மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumMembersActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumMonisha Completed novels: Rainbow kanavugalRainbow Kanuvugal - 7Post ReplyPost Reply: Rainbow Kanuvugal - 7

Quote from monisha on February 1, 2021, 1:55 PM

7
மதுபாலா. தாமோதரன் நந்தினியின் ஒரே புதல்வி. நந்தினிக்கு தாமோதரனின் சமூக சிந்தனையும் அக்கறையும் தவறுகளைத் தட்டிக் கேட்கும் பண்பும் பிடித்திருந்தது. அவர் கல்லூரியில் பேசும் உரைகளைக் கேட்டுக் கேட்டு காதல் வயப்பட்டவர், அவர்களின் காதலுக்கு வீட்டில் சம்மதம் வாங்க முடியாத காரணத்தால் தாமோதரனின் தாத்தாவின் தலைமையில் சீர்திருத்த திருமணம் செய்துக்கொண்டார். சென்னையில் வேலை கிடைப்பது கூட சுலபம். ஆனால் வீடு கிடைப்பது குதிரை கொம்புதான். அதுவும் தாமோதரனின் சம்பளத்திற்கு ஏற்றார் போல! அப்படித் தேடி தேடிக் கிடைத்ததுதான் அஜயின் தந்தை பாஸ்கரனின் வீடு. சின்னதாக வீட்டின் அருகிலேயே ஆட்டோ மொபைல் சர்வீஸ் கடை நடத்தி வந்தார். அவர்கள் அங்கே குடித்தனம் செல்லும் போது அஜய் அனன்னயா இருவருக்கும் மூன்று வயது. சில காலங்களிலேயே பாஸ்கரனின் மனைவி ரேவதியும் நந்தினியும் நல்ல தோழிகளாகப் பழகியிருந்தனர். இரண்டு குடும்பமும் ஒரே குடும்பமாக மாறியது. அஜய் அனன்யா இருவருமே தாமுவையும் நந்தினியையும் மாமா மாமி என்றுதான் அழைப்பார்கள். நந்தினி அந்த வீட்டிற்கு சென்ற ஒரு வருடத்தில் கருவுற்றார். மதுபாலா பிறந்த பிறகு நந்தினிக்கு அவள் பின்னே ஓடுவதற்கே சரியாக இருந்தது. மதுபாலா அவ்வளவு துருதுருப்பு! அதேநேரம் அவளைப் பார்த்துக் கொள்ள ரொம்பவும் உதவியாக இருந்தது அஜய்தான். அவன் பள்ளியிலிருந்து வந்ததும் மதுவைத் தூக்கிக் கொண்டு தன் வீட்டிற்கு விளையாட சென்றுவிடுவான். அவனுக்கு மதுவை அவ்வளவு பிடிக்கும். மது தவழ்ந்தது நடந்தது குதித்தது ஓடியது என்று எல்லாமே அஜயின் வீட்டில்தான். அஜயின் கைப்பிடித்துக் கொண்டுதான். ஆனால் அனன்யா இவர்களோடு அதிகம் சேர மாட்டாள். அவள் உலகமே தனி. தன்னை அலங்கரித்து கொள்வதிலும் அழகுப்படுத்திக் கொள்வதிலுமே அவளுக்கு அதிக ஆர்வம்.  மதுபாலா யாருக்கும் அடங்கமாட்டாள். ஆனால் அஜயிடம் மட்டும் அவள் அடங்கி ஒடுங்கிவிடுவாள். பாடம் கற்று கொள்வதில் ஆரம்பித்து விளையாடுவது முதற்கொண்டு அவன்தான் அவளுக்கு குரு தோழன் எல்லாமே! அஜய் அவளைவிட பெரியவன் என்ற போதும் அவனுக்கு மரியாதை தந்து அழைக்கும் பழக்கமே அவளுக்கு கிடையாது. அதுவுமில்லாமல் அவளுக்கு யாரையுமே அப்படி அழைக்கும் வழக்கம் கிடையாது. ‘நந்து தாமு’ என்று தன் அம்மா அப்பாவையே பெயரிட்டுதான் அழைப்பாள். அவள் மழலையான அந்த அழைப்பை மாற்ற விருப்பமின்றி அவர்களும் அப்படியே விட்டுவிட்டனர். இன்று வரையில் அவள் அந்தப் பழக்கத்தை மாற்றிக் கொள்ளவேயில்லை. அஜய் எது செய்தாலும் அதை அப்படியே பார்த்து அதைப் போலவே செய்வது அவளுக்கு வழக்கம். தீபாவளியின் போது அஜய் மிளகாய் பட்டாசுகளைக் கையில் கொளுத்திப் போட்டதைப் பார்த்த மது வேகமாக ஒரு சரவெடியை எடுத்து கையில் கொளுத்திப் போட்டுவிட்டாள். அது வீட்டின் ஒவ்வொரு மூலையிலும் வெடித்து சிதறியதையும் எல்லோரும் ஆளுக்கொரு மூலையாக தெறித்து ஓடியதையும் இப்போது நினைத்தாலும் அவனுக்கு சிரிப்பு பீறிட்டுக் கொண்டுவரும். அதுதான் மதுவின்வால் தனத்திற்கு உச்சக்கட்டம். அஜயும் அனன்யாவும் வளர வளர பாஸ்கரனின் தொழிலும் வளர்ந்தது. மதுபாலா வளர வளர தாமோதரனின் புரிட்சிகரமான சிந்தனைகள் வளர்ந்தன. அதன் விளைவாக அவர் ‘அக்னி’ என்ற ஒரு பத்திரிக்கையைச் சொந்தமாக ஆரம்பித்து நடத்தினார். குற்றங்களைத் தட்டிக்கேட்பதும் களைவதும்தான் அந்தப் பத்திரிக்கையின் நோக்கம். ஆனால் அந்தப் பத்திரிக்கையின் மூலமாக பெரிதாக எதுவும் சாதிக்க முடியவில்லை. கிசுகிசு பத்திரிக்கைக்கும் மஞ்சள் பத்திரிக்கைகளுக்கும் இருக்கும் மவுசு இந்த மாதிரியான சமூக அக்கறைசார் சிந்தனைகள் கொண்டப் பத்திரிக்கைகளுக்கு இல்லை என்பது மிகவும் கசப்பான உண்மை. ஆனாலும் தாமோதரன் தளராமல் அந்தப் பத்திரிக்கையை இன்று வரை நடத்திக் கொண்டிருக்கிறார். பணம், பெயர், புகழ் என்று எதுவுமே கிட்டாவிடிலும் சமூக மாற்றத்திற்கான தன்னுடைய பங்கை அக்னியின் மூலமாக அவர் இன்று வரை தந்துக் கொண்டிருக்கிறார். இப்படியான கால ஓட்டத்தில் மதுவும் அஜயும் பிரிய வேண்டிய காலமும் சூழ்நிலையும் உருவாகியது. அவர்கள் குடும்ப சூழ்நிலை காரணமாக அவர்கள் வேறு வீட்டிற்கு குடிப்பெயர நேரிட்டது. அப்போது மதுபாலாவிற்கு பன்னிரண்டு வயது. அஜய்க்கு பதினேழு வயது நிரம்பியிருந்தது. அந்தப் பிரிவினால் ஒவ்வொருவரும் மனதளவில் வருந்தாலும் அதிகமாக பாதிக்கப்பட்டது மதுவும் அஜயும்தான். அது அவர்கள் இருவருக்குமே தெரியாது. மது நிறைய அடம்பிடித்தாள். அழுதாள். ஆனால் மாற்றங்களும் பிரிவுகளும் எல்லோர் வாழ்கையிலும் மாற்ற முடியாத சாசுவதமான ஒன்று. ஒரு சில வருடங்களிலேயே அந்த இரு குடும்பத்திற்கான தொடர்பு அற்றுப்போனது. பாஸ்கரனும் தன் தொழிலில் வளர்ந்து பழைய வீட்டை மாற்றிக்கொண்டுச் சென்றுவிட்டார். காலத்தின் ஓட்டத்தில் எல்லாம் மாறிப் போனது. ஆனால் மறந்து போனது என்று சொல்ல முடியாது. மது தன் மனநிலையை மாற்றிக் கொண்டு அவள் தான் வசிக்கும் வீட்டினைச் சுற்றியிருப்பவர்களோடு பழக ஆரம்பித்தாள். நட்பாக ஆரம்பித்தாள். சரவணனின் தந்தை அவள் வீட்டிற்கு எதிரேதான் மளிகைக் கடை நடத்திவந்தார். மது அங்கே பொருள் வாங்க போகும் போதுதான் சரவணன் வீட்டிலுள்ள எல்லோரும் அவளுக்கு பழக்கமானார்கள். சரவணனும் இவளும் ஒரே வயது. ஒரே பள்ளியும் வகுப்பும் கூட. ஆனால் அவனிடம் அவ்வளவாக அவளுக்கு பழக்கம் கிடையாது. சரவணனின் தமக்கை வீணாவுடன் இருந்தது. இருவரும் சதா சர்வகாலமும் வீட்டைச் சுற்றி விளையாடிக் கொண்டிருப்பார்கள். நகரத்தின் தோற்றமே மாறிக் கொண்டிருந்த சமயத்தில் மிஞ்சியுள்ள ஒரு சில பழமையான வீடுகளில் அதுவும் ஒன்று. வீட்டின் முன்சுவரில் ஆயிரத்து தொள்ளாயிரத்து என்று வருஷமெல்லாம் பொறிக்கப்பட்டு எப்போது இடிந்து விடுமோ என்று மிகவும் மோசமான நிலைமையில்தான் அதன் அமைப்பே இருந்தது. அவர்களுடையது மிக பழமையான வீடு என்பதால் பெரிய பின்கட்டு கிணறு எல்லாம் இருந்தது. மதுபாலாவின் துருதுருப்பு காரணமாக ஒரு முறை விளையாடி கொண்டே அவள் பின்கட்டிலிருக்கும் கிணற்றை எட்டிப் பார்த்துக் கொண்டிருக்கும்போது கால் இடறி உள்ளே விழ போனவளை சரவணன் காப்பாற்றினான். ஆனால் காப்பாற்றிய வேகத்தில் அந்தக் கிணற்றின் மீது சாய்ந்து அதன் சுவர் இடிந்துவிழுந்து அவன் உள்ளே தவறி விழுந்துவிட்டான். “அம்ம்ம்மம்ம்மம்ம்ம்மா” என்ற பயங்கரமான அலறல்தான் அவன் குரலிலிருந்து வெளி வந்த கடைசி வார்த்தை! வேகமாக விழுந்ததில் பின்மண்டையில் காயம்பட்டது. அவன் பெற்றோர் துர்காவும் மாதவனும் சுற்றாத கோயிலும் இல்லை. அவனுக்கு பார்க்காத மருத்துவும் இல்லை. எல்லாமே அவன் வரையில் பொய்த்து போனது. அதற்குப் பிறகு அவனால் பேச முடியாமலே போனது. அன்றிலிருந்து மதுபாலா தன் சேட்டைகளைக் குறைத்துக் கொண்டாள். அவள் துறுதுறுப்பும் குறைந்து போனது. சரவணனின் அந்த நிலையைப் பார்க்கும் போதெல்லாம் உள்ளம் துடித்து போனாள். அவன் வீட்டிற்குச் சென்று விளையாடுவதையே நிறுத்திக்கொண்டாள். அவனை எதிர்கொள்வதில் அவளுக்கு ஏற்பட்ட தயக்கமும் குற்றவுணர்வும்தான் காரணம். “மது ஏன் இவ்வளவு அமைதியா இருக்கா?” என்று நந்தினியும் தாமுவும் மகளின் மாற்றத்திற்கு காரணம் புரியாமல் குழம்பிக் கொண்டிருந்தனர். ஆனால் அவர்களிடம் கூட அவள் எதுவும் சொல்லவில்லை. அந்த உண்மையை யாரிடமும் பகிர்ந்துக் கொள்ள முடியாத ஒரு சிறு பெண்ணின் தவிப்பு. அதுவே அவள் மனதை மிகவும் பாரமாக அழுத்தியது. எப்படி பார்த்தாலும் மதுவும் சரவணனணும் ஒரே வகுப்பு என்பதால் அவனை அங்கே எதிர்கொண்டேயாக வேண்டுமென்ற நிலைமை அவளுக்கு. அதுவல்லாது சரவணன் பேச முடியாததாலும் அவன் செய்கையால் பேசுவதையும் பள்ளியில் சிலர் கேலி செய்தனர். “சரோவை அப்படியெல்லாம் கிண்டல் பண்ணாதீங்க” என்று மது அவர்களிடம் மல்லுக்கு நிற்க, “அப்படிதான் பண்ணுவோம்… நீ உன் வேலையைப் பார்த்துட்டு போ” என்று அவர்கள் சொன்ன பிறகு அமைதியாக சென்றால் அது மது இல்லையே! அவர்களையெல்லாம் ஒரு வழி செய்து முதல்வர் முன்னிலையில் நிறுத்திவிட்டாள். ஆனால் தண்டனை கிடைத்தது என்னவோ அவளுக்கு. அவள் செய்த களேபரம் அப்படி! அப்போதிலிருந்துதான் சரவணன் அவளை தன் நெருங்கிய தோழியாக பாவிக்க ஆரம்பித்தான். சரவணனும் அவளுக்கு உற்றத்தோழனாக மாறியிருந்தான்.  எந்த விஷயமாக இருந்தாலும் அவனிடம்தான் முதலில் பகிர்ந்து கொள்வாள்.  மதுவிடம் சரவணன் அடிக்கடி கேட்கும் ஒரே விஷயம் ‘நீ எந்த சூழ்நிலையிலும் என்னை விட்டுப்போகக் கூடாது மது’ என்பதுதான். அதற்கு அவனிடம் ஓர் அழுத்தமான காரணமிருந்தது. அவனால் பேச முடியமால் போனதிலிருந்து அவன் நண்பர்கள் உடன் பிறந்தவர்கள் ஏன் பெற்றோர்கள் கூட அவனிடம் பேசுவதைக் குறைத்து கொண்டனர். ஆனால் மது அவனிடம் வாய் வலிக்க வலிக்கப் பேசுவாள். அவள் எவ்வளவு நேரம் பேசினாலும் அவனும் சலிக்காமல் கேட்பான். ஏனெனில் அவனால் பேச முடியாமல் போனதிலிருந்து அவனிடம் பேசும் ஒரே ஜீவன் அவள்தான். அவன் உடன் பிறந்தவர்கள் பெற்றோர்கள் கூட அவனிடம் ஏதாவது கேட்க மட்டுமே பேசினார்கள். ஒருவித தனிமையும் வெறுமையும் அவனை ஆட்கொண்டது. அதை அவனால் யாரிடமும் பகிர்ந்து கொள்ளவும் முடியவில்லை. எப்படிப் பகிர்ந்து கொள்வதென்றும் தெரியவில்லை.  அப்படி யாரவது நம்மிடம் பேச மாட்டார்களா என்று ஏங்கி கொண்டிருந்தவனுக்கு அவள் பேச்சும் நட்பும் ஒரு வரப்ரசாதம்தான். அவன் பதில் பேச மாட்டான் என்று தெரிந்தும் மது அவனிடம் பேசுவாள். அது அவளுக்கு ஒரு பழக்கமாகவே மாறியிருந்தது. அவள் ஒவ்வொரு நாள் நடக்கும் எல்லாவற்றையும் அவனிடம் பகிர்ந்து கொள்வாள். சரவணன் பத்தாவது படிக்கும் போது அவன் தந்தை இறந்து போக, அவனால் இறுதி தேர்வு எழுத முடியாமல் போனது. படிப்பையும் தொடர முடியாமல் போனது. வீட்டின் தலைமகனாகப் பொறுப்புகள் அவன் கைக்கு மாறியது. அந்த இளம் வயதில் அவன் தன் குடும்ப பாரத்தை தன் தலையில் சுமக்க ஆரம்பித்தான். கடையின் பொறுப்பை எடுத்துக் கொண்டு தன் தமக்கையையும் தம்பியையும் படிக்க வைத்தான். அவன் படிப்பை நிறுத்தியதில் அதிகமாக வேதனைப்பட்டது மதுதான். ஆனாலும் அவர்கள் நட்பில் எவ்வித இடைவெளியும் உண்டாகிவிடவில்லை. பள்ளி நேரம் முடிந்ததும் அவள் நேராக வந்து அவனிடத்தில் அன்று முழுவதும் நடந்தவற்றை ஒப்புவித்து விடுவாள். நடத்திய பாடங்களைக் கூடக் கற்றுத்தருவாள். அவனை தபால் முறையில் அவள் படிக்க சொல்லி எவ்வளவோ கட்டயாப்படுத்தினாள். தந்தை வாங்கி வைத்திருந்த கடனால் கடையே அவர்கள் கைவிட்டு போகும் நெருக்கடியில் அவனால் படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை. வேலை வேலையென்று அயராமல் உழைத்துக் கொண்டேயிருந்தான். மூன்று வருடங்களில் அவனால் தன் தந்தை வாங்கிய கடனை அடைக்க முடிந்தது. பின் தன் பழைய வீட்டைப் புதுப்பிப்பதில் தொடங்கி தமக்கையை கல்லூரியில் சேர்ப்பது அவளுக்கு திருமணம் செய்வது என்று அவன் வாழ்க்கை ஒரு மாரத்தான் ஓட்டமாகத் தொடர்ந்துக் கொண்டிருந்தது. அதனால் வாழ்கையிலும் கடையிலும் பெரியளிவிலான வளர்ச்சியையோ முன்னேற்றத்தையோ அவனால் பார்க்க முடியவில்லை. ஆனால் இத்தனை சோதனைகளிலும் அவன் வாழ்வில் மாறாமல் ஒன்று இருந்ததென்றால் அது மதுவின் நட்புதான். உணர்வுகளால் ஆழமாக பிணிக்கப்பட்டிருந்த அவர்களின் நட்பில் ஒரு சிறு இடைவெளி ஏற்பட்டது அஜய் மீண்டும் மதுவின் வாழ்க்கையில் பிரவேசம் செய்த பின்புதான்! *** சென்னை கே.கே. நகரிலுள்ள மிக பெரிய பங்களா அது! வெகுநேரமாக மதுபாலாவும் அந்தப் பங்களாவின் வாயில் காவலாளியும் வாக்குவாதம் செய்து கொண்டிருக்க, ஒரு நிலைக்கு மேல் அவள் பொறுமையிழந்தவளாக, “இப்ப நீங்க என்னை உள்ளே விடலன்னா நடக்கிறதே வேற” என்று சீற்றமாககொதித்தாள். “இல்ல… மேடம் முடியாது…. வேணா பத்து மணிக்கு மேல ஆஃபீஸ்ல போய் பார்த்துக்கோங்க” என்றார் அவரும் கறாராக! “எனக்கு வேற வேலையே இல்லையா? உங்க சாரை பார்க்க அவரோட ஆஃபீஸுக்கும் வீட்டுக்கும் மாத்திமாத்தி அலையறதுதான் எனக்கு வேலையா… அங்க போனா வீட்டுக்கு போய் பார்க்க சொல்றாங்க… இங்க வந்தா அங்க போன்னு சொல்றீங்க… உஹும்… இதெல்லாம் ஒன்னும் சரிபட்டு வராது… அனுப்ப முடியாது இல்ல… இப்ப நான் யாருன்னு காட்டுறேன்” என்று மது மிரட்டலாக சொன்ன அதேநேரம் தன் கைப்பேசியை எடுத்து பேச ஆரம்பித்தாள். “ரேகா… உடனே கிளம்பி வா… கூட நம்ம ஃப்ரெண்ட்ஸ் எல்லோரையும் கூட்டிட்டு வா… நாம யாருன்னு காட்டுவோம்… அந்த ஏ கே வைப் பார்க்க உள்ளே விட மாட்டாங்களாம்… அவங்க வீட்டு வாசலில் உட்கார்ந்து போராட்டம் பண்றேன்… எல்லா மீடியாவும் இங்க வந்து குவிஞ்சு என்ன விஷயம்னு கேட்கும்ல… அப்ப எப்படி பார்க்க மாட்டேன்னு சொல்றாங்கன்னு நானும் பார்க்கிறேன்” என்றவள் பாட்டுக்குப் பேசிக் கொண்டே போக அந்த காவலாளியின் முகம் வெளிறி போனது. அவளைப் பற்றி அவருக்கு முழுவதுமாக தெரியாவிட்டாலும் லாயர் மதுபாலாவின் வீர தீர செயல்கள் பற்றி அவருமே கேள்விப் பட்டிருக்கிறார்தான். “மேடம் கொஞ்சம் இருங்க… நான் சார் கிட்டப் பேசுறேன்” என்று விரைவாக அவர் தொலைபேசி இணைப்பின் மூலம் அஜய்க்குத் தொடர்பு கொண்டார். அவனோ அப்போது முக்கியமாக அலுவலகம் சார்ந்த விவாதத்தில் இருந்தான். ஆதலால் பெரிதாக விசாரிக்காமல், “சரி உள்ளே அனுப்புங்க… நான் பேசிக்கிறேன்” என்று சொல்லவும், அவர் மதுவை அனுமதித்தார்.  செயற்கையாக அமைக்கப்பட்ட அந்த புல்தரை கம்பளமாக விரிய, அந்தத் தோட்டத்தின் நடைபாதையில் அவள் நடந்து சென்றாள். இருபுறமும் வண்ணமயமாக பூக்கள் கொத்து கொத்தாக பூத்து குலுங்கி கண்களுக்கு விருந்து படைத்திருக்க, மதுவின் கவனத்தை அவை எதுவும் ஈர்க்கவில்லை. அவள் அவற்றையெல்லாம் ரசிக்கவும் இல்லை. அவள் சிந்தனையும் தேடலுமே வேறு! இந்தியாவின் விலையுர்ந்த கார்களின் பட்டியல்களில் இடம்பிடித்திருந்த புதுப்புதுரக கார்கள் நின்றிருந்த அந்த கார் ஷெட்டின் மீதுதான் அவளின் மொத்த கவனமும் இருந்தது. பளிங்கு போல ஒவ்வொன்றும் ஒவ்வொரு வண்ணத்தில் பளபளக்க, அந்த கார்களின் அணிவகுப்பிற்குள் தான் தேடி வந்த காரும் நிற்பதைக் கண்டுகொண்டாள். சென்னையில் ஒரு சில பணக்கார தலைகளிடமும் சினமா நடிகர்களிடமும் மட்டுமே அந்த நவீனரக கார் சொந்தாமாகியிருந்தது. தன் பேசியில் அவள் சேமித்து வைத்திருந்த புகைப்படத்தின் மூலம் அதன் எண்ணைச் சரி பார்த்தவள் யாராவது தன்னை கவனிக்கிறார்களா என்று சுற்றுமுற்றும் பார்த்து கொண்டே அந்தக் கார் ஷெட்டை நோக்கி நடந்தாள். அங்கே அவள் அந்தக் காரைத் தொட்டுத் தடவி பார்த்தபடி இருக்க, “யாரும்மா நீ?” என்று வெகு அருகாமையில் கேட்டது ஒரு ஆடவனின் குரல். அவள் அதிர்ந்து திரும்ப குழந்தை ஒன்றைக் கையிலேந்தியபடி நின்றிருந்த ஆடவன் சுரேஷ்! “ஆமா எப்படி நீ உள்ளே வந்த… இங்க நீ என்ன பண்ற?” என்று கேள்விகளை அடுக்கி கொண்டே, “வாட்ச்மேன்” என்றுக் கத்தினான் சுரேஷ். அவள் வெகுநிதானமாக, “நான் பெர்மிஷன் கேட்டுதான் உள்ளே வந்தேன்… மிஸ்டர் ஏ கேவைப் பார்க்க” என்றாள். அவன் குழப்பம் தீராமல், “ஏ கே வைப் பார்க்கவா?” என்றுக் கேட்டு கொண்டே அவளைப் பார்வையால் அளவெடுக்க, அந்த சமயம் பார்த்து அவன் கையிலிருந்த குழந்தை அழத் தொடங்கியது. அவன் குழந்தையை சமாளித்துக் கொண்டே அவளை அவன் சந்தேகமாக பார்த்தான்.  “ஏ கே தான் வர சொன்னாருங்க… நீங்க வேணா வாட்ச்மேன் கூப்பிட்டு கேளுங்க” என்றவள் மீண்டும் அழுத்தி சொல்ல, அவள் தோற்றம் அவள் வயது எல்லாமே அவனை வேறு விதமாக யோசிக்க வைத்தது. அந்தச் சிந்தனை வந்த கணமே பிரகாசமாக அவளைப் பார்த்து புன்னகைத்தவன், “ஒ! நீங்கதான் அவங்களா? அப்போ நேத்து நைட் சொன்னது உங்களைப் பத்திதானா?” என்று சம்பந்தா சம்பந்தமில்லாமல் கேட்டான். “என்னை பத்தி என்ன சொன்னாங்க” என்றவள் குழம்ப, “எனக்கு தெரிஞ்சு போச்சு…. நீங்கதான் ஏகே லவ் பண்ற பொண்ணு” என்று அவனாக ஒரு முடிவுக்கு வந்திருந்தான். “நான் ஒன்னும் ஏகே லவர் இல்ல” என்று அவள் முழுவதுமாக சொல்லி முடிப்பதற்குள் அவன் கையிலிருக்கும் குழந்தை சத்தமாக அழ, “நான் ஏகேவைப் போய் கூட்டிட்டுவரேன்… நீங்க வாங்க” என்று சொல்லிவிட்டு அவசரமாக உள்ளே சென்றுவிட்டான். ‘யாருடா இந்த ஆளு? சரியான லூசு கூமுட்டையா இருப்பான் போல...கடவுளே! இருக்கிற குழப்பத்தில இது வேறயா?” என்றவள் கடுப்பாகத் தலையிலடித்து கொள்ளும் போது அவள் தோழி ரேகா அழைத்து, “அங்கே எதுவும் பிரச்சனை இல்லையே” என்று விசாரிக்க, “இப்போதைக்கு எதுவும் இல்ல… நான் உள்ளே வந்துட்டேன்… பேசிட்டு நானே கூப்புடுறேன்” என்று சொல்லி இணைப்பைத் துண்டித்துவிட்டு உள்ளே நுழைந்த போது குழந்தையின் அழுகுரல் உரக்க கேட்டது.  “என்னாச்சு? ஏன் பாப்பா இவ்வளவு சத்தமா அழறான்” ஏனைய சிந்தனைகள் அனைத்தையும் மறந்து அவள் அதுப்பற்றி வினவ, “பசி வந்துடுச்சு அதான்…” என்றவன், “ராஜிமா… கொஞ்சம் சீக்கிரமா பால் எடுத்துட்டு வாங்க” என்று குரல் கொடுத்தான். “இல்ல… நான் உங்ககிட்ட” என்று அவள் பேசுவதற்கு முன்னதாக, “ஏன் நீங்க நிற்குறீங்க உட்காருங்க” என்றான். “இல்ல… நான் ஏகே வோட லவர் இல்ல” என்றவள் வாக்கியத்தை முடிப்பதற்குள் பேச உள்ளே இருந்து ஒரு பெண்மணி பாலை எடுத்து கொண்டு வரவும், “அருண் கண்ணா? ஏன் அழறீங்க? இதோ பால் வந்திருச்சு… பாலைக் குடிங்க” என்று அவன் ஒரு அம்மாவை போல கொஞ்சிக் கொஞ்சி பாலைப் புகட்ட அவளுக்கு விசித்திரமாக இருந்தது. நிச்சயம் அவன் கையிலிருப்பது மூன்று அல்லது நான்கு மாத குழந்தை என்று தோன்ற, சற்றே விசித்திரமாக இருந்தது அவன் செயல் அவளுக்கு! இவ்வளவு சின்ன குழந்தைகளைப் பெரும்பாலும் அம்மாக்கள்தானே இப்படியெல்லாம் செய்வார்கள் என்று யோசித்திருக்க, மாடி படிகளிலிருந்து இறங்கி வந்தான் ஏகே! அவன்தான் அஜய். ஏகே என்கிற அஜய்கிருஷ்ணா. ‘இந்த முகத்தை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கு?’ என்று அவன் அவளை யாரென்று யோசனையாகப் பார்த்துக் கொண்டு இறங்கி வர அப்போது சுரேஷ் அவனருகில் சென்று, “நேத்து நைட் நீ சொன்ன அந்த பொண்ணு… இவங்கதானே நான் கண்டுபிடிச்சிட்டேன்” என்று முந்திக் கொண்டு சொல்ல, “என்ன கண்டுப்பிடிச்சீங்க… நேத்து நைட் என்ன சொன்னேன்?” என்று அஜய் புரியாமல் கேட்க, “நீங்கதானே நேத்து நைட் நான் ஒரு பொண்ணை லவ் பண்றேன்… அவளைதான் கல்யாணம் பண்ண போறேன்னு உங்க அப்பா கிட்ட சொன்னீங்க” சுரேஷ் சொல்ல, மதுவிற்கு ‘ஐயோ’ என்றானது. தான் எதற்கு வந்திருக்கிறோம் அவன் என்ன சொல்லி கொண்டிருக்கிறான் என்று யோசிக்கும் போதே அஜய் சுரேஷிடம் திரும்பி ரகசியமாக, “அது நான் சும்மா அப்பா கிட்ட விளையாடுனே… அவர் என்னை கல்யாணம் பண்ணிக்கோ பண்ணிக்கோன்னு டார்ச்சர் பண்றாருன்னு” என்றான். சுரேஷ் உடனே, “இல்ல அஜய்… அந்தப் பொண்ணுதான் உன்னை லவர்னு” என்றவன் சந்தேகமாக இழுக்க, அஜய் முகம் கோபத்தில் சிவந்தது. “யாராச்சும் எதாச்சும் சொன்னா நீங்க நம்பிடுவீங்களா?” என்றுச் சீற்றமாகப் பொறிந்தவனின் கோபம் மொத்தமாக மதுவிடம் திரும்பியது. “வெளியே வாட்ச்மேன் கிட்ட லாயர்னு சொல்லிட்டு… உள்ளே வந்து இவர்கிட்ட என் லவர்னு சொல்லி இருக்க… உண்மையை சொல்லு யார் நீ… என்ன வேணும் உனக்கு… எதுக்கு இப்படி மாத்திமாத்தி பேசிட்டு இருக்க” என்றவன் அவளை பேசவிடாமல் எகிற, அவள் கடுப்பாகி, “என்னை கொஞ்சம் பேச விடுறீங்களா?” என்று கத்திவிட அவன் தன் பேச்சை நிறுத்திவிட்டு அவளை முறைத்து பார்த்தான். அவள் உடனே,“நான் ஒன்னும்உங்கலவர்னுசொல்லல… அவர்தான் என்னைத்தப்பாபுரிஞ்சிக்கிட்டாரு” என்று அவள் சுரேஷ் புறம் திரும்பி, “நான் ஏகேவை பார்க்க வந்திருக்கேன்னுதானே சொன்னேன்… அவரோடலவர்னாசொன்னேனா” என்று கடுப்பாககேட்டாள். “அது வந்து” என்று சுரேஷ் தடுமாறிய நொடி அஜயிற்கு நடந்த குழப்பம் ஓரளவு பிடிப்பட்டது. அப்போது அஜயின் பார்வை சுரேஷைமுற்றுகையிட்டுவிட்டு மீண்டும் மதுவின் புறம் திரும்ப அவளும் நிதான நிலைக்கு திரும்பினாள். “உங்க கிட்ட பேசலாம்ன்னு ரெண்டு நாளாட்ரைபண்றேன்… முடியல… உங்கஆஃபீஸ் வந்தேன்… அப்புறம் உங்க வீட்டுக்கு… பட் பார்க்கவே முடியல” என்றவள் சொல்ல அவன் அவளை நிதானமாக ஏறிட்டான். அவள் மேலும். “வெளியே நிற்குற அந்த ட்ரிப்ள் த்ரீ நம்பர் கார் உங்களோடது தானே?” என்று விசாரிக்க, “ஆமா?” என்றான். “ஒரு வாரம் முன்னாடி ஈசிஆர் ரோட்டல ஒரு அக்சிடென்ட் பண்ணியிருக்கீங்க… ரேஷ் டிரைவிங்… ஒரு தள்ளு வண்டிக்காரரோட கடையை அடிச்சு நொறுக்கிட்டு போயிருக்கீங்க… அவருக்கு பாவம் காலில் பலமான அடி” என்று சொல்லும் போது அஜய் சுரேஷைப் பார்க்க அவன் குழம்பி நின்றான். “எங்க வண்டிதான் இடிச்சுதுன்னு ஏதாச்சும் ஆதாரம் இருக்கா?” “இல்லேனா இங்கே வந்து நிற்பேனா? இருக்கு… வேகமா உங்க கார் போனதுக்கான சிசிடிவி ஆதாரம் இருக்கு… உங்க கார் சைட்லயும் ஸ்கரச்சஸ் இருக்கு” என்றவள் சொல்ல அஜயின் பார்வை சுரேஷை முறைத்தது. அவன் எதுவும் பேச முடியாமல் நின்றான்.  அஜய் சில நொடிகள் நிதானித்துவிட்டு, “இப்போ நான் என்ன பண்ணணும்?” என்றுக் கேட்க, மது தொடர்ந்தாள்.  “நீங்க செஞ்ச வேலையை நான் கோர்ட்டுக்கு எடுத்துட்டு போக முடியும்… ஆனா ரூல்ஸ் படி அவர் அந்த ரோட்டுல கடை வைச்சிருந்ததும் தப்பு… ஆனா என்ன பண்ண முடியும்… வயித்து பிழைப்புக்காக செஞ்சுட்டாரு… அவரையும் தப்பு சொல்ல முடியாது… லஞ்சம் வாங்கிட்டு இதுக்கெல்லாம் போலிஸ்காரங்களே அனுமதி கொடுக்கிறாங்க… அதுவுமில்லாம உங்களை மாதிரி பணக்காரங்க இந்த கேசெல்லாம் அசல்ட்டா ஊதி தள்ளிட்டு போயிடுவீங்க… பாவம் அந்த தள்ளு வண்டிகாரர் தேவையில்லாம கோர்ட்டுக்கும் ஸ்டேஷனுக்கும் அலையணும்… அதுவுமில்லாம எனக்கும் அந்த மாதிரி சுத்தி வளைச்சு மூக்கைத் தொடுற வேலையே வேண்டாம்… பாவம்… அவருக்கு இருந்த ஒரே தொழிலும் போச்சு… கால் அடிப்பட்டதால எந்த வேலைக்கும் போக முடியாம படுத்து கிடக்குற மாதிரி ஆகிடுச்சு… இதுக்கெல்லாம் சேர்த்து நீங்க கம்பென்சேஷனா எதாச்சும் ஒரு அமௌன்ட் அந்தக் குடும்பத்துக்காக கொடுங்க” என்றவள் இறங்கிய குரலில் சொல்ல அஜய் மௌனமாக நின்றிருந்தான். அவள் உடனடியாக தன் கைகளில் வைத்திருந்த ஒரு வெள்ளைத்தாளைப் பிரித்து அவனிடம் கொடுத்து, “இது அவரை அடிமிட் பண்ண ஹாஸ்பெட்டில்பில்… அந்த ஷீட் பின்னாடியே அவங்க அட்ரெஸ் ஃபோன் நம்பர் இருக்கு… நீங்களே நேர்ல போய் நான் சொன்னதெல்லாம் உண்மையான்னு வெரி ஃபை பண்ணிட்டு பணம் கொடுத்துடுங்க” என்றதும் அஜய் அந்தத் தாளை கையில் வாங்கிப் பார்த்தான். “கொஞ்சமாச்சும் மனசாட்சின்னு இருந்தா ப்ளீஸ் இதை செய்யுங்க… அப்புறம் ஒரு விஷயம்… இனிமே இந்த மாதிரி ரேஷ் ட்ரைவிங் பண்ணாதீங்க… நல்ல வேளையா இந்தத் தடவை எந்த உயிரும் போகல… போயிருந்தா அதுக்கு நீங்க எவ்வளவு கம்பன்சேஷேன் கொடுத்தாலும் அதுக்கு ஈடாகாது” என்றவள் இறுக்கமாக சொல்ல அவன் பார்வையும் இறுகியது. அதன் பின் “நான் கிளம்புறேன்” என்றவள் உருத்து உருத்து அவள் பேசுவதையே பார்த்திருந்த அருண் கன்னத்தில் ஆசையாக கிள்ளிவிட்டு, “பை டா கண்ணா” என்று சொல்லிவிட்டு வெளியேறியிருந்தாள். சுரேஷோ இந்த இளம் வயதில் இப்படியொரு குணமா என்று இந்தப் பெண்ணுக்கு தன்னையறியாமல் வியந்தபடி அவளைப் பார்த்துக்கொண்டிருந்தான். தன்னலமற்ற அவள் எண்ணங்களும் துணிவும் அவனை நெகிழ்த்தியது. அந்த முதல் சந்திப்பிலேயே அவள் மீது அபரிமிதமான மரியாதை வந்து தொற்றிக் கொண்டது. அதேநேரம் அஜயிற்கு அவன் கையிலிருந்து ஏதோ ஒரு விலைமதிப்பற்ற பொருள் கை நழுவி போவது போல தோன்றியது. அந்த உணர்வை எப்படி எடுத்து கொள்வதென்றே அவனுக்கு தெரியவில்லை. அதற்கான காரணமும் புரியவில்லை. வெகுசில நிமிடங்களில் ஒரு பெண் தனக்குள் இத்தனைப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியுமா? அவன் மனதில் அப்போது ஏதோ புரியாத உணர்வுகளும் யோசனைகளும் குவிய, “ஒரு நிமிஷம்” என்று வெளியே செல்ல இருந்தவளை குரல் கொடுத்து தடுத்து நிறுத்தினான். அவள் குழப்பமாக திரும்பி பார்க்க, “நாம எப்பயாச்சும் மீட் பண்ணி இருக்கோமா?” என்று ஆவலோடுக் கேட்டான். அவள் புன்னகைத்தபடி, “பார்த்திருப்பீங்க… நான் சோசியல் மீடியால ரொம்ப ஃபேமஸ்… லாயர் மதுபாலான்னா நிறைய பேருக்கு தெரியுமே” என்றாள் பெருமையாக! “என்ன பெயர் சொன்னீங்க?” என்றவன் மீண்டும் கேட்க, “லாயர் மதுபாலா” என்று சொல்லிவிட்டு அவள் அங்கிருந்து அகன்றுவிட்டாள். அவனோ அப்படியே நின்ற இடத்திலேயே அசையாமல் நின்றுவிட்டான். “இது என் மது வா” என்று அவன் தன்னைத்தானே சில முறைகள் கேட்டுக் கொண்டான். மனதில் ஒரு புதுவிதமான உணர்வு பரவ, அவனை உற்சாகம் தொற்றிக் கொண்டது. அப்போது சுரேஷ் அஜய் பின்னோடு வந்து, “சாரி அஜய்… நான் உங்ககிட்ட சொல்லாமவிட்டுட்டேன்…. அனன்யா அன்னைக்கு” என்று ஏதோ சொல்ல வர அவன் கைக்காட்டி பேச வேண்டாமென நிறுத்திவிட்டான். “எனக்கு தெரியும்… இது அனன்யா வேலைதான்… வேறு யாரு இந்த வீட்டுல இப்படியெல்லாம் செய்ய போறா” என்றவன் எரிச்சலாக பார்த்து, “அவ இனிமே டிரைவர் இல்லாமகாரைத்தொடட்டுமே… வைச்சிக்றேன் அவளுக்கு” என்றான். மேலும் அவன், “இந்த விஷயத்தை இப்படியேவிடுங்க… அப்பா கிட்ட சொல்லிடாதீங்க… நான் இந்த பிரச்சனையைப் பார்த்துக்கிறேன்” என்க, “சரி அஜய்” என்றதும் அவன் மாடியிலுள்ள தன்னறைக்கு செல்ல எத்தனிக்க, “அஜய் ஒரு நிமிஷம்” என்று அழைத்தான் சுரேஷ்! அவன் திரும்பி என்ன என்பது போல் பார்க்க, “அந்த பொண்ணை உன் லவர்னு சொன்னதுக்கு சாரி… ஏதோ குழப்பத்தில” என்று தயக்கமாக சொல்லி கொண்டிருக்க அஜய் முகத்தில் அழகாக ஒரு புன்னகை அரும்பியது. அந்த பொய்யை அவன் மனதார விரும்புகிறானே! அது இந்த நொடியே இப்போதே உண்மையாக மாறிவிட கூடாதா என்று அவன் ஒரு பெரிய மனகோட்டையே கட்ட ஆரம்பித்தான். அந்த உணர்வும் ஆசையும் இன்று நேற்று வந்ததல்ல. பாதியிலேயே அவளை தன் வாழ்க்கை பாதையில் தொலைத்த போது வந்தது. பார்க்கும் இடங்களிலெல்லாம் அவளை காணாமல் தேடும்போது வந்தது. அவன் சுரேஷிற்கு பதிலேதும் சொல்லாமல் நேராக தன்னறைக்குள் நுழைந்து, அவன் கப்போர்டிலிருந்த ஒரு பழைய பையிலிருந்தப் பொருட்களைக் கொட்டினான். மது குழந்தையில் கிறுக்கியது அவள் விளையாடிய பொருட்கள் என்ற அந்தச் சேமிப்பிற்குள் இருந்த பழைய புகைப்படத்தை ஆராய்ந்து வெளியே எடுத்தான். ரெட்டை ஜடை அணிந்துக் கொண்டு அவன் முதுகில் ஏறி கொண்டிருந்த மதுவின் சிறு வயது புகைப்படத்தையும் சற்று முன்பாக அவனெதிரே நின்று பேசிய அந்த பருவ வயது பெண்ணையும் ஒப்புமை செய்தான். அவன் முகத்தில் அளவில்லா ஆனந்தம். “அப்படியே இருக்க வாலு நீ… என்ன புசுபுசுன்னு அழகா இருந்த அந்தக் கன்னத்தைத் தான்டி காணோம்” என்று அவளின் நினைவுகளில் மூழ்கி திளைத்து முத்தெடுத்துக் கொண்டிருந்தது அவன் உள்ளம்! ஒன்றாக வானில் சந்தோஷமாக எல்லைகளின்றி பறந்து திரிந்து கொண்டிருந்த அந்தப் பறவைகள் இரண்டும் திடீரென்று வழித்தடம் மாறி போன போது ஏற்படும் வலி. அதனை வார்த்தைகளாக அவனால் சொல்ல முடியாது. தனியாக வெதும்பிய நாட்கள் ஒவ்வொன்றும் அவன் நினைவுகளுக்குள் அலைமோதின. அவளின் பிஞ்சு விரல்களைப் பற்றிய போது உண்மையில் எந்த உணர்வில் பற்றினானோ தெரியாது. ஆனால் அதே விரல்கள் அவன் பிடியிலிருந்து நழுவியபோது ஏற்பட்ட உணர்வு அவளை இன்று வரை, போகும் இடங்களிலெல்லாம் எங்கேயாவது அவளை மீண்டும் பார்த்து விட மாட்டோமா என்றுத் தேடச் செய்தது. ஆனால் திடீரென்று சண்டிக்குதிரையாக வளர்ந்து வந்து அவன் முன்னேயே வந்து நிற்பாள் என்று அவன் கற்பனைக் கூடச் செய்து பார்க்கவில்லை. இறக்கைக் கட்டி வானில் பறக்க வேண்டும் போல் அவனுக்குள் பிறந்த உத்வேகத்தைப் பெரும்பாடுப்பட்டு கட்டுப்படுத்திக் கொண்டான். அவளை காணாமல் அவன் மனம் தேடும் போதெல்லாம் அவன் ஓயாமல் கேட்டுக் கேட்டு தேய்த்த அந்தப் பாடலைக் கேட்க வேண்டும் போலிருந்தது. அதனை ஒலிக்க செய்த மறுநொடி அவன் உலகமே மறந்து போனான். அவளை தவிர! மது மது மது என்று அவள் மட்டுமே அவன் நினைவில் நிறைந்திருந்தாள்! என்னை காணவில்லையே நேற்றோடு எங்கும் தேடிப் பார்க்கிறேன் காற்றோடு உயிர் ஓடிப்போனதோ உன்னோடு அன்பே.. நான் நிழலில்லாதவன் தெரியாதா என் நிழலும் நீயென புரியாதா உடல் நிழலைச் சேரவே முடியாதா அன்பே..

Cancel “தூரமில்லை விடியல்” என்னுடைய புத்தம் புது தொடர் துவங்கப்பட்டுள்ளது. வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா