மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumMonisha Ongoing novels: Kadhalum KabadamumKadhalum Kabadamum - Episode 37Post ReplyPost Reply: Kadhalum Kabadamum - Episode 37

Quote from monisha on July 6, 2026, 7:11 PM

37

மருத்துவமனை அறையில், தன் கைகளிலேயே தூங்கிவிட்ட சின்னவனை யாத்ரா மெதுவாகத் தொட்டிலில் கிடத்திவிட்டு, சௌந்தர்யாவின் பக்கம் வந்து நின்றாள்.

"அண்ணி... நான் கிளம்புறேன்... அப்புறம் இன்னைக்கு நைட் பிளைட்டில மும்பை போறேன்,” என்று தன் பயண விவரத்தைக் கூறிக் கொண்டிருக்கும் போதே, சௌந்தர்யாவின் கண்கள் சட்டென்று கலங்கின.

யாத்ராவின் கைகளைப் பற்றிக் கொண்டவள், மிகுந்த குற்ற உணர்வுடன், "யாத்ரா... என்னை மன்னிச்சிடுடா..." என்று அழுகையோடு தழுதழுத்தாள்.

"என்ன அண்ணி நீங்க... போய் மன்னிப்பு எல்லாம் கேட்டுக்கிட்டு... அதெல்லாம் ஒண்ணுமில்லை அண்ணி," என்று யாத்ரா பதற்றத்துடன் அவளைச் சமாதானப்படுத்த முயல,

"இல்லை யாத்ரா... அன்னைக்குத் திரும்பவும் நீ பெட்டியோடு வீட்டு வாசலில் வந்து நிக்கும்போது நான் உன்னை ரொம்ப மோசமாப் பேசுனேன். கேவலமா நடத்துனேன்... இப்போ அதெல்லாம் நினைச்சா எனக்கே அசிங்கமா இருக்கு" என்று சௌந்தர்யா வேதனைப்பட்டாள்.

"தயவுசெஞ்சு அப்படி எல்லாம் பேசாதீங்க அண்ணி.”

“இல்லை யாத்ரா... நீ மட்டும் அன்னைக்கு அந்த நேரத்துக்கு வராம இருந்திருந்தா... நானும் என் குழந்தையும்..." என்றவள், யாத்ராவின் கையைப் பிடித்துக் கொண்டு வருத்தப்பட,

“அண்ணி, தயவுசெய்து அந்த விஷயத்தை இதோடு விடுங்க... இப்போ நீங்களும் குழந்தையும் நல்லபடியா இருக்கீங்க, அதுதான் முக்கியம்,” என்று சொன்ன யாத்ராவின் குரலில் அப்பட்டமான பாசமும் அக்கறையும் வெளிப்பட்டது.

தங்கையும் மனைவியும் ராசியாகிவிட்ட அந்த நெகிழ்ச்சியான காட்சியைக் கதவோரம் நின்று பார்த்துக் கொண்டிருந்த இந்திரனின் மனம் மகிழ்ச்சியால் நிறைந்தது.

சௌந்தர்யா யாத்ராவின் கையைத் தடவி, "நீ இன்னும் ஒரு இரண்டு நாள் இங்கேயே இருந்துட்டுப் போகக் கூடாதா யாத்ரா?" என்று ஆவலாகக் கேட்க,

"இல்லை அண்ணி... அலுவலகத்தில் கொஞ்சம் அவசர வேலை இருக்கு... போயே ஆகணும். ஆனா கவலைப்படாதீங்க... குழந்தைக்குப் பெயர் வைக்கிற பங்கஷனுக்கு நான் கண்டிப்பா முதலாளா வந்துடுவேன்," என்று புன்னகையோடு வாக்குக் கொடுத்தாள் யாத்ரா.

அதன் பிறகு, தேன்மொழியிடமும் சொல்லிக் கொண்டு, மருத்துவமனை வராந்தா வழியே வாசலை நோக்கி நடந்தாள் யாத்ரா. கூடவே வந்த இந்திரன், "எத்தனை மணிக்கு ப்ளைட்? எப்படி போகப் போற... கேப் எதுவும் பதிவு பண்ணிட்டியா?" என்று விசாரித்தான்.

அண்ணனின் கேள்விக்குச் சட்டென்று பதில் சொல்லாமல் யாத்ரா லேசாகத் தயங்கினாள். அவளது விரல்களை ஒன்றோடொன்று பிணைத்தபடி யோசனையாக பார்த்த தங்கையிடம், "என்ன யாத்ரா... நான் வேணா உன்னை டிராப் பண்ணட்டுமா?” என்று கேட்டான்.

"இல்லை அண்ணா, நீ வர வேணாம்... கார்த்திக்கிட்ட சொல்லி, என்னை ஏர்போர்ட்ல கொஞ்சம் கொண்டு போய் விட முடியுமான்னு கேக்குறியா அண்ணா?" என்று மிகத் தயங்கிக் கேட்டாள்.

இந்திரனால் அவள் கேட்டதை ஒரு நொடி நம்பவே முடியவில்லை. இருப்பினும், தன் ஆச்சரியத்தை முகத்தில் காட்டாமல் மறைத்துக் கொண்டு, "சரி யாத்ரா... நான் கார்த்திக்கிட்ட பேசுறேன்,” என, அவளும் அங்கிருந்து கிளம்பி வீட்டை வந்து அடைந்தாள்.

அங்கே அவளது அம்மாவும் அப்பாவும் அவளுக்கு பெட்டியை அடுக்க உதவிக்கொண்டே, "திரும்ப எப்போடா வருவ?" என்று கேட்க,

"அண்ணன் குழந்தைக்குப் பெயர் வைக்கிற பங்க்ஷனுக்கு வந்துடுவேன் மா... அப்படியே கையோடு ஏற்காடு வந்து கொஞ்ச நாள் தங்கிட்டுப் போறேன்,” என்று சொல்லிக் கொண்டே பெட்டியை மூடி, அதை எடுத்துக்கொண்டு வரவேற்பறைக்குள் வந்தாள். அங்கே சுவரிலிருந்த கடிகாரத்தில் நேரத்தைப் பார்த்தவளுக்குள் லேசான பதற்றம் தொற்றிக் கொண்டது. நேரம் வேகமாக ஓடிக் கொண்டிருந்தது.

இரண்டு நாட்களுக்கு முன்பு, அந்தப் பால்கனியில் நிலவொளியில் நடந்த அந்த முத்த சம்பவத்திற்குப் பிறகு கார்த்திக் அவளது கண்ணிலேயே படவில்லை. அவளைச் சந்திப்பதைத் தவிர்ப்பதற்காகவே அவன் பெரும்பாலும் மருத்துவமனையிலேயே தங்கியிருந்தான். அவள் மருத்துவமனைக்குப் போகும் நேரத்தில், அவன் யாருக்கும் தெரியாமல் வீட்டுக்கு வந்துவிடுவான்.

இந்தக் கண்ணாமூச்சி விளையாட்டுக்கு இடையில், அவனிடம் பேச நினைத்த விஷயத்தை அவளால் பேசவே முடியவில்லை. அதற்காகத்தான் இன்று கிளம்புவதற்கு முன் அவனைப் பார்த்துப் பேசிவிட நினைத்தாள். ஆனால், நேரமாகிவிட்டதால் அவன் வரமாட்டான் போல... என்று எண்ணிய யாத்ரா, வாடகை வண்டி பதிவு செய்யத் தன் செல்பேசியை எடுத்தபோது அழைப்பு மணி ஒலித்தது.

கார்த்திக்தான் வந்திருந்தான். அவனைக் கண்ட நொடியில் அவள் நிம்மதியாகப் பெருமூச்செறிய, அவனோ முகத்தில் எந்த உணர்ச்சியையும் காட்டிக் கொள்ளாமல், “கிளம்பலாமா?” என்றான் கறாராக.

அங்கிருந்த குமாரும் பிரியாவும் ஆச்சரியத்தின் உச்சத்துக்கே போய்விட்டனர். "நீ கார்த்திக் கூட போறியா யாத்ரா?" என்று பிரியா கேட்க,

அவள் மெதுவாக, "ஆமாம் மா," என்று சொல்லவும், குமார் மற்றும் பிரியா ஆகிய இருவரின் மனதிற்குள்ளும், அவர்கள் மீண்டும் ஒன்று சேர்ந்து விடுவார்கள் என்ற மெல்லிய எதிர்பார்ப்பு துளிர்விட்டது.

அந்த மகிழ்ச்சியோடும் நிம்மதியோடும் தங்களின் மகளை வழியனுப்பி வைத்தனர். அவள் பெட்டியை வாங்கி வண்டியின் பின்புறப் பெட்டகத்தில் வைத்த கார்த்திக் வண்டியை இயக்க, அவள் பக்கத்து இருக்கையில் அமர்ந்து கொண்டாள்.

சென்னை பிரதான சாலைகளின் கடுமையான வாகன நெரிசலுக்கு இடையில் அவர்களின் கார் நிதானமாக நகர்ந்து கொண்டிருந்தது. யாத்ரா கார்த்திக்கைத் திரும்பிப் பார்த்தாள். ஆனால், கார் கிளம்பிய தருணத்திலிருந்தே அவன் ஒருமுறை கூட அவளது புறம் திரும்பிவில்லை; அவளை அப்பட்டமாகத் தவிர்த்தான்.

அது அவளுக்கு புரிந்தாலும், ஆரவிற்காக அவனிடம் பேச எண்ணி மெதுவாக, “கொஞ்சம் பேசணும் கார்த்திக்...” என்று ஆரம்பித்தாள்.

அவன் அப்போதும் அவளைத் திரும்பப் பார்க்கவில்லை. “பேசறதுக்கு என்ன இருக்கு நமக்குள்ள?” என்றவன் குரல், சாலையை வெறித்தபடி மிகக் கறாராக ஒலித்தது.

“முத்தம் கொடுப்பதற்கும் கட்டிப் பிடிப்பதற்கும் மட்டும் நமக்குள்ள ஏதாவது இருக்கா?” என்றுவள் எள்ளலாகக் கேட்கவும், கடுப்பாக அவளது புறம் திரும்பியவன்,

“தெரியாம செஞ்சுட்டேன்... தப்புதான்... என்னை மன்னிச்சிடு!” என்றவன் பட்டென்று சொல்லிவிட அவள் முகம் மாறியது.

அவன் மேலும், “என்ன பண்றது... உன் பக்கத்துல இருந்தா மட்டும் என்னால என்னை கட்டுப்படுத்திக்கவே முடியல,” என்று தன் பலவீனத்தையும் ஒப்புக்கொள்ள, அவள் உதடுகளில் மெல்லிய புன்னகை உதிர்ந்தது.

அவன் தொடர்ந்து, “அதனாலதான் உன்னை இனிமே பார்க்கக் கூடாதுன்னு ஒதுங்கி இருக்கேன்,” என்று கூற யாத்ரா இடையிட்டு,

“அந்த விஷயத்தைப் பத்திப் பேச ஒண்ணும் உன்னை நான் வரச் சொல்லல கார்த்திக்,” என்றாள்.

அவள் சொன்னதைக் கேட்டு வியப்பாகத் திரும்பியவன், “வேற என்ன பேசப் போற?” என்று புருவங்களைச் சுருக்கிக் கேட்டான்.

“அது வந்து... நான்...” என்றவள் தயங்கித் தயங்கி, “என் பாஸ் ஆரவ்...” என்று ஆரம்பிக்கவும், கார்த்திக்கிற்குள் சுர்ரென்று கோபம் தலைக்கேறியது. ஸ்டியரிங்கை பற்றியிருந்த அவனது கைகள் இறுகின.

“கண்டவனைப் பத்தி எல்லாம் என்கிட்ட எதுக்குடி நீ பேசணும்?!” என்று சீறினான்.

“கார்த்திக் கோபப்படாம கொஞ்சம் பொறுமையா நான் சொல்றதக் கேட்குறியா!”

“ஆமா... நீ எவன்கூடவோ ரிலேஷன்ஷிப்ல இருக்கேன்னு சொல்லுவ... நான் அதை பொறுமையா உட்கார்ந்து கேட்கணுமா?” என்று அவன் சத்தமிட அவளுக்கும் கோபம் ஏறியது. இருப்பினும் தன்னை நிதானப்படுத்திக் கொண்டவள்,

“நான் யார் கூடவும் ரிலேஷன்ஷிப்ல எல்லாம் இல்லை... ஆரவ் என்னோட பாஸ், அவ்வளவுதான்!” என்றவள் தீர்க்கமாகச் சொன்ன நொடியில், கார்த்திக்கின் ஆவேசம் கொஞ்சம் அடங்கிப்போயின.

“நீ ஆபிஸ் வந்த அன்னைக்கு... லோ பிரஷர்ல மயக்கம் வந்து விழ இருந்த என்னை ஆரவ் தாங்கிப் பிடிச்சுக்கிட்டாரு, அதைதான் நீ தப்பா புரிஞ்சிக்கிட்ட” என்றவள் சொல்லி முடிக்க,

அவளைக் கூர்மையாகப் பார்த்தான். “நீ ஏன் இதை முன்னாடியே சொல்லல? ஏன் ரிலேஷன்ஷிப் அது இதுன்னு சொன்ன?” என்று பற்களைக் கடித்தான்.

“நீ என்னை கழுத்தைப் பிடிச்சு வீட்டை விட்டு வெளியே தள்ளுன கோபத்துல அப்படி சொல்லிட்டேன்.”

“அப்போ வேணும்னே என்னை வெறுப்பேத்த அப்படி சொன்ன?” என்றதும் யாத்ரா கடுப்பாகிவிட்டாள்.

“கார்த்திக், இந்த டாபிக் எங்கேயோ போகுது... நான் பேச வந்த விஷயத்தை கொஞ்சம் முழுசாப் பேச விடு?” என்றாள் கெஞ்சலாக.

அவளை ஒரு நொடி முறைத்தவன் பின் மீண்டும் சாலையின் பக்கம் பார்வையை திருப்பிவிட்டு,

“சொல்லித் தொலை...” என்றான்.

“ஆரவ்... நிகிதாவோட எக்ஸ் ஹஸ்பென்ட்னு உனக்கு தெரியும்தானே?”

“தெரியும்... அதுக்கென்ன இப்போ?”

“ஆரவ் அவர் பொண்ணு நிமிஷாவை நேர்ல பார்க்கணும், அவ கூடப் பேசணும்னு ஆசைப்படுறாரு கார்த்திக்,” என்றவள், சொல்ல நினைத்ததை ஒரு வழியாகச் சொல்லிவிட,

“அதுக்கு நான் என்ன பண்ணணும்னு சொல்ற?” என்று அலட்சியமாகக் கேட்டான்.

“நீ நிகிதாகிட்ட பேசி...” என்றதும்தான் தாமதம், அவளது வார்த்தைகளை நடுவிலேயே துண்டித்தவன், “அதெல்லாம் என்னால முடியாது! அதுவும் இல்லாம, நிகிதா இதுக்குக் கண்டிப்பா ஒத்துக்கவே மாட்டாங்க,” என்றான் கறாராக.

“ஒரு அப்பாவா தன் பொண்ணைப் பார்க்கணும்னு ஆரவ் ஆசைப்படுறாரு கார்த்திக்.”

“நேத்து வரைக்கும் எங்க போச்சு இந்த அப்பா பாசம்?” என்று அவன் திருப்பிக் கேட்க,

“பழசை எல்லாம் பேசி இப்போ எதுவும் ஆகப்போறது இல்லை கார்த்திக்... ஆரவ் இப்போ அவர் செஞ்ச தப்பை முழுசா உணர்ந்திட்டாரு... அவர் பொண்ணைப் பார்க்கணும்னு தவிக்கிறாரு... ப்ளீஸ் கார்த்திக், கொஞ்சம் முயற்சி பண்ணி பாரேன்,” என்று உருகினாள்.

அவளது அந்த விண்ணப்பத்திற்கு அவன் எந்தப் பதிலும் சொல்லாமல், மௌனமாகச் சாலையைப் பார்த்தபடி வண்டியை ஓட்டினான். அந்த அமைதியைப் பொறுக்க முடியாமல், “திருந்தின ஒருத்தரை மன்னிக்குறதுல என்ன தப்பு கார்த்திக்?” என்று அவள் மீண்டும் கேட்க,

அவளைத் திரும்பி ஆத்திரத்தோடு முறைத்தவன், “தப்பே செய்யாத என்னை மூணு வருஷமாத் தண்டிச்சிட்டு இருக்கியே... நீயா மன்னிக்கிறதைப் பத்தி எல்லாம் பேசுற?!” என்று அவளைக் குத்த, அவளது முகம் அப்படியே சோர்ந்து போனது.

“கார்த்திக்! நம்ம விஷயத்தை தேவையில்லாம இதுக்குள்ள கொண்டு வராத... இரண்டும் ஒண்ணும் இல்லை,” என்று தவிப்புடன் சொல்ல,

“ஏன் ஒண்ணும் இல்லை? இரண்டும் ஒண்ணுதான்! அந்த ஆரவுக்கு அவன் பொண்ணைப் பார்க்கணும்னு ஆசை இருக்கிற மாதிரி எனக்கும் இருக்கு... நமக்குன்னு ஒரு குழந்தை...” என்றவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவனது குரல் தழுதழுத்து அடைத்தது.

அவன் சொன்னதைக் கேட்ட மறுகணமே யாத்ரா, “அது இனிமே சாத்தியமில்லை கார்த்திக்...” என்றுவிட, அவன் மனம் சுக்குநூறாக பிளந்துவிட்டது

அந்த நொடி அவர்களுக்கு இடையில் ஒரு பயங்கரமான மௌனம் குடியேறியது.

சில நொடிகளில் கார் வேகம் குறைந்து, சென்னை சர்வதேச விமான நிலையத்தின் நுழைவாயிலின் முன்னே வந்து நின்றது. வண்டி நின்ற அடுத்த நொடி, யாத்ரா இறங்க எத்தனிக்க, கார்த்திக் சட்டென்று அவளது கையிலிருந்த செல்பேசியைப் பிடுங்கிக் கொண்டான்.

“கார்த்திக்!” என்றவள் அதிர்ந்து போக, அவன் அதனைத் திறந்து காட்டினான்.

“என்னது இது? ஏன் பேச மாட்டேங்குற? இன்னமும் உன் மனசுல நான்தானே இருக்கேன்... அப்புறம் என்னடி நம்ம சேர்ந்து வாழுறதுல பிரச்சினை உனக்கு?” என்றவன் சற்றே நிதானமாகக் கேட்டுக் கொண்டிருக்கும் போதே, தன் போனை அவன் கையிலிருந்து அவசரமாகப் பறித்துக் கொண்டவள், ஆவேசமாக வெடித்தாள்.

“பிரச்சினைதான் கார்த்திக்! உன்னோட இந்த அரெகன்ஸ் பிடிவாதம் எல்லாமே பிரச்சினைதான்! ஏன்... கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி கூட நான் ஒரு விஷயத்தைச் சொல்ல நினைக்குறேன்... ஆனா நீ அதை ஒரே ஒரு நிமிஷம் நிதானமா காது கொடுத்து கேட்டியான்னா இல்ல

“ஏன்னா... நீ எப்பவும் எல்லாப் பிரச்சினையையும் உன் கோணத்தில் இருந்து மட்டும்தான் பார்க்குற. என் இடத்தில் நின்னு நீ என்னை ஒரு நாளாச்சும் புரிஞ்சுக்க முயற்சி செஞ்சிருக்கியான்னா கிடையாது!

உன் கூட வாழுறதை நினைச்சாலே எனக்கு பயமா இருக்கு... டெபனட்லி இட் வில் பி எ டிசெஸ்டர்... எனக்கு அதை வேணாம் கார்த்திக்...லெட்ஸ் என்ட் திஸ் ஹியர்.... டிவோர்ஸ்க்கு அப்ளை பண்ணிடுவோம்” என்று படபடவென்று பொரிந்து தள்ளினாள்.

அவள் வீசிய இந்தச் சரமாரியான குற்றச்சாட்டுக்களைக் கேட்ட கார்த்திக் அப்படியே வாயடைத்துப் போய் அமர்ந்திருக்க, அவனைத் திரும்பியும் பாராமல் இறங்கிச் சென்ற யாத்ரா விறுவிறுவென்று விமான நிலையத்திற்குள் சென்றுவிட்டாள்.

Cancel “மதிப்புகுரியவள்” புத்தம் புது நாவல்… புது களம்… வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா