மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumMonisha Ongoing novels: Kadhalum KabadamumKadhalum Kabadamum - Episode 11Post ReplyPost Reply: Kadhalum Kabadamum - Episode 11

Quote from monisha on July 6, 2026, 6:48 PM

11

யாத்ரா சில நிமிடங்கள் அப்படியே அசையாமல் அமர்ந்திருந்தாள். திரையில் ஓடும் காட்சிகள், சத்தமாகக் கத்தும் ரசிகர்கள் எதுவும் அவளுக்குள் சென்று சேரவில்லை. அவன் சொன்ன வார்த்தை... அது மட்டும்தான் திரும்பத் திரும்ப அவள் மூளைக்குள் ஓடிக்கொண்டிருந்தது.

‘அவனைப் பார்த்துப் பேசணும்னுதான் என்கிட்ட பழகிட்டு இருக்கியோ?’

அந்த ஒரு வரி… அவளைக் குத்திக் கிழித்தது. ரணப்படுத்தியது. இப்படி எல்லாம் யாரும் அவளை அவமானப்படுத்திப் பேசியதாக அவளுக்கு நினைவில் இல்லை. அவளால் அதற்கு மேல் அங்கே உட்கார முடியவில்லை. வெளியே வந்து நின்றதும், இரவின் குளிர்ந்த காற்று அவள் முகத்தில் மோதியது. ஆனால் உள்ளே எரிந்துகொண்டிருந்த அந்த உணர்வுக்கு அது எந்தத் தணிவையும் தரவில்லை.

போனை எடுத்து கார்த்திக்கின் நம்பரைப் பார்த்தாள். அழைக்க நினைத்தாள்… ஆனால் விரல் ‘கால்’ பட்டனைத் தொடாமல் நின்றது.

‘நான் தான் தப்பா பேசிட்டேனா…? அவன் தான் ஓவரா ரியாக்ட் பண்ணானா…?’ தனக்குள்ளாகவே கேட்டுக்கொண்டிருந்த அதேசமயம், தியேட்டரிலிருந்து கிளம்பிய கார்த்திக், காரை வேகமாக ஓட்டிக்கொண்டிருந்தான். ஸ்டீயரிங்கைப் பிடித்த கைகளில் அவ்வளவு இறுக்கம்!

அவனுக்கே அவன் கோபம் புரியவில்லை. சில நிமிடங்கள் கழித்து, காரை ஓரமாக நிறுத்தினான். அவனும் போனை எடுத்தான். யாத்ரா… அந்தப் பெயரைப் பார்த்ததும் அவன் கோபம் கொஞ்சம் இறங்கியது. அதேநேரம் ஈகோவை விட்டுக்கொடுக்கவும் மனம் வரவில்லை. குறுந்தகவல் ஒன்றை போட்டான்.

‘வீட்டுக்கு போனதும் மெசேஜ் பண்ணு’. அதைப் பார்த்ததும் அவள் கண்கள் பெரிதாகின. சில நொடிகளுக்குப் பிறகும் அவள் பதில் அனுப்பினாள்.

“நீங்க பேசுனது சரியா?” உடனடியாக அவன் பதில் அனுப்பினான்.

“நீ பேசினது சரியா இருந்துச்சுன்னு நினைக்கிறியா?”

அந்த நொடியே போனைத் தூக்கி பையில் போட்டுக்கொண்டு வீட்டிற்குத் கிளம்பினாள். ஒரு வாரம் கழிந்தது. இருவருமே தங்கள் ஈகோவையும் கோபத்தையும் விட்டுக்கொடுத்து இறங்கி வரத் தயாராக இல்லை. இந்த மனநிலையில் யாரிடமும் பேசாமல் தனிமையில் உட்கார்ந்திருக்கும் தங்கையை இந்திரன் புரியாமல் பார்த்தான். என்ன ஏதென்று சிலமுறை விசாரித்தான். அவளிடம் எந்தத் தெளிவான பதிலும் இல்லை.

ஏற்கனவே அவனுக்கு நிச்சய ஏற்பாடுகள் செய்யும் வேலை தலைக்கு மேல் இருந்ததால், அதற்கு மேல் அவன் அவளைத் தோண்டித் துருவவில்லை.

கார்த்திக்கின் நிலைமையும் அதுதான். ஆனாலும் யாத்ராவை நினைக்காமல் அவனால் இருக்க முடியவில்லை. பித்து பிடிப்பது போலிருந்தது. ஆனால் அவள் செய்ததுதான் தவறு என்று தீர்மானமாக நம்பியதால் அவன் இறங்கிப் போகத் தயாராக இல்லை.

நிச்சயத்திற்கு இரண்டு நாளே இருந்த நிலையில் அவனின் இரண்டாவது அக்கா மேகலா வந்திருந்தாள்.

“என்னக்கா மாமா பசங்க எல்லாம் வரலையா?” என்றவன் விசாரிக்க,

“இல்லடா, அவர் நேரா நிச்சயத்துக்கு வந்திடுவாங்க,” என்றாள்.

மகளைச் சந்தேகமாக நோக்கிய தேன்மொழி கார்த்திக்கிடம், “ஏதாவது சண்டை கிண்டை போட்டு வந்துட்டாளா தெரியல,” என்று அச்சப்பட்டார்.

“சும்மா இருங்கம்மா, அப்படி எல்லாம் இருக்காது... நீங்க எதுவும் அக்காவைக் கேட்டு வைக்காதீங்க,” என்று அமைதிப்படுத்திவிட்டு அறைக்கு வந்தவன் அப்படியே படுக்கையில் சுருண்டுவிட்டான்.

“சாப்பிட வரலையா அண்ணா?” என்று கேட்ட சௌந்தர்யாவிடம்,

“மதியம் ஒரு பார்ட்டிக்கு போயிருந்தேன்... ரொம்ப ஹெவியா சாப்பிட்டேன் பசிக்கல,” என, அவள் மேலே எதுவும் கேட்டுக்கொள்ளவில்லை.

செல்பேசி எடுத்து வாட்ஸ்அப்பைத் திறந்து அவள் ஏதாவது அனுப்பி இருக்கிறாளா என்று பார்த்தான். அவன் கடைசியாக அனுப்பிய குறுந்தகவலில் நின்றது.

‘உனக்கு இவ்வளவு வீம்பு ஆகாதுடி’ என்று எரிச்சலானவன், தன் உடைகளுக்கு அடியில் மறைத்து வைத்திருந்த சரக்கு பாட்டிலை எடுத்துக்கொண்டு மாடிக்குச் செல்ல, அங்கே சகோதரிகளின் குரல் கேட்டது.

மேகலா அழுதுகொண்டிருந்தாள். “என்னக்கா என்னாச்சு?” என்று சௌந்தர்யா விசாரிக்க,

“முடியலடி என்னால... ரொம்ப பண்றாரு... எங்க இருக்கோம்னு என்னனு கூட யோசிக்காம எல்லோர் முன்னாடியும் கத்துறாரு, திட்டுறாரு... இதுவே நான் ஏதாவது ஒரு வார்த்தை சொல்லிட்டா கூட மானம் போச்சு மரியாதை போச்சுங்குறாரு... ஏன் எனக்கு அதெல்லாம் இல்லையா?” என்று சொல்லித் தேம்பிய அக்காவின் வார்த்தைகள் அவனை நேரடியாகத் தாக்கியது.

அதற்கு மேல் அங்கே நிற்காமல் கீழே வந்துவிட்டான். அக்கா சொன்னதையும் அன்று தியேட்டரில் நடந்ததையும் ஒப்பிட்டுப் பார்த்தான். மாமா அக்காவுக்குச் செய்த அவமானத்தைதான் யாத்ராவிற்குத் தானும் செய்தோம் என்று உணர்ந்தபோது மனம் குற்றவுணர்வில் தவித்தது. உடனடியாகச் செல்பேசி எடுத்து அவளுக்கு அழைக்க, எடுக்கவில்லை. வாட்ஸ்அப்பில் கேட்ட மன்னிப்பிற்கும் எந்த எதிர்வினையும் இல்லை.

அடுத்த நாளே அவளது அடுக்குமாடி குடியிருப்புக்குச் சென்றவன், இந்திரன் கிளம்பிச் செல்லும் வரை காத்திருந்துவிட்டு சென்று கதவைத் தட்டினான். கதவைத் திறந்த யாத்ரா அவனை கண்ட நொடி ஸ்தம்பித்துவிட்டாள். ஒரு வாரமாக அவனைப் பார்க்காமல், பேசாமல் உள்ளிருந்த தவிப்பெல்லாம் மனதிலிருந்து பொங்கியது.

“யாத்ரா ஐம் சாரி,” என்றவன் சொன்ன மறுகணமே அன்று நடந்தது எல்லாம் நினைவில் குதித்தது. கதவை அவள் மூடிவிட எத்தனிக்க, அவன் கை தடுத்துப் பிடித்தது.

“நான் தப்பு செஞ்சிட்டேன்... என்னை மன்னிச்சிடு ப்ளீஸ்... ப்ளீஸ் யாத்ரா,” என்றவன் கெஞ்ச, அவள் கேட்கவில்லை. அழுத்தி கதவை மூட முயன்றாள். ஆனால் அவன் பிடி உறுதியாக இருந்தது.

“இப்போ கதவை விடப் போறீங்களா இல்லையா?” என்றவள் கத்திக்கொண்டிருக்கும் போது, பக்கத்து வீட்டுக்காரர் சத்தம் கேட்டு அங்கே வந்தார்.

“யாருப்பா நீ... தனியா இருக்கப் பொண்ணுகிட்ட பிரச்னை பண்றியா... ஆமா எப்படி உன்னை செக்யூரிட்டி உள்ளே விட்டான்?” என்றவர் படபடவென்று பேசிக்கொண்டே கையில் செல்பேசியை எடுக்க, கார்த்திக் திகைப்புற்றான்.

அதற்குள் யாத்ரா, “அங்கிள் இவர் எங்க ரிலேஷன்தான்,” என,

“ஆனா,” என்றவர் இழுக்க,

“நீங்க உள்ளே வாங்க,” என்று உடனடியாகக் கார்த்திக்கை உள்ளே விட்டு கதவை மூடினாள். இருவரும் எதிரெதிரே நின்றனர்.

“யாத்ரா ஐம் சாரி...” என, அவன் முகத்தைத் திரும்பி கூடப் பாராமல் அவள் நிற்கவும், “இனிமே இப்படிப் பேச மாட்டேன்... நடந்துக்க மாட்டேன்... சத்தியமா மாட்டேன் ப்ளீஸ்,” என்று கெஞ்சினான். அப்போதும் அவள் விழிகள் அவன் புறம் திரும்பவும் இல்லை. பேசும் எதற்கும் எந்த எதிர்வினையும் காட்டவும் இல்லை.

“யாத்ரா ப்ளீஸ் இப்படி இருக்காதே... ஏதாவது பேசு... என்னை பாரு.”

அத்தனை நேரம் இல்லாமல் அவள் மெதுவாகத் தலையை உயர்த்தி அவனைப் பார்த்தாள். “இந்த ஒரு வாரமா எனக்கு அப்படியே பைத்தியம் பிடிச்ச மாதிரி இருந்துச்சு... சாப்பிட முடியாம, தூங்க முடியாம... ஏன் கத்தி அழக்கூட முடியாம...”

“ஏய் எனக்கும் அப்படித்தான்டி இருந்துச்சு,” என்றவன் மெல்ல அவளை நெருங்கி வர,

“வேணாம்... எதுவும் வேணாம்... என்னை விட்டுடுங்க ப்ளீஸ்,” என்று சொல்லி கையெடுத்துக் கும்பிட, “அதான் சொல்றேன் இல்ல, நான் அப்படிப் பேசுனது தப்புதானு... ப்ளீஸ் என்னை மன்னிச்சிடு யாத்ரா” என்றவன் இறங்கி பேசவும் அவள் மௌனமாகிவிட்டாள்.

“என்னை மன்னிக்க மாட்டியா?”

அவள் அப்போதும் அப்படியே நின்றாள்.

“இதுக்கு மேல எனக்கு என்ன பேசுறதுன்னு தெரியல... நான் கிளம்புறேன்,” என்றவன் வாயிலை நோக்கிப் போகவும் அவன் கையை அவள் பற்றிக்கொண்டாள். அவன் திரும்ப, “என்னால உங்களைப் பார்க்காம பேசாம இருக்க முடியல... ப்ளீஸ் இனிமே இப்படிப் பண்ணாதீங்க,” என்றாள்.

“கண்டிப்பா மாட்டேன்,” என்றவன் அவள் முகத்தைப் பார்த்து, “எங்க நீ என்னை மன்னிக்கவே மாட்டியோன்னு பயந்துட்டேன்,” என்று மேலும் சொல்ல, அவள் உதடுகள் விரிந்தன.

“நானும் எங்கே நீங்க என்னை தேடியே வர மாட்டீங்களோன்னு பயந்துட்டேன்,” என்று தேம்பியவளின் கன்னங்களில் வழிந்திருந்த கண்ணீர் தடங்களை, தன் கரங்களால் மென்மையாக வருடித் துடைத்தான் கார்த்திக்.

“இனி எப்பவும் இப்படிச் செய்ய மாட்டேன்,” என்ற அவனது குரலில் இருந்த உறுதி, அவள் மனதை ஆற்றுப்படுத்தியது.

“ஐ லவ் யூ கார்த்திக்,” என்று அடுத்த நொடியே மார்பில் சாய்ந்து இறுக்கமாக அணைத்துக்கொண்டாள் யாத்ரா. கார்த்திக் இதைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை. முதல் முறையாக ஒரு பெண்ணின் ஸ்பரிசம்... ஏதோ ஒரு மின்சாரம் பாய்ந்தது போலிருந்தது. உடலை விட்டுத் தன் மனம் மட்டும் தனியாகக் கழன்று காற்றில் மிதப்பது போன்ற ஓர் உணர்வு.

அவளை திருப்பி அணைத்துக்கொள்ளத் துடித்த கரங்களை மிகவும் பிரயத்தனப்பட்டுத் தடுத்துக்கொண்டான். அவளது கூந்தலின் நறுமணமும், அந்த அணைப்பின் வெப்பமும் அவன் உறுதியைச் சோதித்தது.

“வேணாம் யாத்ரா... ப்ளீஸ்... என் கண்ட்ரோலை மீறிப் போகுது. உன் அண்ணன் அவங்க தங்கச்சிகிட்ட பேசினதைப் பார்த்தே எனக்கு அவ்வளவு கோபம் வந்தது... இப்போ நாம பண்றது இந்திரனுக்குச் செய்யுற துரோகம் போல இருக்கு. வேணாம்,” என மெல்லிய குரலில் சொல்ல, அவன் உணர்வைப் புரிந்தவளாக அவளே விலகிச் சுவரோரம் சாய்ந்து நின்றாள்.

“நான் கிளம்புறேன்,” என்று அவசரமாய்த் திரும்பியவன், அவளையே பார்த்துக்கொண்டு நடந்ததில் எதிர்பாராமல் கதவில் முட்டிக்கொண்டான்.

அவள் ‘பக்கென்று’ சிரித்துவிட, அந்தச் சிரிப்பொலி அங்கே நிலவிய அத்தனை நேர இறுக்கத்தையும் சிதறடித்தது. தலையைத் தேய்த்துக்கொண்டே அவனும் அசட்டுச் சிரிப்புடன் வாசல் கதவைத் திறந்து வெளியே சென்றான்.

யாத்ரா பெருமூச்சை இழுத்துவிட்டாள். ஆனால், அடுத்த சில நொடிகள்... வெளியே சென்றவன் மீண்டும் உள்ளே வந்தான். அவள் என்னவென்று கேட்பதற்குள், அவளைத் தன்னோடு சேர்த்தணைத்துக் கொண்டான்.

யாத்ராவின் முகம் அவன் தோளில் புதைய, “கார்த்திக்...” என்று அவள் நெகிழ்ந்து விளிக்க,

“என்னால முடியலடி... ஒரு வாரமா இந்தத் தவிப்புல செத்துப் பிழைச்சிருக்கேன். கொஞ்ச நேரம் இப்படியே இரு,” என்றவனின் குரலில் அத்தனை காதல்!

சில நிமிடங்கள் அந்த அறையில் மௌனமாக காதல் மட்டுமே சுவாசித்தது. மெல்ல விலகியவன், அவள் முகத்தை ஏறிட்டான். அது அந்திச் செவ்வானமாகச் சிவந்திருந்தது.

“போயிட்டு வரேன்.”

“போயிட்டு திரும்பவும் வருவீங்களா?” என்றவள் கிண்டலாகச் சிரிக்க,

“இந்தத் தடவை கண்டிப்பா போறேன்.”

“நிஜமாவா?”

“நிஜமா,” என்றவன் நிறைந்த புன்னகையுடன் வாசலைக் கடக்க, அந்த ஒரு வார காலத் தவிப்பு அனைத்தும் அந்த ஒரே அணைப்பில் கரைந்து போயிருந்தது. இருவரின் மனம் சிறகில்லாத பறவையாய்க் காற்றில் மிதக்கத் தொடங்கியது.

Cancel “மதிப்புகுரியவள்” புத்தம் புது நாவல்… புது களம்… வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா