மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumMonisha Ongoing novels: Kadhalum KabadamumKadhalum Kabadamum - Episode 16Post ReplyPost Reply: Kadhalum Kabadamum - Episode 16

Quote from monisha on July 6, 2026, 6:52 PM

16

அமரேஷைச் சந்திக்க வந்த அந்த முகம் தெரியாத பெண் யாத்ரா என்பதை கார்த்திக்கால் ஜீரணித்துக்கொள்ளவே முடியவில்லை. இருப்பினும் அப்போதைக்குத் தன்னுள் பொங்கிய மற்ற உணர்ச்சிகளை எல்லாம் தள்ளி வைத்துவிட்டு நிதானத்தைக் கடைபிடித்தான்.

அந்த ஓட்டுநரிடம், “இப்போதைக்கு அந்தப் பொண்ணு பத்தி யார்கிட்டயும் எதுவும் பேசிக்காதீங்க... அமரேஷ் இமேஜ்தான் ஸ்பாயில் ஆகும்... பெரிய முதலாளிகிட்ட கூட சொல்ல வேண்டாம்... நானே சொல்லிக்கிறேன்,” என்று முடித்தான்.

“சரிங்க சார்,” என்று அவர் சம்மதிக்கவும், பெருமூச்செறிந்தவன் அடுத்ததாக யாத்ராவை நேரில் பார்த்து இது பற்றிய உண்மையை அறிய வேண்டுமென்று நினைத்தான்.

இரவு கோவையிலிருந்து கிளம்பியவன் எங்கேயும் வண்டியை நிறுத்தவில்லை. விடியற்காலையில் சென்னையை வந்தடைந்தவன், வீட்டிற்கு வந்ததுமே குளித்து முடித்து உடை மாற்றிக் கிளம்பிவிட்டான்.

“எங்கடா வந்துட்டு அவசர அவசரமா போற?” என்று நிறுத்தினார் தேன்மொழி.

“முக்கியமான வேலைம்மா, வந்துடுறேன்,” என்றவன் நேராக இந்திரன் வீட்டிற்குச் சென்றான். யாருமே அவனை அவ்வளவு காலையில் எதிர்பார்க்கவில்லை.

குமார் அவனை வரவேற்று அமர வைக்க, பிரியா தேநீர் கோப்பையுடன் வந்து நின்றார். அதனைப் பெற்றுக்கொண்டவன் விழிகள் யாத்ரா எங்கே என்று தேடியபடி இருந்தன. அது அங்கிருந்த எல்லோருக்கும் நன்றாகத் தெரிந்தது.

“யாத்ரா இன்னும் எழுந்திருக்கலையா?” என்று குமார் மனைவியிடம் மெதுவாகக் கேட்க, “நான் போய் பார்க்கிறேன்,” என்று அவர் உள்ளே சென்றார். இந்திரனின் முகத்தில் அவ்வளவு கடுப்பு. அவன் கார்த்திக்கை முறைத்தபடி நிற்க, குமார் மெதுவாகப் பேச்சை ஆரம்பித்தார்.

“யாத்ராவும் நீங்களும் விரும்புறீங்கன்னு அவ அவங்க அம்மாகிட்ட சொன்னா,” என்றதும் கார்த்திக் அதிர்வுடன் நிமிர்ந்தான்.

“எங்களுக்கு எங்க பசங்க விருப்பம்தான் எப்பவும் முக்கியம். பையன் பொண்ணுன்னு நாங்க எந்த வித்தியாசமும் பார்க்க மாட்டோம்... அவளுக்கு உங்களைத் தான் பிடிச்சிருக்குன்னா உங்களுக்குச் சந்தோஷமா கல்யாணம் பண்ணிக் கொடுப்போம்,” என்றவர் பேசியதை எல்லாம் கேட்ட கார்த்திக்கின் விழிகள் இயல்பாக இந்திரனிடம் சென்று நின்றன.

அவன் முகத்தில் இப்போதும் அதே விருப்பமின்மை தெரிய, குமார் உடனே, “நீங்க இந்திரன் பேசுனதை எல்லாம் மனசுல வச்சுக்காதீங்க. அவன் ஏதோ தங்கச்சி மேல இருக்கிற பாசத்துல அப்படிப் பேசிட்டான்,” என்றார்.

கார்த்திக் புன்னகையுடன், “இந்திரன் பேசுனது தப்பு இல்ல... ஒரு அண்ணனா அவரோட மனநிலையைப் புரிஞ்சுக்க முடிஞ்சுது... அதுவும் இல்லாம நான் செஞ்சதும் தப்புதான்,” என்று ஒப்புக்கொள்ள, இந்திரன் வியப்புற்றான்.

குமார் அதற்குப் பதிலுரையாக, “காதல் யாருக்கு யார் மேல வரும்னு எல்லாம் சொல்ல முடியாது தம்பி... என் பொண்ணுக்கு உங்களைப் பிடிச்சதும், உங்களுக்கு அவளைப் பிடிச்சதும் எதார்த்தமான விஷயம்தான்,” என்றார்.

இப்படி எல்லாம் பெற்றோர்கள் உண்டா என்று அவன் அதிசயிக்கும் போதே, “நான் எப்பவும் காதலுக்குத் தடையா இருக்க மாட்டேன்... ஆனா ஒண்ணு... யாத்ரா படிப்பை முடிக்கணும்,” என்று குமார் திட்டவட்டமாகச் சொன்னார்.

“யாத்ராவோட விருப்பமும் அதுதானா?” என்று கார்த்திக் திருப்பிக் கேட்க, குமார் முகம் மாறியது. என்ன சொல்வதென்று திணறிய சமயத்தில் இந்திரன் இடையிட்டு, “அவளுக்கு இப்போ படிப்புதான் முக்கியம்,” என்று அழுத்திக் கூறினான்.

“அதைப் பத்தி நானும் யாத்ராவும் தனியாப் பேசி முடிவெடுக்கணும்,” என்று கார்த்திக் சொன்னதைக் கேட்டு எரிச்சலுற்ற இந்திரன், “இதுல தனியாப் பேச என்ன இருக்கு?” என்று வினவினான்.

“நான் யாத்ராகிட்ட தனியாப் பேசியாகணும்,” என்று கார்த்திக் பிடிவாதமாகக் கூற, குமார் உடனே, “சரி பேசுங்க தம்பி,” என்றார். “அப்பா!” என்ற இந்திரனைப் பேசவிடாமல் பார்வையால் அடக்கினார்.

அதே சமயம் அறைக்குள் யாத்ராவை உலுக்கி எழுப்பிவிட்ட பிரியா, “கார்த்திக் வந்திருக்கான்,” என்ற தகவலைக் கூற, அவள் தடாலடியாக எழுந்து உட்கார்ந்தாள். அந்த நொடியே அமரேஷ் பற்றி கார்த்திக்குத் தெரிந்திருக்குமோ என்ற பயம் வந்தது.

படுக்கையில் அப்படியே சிலையாக அமர்ந்துவிட்ட மகளைத் தோளில் அடித்த பிரியா, “எழுந்து போய் முகத்தை எல்லாம் அலம்பிட்டு வா... கார்த்திக் உன்கிட்ட தனியாப் பேசணுமாம்,” என்று சொல்ல, அவளுக்கு இன்னும் பதற்றம் கூடியது. மறுவார்த்தை பேசாமல் குளியலறைக்குள் சென்றுவிட்டாள்.

கை கால்கள் எல்லாம் நடுங்கியது. முகத்தில் தண்ணீரை வாரி இறைத்துக்கொண்ட போதும் உள்ளத்திலிருந்த பதற்றமும் உடலிலிருந்து நடுக்கமும் குறையவில்லை.

“இன்னும் என்னடி உள்ளே பண்ற... வெளிய வா சீக்கிரம்!” என்று பிரியா அதட்ட, முகத்தைத் துடைத்தபடி கதவைத் திறந்தாள். அப்போது பிரியா மெதுவாக, “இதப் பாரு, கார்த்திக் கேட்டா படிச்சு முடிச்சுட்டுதான் கல்யாணம்னு சொல்லு,” என, அவள் திருதிருவென்று விழித்தாள். அவன் திருமணத்தைப் பற்றிப் பேசவா வந்திருக்கிறான் என்று எண்ணிக் கொண்டிருக்கும் போதே பிரியா வெளியேற, கார்த்திக் உள்ளே வந்தான்.

அவனைப் பார்த்ததும் அவள் கண்களில் மளுக்கென்று கண்ணீர் துளி விழுந்தது. அவனோ அப்போது காதல் செய்யும் மனநிலையில் வரவில்லை; தலைக்கு மேல் கத்தி தொங்கிக் கொண்டிருந்தது.

அவன் பல்லைக் கடித்தபடி, “நீயா நடந்ததை எல்லாம் சொல்றியா இல்ல நானா கேட்கணுமா?” என்று கேட்க, அவள் குரல் அழுகையுடன் ஒலித்தது.

"நான் இப்படி எல்லாம் நடக்கும்னு நினைக்கல கார்த்திக்,” என்று வேதனையுடன் சொல்ல, “நீ என்ன நினைச்ச, நினைக்கலங்கிறதைப் பத்தி எல்லாம் நான் கேட்கல, என்ன நடந்துச்சுன்னு முதல்ல சொல்லு,” என்றவன் குரலில் கறார்தன்மை கூடியது.

மூச்சை இழுத்து விட்டுக்கொண்டவள், அமரேஷிடம் பேசியது, பொள்ளாச்சிக்குக் கிளம்பியது, அங்கே அவன் நடந்துகொண்ட விதம் என்று அத்தனையும் அழுது விசும்பிக் கொண்டே சொன்னாள். ஆனால் அவளுடைய கண்ணீர் அவன் கோபத்தைக் கொஞ்சமும் குறைக்கவில்லை; இன்னும் கேட்டால் அது அதிகப்படுத்தியது.

“நீ ரொம்பப் புத்திசாலியான பொண்ணுன்னு உங்க அண்ணன் அப்படியே பீத்திக்கிட்டான்... இதான் உன் புத்திசாலித்தனமா?” என்று நறுக்கென்று கேட்க, அவள் கண்களிலிருந்த கண்ணீர் அப்படியே உறைந்து நின்றுவிட்டது.

"கார்த்திக்..." என்றவள் பேச வரவும் அவன் விடவில்லை. “தெரியாமத்தான் கேட்குறேன், படத்துல ஹீரோவா நடிச்சான்னா அவன் நிஜத்துலயும் ஹீரோவா இருப்பான்னு உங்களுக்கு யார் சொன்னது? விவஸ்தையே இல்லாம போய் அப்படியே விழுறீங்க,” என்றவன் வார்த்தைகள் அவள் தன்மானத்தைச் சீண்டிவிட்டன.

“போதும் கார்த்திக்!” என்று கைகாட்டி நிறுத்தி, "நான் ஒண்ணும் அவனைப் பார்க்கப் போகல... உன்னைப் பார்க்கத்தான் வந்தேன்,” என்றாள். அதைச் சொல்லும் போது அவள் குரல் உடைந்தது.

“என்னைப் பார்க்க வந்தவ என்கிட்ட இல்லடி பேசி இருக்கணும்,” என்றவன் அப்போதும் அவளையே சாட, “நீதான் போனை எடுக்கலையே... திறந்து பாரு உன் போன்ல எவ்வளவு மிஸ்டு கால் இருக்குன்னு,” என்றாள்.

சட்டென்று அவன் மௌனமாகிவிட்டான். அவளுடைய அழைப்பை ஏற்காதது தப்புதான் என்று அவன் மனமும் குத்தியது. அவள் மேலும், “நான் அவனை நம்பிப் போயிருக்கக் கூடாதுதான். ஆனா அதுக்காக நடந்த எல்லாம் ஒண்ணும் முழுக்க முழுக்க என் தப்பு இல்லையே,” என்று வாதிட்டாள்.

அடுத்த நொடி அவன் குரல் மீண்டும் ஓங்கி ஒலித்தது. “உன் தப்பு இல்லாம வேற யார் தப்பு? ம்ம்ம்... கொஞ்சம் கூட யோசிக்காம அவன் கூப்பிட்ட இடத்துக்குப் போய்... சை” என்றவன் குற்றச்சாட்டில் அவள் மிரள, அவன் தொடர்ந்து பேசினான்.

“இது ஒண்ணும் முதல் தடவை இல்ல... அன்னைக்குத் தியேட்டர்ல உன்னைத் தப்பாத் தொட்டவன் யாருன்னு நினைக்கிற? அந்த அமரேஷ்தான்,” என்ற உண்மையையும் போட்டு உடைக்க, அவளுக்குத் தூக்கிவாரிப் போட்டது.

அந்த மாஸ்க் அணிந்த முகத்தை எண்ணிப் பார்த்தவள், “அது அமரேஷா?” என்று கேட்க, “அந்தப் பொறம்போக்குதான்... அவனுக்கு அப்பவே உன் மேல ஒரு கண்ணு,” என்று சொல்ல அவள் விழிகள் இப்போது கார்த்திக்கை தீவிரமாக முற்றுகையிட்டன.

“இது எல்லாமே தெரிஞ்சுதான் எங்கேஜ்மென்ட் அன்னைக்கு என்னை அவன்கிட்ட கூட்டிட்டுப் போனியா?”

“நீதானடி அவனைப் பார்க்கணும்னு உருகுன!”

“ஆமா உருகுனேன்... ஆனா உனக்கு அவனைப் பத்தித் தெரியும் இல்ல? நீ என்கிட்டச் சொல்லி இருக்கலாம் இல்ல?”

“சொன்னா நீ நம்பி இருப்பியா?”

“நான் எச்சரிக்கையா இருந்திருப்பேன்.”

“கிழிச்ச... ஒரு ஆம்பளை என்ன நோக்கத்தோட பார்க்குறான், சிரிக்குறானு எல்லாம் யாராவது சொல்லித்தான் ஒரு பொம்பளைக்குத் தெரியணுமா? அன்னைக்கு மண்டபத்துல கூட அவன் உன் தோள்ல கை போடுறான்... நீ இளிக்கிற?”

“அப்போ இதெல்லாம் என்னோட தப்பு... என்னோட அஜாக்கிரதைன்னு சொல்ல வர்றியா?”

“இதைச் சொல்ல வேற செய்யணுமா உனக்கு?” என்றவன் ஏளனமாக கேட்க, அவள் மனமுடைந்து நின்றாள். அவன் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் அவள் உணர்வுகளை காயப்படுத்த முகத்தை மூடிக் கொண்டு அழுதபடி பேசினாள்.

“ஆமா என்னோட தப்புதான்... யாரை நம்பணும், யார் மேல அன்பு வைக்கணும்னு எனக்குத் தெரியல... தப்புதான்... எல்லாம் தப்புதான்... ஏன்னா என் உலகம் அப்படிதான் இருந்துச்சு. என்னைச் சுத்தி இருந்த எல்லோருமே ரொம்ப நல்லவங்களா இருந்ததால நானும் எல்லோரையும் அதே போலக் கண்மூடித்தனமா நம்பிட்டேன். இட்ஸ் ஆல் மை ஃபால்ட்,” என்றவள் வலியுடன் பேசியதை கேட்ட கார்த்திக் கோபம் சற்று இறங்கியது.

“யாத்ரா,” என்றவன் மெதுவாக அழைக்க முகத்தை துடைத்துக் கொண்டு நிமிர்ந்தாள்.

“போதும்... இதுக்கு மேல எதுவும் சொல்ல வேண்டாம்... எனக்கு என் தப்பு என்னன்னு தெள்ளத்தெளிவா புரிஞ்சிடுச்சு... இனிமே அந்தத் தப்பை நான் என் வாழ்க்கையில செய்ய மாட்டேன்,” என்றவள் இம்முறை கார்த்திக்கை முறைத்தபடி சொல்ல, “இப்போ நீ தப்புன்னு நம்ம காதலைச் சொல்றியா?” என்று கேட்டான்.

“இல்ல, உன்னை நான் பார்த்ததே தப்புன்னு சொல்றேன்...” என, அவன் கோணலாகச் சிரித்தான்.

“ஓகே, இப்போ எல்லா தப்பையும் நீ என் மேல திருப்பிட்ட இல்ல? சரி அப்படியே இருக்கட்டும். நீ என்னைப் பார்த்தது, நான் உன்னைப் பார்த்தது எல்லாமே தப்புதான்... ஆனா ஒண்ணு, எல்லாத்தையும் நான் எங்க வீட்டுல வெளிப்படையா சொல்வேன்னு பெருமை அடிச்சுக்கிட்ட இல்ல... ஏன் இந்த விஷயத்தை மட்டும் சொல்லாம மறைச்ச? ம்ம்ம் ஏன்?” என்று கேட்டுவிட்டு அவனே பதிலும் சொன்னான். “ஏன்னா, உனக்கே நீ செஞ்ச தப்பை நினைச்சு அவமானமா இருந்துச்சு,” என்றவன் வசமாகக் குத்த, அவள் உதடுகள் கோபத்தில் துடித்தன.

"இப்பவே என் ரூமை விட்டு வெளியே போ!" என்று கத்தினாள்.

"போறேன்" என்றவன் திரும்ப, "மொத்தமா போயிடு!" என்றவள் நிற்க முடியாமல் அப்படியே மேஜையைப் பற்றிக்கொண்டாள்.

நேற்றுதான் அந்த சுவரிலிருந்த அமரேஷ் படத்தைக் கிழித்துவிட்டுச் கார்த்திக்கின் படத்தை ஒட்டினாள். மீண்டுமொரு துரோகம், அவமானம்...

அந்த நொடியே அவன் படத்தையும் கிழித்துப் போட்டாள். அதனைக் கிழிக்கும் போது அவளுமே மனதளவில் துண்டு துண்டாகக் கிழிந்து கொண்டிருந்தாள்.

வெற்றிடமாக இருந்த சுவரில் அவள் எழுதிய வாக்கியம் மட்டுமே எஞ்சியிருந்தது: 'Be your own boss'.

அதே நேரம் அறையை விட்டு வெளியே சென்ற கார்த்திக், எதிர்பார்ப்புடன் நின்ற யாத்ராவின் குடும்பத்தினரிடம், “உங்க பொண்ணுக்கும் எனக்கும் ஒத்துப்போகாது,” என்றான்.

அவர்கள் முகம் அதிர்ச்சியைக் காட்ட, “இனிமே இதைப் பத்திப் பேச வேண்டாம்னு நினைக்கிறேன்... என் தங்கச்சி கல்யாணத்தை நல்லபடியா முடிச்சா போதும்,” என்று விட்டு அவர்கள் பேசுவதற்குக்கூட வாய்ப்பு கொடுக்காமல் வெளியேறிவிட்டான்.

என்ன நடந்தது என்று புரியாமல் யாத்ராவின் அறைக்குள் செல்ல, அவள் எதுவுமே நடக்காதது போலத் தலையைக் கொண்டையிட்டுப் படிக்க அமர்ந்திருந்தாள்.

"யாத்ரா" என்று குமார் அழைக்கவும், "முடிஞ்சு போச்சுப்பா விட்டுருங்க... அதைப்பத்தி இனிமே பேச வேண்டாம்" என்று தீர்மானமாகச் சொல்ல, அவருக்கு ஒன்றும் புரியவில்லை. ஆனால் அவள் சொன்னதைக் கேட்ட இந்திரன் ஆசுவாசம் அடைந்தான்.

அவர்கள் காதல் எல்லாம் முடிந்துவிட்டது என்று நினைத்தான். அது உண்மையில்லை. அந்தக் காதல் அவளுக்குள் தீராப் பகையாக மாறியிருந்தது. கார்த்திக் அவளுக்குள் அப்போது பற்ற வைத்துவிட்டுச் சென்ற கோபத்தீ பெரும் காட்டுத் தீயாகப் படரக் காத்திருந்தது.

Cancel “மதிப்புகுரியவள்” புத்தம் புது நாவல்… புது களம்… வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா