படி ஏதாவது முயன்றால் அவர்கள் இருவரும் கூட முகுந்தனிடம் சிக்கி கொள்ள நேரிடும். அப்போதுதான் லெனின் மூளைக்குள் அந்த யோசனை உதித்தது. புலியைப் போல அவன் உறுமப் பழகியிருந்தான். அவனின் அந்த யுக்தி நன்றாகவே வேலை செய்தது. முகுந்தனின் ஆட்களை அச்சம் தொற்றி கொண்டது. ஆனாலும் முகுந்தன் நந்தினியை சுட்டுவிட்டான்.  என்ன முயன்றும் நந்தினியைக் காப்பாற்ற முடியவில்லை என்று லெனின் தவிப்போடு, “நான் அப்பவே சொன்னேன் இல்லடா… போக வேண்டாம்னு” என்று விஜ்ஜுவிடம் சொல்ல, “இல்ல அண்ணா… நான் இப்படி நடக்கும்னு நினைக்கல” என்று அவனும் வருந்தினான்.  “இப்போ நந்தினி நம்மல விட்டு” என்று லெனின் வேதனையோடு கண்ணீர் வடிக்கவும், “இல்ல இல்ல… நந்தினி உயிரோட இருக்கா? அவ… அவளோட இதய துடிப்பு எனக்கு கேட் … குது” என்று தவிப்போடு பாரதி அவர்களிடம் தெரிவித்தான். “நிஜமாவா?” விஜ்ஜு வியப்பாக, லெனின் தாமதிக்காமல் அவளுடைய நாடியைச் சோதித்தான். உயிர் இருந்தது. அவன் அந்த நொடியே பரபரப்பாக இயங்க துவங்கினான். நந்தினியை கூடாரத்திற்குத் தூக்கி வரச் செய்தான். அங்கே அறிவழகனுக்காக வைத்திருந்த சில மருத்துவ உபகரணங்கள் இருந்தன. உடனடியாக அவற்றைக் கொண்டு அவளுக்கு சிகிச்சை அளித்தான். நந்தினியின் கழுத்தில் பாய்ந்திருந்த குண்டை எடுப்பது அவனுக்கு உண்மையில் மிகவும் சிரமமாக இருந்த போதும் அவளை காப்பாற்றிவிட வேண்டுமென்ற உறுதி அவனைச் செய்ய வைத்தது. அவனால் அப்போதைக்கு என்ன முடியுமோ அதை செய்துவிட்டான். எனினும் அவள் கண் விழிக்கவில்லை. பாரதி தன் உயிரைப் பிடித்துக் கொண்டு நின்றான்.  “என்னால இதுக்கு மேல… ஒன்னும் பண்ண முடியல” என்று லெனின் தளர்ச்சியோடு கூற, “இல்ல… நந்தினிக்கு எதுவும் ஆக கூடாது… அவளுக்கு எதுவும் ஆகிட கூடாது… அவளை காப்பாத்தியே ஆகணும்…காப்பத்தணும்… என் உயிரை கொடுத்தாச்சும் காப்பத்தணும்” என்று பாரதி உணர்ச்சி பொங்கப் பேச, “இப்ப கொடுத்த ட்ரீட்மென்ட் போதாது பாரதி… உடனே நம்ம நந்தினி ஏதாவது ஹாஸ்பெட்டில் கூட்டிட்டு போகணும்… இல்லைனா” என்று லெனின் அடுத்த வார்த்தை சொல்லாமல் தயங்கி நிறுத்த, “கூட்டிட்டி போலாம்… எப்படியாவது கூட்டிட்டு போலாம்… நந்தினி உயிர் பிழைச்சா போதும்” என்றான். “இந்த காட்டை விட்டு வெளியே போறதே ஆபத்து… அதுவும் தமிழ்நாட்டு பார்டரை தாண்டினா அவ்வளவுதான்” என்று விஜ்ஜு கூற, “நம்ம கேரளாவுக்கு போயிடுவோம்” என்றான் லெனின். “அது ரொம்ப கஷ்டமாச்சே ண்ணா” என்று விஜ்ஜு சொல்ல, “இல்ல விஜ்ஜு… இந்தப்பக்கம் காட்டு வழியா போனா ஷார்ட்தான்… கேரளா பார்டர்குள்ள போயிடலாம்… ஆனா அதுலயும் ஒரு பிரச்சனை இருக்கு… கொஞ்சம் தூரம் போனா ஒரு மலை வரும்… அதுல ஏறி இறங்கணும்… ஆனா இந்த நிலைமையில் நந்தினியை தூக்கிட்டு” என்றவன் யோசிக்க,  “நான் நந்தினியை தூக்கிட்டு வரேன்… நம்ம போவோம்” என்றான் பாரதி. “இல்ல பாரதி… மலை மேல அவ்வளவு தூரமெல்லாம் தூக்கிட்டு” என்று லெனின் தயங்கிய போதும் பாரதி திடமாக கூறினான். “அதெல்லாம் என்னால முடியும்… நம்ம போகலாம்” “சரி… அப்போ இப்பவே கிளம்புனாதான்… நம்ம நைட்டுகுள்ள போக முடியும்… விஜ்ஜு நம்ம தேவைக்கான பொருள் தண்ணி எல்லாம் பேக் பண்ணி எடுத்துக்கோ” என்று லெனினும் விஜ்ஜுவும் உடனடியாக புறப்படுவதற்கான ஆயத்தங்களை செய்தனர். அவர்கள் மூவரும் காட்டுப் பகுதியில் நடக்க, நந்தினியை பாரதி தம் கரங்களில் தூக்கி கொண்டான். இதே போல ஒருமுறை அவள் மயங்கி விழுந்தது போல நடித்த போது அவன் அவளைத் தூக்கிக் கொண்டது நினைவு வந்தது. “ரொம்ப கற்பனை பண்ணிக்காதே… நீன்னு இல்ல… அந்த இடத்துல ஒரு பிச்சைக்காரி இருந்திருந்தாலும் நான் தூக்கி இருப்பேன்” என்றவன் அவளிடம் சொல்லவும், “உண்மைதான்… அந்த இடத்துல ஒரு பிச்சைக்காரி இருந்திருந்தாலும் நீ தூக்கி இருப்பதான்… ஆனாலும் கூட என்னை நீ தூக்கும் போது வெறும் இரக்கமும் பச்சாதாபமும் மட்டும் இருந்த மாதிரி தெரியலையே?!” என்றவள் சூசகமாகச் சொன்னதும் அவன் நினைவலைகளில் எழும்பின. கண்ணீர் அவன் பாதையை மறைத்தது. மேலே செல்ல முடியாமல் அப்படியே நின்றுவிட்டான். அன்று அவள் சொன்னது சத்தியமான வார்த்தை. வெறும் பச்சாதாபமும் இரக்க உணர்வும் மட்டுமே இல்லை. அவன் பழைய விஷயங்களை மறந்திருந்த போதும் அவனுடைய ஒவ்வொரு செல்களிலும் அவளுடைய ஞாபகங்கள் நிறைந்திருக்கின்றன என்பதற்கு சாட்சியாகத்தான் அன்று அவன் மனம் அந்தளவு அவளுக்காகத் துடித்தது. அவளுக்கு எதாவது ஆகிவிடுமோ என்று உள்ளுர அஞ்சியது. அவளுடன் தங்கிய அந்த மூன்று நாளில் எத்தனை எத்தனையோ மனத்தாங்கல்கள் இருந்த போதும் அவளை விட்டுச் செல்ல முடியாமல் ஏதோ ஒரு உணர்வு அவளுடன் அவனைப் பிணைத்து வைத்திருந்தது. கண்ணீரோடு அவள் முகம் பார்த்தவன், “உனக்கு எதுவும் ஆக கூடாது நந்தினி” என்று வேதனையோடு செல்ல, அவளிடம் எந்தவித அசைவுமில்லை. பாரதி பின்தங்கிவிட்டதைப் பார்த்த லெனின் அவனருகில் வந்து, “கை வலிக்குதா? நான் வேணா” என்று கேட்ட நொடி, பாரதி மறுப்பாகத் தலையசைத்தான். “இந்த நிமிஷத்தில இருந்து என் உயிர் போற வரைக்கும் நான் அவளை விட மாட்டேன்… எதுக்காகவும் யாருக்காகவும் அவளை விட்டு கொடுக்க மாட்டேன்… அந்த எமனே வந்தாலும் கூட” என்றவன் தீர்க்கமாகச் சொல்ல, லெனினால் அவன் உணர்வினை புரிந்து கொள்ள முடிந்தது. அதன் பிறகு அவர்கள் மலை மீது ஏற ஆரம்பிக்க, கொஞ்சம் தூரத்திலேயே விஜ்ஜு களைத்துவிட்டான். அவன் கால்கள் கெஞ்ச தொடங்கின. லெனினுக்கு பழக்கம்தான் எனினும் அவனுக்கும் உடல் வியர்த்துக் கொட்டி களைப்பு ஏற்பட்டது. ஆனால் நந்தினியை தூக்கிக் கொண்டு நடந்த பாரதியிடம் எந்தவித களைப்புணர்வும் இல்லாதது இருவருக்குமே ஆச்சரியமாக இருந்தது. உடல் வேதனையை விட அவன் மனவேதனை பெரிதாக இருந்தது. அவளை எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டுமென்ற உணர்வைத் தாண்டி வேறெந்த உணர்வும் அவனிடம் இல்லை. எப்படியோ முட்டி மோதி மலையின் உச்சியை அடைந்துவிட்டனர். ஆனால் அதற்கு மேல் நடப்பதற்கான தெம்பு மூவருக்குமே இல்லை. அங்கே அவர்கள் இளைப்பாறச் சற்று அமர, லெனின் நந்தினியின் உடல் நிலையைச் சோதித்துப் பார்த்தான். “பல்ஸ் ரொம்ப குறைஞ்சிட்டு வருது” என்றவன் பதட்டத்தோடு சொல்ல, “இப்போ என்ன பண்றது?” என்று பாரதியும் பரபரப்பாகக் கேட்டான். அவர்களுக்கு என்ன செய்வது என்று ஒன்றும் விளங்கவில்லை. ஆனால் விதி அவர்களுக்கு சாதகமாக இருந்தது. அங்கு தங்கியிருந்த மலை வாசிகள் சிலரின் உதவி கிட்டியது. அவர்களில் ஒருவன் லெனினுக்கு முன்னமே தெரிந்தவன். அந்த மலைவாசிகள் அவர்களுக்குத் தெரிந்த வைத்தியம் பார்த்தனர். நந்தினியின் காயங்களுக்கு சில மூலிகை பச்சிலை மருந்துகளை பறித்து வந்து போட்டுவிட்டனர். ஏதோ ஒரு சக்தி அவள் உயிரைத் திடமாக பிடித்து வைத்திருந்தது. “மலைக்கு கீழே ஒரு சாமி ஆசிரமம் இருக்குங்க… அவர் மலையாளிதான்… அவர்கிட்ட வைத்தியம் பார்த்தா குணமாகாத நோயும் குணமாகிடுமாம்” என்றவர்கள் சொல்லி அந்த ஆசிரமத்திற்கு அவர்களுக்கு வழி காட்டினர். நந்தினியை அந்த ஆசிரமத்திற்குக் கொண்டு சென்றனர். அங்கே அவளுக்கு ஆயுர்வேத முறையில் சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. கிட்டத்தட்ட ஆறு மாதம் போராடி அவள் உடல் நிலையை மீட்க முடிந்த அவர்களால் அவள் மனநிலையை… இயல்பாக நடக்கவும் உட்காரவும் முடிந்தவளால் உணர்ச்சிகளை வெளிப்படுத்த முடியவில்லை. அழுகை கோபம் காதல் என்ற எந்த உணர்வும் இல்லாத மரக்கட்டை போல அவள் நடந்து கொண்டாள். கிட்டத்தட்டச் சாவி கொடுத்தால் ஆடும் பொம்மை போலத்தான் இருந்தாள். உணவு ஊட்டிவிட்டாள் சாப்பிடுவாள். படுக்க வைத்தாள் உறங்குவாள். என்ன ஒன்று? அந்த பொம்மைக்கு உயிர் இருக்கிறது.  எத்தனையோ சிகிச்சை முறைகளில் அவளை குணப்படுத்த லெனினும் பாரதியும் முயன்று பார்த்தனர். ஆனால் அவர்கள் முயற்சி அனைத்தும் தோல்வியில்தான் முடிந்தன. நாட்கள் மாதங்களாகவும் மாதங்கள் வருடங்களாகவும் உருண்டோடிவிட்டன. ஆனால் அவளின் மனநிலையில் எவ்வித முன்னேற்றமும் இல்லை. நந்தினி பாரதியிடம் தன் காதலைச் சொல்ல நினைத்த போதெல்லாம் சூழ்நிலை அவளுக்கு சாதகமாக இல்லை. தற்சமயம் அவள் உயிருக்கு உயிரான காதலன் உடனிருக்கிறான். அவள் காதலை புரிந்து கொண்டிருக்கிறான். அவளைக் கண்ணும் கருத்துமாகக் கவனித்துக் கொண்டிருக்கிறான். ஆனால் இத்தகைய சமயத்தில் அவள் காதலே அவளுக்கு நினைவில் இல்லை என்பதுதான் வேதனைக்குரிய விஷயம்! அவளுடைய தவிப்பும் ஏக்கமும் இப்போது அவனுடையதாக இடமாறியிருந்தது. எப்போது அவள் தன்னை உணர்ந்து கொள்வாள். எப்போது அவள் பாரதி என்று தன்னை அழைப்பாள் என அவன் ஒவ்வொரு விநாடியும் ஏக்கத்துடன் காத்திருக்கிறான். அவள் நிலைமையைக் கண்டு தினம் தினம் குற்றவுணர்வால் வெந்து சாகிறான். “நான் உன் காதலையும் காப்பத்தல… உன்னையும் காப்பத்தல… நீ எனக்காக செஞ்சதுல ஒரே ஒரு பங்கு கூட நான் உனக்காக எதுவுமே செய்யல… உன் அன்பையும் புனிதமான காதலையும் நான் புரிஞ்சிக்கல… அதான் நீ ஒட்டுமொத்தமா என்னை இந்த உலகத்தை எல்லாத்தையும் மறந்துட்டியா நந்தினி?” அவன் உணர்ச்சி பொங்கக் கத்தினாலும் கதறினாலும் அழுதாலும் கூட அவளிடமிருந்து எந்தவித உணர்வையுமே அவனால் வெளி கொண்டு வரமுடியவில்லை. கடலின் ஆழத்தையும் விடவும் அதீத ஆழமான அமைதி அவளிடம். பாரதி மெல்ல தன் நினைவிலிருந்து மீண்டு வந்தான். பாடிக் கொண்டிருக்கும் அந்த பொம்மையைப் பார்த்தவனுக்கு என்றோ எப்போதோ அவன் பாடிய பாடல்களை எல்லாம் அவள் சேகரித்து வைத்திருப்பது அவனுக்கு வியப்பைக்கூட்டியது.  அவள் காதலை எண்ணுகையில் அவன் மனம் தாளமுடியாத துயரில் ஆழ்ந்தது. கண்களில் தாரை தாரையாகக் கண்ணீர் கொட்டியது. ஏக்கமாய் பெரு மூச்செறிந்தான். ‘என்று அவள் மீண்டு வருவாள்?’ என்ற அவன் தவிப்பும் துடிப்பும் வருடங்கள் செல்ல செல்ல, ‘என்றாவது ஒரு நாள் அவள் மீண்டு வருவாளா?’ என்ற ஏக்கமாக மாறியிருந்தது. அவள் நிச்சயம் மீண்டு வருவாள். ஆனால் எப்போது என்ற கேள்விக்கான பதில் விதியிடம்தான் இருக்கிறது.

Cancel “தூரமில்லை விடியல்” என்னுடைய புத்தம் புது தொடர் துவங்கப்பட்டுள்ளது. வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா