மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumMonisha Ongoing novels: Mathipukuriyavalமதிப்புக்குரியவள் - அத்தியாயம் 17Post ReplyPost Reply: மதிப்புக்குரியவள் - அத்தியாயம் 17

Quote from monisha on January 28, 2026, 7:11 PM

அத்தியாயம் – 17

பிரகாஷ் குழுமத்தின் தலைமை இயக்குநராக ரஞ்சன் அன்று பொறுப்பேற்க இருந்தான். அதனை பிரகாஷ் மிகப் பெரிய விழாவாக ஏற்பாடு செய்திருந்தார். சென்னை அலுவலகத்தில் நடக்கும் அந்த விழாவில் முதல் முறையாக ரஞ்சன் உரையாற்றுவதாகவும் திட்டமிடப்பட்டு இருந்தது.

இதற்கு எல்லாம் காரணம் அவள்தான். அவள் இல்லாமல் இது எதுவுமே சாத்தியம் இல்லை. ஆனால் ஏனோ அவள் மனம் இதை எல்லாம் நினைத்து சந்தோஷமைடயவில்லை. மாறாக ஏதோவொரு சஞ்சலம்.

ஒரு வாரமாகவே அவன் வீட்டில் இல்லை. தாத்தாவுடன் சேர்ந்து மற்ற மாநிலங்களிலும் உள்ள கிளை அலுவலங்களைப் பார்வையிடச் சென்றிருந்தான்.

கிளம்பும் போது, “நீங்களும் எங்க கூட வரலாம் இல்ல” என்று அவளையும் அழைத்தான்.

“அஜயும் பேமிலியோட டூர் போயிருக்கான். இதுல நானும் ஆபிஸ்ல இல்லனா எப்படி ரஞ்சன். அதுவும் இல்லாம இது உன் ஆபிஸ்தானே... நீ போய் பார்த்தா போதாதா” என்று கூறி மறுத்துவிட, அவன் முகம் சுருங்கிவிட்டது. அதை நினைத்து எல்லாம் அவள் கொஞ்சமும் வருத்தப்படவில்லை.

எப்போதும் போலத் தன் வேலைகளைப் பார்த்து வந்தாள். இரண்டு, நாள், மூன்று நாள் என்று நாள்கள் ஓட, அவள் மனம் தன்னையும் அறியாமல் அவனைத் தேட ஆரம்பித்துவிட்டது.

அந்த வீடு முழுக்க அவனும் அவளும் சேர்ந்திருந்த நினைவுகள், பால்கனியில் நின்று தேநீர் அருந்திய மாலைகள், உடல் நிலை சரியில்லாத போது அவளை அக்கறையாக அவன் கவனித்துக் கொண்ட நிமிடங்கள், ஏசி வேலை செய்யவில்லை என்று ஒரே அறையில் இருவரும் தூங்கிய இரவுகள், என்று ஒவ்வொரு மூலையிலும் அவன் ஞாபகங்கள் அவளைத் துரத்தத் தொடங்கியது.

அந்த உணர்வு அவளுக்குப் புதிதாக இருந்தது. அஜய் தவிர வேறு யாருடனும் அவளுக்கு உணர்வு ரீதியான நெருக்கம் இருந்ததில்லை. அஜயின் பிரிவிற்குக் கூட அவள் இந்தளவு வருந்தியது இல்லை. ஆனால் ரஞ்சனின் பிரிவு அவளை என்னவோ செய்தது.

தினமும் தவறாமல் அவளுக்கு அழைத்து என்ன நடந்தது எங்கே சென்றோம் என்று அவன் ஆர்வமாக விவரிக்கும் போது அவள் அடிமனதிலிருந்து ஒரு குரல், ‘நீ எப்போ வருவ ரஞ்சன்’ என்று கேட்கச் சொல்லித் தூண்டியது.

‘சீக்கிரம் வந்துடு’ என்று கெஞ்சியது. ஆனால் அவள் எதையும் வாய் வார்த்தையாகச் சொல்லவில்லை. இந்தப் பயணம் அவனுக்கு மிகவும் முக்கியமானது. நிறைய மனிதர்களைப் பார்த்துப் பேசுவதற்கான சந்தர்ப்பங்கள் அமையும். அவன் இந்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

ஆதலால் தன்னுடைய தவிப்புகள் எதையும் அவனிடம் அவள் காட்டிக் கொள்ளவில்லை. அதேநேரம் சாப்பிட முடியாமல் தூங்க முடியாமல் என்று தனக்குள்ளாகவே புழுங்கினாள். எப்போது அவன் திரும்பி வருவான் என்று ஏங்கினாள். அதேநேரம் அவனுக்காக ஏங்கிக் கிடக்கும் அந்தக் கணங்களை அவள் மனதார ரசித்தாள்.

அன்று காலை அவன் சென்னை வந்துவிடுவான் என்ற தகவலை அறிந்ததிலிருந்து ‘அவன் எப்போது வருவான்’ என்று அவள் மனம் அல்லாடத் தொடங்கிவிட்டது.

ஒருபக்கம் அவன் வருகையை எண்ணி அவள் மனம் பரவசம் அடைந்தாலும் மறுபக்கம் இதுதான் அவர்கள் உறவின் கடைசி நாளாகிவிடுமோ என்ற பயமும் உள்ளூர சுருண்டு கிடந்தது.

அதுவும் அவர்கள் உறவின் நோக்கம் முழுவதுமாக நிறைவேறிய பின் இருவரும் சேர்ந்திருக்க வேண்டிய எந்த அவசியமும் இல்லையே.

இதெல்லாம் யோசிக்க யோசிக்க அவளுக்கு உறக்கமே வரவில்லை . விடிந்ததுமே பால்கனியில் தேநீருடன் வந்து நின்றவள் அது ஆறிப்போனது கூட தெரியாமல் தூரமாக எதையோ வெறித்துக் கொண்டிருந்தாள்.

அப்போது வாசலில் அழைப்பு மணி அடிக்க, ரஞ்சன்தான் வந்துவிட்டான் என்று எண்ணி அவசர அவசரமாகச் சென்று கதவைத் திறந்தாள்.

“வீடெல்லாம் கூட்டி பெருக்கிடட்டும்மா?” என்று கேட்டுக் கொண்டே அப்பெண் நுழைய, அவள் முகத்தில் அப்பட்டமான ஏமாற்றம்.

“சரி சரி பெருக்கும் போது அந்த பெட் ரூமையும் கிளீன் பண்ணிடுங்க.”

“இன்னைக்கு ரஞ்சன் சார் வந்துடுவாராமா”

“வருவாரு” என்று சுரத்தையே இல்லாமல் சொல்லிவிட்டு ஆறிப்போன தேநீரை மீண்டும் சூடுச் செய்தாள்.

‘ப்ளைட் விடியற்காலையிலேயே வந்திரும்னுதானே தாத்தா சொன்னாரு. அப்புறம் ஏன் ஒரு கால் ஒரு மெசஜ் எதுவுமே போடல. ம்ம்ம் அவன் ஏன் கால் பண்ண போறான். இனிமே அவனுக்கு என் தேவை என்ன இருக்கு’ என்று புலம்பிக் கொண்டே தேநீர்க் கோப்பையுடன் வந்து சோபாவில் அமர்ந்தாள்.

“ம்மா இந்த பேப்பரு சாரோட கட்டிலுக்கு அடியில பெருக்கும் போது கிடைச்சுது. ஏதாச்சும் முக்கியமான பேப்பரரா?” என்று கேட்க அவள் அதனை வாங்கி பார்த்தாள்.

அதில் இரண்டு மாத முந்தைய ஆர்டர்களின் பட்டியல்கள் இருந்தன.

“முக்கியம் எல்லாம் ஒன்னும் இல்ல. குப்பையில போட்டிரு” என்று அதனைத் திருப்பிக் கொடுத்தவள் அந்தத் தாளின் பின்பக்கத்திலிருந்த கிறுக்கல்களைப் பார்த்ததும், “இப்படி கொடுங்க” என்று மீண்டும் அதனை வாங்கி திருப்ப, அவள் கண்கள் வியப்பில் விரிந்தன.

அந்தப் பக்கம் முழுக்க தன் கையெழுத்தை அவன் பல மாதிரியாகப் போட்டுப் பார்த்திருந்தான். ஆனால் வெறும் ‘ரஞ்சன்’ என்று இல்லை. ‘ரஞ்சன் கவிதா’ என்று.

அதனைப் பார்த்த கணம் சட்டென்று கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது. அத்தனை நேரம் அவளுக்குள் இருந்த தவிப்பு மொத்தமும் அழுகையாக உருமாறியது.

அவள் யாருக்காகவும் அப்படி அழுததில்லை. ஏன் அவனுக்காக? அவளுக்கு இப்போதும் புரியவில்லை. அந்தத் தாளைப் பத்திரப்படுத்தி வைத்தவள் குளித்து முடித்து தன்னுடைய வாட்ரூபை திறந்தாள்.

“எனக்கு நீலம்தாங்க பிடிச்ச கலர். அதுவும் அந்த வானத்தோட நீலம் இருக்கு இல்ல. அது ரொம்ப பிடிக்குங்க” என்றவன் ஒருமுறை பேசும் போது சொன்னதை நினைவு கூர்ந்தவள், அதே நிறத்தில் அவளிடமிருந்த ஒரு புடவை உடுத்திக் கொண்டாள். மேலும் அந்த நிறத்திற்கு ஏற்றார் போலக் காதணி, செயின், வளையல் போன்றவற்றை அணிந்து கொண்டு கண்ணாடியில் பார்த்தாள்.

முதல் முறையாக அவன் கண்களுக்குத் தான் அழகாகத் தெரிய வேண்டுமென்று தன்னை பார்த்துப் பார்த்து அலங்கரித்துக் கொண்டாள். அதன் பின் பையை மாட்டிக் கொண்டு வெளியே வர, “வீட்டை சுத்தம் செஞ்சுட்டேன். டிபனுக்கு என்ன சமைக்கட்டும்” என்று கேட்டாள் அந்தப் பணிப்பெண்.

“இல்ல எதுவும் வேண்டாம். நீங்க கிளம்புங்க” என்றவள் வீட்டைப் பூட்டிக் கொண்டு மின்தூக்கியில் ஏறினாள்.

ஒருமுறை அந்த மின்தூக்கி இயங்காமல் நின்ற நொடி இருவரும் அச்சத்தில் ஒருவர் கையை மற்றவர் இறுகப்பற்றிக்கொண்ட நொடி கண்முன்னே வந்து போனது.

அந்தச் சமயத்தில் அது எதுவுமே அவளைப் பாதிக்கவில்லை. ஆனால் இன்று அந்த நினைவுகள் எல்லாமே ஒன்றாகச் சேர்ந்து அவளை மூழ்கடித்தது.

மீண்டும் எப்போதும் அப்படிப் பிடித்துக் கொள்வோம் என்றுஏக்கம் உண்டானது.

இப்படி ஒவ்வொரு அடியிலும் அவனுடனான நினைவுகளுக்குள் புகுந்து வந்தவள், பிரகாஷின் அலுவலகத்திற்குச் செல்லும் வழியிலிருந்த ஃப்ளவர் ஷாப்பில் நிறுத்தி ஓர் அழகான சிவப்பு ரோஜா பூங்கொத்தை வாங்கிக் கொண்டாள்.

அதன் அட்டையில், ‘ஆல் தி பெஸ்ட்’ என்று எழுதி கீழே கவிதா ரஞ்சன் என்று கையெழுத்திட்டாள். அப்போது அவள் செல்பேசி ஒலித்தது.

அதனை ஆவலாக எடுத்தவள் பின் ஏமாற்றத்துடன், ‘அம்மாவா, சரி அப்புறம் பேசிக்கலாம்’ என்று அழைப்பைத் துண்டித்துவிட்டாள்.

இரண்டு மூன்று முறை அழைப்பு தொடர்ந்து வர, “எதுக்கு இப்போ திரும்ப திரும்ப அடிக்குறாங்க. ஆபிஸ் போயிட்டு கூப்பிட மாட்டேனா” என்றவள் கடுப்புடன் எடுத்து, “ம்மா நான் கொஞ்சம் பிசியா இருக்கேன். அப்புறம் பேசட்டுமா?” என்றாள்.

“உனக்கு இந்த உலகத்துல என்னைத் தவிர எல்லோரும் முக்கியம் இல்ல”

“ம்மா என்னம்மா பேசிட்டு இருக்க நீ, நான் வண்டி ஓட்டிட்டு இருக்கேன்”

“நான் நடுத்தெருவுல நிற்குறேன்டி”

அவள் காரை ஓரங்கட்டினாள்.

“என்னாச்சு” என்று நிதானமாகக் கேட்க, அவரிடம் பதில் இல்லை.

“ம்மா உன்னைத்தான் கேட்குறேன். என்னாச்சு?”

“உன்னை நல்லா ஏமாத்திட்டாங்கடி” என்றவர் உடைந்து அழுதார்.

“என்னம்மா சொல்ற?”

“நான் கடைக்கு போயிட்டு அப்பதான் உள்ளே நுழையுறேன். அப்ப ரஞ்சனோட பாட்டிகிட்ட ஐயாவும் அந்த ரஞ்சனும் உன்னை பத்தி ரூம்ல பேசிட்டு இருந்ததை நான் கேட்டேன்”

“என்னை பத்தி என்ன பேசிக்கிட்டாங்க”

“வயசு ஜாஸ்தியான பொண்ண என் பேரனுக்கு ஏன் கட்டி வைச்சீங்கனு அந்தம்மா ஐயா கிட்ட சண்டை போட்டுட்டு இருந்தாங்க”

“ப்ச், இதான் உன் பிரச்னையா” என்றவள் சலிப்புடன் உச்சு கொட்ட, “இல்ல. இதுக்கு அந்த ரஞ்சன் சொன்ன பதில்தான் பிரச்னை” என்றார்.

“என்ன சொன்னான்”

“அவன் உன்னை காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டானாம்”

“என்ன?”

“நீ வேணும்னு அவங்க தாத்தாகிட்ட அவன் கேட்டிருக்கான்”

“என்னமா சொல்ற நீ”

“இன்னுமா புரியல. நீ தாத்தா தாத்தானு பாசமா கூப்பிடுறியே அந்த மனுஷன். அவர் பேரன் உன் மேல ஆசைப்பட்டதால உன்னை ஏமாத்தி இந்த கல்யாணத்தை நடத்தி வைச்சிருக்காரு” என்றவர் சொல்லி முடிக்க, முதலில் அதிர்ந்தவள் பின்னர், “ம்மா உன் இஷ்டத்துக்கு ஏதாவது அரைகுறையா கேட்டுட்டு உளறாத” என்றாள்

“யாருடி உளறா? அந்த பெரிய மனுஷன் உன்கிட்ட பொய் பொய்யா சொல்லி ஏமாத்தி அவர் பேரனுக்கு உன்னை கட்டி வைச்சதா சொன்னதை எல்லாம் நான் என் காதால கேட்டேன்டி.”

“இல்ல, நீ சொல்ற மாதிரி இருக்க எல்லாம் வாய்ப்பே இல்ல. தாத்தாவும் ரஞ்சனும் என்னை...”

“பெத்த அம்மா சொல்றதை நீ நம்ப மாட்ட. ஆனா அவங்க எல்லோரும் சொல்றதை நீ கண்ணை மூடிட்டு நம்புவ அப்படிதானே?”

“அப்படி இல்லம்மா ஆனா...”

“நான் என் காதால கேட்டேன் கவிம்மா. அந்த ரஞ்சன் அவங்க பாட்டி தலையில அடிச்சு சத்தியம் பண்ணான். அவன் உன்னை முன்னாடியே காலேஜ்ல எல்லாம் பார்த்திருக்கானாம். அவங்க பேசுனதை எல்லாம் கேட்க கேட்க எனக்கு என்ன பண்றதுனே தெரியல. அதுக்கு அப்புறம் என்னால அந்த வீட்டுக்குள்ள இருக்க முடியல. திரும்பி நடந்து ரோட்டுக்கு வந்துட்டேன்.” என்றவர் சொன்னதை எல்லாம் கேட்டவள் தலையைப் பிடித்துக் கொண்டு, “இப்பவும் என்னால நம்ப முடியலம்மா.” என்றாள்.

“நான் ஏன்டி உன்கிட்ட பொய் சொல்லணும்”

“நீங்க பொய் சொன்னீங்கனு இல்ல. ரஞ்சன் அவங்க பாட்டியை சமாளிக்குறதுக்காக எதாவது சொல்லி இருப்பான். நீங்க அதை தப்பா புரிஞ்சுட்டு இருப்பீங்க”

“அந்த ரஞ்சன் உன்னை பத்தி சொல்றதை எல்லாம் நீ காதால கேட்டிருக்கணும். அதுவும் அவன் வயசு வித்தியாசம் பார்க்காம உன் மேல ஆசைப்பட்டு இருக்கான்”

“ம்மா நானும் அவனை” என்றவள் அடுத்த வாரத்தையை சொல்ல முடியாமல் நிறுத்திவிட்டாள்.

“அப்போ அவன் உன்னை நல்லா முட்டாளகிட்டான்” என்று அவர் கேட்கவும், “போதும் நிறுத்து ம்மா” என்று அவள் கத்திவிட்டாள்.

“அந்த ரஞ்சன் அப்பாவி மாதிரி நடிச்சு உன்னை ஏமாத்திட்டு இருக்கான்” என்றவர் மீண்டும் சொல்ல,

“ம்மா போதும்னு சொன்னேன்” என்று பல்லைக் கடித்தவள், “நீ ஒழுங்கா வீட்டுக்கு போ. நான் அப்புறம் வந்து உன்னை பார்க்குறேன்” என்றவள் அதற்கு மேல் பேச விரும்பாமல் அந்த அழைப்பைத் துண்டித்துவிட்டாள்.

மீண்டும் அவள் காரை இயக்கிய சமயம் ரஞ்சனிடமிருந்து அழைப்பு வந்தது. காலையிலிருந்து அவனிடம் பேச வேண்டுமென்று அவள் தலைவியாய் தவித்துக் கொண்டிருந்தாள். ஆனால் இந்த மனநிலையுடன் அவனிடம் பேச முடியுமென்று அவளுக்கு தோன்றவில்லை.

ஆதலால், ‘ஐம் ட்ரைவிங்’ என்ற ஒரு குறுந்தகவலை போட்டுவிட்டாள். அருகே இருந்த இருக்கையில் அவனுக்காக வாங்கிய பூக்கள் அழகாகச் சிரித்துக் கொண்டிருந்தன.

அந்த நொடி ரஞ்சன் தன்னை ஏமாற்றக் கூடும் என்று அவளால் கற்பனை கூடச் செய்து பார்க்க முடியவில்லை. அம்மா சொன்னது எதுவும் உண்மையாக இருக்கக் கூடாது என்று திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டு காரை இயக்கினாள்.

அவள் அலுவலகத்திற்கு வந்து சேர்ந்த சமயம் அங்கே வாயிலில் ராகவன் தன்னை உள்ளே விடச் சொல்லி காவலாளிகளிடம் பிரச்னை செய்து கொண்டிருந்தார்.

‘இன்னைக்கு நமக்கு நேரமே சரியில்ல’ என்று வாயில் அருகே நடந்தவள், “உங்களுக்கு இப்போ என்ன வேணும்” என்று ராகவனிடம் கேட்டாள்.

“எனக்கு என் புள்ளைய பார்க்கணும்”

“எதுக்கு பார்க்கணும். நீங்க அவனுக்கு செஞ்சது எல்லாம் பத்தலயா... சொந்த புள்ளயவே அடிமை மாதிரி நடத்தி அவன் வாழ்க்கையையே நாசப்படுத்தி”

“என்னடி சொன்ன” என்றவர் அவளிடம் எகிறி கொண்டு போக, காவலாளிகள் அவரை தடுத்துப் பிடித்தனர்.

“எதுக்கு கோபப்படுறீங்க. நான் உண்மையைதானே சொன்னேன்”

“உனக்கு என்னடி தெரியும் என்னைப் பத்தி”

“மரியாதையா பேசுங்க”

“உனக்கு என்னடி மரியாதை. சொத்துக்காக என் புள்ளைய ஏமாத்தி கட்டிக்கிட்டவதானே” என்றவர் கேட்கவும் அவள் கோபம் உச்சத்தை தொட்டது.

“யாரு நான் சொத்துக்காக கல்யாணம் பண்ணேனா. நீதான்யா சொத்துக்காக சொந்த புள்ளயவே உன் கண்ட்ரோல வைச்சுக்க நினைச்ச” என்றவள் சொன்னதை கேட்டு அவருடைய ஆத்திரம் கூடியது.

“என் சர்வீஸ்ல ஒரு நாள் கூட எவன்கிட்டயும் ஒத்த பைசா லஞ்சம் வாங்கினதுடி இல்ல நான். என்னை போய் சொத்துக்காக ஆசைப்படுறேன் சொல்ற”

“அப்படியா? அப்புறம் ஏன் கேஸ் போட்டீங்க?”

“நான் கேஸ் போட்டேனா... யார் சொன்னா உனக்கு நான் கேஸ் போட்டேன்னு. இந்த கெழவனோட சாவகாசமே வேணாம்னுதான் எங்க அத்தையும் நானும் இருக்கோம். இதுல இந்த சொத்துக்காக நான் ஏன் கேஸ் போடணும்” என்றவர் கேள்வியில் அவள் அப்படியே அதிர்ச்சியில் உறைந்து நின்றாள்.

அதன்பின் ராகவன் மூர்க்கமாகக் காவலாளிகளிடம் சண்டையிட்டு கொண்டிருந்தது எல்லாம் எங்கேயோ தூரமாகக் கேட்டது.

‘அப்படினா அம்மா சொன்னது எல்லாம்...’

அவள் மனதளவில் சில்லு சில்லாக நொறுங்கிக் கொண்டிருந்தாள்.

மறுபக்கம் நிகழ்ச்சி ஆரம்பித்த சத்தம் கேட்டது.

தலையை உலுக்கிக் கொண்டவள் காவலாளிகளைப் பார்த்து, ”அவரை விடுங்க” என்றாள்.

“இல்ல மேடம் இந்த ஆளு”

“அவர் ரஞ்சனோட அப்பா. அவர் போகட்டும்”

“இல்ல சார்கிட்ட”

“நான்தான் சொல்றேன் இல்ல. அவரை உள்ள விடுங்கன்னு” என்ற அவள் கட்டளையாகச் சொல்லவும், வேறு வழியில்லாமல் அவர்கள் கதவைத் திறந்துவிட்டனர்.

அதேநேரம் மேடையில் ரஞ்சன் பேச அழைக்கப்பட்டான். ஆனால் அவனோ கவிதா வருகிறாளா என்று வாசலையே பார்த்துக் கொண்டிருந்தான்.

“போ போய் பேசு ரஞ்சு” என்று தாத்தா அவன் தோளில் தட்ட அவர் அருகே அமர்ந்திருந்த சாரதாவும், “போ தைரியமா பேசு” என்று பேரனின் கையை அழுத்திப் பற்றினார்.

அவன் கண்களில் நீர் சுரந்தது. பாட்டியும் தாத்தாவையும் எப்படியாவது சேர்த்து வைக்க வேண்டுமென்ற அவன் எண்ணம் இன்று ஈடேறிவிட்டது.

எல்லாவற்றிற்கும் கவிதாதான் காரணம். அவள் வராமல் எப்படித் தான் பேசுவது என்று சிந்தித்துக் கொண்டே ஒலிவாங்கியின் முன்பு சென்று நின்றான்.

மீண்டும் ஏக்கத்துடன் வாசலைப் பார்த்தவன், பின்னர் அரங்கத்தில் அமர்ந்திருந்த அத்தனை பேரின் விழிகளும் தன் மீது பதிந்திருப்பதைக் கவனித்தான்.

மெதுவாக, ‘குட் மார்னிங் டூ ஒன் அன் ஆல்’ என்று தன் உரையை ஆரம்பித்தான்.

அவன் பேசிக் கொண்டிருந்த சமயத்தில் ராகவன் அந்த அரங்கிற்குள் நுழைய, அவரை பார்த்த நொடி அவன் கண்கள் பயத்தை நிரப்பிக் கொண்டன. குரல் தடுமாறியது. பேசுவதை நிறுத்திவிட்டான்.

‘அய்யய்யோ இவனை யார் உள்ள விட்டது’ என்று பிரகாஷ் பதற, சாரதாவும் கவலையுடன் பேரனைத் திரும்பிப் பார்த்தார்.

அப்போது அவனுக்குள் ஒரு குரல். ‘யாரை பத்தியும் எதை பத்தியும் யோசிக்காத. உன்னோட போகஸ் முழுக்க உன் ஸ்பீச்லதான் இருக்கணும். பேசி முடிக்குற வரைக்கும் எங்கேயும் நீ தடுமாறக் கூடாது நிறுத்த கூடாது’.

அவனுடைய பயத்தை எப்படி வெல்வது என்று கவிதா சொல்லிக் கொடுத்திருக்கிறாள். அவள்தான் அவன் தைரியம். அவளை நினைவில் கொண்டு வந்து நிறுத்தினான். ஒரு நொடி கண்களை மூடி திறந்தான். மூச்சை இழுத்துவிட்டுக் கொண்டு மீண்டும் பேசத் தொடங்கினான்.

அதன் பின் பேச்சை முடிக்கும் வரை அவன் எதைப் பற்றியும் யாரைப் பற்றியும் கவலைப்படவில்லை.

மகனை அடிக்க கோபத்துடன் அந்த அரங்கிற்குள் பாய்ந்து வந்தவர், அவன் உரையைக் கேட்ட நொடியில் அப்படியே ஸ்தம்பித்து நின்றுவிட்டார்.

அவன் முழுவதுமாக பேசி முடிக்க, அந்த அரங்கமே கைத்தட்டல் ஒலியில் அதிர்ந்தது.

உடனடியாக மேடையிலிருந்து இறங்கிய ரஞ்சன் தந்தையின் அருகே சென்று அவர் கைகளைச் சேர்த்துப் பிடித்தான்.

“உங்ககிட்ட சொல்லாம வந்தது தப்புதான் பா. என்னை மன்னிச்சிடுங்க” என்றான்.

அவனை நம்பாமல் பார்த்துக் கொண்டிருந்தவர், “ப்ளீஸ் ப்பா என்னை மன்னிச்சிடுங்க ப்பா” என்று மீண்டும் சொல்லவும், அவர் எதுவுமே பேசவில்லை. அப்படியே மகனை இறுக அணைத்துக் கொண்டுவிட்டார்.

அந்தக் காட்சியைப் பார்த்த பிரகாஷ் சாரதாவின் மனமும் உருகிப்போனது. கண்களில் நீர் பெருகியது.

கவிதா இதை எதிர்பார்க்கவில்லை. அந்த விழாவை நிர்மூலமாக்க வேண்டுமென்றுதான் அவரை உள்ளே விடச் சொன்னாள். முக்கியமாக ரஞ்சனை!

ஆனால் அவள் நினைத்தது எதுவும் நடக்கவில்லை. அதற்கு நேர்மாறாக அங்கே நடந்த காட்சியைப் பார்த்தவள் யார் பார்வையிலும் படாமல் மீண்டும் காருக்கு திரும்பிவிட்டாள்.

உள்ளே இருந்து பூங்கொத்தைத் தாறுமாறாகப் பிய்த்துத் தூக்கி வெளியே எரிந்தாள். தான் ஏமாற்றப்பட்டுவிட்டோம் என்பதை யோசிக்கும் போதே அவளுக்கு அசிங்கமாகவும் அவமானமாகவும் இருந்தது.

ஸ்டியரிங்கில் தன் கைகளைக் குத்தி அழுது கொண்டிருந்த சமயம் அவள் செல்பேசி அடித்தது.

“உங்க அம்மா ரோட்ல மயங்கி விழுந்துட்டாங்க. கொஞ்சம் சீக்கிரம் வர முடியுமா” என்று தகவல் வரவும், அங்கிருந்து காரை எடுத்துக் கொண்டு கிளம்பியவள்தான்.

அதற்குப் பிறகு அவர்கள் யார் முகத்திலும் மீண்டும் அவள் விழிக்கவில்லை. தன் அம்மாவையும் உடன் அழைத்துக் கொண்டு சென்னையிலிருந்து தூரமாகச் சென்று விட்டாள்.

Cancel “மதிப்புகுரியவள்” புத்தம் புது நாவல்… புது களம்… வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா