மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumMembersActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumMonisha Completed novels: Anbin VazhiyathuAnbin Vazhiyathu - Episode 4Post ReplyPost Reply: Anbin Vazhiyathu - Episode 4

Quote from monisha on October 11, 2024, 5:07 PM

4

Grief in two parts. The first is loss. The second is remaking of life

மருத்துவ வளாகத்தில் நான் அன்புவிடம் சத்தமிட்டுப் பேசியதைக் கவனித்த அங்கிருந்த ஒரு சிலர் என்னை விசித்திரமாகப் பார்த்தனர். அவர்கள் பார்வைக்கு நான் மட்டும்தான் தெரிவேன். அன்பு தெரியமாட்டான்.

சில நொடிகள் அவர்கள் என்னை ஒரு மாதிரி பார்த்துவிட்டுத் திரும்பிக் கொண்டனர். பித்துப் பிடித்துவிட்டது என்று நினைத்துக் கொண்டிருப்பார்கள். அவர்கள் நினைப்பிலும் தவறில்லை. எனக்கே அப்படிதான் தோன்றியது.

இன்னும் அன்பு என் எதிரேதான் நின்றிருக்கிறான். போக மாட்டேன் என்று அடமாக நிற்கிறான். அவனை எனது பிரமை அல்லது கற்பனை என்று யோசித்தாலும் கூட அந்த இரவு நேரத்தில் அன்புவின் ரூபம் என்னைக் கொஞ்சம் பயப்படுத்தத்தான் செய்தது.

பேய் பூதமெல்லாம் இல்லையென்று நான் நம்பினாலும் உள்ளூர எனக்கும் கொஞ்சம் நடுங்கத்தான் செய்தது.

ம்ஹும்... அவன் என்னை விட்டுப் போக மாட்டான். ஒரு வேளை இந்த மருத்துவமனை சூழ்நிலை நான் பார்த்தக் காட்சி இதெல்லாம் சேர்ந்து என்னை அச்சப்படுத்துகிறதாக இருக்கலாம்.

இப்போதைக்கு இங்கிருந்து சென்றுவிடுவோம் என்று எண்ணித் திரும்பிக் கூடப் பார்க்காமல் வேக வேகமாக மருத்துவமனை வாகன நிறுத்தத்தில் நின்ற என் பைக்கில் அமர்ந்தேன்.

“அறிவு”

அவன்தான் அழைக்கிறான். நான் பதில் பேசவில்லை. திரும்பிக் கூடப் பார்க்கவில்லை. வண்டியை வேகமாக ஓட்டிக் கொண்டு சென்றேன். ஒன்றிரண்டு வாகனங்களைத் தவிர பெரிதாக சாலையில் வாகனங்கள் எதுவும் இல்லை.

ஆதலால் நான் என் வேகத்தைக் கூட்டினேன். இன்னும் இன்னும் என்று அதிவேகமாக இருளைக் கிழித்துக் கொண்டு பறந்தேன். எங்கே ஏதென்று எல்லாம் யோசிக்காமல் அந்தச் சாலையில் நேராகச் சென்றேன்.

“டேய் ஸ்லோவா போடா... நீயும் என்னை மாதிரி விழுந்து கிழுந்து செத்துத் தொலைக்கப் போற”

அவன் குரல் என் செவிப்பறையில் மோதிய கணம் சரக்கென்று நான் போட்ட ப்ரேக்கில் சறுக்கிக் கொண்டு போய் என் பைக் சாயப் பார்த்தது. ஒருவாறு சுதாரித்துக் கொண்டு அதனை நிலைநிறுத்திவிட்டுத் திரும்பிப் பார்த்தேன்.

அன்பு என் பின்னே அமர்ந்திருந்தான். நான் அதிர்வுடன் அவனை நோக்க,

“பைத்தியமாடா நீ... என்னை விட்டு எங்கே ஓடிப் போயிட முடியும் உன்னால?” என்று நிறுத்தி நிதானமாகக் கேட்கிறான்.

எனக்குக் கண்ணைக் காட்டியது. சாலையில் ஒரே ஒரு வாகனம் கூட இல்லை. சுற்றிலும் மனித சஞ்சாரமே இல்லை. சில மாதங்களுக்கு முன்பு பார்த்த ஏதோ ஒரு பேய் படத்தில் கதாநாயகன் தன் கனவிற்குள் சென்று மாட்டிக் கொள்வான். நானும் அப்படி ஏதோ ஒரு மாயைக்குள் மாட்டிக் கொண்டது போன்ற உணர்வு.

கனவிற்குள் காணும் கனவு போல எதிர்பாராத சம்பவங்களும் காட்சிகளுமாக இந்த இரவு நீண்டு கொண்டே போகிறது. நிமிர்ந்து வானத்தைப் பார்க்க அது இன்னும் கருமை பூசி இருந்தது. இந்த இரவு எப்போது முடியும். எப்போது விடியும்.

“விடியும் போது விடியும்... நீ இப்போ கிளம்பி வீட்டுக்குப் போ” என்று அன்பு சொன்ன நொடி நான் மீண்டும் பைக்கை இயக்கினேன். இம்முறை மெதுவாகச் சென்றேன். அவன் என் பின்னோடு அமர்ந்து பேசிக் கொண்டே வந்தான்.

நாங்கள் சிறுவயதில் ஒன்றாக விளையாடிக் களித்த நாட்களை எல்லாம் கதை போலச் சொன்னான். அவன் சொன்னவற்றை எல்லாம் கேட்கக் கேட்க அந்த நாட்கள் அப்படியே தத்ரூபமாக என் கண்முன்னே காட்சிகளாக விரிந்தன.

இருவரும் எத்தனை சந்தோஷமாக ஒற்றுமையாக விளையாடி இருக்கிறோம். அதெல்லாம் எப்படி நான் மறந்து போனேன். எங்கிருந்து எப்போதிலிருந்து அவனை நான் வெறுத்தேன்? என்ற யோசனைக்கும் கேள்விக்கும் அவன் பதில் கூறினான்.

“எல்லோரும் உன்னை விட்டுட்டு என்னைத் தூக்கி வைச்சு பேசுனாங்க... கொண்டாடினாங்க... அன்பு அன்புன்னு என் பேரையே சொன்னாங்க... உன்னால அதைத் தாங்க முடியல”

“ஓஒ! எனக்கு உன் மேல பொறாமைன்னு சொல்றியா?”

“நீ பொறாமை எல்லாம் படல... உனக்கான அங்கீகாரத்துக்காக ஏங்குன... ஆனா அது உனக்குக் கிடைக்கல... யார்கிட்டயும் உன் பிரச்சனையைச் சொல்லாம மனசுக்குள்ளயே புழுங்கின... நான் எல்லார்க்கிட்டயும் கலகலன்னு பேசுவேன்... நீயோ சைலன்ட் டைப்... அதுதான் எல்லோருக்கும் நான் பிரதானமா தெரிய காரணம்”

“ஏன் என்னால உன்னை மாதிரி இருக்க முடியல?”

“அது உன் கேரக்டர் இல்லை அறிவு... அமைதியா இருக்கிறதுதான் உன் கேரக்டர்”

“அமைதியா இருக்கிறது தப்பா என்ன?”

“அமைதியா இருக்கிறது தப்பு இல்ல... அதேநேரம் நம்ம சுத்தி இருக்க மனுஷங்களோட கலந்து பழகுறதும் முக்கியம்தானே? நீ அப்படி யார்கிட்டயும் பேசாமப் பழகாம போனதுதான் பிரச்சனை... அதனாலதான என்னைத் தெரிஞ்ச அளவுக்கு உன்னை யாருக்கும் தெரியல”

“சும்மா பேசிட்டே போகாத... நான் இன்னைக்கு ஒரு எழுத்தாளர்... என் நாவல்கள் மேகஸின்ல பப்பிளிஷ் ஆகி இருக்கு... எத்தனை ஆயிரம் பேர் என் புக்ஸ படிச்சிருக்காங்க... பாராட்டி இருக்காங்க தெரியுமா? பெரிய பெரிய இலக்கியவாதிகளுக்கு என்னையும் என் பேரையும் தெரியும்” என்று நான் பெருமை பொங்க சொல்ல,

“உண்மைதான்... நீ ஒரு படைப்பாளி... உனக்கே உனக்கான ஒரு கற்பனை உலகத்தைப் படைச்சு நீ அதுக்குள்ள தனியா வாழ்ந்திட்டு இருக்க... உன் எழுத்துல உன் ஆசைகளைக் கனவுகளை நிறைவேத்திக்குற... போலித்தனமா... its fake” என்றான்.

என் புகழை அவன் மட்டம் தட்டுகிறான். எனக்குக் கோபம் எழ, “போதும் நிறுத்துறியா... உன் இஷ்டத்துக்கு பேசாதே” என்று கத்தினேன்.

“நீயே யோசிச்சு பாரேன்... என்னைத் தவிர நீ யார்க்கிட்டயாச்சும் உண்மையா இருந்திருக்கியா? யாரையாச்சும் நேசிச்சு இருக்கியா? அன்பா பேசி இருக்கியா? நட்பா இருந்திருக்கியா? அட்லீஸ்ட் சண்டையாச்சும் போட்டு இருக்கியா? இந்த உலகத்துல நீ நேசிச்சதும் என்னை மட்டும்தான்... வெறுத்ததும் என்னை மட்டும்தான்”

நான் அவன் சொன்னதை யோசித்துப் பார்த்தேன். இல்லை. அவன் சொன்னதை முழுவதுமாக என்னால் ஏற்க முடியவில்லை. சிலர் என் வாழ்விலும் இருக்கிறார்கள். நான் அவர்களிடம் நெருங்கிப் பழகாவிட்டாலும் என்னை என் உணர்வுகளைப் புரிந்து கொண்டவர்கள். அதில் முக்கியாமானவர் என் கல்லூரி பேராசிரியர் இராஜா மற்றும் எழுத்தாளர் விசாகன்.

நான் என் நோட்டுப் புத்தகத்தின் பின்னே எழுதி வைத்திருந்த சிறுகதையை இராஜா சார் படித்துவிட்டு என்னைக் கூப்பிட்டு அனுப்பினார். என் எழுத்தையும் திறமையையும் பாராட்டியவர் நூலகத்தில் இருந்து நிறைய நூல்களை எடுத்துக் கொடுத்து என்னைப் படிக்கச் சொன்னார்.

அப்படிதான் எழுத்தாளர் விசாகனின் எழுத்து எனக்கு அறிமுகம். மிக அற்புதமான எழுத்து. ஆழ்கடலுக்குள் இழுத்துச் செல்வது போல அவர் எழுத்து ஆழமாகவும் அழுத்தமாகவும் இருக்கும். ஏதோ ஒரு வகையில் அவர் எழுத்தை என்னுடனும் என் வாழ்க்கையுடனும் நிறைய தொடர்புப்படுத்திக் கொள்ள முடிந்தது.

அவர் எழுத்தைப் படித்துவிட்டு நானும் ஒரு ஆர்வத்தில் ஒரு நாவலை எழுதத் தொடங்கினேன். அதன் எழுத்துப் பிரதியை எனது பேராசிரியரிடம் படிக்கக் கொடுத்தேன். அதனை அவர் படித்துப் பாராட்டியதோடு அல்லாமல் எழுத்தாளர் விசாகனைச் சந்திக்க என்னை அழைத்துச் சென்றார்.

அப்படியொரு இன்ப அதிர்ச்சி எனக்கு. விசாகன் ஐயா என்னுடைய நாவலின் தொடக்க அத்தியாயங்களைப் படித்துவிட்டு, “இந்த வயசுல இப்படியொரு எழுத்தா?” என்று வியந்ததோடு அல்லாமல் என்னைத் தட்டிக் கொடுத்துப் பாராட்டினார். கூடவே நிறைய திருத்தங்களும் சொன்னார்.

என் எழுத்தை நான் மெருகேற்ற அவர் மிகவும் உதவினார். அதன் பிறகு நான் எழுதிய நாவலை நண்பர் மூலமாக ஒரு பிரபலமான பத்திரிக்கைக்கு அவரே அனுப்பி வைத்தார்.

வியக்கும் விதமாக என்னுடைய முதல் நாவல் அந்தப் பிரபலமான இதழில் தொடராக வெளிவந்தது. என்னால் நம்பவே முடியவில்லை. இதெல்லாம் விசாகன் ஐயாவால்தான். அவரால் மட்டுமே நிகழ்ந்தது.

வாழ்க்கையில் பெரிதாக எந்த வெற்றியையும் பார்க்காத எனக்கு அது மிகப் பெரிய அங்கீகாரம். அதனை ஏற்படுத்தித் தந்த விசாகன் ஐயா எனக்குக் கடவுளாகதான் தெரிந்தார்.

இல்லை. எனக்குக் கடவுள் நம்பிக்கை இல்லை. ஆதலால் அவர் எனக்கு ஆசான். அதற்கும் ஒரு படி மேல் என்றும் சொல்லலாம். அதன் பின் விசாகன் ஐயாவுக்கும் எனக்கும் மிக நெருக்கமான உறவு ஏற்பட்டிருந்தது. வயதிற்கு அப்பாற்ப்பட்டு அவர் என்னை ஒரு நண்பனைப் போலதான் நடத்தினார். வீட்டிற்கு அழைத்தார். நெருங்கிப் பழகினார்.

என்னைப் போல அவருமே ஒரு தனிமனிதன்தான். மனைவி குழந்தைகள் என்று யாரும் இல்லை. அவரும் அவருடைய எழுத்தும் மிஞ்சிப் போனால் இலக்கிய நண்பர்கள் மற்றும் வாசகர்கள்தான் அவரின் சிறிய உலகத்தில்.

ஆனால் மற்ற எல்லோரையும் விடவும் அவர் என்னிடம் நெருக்கமாக இருந்தார். அடிக்கடி சந்திப்பது இலக்கியம் சார்ந்த மற்றும் எழுத்துகள் சார்ந்து உரையாடுவது என்று எங்கள் உறவு நாளுக்கு நாள் நெருக்கமானது.

அவருக்கு சிகரெட் மற்றும் குடிபழக்கம் இருந்தது. ஒரு கையில் பேனாவும் மறு கையில் சிகரெட் புகையுமாகதான் இருப்பார். அதுவும் இரவானால் போதை நிலைக்குச் சென்றுவிடுவார். மெல்ல மெல்ல அந்தப் பழக்கங்கள் எல்லாம் என்னையும் ஒட்டிக் கொண்டது.

அவரைச் சந்திக்கும் சமயங்களில் நானும் குடித்துவிட்டு வருவேன். அம்மாவால் கண்டுபிடிக்க முடியாது. ஆனால் அன்பு கண்டுபிடித்து என்னைக் கண்டிப்பான். தப்பு என்பான். அவன் தப்பு என்று சொன்னதாலயே நான் அதனைத் தொடர்ந்து செய்தேன்.

அதனுடன் சிகரெட் பிடிக்கவும் ஆரம்பித்தேன். ஒரு நாள் அதிகம் குடித்துவிட்டதில் விசாகன் என்னை வீட்டிலேயே தங்கிக் கொள்ள சொன்னார். அப்போதுதான் அவர் வீட்டிற்கு வந்த ஒரு விலைமாதரைக் கண்டேன். அழகாக இருந்தாள்.

அவர் எப்போதுமே தன்னை நல்லவன் ஒழுக்கமானவன் என்று எல்லாம் சொல்லிக் கொண்டதில்லை. ஆனால் இந்தப் பழக்கம் எனக்குக் கொஞ்சம் அதிர்ச்சியாகதான் இருந்தது.

பெண்களைப் பற்றி அவர் எழுத்தில் எழுதுவதற்கும் இயல்பில் அவர் கொண்டிருக்கும் இந்தப் பழக்கமும் ஒன்றோடு ஒன்று முரண்பட்டிருப்பதாக நான் அவரிடம் நேரடியாகவே சொல்லிவிட்டேன்.

‘எழுத்தாளன் தான் எழுதுற எழுத்தோடவும் கருத்தோடவும் எப்பவும் ஒத்துப் போகணும்னு எல்லாம் அவசியமில்ல... அப்படி இருக்க மாதிரி வெளி உலகத்துக்கு நடிச்சா போதும்... வாசகர்கள் முன்னாடி நம்ம எப்பவும் எழுத்தாளன்கிற முகமூடியைக் கழட்டிடவே கூடாது.

அவன் கண்ணுக்கு நாம எப்பவுமே எழுத்தாளன்தான்... ஆனா தனிப்பட்டு நமக்குன்னு ஒரு முகம் இருக்கு இல்ல... அது நமக்கு மட்டும் தெரிஞ்சா போதும்’

எழுத்தாளன் என்ற அடையாளத்திற்கு நல்லவன் பகுத்தறிவாளர் பெண்ணியவாதி என்பன போன்ற முகமூடிகள் தேவையாக இருப்பதாகச் சொல்வார். தேவைக்கு ஏற்றார் போல அவற்றை மாட்டிக் கொள்ளவும் மாற்றிக் கொள்ளவும் வேண்டுமென்பார்.

‘அவர் ஒரு ஹிப்போகிரைட்!’ அதிர்வதா அல்லது குழம்புவதா என்று எனக்குப் புரியவில்லை.

அந்த விவாதத்தின் இறுதியில் அவர் சொன்னதைதான் என்னால் ஏற்கவே முடியவில்லை.

எழுத்தாளனாக இருக்க இது போன்ற சில ஒழுக்க மீறல்களும் தேவை என்றார்.

அதெப்படி அப்படிச் சொல்ல முடியும்? அவருடைய கருத்துடன் அப்போது என்னால் உடன்பட முடியவில்லை. ஆனால் அவர் மனித உணர்வுகளின் அடிப்படை தேவைகள் இவை என்று திரும்பத் திரும்ப என்னிடம் சொல்லிக் கொண்டே இருந்தார்.

காதலும் காமமும் கதைகளுக்கு முக்கியம்தான். சுவராசியத்தைக் கூட்டுபவைதான். ஆனால் எழுத்தாளன் வாழ்க்கையிலும் அது அவசியமானதாக இருக்க வேண்டுமென்று எல்லாம் இல்லையே!

ஆனால் ஆசான் என் கருத்தை ஏற்கவில்லை. ஏற்காவிட்டாலும் பரவாயில்லை. எள்ளல் செய்து சிரித்தார். உனக்குப் பெண்களிடம் பழகுவதில் ஏதோ பிரச்சனை இருக்கிறது என்றார்.

அது குத்தலா அல்லது கிண்டலா? எனக்குப் புரியவில்லை. ஆனால் ஒரு வகையில் அவர் கணிப்பு கொஞ்சம் சரிதான்.

நான் பெண்களுடன் அதிகம் பழகுபவன் அல்ல. பேசுபவனும் அல்ல. பருவ வயதில் நான் காதலித்த பெண் என்னை நிராகரித்த பின் பெண்களை அணுகவே பயம். தோற்றுப் போய்விடுவோமோ என்ற பயம்.

இதெல்லாம் நான் விசாகனிடம் சொல்லவில்லை. ஆனால் மேலோட்டமாக இது போன்ற அனுபவங்களில் எனக்கு விருப்பம் இல்லை என்று மறுத்தேன். அவர் சிரித்தார். என்னைக் கேலிச் செய்தார்.

விருப்பம் இல்லை என்றால் எனக்குள் வேறெதோ பிரச்சனை இருப்பதாகச் சுட்டினார். அந்த வார்த்தை என்னைப் பெரிதுமாகப் பாதித்தது. வீம்புக்கு என்று அடுத்த முறை அவர் அறிமுகப்படுத்திய பெண்ணுடன் நான் தனிமையில் இருந்தேன்.

ஆனால் என்னால் அவள் முகத்தைப் பார்த்துப் பேசக் கூட முடியவில்லை. பேசவே முடியாது எனும் போது வேறென்ன எங்களுக்குள் நிகழ்ந்திருக்கப் போகிறது.

அடுத்த நாள் விசாகன் என்னிடம், “உனக்கு விவரம் பத்தலயாம்... சின்னப் பையன்னு சொல்லிட்டுப் போறாடா” என்று சொல்லிச் சிரித்ததோடு அல்லாமல்,

“போடா... என்னை அசிங்கப்படுத்திட்ட” என்று எள்ளி நகைத்தார். என்னால் தாங்கவே முடியவில்லை. உள்ளுர பற்றி எரிந்தது. ஒரு பெண் என்னை இப்படி பேசிவிட்டாலே என்று ஆத்திரமாகக் கிளம்பியது.

அந்த வார்த்தை என்னை ரொம்பவும் தொந்தரவு செய்தது. தூங்க விடவில்லை. நான் அந்தப் பெண்ணை மீண்டும் தேடிப் போனேன். அதே இளக்கார பார்வை. எனக்கு அந்தப் பார்வை பிடிக்கவில்லை.

மனதில் பற்றிக் கொண்ட தீ. அது இன்னும் இன்னும் கொழுந்துவிட்டு எரிந்தது. எனக்கு விவரம் தெரியாது என்று எப்படி அவள் சொல்வாள். அவர் வார்த்தைகளைப் பொய்யாக்கிவிட வேண்டுமென்ற கோபம்.

வாழ்க்கையில் முதல் முறையாக ஒரு பெண்ணின் ஸ்பரிசத்தை உணர்ந்தேன். அப்படி நான் ஸ்பரிசித்த முதல் பெண்தான் பிரேமி. அப்படிதான் அவள் எனக்கு அறிமுகமானாள்.

என்னிடம் இலகுவாகப் பழகிய முதல் பெண்ணும் அவள்தான். அதற்கு பின் சில பல பெண்களைப் பார்த்திருக்கிறேன். அனுபவித்தும் இருக்கிறேன்.

பெண்ணுடல் நிச்சயம் அனுபவிக்க வேண்டிய ஒரு போதைதான். ஆசான் வார்த்தைகளில் பொய்யில்லை. அனுபவம் புதிதாகவும் பல விதமாகவும் இருந்தது. ஆனால் அப்படியான அனுபவங்களில் பிரேமிதான் எனக்கு மிகவும் நெருக்கமானவளாகவும் பிடித்தமானவளாகவும் இருந்தாள் .

என் நினைப்பை தடைச் செய்யும் விதமாக அன்பு சத்தமாகச் சிரித்து வைத்தான். நான் வண்டியை ஓட்டிக் கொண்டிருப்பதும் அவன் என் பின்னே அமர்ந்திருப்பதும் அப்போதே என் நினைவுக்கு வந்து தொலைத்தது.

இப்படி அடிக்கடி நிகழ்வதுதான். வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தாலும் என் மூளை ஏதாவது சிந்தனையில் ஆழ்ந்துவிடும். அன்பு இன்னும் சிரித்துக் கொண்டிருந்தான்.

“என்னடா பிரச்சனை உனக்கு? எதுக்குடா சிரிக்குற?”

“இல்ல உனக்கு நெருக்கமான ஃபிரண்ட்ஸ்னு பிரேமியை யோசிச்சு பார்த்தியே... அதைப் பத்தி நினைச்சுதான் சிரிச்சேன்” என்றவன் சொல்லி மீண்டும் ஒரு இளக்கார சிரிப்பு சிரித்தான்.

“அதுல என்னடா சிரிக்குறதுக்கு இருக்கு? பிரேமி என்னோட நல்ல ஃபிரண்டு... விசாகன் எனக்கு ஒரு நல்ல ஆசான்” என்று நான் சீறியபடிச் சொல்ல,

“நீ சொல்றது எல்லாம் ஓரளவு கரெக்ட்தான்... ஆனா அதேநேரம் அதுல நிறைய முரண்பட்ட விஷயங்களும் இருக்கு... ஆக்சுவலி நீயும் ஒரு ஹிப்போகிரைட்தான்” என்று அவன் கூற,

“என்னடா சொன்ன?” என்று நான் சீறினேன்.

“பிரேமி விஷயத்துக்கே வருவோமே... அவ உனக்கு ஒரு நல்ல ஃபிரண்ட்தான்... உனக்குக் கிடைச்ச ஒரே நல்ல ஃபிரண்ட்... ஆனா நீ அவளுக்கு நல்ல ஃபிரண்டா?” என்ற கேள்விக்கு நான் உடனடியாகப் பதில் சொல்ல முடியவில்லை. யோசித்தேன்.

“அதான் இல்லன்னு உன் மனசாட்சிக்கே தெரியுதே... நீ அவளை உன் தேவைக்கு யூஸ் பண்ணிக்கிட்ட... முக்கியமா அவகிட்ட நெருக்கமா இருந்த மாதிரி காட்டி அவ குடும்ப வாழ்க்கையில் ஏற்பட்ட வலிகள் பத்தி எல்லாம் கேட்டுத் தெரிஞ்சுகிட்டு அப்படியே அவ வாழ்க்கையை வைச்சு ஒரு கதையை எழுதி முடிச்சிட்ட... அந்தக் கதை நல்லா ஹிட் ஆகிடுச்சு.”

”உனக்குப் பேர் வாங்கிக் கொடுத்தது... ஆனா கதையோட சொந்தக்காரிக்கு அதைப் பத்தி ஒரு வார்த்தை கூடத் தெரியாது... நீயும் சொல்லல”

இவன் எதற்கு இதை எல்லாம் கிளறிக் கொண்டிருக்கிறான். எனக்கு கோபமாக வந்தது. ஆனால் அன்பு நிறுத்தாமல் தொடர்ந்தான்.

“அடுத்து எழுத்தாளர் விசாகன்... உனக்கு ஒரு ஆசான்தான்... ஆனா நல்ல ஆசானான்னு கேட்டா” என்று சொல்லி நிறுத்த,

“போதும் நிறுத்து... விசாகன் ஐயாவைப் பத்திப் பேசாத... எனக்குன்னு யாருமே இல்லாத போது அவர்தான் என் கூட இருந்தார்... இன்னைக்கு எனக்குன்னு ஒரு அடையாளம் இருக்குனா அதுக்கு அவர்தான் காரணம்” என்று நான் கோபமாகப் பேச,

“சரி அவர் உனக்காக இருந்தாருனு ஒத்துக்கிறேன்... ஆனா அவர் இறந்த பிறகு என்னாச்சுன்னு உனக்கு ஞாபகம் இருக்கா?” என்றவன் கேள்வி நேராக அவர் மரணத்தைக் காட்டியது.

இறந்து இரண்டு நாட்கள் அவர் உடல் வீட்டில் நாற்றம் பிடித்து அழுகி கிடந்தது. குடித்து விட்டு தள்ளாடிக் கீழே விழுந்தவர் இரத்தம் அதிகமாக வெளியேறியதில் இறந்து போய்விட்டார்.

அழுகிய நாற்றம் வந்த பிறகுதான் கதவை உடைத்துப் பார்த்தனர். இப்படி அவர் விதி முடியுமென்று நான் நினைக்கவே இல்லை. நானும் அப்போது என்னுடைய முதுகலை பட்டப் படிப்பின் இறுதி வருடதேர்விற்காக மும்முரமாக படித்துக் கொண்டிருந்தேன். ஆதலால் அவரைத் தொடர்பு கொள்ளவில்லை.

விஷயம் தெரிந்து வந்த விசாகனின் குடும்ப உறுப்பினர்கள் அவசர அவசரமாக அவரின் ஈமச்சடங்குகளை முடித்து வீட்டைப் பூட்டிக் கொண்டு சென்றுவிட்டனர்.

எழுத்தாளர் விசாகனுக்கு ஆர் ஐ பி போட்டதோடு சமூக ஊடகங்களும் அடங்கிவிட்டன. என்னைப் பாதித்த அளவுக்கு கூட வேறு யாரையும் அவரின் இழப்பு பாதிக்கவில்லை.

இன்னும் கடைகளில் அவருடைய புத்தகங்கள் விற்பனையில் இருந்தன. இறந்த பிறகும் அவர் எழுத்துக்கு மதிப்பு இருந்தது. ஆனால் ஒரு சாமான்ய மனிதனாக அவரைப் பற்றி யோசித்தவர்கள் அழுதவர்கள் பெரிதாக யாருமில்லை.

உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் நானுமே கூட அவருக்காக அழவில்லையே. ஏனென்று தெரியவில்லை. அழுகை வரவில்லை. அவ்வளவுதான். ஆனால் இரண்டு மூன்று நாட்கள் தூங்க முடியாமல் அவஸ்த்தைப்பட்டேன். பின் அதுவும் ஒரு மாதிரி சரியாகிவிட்டது.

யோசித்துக் கொண்டே வந்த போது பைக் சடாரென்று நின்றுவிட்டது.

“என்னாச்சு?” ஸ்டார்ட் செய்தேன். முக்கிக் கொண்டே இருந்தது. ஆனால் இயங்கவில்லை.

“பெட்ரோல் இருக்கா?” என்று அன்பு கேட்டான். அப்போதுதான் யோசித்தேன். கடைசியாக எப்போது பெட்ரோல் போட்டேன் என்று நினைவில்லை.

டேங்கைத் திறந்து ஆட்டிப் பார்த்தேன். உஹும் ஒரு துளி கூட இல்லை.

வீட்டிற்கு செல்ல இன்னும் இரண்டு கிலோ மீட்டருக்கு மேல் நடக்க வேண்டும். பக்கத்தில் பெட்ரோல் பங்க் இருக்கிறது. ஆனால் அதற்கு மீண்டும் வண்டியைத் திருப்பிக் கொண்டு ஒரு கிலோ மீட்டர் நடக்க வேண்டும்.

பேசாமல் திரும்பி பெட்ரோல் போட்டுவிட்டு வரலாம் என்றாலும் வண்டியைத் தள்ள வேண்டும். பெருமூச்செறிந்து கொண்டு என்ன செய்வது என்று புரியாமல் நான் குழம்பி நிற்க,

“யார்கிட்டயாச்சும் ஃபோன் பண்ணி ஹெல்ப் கேளு” என்றான் அன்பு. நல்ல யோசனைதான்.

என் செல்பேசியை எடுத்தேன். ஐந்து சதவீத சார்ஜுடன் அது தன் உயிரை இழுத்துப் பிடித்துக் கொண்டிருந்தது. அதில் நிறைய எண்கள் இருந்தன. ஆனால் யாரிடமும் இது போன்ற உதவிகளை நான் இதுவரை கேட்டதில்லையே.

நான் யோசித்துக் கொண்டிருக்கும் போது அன்புவின் செல்பேசி நினைவுக்கு வந்தது. அதனை எடுத்துப் பார்த்தேன். அணைத்து வைக்கப்பட்டிருந்தது. ஆன் செய்தேன்.

என்னுடையதை விட பத்து சதவீதம் அதிகமாகவே அதில் சார்ஜ் இருந்தது.

“நீ சிவாவுக்கு ஃபோன் பண்ணு... வருவான்” என்று அன்பு சொல்ல, நானும் அழைத்துவிட்டேன்.

“இப்பதான் உனக்கு ஃபோன் பண்ணலாம்னு நினைச்சேன்... நீயே ஃபோன் பண்ற”

ஆனால் அவன் அழைப்பை ஏற்றதும் என்ன பேசுவது எப்படி பேசுவது என்று எனக்குப் புரியவில்லை.

“உங்க தெருவுல இருக்க முச்சந்தி விநாயகர் கோவில் முன்ன நிற்குறேன்... பெட்ரோல் தீர்ந்துடுச்சுனு சொல்லு” என்றவன் சொன்னதைக் கேட்டு அப்படியே சொன்னேன்.

அடுத்த இரண்டு நிமிடத்தில் அவன் வந்து நின்றான்.

“இங்கதானே நின்னு போச்சு... வீட்டுக்குத் தள்ளிட்டு வர வேண்டியதுதானேடா” என்றவன் உரிமையாகப் பேசினான். நான் திருதிருவென்று விழித்தேன்.

சிலமுறைகள் அன்புவுடன் அவனைப் பார்த்திருக்கிறேன். அவன் என்னிடம் பேசினாலும் நான் அவனிடம் அதிகமாகப் பேசியதில்லை.

“பார்க்க ரொம்ப டயர்டா இருக்க... சரி விடு... நான் வண்டியைத் தள்ளிட்டு வர்றேன்... ஆமா நைட்டே வந்திருவன்னு பார்த்தேன்... ஃபோன் பண்ணா ஸ்விட்ச் ஆஃப்னு வந்துச்சா... நான் பயந்துட்டேன்... நீ வருவ வருவன்னு வெயிட் பண்ணி அப்படியே தூங்கிப் போயிட்டேன்... நீ இப்போ கால் பண்ணவும்தான் எழுந்தேன்” என்றவன் பாட்டுக்குப் பேசிக் கொண்டே வண்டியைத் தள்ளிக் கொண்டு செல்ல நான் திரும்பி அன்புவைக் குழப்பமாகப் பார்த்தேன்.

“அவன் முன்னாடி என்கிட்ட பேசி வைக்காதே... உன்னைப் பைத்தியம்னு நினைப்பான்” என்று கூறினான்.

“அவன் இப்போ என்னைப் பைத்தியம்னு நினைக்குறதா பிரச்சனை... அவன் என்னை அன்புன்னு நினைச்சிட்டு இருக்கான்... அதான் இப்போ பிரச்சனை” என்று வாயிற்குள் முனங்க,

சிவா என் புறம் திரும்பி, “டேய் வண்டியைத் தள்ளிட்டு வர்ற நானே வேகமா நடக்கிறேன்... நீ ஏன் டா இப்படி ஆடி அசைஞ்சு வர்ற... நேரத்தோட கோவிலுக்குப் போக வேணாமா... அங்க கல்யாணத்தை முடிச்சிட்டு ரெஜிஸ்டர் ஆஃபிஸ் வேற போகணும்... சீக்கிரம் வாடா” என்றான்.

நான் ஸ்தம்பித்து நின்றுவிட்டேன். சிவா என்னைத் திரும்பிப் பார்க்காமல் முன்னே சென்று கொண்டிருந்தான். நான் அன்புவைத் திரும்பிப் பார்த்தேன். அவனைக் காணவில்லை.

‘இவன்கிட்ட என்னை மாட்டிவிட்டு இவன் எங்க போய்த் தொலைஞ்சான்’ என்று தேடிய போதுதான் கவனித்தேன்.

சூரியனின் செங்கதிர்கள் மெல்ல மெல்ல அந்தக் கரும்போர்வையை விலக்கிவிட்டு மேலெழும்பி வந்தன.

விடிந்து விட்டது. வெற்றிகரமாக அன்றைய நாள் தொடங்கியது.

நான் அப்படியே நின்று கொண்டிருப்பதைப் பார்த்து, “டேய் நடுரோட்ல நின்னுட்டு என்னடா பண்ற? வாடா... நேரமாகுது” என்று கத்தினான் அன்புவின் நண்பன்.

வேறு வழி இல்லாமல் அவன் பின்னோடு நடந்து அந்த வீட்டிற்குள் நுழைந்தேன். சிறிய வீடுதான்.

பைக்கை ஓரமாக நிறுத்தியவன் அப்போதே ஏதோ யோசனை வந்தவனாக என்னைச் சந்தேகமாகப் பார்த்தான்.

“ஆமா... போகும் போது நீ பஸ்ல இல்ல போன... இப்போ என்ன பைக்ல வர்ற... அதுவும் இது உன் உடன்பிறப்போட பைக்காச்சே... அவன் உனக்குக் கொடுக்கமாட்டானேடா” என்று சிவா யோசனையாகக் கேட்க எனக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை.

“என்னவோ நடந்திருக்கு... நீ என்கிட்ட சொல்ல மாட்டுற” என்றவன் கூர்மையாக நோக்க அவன் பார்வையிலிருந்து தப்பிக்க ஏதாவது பதில் சொல்ல வேண்டியிருந்தது

“எதுவும் இல்ல... பைக் தேவைப்பட்டுச்சு... எடுத்துட்டு வந்தேன்” என்றேன்.

“அந்த நல்லவன் பெட்ரோல் கூடப் போடாம வைச்சிருந்தானாக்கும்... அதுவும் உனக்குக் கொடுக்கும் போதே கடுப்புல கொடுத்திருப்பான்” என்றவன் என்னைக் குறித்துச் சொன்னது எரிச்சலை கிளப்பிய போதும் அந்த உணர்வைக் கட்டுப்படுத்திக் கொண்டு,

“அதெல்லாம் ஒன்னும் இல்ல” என்று சொல்லியபடி அவனுடன் வீட்டிற்குள் நடந்தேன்.

“அம்மா ஊர்ல இருந்து நாளைக்குதான் வருவாங்களாம்... உன்கிட்ட சொல்ல சொன்னாங்கடா... கல்யாணம் முடிச்சதும் மஹாவை இன்னைக்கு இங்கயே கூட்டிட்டு வந்திரலாம்... நாளைக்கு நீ எங்க போறதுன்னு முடிவு பண்ணு” என்றவன் கடைசியாகப் பேசிய வார்த்தைகளைக் கேட்டதும் நான் விழிப்படைந்து நிமிர்ந்தேன்.

“எனக்குக் கொஞ்சம் தலைவலிக்குற மாதிரி இருக்கு சிவா” என்று அவனிடம் சொல்ல,

“டீ குடிக்கிறியா” என்று கேட்டான்.

“ம்ம்ம்”

“சரி நான் போட்டு எடுத்துட்டு வர்றேன்... நீ இப்படி உட்காரு”

அமைதியாக அந்தச் சிறிய வீட்டின் மூலையில் கிடந்த நாற்காலியைப் பிரித்துப் போட்டு அமர்ந்தேன். என்னிடம் சண்டையிட்டு விட்டு வந்து இங்கேதான் அன்பு தங்கி இருந்திருக்கிறான். அவனது லேப்டாப் அங்கே ஓரமாக கிடந்தது.

அவனுக்கு என்ன? எங்கு திரும்பினாலும் நண்பர்கள். அவனுக்கு ஒரு உதவி என்றால் ஓடி வருகிறார்கள். தனக்கு அப்படி யாராவது இருக்கிறார்களா என்று யோசித்துப் பார்த்தால் இல்லைதான்.

சிவா டீ போட்டு எடுத்து வந்து கொடுத்தான். குடித்துக் கொண்டே அவனைப் பார்த்தேன். இயல்பாகப் புன்னகைத்தான். இப்போது வரை இவன் என்னை அன்பு என்றுதான் நினைத்துப் பேசிக் கொண்டிருக்கிறான். அவனுக்கு என்னிடம் எதுவும் வித்தியாசமாகத் தெரியவில்லை போலும். துளி கூட சந்தேகம் வரவில்லை.

ஏன்? நானும் அன்பு இல்லை அறிவு என்று அவனிடம் சொல்லவில்லை.

ஏன் சொல்லவில்லை?!

ஏன் சொல்ல வேண்டும்?

Cancel “தூரமில்லை விடியல்” நாவல் முடிவுபெற்றது. விரைவில் “கண்ணாடி துண்டுகள்” மீண்டும் தளத்தில் பதியப்படும். வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா