மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumMembersActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumMonisha Completed novels: Anbin VazhiyathuAnbin Vazhiyathu - Episode 3Post ReplyPost Reply: Anbin Vazhiyathu - Episode 3

Quote from monisha on October 10, 2024, 4:22 PM

3

Death cannot kill love memories and love always stay inside.

“என்னடா மனுஷன் நீ... எப்படிறா இவ்வளவு கேவலமான காரியத்தை உன்னால பண்ண முடிஞ்சது?” வந்ததும் வராததுமாக அன்பு என்னிடம் ஏற, ஜன்னல் புறம் அமர்ந்து ஏகாந்தமாக சிகரட்டைப் புகைத்துக் கொண்டிருந்த நான் அவனைப் புரியாமல் பார்த்தேன்.

“கூடப் பொறந்தவன் செய்ற காரியமாடா இது?” என்றவன் மேலும் எகிற,

“என்ன பிரச்சனை உனக்கு?” என்று தெரியாதவன் போலக் கேட்டாலும், உண்மையில் அவன் கோபத்திற்கான காரணம் எனக்குத் தெரியும்.

அவன் முகம் சிவக்க, “மவனே நடிக்காத... உன்னை அடிச்சே கொன்னுடுவேன்” என்றான்.

நான் அலட்சியமாக அவனைத் திரும்பிப் பார்த்து, “நான் ஒன்னும் அவளைத் தேடிப் போய் பேசல... அவளாத்தான் என்கிட்ட வலிய வந்து பேசுனா” என்ற சொல்லவும்,

“அவ என் லவர்டா?” என்று கர்ஜித்தான்.

“நான் இல்லன்னா சொன்னேன்... அவ உன் லவர்தான்... ஆனா என்ன பண்றது... உனக்கும் எனக்கும் வித்தியாசம் தெரியலயே அவளுக்கு... தெரிஞ்சிருந்தா... என்னைப் பார்த்து அன்புன்னு கூப்பிடுவாளா அவ?”

“தெரியாம கூப்பிட்டா... அது ஒரு தப்பாடா?”

“தப்புதான்” என்று நான் உக்கிரமாகத் திரும்பி அவனிடம் கத்தினேன். ஆனால் அவன் கோபம் கொள்ளவில்லை.

அமைதியாக என்னை நோக்கி, “நாம ஒரே மாதிரி பொறந்து தொலைச்சது கூடத் தப்புதான்... ஆனா என்ன பண்றது... அப்படி பொறந்து தொலைச்சிட்டோமே” என்றான்.

“மத்தவங்க கன்ஃபுயூஸ் ஆகிறது வேற... அவ உன் லவர் இல்லையா?” என்று நான் வெறுப்பேற்றும் நோக்கில் கேட்டுக் குத்தலாகப் பார்த்து வைக்க, அவன் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.

“அவளுக்கு ஒன்னும் வித்தியாசம் தெரியாம எல்லாம் இல்ல... ஆனா இன்னைக்குன்னு பார்த்து என்னை மாதிரியே நீயும் கிளீன் ஷேவ் பண்ணிட்டு” என்றவன் கொடுத்துக் கொண்டிருந்த விளக்கத்தில் நான் கடுப்பாகி,

“ஏய் நிறுத்து... அது என்ன உன்னை மாதிரி... நான் ஒரு இலக்கிய கூட்டத்துக்குப் போக வேண்டியது இருந்தது... அதான் ஷேவ் பண்ணேன்” என்று நான் பதிலுரைக்கவும்,

“சரி என்னை மாதிரி இல்ல... ஆனா இப்போ பார்க்க நம்ம ஒரே லுக்ல தானே இருக்கோம்... அதை மறுக்க முடியாது இல்ல... அப்புறம் பார்க்குறவங்க கன்ஃபுயூஸ் ஆகத்தானே செய்வாங்க... அப்படிதான் அவளும் குழம்பிப் போய் உன்னை அன்புன்னு கூப்பிட்டா”

”சரிதான்... உன்னைப் பொறுத்தவரைக்கும் அது தப்புதான்... அப்படி அவ கூப்பிட்டு இருக்கக் கூடாதுதான்... ஆனா பதிலுக்கு நீ கேவலமா ஒரு காரியம் செஞ்ச பாத்தியா” என்றவன் நிறுத்தி என்னைப் பார்த்த அந்த ஒரு பார்வை...

அதை எப்படி சொல்வது. எனக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது.

அந்த மஹா என்னை அன்பு என்று கூப்பிட்டதும் எனக்கு எரிச்சல் உண்டானது. நான் கோபத்துடன் திரும்ப, அவள் அன்பு என்று எண்ணிக் கொண்டு என்னிடம் இலகுவாகப் பேசினாள். அப்போது எனக்கொரு யோசனை.

ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் அவளாக என்னைக் கண்டுபிடிக்கிறாளா பார்ப்போம் என்று நானும் அன்பு இல்லை என்று சொல்லாமலே அவளுடன் உரையாடினேன். காபி அருந்த அழைத்தப் போது மறுக்காமல் அவளுடன் சென்று காபி அருந்திவிட்டு வந்தேன். ஆனால் கடைசி வரை அவள் என்னைக் கண்டுபிடிக்கவே இல்லை. நானும் சொல்லவில்லை.

இப்படி ஒரு தத்திப் பெண்ணையா அவன் காதலிக்கிறான் என்று உள்ளுர எனக்குச் சிரிப்புதான் வந்தது.

மற்றபடி இவன் நினைப்பது போலக் கேவலமான எண்ணத்தில் எல்லாம் அவளிடம் பேசவில்லை. திட்டமிட்டு அவளை ஏமாற்றவுமில்லை. அவளாக வந்து பேசினாள் நானும் பேசினேன். அதேநேரம் அவள் அன்புவின் காதலி என்ற நினைப்பும் எனக்கு இல்லாமல் இல்லை.

இப்போது இவன் பேசியதைக் கேட்டால் நான் ஏதோ செய்ய கூடாததைச் செய்தது போலக் குற்றவுணர்வு ஏற்படுத்துகிறான்.

நான் சிகரெட்டைப் புகைத்தபடி அலட்சியமாக அமர்ந்திருக்க அன்பு பாட்டுக்கு ஒரு பெட்டியை எடுத்து தன் துணிகளை அடுக்கிக் கொண்டிருந்தான். அதனைப் பார்த்த நொடி நான் அதிர்ச்சியாகி, “என்ன பண்ற?” என்று கேட்டேன்.

“இனிமே நான் உன் கூட இருக்கமாட்டேன்... போறேன்” என்றவன் சொன்ன போது மனதில் ஒரு மாதிரி ஏதோ தடம் புரண்டது.

“எங்கப் போகப் போற?”

“எங்கயோ போகப் போறேன்... உனக்கு என்னடா?” என்றவன் நேராக என்னைப் பார்த்து, “ஏதோ உனக்குக் கெட்டப் பழக்கம் எல்லாம் இருக்கு... மத்தபடி நீ தப்பானவன் எல்லாம் இல்லன்னுதான் இத்தனை நாளா நான் நினைச்சிட்டு இருந்தேன் அறிவு... ஆனா நீ இவ்வளவு கேவலமான புத்தியோட இருப்பன்னு நினைக்கல” என்று அவன் மேலும் மேலும் என்னை ஒரு குற்றவாளியைப் போலப் பேசியதில் எனக்கும் கோபம் பொத்துக் கொண்டு வந்துவிட்டது.

“இப்ப எதுக்குடா ஓவரா பேசிட்டு இருக்க நீ?” என்று கடுகடுக்க,

“இனிமே பேசமாட்டேன்... இத்தோட நமக்குள்ள எல்லாமே முடிஞ்சு போச்சு... உனக்கும் எனக்கும் எந்த உறவும் இல்ல” என்றவன் பெட்டியை எடுத்துக் கொண்டு கிளம்பத் தயாரானான். நான் தடுக்கவில்லை. எதற்குத் தடுக்க வேண்டும்? போயும் போயும் அந்த மஹாவிற்காக என்னை விட்டுப் போகிறான்.

அப்படி அவளிடம் என்ன இருக்கிறது? எனக்குச் சத்தியமாகப் புரியவில்லை. பார்க்கக் கொஞ்சம் அழகாக இருக்கிறாள். அதைத் தாண்டி... அதைத் தாண்டி... வேற என்ன இருக்கிறது?

பெண் என்றால் அழகு மட்டுமா? அவளிடம் கொஞ்சமாவது கம்பீரமும் ஆளுமையும் இருக்க வேண்டாமா? எத்தனையோ அழகான விலைமாதர்களைக் கண்ட போதும் பிரேமிதான் வேண்டுமென்று அழைத்து வருவேன். அவளின் அந்தத் திமிர்தனத்திற்கும் தைரியத்திற்கும் முன் உலக அழகிகள் கூட மண்டியிடலாம்.

அப்படிப்பட்ட திமிரான பெண்ணைப் புணர்வதில்தான் அலாதியான சுகம் இருக்கிறது. இது எதுவும் இல்லாத ஒரு பெண் உப்புமும் காரமும் இல்லாத பண்டம்தான்.

நான் பாட்டுக்கு என் மனம் போன போக்கில் யோசித்துக் கொண்டிருக்கப் பெட்டியுடன் அறை வாசலில் சென்று நின்றவன், “செத்தாலும் இனி நீயும் என் மூஞ்சில முழிக்கக் கூடாது... நானும் உன் மூஞ்சில முழிக்கமாட்டேன்” என்று விட்டு அகன்றான்.

“அப்படினா முதல நீ கண்ணாடிப் பார்க்கக் கூடாதுடா டேய்?” என்று சத்தமாகச் சொல்லி நான் கலாய்த்துச் சிரித்தேன். அவன் சொன்னதை அப்போது நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. எங்கே போய்விடப் போகிறான் என்றுதான் நினைத்தேன்.

ஆனால் அதுவே கடைசியாகிப் போனது. அவன் என்னை பார்த்ததும் நான் அவனைப் பார்த்ததும்...

‘செத்தாலும் உன் மூஞ்சில முழிக்கமாட்டேன்’ என்றவன் வீம்பாகச் சொல்லிவிட்டுப் போனதும் இறுதியில் உண்மையாகப் போய்விட்டது. அவன் என் முகத்தில் விழிக்காமலே போய்விட்டான். இதோ இறந்து என் முன்னே கிடக்கிறான்.

அநாதரவாக அங்கே கிடத்தப்பட்டிருக்கும் முகத்தைத் தவிர அவன் உடலின் இடுப்பிற்குக் கீழான பாகங்கள் அனைத்தும் சிதைந்திருந்தன.

அந்தப் பிணவறையில் வேலை செய்யும் ஊழியன் என் அருகே வந்து, “இரண்டு பேரும் இரட்டையா சார்? அதான் உன்னைப் பார்த்ததும் கொஞ்சம் பகீர்னு ஆய்டுச்சு... என்னடா செத்தவன் எழுந்திருச்சு வந்துட்டானோன்னு மிரண்டுட்டேன்” என்று என் மன வேதனைப் புரியாமல், அவன் தன் பிரச்சனையைப் பெரிதாகப் பேசிக் கொண்டிருந்தான்.

எனக்கோ அன்புவின் சிதைந்த உடலைப் பார்க்கப் பார்க்க அடி வயிற்றைப் பிசைந்தது. புரட்டி எடுத்தது. கூடவே அந்தப் பிணவறை நாற்றமும் சேர்ந்துக் கொள்ள, அடித்துப் பிடித்து வெளியே ஓடி வந்து குமட்டிக் கொண்டு வாந்தி எடுத்தேன்.

என்னால் முடியவில்லை. இப்படியொரு நிலையில் அவனைப் பார்ப்பேன் என்று கனவிலும் நினைக்கவில்லை.

“உனக்கு ஏன் டா இப்படி ஒரு நிலைமை அன்பு... ஐயோ!” என்று நான் இடிந்து அமர்ந்துவிட,

சாவகாசமாக சரக்கை வாயில் ஊற்றிக் கொண்டே வந்த அந்தப் பிணவறை ஊழியன், “கொண்டு வரும் போதே உடம்பு சிதைஞ்சு போச்சு... அதான் வேணாம் பார்க்காதன்னு அப்பவே சொன்னேன்... கேட்டியா சார் நீ” என்றான்.

ஆம் அவன் சொன்னான்தான். நான் கேட்டிருக்க வேண்டும். இத்தனை மோசமான நிலையில் அவன் இருப்பான் என்று நான் கனவா கண்டேன்.

ஆம் கனவு கண்டேனே... அந்தக் கோரமான கனவு... ஆனால் அது அன்புவைப் பற்றியதாக இருக்கும் என்று நான் இம்மியளவு கூட யோசிக்கவில்லையே.

நினைக்க நினைக்க நெஞ்சம் குமுறியது.

“அன்பு அன்பு” நான் அழுது அரற்ற அந்த ஊழியன் அலட்சியமாக என் அழுகையைப் பார்த்துவிட்டு நகர்ந்தான்.

அவன் இப்படி நிறைய நிறைய அழுகைகளைப் பார்த்திருப்பான். ஆனால் எனக்கு இப்படி அழுவது புதிது. யார் முன்பும் என் அழுகையை நான் காட்டியதில்லை.

அம்மாவின் மரணத்தின் போது கூட நான் அழவில்லை. அவள் மருத்துவமனையில் இருந்தாள். பிழைக்கமாட்டாள் என்று சொல்லிவிட்டார்கள். அதனை ஏற்றுக் கொண்டே ஆக வேண்டிய நிலை. ஏற்றுக் கொண்டேன்.

அன்புதான் அழுது கரைந்து கொண்டிருந்தான். வேறு வழியில்லாமல் நான்தான் அன்று அவனைத் தேற்றினேன்.

அந்த மோசமான நாள் ஓய்ந்து அடங்கிய போது அன்பு என்னிடம் வந்து, “செத்து போனது நம்ம அம்மாடா... நீ என்னடானா ஒரு சொட்டுக் கூட அழல? கல்லு மாதிரி உட்கார்ந்திருந்த?” என்று கேட்க,

“எனக்கும் கஷ்டமாதான் இருந்துச்சு... ஆனா அழ வரல... என்ன பண்ண சொல்ற” என்று கேட்டுவிட்டு நான் எழுந்து சென்றுவிட்டேன். அவனிடம் அதற்கு மேல் விளக்குவதற்கு எனக்கு அப்போது விருப்பமில்லை. அவனுக்கு என் நிலைமை புரியாது. புரியவும் வாய்ப்பில்லை.

நாங்கள் இருவரும் ஒன்றாகவே பிறந்து வளர்ந்தாலும் இயல்பில் இருவருமே இரு வேறு துருவங்கள்தான். அவனின் உணர்வுகளை நானும் என்னுடைய உணர்வுகளை அவனும் புரிந்து கொள்ளவே முடியாது.

ஆனாலும் அவனுக்காக என் கண்களில் கண்ணீர் சுரந்து கொண்டே இருந்தன. இம்முறை என்னைச் சுற்றி யார் இருக்கிறார்கள் இல்லை என்றெல்லாம் நான் யோசிக்கவில்லை.

அழுகையை என்னால் கட்டுப்படுத்தவே முடியவில்லை. சற்று முன்பு அன்பு இல்லாத உலகத்தில் வாழ வேண்டுமென்று ஆசைப்பட்டேன். ஆனால் இப்போது யோசித்துப் பார்த்தால் அது எவ்வளவு முட்டாள்தனமான ஆசை என்று புரிகிறது.

பிரேமி சொன்ன ஒவ்வொரு வார்த்தைகளும் சத்தியம். அவள் என்னை மிகச் சரியாகப் புரிந்து வைத்திருக்கிறாள்.

அவன் இல்லாத ஒரு உலகம் எனக்கு உயிரற்ற உடல் போலதான். அது தனித்து இயங்காது. நானும் இப்போது அப்படி இயக்கமற்று நிற்கிறேன். உயிரற்று உணர்வற்று அமர்ந்திருக்கிறேன்.

எத்தனை மணி நேரம் அழுது தீர்த்தேன் என்று தெரியாது. புயலுக்குப் பின்பாக வரும் ஓர் ஆழ்ந்த அமைதி அப்போது எனக்குள்ளும் ஏற்பட்டது. ஒரு நிலைக்கு மேல் கண்களில் கண்ணீர் வற்றி அழுகை மட்டுப்பட்டுவிட்டது. ஆனால் அதிர்ச்சி நீங்கவில்லை.

அந்த இருளும் இரவும் என்னைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தின்று கொண்டிருந்தது.

தூரத்தில் ஏதோ ஒரு அழுகுரல் கேட்கிறது, ‘ஐயோ! எஞ்சாமி... ’ என்று திரும்ப திரும்ப யாரோ ஒரு முதிய பெண் கதறுகிறாள். அந்த அழுகையின் ஒலி பூதாகரமாய் எனக்குள்ளும் வெடிக்கிறது.

ஆசைகளும் விருப்பங்களும் வாழ்க்கையும் மனிதருக்கு மனிதர் வேறுப்பட்டாலும் மரணம் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரே மாதிரியான வலியையும் உணர்வையும்தான் ஏற்படுத்துகின்றன.

தூரத்தில் கேட்கும் அந்தத் தாயின் அழுகையும் என்னுடையதாகவே கேட்கிறது. என் வலியை உள்ளடக்கிய உணர்வாகவே ஒலிக்கிறது.

பாஸ் பட்டனை அழுத்தியது போல என் சிந்தனைகள் எல்லாம் அன்புவில் நின்றுவிட்டது. அழுகை கூட இப்போது வர மறுக்கிறது.

‘அன்பு நான் தப்பு பண்ணிட்டேன்... பெரிய தப்பு பண்ணிட்டேன்... நீ இருக்கும் போது உன்னைப் புரிஞ்சிக்காம பெரிய தப்பு பண்ணிட்டேன்’ அவனிடம் மானசீகமாக மன்னிப்பு வேண்டிக் கொண்டிருந்தேன்.

மீண்டும் அந்த ஊழியன் வந்து நின்று, “இந்தா சார்... அவரோட ஃபோன்... மேல் பாக்கெட் ல இருந்ததால ஏதோ லேசான கீறலோட பிழைச்சுக்குச்சு... பேன்ட் பாக்கெட்ல இருந்தா நசுங்கிப் போயிருக்கும்... ஆனா பர்ஸ் நசுங்கிடுச்சு... அது எடுக்கக் கஷ்டம்” என்று அவன் பேசும் போது எனக்கு மீண்டும் குமட்டியது.

‘இவன் வேற’ என்று நான் கடுப்பாகும் போது அவன் தொடர்ந்து,

“போயிட்டுப் பேசாம காலை வர்றதா இருந்தா வா... காலையிலதான் பாடி கிடைக்கும்... அது கூட பத்து பதினொரு மணியாயிடும்” என்று சொல்லிவிட்டுச் சென்றான்.

எங்கே போவேன் நான். அன்புவைத் தவிர இந்த உலகமே எனக்கு அன்னியமாகத் தெரிகிறது. போக்கிடமற்று நிற்பதாக உணர்கிறேன். அவன் உடன் இருக்கும் போது அவன் அருமை புரியவில்லை. அவன் துணையை அங்கீகரிக்கவில்லை. அவன் அன்பை உணரவில்லை.

ஏன் இந்தளவு அன்புவை நான் வெறுத்தேன் என்று கூடத் தெரியவில்லை. எனக்காக இருந்த ஒரே உறவு அவன்தான். அவனும் போய்விட்டான். இப்போது யார் என்னைத் தேற்றுவார்கள்? எனக்காகவென்று யார் இருக்கிறார்கள்?

‘இப்போ கூட எனக்காக யார் இருக்கான்னு யோசிக்குறியே தவிர... என்னைப் பத்தி யோசிக்கல இல்ல நீ... சரியான சுயநலப் பிசாசுடா நீ’

மிக மிக நெருக்கத்தில் கேட்ட இந்தக் குரல் அன்புவுடையது. நான் பதறித் திரும்பிய போது... அன்பு... அன்புதான் அமர்ந்திருந்தான். உடலில் ஒரு சிறு காயம் கூட இல்லை.

உயரமாக நின்றிருந்த அந்த மருத்துவமனையின் விளக்கொளி உமிழ்ந்த வெளிச்சம் அவன் முகத்தில் விழுந்தது. சந்தேகமே இல்லை. அவன் அன்புதான்.

“அன்பு” என்று அதிர்ச்சியுடன் அழைக்க, அவன் புன்னகைத்தான். அந்த விளக்கொளியை விடவும் அவனின் அந்தப் புன்னகை அதீத பிரகாசத்துடன் மிளிர்ந்தது.

‘இவன் பேயா இல்லை என் பிரமையா?’

என்று நான் யோசிக்க,

“நான் பேயா இருந்தாலும் உன் பிரமையா இருந்தாலும் நான்தான் இப்போ உன் கண்ணுக்குத் தெரியுற நிஜம்”

எனக்குக் குழப்பமாக இருந்தது. அவன் தெளிவாகப் பேசுகிறான். என் அருகே அமர்ந்திருக்கிறான். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. நான் தலையைக் கவிழ்ந்து கொண்டு யோசித்தேன்.

‘எனக்கு ஒரு வேளை பைத்தியம்... கித்தியம் பிடிச்சுப் போச்சா?’ என்று என்னை நானே கேட்டுக் கொள்ள,

“இப்போதைக்கு இல்ல” அன்புவின் குரல்.

‘இது அவன் குரலா இல்லை என் மனசாட்சியா?’

“இரண்டும்னு வைச்சுக்கோ”

‘சத்தியமா எனக்குப் பைத்தியம்தான் பிடிச்சிடுச்சு’

“உனக்குப் பேர்ல மட்டும்தான் அறிவு இருக்காடா?”

எள்ளலாக அவன் கேட்க நிமிர்ந்து அவனை முறைத்துப் பார்த்தேன்.

“உண்மையைச் சொன்னதுக்கு இப்போ எதுக்கு முறைக்குற?”

மீண்டும் நான் தலையைக் கவிழ்ந்து கொண்டேன். இது நிச்சயம் பேய் இல்லை. என் பிரமைதான்.

கடவுள் நம்பிக்கையே இல்லாத எனக்குப் பேய் நம்பிக்கை எங்கிருந்து வந்தது. தினம் தினம் நாம் கொன்று குவிக்கும் ஜீவராசிகள் எல்லாம் பேயாக வருவது என்றால் இந்தப் பூமியில் பேய்கள் மட்டும்தான் எங்கெங்கும் ஜீவித்திருக்கும்.

“பரவாயில்ல உனக்கும் அறிவு இருக்கு அறிவு” என்றவன் குரல் என்னை உசுப்பிக் கொண்டே இருந்தது. நிமிர்ந்து பார்த்தேன். அவன் என்னருகே அப்படியேதான் அமர்ந்திருந்தான்.

‘சரியாக நான் தூங்கவில்லை... அன்பு இறந்துவிட்டதால் ஏற்பட்ட டிப்பிரஷன்... அதனால் உருவான ஹலோசினேஷன்தான் இது’ என்று நான் சிந்தித்து கொஞ்சம் என்னை நானே தெளிவுப்படுத்திக் கொண்டிருக்க,

அன்பு என் அருகே இருந்து எழுந்து நின்று, “அன்பு இல்லாத உலகத்துல வாழணும்னு நினைச்ச இல்ல... அது இப்படித்தான் இருக்கும்” என்று என்னைப் பார்த்துக் கூறினான்.

நான் புரியாமல் பார்க்க, “world without love will be full of stress depressions… அன்பு இல்லாத உலகத்துல மன அழுத்தங்கள்தான் நிறைஞ்சு இருக்கும்... அப்படி பட்ட உலகத்துல எல்லோரும் பைத்தியம் பிடிச்சுதான் சுத்துவாங்க” என்றவன் பேசியதைக் கேட்டதும்,

“பைத்தியம்தானே... பிடிக்கட்டும்... நல்லா பிடிக்கட்டும்” நான் விரக்தியாகச் சொல்ல,

“நான் உன் கூட இருக்க வரைக்கும் அப்படி நடக்க விடமாட்டேன்” என்று பேசியவனை நான் எரிச்சலுடன் பார்த்து,

“அன்பு போயிட்டான்... நீ வெறும் என் கற்பனை இல்லனா... அன்புவோட ரூபத்துல வந்திருக்க என் மனசாட்சி” என்று நான் சொல்ல,

“எப்படியா இருந்தாலும் இனிமே நான்தான் உனக்கு அன்பு” என்றான் அவன் மீண்டும்.

“இல்ல... நீ அன்பு இல்ல... நீ பொய்... நீ என்னை ஏமாத்த வந்திருக்க... என் வேதனையைப் பூசி மொழுக வந்திருக்க... வேண்டாம்... நீ எனக்கு வேண்டாம்... அன்பு இல்லாம எனக்குப் பைத்தியம் பிடிச்சாலும் பரவாயில்ல... போலியான அன்பு எனக்கு வேண்டாம்” என்று நான் கத்திக் கூச்சலிட்டேன்.

அவன் சிரித்துவிட்டு, “நீ எப்படி கத்தினாலும் நான் இனிமே உன்னை விட்டுப் போக மாட்டேன்... அப்படி போகணும்னா அன்புவைப் பத்தின உன்னோட ஞாபகம் அழிஞ்சு போகணும்... இல்ல நீ செத்துப் போகணும்” என்றான்.

Cancel “தூரமில்லை விடியல்” நாவல் முடிவுபெற்றது. விரைவில் “கண்ணாடி துண்டுகள்” மீண்டும் தளத்தில் பதியப்படும். வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா