மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumMonisha Ongoing novels: Kadhalum KabadamumKadhalum Kabadamum - Episode 34Post ReplyPost Reply: Kadhalum Kabadamum - Episode 34

Quote from monisha on July 6, 2026, 7:09 PM

34

காலையின் மிருதுவான வெயில் அந்த ஹாலில் படர்ந்தது.கூடவே ஓர் அசாதாரணமான அமைதியும்! அந்த அமைதி, எப்போது வேண்டுமானாலும் வெடித்துச் சிதறக் காத்துக்கிடந்தது.

இந்திரன் கடுமையான கொதிப்பில் இருந்தான். தன் செல்பேசி மூலமாகத் தங்கையின் எண்ணிற்கு அவன் தொடர்ந்து அழைக்க, மறுமுனையில் ஓர் இயந்திரக்குரல் மட்டுமே அவனுக்குத் திரும்பத் திரும்பப் பதிலளித்துக் கொண்டிருந்தது.

‘எடு யாத்ரா... போனை எடு!’ என்று உள்ளூறப் பொறுமிக் கொண்டிருந்த கணவனின் தவிப்பை சௌந்தர்யா அமைதியாகக் கவனித்துக் கொண்டிருந்தாளே ஒழிய, எதுவும் பேசவில்லை. இப்போதும் அவளுக்கு யாத்ராவின் மீதுதான் கோபம் இருந்தது.

நடப்பதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த தேன்மொழி, தன் மகளின் தோளைத் தொட்டு, "மாப்பிள்ளைகிட்ட போய் பேசுடி," என்றார்.

"சொல்லாம கொள்ளாம அவர் தங்கச்சி ஓடிப் போயிட்டா... இதுல நான் பேசுறதுக்கு என்ன இருக்கு? அதுவும் இல்லாம, இதெல்லாம் என்ன அவ புதுசாவா பண்றா?" என்று சௌந்தர்யா கடுகடுப்பாக பேச, தேன்மொழிக்கு என்ன செய்வதென்று புரியவில்லை.

அதே சமயம், அறைக்கதவைத் திறந்து கொண்டு கார்த்திக்கும் வெளியே வந்தான். அவன் முகத்தில் தெரிந்த சோர்வைக் கண்ட சௌந்தர்யா, "ஸ்ட்ராங்கா ஒரு காபி போட்டு எடுத்துட்டு வரவா அண்ணா?" என்று அக்கறையுடன் கேட்க, அதைப்பார்த்த இந்திரனுக்குப் பற்றிக் கொண்டு வந்தது.

"காபி மட்டும் போதுமா? போ... போய் நல்லா விருந்து சாப்பாடு ரெடி பண்ணு! அண்ணனும் தங்கச்சியும் சேர்ந்து சந்தோஷமா சாப்பிடுங்க!" என்று இந்திரன் எரிந்து விழ,

"இப்போ எதுக்கு ஓவரா சீன் போடுறீங்க? உங்க தங்கச்சி இப்படி எல்லாரையும் விட்டுட்டுப் போறது என்ன புதுசாவா நடக்குது?" என்று சௌந்தர்யா திருப்பித் தாக்கினாள்.

கோபத்துடன் பற்களைக் கடித்த இந்திரன், கார்த்திக்கைப் பார்த்தபடி, "அவளா ஒண்ணும் போகல... உன் அண்ணன்தான் அவ கழுத்தைப் பிடிச்சு வெளியே தள்ளுனான்!" என்று சொல்ல, கார்த்திக் தன் தலையை மெதுவாக நிமிர்த்தினான்.

அப்போதுதான், கொஞ்சம் கொஞ்சமாக நேற்று இரவில் நடந்த சம்பவங்கள் யாவும் அவன் நினைவுக்கு வந்தன. அதே நேரம் தேன்மொழியும் தன் மகனின் அருகே வந்து, "உனக்கு என்னடா அப்படி ஒரு கோபம்... ஒரு பொண்ணைக் கழுத்தைப் பிடிச்சு வெளியில தள்ளுற அளவுக்கு?" என்று கேட்டார்.

ஆனால், கார்த்திக் பதில் சொல்வதற்குள் இடையில் புகுந்த சௌந்தர்யா, "அவ செஞ்ச காரியத்துக்கு அவளுக்கு இதெல்லாம் தேவைதான்... இதுல அண்ணன் தப்பு எதுவும் இல்லை!" என்று வக்காலத்து வாங்கினாள்.

"எது... தப்பு இல்லையா?" என்று இந்திரன் அவளை முறைக்கவும், பதறிய தேன்மொழி, "புள்ளத்தாச்சியா இருந்துட்டு இப்படி எல்லாம் பேசாதம்மா," என்று மகளிடம் அறிவுறுத்திய போதும் அவள் அடங்கவில்லை.

"நேத்து சாயங்காலம் நீ அவகிட்டப் போய் எவ்வளவு பொறுமையாத்தானே பேசுன... 'பழசையெல்லாம் மறந்துட்டு கார்த்திக் கூடச் சேர்ந்து வாழு'ன்னு. ஆனா, அவ அதுக்கு என்ன பதில் சொன்னா?" என்று சௌந்தர்யா போட்டுக் கொடுக்கவும், கடுப்பான கார்த்திக், "நீ அவகிட்ட பேசினியாம்மா?" என்று தன் அம்மாவைக் காட்டமாகப் பார்த்தான்.

உடனே சௌந்தர்யா, "அவங்க பேசல ண்ணா, மன்னிப்பு கேட்டாங்க... ஆனா, அவ அம்மாவை மதிக்காம 'யோசிக்கிறேன்'னு திமிரா சொல்லிட்டுப் போயிட்டா" என்று இன்னும் அவனைக் கிளறிவிட்டாள். இந்த விஷயமெல்லாம் இந்திரனுக்கும் முற்றிலும் புதிய செய்தியாக இருந்தது.

மறுபுறம், இந்தத் தகவல் கார்த்திக்கிற்குள் சுர்ரென்று கோபத்தை ஏற்ற, "நீங்க எதுக்கும்மா அவகிட்டப் போய் பேசினீங்க?" என்று அவன் பொங்கினான்.

அந்த நொடி தேன்மொழிக்குள் இத்தனை நாட்களாகத் தேங்கிக் கிடந்த குற்ற உணர்ச்சி கண்களில் கண்ணீரை நிறைக்க, "ஆமாடா! நான் தான் பேசினேன்! ஏன்னா, அன்னைக்கு அவ உன்னை விட்டுப் போக முழுமூச்சுக் காரணமே நான்தான்! நீ ஜெயிலுக்குப் போனப்போ, அவளைக் கேவலமா பேசி வீட்டை விட்டுத் துரத்துனது நான் தான்டா!" என்று அழுதுகொண்டே சொன்னார்.

ஆனால், கார்த்திக்கின் பிடிவாதம் அந்தக் காரணத்தை ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. "நீங்க என்னதான் சொல்லியிருந்தாலும், அவளுக்கு என் மேல உண்மையான காதல் இருந்திருந்தா என்னை விட்டுட்டுப் போயிருக்க மாட்டா!" என்று கறாராகச் சொன்னவன், அதற்கு மேல் அங்கே நிற்க விரும்பாமல் விறுவிறுவென்று தன் அறைக்குள் சென்று கதவைச் சாத்திக் கொண்டான்.

அவன் கட்டிலின் ஓரத்தில் தலையில் கைவைத்தபடி அமர்ந்திருக்க, உள்ளே வந்த இந்திரன், "நேத்து நைட்டு... நீ அவ்வளவு போதையில இருந்த... ஆனா, அந்தப் போதையிலயும் கூட நீ தெளிவாதான் பேசுன," என்று கூற, கார்த்திக் அவனைப் புரியாமல் பார்த்தான்.

இந்திரன் தொடர்ந்து, " என் தங்கச்சியை ஏன் வெளியே தள்ளுனன்னு நான் கேட்டதுக்கு... 'என்னை வேணாம்னு விட்டுட்டுப் போனவளுக்கு என் வீட்டுல இடம் இல்ல'ன்னு சொன்ன... " என்ற நொடி கார்த்திக் பதறித் துடித்து எழுந்து நின்றுவிட்டான்.

"இந்திரன் சாரி... ஏதோ கோபத்துல... ப்ளீஸ் என்னை மன்னிச்சிடு" என்று அவன் உடனடியாக இந்திரனின் கையைப் பிடித்து மன்னிப்புக் கோரினான்.

ஆரம்பத்தில் அவர்கள் உறவில் கொஞ்சம் ஈகோவும் கோபமும் இருந்திருந்தாலும், இந்த மூன்று வருட காலத்தில் அதெல்லாம் முற்றிலும் காணாமல் போயிருந்தது. எப்படி அவர்கள் உறவு இவ்வளவு நெருக்கமானது என்று அவர்களுக்கே தெரியவில்லை. அதுவும் யாத்ரா தன்னைப் பிரியும் முடிவை எடுத்த பிறகும் கூட, கார்த்திக் அவர்கள் குடும்பத்தைக் குறை கூறவில்லை; ஏன், ஒருமுறை கூட யாத்ராவை மோசமாகப் பேசியதே இல்லை.

அதனாலேயே இந்திரனுக்கு அவன் மீது நிறைய மதிப்பு இருந்தது. நேற்று நடந்தது அவனுக்கும் பெரும் அதிர்ச்சிதான் என்றாலும், முழுவதுமாகக் கார்த்திக்கை அவனால் வெறுத்து ஒதுக்க முடியவில்லை.

தன் கையை மெதுவாக விடுவித்துக் கொண்ட இந்திரன் நிதானமாக, "உனக்கு யாத்ரா செஞ்சது தப்பாவே இருக்கட்டும். ஆனா, நேத்து எல்லார் முன்னாடியும் அவளை நீ நடத்துன விதம்... அது ரொம்பத் தப்பு கார்த்திக். ஒரு அண்ணனா என் இடத்துல இருந்து நீ யோசிச்சுப் பாரு... உன் தங்கச்சியை நான் இப்படி நடத்தியிருந்தா?" என்று கேட்டான்.

அந்தக் கேள்வி கார்த்திக்கின் மனதைக் குத்திக் கிழித்தது. அவனுள் மெல்ல மெல்ல ஒரு ஆழமான குற்ற உணர்ச்சி தலைதூக்கத் தொடங்க, அதற்கு மேல் எதுவும் பேசாமல் அமைதியாக நின்றுவிட்டான்.

"இன்னைக்கு சாயந்திரம் எங்க அம்மா, அப்பா வீட்டுக்கு வராங்க... அவங்களுக்கு இப்போ நான் என்ன பதில் சொல்வேன்?" என்று இந்திரன் வேதனையுடன் கூற, கார்த்திக் உடனே, "அதைப்பத்தி நீ கவலைப்படாத. எனக்கு யாத்ராவோட ஆபீஸ் தெரியும். நானே நேர்ல போய் அவகிட்டப் பேசி கூட்டிட்டு வர்றேன்," என்று உறுதி கொடுத்தான்.

இந்திரன் ஆச்சரியத்துடன் அவனையே பார்க்க, கார்த்திக் தாமதிக்காமல் குளித்துத் தயாரானான்.

காரில் கிளம்பியவன் கைகள் ஸ்டீயரிங்கைத் திருப்பிக் கொண்டிருந்தாலும், அவனது மனம் நேற்றைய சம்பவங்களிலேயே சுற்றிக் கொண்டிருந்தது. இன்னும் அந்த நெருப்பு அணையாமல் அவனுக்குள் எரிந்து கொண்டிருந்தது. நிச்சயமாக அவன் நேற்று யாத்ராவிற்குச் செய்தது போதையில் இல்லை; அது முழுக்க முழுக்க அவள் மீது கொண்ட தீராத வன்மத்திலும் கோபத்திலும்தான்!

மூன்று வருடங்களாகத் தன்னைத் தவிக்கவிட்டுச் சென்றவளை அவமானப்படுத்த வேண்டும் என்ற வன்மம்! அதுமட்டுமா? நேற்று அவளது அலுவலகத்தில், மற்றொருவனின் தோளில் அவள் சாய்ந்து நின்றதைப் பார்த்த போது, அவன் உள்ளத்தில் ஓர் எரிமலையே வெடித்துச் சிதறியது. அவள் தன் காதலை அசிங்கப்படுத்திவிட்டாள் என்ற கோபம்; அந்த வலி! அந்த வலியை அவளுக்கு பலமடங்கு அதிகமாக திருப்பிக் கொடுக்க வேண்டும் என்ற வெறி! அதற்காகத்தான் குடித்தான்; அந்தப் போதையை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்திக் கொண்டான்.

அதனால் உள்ளூற அவனுக்குள் ஒரு குரூரமான நிம்மதி பரவியது உண்மைதான். ஆயினும், இப்போது அந்த ஈகோவின் திருப்திக்குக் பின்னால், அவளது அழுகை முகமும், இந்திரனின் வார்த்தைகளும் சேர்ந்து அவனுள் ஆழமான குற்ற உணர்வை உருவாக்கத் தொடங்கியிருந்தன.

வண்டி ஓட்டிக்கொண்டே முன்கண்ணாடியைப் பார்த்தான். அதில் அவளது விழிகள் தெரிவது போலிருக்க, பழைய நினைவுகளுக்குள் தடம் மாற இருந்த அவனது மனதை, இடையில் வந்த ஸ்பீட் பிரேக்கர் இயல்பு நிலைக்குப் புரட்டிப் போட்டது.

அடுத்த சில நொடிகளில், மேத்தா குழுமத்தின் சென்னை கிளையின் முன்னே வந்து அவனது கார் நின்றது. நேற்று இதே நேரத்திற்கு அலுவலகத்திற்கு அவன் வந்தபோது, ஒரு ஈ காக்கா கூட இல்லை. ஆனால் இன்று... மொத்த சென்னையும் இங்கே திரண்டிருப்பது போன்ற பிரமை உண்டானது. அத்தனை பெரிய கூட்டம்! இங்கே யாத்ராவை எப்படித் தேடிக் கண்டுபிடிப்பது என்று யோசித்துக் கொண்டே, காரை ஓரமாக நிறுத்திவிட்டு உள்ளே நடந்தான்.

மறுபுறம், அந்த அலுவலகத்தின் சென்னை கிளை தொடக்க விழா மிக பிரம்மாண்டமாகத் தொடங்கியிருந்தது. வண்ண விளக்குகளும், தோரணங்களும், பின்னணியில் ஒலித்துக் கொண்டிருந்த மெல்லிய இசையும் அந்த இடத்தையே ஒரு திருவிழாக் கோலமாக மாற்றியிருந்தன.

யாத்ராதான் அனைத்து ஏற்பாடுகளையும் முன்னின்று கவனித்துக் கொண்டிருந்தாள். ஆரவ் விருந்தினர்களையும் புதிய ஊழியர்களையும் முகமலர்ச்சியோடு வரவேற்றுக் கொண்டிருந்தான். அவனது வழக்கமான கார்ப்பரேட் இறுக்கம் இன்று சற்று தளர்ந்திருந்தது.

விழா ஓரளவிற்குச் சீராகி, வந்திருந்தவர்கள் அனைவரும் சிற்றுண்டிப் பகுதிக்கும் ஆலோசனைக் கூட்ட அரங்குகளுக்கும் நகரத் தொடங்கினர். அரங்கிற்குள் நின்ற யாத்ராவிடம் ஓர் ஊழியர் காதில் ரகசியமாக ஏதோ சொல்ல, அவளது முகம் குழப்பமாக மாறியது. உடனடியாக அருகிலிருந்த ஜன்னல் திரைச்சீலையை விலக்கிப் பார்த்தவள் முகத்தில் அப்பட்டமான வியப்பு!

"கார்த்திக்..." என்றாள் மெலிதாக.

அங்கே, கைகளைக் கட்டியபடி நிமிர்ந்து அலுவலகத்தைப் பார்த்தவாறு நின்றுகொண்டிருந்தான் கார்த்திக்! அதுவும் அங்கே வைக்கப்பட்டிருந்த ஆரவ்வின் பிரம்மாண்டமான பேனரைப் பார்த்தவனுக்கு உள்ளூற எரிந்தது. அந்த கம்பீரமான படம் அவனது ஈகோவை இன்னும் அதிகமாகச் சீண்டிவிட்டது. அதே நேரம், அந்தப் படத்தை எங்கேயோ பார்த்தது போலவும் ஒரு உணர்வு உண்டானது. அந்தச் சிந்தனையில் இருந்தவன், யாத்ரா தூரத்தில் நடந்து வருவதைப் பார்த்ததும் அப்படியே திகைப்பில் நின்றுவிட்டான்.

இன்று அவள் வழக்கமான உடையில் இல்லை. விழாவிற்காக வேண்டி, அடர் மஞ்சள் நிறப் பட்டுச்சேலை ஒன்றை அணிந்திருந்தாள். மேலும், தளர்வாகத் தோளில் அலைபாய்ந்த அவளது கூந்தல் காற்றில் அசைந்தாடியதில், அவனது மனமும் கன்னாபின்னாவென்று அலைபாய்ந்தது. அந்த அசாத்தியமான அழகு, அவனது வன்மத்தையும் தாண்டி அவனை உள்ளூற உருக்கி கொண்டிருந்தது.

அவளது கூந்தலின் சில இழைகள் காற்றில் பறந்து அவளது நெற்றியைத் தீண்ட, அவன் அப்படியே சிலையாகச் சமைந்துவிட்டான்.

அவளோ சாதாரணமாக அவன் அருகே வந்து நின்று, "என்ன வேணும் கார்த்திக்?" என்று கேட்டதற்குப் பதில் சொல்லாமல், அவளையே ஊடுருவிப் பார்த்துக் கொண்டிருந்தான்.

"கார்த்திக்?" என்று அவள் மீண்டும் சத்தமாக அழைத்தாள்.

மெதுவாகத் தலையை உலுக்கிக் கொண்டவனுக்கு, இன்னும் அந்த அழகின் கிறக்கம் குறையவில்லை. அவளைத் தன் பார்வையாலேயே அங்கம் அங்கமாக அளவெடுத்து, "எப்போ நீ இவ்வளவு அழகா புடவை கட்ட கத்துக்கிட்ட?" எனக் கேட்க, அவளது முகம் அப்பட்டமான எரிச்சலைக் காட்டியது.

"இதைக் கேட்கவா என் ஆபீஸுக்கு வந்தீங்க?"

"என்னென்னவோ கேட்கணும்னுதான் வந்தேன்... ஆனா, உன்னை இப்படிப் பார்த்த பிறகு வேற என்னென்னவோ கேட்கத் தோணுது."

"நைட்டு போதை இன்னும் தெளியலையா?"

"ஹும்... நைட்டு அடிச்சதெல்லாம் ஒரு போதையா?" என்றவன் அதே பாணியில் பேச,

" எனக்கு வேலை இருக்கு," என்றவள் திரும்பிச் செல்ல எத்தனிக்க, அவளைப் போகவிடாமல் அவளது கையை எட்டிப் பிடித்துக் கொண்டான்.

அவன் பிடியில் நிலைதடுமாறி நின்றவள், தன் கையை பலமாக உதற முயன்றபடித் திரும்பிச் சீறினாள்.

"கையை விடு கார்த்திக்! இது ஒண்ணும் உன் வீடு இல்லை... நினைச்சப்போ கையைப் பிடிக்கவும், நைட்டு பண்ண மாதிரி கழுத்தைப் பிடிச்சு வெளியே தள்ளவும்! ஜஸ்ட் லீவ் மை ஹேண்ட்!" என்று அவளது குரல் கோபத்தில் நடுங்க,

அவளது கோபத்தை கொஞ்சமும் பொருட்படுத்தாமல் இன்னும் தன் பக்கமாக இழுத்தவன், "ஆமா... இங்க கையெல்லாம் பிடிக்கக் கூடாது... ஆனா, ஆபீஸ்க்குள்ள பாஸோட தோள்ல சாய்ஞ்சுகிட்டே வேலை பார்க்கலாம்? அப்படித்தானே?" என்று எள்ளலுடன் கேட்க, யாத்ராவின் கண்களில் கனலேறியது.

அந்த நொடியே அவன் பிடியிலிருந்த தன் கையை உதறியவள், இம்முறை நின்று நிதானமாக அவனுக்குப் பதில் சொன்னாள்.

"என் ஆபீஸ்ல நான் எப்படி வேணா வேலை பார்ப்பேன்... அது என் இஷ்டம்! அப்புறம் நமக்குள்ள இப்போ எந்த உறவும் இல்லை... ஸோ, நான் யாருடன் ரிலேஷன்ஷிப்ல இருந்தாலும் அது உனக்குத் தேவையில்லாதது!" என்று முகத்திலடித்தது போலக் கூறியதில் அவனது ஈகோ பலமாகச் சீண்டப்பட்டது.

"என்ன சொன்ன... ரிலேஷன்ஷிப்பா?!" என்று அவன் சீறவும், "ஆமா அப்படித்தான்... நீயும் என்னை விட்டுட்டு வேற யாராவது ஒரு பொண்ணப் பாரு!" என்று சொல்லிவிட்டு, அவள் சில அடிகள் நடந்து முன்னே சென்றுவிட்டாள்.

அவனுக்குள் என்ன தோன்றியதோ? நான்கே எட்டில் அவள் அருகே வந்துவிட்டவன், அவளது மணிக்கட்டை இறுகப் பற்றி, கார் நிறுத்தப்பட்டிருந்த தூணிற்கு அருகே அவளை இழுத்து வந்துவிட்டான்!

"கார்த்திக்!" என்றவள் மிரள, அவனோ அவளைத் தூணில் சாய்த்து நிறுத்தி, தன் இரு கைகளாலும் அணைப்போட்டான். அவர்களுக்குள் நூல் இழை இடைவெளி கூட இல்லை.

"என்ன பண்ற கார்த்திக்?" என்று அவள் எரிச்சலடைய, அவன் அதைக் கொஞ்சமும் பொருட்படுத்தாமல் அவளை இன்னும் நெருங்கி நின்று, அவளது கண்களை நேராகப் பார்த்துப் பேசினான்.

அவனது மூச்சுக்காற்று நெருப்பாய் அவளது முகத்தில் சுட்டது. "இங்க பாருடி... என்னை விட்டுப் போறேன்னு நீ சொன்னப்போ, நான் எந்த எதிர்ப்பும் இல்லாம சம்மதிச்சேன்... உன்னை அமைதியா போகவிட்டேன். இப்பவும் நீ எங்கேயோ போய் தனியா இருக்குறது எனக்குப் பிரச்சினை இல்லை... ஆனா, இப்போ சொன்னியே ரிலேஷன்ஷிப்... அதுக்கெல்லாம் நான் சம்மதிக்கல, சம்மதிக்கவும் மாட்டேன்! நாம பிரிஞ்சிருந்தாலும் நீ என்னைக்கும் என் பொண்டாட்டிதான்டி! கார்த்திக்கோட பொண்டாட்டி! அந்த உண்மை எப்பவுமே மாறாது!" என்று அவளது விழிகளையும் நடுங்கும் இதழ்களையும் வெறியோடு பார்த்தபடி அழுத்தமாகக் கூறியவனை, அவள் அதிர்ச்சியுடன் பார்த்தாள்.

அவன் மேலும் அவளது இதழ்களின் மேல் தன் பார்வையைப் பதித்தபடியே, "அப்புறம்... இன்னைக்கு சாயங்காலம் உங்க அம்மா, அப்பா வராங்க. நம்ம பிரச்சினைல அவங்களைக் கஷ்டப்படுத்த வேண்டாம்... ஒழுங்கா வீட்டுக்கு வந்துடு!" என்று தணிந்த குரலில் சொன்னாலும், அதிலும் அவனது அதே அதிகார தோரணைதான் தெரிந்தது.

இந்தப் பிரச்னைக்கு நடுவில், தன் அம்மா, அப்பா வருவதைக் குறித்து யாத்ரா மறந்தே போய்விட்டாள். அவளது முகம் யோசனையாக மாற, மறுபுறம் கார்த்திக் அந்த ஆழமான நெருக்கத்தை விட்டுக்கொடுக்க மனமில்லாமல் அவளையே வெறித்துக் கொண்டு நின்றான்.

அந்த காட்சியை பார்த்து விட்ட ஆரவோ, "ஹேய்! லீவ் ஹர்!" என்று யாத்ராவிடமிருந்து கார்த்திக்கை ஆக்ரோஷமாகப் பிரித்துத் தள்ளினான்.

அந்த விநாடி கார்த்திக்கிற்கு அவன் யாரென்று சட்டென்று நினைவு வர, ஆரவ்வின் கண்களிலும் அவனைக் கண்டு கோபம் தெறித்தது. அந்த அசந்தர்ப்பமான சூழ்நிலையில் நேருக்கு நேராகச் சந்தித்துக் கொண்ட இருவரின் கோபமும் சற்று முன்பு உருவானது அல்ல!

அதுவாக அமைந்த வாய்ப்பில் இருவரும் தங்கள் பழைய பகையைத் தீர்த்துக் கொள்ள எண்ணி ஒருவரையொருவர் அடித்துக் கொள்ளப் பாய... யாத்ரா மிரட்சியுற்றாள்.

"கார்த்திக்... ஆரவ்... ப்ளீஸ் வேணாம்!" என்று அவர்களுக்கு இடையில் வந்து நின்று தடுக்க முயன்றாள்.

Cancel “மதிப்புகுரியவள்” புத்தம் புது நாவல்… புது களம்… வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா