மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumMonisha Ongoing novels: Kadhalum KabadamumKadhalum Kabadamum - Episode 35Post ReplyPost Reply: Kadhalum Kabadamum - Episode 35

Quote from monisha on July 6, 2026, 7:09 PM

35

பெரிதாக எதுவும் கைகலப்பு ஆகிவிடாமல் அவர்கள் இடையில் வந்து யாத்ரா தடுத்துவிட்ட போதும், இருவரின் கண்களிலும் கோபக் கனல் தெறித்துக் கொண்டிருந்தது. அவர்களை அமைதிப்படுத்த என்ன செய்வது என்று யோசித்தவள், ஆரவ்வின் பக்கம் திரும்பினாள். அவனது வலது கரத்தைத் தன் கைகளால் சட்டென்று பற்றிக் கொண்டாள். அவளது இந்தத் திடீர் தீண்டலில் ஆரவ் லேசாகத் திடுக்கிட்டு அவளைப் பார்த்தான்.

" இன்னும் கொஞ்ச நேரத்துல போர்டு டைரக்டர்ஸ் மீட்டிங் ஆரம்பிக்க போகுது... நீங்க இப்போ இங்க சண்டை போட்டுட்டு இருந்தா நல்லாவா இருக்கும்... வாங்க சார் போகலாம்!" என்று யாத்ரா மென்மையான குரலில் சொல்ல, அவனது கோபம் அப்போதைக்கு மட்டுப்பட்டுவிட்டது.

அவள் சொல்வதைக் கேட்டு ஆரவ்வின் கால்கள் முன்னோக்கி நகர்ந்தாலும், அவனது தலை மட்டும் பின்னோக்கித் திரும்பி, கார்த்திக்கைக் கொன்றுவிடுவதைப் போல முறைத்துக் கொண்டே சென்றது.

ஆரவ்வின் அந்த முறைப்பும், எல்லாவற்றிற்கும் மேலாக... தன் கண் முன்னாலேயே யாத்ரா அவனின் கையைப் பிடித்து இழுத்துச் சென்றதைக் கண்ட கார்த்திக்கிற்கு ஏற்கனவே எரியும் நெருப்பில் எண்ணெய்யை வார்த்தது போலானது!

'என் முன்னாடியே... அவன் கையைப் பிடிச்சு இழுத்துட்டுப் போறா?!' என்று பொறாமையிலும் ஆத்திரத்திலும் அவன் உள்ளுக்குள் புகைந்து கொண்டிருந்த சமயம், யாத்ரா மீண்டும் அவனிடம் திரும்பி வந்தாள்.

தன் இரு கைகளையும் உயர்த்தி அவனிடம் கையெடுத்துக் கும்பிட்டு, "நான் வீட்டுக்கு வர்றேன் கார்த்திக்... சாயந்தரம் அம்மா, அப்பா வர்றதுக்குள்ள நான் அங்கே இருப்பேன்! வீட்டுல அவமானப்படுத்துன மாதிரி, என் ஆபீஸ் கொலீக்ஸ் முன்னாடியும் என்னை அசிங்கப்படுத்தாதீங்க! ப்ளீஸ்... இங்கிருந்து கிளம்புங்க," என்று கெஞ்சிய அவளது கண்களில் கண்ணீர் முட்டி நின்றது.

அதன் பின் அவன் ஒரு நிமிடம் கூட அங்கே நிற்கவில்லை; உடனடியாக அங்கிருந்து காரை எடுத்துக்கொண்டு வெளியேறிவிட்டான்.

மறுபுறம், சென்னை கிளையின் தொடக்க விழா நிகழ்ச்சிகள் யாவும் ஒருவழியாக முடிவுக்கு வந்திருந்தன. யாத்ரா தன் அறைக்குள் வந்து அமர்ந்தவள், ஓரமாக வைக்கப்பட்டிருந்த தன் துணிப் பெட்டியைப் பார்த்தாள். அந்த வீட்டிற்கு மீண்டும் திரும்பிப் போகக் கூடாது என்றுதான் அதை அவள் காலையிலேயே கையோடு எடுத்து வந்திருந்தாள். ஆனால், இப்போது அவளுக்கு வேறு வழி இருப்பது போலத் தெரியவில்லை. காலையிலிருந்து அவளது செல்பேசிக்கு பலமுறை முயற்சி செய்த அண்ணனின் எண்ணிற்கு ஒரு குறுந்தகவலை அனுப்பி வைத்தாள்.

‘நான் ஈவினிங் வீட்டுக்கு வர்றேன் அண்ணா’

பின்னர், தன் அம்மா அப்பாவிற்கும் ஒரு வாய்ஸ் மெசேஜ் அனுப்பிவிட்டு நிமிர்ந்தபோது, ஆரவ் அவளது அறையின் வாசலில் நின்றிருந்தான்.

அவனது கைகள் வழக்கம் போலப் பேன்ட் பாக்கெட்டிற்குள் இருந்தன. அவனது முகத்தில் கோபத்தின் இறுக்கம் அப்பட்டமாகத் தெரிந்தது. யாத்ராவை நோக்கி வந்தவன், "அவன் ஏன் உன்கிட்ட அவ்வளவு அசிங்கமா நடந்துக்கிட்டான்?" என்று கேட்க, யாத்ரா மௌனமாக இருக்கையிலிருந்து எழுந்து நின்றாள். அவளது இந்த மௌனம் அவனது ஆத்திரத்தை இன்னும் அதிகமாக்கியது.

"உன்னைத்தான் கேட்குறேன்! பதில் சொல்லு... உனக்கு அவனை ஏற்கனவே தெரியுமா?" என்று இம்முறை வார்த்தைகளில் அழுத்தத்தைக் கூட்டி அதிகாரமாகக் கேட்டான்.

தன் விழிகளை உயர்த்தி அவனைப் பார்த்தவள், "தெரியும்..." என்று சுருக்கமாகச் சொன்னாள்.

"தெரியுமா?!" உதடுகள் துடிக்க அவளை பார்த்த ஆரவ்,"அப்போ... உன் அனுமதியோடதான் அவன் இன்னைக்கு என் ஆபீஸ்க்குள்ள வந்து, உன்கிட்ட அப்படி அநாகரிகமா நடந்துக்கிட்டு இருக்கான்... அப்படித்தானே?" என்று அவன் கேட்ட அந்த வினாடியில் யாத்ராவின் முகம் அவமானத்திலும் கோபத்திலும் சுரீரென்று சிவந்தது.

"சார்... இந்த விஷயத்தைப் பத்தி பேச எனக்கு விருப்பம் இல்லை. நீங்களும் தயவுசெஞ்சு இந்த விஷயத்தை இதோட அப்படியே விட்டுடுங்க..." என்று கூற, அவன் முகத்தில் இன்னும் கடுகடுப்பு அதிகமானது.

"அப்படி எல்லாம் இந்த விஷயத்தை விட முடியாது!"

அவனது பிடிவாதத்தைப் பார்த்து எரிச்சலான யாத்ரா, "எனக்கு புரியல சார்... இதுல உங்களுக்கு என்ன பிரச்சினை? விடுங்கன்னா விட வேண்டியதுதானே!" என்று நேருக்கு நேராக அவளும் சற்றே குரலை உயர்த்தித் திருப்பிக் கேட்டாள்.

"என் ஆபீஸ்ல வந்து, எவனோ ஒருத்தன் பொறுக்கித்தனம் பண்ணிட்டுப் போயிருக்கான்! அவனைச் சும்மா விட சொல்றியா நீ?" என்று அவன் ஆத்திரத்தில் எகிறினான்.

அந்தக் கணமே அவளது கோபம் தெறிக்க, "பொறுக்கித்தனம் அது இதுன்னு எல்லாம் பேசாதீங்க சார்!" என்று சத்தமிட்டாள்.

ஆரவ், அவளை ஆழ்ந்து பார்த்துவிட்டு, "அவன் உன்கிட்ட நடந்துக்கிட்ட முறைக்கு பேரு பொறுக்கித்தனம் இல்லாம வேற என்ன?" என்று இம்முறை சற்றே குரலைத் தாழ்த்தி, நிதானமாகக் கேட்டான்.

அந்தக் கேள்விக்கு முன்னால் யாத்ரா ஒரு நொடி உறைந்து நின்றாள். தன் நெஞ்சுக்குள் எழும் உணர்ச்சிகளின் தீவிரத்தைக் கட்டுப்படுத்த எண்ணி, ஒரு பலமான நீண்ட மூச்சை உள்ளே இழுத்து வெளியே விட்டாள்.

"ஓகே... உங்க கேள்விக்கு நான் பதில் சொல்றேன்," என்றவள் அவனைத் தீர்க்கமாகப் பார்த்து, "கார்த்திக் என்னோட ஹஸ்பெண்ட் ... போதுமா? உங்க கேள்விக்கு பதில் கிடைச்சிருச்சா? ப்ளீஸ்... இதோட இந்த விஷயத்தை விட்டுடுங்க," என்று கூறினாள்.

அந்த வார்த்தை ஆரவ்வின் முகத்தில் பேரதிர்ச்சியை நிரப்பியது. “ஹஸ்பெண்டா?!” என்று அவன் திகைப்பில் அப்படியே உறைந்து நிற்க, யாத்ரா அமைதியாக அந்த அறையை விட்டு வெளியேறிவிட்டாள்.

மனதிலிருந்த தவிப்பும் வேதனையும் அடங்கும் வரை ஓய்வறையில் வந்து தனியாக நின்று அழுது தீர்த்தாள். அதன்பின் அவளை அவளே தேற்றிக் கொண்டு, மீண்டும் வந்து தன் முழு கவனத்தையும் வேலையில் செலுத்தினாள். முக்கியமாக, அதற்குப் பின் ஆரவ்வை நேருக்கு நேர் பார்க்காமல் தவிர்த்தாள்.

அன்று மாலை வேலை முடிந்து யாத்ரா கிளம்பும் சமயத்தில், ஆரவ் அவளைத் தன் அறைக்கு அழைத்திருந்தான்.

"உண்மையிலேயே... அந்த கார்த்திக் உன் ஹஸ்பெண்டா யாத்ரா?" என்றவன் அதே விஷயத்தை மீண்டும் தொடர, அவளது முகத்தில் லேசான சலிப்பு படர்ந்தது.

"வேலை விஷயமா உங்களுக்குக் கேட்க ஏதாவது இருந்தா கேளுங்க சார், இல்லைன்னா சாரி, ஐ யம் லிவிங்," என்றாள் கறாராக.

ஆரவ் அப்போதும் விடவில்லை. தன் செல்பேசியை எடுத்து, அதில் இருந்த ஒரு புகைப்படத்தைத் திறந்து அவளது பார்வை படும்படி மேஜையின் மீது தள்ளினான். குனிந்து அந்தப் புகைப்படத்தைப் பார்த்த யாத்ராவின் கண்கள் அதிர்ச்சியில் அகல விரிந்தன.

“அந்த போட்டோவுல இருக்குறது உன் ஹஸ்பெண்ட் தானே?” என்று கேட்க, அவளால் பேச முடியவில்லை.

அந்தப் படத்தில் கார்த்திக் ஒரு பெண்ணுடன் மிகவும் நெருக்கமாக நின்று கொண்டிருந்தான். அந்தப் பெண்ணின் இடுப்பைச் சுற்றி அவனது கை கச்சிதமாகப் பதிந்திருந்தது. நெஞ்சுக்குள் ஒரு நொடி மின்னல் வெட்டினாலும், அடுத்த விநாடியே அவளது கண்களில் மீண்டும் ஒரு தெளிவு பிறந்தது.

ஆரவ்வை நேராகப் பார்த்தவள், "ஆமா... என் ஹஸ்பெண்ட் கார்த்திக்தான். ஆனா இந்த போட்டோ..." என்று ஒரு நொடி நிறுத்தி, மூச்சை இழுத்து விட்டவள், "ஒண்ணு மார்பிங்கா இருக்கணும்... இல்லைன்னா, வேறொரு சூழ்நிலையில தப்பான கண்ணோட்டத்துல எடுக்கப்பட்ட படமா இருக்கணும் சார்," என்று பதில் சொல்ல, ஆரவ் வியந்து போனான்.

"அந்தளவுக்கு உன் புருஷன் மேல் உனக்கு நம்பிக்கையா?"

அவள் தீர்க்கமான பார்வையுடன் பேசினாள். "கிட்டத்தட்ட மூணு வருஷத்துக்கு மேல நானும் கார்த்திக்கும் பிரிஞ்சுதான் வாழ்றோம் சார். பிரியணும்கிறது என்னோட தனிப்பட்ட முடிவுதான். கார்த்திக் நினைச்சிருந்தா என்னை எப்போவோ டிவோர்ஸ் பண்ணிட்டு, வேறொரு பொண்ணைப் பார்த்து முறைப்படி கல்யாணம் பண்ணி நிம்மதியா வாழ்ந்திருக்க முடியும்..."

அவள் சற்று நிறுத்தி, பின் தொண்டை அடைக்க, கண்களில் கண்ணீருடன் சொன்னாள். "ஆனா, கார்த்திக் அதைச் செய்யல... பிகாஸ் ஹி லவ்ஸ் மீ... ஒன்லி மீ!”

அவளது காதலை ஒருவிசித்திரமான அதிசயத்தைப் போலப் பார்த்த ஆரவ், "உன்னை மாதிரிப் பொண்ணுங்க எல்லாம் இன்னும் இந்த கிரகத்துல இருக்காங்களா?" என்று லேசான கிண்டலுடன் கேட்டான்.

"நிறைய இருக்காங்க சார்... நீங்க பார்த்த பெண்கள் மட்டுமே இந்த உலகம் இல்லை!"

யாத்ராவின் அந்தப் பேச்சில், ஆரவ் மெதுவாகத் தன் தலையைத் தாழ்த்திக் கொண்டான். "அப்போ... நான்தான் ரொம்ப அன்லக்கி (Unlucky) போல..." என்று அவன் மிகத் தாழ்ந்த குரலில் உரைத்த அந்த விநாடியில்... அவனது கண்களில் தேங்கிக் கிடந்த ஏதோ ஒரு மாறாத வலியையும், ஏமாற்றத்தையும் யாத்ராவால் மிகத் தெளிவாக உணர முடிந்தது!

அத்தனை நேரம் ஆரவ் மட்டுமே அவளை அடுக்கடுக்காகக் கேள்வி கேட்டுக் கொண்டிருக்க, "ஆமா... உங்களுக்கும் கார்த்திக்கை எப்படித் தெரியும்? அப்புறம் இந்த போட்டோ... இதை யார் கொடுத்தது உங்களுக்கு?" என்று யாத்ரா திருப்பிக் கேட்டாள்.

“போட்டோவை யார் கொடுத்ததுங்கிறது இங்க விஷயம் இல்லை... அந்த போட்டோவுல கார்த்திக் கூட இருக்குறது யாருங்கறதுதான் விஷயம்!" என்றான் ஒரு மர்மமான புன்னகையுடன்.

"அது ஆக்ட்ரஸ் நிகிதா தானே?" என்று உடனடியாக அவள் பதில் சொல்ல, "ஷி இஸ் மை எக்ஸ்-வைஃப்" என்று பதிலளித்தான் ஆரவ்.

"நடிகை நிகிதா... உங்க எக்ஸ்-வைஃபா?!" என்று யாத்ரா அதிர்ச்சியுடன் கேட்க, அவன் மௌனமாக ஆமோதித்தான்.

இப்போதுதான் விடை தெரியாமல் இருந்த பல கேள்விகளுக்கு அவளுக்கு விடை கிடைத்தது. தன் மனதிலிருந்த குழப்பப் புள்ளிகள் யாவையும் ஒன்றிணைத்தவள், "இரண்டு மாசத்துக்கு முன்னாடி... நிகிதாவுக்கும் அவங்க மேனேஜருக்கும் இடையில ஏதோ நெருக்கமான உறவு இருக்குன்னு யூடியூப் சேனல்கள் எல்லாம் கண்டபடி அசிங்கமாப் பேசுனாங்க... நானும் அதை சோசியல் மீடியாவுல பார்த்தேன்," என்றாள்.

"அப்பவும்... உனக்கு உன் புருஷன் மேல ஒரு சின்ன சந்தேகம் கூட வரலையா?" என்று ஆரவ் ஆச்சரியத்துடன் கேட்டான்.

யாத்ரா சற்றும் அசராமல், "இதுல சந்தேகப்பட என்ன இருக்கு சார்? இது முழுக்க முழுக்க நடிகை நிகிதாவோட பேரை 'டிஃபேம்' பண்ண சில சேனல்கள் செஞ்ச சீப் ட்ரிக்... இன்னும் சொல்லப்போனா... அது நிகிதாவை மட்டும் டார்கெட் பண்ணி செஞ்சது இல்லை... கூட இருக்கிற கார்த்திக்கையும் சேர்த்து அசிங்கப்படுத்தச் செய்யப்பட்ட சதிதான் அது. இதெல்லாம் சினிமா உலகத்துல ரொம்ப சகஜம்," என்று மிகத் தீர்க்கமாகக் கூறினாள்.

அவளின் அந்தத் தெளிவான விளக்கத்தைக் கேட்டதும், ஆரவ்வின் முகத்தில் இத்தனை நாட்களாக இருந்த ஏதோ ஒரு பெரிய குழப்பம் நீங்கி, ஒரு தெளிவு பிறந்தது போலிருந்தது.

யாத்ரா அப்போது மேஜையின் மீது தன் கைகளை ஊன்றி, "ஆனா, எனக்கு ஒரு விஷயம் மட்டும் இன்னமும் புரியவே இல்லை சார்... டிவோர்ஸ் ஆகி உங்களை விட்டுப் போன உங்க முன்னாள் மனைவிக்கு யாரோட தொடர்பு இருந்தா உங்களுக்கு என்ன? அதுவும்... ஆம்பளைங்க நீங்க எத்தனை பெண்களோட வேணாலும் சுத்தலாம், பழகலாம். ஆனா, பொண்ணுங்க மட்டும் அப்படி இருக்கக் கூடாது! கணவனே கண்கண்ட தெய்வம்னு பிரிஞ்சு வாழ்ந்தாலும் அவனையே நினைச்சுக்கிட்டு இருக்கணும் இல்ல?

அதெப்படி இந்த விஷயத்துல மட்டும் ஆம்பளைங்க நீங்க எல்லோரும் ஜெராக்ஸ் அடிச்சது மாதிரி ஒரே மாதிரி யோசிக்குறீங்க?" என்று அவள் அத்தனை காரமாகப் பேசிய நிலையிலும் ஆரவ் கோபப்படவில்லை.

“மே பீ இட்ஸ் பியூர் மேல் ஈகோ,” என்றவன் உண்மையை ஒப்புக்கொண்டு பதில் சொல்லவும், யாத்ரா மெலிதாகப் புன்னகைத்தாள்.

“பரவாயில்லை, ஒத்துக்கிட்டீங்க!" என்று கூற, "உன்னை மாதிரிப் பொண்ணுங்க சொல்லும்போது அதை ஒத்துக்குற மாதிரிதான் இருக்கு," என்று ஆரவ் சொன்னதைக் கேட்டு குழம்பியவள், “உங்களை மாதிரிப் பொண்ணு... இதை நான் எப்படி எடுத்துக்கணும் சார்?” என்று கேட்டாள்.

“காம்ப்ளிமென்ட்டா எடுத்துக்கோ,” என்று ஆரவ் சொல்ல, அவளது புருவங்கள் உயர்ந்தன. “உங்க டிக்ஷ்னரில காம்ப்ளிமென்ட்ங்குற வார்த்தை எல்லாம் இருக்கா சார்?” என்றாள் நக்கலாக.

முதலில் அவளை முறைத்தாலும் பின் லேசாகச் சிரித்துவிட்டு, “எல்லாத்தையும் பாராட்டிக்கிட்டே இருக்க முடியுமா யாத்ரா... அது என்னோட ஸ்டைல் இல்லை,” என்றான்.

"இப்படி சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதீங்க சார்... இதுவும் ஒரு மாதிரி மேல் ஈகோதான்... இப்படியே நீங்க இருந்தீங்கன்னா வேலையில நிறைய நல்ல எம்ப்ளாயீஸை இழக்க வேண்டியிருக்கும்... வாழ்க்கையில நிறைய நல்ல மனுஷங்களை இழக்க வேண்டியிருக்கும்," என்றாள்.

அவன் தன் பார்வையைச் சுருக்கி, “எனக்கே அட்வைஸ் பண்றியா?” என்று தீவிரமாகக் கேட்க, அவள் சட்டென்று பின்வாங்கி, “ஐ யம் சாரி சார், தப்புதான்... கொஞ்சம் அதிகபிரசங்கித்தனமா பேசிட்டேன்,” என்றாள்.

“இதனால்தான் நான் யாருக்கும் காம்ப்ளிமென்ட் குடுக்குறது இல்லை,” என்று அவன் கூற, “ரைட்,” என்று தலையசைத்தவள், “என் ஒர்க் முடிஞ்சிருச்சு சார், நான் கிளம்புறேன்,” என்று கூறிவிட்டு உடனடியாக அறையை விட்டு வெளியேறினாள்.

தன்னுடைய அறைக்கு வந்து பையையும், துணிப் பெட்டியையும் எடுத்துக் கொண்டு யாத்ரா ஆபீஸ் வாசலுக்கு வர, அங்கே ஆரவ்வின் கார் அவளுக்கு முன்னே வந்து நின்றது. அதே சமயம் அவனும் வீட்டிற்குப் புறப்பட்டு வாயிலுக்கு வர, அவள் ஒதுங்கி நின்றுகொண்டாள்.

ஆனால், அவனது ஓட்டுநர் அவள் அருகே இருந்த பெட்டியைத் தூக்க முயலவும், “இருங்க இருங்க... நான் கேப்ல போகப்போறேன்,” என்றாள் யாத்ரா அவசரமாக.

“சார்தான் உங்க லக்கேஜை எடுத்து வைக்கச் சொன்னாரு மேடம்” என்றான் டிரைவர்.

ஆரவ்வை திரும்பிப் பார்த்தவள், “நான் கேப்லயே போயிக்கிறேன் சார்,” என்று கூற, “இட்ஸ் ஓகே யாத்ரா, நான் டிராப் பண்றேன்,” என்றான் ஆரவ்.

“அதுக்கெல்லாம் அவசியம் இல்லை,” என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, அவன் காரின் கதவைத் திறந்துவிட்டு அவளைப் பார்க்க, வேறு வழியின்றி அவளும் காரில் ஏறிக் கொண்டாள். ஆரவ் மறுபக்கம் சென்று அமர்ந்து கொள்ள, அவர்களுக்கு இடையில் சில நிமிடங்களுக்கு மௌனம் மட்டுமே நிலவியது.

கொஞ்ச தூரம் சென்றதும், ஒரு பள்ளியின் வளாகத்தின் முன் அவர்கள் கார் ஓரமாக ஒதுங்கி நின்றது. ஆரவ் தன் பக்கத்து ஜன்னல் கதவுகளைத் திறந்தான்.

குழந்தைகள் அனைவரும் பள்ளியிலிருந்து மகிழ்ச்சியுடன் வெளியே வந்து கொண்டிருக்க, ஆரவ் அப்போது, “அதான் என் பொண்ணு நிமிஷா,” என்று யாத்ராவிடம் சுட்டிக்காட்டினான்.

ஆர்வமாக எட்டிப் பார்த்த யாத்ரா, அந்தக் குட்டி பெண்ணுடன் கார்த்திக் சிரித்துப் பேசி, கைகளைப் பிடித்தபடி நடந்து வருவதைப் பார்த்து அப்படியே ஸ்தம்பித்துவிட்டாள்!

ஆரவ் அப்போது, "நான் என் பொண்ணு கூட எப்படியெல்லாம் இருக்கணும்னு ஆசைப்படுறேனோ... அப்படி எல்லாம் கார்த்திக் இப்போ அவ கூட இருக்கான் யாத்ரா! என் பொண்ணை ஸ்கூல்ல இருந்து பிக்-அப் பண்றது, அவளுக்கு ஐஸ்கிரீம் வாங்கித் தர்றதுன்னு ஒரு அப்பாவோட ஸ்தானத்துல இருந்து கார்த்திக் எல்லாத்தையும் செய்றான்... என் பொண்ணு அவனைக் கொண்டாடுறா! ஒவ்வொரு நாளும் அதை தூரத்துல இருந்து பார்க்கப் பார்க்க எனக்குள் இருந்த அந்த ஆதங்கமும் பொறாமையும்தான்... இன்னைக்குக் கார்த்திக்கைப் பார்த்ததும் என்னை மீறி நான் அவனை அடிக்கப் போயிட்டேன்..." என்று அவன் தன் நெஞ்சில் இருந்த உண்மையை உடைக்க, யாத்ரா அவனை வருத்தத்துடன் பார்த்தாள்.

அவன் மேலும், "நீ சொன்னது நூத்துக்கு நூறு உண்மை யாத்ரா... என் ஈகோவாலதான் என் மனைவியையும், என் குழந்தையையும் நான் முழுசா இழந்துட்டேன். இப்போ எனக்கு என் பொண்ணைப் பார்க்கணும்னு, அவ கூட நேரம் செலவழிக்கணும்னு ஆசையா இருக்கு... ஆனா, என்னால முடியல. அதான், தூரத்துல இருந்து அவ ஸ்கூல் வாசல்ல நின்னு அவளை ஒருமுறை மட்டும் பார்த்துட்டு வந்துடுறேன்..." என்று அவன் கண்ணீர் மல்கக் கூறிய அந்த வார்த்தைகள், யாத்ராவின் மனதை உலுக்கியது.

"சாரி சார்... உங்க மனசைக் கஷ்டப்படுத்துற மாதிரி நான் ஆபீஸ்ல பேசிட்டேன்," என்றாள் யாத்ரா குற்ற உணர்வுடன்.

"அதெல்லாம் ஒண்ணுமில்லை யாத்ரா..."

"குழந்தை விஷயமா நீங்க ஏன் நிகிதாகிட்ட நேர்ல பேசக் கூடாது சார்?" என்று யாத்ரா கேட்க,

"அவ கண்டிப்பா ஒத்துக்க மாட்டா யாத்ரா... ஆனா” என்றவன் நிறுத்தி யாத்ராவை நேராகப் பார்த்து, “நீ நினைச்சா இந்த விஷயத்துல எனக்கு ஒரு பெரிய ஹெல்ப் பண்ண முடியும்,” என்றான்.

“நானா...?”

“கார்த்திக்கிட்ட எனக்காகப் பேச முடியுமா உன்னால?” என்றவன் மிகுந்த எதிர்பார்ப்புடன் கேட்க... யாத்ராவிற்கு அப்படியே தூக்கிவாரிப் போட்டது!

'ஆரவிற்காகத் போய் தான் கார்த்திக்கிடம் பேசுவதா?!' அவள் இதயம் வேகமாக அடித்துக் கொண்டது.

Cancel “மதிப்புகுரியவள்” புத்தம் புது நாவல்… புது களம்… வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா