மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumMonisha Ongoing novels: Kadhalum KabadamumKadhalum Kabadamum - Episode 24Post ReplyPost Reply: Kadhalum Kabadamum - Episode 24

Quote from monisha on July 6, 2026, 7:00 PM

24

கார்த்திக்கின் மூத்த அக்கா மேகலாவின் கணவர் ஜெகநாதனின் நண்பர் தேவா, உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருந்தார். அவருக்கும் கார்த்திக்கிற்கும் நேரடியான பழக்கம் இருந்தது. கார்த்திக் கைது செய்யப்பட தகவலை அறிந்ததுமே அவர்கள் இருவரும் காவல் நிலையத்திற்கு விரைந்தனர்.

ஆனால் அவர்கள் செல்வதற்குள் நிலைமை கைமீறிவிட்டது.

இருவரும் ஏமாற்றத்துடன் வீடு திரும்ப, “கார்த்திக் வரலையா?” என்று கேட்டபடி ஆவலாக வாசலை எட்டிப் பார்த்து கேட்டாள் யாத்ரா

“நாங்க போறதுக்குள்ள ரிமாண்ட் பண்ணிட்டாங்க” என்று ஜெகன் சொல்ல, தேன்மொழி மீண்டும் அழ ஆரம்பித்துவிட்டார்.

“ம்மா அழாதீங்க, உங்க உடம்புக்கு ஏதாவது வந்திடப் போகுது” என்று மேகலா அம்மாவைச் சமாதானம் செய்ய, யாத்ரா அப்படியே சிலையாக நின்றுவிட்டாள்.

அப்போது வழக்கறிஞர் தேவாவும் ஜெகநாதனும் வரவேற்பறை சோபாவில் அமர்ந்தனர்.

“இது சாதாரண விஷயம் இல்லை… இவங்க ரொம்ப அவசரமா மூவ் பண்ணியிருக்காங்க. ஆப்வியஸ்லி அமரேஷ் மாதிரியான இன்ஃபுளூயன்ஸ் இருந்தா இப்படித்தான் நடக்கும்” என்று தேவா சொல்ல,

“அடுத்து என்ன பண்றது?” என்று ஜெகநாதன் வினவினார்.

“பெயிலுக்கு மூவ் பண்ணுவோம்” என்றார் தேவா. அதேசமயம் மனைவியிடம் தேநீர் தயாரிக்கச் சொல்லி ஜெகன் கண் காட்ட, மேகலா உள்ளே சென்றாள்.

அப்போது தேவா தேன்மொழியைச் சமாதானம் செய்யும் விதமாக, “பெரிய கேஸ்ல எல்லாம் இல்லம்மா... சீக்கிரம் வெளியே கொண்டு வந்திடலாம்” என ஆறுதல் கூறினாலும், அவர் முகத்திலிருந்த கவலை தீரவில்லை.

“அவன் எந்தத் தப்பும் செய்ய மாட்டான் தம்பி.”

“எனக்குத் தெரியாதா கார்த்திக் பத்தி... ஆனா, இந்த அப்பார்ட்மென்ட் வாங்குன விஷயம்... உங்களுக்கு இதைப் பத்தி ஏதாவது சொன்னானா?” என்று கேட்டதும் யாத்ராவின் முகம் கலவரமாக மாறியது.

அந்த மாற்றத்தை ஜெகன் கவனித்தார். அதேநேரம் தேன்மொழி, “எனக்குத் தெரியலையே தம்பி” என்று தேவாவிடம் சொல்ல,

“உனக்குத் தெரியுமாம்மா?” என்று ஜெகநாதன் உடனே யாத்ராவை ஏறிட்டார். தேன்மொழி முன்பாக இந்த விஷயத்தை எப்படிச் சொல்வது என்று அவள் தயங்கிய சமயம், தேநீருடன் வந்த மேகலா, “அவளே இப்பதான் நம்ம வீட்டுக்கு வந்திருக்கா, அவளுக்கு என்ன மாமா தெரியப் போகுது?” என்றாள்.

“அப்படியா? உனக்கு இது பத்தி எதுவும் தெரியாதா?” என்று ஜெகநாதன் நம்பாமல் மீண்டும் கேட்க, “இல்லை ண்ணா, தெரியாது” என்று மறுத்துவிட்டாள் யாத்ரா.

“அப்போ கார்த்திகிட்ட பேசுனாதான் எல்லா விவரமும் தெரியும்” என்று கூறிவிட்டு அவர்கள் சென்றுவிட, பெருமூச்சு விட்ட யாத்ரா அறைக்குள் வந்து தலையைப் பிடித்துக்கொண்டு அமர்ந்துவிட்டாள்.

கார்த்திக், இந்திரனிடமும் பேச வேண்டாம் என்று சொல்லிவிட்டதால் அவளுக்கு யாரிடமும் இதைப் பற்றிப் பேசுவது என்று தெரியவில்லை.

அதேசமயம் அவர்கள் கார்த்திக்கிற்காகப் போட்ட பிணை மனு விசாரணைக்கு வந்திருந்தது. கார்த்திக் காவலர்களுடன் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டான். அவனைப் பார்த்ததும் தேவா நம்பிக்கையுடன் கையசைத்தார். அடுத்ததாக அவர்களின் வழக்கு எண் அழைக்கப்பட்டது.

அமரேஷ் தரப்பில் ஆஜரான சீனியர் அட்வகேட் தாமோதரன், “யுவர் ஆனர், இந்த அக்யூஸ்டு மேல வந்திருக்கிறது சாதாரண லேண்ட் டிஸ்பியூட் கம்ப்ளைன்ட் இல்லை. இந்த அப்பார்ட்மெண்ட் டிரான்சாக்ஷனுக்குப் பின்னாடி பல கோடி ரூபாய் முறைகேடு நடந்திருக்கு. இவரோட பேங்க் ஸ்டேட்மெண்ட்ஸ் எதையும் இன்னும் முழுசா வெரிஃபை பண்ணலை. இந்த நிலைமையில பெயில் கொடுத்தா, வழக்கு விசாரணை கண்டிப்பா பாதிக்கப்படும்; சாட்சிகளைக் கலைக்கவும் வாய்ப்பிருக்கு. சோ, பெயில் வழங்கக் கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

தன் இருக்கையிலிருந்து எழுந்த தேவா, “இந்த வழக்கே வெறும் யூகத்தின் அடிப்படையில் போடப்பட்டதுதான் யுவர் ஆனர். பல கோடி ரூபாய் பணம் முறைகேடு செய்திருக்கிறார் என்பதற்கு இப்போது வரைக்கும் எந்த வலுவான ஆதாரமும் இல்லை... இதுக்கு மேலயும் இவரை கஸ்டடில வைக்கணும்னு அவசியம் இல்லை. ப்ளீஸ் கிராண்ட் பெயில் யுவர் ஆனர்” என்று வாதாடினார்.

அந்த நேரத்தில் தாமோதரன் ஒரு புதிய கோப்பினை நீதிபதியிடம் நீட்டினார். “யுவர் ஆனர், இன்னைக்குக் காலையிலதான் இந்த அடிஷனல் டாக்குமெண்ட்ஸ் கிடைச்சது. அந்த அப்பார்ட்மெண்ட் வாங்குனதுக்கான முக்கிய விவரங்கள் இதுல இருக்கு.”

தேவாவின் கண்கள் சுருங்கின. “நியூ எவிடன்ஸா?” என்று தனக்குள் முணுமுணுத்தார்.

ஆவணங்களைச் சில நொடிகள் புரட்டிப் பார்த்த நீதிபதியின் முகம் தீவிரமானது.

தேவா உடனே, “யுவர் ஆனர், லாஸ்ட் மினிட்ல இப்படிப் புதுசா டாக்குமெண்ட்ஸ் கொண்டு வந்து பெயிலை மறுக்கக் கூடாது…” என்று வாதிட முயன்றார்.

நீதிபதி கையை உயர்த்தி தேவாவைத் தடுத்தார். “மிஸ்டர் தேவா, இந்த டாக்குமெண்ட்ஸ் படி பார்த்தா, இந்த டிரான்சாக்ஷன்ல இன்னும் நிறைய விஷயங்கள் தெளிவாக வேண்டியிருக்கு. குற்றச்சாட்டோட தன்மையும், இந்த புதிய ஆதாரங்களும் விசாரணையை இன்னும் ஆழமா நடத்த வேண்டிய அவசியத்தைக் காட்டுது. சோ, இந்த ஸ்டேஜ்ல பெயில் கொடுக்க முடியாது. மனு தள்ளுபடி செய்யப்படுது. அக்யூஸ்டு ஜூடிசியல் கஸ்டடில தொடரட்டும்.”

தீர்ப்பைக் கேட்டு தேவா அதிர்ச்சியடைந்தான். ஒரு நொடி கண்களை மூடித் திறந்த கார்த்திக்கிற்கு அமரேஷ் மீது வெறி ஏறியது.

அப்போது தேவா காவலரிடம் அனுமதி வாங்கி கார்த்திக்கைத் தனியாகச் சில நிமிடங்கள் அழைத்துச் சென்று பேசினார். “என்கிட்ட நீ எதையோ பெருசா மறைக்கிறன்னு தோணுது கார்த்திக்” என்றார்.

கார்த்திக்கின் பார்வை ஜெகநாதனைப் பார்த்தது. அவருக்கு விஷயம் தெரிந்தால் வீட்டில் எல்லோருக்கும் தெரிந்துவிடும் என்ற பயம்தான் அவனுக்கு.

“சொல்லு கார்த்திக்,” என்று தேவா அழுத்தமாகக் கேட்க,

“ஆமா, அந்த அப்பார்ட்மென்ட் கமிஷனா வாங்கினது உண்மைதான்... ஆனா அது என் பேர்ல இல்ல.”

“அப்புறம்?”

“சௌந்தர்யா புருஷன் இந்திரன் பேர்ல இருக்கு!” என்றதும் ஜெகநாதன் முகம் மாறியது.

தேவா ஒரு நொடி யோசித்துவிட்டு, “அப்படின்னா இது பெனாமி மாதிரி ஆகுதே…” என,

“இல்லை, இந்திரன் ஹோம் லோன்போட்டு வாங்குன மாதிரிதான் டாக்குமெண்ட்ஸ் ரெடி பண்ணியிருக்கோம்... இது கமிஷன் மாதிரி வராது” என்று கார்த்திக் தெளிவாகச் சொல்ல, தேவா யோசித்தான்.

“அப்புறம் எப்படி இந்த கேஸை உன் மேல இவ்வளவு ஸ்ட்ராங்கா பின் பண்றாங்க?”

“தெரியலை… அவங்ககிட்ட வேற ஏதாவது லூப்ஹோல் இருக்கணும்” என்றபோது,

“அமரேஷ்கிட்ட ஏதாவது டீல் பேசிப் பார்க்கலாமா?” என்று ஜெகனிடம் தேவா கேட்க,

“அவன் ஒத்துக்க மாட்டான்” என்றான் கார்த்திக்.

“பேசித்தான் பார்ப்போமே!”

“அவனுக்கு இந்த அப்பார்ட்மென்ட் டீல் எல்லாம் ஒரு மேட்டரே இல்ல.”

“அப்புறம்...?” என்று தேவா கேட்க கார்த்திக் பதில் சொல்ல தயங்கினான். அதேநேரம் காவலர் ஒருவர் வந்து, “டைம் ஆயிடுச்சு, கிளம்புங்க…” என்று கார்த்திக்கின் தோளைத் தட்டி அழைத்தார்.

அந்த நொடி தன் அக்கா கணவர் ஜெகநாதனிடம் திரும்பி, “மாமா, ப்ளீஸ்... இந்த விஷயத்தை அம்மாகிட்ட சொல்லிடாதீங்க. நான் எப்படியும் வீட்டுக்கு வந்திடுவேன்... வந்ததும் இதைப் பற்றி எல்லாம் உங்களுக்குத் தெளிவா விளக்குறேன்” என்று கெஞ்சாத குறையாகக் கூறிவிட்டு, அங்கிருந்து நகர்ந்தான்.

அவன் செல்வதையேப் பார்த்துக் கொண்டே வழக்கைப்பற்றி யோசித்த தேவா, “ஆமா, இந்த அமரேஷிற்கும் கார்த்திக்கும் என்ன அப்படி பிரச்னை” என்று கேட்க,

“நேற்று பார்த்தீங்களே அவன் பொண்டாட்டி... அவதான் அந்த பிரச்னை” என்றவர் நடந்த அனைத்தையும் சொல்ல, “நான் எப்படி இதையெல்லாம் கவனிக்காமல் போனேன்?” என்று தேவா யோசித்தார்.

“இன்ஸ்டால இருந்திருந்தீங்கன்னா இந்த விஷயம் தெரிஞ்சிருக்கும்... எனக்கே என் கூட வேலை பார்க்கிறவன்தான் இதையெல்லாம் காட்டினான்” என்று முகத்தைச் சுளித்தவர், “ஊரே நாறுச்சு... திடீர்னு அந்தப் பொண்ணை அவன் கல்யாணம் பண்ணிக்கப் போறான்னு சொல்லவும் எங்களுக்கே ஷாக்தான்... அவன் தலையில அவனே மண்ணை வாரிப் போட்டுக்கிட்டான்” என்று காழ்ப்புணர்ச்சியுடன் பேசினார் ஜெகன்.

“விடு ஜெகன், அது முடிஞ்சு போன கதை... இப்போ இந்த கேஸ்ல இருந்து கார்த்திக்கை எப்படிப் காப்பத்துறதுன்னுதான் நம்ம யோசிக்கணும்” என்றார் தேவா.

ஆனால், ஜெகநாதனின் கவலை அது இல்லை. 'அந்த வீட்டுக்கு மூத்த மாப்பிள்ளை நான் இருக்கும்போது, நேற்று வந்தவனுக்கு எதற்கு இவன் கோடி ரூபாயில் வீடு வாங்கித் தர வேண்டும்?' என்ற வறட்டு கௌரவமும் கடுப்பும்தான் அவருக்குள் எரிந்துகொண்டிருந்தது.

அதே ஆத்திரத்துடன் மாமியார் வீட்டிற்குள் வந்தார். தன் அம்மாவிற்குத் துணையாக தங்கியிருந்த மனைவியை அதட்டி அழைத்து, “உடனே துணியை எடுத்துக்கிட்டு வீட்டுக்குக் கிளம்பு” என்றார்.

அவர் கோபத்தைக் கண்ட தேன்மொழிக்கு ஏதோ விபரீதமாக நடந்திருக்கிறது என்று விளங்கவும், “என்னாச்சு மாப்பிள்ளை... கார்த்திக் உங்க கூட வரலையா?” என்று கேட்டார்.

“உங்க யோக்கியப் புள்ளைக்கு ஜாமீன் கிடைக்கல, உள்ள தள்ளிட்டாங்க” என்று ஜெகன் சொல்ல, தேன்மொழியின் நெஞ்சில் இடி விழுந்தது.

அவர் சொன்னதைக் கேட்ட யாத்ரா அதிர்வுடன், “அவர் கண்டிப்பா ஜாமீன் கிடைச்சிரும்னு என்கிட்ட சொன்னாரே அண்ணா...” என,

“அப்போ நான் என்ன புளுகுறேனா? கோர்ட்ல ஜட்ஜ் முன்னாடி நின்னுட்டு வர்றேன்... என்கிட்டயே கேள்வி கேக்குறியா?” என்று யாத்ராவிடம் எகிற, அவள் மிரண்டுவிட்டாள்.

“ஏங்க, அவ சின்னப் பொண்ணு... என்னாச்சுன்னு கொஞ்சம் பொறுமையா சொல்லுங்கங்க” என்று மேகலா கணவனின் கைகளைப் பிடித்துக் கெஞ்சினாள்.

“உன் தம்பி செஞ்ச காரியம் அப்படி! அவன் கமிஷன் வாங்கியிருக்கான்... அதாவது லஞ்சமா ஒரு அப்பார்ட்மென்ட்டை வாங்கிப் போட்டிருக்கான். அதுவும் யார் பேர்ல தெரியுமா?” என்றவர் யாத்ராவை முறைக்க, அவள் தலையைக் குனிந்துகொண்டாள்.

அவர் அதே வெறுப்புடன் தொடர்ந்து, “இவங்க அண்ணன் இந்திரன் பேர்ல!” என்று வெடிக்க,

தேன்மொழி நெஞ்சைப் பிடித்துக்கொண்டு, “நீங்க என்ன சொல்றீங்கன்னே எனக்கு ஒண்ணும் புரியல மாப்பிள்ளை... என் கார்த்திக் லஞ்சம் வாங்குறவனா?” என்று கதறினார்.

“எல்லாம் உங்க லட்சணமான மருமகளைக் கேளுங்க, அவளுக்கு எல்லாமே அக்குவேர் ஆணிவேரா தெரியும்” என்றவர் மேகலாவின் கையைப் பிடித்து இழுத்து, “கிளம்பிப் போகலாம், நட” என்றார்.

அவள் தாயின் நிலையைப் பார்த்துத் தயங்கி நிற்க, “இப்போ நீ என் கூட வர்றியா, இல்லை இங்கேயே நிரந்தரமா குப்பை கொட்டப் போறியா?” என ஜெகன் கத்த, மேகலா வேறு வழியின்றி அம்மாவைக் கண்ணீருடன் பார்த்துக்கொண்டே கணவனின் பின்னால் ஓடினாள்.

வாடிய முகத்துடன் தன் மகள் செல்வதைப் பார்த்திருந்த தேன்மொழியின் விழிகள், அடுத்த கணம் உக்கிரமாக யாத்ராவிடம் திரும்பின.

“மாப்பிள்ளை சொன்ன அந்த அப்பார்ட்மென்ட் விஷயம் எல்லாம் உனக்கு முன்னாடியே தெரியுமா?” என்ற கேள்விக்கு அவள் பதில் சொல்ல முடியாமல், கண்ணீரோடு தலையைக் குனிந்துகொள்ள,

“ஒழுங்கா இப்போ எல்லா விஷயத்தையும் சொல்லப் போறியா... இல்லை உன்னை என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது!” என்று ஆவேசமாக அவர் கேட்க, யாத்ரா வேறு வழியின்றி சௌந்தர்யாவின் காதலுக்காக கார்த்திக் அந்த வீட்டை வாங்கியதாக சொன்னாள்.

அதனை கேட்ட தேன்மொழி அப்படியே சோபாவில் சரிந்தார். “அப்போ... ஆரம்பத்துல இருந்தே எல்லாரும் சேர்ந்து பொய் சொல்லி ஏமாத்தித்தான் உங்க அண்ணனுக்கு என் பொண்ணைக் கல்யாணம் பண்ணி வைச்சிருக்கீங்க” என்று வருத்தமாகப் பேச,

“அப்படி இல்லை அத்தை... அவங்க ரெண்டு பேரும் விரும்பினாங்க... அதுக்காகத்தான் கார்த்திக்...” என யாத்ரா சமாதானம் செய்ய முயன்றாள்.

ஆனால் தேன்மொழி. “சீ! உன் குடும்பமே இப்படிதான்டி?” என வார்த்தைகளால் சாட, அவளுக்கு சுர்ரென்று ஏறியது.

“குடும்பமேன்னு இப்போ யாரைச் சொல்றீங்க அத்தை?” என்று திருப்பிக் கேட்க,

“பின்ன யாரைச் சொல்வாங்க? என் பொண்ணை உங்க அண்ணன் ஏமாத்திக் கல்யாணம் பண்ணிக்கிட்டான்... நீ என் பையனை ஏமாத்திக் கட்டிக்கிட்ட... இது எல்லாத்துக்கும் பின்னால உங்க ஆத்தா அப்பன் ரெண்டு பேரும் இருந்துதானே காய் நகர்த்தியிருக்காங்க!”

“இப்படி எல்லாம் எங்க அம்மா அப்பாவைப் பத்தி பேசாதீங்க சொல்லிட்டேன்!” என்றவள் தன் சுட்டு விரலை நீட்டி எச்சரிக்கும் தொனியில் சொல்ல, தேன்மொழியின் ஆத்திரம் இன்னும் அதிகமானது.

“ஏன் பேசக் கூடாது... ஏன் பேசக் கூடாது? இது எல்லா அசிங்கத்துக்கும் அவங்கதான் காரணம்... என் புள்ளை இப்போ ஜெயில் இருக்குறதுக்கும் கூட அவங்களும் நீயும்தான் காரணம்!” என்று அவர் வார்த்தைகளைத் வீசிக் கொண்டே போக, அவளது கோபம் கட்டுக்கடங்காமல் பெருகியது.

இந்த உணர்ச்சி வேகத்தில் இன்னும் பேசினால் வார்த்தைகள் தடம் மாறிவிடும் என்று பயந்த யாத்ரா, விறுவிறுவென்று தன் அறைக்குள் வந்து, கதவை வேகமாய் மூடித் தாழ்ப்பாள் போட்டுக் கொண்டு தரையில் அமர்ந்தாள்.

ஆனால், வெளியிலிருந்து தேன்மொழி நிறுத்துவதாய் இல்லை, கதவைத் தட்டி கத்திக் கொண்டேயிருந்தார்.

தாங்க முடியாத வேதனையில் அவள் தன் இரு கைகளாலும் காதுகளை பலமாக அழுத்திக் மூடிக்கொண்டாள்.

சில மணிநேரங்களுக்குப் பிறகுதான் அந்த வீடே அமைதி நிலைக்குத் திரும்பியது. அந்த நிசப்தத்தைக் கலைக்கும் விதமாகச் சத்தமிட்ட அவளது செல்பேசியில் அப்பாவின் முகம் ஒளிர்ந்தது.

தன் தொண்டைக்குள் அடைத்திருந்த அழுகையை விழுங்கிக்கொண்டு, “அப்பா…” என்று அழைத்தாள்.

“என்னம்மா ஆச்சு? உங்க மாமியார் போன் பண்ணி என்னென்னவோ சொல்லி கத்துறாங்க...?” என்று சொன்னதுதான் தாமதம், அத்தனை நேரமாகத் தன்னுள் பூட்டி வைத்திருந்த அழுகை, தவிப்பு, அவமானம், வேதனை எல்லாவற்றையும் மொத்தமாகக் கண்ணீராகக் கொட்டித் தீர்த்தாள் யாத்ரா.

“ஏன்மா... இந்த விஷயத்தை எங்ககிட்ட முதல்லயே சொல்லியிருக்கக் கூடாதா?”

“கார்த்திக் இன்னைக்கு ஜாமீன்ல வந்திடுவாரு... அப்புறமா எல்லாரும் ஒண்ணா உட்கார்ந்து பேசிக்கலாம்னுதான் சொல்லலை...”

“சரி, நானும் அம்மாவும் இப்பவே கிளம்பி அங்கே வர்றோம்.”

“வேண்டாம்பா... இங்க வராதீங்க... கார்த்திக் அம்மா ரொம்ப மோசமான மனநிலையில இருக்காங்க, கண்டபடி பேசுவாங்க...” என்று அஞ்ச,

“அதெல்லாம் ஒரு விஷயமே இல்லைடா... எனக்கு என் மகளும், என் மருமகனும்தான் இப்போ முக்கியம். நாங்க இப்பவே கிளப்புறோம்... நீ தைரியமா இரு, அப்பா வர்றேன்” என்று கூறிவிட்டு அவர் அழைப்பைத் துண்டிக்க, அத்தனை நேரம் அவள் மனதை அழுத்திக்கொண்டிருந்த வேதனைகள் எல்லாம் சட்டென்று விடுபட்டு, கொஞ்சம் அமைதி உண்டானது.

ஆனால், அந்த அமைதியிலும் கல்லை போட்டது அடுத்த சில நொடிகளில் வந்த மற்றொரு அழைப்பு. புதிய எண்ணிலிருந்து வந்த அந்த அழைப்பை அவள் சாதாரணமாக ஏற்று, “யாரு?” என்று கேட்டாள்.

“யாரா... நான்தான் டார்லிங், உன் ஹீரோ அமரேஷ் பேசுறேன்!” என்று அந்தப் பக்கமிருந்து நக்கலுடன் அமரேஷின் குரல் ஒலித்தது. அந்த பெயரைக் கேட்ட மறுகணமே யாத்ராவிற்குள் உறைந்து கிடந்த கோபமெல்லாம் எரிமலையாக வெடித்துச் சிதறியது.

Cancel “மதிப்புகுரியவள்” புத்தம் புது நாவல்… புது களம்… வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா