மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumMonisha Ongoing novels: Kadhalum KabadamumKadhalum Kabadamum - Episode 22Post ReplyPost Reply: Kadhalum Kabadamum - Episode 22

Quote from monisha on July 6, 2026, 6:59 PM

22

“கல்யாணமான நாலாவது நாளே அந்த பொண்ணுக்காக உங்க அண்ணன் என்னை தூக்கி எரிஞ்சு பேசிட்டான்” என்று மகள்களிடம் மூக்கை சிந்தி அழுதார் தேன்மொழி.

கணவரின் அம்மா வீட்டில் நடந்தால்தான் அது மாமியார் கொடுமை. அதுவே தன் சொந்த வீட்டில் நடந்தால் அது மருமகள் கொடுமை என்ற அளவில் பெண்களும் பெண்களுக்கு நடக்கும் அநியாயங்களை பராபட்சங்களுடன் அணுகுகின்றனர்.

இவர்கள் இடையில் மாட்டிக் கொண்டது என்னவோ கார்த்திக்தான். ஆனால் தமக்கைகளின் கோபம் எல்லாம் அவனுக்கு பெரிய விஷயம் இல்லை. அவர்களை சுலபமாக சமாதானம் செய்துவிடுவான். ஆனால் அவன் அம்மாவின் கதையே வேறு. என்ன பேசினாலும் அவ்வளவு சீக்கிரத்தில் இறங்கி வர மாட்டார். அவருக்கு எதையும் புரிய வைப்பதும் கஷ்டம்.

ஆனால் யாத்ரா எவ்வளவு கோபம் இருந்தாலும் நிதானமாக பேசினால் புரிந்து கொள்ள கூடியவள் என்று நினைத்தான். அவர்களின் இரவு உணவு கொஞ்சம் அதிகப்படியான அமைதியுடன் கழிந்தது. யாரும் யாருடனும் பேசிக் கொள்ளவில்லை.

அதன் பிறகு அறைக்கு திரும்பிய யாத்ரா படிக்க உட்கார்ந்துவிட்டாள். அவளிடம் பேச வேண்டுமென்று கார்த்திக் விழித்திருந்தான். ஆனால் நடுநிசி தாண்டிய பிறகே புத்தகத்தை மூடி வைத்து விட்டு வந்து படுத்துக் கொண்டாள்.

“யாத்ரா” என்றவன் மெதுவாக அழைக்க, அவளிடம் எந்த பதிலும் இல்லை.

“அதுக்குள்ள தூங்கிட்டியா?” அதற்கும் எந்த பதிலும் இல்லை.

“நீ தூங்கலைன்னு எனக்கு தெரியும்... ப்ளீஸ் என்கிட்ட பேசு” என்றவன் கேட்க, அவள் அவன் புறம் திரும்பி படுத்து,

“என்ன பேசணும்” என்றாள்.

“என்னை மன்னிச்சிட்டேன்னு சொல்லு”

அவள் விழிகள் அவனை கூர்மையாக பார்த்தன.

“ப்ளீஸ்” என்றவன் மீண்டும் கெஞ்ச, “மன்னிப்பே கேட்காம எப்படி மன்னிச்சிட்டதா சொல்ல முடியும்” என்றாள்.

“ஐம் சோ சாரி” என்றவன் சொன்ன நொடி, “எனக்கு இந்த சாரி பிடிக்கல” என்றவள் திரும்பி படுத்துக் கொண்டாள்.

“வேறெப்படி சாரி...” என்ற அவனுக்கு அந்த நொடிதான் அவள் சொன்னது விளங்கியது.

“ஏய் யாத்ரா” என்றவன் சட்டென்று அவளை தன் புறமாக திருப்பி படுக்க வைக்க, “ட்யூப் லைட் மூளை” என்றாள்.

அவன் பெருமூச்சுடன், “நீ இன்னும் இரண்டு மூணு நாளைக்காச்சும் என்கிட்ட பேச மாட்டன்னு நினைச்சேன்” என்று சொல்ல,

அவனைப் பார்த்து புன்னகைத்தவள் நிதானமாக பேச துவங்கினாள். “எங்க வீட்டுல எல்லாம் எப்பயாச்சும்தான் எங்க அம்மா அப்பா சண்டையே போடுவாங்க... அப்படியே சண்டை போட்டாலும் யாராச்சும் ஒருத்தர் இறங்கி பேசினாலும் உடனே சமாதானமும் ஆகிடுவாங்க... இதை பத்தி ஒரு தடவ அப்பாகிட்ட கேட்டப்போ, சின்ன தப்புகள் கோபங்கள் எல்லாம் இயல்புதான்... ஆனால் அதையே பிடிச்சுட்டு தொங்குறதுல எந்த யூஸும் இல்ல... தேவையற்ற மனஉளைச்சல்தான் அப்படின்னு சொன்னாரு. நம்ம ரிலேஷன்ஷிப்பும் அப்படி இருக்கணும்னு நான் ஆசைப்படுறேன் கார்த்திக்... தப்பு செய்றது, கோபப்படுறது எல்லாம் ஓகே... ஆனா அப்புறம் அதை பத்தி மனசை விட்டு பேசி சால்வ் பண்ணிடனும்” என்றவள் சொன்னதை கேட்டவன், “கண்டிப்பா” என்று நெகிழ்ச்சியுடன் அவள் கையை பற்றிக் கொண்டான்.

“ஆனா இன்னும் சாரி கேட்கவே இல்லயா” என்றவள் குறும்பாக புன்னகை செய்ய, அந்த நொடியே அவளை தன் புறம் நெருக்கமாக இழுத்துக் கொண்டான். கன்னங்கள் இரண்டையும் தன் கைகளில் சேர்த்தவன், நெற்றி தொடங்கி ஒவ்வொரு பாகமாக மன்னிப்பு கேட்டான்.

வெகுநேரம் நீண்ட அந்த மன்னிப்பு படலத்தின் முடிவில் அவர்கள் உள்ளமும் உடலும் ஒன்றானது.

அடுத்த நாள் விடியற்காலையில் எழுந்து குளித்து கிளம்பிய கார்த்திக், “வேலை விஷயமா ஒரு முக்கியமான ஆளை பார்க்க போறேன்” என்று படுக்கையில் கிடந்த மனைவியை எழுப்பி சொல்ல,

“ஆல் தி பெஸ்ட் கார்த்திக்” என்றாள் அரைதூக்கத்திலேயே.

“நேத்து அப்படி நடந்துக்கிட்டதுக்கு திரும்பவும் சாரி” என்றவன் அவள் நெற்றியில் அழுந்த முத்தமிட்டுவிட்டு சென்றான். மீண்டும் போர்வையை எடுத்து முகத்தில் மூடி கொண்டவள், பத்து மணிக்குதான் எழுந்து வெளியே வந்தாள்.

அவளின் இந்த செயல் தேன்மொழிக்கு படுஎரிச்சலை கிளப்பியது. இருப்பினும் ஒரே மகனையும் அவர் எதிர்த்து கொள்ள விரும்பவில்லை. ஆதலால் நேரடியாக அவளிடம் எதுவும் அவர் கேட்கவில்லை.

அவராக எதுவும் வேலை சொல்லாததால், காலை உணவு முடிந்து குளித்து படிக்க உட்கார்ந்துவிட்டாள். அதன் பிறகு மதிய உணவுக்கு வெளியே வந்தவள், மீண்டும் கார்த்திக் வரும் வரை அங்கிருந்து நகரவில்லை.

கார்த்திக் வீட்டிற்கு வந்ததும் அம்மாவிடம் சென்று உற்சாகத்துடன், “ம்மா எனக்கு வேலை கிடைச்சிருச்சு” என்று சொல்ல, அவர் சுரத்தையே இல்லாமல் அந்த செய்தியை கேட்டார்.

“நீங்க கோபமா இருக்கீங்கன்னு எனக்கு தெரியும்... ஆனா நான் என் நிலைப்பாட்டுல இருந்து மாற போறதில்ல” என்றான்.

“என்னை பேசாம முதியோர் இல்லத்துல சேர்த்து விட்டுரேன்.. உன் பொண்டாட்டியும் நீயும் நிம்மதியா இருக்கலாம்” என்று தேன்மொழி நொடித்து கொண்ட தேன்மொழி அதற்கு மேல் அங்கே நிற்கவில்லை.

எதார்த்தமாக அவர்கள் உரையாடலை கேட்ட யாத்ரா, “அவங்ககிட்ட அப்படி எல்லாம் பேசாதே கார்த்திக்... இனிமே கொஞ்சம் கொஞ்சமா நானே வேலை செய்ய கத்துக்கிறேன்” என்றாள்.

“எல்லாமே இப்படிதான் ஆரம்பிக்கும்... கொஞ்சம் கொஞ்சமா... எங்க அக்கா வாழ்க்கைல எல்லாம் இப்படிதான் நடந்தது. இரண்டு பேரும் என்ன டிகிரி படிச்சோம்கிறது கூட இப்போ மறந்துட்டாங்க... அவங்கள மாதிரி நீயும் மாற கூடாது.” என்று சொன்ன கணவனை நெகிழ்ச்சியுடன் அணைத்துக் கொண்டு, “லவ் யூ கார்த்திக்” என,

“மீ டூ” என்றவன் அவளை தன்னோடு அணைத்துக் கொண்டு, “எனக்கு வேலை கிடைச்ச சந்தோஷத்தை எங்கயாச்சும் டின்னர் போய் செலிபிரேட் பண்ணுவோமா” என்றான்.

“ஓ போலாமே?” என்று ஆர்வமாக சம்மதித்தாள். காரை கொடுத்துவிட்டதால் இருவரும் பைக்கில் சென்றனர். உணவகத்தில் அமர்ந்தவன், தன் எங்கே வேலை கிடைத்தது போன்ற விவரங்களை சொன்னான்.

“நிகிதான்னு ஒரு ஆக்டரஸ்... அமரேஷோட இரண்டாவது பட ஹீரோயின்”

“ஞாபகம் இருக்கு... ரொம்ப அழகா இருப்பாங்க... ஆனா அவங்க இரண்டு மூணு படம்தான் நடிச்சாங்க... அப்புறம் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க இல்ல...”

“போன வருஷம் டிவோர்ஸ் ஆகிடுச்சு... இரண்டு வயசுல அவங்களுக்கு குழந்தையும் இருக்கு”

“திரும்பவும் நடிக்குறாங்களா?”

“மலையாளம் மூவிஸ் பண்றாங்க... அதுவும் ஹீரோயினா! இப்போ கூட ஒரு படம் வந்துச்சு... பாக்ஸ் ஆபீஸ் ஹிட்... ஸோ, வரிசையா நாலு படம் புக் ஆகி இருக்கு... பழைய பழக்கத்துல சும்மா கேட்டு பார்த்தேன்... உடனே ஓகே சொல்லிட்டாங்க”

“திரும்பியும் சினி இண்டஸ்ட்ரிலன்னா அமரேஷ் எதுவும் பிரச்னை பண்ண மாட்டானா?” என்றவள் தயக்கத்துடன் கேட்க,

“நிகிதாவுக்கும் அமரேஷுக்கும் அப்பத்துல இருந்தே ஒத்து போகாது... அதுவும் இல்லாம தமிழ் இண்டஸ்ட்ரிலதான் அவங்க அப்பாவுக்கு பவர்” என்றான்.

“எனக்கு ஒரு டவுட்டு” என்று இழுத்தவள், “நீ இப்போ கேரளாவுக்கு போகணுமா?” என்று கேட்க,

“போகணும்தான்” என்றான். அவள் முகம் வாடி போகவும், “ஆனா இந்த ஒரு மாசத்துக்கு நான் எங்கேயும் போகல” என்றான். ஆனாலும் அவள் முகத்தில் தெளிவு இல்லை.

“ஏய் யாத்ரா” என்றவள் கைகளை மிருதுவகை தடவி கொடுத்தவன், “இப்போ அதெல்லாம் யோசிக்க வேண்டாம்” என்றதும் அவளும் புன்னகையுடன் தலையசைத்தாள்.

அதன் பின் பேசி சந்தோஷமாக சிரித்து கொண்டே இரவு உணவை முடித்து அவர்கள் கிளம்பிய சில நிமிடங்களில் மழை பிடித்துக் கொண்டது. அந்த பெருமழையில் வண்டி ஓட்ட முடியாமல் அங்கிருந்த ஒரு பேருந்து நிழற்குடையில் இருவரும் ஒதுங்கி நின்றனர்.

சுற்றிலும் இருள் சூழ்ந்திருக்க, மழையின் சத்தம் மட்டுமே அந்த இரவை ஆக்கிரமித்திருந்தது.

“கார் இருந்தா இந்த தொல்லையே இல்ல” என்று கார்த்திக் தன் நனைந்த முடியைக் கோதியபடி நொந்து கொள்ள,

“பரவாயில்ல மழைல நனைஞ்சிட்டே போவோம்” என்று குறும்புப் புன்னகையுடன் சொன்னாள் யாத்ரா.

“அப்படியே போய் எங்கயாவது பள்ளத்துல விழ வேண்டியதுதான்... அதுவும் இல்லாம உனக்கு எக்ஸாம் வேற இருக்கு... ஒழுங்கா நனையாம தள்ளி நில்லு” என்று அவளது குளிர்ச்சி படர்ந்த கையை இறுக்கமாகப் பற்றி, தன் நெஞ்சோடு அணைத்தாற்போல் பின்னோக்கி இழுத்தான். அந்த நொடிக் குளிரிலும் அவனின் மூச்சுக்காற்று அவள் கழுத்தில் பட்டு சுளீரென்று சூடேற்றியது.

“போ கார்த்திக்...” என்றவன் கையை மெல்ல உதறிவிட்டு, அந்த மழைச்சாரலில் தன் முகத்தைக் காட்டினாள். முதல் முறையாக ஏற்காட்டில் அவர்கள் வீட்டிற்கு செல்லும் போது அவள் கார் ஜன்னலை திறந்து மலைசாரலை ரசித்தது கார்த்திக்கின் நினைவுக்குள் சட்டென்று வந்து போனது.

மழைத்துளிகள் முத்து முத்தாக அவள் முகத்தில் வடிய, அதையும் மீறி அவளிடம் மின்னிய அந்தப் பேரழகை அவன் கண் இமைக்காமல் ரசித்துக் கொண்டிருந்தான். அந்த ஏகாந்தமான காதல் நொடியை உடைப்பது போல, அவன் பாக்கெட்டில் இருந்த செல்பேசி சிணுங்கியது.

அவளையே காதலோடு பார்த்துக் கொண்டே போனை எடுத்து காதில் வைத்தவன், “யாரு?” என்றான்.

மறுமுனையில் இருந்து வந்த அந்தச் சிரிப்பு, கார்த்திக்கின் நரம்புகளுக்குள் மின்சாரத்தைப் பாய்ச்சியது.

“அப்படியே அவளை இழுத்து அணைச்சு அந்த ஈர உதடுல முத்தம் கொடுத்தா எப்படி இருக்கும்?” என்று வக்கிரத்தின் உச்சமாய் ஒலித்த அமரேஷின் குரலைக் கேட்டதும் கார்த்திக் அப்படியே உறைந்து போனான். ரத்தமெல்லாம் சட்டென்று சூடானது.

“எனக்கு சத்தியமா பொறாமையா இருக்குடா உன் மேல...” என்றவன் மேலும் ஏதோ பேச முயல,

“போனை வையுடா நாயே!” என்று நடுக்கமும் ஆத்திரமும் கலந்த குரலில் கத்திய கார்த்திக், அழைப்பைத் துண்டித்தான்.

நெஞ்சு பலமாக அடித்துக் கொள்ள, பெரும் பதற்றத்துடன் சுற்றும் முற்றும் கண்களைச் சுழற்றினான். அந்த கும்மிருட்டில், கொட்டும் மழையில் ஒரு ஈ காக்கா கூடத் தென்படவில்லை. அப்படியென்றால் அமரேஷ் எங்கே இருந்து இவர்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறான்? இருளுக்குள் இருந்து எத்தனையோ கண்கள் தங்களை நோட்டமிடுவது போன்ற ஒரு பிரமை அவனுக்குள் அச்சத்தை விதைத்தது.

“யாத்ரா வா போலாம்!” என்றவன் அவளது பதிலை எதிர்பார்க்காமல், பயத்தில் சட்டென்று அவள் கையை பலமாகப் பிடித்துக் கொண்டான்.

அவனது இந்த திடீர் மாற்றத்தில் திகைத்த யாத்ரா, “மழை நிற்கலயே கார்த்திக்...” என்றாள் விசித்திரமாகப் பார்த்தபடி.

“பரவாயில்ல வா!” என்று அவசர அவசரமாக பைக்கைக் கிளப்பியவன், அந்தப் பெருமழையிலும், இருட்டிலும் எங்குமே நிறுத்தாமல் வண்டியைப் பறக்கவிட்டான். பயமும் பதற்றமும் அவனை உந்தித்தள்ள, வீடு வந்து சேரும் போது இருவருமே தொப்பலாக நனைந்திருந்தனர்.

அறைக்கு வந்ததும் யாத்ரா தன் ஈர உடைகளை வேகமாக மாற்றிக் கொண்டாள். ஆனால் கார்த்திக்கோ, அமரேஷின் அந்த வக்கிரமான வார்த்தைகள் கொடுத்த அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல், அறையின் நடுவே அப்படியே ஒரு சிலையைப் போல நின்றிருந்தான்.

“டிரெஸ் மாத்தாம என்ன பண்ணிட்டு இருக்க நீ?” என்று அவனது தோள்களைப் பிடித்து உலுக்கினாள் யாத்ரா.

“தோ... தோ போறேன்...” என்று ஏனோ தானோவென்று உடையை மாற்றிக் கொண்டு வந்த போதும், அவனால் இயல்பு நிலைக்குத் திரும்பவே முடியவில்லை. ‘அந்த ஈர உதடுல முத்தம் கொடுத்தா...’ அமரேஷின் அந்த வக்கிரக் குரல் அவன் காதுகளுக்குள் ரீங்காரமிட்டுக் கொண்டே இருக்க, உடல் முழுவதும் ஒரு இனம்புரியாத அச்சம் பரவியது.

“தலையை கூட துவட்டாம இப்படி உட்கார்ந்திருக்க!” என்று சலித்துக் கொண்ட யாத்ரா, அவனைப் படுக்கையில் அமர வைத்தாள். ஒரு துண்டை எடுத்து, அவனது நனைந்த கூந்தலை மென்மையாக, ஈரம் போகத் துடைத்துவிடத் தொடங்கினாள்.

அவள் தனக்கு மிக அருகில் நின்று காதலோடும் அக்கறையோடும் தலை துவட்டுவதை ஏறிட்டுப் பார்த்தான் கார்த்திக். அவளது அருகாமை அவனுக்குள் காதலைத் தூண்டினாலும், மனதில் என்னவென்று சொல்ல முடியாத ஒரு பயப் பந்து உருண்டது.

“நாளைக்கு எக்ஸாம் முடிஞ்சதும்... கேம்பஸ்க்குள்ளயே வெயிட் பண்ணு. நானே வந்து உன்னை கூட்டிட்டு போறேன்” என்று அவளிடம் சொல்ல, “பரவாயில்ல கார்த்திக், நானே ஆட்டோ பிடிச்சு வந்துடுறேன்” என்றாள் அவன் மனநிலை புரியாமல்.

“நான்தான் வரேன் சொல்றேன் இல்ல” என்று அவன் சற்றே அதிகாரத்துடன் சொல்லவும், யாத்ரா ஆச்சரியமாக அவனைப் பார்த்தாள்.

பின் புன்னகையோடு, “சரி ஓகே... நீயே வா” என்று சொல்லிவிட்டு, அப்படியே அவனது கழுத்தைக் கட்டிக்கொண்டு அவன் மார்பில் சாய்ந்து இதழில் முத்தமிட்டாள்.

அவளது உடலின் வெப்பமும், காதலின் தீவிரமும் கார்த்திக்கை நிலைகுலையச் செய்தது. பதிலுக்கு அவன் அவள் கன்னத்தில் முத்தமிடப் போக, யாத்ராவோ, “உஹும்...” என்று தன் இதழ்களைக் குவித்து, பிடிவாதமாகக் காட்டினாள்.

அழகான, நேற்றைய மழையின் குளிர்ச்சி மாறாத அந்தச் சிவந்த உதடுகளைப் பார்த்த கணத்தில்... கார்த்திக்கிற்கு மீண்டும் அமரேஷ் சொன்ன அந்த வக்கிர வார்த்தைதான் சுரீரென்று நினைவில் வந்து விழுந்தது.

ஒருவித தவிப்போடு, அவள் இதழ்களில் தன் இதழ்களால் மென்மையாக ஒரு முத்தத்தை மட்டும் வைத்துவிட்டு சட்டென்று விலகினான்.

“அவ்வளவுதானா?” என்று ஏமாற்றத்துடன் தன் முகத்தைச் சுருக்கினாள் யாத்ரா.

“நாளைக்கு எக்ஸாம் இருக்குல்ல... வந்து நேரத்தோட படு” என்று சொல்லிவிட்டு அவன் படுத்துக் கொள்ள, அவள் உதட்டைச் சுழித்துக் கொண்டே அவனுக்கு மறுபுறம் திரும்பிப் படுத்துக் கொண்டாள்.

அவளது ஊடல் கார்த்திக்கின் இதயத்தை என்னவோ செய்தது. அவளுக்குள் இருக்கும் காதலும், தனக்குள் இருக்கும் பயமும் அவனைப் பித்துப் பிடிக்க வைத்தது. அவளை அப்படியே தன் புறமாக பலவந்தமாக இழுத்து, மெதுவாகத் திருப்பினான். அவளது கண்கள் இவனுடைய தவிப்பைப் படித்தன. அடுத்த நொடி, அவளது இதழ்களைத் தன் இதழ்களால் சிறைபிடித்து, ஒரு நீண்ட, ஆழமான இதழ் முத்தத்தைக் கொடுத்தான். அந்த முத்தத்தில் காதலை விட, ‘உன்னை யாரிடமும் விட்டுக் கொடுக்க மாட்டேன்’ என்ற அவனது உள்ளுணர்வுக் கதறலே அதிகமாக இருந்தது.

அதன் பின் அவளது கன்னங்களை மிருதுவாகத் தடவி, அவளது நெற்றியில் முத்தமிட்டு, “சீக்கிரம் தூங்கு, நாளைக்கு எக்ஸாம் நல்லா எழுதணும்” என்றான் தழுதழுத்த குரலில்.

“அதெல்லாம் நான் நல்லா எழுதுவேன்” என்று மெல்லிய குரலில் சொல்லியபடி, அவனது தோள் மீது தலை வைத்து, மார்போடு கூடுகட்டிச் சாய்ந்து கொண்டாள் யாத்ரா.

அப்படிச் சாய்ந்தவளுக்கு, கார்த்திக்கின் இதயத் துடிப்பு தடதடவென்று அடிப்பது அப்பட்டமாகக் கேட்டது.

சட்டென்று நிமிர்ந்து அவனது முகம் பார்த்தவள், “கார்த்திக்... என்ன உன் இதயம் இவ்வளவு வேகமா துடிக்குது? என்னாச்சு?” என்று பதற்றமாகக் கேட்டாள்.

“ஒன்னும் இல்லடி... சும்மாதான்...” என்றவன், அவளது தலையைத் தடவிக் கொடுத்து, நெஞ்சோடு அணைத்துப் படுக்க வைத்தான்.

அவன் வார்த்தைகளுக்கு நேர்மாறான உணர்வை, அவனது இதயம் தன் துடிப்பின் மூலம் உணர்த்த முனைந்தது. அவன் மனம் ஏதோ தவறாக, நடக்கப் போவதாக யூகித்து பயந்து கொண்டிருந்தது.

அடுத்த நாள் காலை அவளைத் தேர்வுக்காகக் கல்லூரி வாசலில் இறக்கிவிட்ட கார்த்திக், “நான் வர வரைக்கும் கேம்பஸ்க்குள்ளயே வெயிட் பண்ணு யாத்ரா” என்று திரும்ப திரும்ப, அவளது கைகளைப் பற்றிச் சொல்லிவிட்டுப் போனான்.

ஆனால், தேர்வு முடிந்து வெளியே வந்த யாத்ரா, ஆவலோடு அவன் எண்ணிற்கு அழைக்க... ‘சுவிட்ச் ஆஃப்’ செய்யப்பட்டிருப்பதாக வந்தது.

கல்லூரி வளாகத்திற்குள்ளேயே ஒரு மணி நேரத்திற்கு மேலாக, காத்திருந்தவள், வேறு வழியின்றி ஆட்டோ பிடித்து வீட்டிற்கு வந்தாள்.

ஆனால் வந்ததுமே தேன்மொழி சொன்ன செய்தி அவளை பேரதிர்ச்சியில் தள்ளியது.

Cancel “மதிப்புகுரியவள்” புத்தம் புது நாவல்… புது களம்… வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா