மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumMembersActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumMonisha Completed novels: Kalyanam@Kalyanam@ - Pre Final EpisodePost ReplyPost Reply: Kalyanam@ - Pre Final Episode

Quote from monisha on January 18, 2024, 10:15 PM

16

ஆனந்தனின் கார் அசுரத்தனமான வேகத்துடன் அந்தக் கிழக்குக் கடற்கரை சாலையில் பறந்தது. எங்கயாவது முட்டி வாழ்க்கையை முடித்துக் கொள்ளலாம் என்று கூடத் தோன்றியது.

அப்போது எதிர் சாலையில் ஒரு அழகான தம்பதிகளும் அவர்களின் கைகளில் ஒரு பெண் குழந்தையும் இருந்தது. காரை மரத்தின் ஓரமாக நிறுத்திவிட்டு அந்தக் குழந்தைக்கு விளையாட்டுக் காட்டி உணவு ஊட்டிக் கொண்டிருந்த அவர்களைப் பார்த்தப் பின் அவன் காரின் வேகம் சடாரென்று குறைந்துவிட்டது.

ரெஜினா கருத்தரித்திருப்பதை நினைத்துப் பார்த்தான். தங்கள் உறவின் ஆதாரமாக ஓர் உயிர் ஜனித்திருப்பதை எண்ணிப் பார்த்தான். அந்த நொடி தன் குழந்தைக்குத் தான் வேண்டுமென்று தோன்றியது.

மற்றபடி ரெஜினா கருவைக் கலைக்கப் போகிறேன் என்று சொன்னதெல்லாம் வெறும் அப்போதைய கோபத்திலும் ஆதங்கத்திலும்தான் என்று அவனுக்கு நன்றாகத் தெரியும்.

தன்னுடைய நட்பாகப் பழகிய மனிதர்களையே அத்தனை சீக்கிரத்தில் அவள் விட்டுக் கொடுக்கத் துணியாத போது தன் வயிற்றில் வளரும் தன்னுடைய உயிரை அழித்து விடுவாளா என்ன? மாட்டாள். அவள் அப்படி செய்ய மாட்டாள். அவளால் அப்படி செய்ய முடியாது.

காரை அந்தக் கடற்கரை ஓரமாக இருந்த சாலையில் நிறுத்திவிட்டான். ஸ்டியரிங் மீது அப்படியே தலை சாய்த்துப் படுத்துக் கொண்டான்.

ரெஜினாவின் கோபத்திற்குப் பதில் கோபம் காட்டுவது கூட நியாயம் இல்லை என்றுதான் அவனுக்குப்பட்டது. அவன் ஒரு முறை கூட மதிக்காக நின்றதில்லை. மதிக்காக பேசியதில்லை. அவனுமே மதியை நிறைய காயப்படுத்தி இருக்கிறான்.

பதின்ம வயதைக் கடக்க கடக்க ஆண்மையும் திமிரும் கொஞ்சம் கொஞ்சமாக அவன் உடலில் மட்டும் இல்லை. மண்டைக்கும் ஏறி இருந்த சமயம்.

படிப்பு மட்டும் இல்லை விளையாட்டிலும் முதன்மையாக இருக்க வேண்டுமென்ற பிடிவாதம். அவனுடைய ஒவ்வொரு வெற்றிகளுக்கும் கிடைத்த புகழ். அந்தப் புகழ் மூலமாக எப்போதும் அவனைச் சுற்றி இருக்கும் மாணவ கூட்டங்கள்.

எந்தப் போட்டி என்றாலும் அவனை முதலில் தேடி வரும் ஆசிரியர்கள். பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் போது அவனுக்கு என்று ஒரு தனி குழு. அவனைச் சுற்றி அவனுக்காகவே இயங்கும் குழு. அதே போல அறிவியல் க்ரூப்பில் அவனுக்கு எதிராக இயங்கும் மற்றொரு குழு.

அந்த குழு எப்போதும் அவனை அவமானப்படுத்துவதற்கு பயன்படுத்தும் ஒற்றை வார்த்தை மதி.

அதே பள்ளியில் மதி அப்போது ஒன்பதாம் வகுப்பு படித்திருந்தான். அந்தச் சமயத்திலேயே மதியின் நடை, பேச்சு, தோரணை அத்தனையும் ஒரு பெண்ணைப் போலத்தான் இருக்கும்.

“ஏய் அங்க பாரு… உன் தங்கச்சி மதியழகி போறா?” என்று எள்ளல் செய்து வேண்டுமென்றே அவனுடைய எதிர் குழுவினர் கடுப்பேற்றுவார்கள்.

“அடிங்க… உங்களை” என்று ஆனந்தன் அவர்களை அடிக்கப் பாய்ந்துவிடுவான்.

ஆனால் பல நேரங்களில் அவனுடைய கோபம் மதியழகன் மீதுதான்.

“ஒழுங்கா நட, ஒழுங்கா இருன்னு எத்தன தடவ சொல்லி இருப்பேன்… எல்லோரும் உன்னால என்னைக் கிண்டல் பண்றாங்க… தலையெழுத்து”

“அதுவும் அவன் மதியழகினு கூப்பிட்டு கிண்டல் பண்றான்… நீ என்னடானா அப்படியே எருமாடு மாதிரி நிற்குற… உன்னை எல்லாம் வைச்சுக்கிட்டு”

“மவனே என் கிளாஸ் பக்கம் உன்னைப் பார்த்தேன்… அவ்வளவுதான்… உன்னால என்னைக் கிண்டல் பண்ணி சாவடிக்கிறானுங்க” என்று அவன் என்ன திட்டினாலும் மதி எதிர்த்துக் கோபப்படவோ, ஏன் பேசவோ கூட மாட்டான்.

பயந்து ஒடுங்கிப் போய் நின்றிருப்பான். அவன் அப்படி இருப்பது கூட ஆனந்தனுக்கு எரிச்சலாக வரும்.

சில நேரங்களில் அவனுடைய கடுப்பு அளவுக்கு அதிகமாக போகும் போது தன் தந்தையிடம் போய், “பா அவன் நடந்துக்கிறதும் பேசறது ஒண்ணுமே நல்லா இல்ல… எல்லோரும்… **** கேட்குறாங்க… எனக்கு அவமானமா இருக்குபா” என்று போட்டுக் கொடுத்து குரூரமாக அவனை அடி வாங்க வைத்திருக்கிறான்.

“ஒழுங்கா நட… தைரியமா பேசுன்னு… எத்தனை தடவ சொல்லி இருக்கேன்” என்று ஈஸ்வரனும் மதியைச் சகட்டு மேனிக்கு அடி வெளுத்து வாங்குவார். அப்போதும் மதியால் தன்னை மாற்றிக் கொள்ள முடியவில்லை.

இந்த நிலையில் ஆனந்தன் பள்ளி படிப்பை முடித்துவிட்டு மேற்படிப்பிற்குக் கல்லூரிக்குச் சென்றான். ஆனால் அவனைப் பெரிதாகச் செலவு செய்து படிக்க வைப்பதில் அவனுடைய தந்தைக்குப் பொருளாதார ரீதியாக நிறைய சிரமங்கள் இருந்தன.

அப்போதுதான் அவனுக்கு ஜஸ்டின் கல்லூரியில் படிப்புக்கான உதவிகள் கிடைத்தன. அவன் ஒரு வழியாக கல்லூரியில் சேர்ந்தப் பிறகு மதியைப் பற்றிய கவலை அவனுக்குக் குறைந்திருந்தது.

யாரும் அவனை மதியை வைத்துக் கிண்டல் செய்வதில்லை. தனக்கு மதி என்ற தம்பி இருப்பதைக் கூட அவன் யாரிடமும் பகிர்ந்து கொண்டதில்லை. வீட்டில் கூட அதிகம் மதியிடம் பேசவோ பழகவோ கூட செய்ததில்லை.

விடுமுறை நாட்களில் கூட நண்பர்களுடன் விளையாட சென்றுவிடுவான். அதேநேரம் தன் வயது இளைஞர்கள் நவீன இரக இருச் சக்கர வானகங்களில் வரும் போதெல்லாம் அவனுக்குப் பொறாமை தீ உள்ளூர பற்றிக் கொண்டு எரியும்.

ஆனால் தன் வீட்டின் நிலைமையும் தன் தந்தையின் சம்பளமும் எந்தவிதத்திலும் அவன் கனவுக்குத் தீனி போடாது என்று தெரிந்து வைத்திருந்த ஆனந்தன் நன்காகப் படித்ததும் ஜஸ்டினிடம் வேலைக்குச் சேர்ந்ததும் சாதாரணமாக நடந்த விஷயமில்லை. அதற்குப் பின்னணியில் அவனுடைய வெறித்தனமான உழைப்பு இருந்தது.

அங்கே அவனுக்கு நல்ல சம்பளமும் கிடைத்தது. வாழ்க்கை ஒரு மாதிரி சுமுகமாகப் பயணித்துக் கொண்டிருந்த சமயத்தில்தான் மதியைப் பற்றிய உண்மை வீட்டில் தெரிய வந்தது.

அதுவும் விடுதியில் தங்கிப் பொறியியல் படித்து கொண்டிருந்தவனுக்கு உடனிருந்த மாணவர்களால் ஏற்பட்ட பாலியல் சீண்டலைப் பற்றி வீட்டில் சொல்லி முறையிட்ட போது தந்தையை விட அதிகமாக அசூயை நிலையை அடைந்தது ஆனந்தன்தான்.

“நீ இப்படி பொம்பள மாதிரி நடந்துக்கிட்டா அப்படிதான்டா பண்ணுவானுங்க… கொஞ்சமாச்சும் கெத்தா இருக்கணும்” என்று தம்பியிடம் எரிச்சலுடன் பேச,

“அண்ணா நீயாச்சும் என்னைப் புரிஞ்சிக்க ட்ரை பண்ணு ண்ணா… நான் வேணும்டே அப்படி எல்லாம் நடந்துக்குறது இல்ல… என் உடம்போட ஹார்மோன் சேஞ்சஸ்தான் காரணம்” என்று அவன் தன் நிலைமையைப் புரிய வைக்க முயல,

“என்னடா புரிஞ்சுக்கணும்… என்ன புரிஞ்சுக்கணும்” என்று மூர்க்கமாக அவனை அடித்த ஈஸ்வரன்,

“முதல ஒரு ஆம்பள மாதிரி நடக்கக் கத்துக்கோ, பேச கத்துக்கோ… பாரு உங்க அண்ணனைப் பாரு… எப்படி கம்பீரமா இருக்கான் பாரு.” என்று சுட்டிகாட்டிய கணம் மதி ஆவேசமாகக் கத்திவிட்டான்.

“ஐயோ அப்பா… என்னால நீங்க சொல்ற மாதிரி இருக்க முடியாது… அண்ணன் வேற நான் வேற… அண்ணன் உடம்பு வேற… என் உடம்பு வேற” என்றவன் அதுதான் முதல் முறை அத்தனை ஆங்காரமாகப் பேசியது.

எல்லோரும் அதிர்ச்சியுடன் பார்த்திருக்க ஈஸ்வரன் சீற்றமாகி, “ஏன் டா இருக்க முடியாது… ஏன் இருக்க முடியாது” என்று கேட்டுக் கொண்டே மூர்க்கமாகத் தாக்க வரவும் பானுமதியும் ஆனந்தனும் அவரைத் தடுத்துப் பிடித்தனர்.

அப்போது பானுமதி மெல்லிய குரலில், “அப்பா சொல்றதைப் புரிஞ்சிக்கோடா… அப்புறம் உனக்குத்தான்டா கஷ்டம்” என,

“ஏன் நானே உங்களையே புரிஞ்சிக்கணும்னு நினைக்குறீங்க… ஏன் யாரும் என்னைப் புரிஞ்சிக்க மாட்டுறீங்க… என் வலியை வேதனையை யாரும் புரிஞ்சிக்க மாட்டுறீங்க.. என்னால ஒரு ஆம்பள மாதிரி இருக்க முடியாதுனு சொன்னா ஏன் உங்க யாருக்கும் புரிய மாட்டேங்குது” என்று அவன் இறுதியாக முகத்தை மூடி அழுது கொண்டே சொல்லி முடிக்க எல்லோரும் அவனை விசித்திரமாகப் பார்த்தனர்.

“என்னடா பேசுற நீ?” என்று கேட்டு ஈஸ்வரன் மதியைத் தீவிரமாகப் பார்க்க அவன் பயந்து பின்னோடு விலகி கொண்டே,

“உடம்பாலதான் நான் ஆம்பளையா இருக்கேன்… என் மனசு யோசனை ஆசை விருப்பம் எதுவும் அப்படி இல்லபா… என்னைப் பொறுத்த வரைக்கும் நான் ஆம்பளையே இல்ல” என்றதும் எல்லோரும் அதிர்ந்து நின்றுவிட்டனர். .

ஆனந்தன் அப்போது, “என்ன உளறிட்டு இருக்க பைத்தியமாட்டம்… உடம்பு என்னவா இருக்கோ அதுதான்டா நீ… ” என,

“அப்படி பார்த்தா உடம்புன்றது வெளியே இருக்க உறுப்பு மட்டும் இல்ல… உள்ளே இருக்க ஹார்மோன்ஸ்தான்… அதுதான் நமக்கு எல்லா உணர்வையும் கொடுக்குது… சிரிக்க வைக்குது அழ வைக்குது… பிடிச்ச பொண்ண இரசிக்க வைக்குது.”

”நீ இவ்வளவு கெத்தா ஆம்பிளத்தனதோட சுத்துறதுக்குக் காரணம் உன் ஹார்மோன்ஸ்தான் அண்ணா… நான் இப்படி ஏடாகுடமா இருக்கிறதுக்கும் காரணமும் என் ஹார்மோன்ஸ்தான் அண்ணா… கொஞ்சம் புரி…” என்று பேசி கொண்டிருக்கும் போதே,

“அப்போ நீ ஒரு ****** சொல்லு” என்று ஈஸ்வரன் அவனைப் பளாரென்று அறைய அவன் தரையில் விழுந்தான்.

“ஐயோ என்னங்க நீங்க… இப்படி எல்லாம் பேசுறீங்க… மதி அப்படி எல்லாம் இல்லீங்க” என்று பானுமதி அழுதார்.

“அப்படி இல்லன்னு உன் பையனைச் சொல்லச் சொல்லு பார்ப்போம்” என்று ஈஸ்வரன் கூற,

“யார் ஒத்துக்கிட்டாலும் ஒத்துக்காட்டியும் நான் அப்படிதான்” என்று மதியே ஒப்புக் கொண்டதில் எல்லோரும் ஷாக்கடித்ததுப் போல நின்றுவிட,

“சை… நீ இப்படி ஒரு அசிங்கப்பிடிச்ச பிறப்புன்னு தெரிஞ்சு இருந்தா பிறந்த உடனவே உன்னைக் கொன்னு இருப்பேன்” என்று இழிவாகப் பேசியவர்,

“உன்னை மாதிரி அசிங்கத்தை எல்லாம் வீட்டுல வைச்சு இருந்தா எனக்குதான் அவமானம்… இனிமே ஒரு நிமிஷம் கூட இந்த வீட்டுல நீ இருக்கக் கூடாது… போடா வெளியே.” என்று மதியின் கழுத்தைப் பிடித்துத் தரதரவென்று இழுத்து வெளியே தள்ளிவிட்டார்.

பானுமதி அழுதார். கதறினார். ஆனால் அதற்கு மேல் அவராலும் ஒன்றும் செய்ய முடியவில்லை.

“அவனை மாதிரி அசிங்கத்தை வீட்டுல வைச்சு இருந்தா இந்த இரண்டு புள்ளைங்களோட வாழ்க்கையும் சேர்த்து நாசமா போவும்” என்று சொல்லி பானுமதியைக் கட்டுப்படுத்திவிட்டார்.

வினோ அழுது கொண்டே படுத்திருந்தாள். ஆனால் ஆனந்தன் அழவில்லை. மதி வீட்டை விட்டு வெளியே அனுப்பியது தவறில்லை என்றுதான் அவனுடைய மனமும் சொன்னது. அவன் வீட்டில் இருந்தால் தனக்கும் சேர்த்துதான் அசிங்கம் என்றுதான் நினைத்தான்.

அடுத்த நாள் காலையிலிருந்து மழைக் கொட்டித் தீர்த்தது. ஊரே வெள்ளக்காடாக மாறி இருந்தது. இந்த மழையில் எங்கே மாட்டிக் கொண்டிருப்பான் என்று அம்மாவின் புலம்பல் அவன் மனதையும் அசைத்துப் பார்த்தது.

ஏதோ குற்றவுணர்வும் குறுகுறுப்பும் உள்ளூர தம்பியின் நிலையைப் பற்றி யோசிக்க சொன்னாலும் அவன் அதைச் செய்யவில்லை. தன் வேலை உண்டு தான் உண்டு என்றுதான் இருந்தான்.

மதியைப் பற்றி நினைக்கக் கூட அவன் மறந்திருந்த நிலையில்தான் ஒரு நாள் அலுவலக வேலையாக அவன் இரயிலில் பயணித்துக் கொண்டிருந்த போது பிச்சைக் கேட்டு வந்து நின்ற திருநங்கை ஒருவரைப் பார்த்தான்.

சடாரென்று அவனுக்குத் தம்பியின் நினைவு வந்தது. தம்பியும் இப்படித்தான் எங்கேயோ பிச்சை எடுத்துக் கொண்டிருப்பானோ என்று தோன்றிய எண்ணத்தை அவனால் தவிர்க்கவே முடியவில்லை.

அவன் கையிலிருந்து நூறு ரூபாய் நோட்டைத் தூக்கிக் கொடுத்துவிட்டான்.

“என்ன சார் இதுங்களுக்கு போய் நூறு ரூபாவைத் தூக்கிக் கொடுக்குறீங்க” என்று அருகே அமர்ந்திருந்தவர் கேட்க,

அப்போது அந்தத் திருநங்கை, “ஏன்… கொடுத்தா என்ன? உங்களுக்குக் கொடுக்க மனசு வரலைனா விடுங்க… அடுத்தவங்க கொடுக்கிறதை ஏன் கெடுக்குறீங்க” என்று சற்றே குரலை உயர்த்த,

“பார்த்தீங்க இல்ல… எவ்வளவு திமிரா பேசுதுனு“ என்றதும்,

“அது என்ன சார் நான் மரியாதை கொடுத்துதானே பேசுறேன்… நீங்க மட்டும் ஏன் சார் அது இதுங்கிறீங்க… நாங்க என்ன உங்க புழைப்புல மண்ணள்ளிப் போட்டோமா என்ன?”

”பிச்சை எடுத்து வயித்துக் கழுவினுக்கிறோம்… நாங்க என்ன விருப்பப்பட்டா அதைக் கூட செய்றோம்.. எங்க மூஞ்சிய பார்த்தாலே எவனும் வேலைக் கொடுக்க மாட்டுறான்.. வூடு கொடுக்க மாட்டுறான்.”

”வூடு இன்னா சார் ஒதுங்க கூட இடங்கொடுக்க மாட்டுறான்… தெரு நாயை விட மோசமா துரத்துராய்ங்க… உன்கிட்ட இதெல்லாம் புலம்பி என்ன பிரயோசனம். சொந்த வூட்டுலயே அடிச்சுத் துரத்திட்டாய்ங்க… மத்த யாரு நமக்கு பாவம் பார்க்கப் போறா… ஏதோ நல்ல மனசோட இந்த மனுஷன் நூறு ரூபாயைத் தூக்கிக் கொடுத்துட்டாரு…”

”இன்னைக்கு இத வைச்சுதான் எங்கக் கூட்டத்துல இருக்க மொத்த பேரும் சாப்பிடணும்… தெரியுமா?” என்று கைகளை அசைத்து நளினமாகப் பேசிக் கொண்டே அந்த நூறு ரூபாய் உள்ளே நுழைத்துக் கொண்டவள் திரும்பி ஆனந்தனிடம், “உன் நல்ல மனசுக்கு நீ நல்லா இருப்ப சார்” என்று விட்டுச் சென்றாள்.

அந்தத் திருநங்கை பேசிய ஒவ்வொரு வார்த்தையும் அவன் நெஞ்சை அறுத்தது. கடைசியாக அவர் செய்த ஆசீர்வாதத்தில் அவன் மொத்தமாக நொறுங்கிப் போய்விட்டான்.

ஒரு வார்த்தை வெல்லும். ஒரு வார்த்தை கொல்லும் என்பார்கள். அந்த ஆசீர்வாதம் அவனுக்குள் இருந்த கர்வம் பிடித்த ஆனந்தனைக் கொன்று போட்டது.

அன்றிலிருந்து மதியை எப்படியாவது தேடிக் கண்டுபிடிக்க வேண்டுமென்று அலைந்து திரிந்தான். காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தான். தாமதமாகக் கொடுத்த அந்த மனுவிற்குப் பெரிதாக மதிப்பில்லை.

சாலையோரத்தில் யாராவது திருநங்கைகள் செல்வதைப் பார்த்தால் அவர்களிடம் சென்று மதியைப் பற்றி விசாரிப்பான்.

ஆனால் எங்கேயும் மதி கிடைக்கவில்லை. அவனுக்கு ஏமாற்றம் மட்டுமே மிச்சமாக இருந்தது. மதி ஒரு வேளை இறந்து போயிருப்பானோ என்று ஆனந்த் நம்பிக்கை இழந்த போதுதான் ஜஸ்டின் வீட்டில் மதி வேலைக்குச் சேர்ந்திருப்பதைப் பார்த்து ஆச்சரியமுற்றான்.

அவன் ஆவலாக மதியிடம் பேசச் சென்ற போது, “நீங்க யாரு… எனக்குத் தெரியல” என்று முகத்தைத் திருப்பிக் கொண்டு போய்விட்டாள்.

மீண்டும் ஒரு முறை தேடிச் சென்று பேச முயற்சித்த போது, “உங்களுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்?” என்று விட்டேற்றியாகக் கேட்க,

“மதி…நான் தப்பு செஞ்சுட்டேன் மதி… நான் இப்போ உன்னைப் புரிஞ்சிக்கிட்டேன்” என்று கெஞ்சினான் ஆனந்தன்.

“புரிஞ்சிக்கிட்டு?” என்றவள் எகத்தாளமாகக் கேட்க,

“மதி” என்று ஆனந்த் அவனைக் கெஞ்சலாகப் பார்க்க,

“என்னை ப்ளீஸ் விட்டிருங்க… நான் இப்பத்தான் நிம்மதியா இருக்கேன்… என்னை நல்லா புரிஞ்சிக்கிட்டவங்க கூட இருக்கேன்… என்னைப் பார்த்து அவமானப்படாதவங்க கூட இருக்கேன்.”

”உண்மையைச் சொல்லணும்னா கொஞ்சம் சந்தோஷமாவும் இருக்கேன்… அதை எந்த வகையிலும் கெடுத்துடாதீங்க” என்றவள் மேலும்,

“நீங்க ஜஸ்டின் சார்கிட்ட வேலைப் பார்க்கிற மாதிரி நானும் அவர்கிட்ட வேலைப் பார்க்கிறேன்… அவ்வளவுதான் நமக்குள்ள இருக்க இப்போதைய உறவு” என்று முடித்துவிட்டாள்.

அவள் வார்த்தையில் இருந்த கோபம் கண்களில் இல்லை. அதில் வேதனையும் வலியும்தான் எஞ்சி இருந்தன.

என்னதான் மதி விலகி நின்றாலும் ஆனந்தன் அவனுக்குக் கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்டு அவளிடம் பேச முனைந்தான். மன்னிப்புக் கேட்டான்.

“என்னை மாதிரி ஈனப்பிறவிங்ககிட்ட எல்லாம் மன்னிப்பு கேட்டு உங்க தகுதியைக் குறைச்சுக்காதீங்க” என்று நாளுக்கு நாள் மதியின் விலகல் அதிகமாகிக் கொண்டே இருந்தது.

“ஏன் மதி இப்படி பண்ற…? என்னை நீ மன்னிக்கவே மாட்டியா…? உன்னை நான் எங்கெல்லாம் தேடுனேன் தெரியுமா?” என்றதும்,

அவனை நேராகப் பார்த்தவள், “அப்பா என்னை வீட்டுல இருந்து துரத்தி அடிச்ச பிறகு… எங்கங்கேயோ அடிப்பட்டு மிதிப்பட்டுத் திரும்பி அப்பா என்னைச் சேர்த்துப்பாரானு வீட்டுக்கு வந்தா அவரு என்னை நாயை விரட்டுற மாதிரி விரட்டிட்டாரு.”

”செலவுக்கு உன்கிட்ட காசு கேட்கலாம்னு உன்னைய தேடி வந்த போது நீ ஃப்ரண்ட்ஸ் கூட கிரவுண்டுல ஆர்ப்பாட்டமா விளையாடிட்டு ரொம்ப சந்தோஷா இருந்த… உன் கூட புறந்த ஒருத்தன் என்ன ஆனானு கூட நீ யோசிச்ச மாதிரி தெரியல.”

”அந்த நிமிஷம் உன்கிட்ட காசு கேட்குறதுக்குப் பிச்சை எடுத்தாச்சும் பிழைக்கலாம்னு தோனுச்சு… கிளம்பிப் போயிட்டேன்” என்று சொல்லி முடிக்கும் போது ஆனந்தன் கண்களில் கண்ணீர் திரண்டது.

“மதி என்னை மன்னிச்சிடு.. அந்தச் சமயத்துல உன்னை அப்பா வீட்டை விட்டுத் துரத்தனது சரியா தப்பான்னு நான் புரிஞ்சிக்கிற நிலைமைல கூட இல்ல” என்று அவன் தன் மனநிலையைப் புரிய வைக்க முயல,

“நான் மன்னிக்கிறதுனால உனக்கு என்ன கிடைக்க போகுது… என்னை விட்டுடு ப்ளீஸ்… நீ யாரோ நான் யாரோன்னு இருந்துட்டுப் போவோம்” என்று விட்டுச் சென்றாள்.

என்னதான் அவன் தேடி வந்து பேசினாலும் மதி இறங்கியே வராத நிலையில் ஒரு நாள் ஆனந்தனின் எண்ணிற்கு மதியிடமிருந்து அழைப்பு வந்திருந்தது,

“உன்கிட்ட கொஞ்சம் பேசணும்” என்றவள் கூறி,

“நான் பஸ் ஸ்டான்ட்ல நிற்குறேன்… என்னை வந்து பிக் அப் பண்ணிக்குறியா?” என்று அவளாகவே கேட்டாள்.

“இதோ வந்துட்டேன்… கிளம்பிட்டேன்” என்று அரக்க பறக்க தன் காரை எடுத்துக் கொண்டு அவள் சொன்ன இடத்திற்கு வந்தான்.

மதி காரில் ஏறியதும் ஆனந்தன் சந்தோஷமாக, “என்னை மன்னிச்சிட்ட இல்ல மதி நீ??” என்று கேட்க,

“நான் பேச வந்தது அத பத்தி இல்ல”

“அப்புறம்?”

“ஜஸ்டின் சார் என்கிட்ட பேசும் போது நேத்து ஒரு விஷயம் சொன்னாரு”

“என்ன?”

“நீ அவர் மக ரெஜினாவைக் கல்யாணம் பண்ணிக்க சம்மதிப்பியானு கேட்க போறதா என்கிட்ட சொன்னாரு… அத பத்தி சஜஷன்ஸ் கேட்டாரு?” என்றதும் அதிர்ச்சியுடன் மதி புறம் திரும்பியவன்,

“யாரு அந்தச் சுருட்ட முடியவ…? அவளை எல்லாம் நான் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்… அவர் கேட்டா முடியாதுன்னு சொல்லிடுவேன்… இந்த வேலையே போனாலும் பரவாயில்லபா” என்றான்.

“ரெஜினா மேடமால நடக்க முடியாதுன்னு இப்படி பேசுறியா நீ?”

“நடக்க முடிஞ்சா கூட அவளை மாதிரி திமிரு பிடிச்ச ஒருத்தியை நான் கட்டிக்க ஒத்துக்க மாட்டேன்”

“நீ ரெஜினா மேடமைப் பத்தி தப்பா புரிஞ்சிக்கிட்டு இருக்க… அவங்க அப்படி எல்லாம் இல்ல ரொம்ப நல்ல டைப்.”

“யாரு அவளா நல்ல டைப்பு… உனக்குத் தெரியாது… ஒரு நாள் பாவம் வீல் சேர்ல இருந்து கீழ விழுந்துட்டான்னு… தூக்கி விட்டா பளார்னு செவுலயே விட்டா. திருப்பிக் கொடுத்திருப்பேன்… ஆனா முடியல… பாஸோட பொண்ணா போயிட்டா… எல்லாம் பணம் இருக்க திமிரு.”

“எல்லோரையும் உன் கண்ணோட்டத்துல இருந்துதான் பார்ப்பியா… என்னையும் அப்படித்தான் பார்த்த… அவங்களையும் அப்படிதான் நீ பார்க்குற” என்று மதி கடுப்புடன் கூற ஆனந்தனின் குரலிலிருந்த சுருதி இறங்கியது.

“இப்போ என்ன சொல்ல வர்ற நீ?”

“ரெஜினா மேடம் ரொம்ப நல்லவங்க… அவங்களுக்குக் கல்யாணம் பண்ணி வைக்கணும்னு ஜஸ்டின் சார் ஆசைப்படுறாரு… நீதான் ரெஜினா மேடமுக்குப் பொருத்தமா இருப்ப… அவங்கள நல்லா பார்த்துப்பன்னு அவர் ரொம்ப நம்புறாரு.”

“அப்படி எல்லாம் இல்ல… எனக்கும் அந்த ரெஜினாவுக்கும் சுத்தமா ஒத்து வராது… அதுவும் அவளுக்கும் என்னைப் பிடிக்கவே பிடிக்காது.”

“ஜஸ்டின் சார் சொன்னா மேடம் ஒத்துக்குவாங்க.”

“ஆனா நான் ஒத்துக்க மாட்டேன்… நான் அர்ச்சனாவுக்கு ஓகே சொல்லிட்டேன்”

“யாரு அருணோட சிஸ்டரா?”

“ஆமா.”

“அப்படினா நீ அர்ச்சனாவை லவ் பண்றியா”

“அதெல்லாம் இல்ல… அவ ஐடில இருக்கா இல்ல… செம சேலரி… அவளைக் கட்டிக்கிட்டா சீக்கிரம் வீட்டு லோன் எல்லாம் முடிச்சிடலாம்னு ஒரு கால்குலேஷன் போட்டு ஓகே பண்ணிட்டேன்”

“அப்போ பணத்துக்காக ஓகே பண்ண…”

“ஆமா இங்க எந்த கல்யாணம் மனசுக்குப் பிடிச்சு நடக்குது… எல்லா பணத்துக்காகதான் நடக்குது.”

“அப்படி பார்த்தா ரெஜினா மேடம்கிட்ட இருக்க பணம்தான் ஜாஸ்தி.”

“அதுக்காக அவளை மாதிரி ஒருத்திய கல்யாணம் பண்ணிக்கிட்டு காலம் முழுசுக்கும் நான் அவகிட்ட அடிமையா கிடக்கணும் சொல்றியா… அவளை மாதிரி பொண்ணு எல்லாம் என்னைக்காச்சும் வேணானு தோனுச்சுனா அசால்டா புருஷன்னு கூட பார்க்காம தூக்கிப் போட்டுட்டுப் போயிடுவா.”

“ரெஜினா மேடம் அப்படி எல்லாம் செய்ய மாட்டாங்க.”

“உனக்கு அவளைப் பத்தித் தெரியாது… நீ ஒரு வருஷமாதான் இங்க வேலை செய்ற… நான் ஆறு வருஷமா இங்கதான் வேலை செய்றேன்.”

“சரி விடு… இதுக்கு மேல உன்கிட்ட பேசுறது வேஸ்ட்டு… வண்டிய ஓரமா எங்கயாச்சும் நிறுத்து… நான் ஆட்டோல இல்ல பஸ்ல போய்க்கிறேன்.”

“ஏன் மதி?”

“வண்டியை நிறுத்துறியா?”

“இப்போ என்ன சொல்ல வர்ற… நான் அந்த ரெஜினாவைக் கல்யாணம் பண்ணிக்கணும்னா…” என்றவன் அவளை ஆழமாகப் பார்க்க,

“நான் சொன்னா நீ கேட்கவா போற?” என்று முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

“நீ சொன்னா நான் கேட்பேன்… நீ என்ன சொன்னாலும் கேட்பேன்… சாவ சொன்னாலும் கேட்பேன்… அந்தளவுக்கு நான் உனக்கு அநியாயம் செஞ்சு இருக்கேன்… நான் செஞ்சது எல்லாம் நினைச்சு இப்ப வரைக்கும் குற்றவுணர்வுல செத்துட்டு இருக்கேன்… தெரியுமா?” என்றவன் பேசியதைக் கேட்டு மதி நெகிழ்ச்சியுடன்,

“அப்படி எல்லாம் பேசாத அண்ணா” என்றாள்.

“நீ என்னை மன்னிச்சிட்டேன் சொல்லு மதி” என்றதும், அவள் சில நொடிகள் எதுவும் பேசவில்லை.

“இப்பவும் மன்னிக்க மாட்டியா மதி”

“இல்ல அண்ணா அப்படி எல்லாம் இல்ல” என்றவள் மேலும், “மன்னிப்பு எல்லாம் அவசியம் இல்ல அண்ணா… என்னை மாதிரியானவங்கள வீட்டுல வைச்சுக்கிறது ஒரு அவமானமான விஷயம்தான்…”

”அப்பா செஞ்சுது தப்புனு சொல்ல முடியாது… பூமில வாழற எல்லா ஜீவராசிகளும் சுயநலவாதிதான்… அதுங்களோட உச்சபட்சமான சுயநலமே அதுங்க பெத்ததுங்கள காப்பாத்துறதுதான்.”

”நல்ல குட்டி இரண்டைக் காப்பாத்த பலவீனமான இருக்க ஒரு குட்டியை அம்மா மிருகம் சாப்பிட்டுடுமாம்… சில பறவைங்க பலவீனமான குஞ்சை விட்டுட்டு மத்த குட்டியை அடை காக்குமாம்… அதுதான் சர்வைவல் ஆப் தி பிட்டஸ்ட்.”

”எது வாழுறதுக்கு தகுதியுள்ள ஜீவனோ அதைதான் அந்த அம்மா மிருகம் பால் கொடுத்துக் காப்பாத்தும்… அந்த வகைல பார்த்தா என்னை ஒரு வாழத் தகுதியற்ற ஜீவனா வெளியே தூக்கிப் போட்டது ஒன்னும் தப்பு இல்ல” மதி தூரமாக வெறித்துக் கொண்டு விரக்தி நிலையுடன் பேச,

ஆனந்தன் காரை ஓரமாக நிறுத்திவிட்டு மதியின் கையை எட்டிப் பிடித்தான்.

“மதி ப்ளீஸ் இப்படி எல்லாம் பேசாதே… எனக்குக் கஷ்டமா இருக்கு… நீ வாழத் தகுதியற்றவன் எல்லாம் கிடையாது… அண்ணன் நான் உனக்கு இருக்கேன்… நீ என்ன ஆசைப் படுறியோ அத நான் நிச்சயம் செய்வேன்” என,

“எனக்குன்னு ஆசை, கனவுன்னு இப்போதைக்கு எதுவும் இல்ல… ரெஜினா மேடம் சந்தோஷமா இருந்தா நானும் சந்தோஷமா இருப்பேன்.” என்றவள் சொல்லி முடிக்க,

யோசனையுடன் அவனை பார்த்தவன் பின்னர், “ரெஜினா சந்தோஷமா இருந்தா… நீ சந்தோஷமா இருப்பன்னா… நான் அவளைச் சந்தோஷமா பார்த்துப்பேன்… கல்யாணம் பண்ணி என்னால முடிஞ்சளவு அவளை நான் சந்தோஷமா பார்த்துப்பேன்” என்று உறுதி கொடுத்தான்.

அந்த உறுதியை அவன் இன்று வரை காப்பாற்றுகிறான். அது ரெஜினாவின் மனதிற்குத் தெரியும்.

மதிக்காக ஆரம்பத்தில் இந்தத் திருமணத்திற்குச் சம்மதம் சொன்னாலும் அவன் அவளை அதன் பின் மனதார நேசிக்க ஆரம்பித்துவிட்டான்.

அவள் இல்லாமல் இனி தனக்கு எதுவுமே இல்லை என்று உணர்வுப்பூர்வமாக அவளைக் காதலிக்க ஆரம்பித்துவிட்டான். ஆனால் அவளோ ஒரே நிமிடத்தில் தன் உறவைத் துச்சமாகத் தூக்கிப் போட்டுவிட்டால் என்பதை அவனால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை.

அவன் வேதனையில் புழுங்கிக் கொண்டிருக்க, “வொய்ஃப்” என்று செல்பேசி அடித்தது. எடுக்கக் கூடாது என்ற முடிவுடன் அதனைத் தூக்கிப் பக்கத்து இருக்கையில் வீசினான்.

ஆனால் அவளும் அடிப்பதை நிறுத்துவதாக இல்லை. இறுதியாக ஒரு குறுந்தகவல் வந்தது.

“நீயும் மதியும் சேர்ந்து என்னை நல்லா ஏமாத்தி இருக்கீங்க… ஸோ நான் பேசனதுக்கு சாரி எல்லாம் கேட்க முடியாது… தப்புக்குத் தப்பு பேலன்ஸ் ஆகிடுச்சு… ஒழுங்கா கிளம்பி இப்போ வீட்டுக்கு வா” என்றவளின் குரல் பதிவைக் கேட்டதும் அவன் உதட்டில் புன்னகை அரும்பியது.

அவனுடைய கோபம் வருத்தமெல்லாம் ஒரே நொடியில் காணாமல் போய்விட்டது.

“திமிரு பிடிச்சவ” என்று சொல்லிக் கொண்டே காரைத் திருப்பினான்.

Cancel “தூரமில்லை விடியல்” என்னுடைய புத்தம் புது தொடர் துவங்கப்பட்டுள்ளது. வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா