மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumMembersActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumMonisha Completed novels: Aathiyum AnthamumAA - 16Post ReplyPost Reply: AA - 16

Quote from monisha on April 10, 2021, 7:04 AM

மனோபலம்
பரமுவிற்கு ஒரே ஆறுதல் செல்வியிடம் பேசுவதுதான். ஆனால் சில நாட்களாகச் செல்வி வராதது அவளைப் பெரிதும் வேதனைப்படுத்தியது. அதற்கான காரணத்தை அவளால் அறியமுடியவில்லை. இந்நிலையில் வீட்டில் நடைபெறும் சில விஷயங்கள் அவளுக்குக் குழப்பத்தையும் பயத்தையும் ஏற்படுத்தியது. இந்த மர்மமான நடவடிக்கைகள் பரமுவை ஒரு விபரீதமான முடிவை எடுக்க வைத்தது. செல்வி தன் வீட்டில் எப்போதும் சோர்வோடு படுத்துக்கிடந்தாள். நடந்த அந்தச் சம்பவம் அவள் மனதை விட்டு நீங்காமல் அவள் நினைவைச் சுற்றி வந்து கொண்டிருக்க, ஆண்களைப் பார்த்தால் ஒருவித பயமும் அருவருப்பான உணர்வும் அவளை ஆட்கொண்டது. அந்தச் சம்பவத்தை குறித்து தன் தாயிடம் பகிர்ந்து கொள்ளக்கூட அவளுக்கு அவமானமாய் இருக்க, வீட்டின் வாயிலைத் தாண்டி போவதற்கே கூட அச்சப்பட்டுக் கொண்டு உள்ளேயே அடைந்துகிடந்தாள். உயிருள்ள பொம்மையாகவே அவள் நடமாடிக் கொண்டிருக்க மங்களம் மகளிற்கு என்னவானதோ ஏதோ என்று புரியாமல் அவதியுற்றார். இப்படியாக நாட்கள் நகர, அன்றைய இரவில் நிலவின் ஒளியில்லாமல் வானில் நட்சத்திரங்கள் மட்டும் கண்விழித்திருந்தன. அந்த ஊர் இருளில் முழ்கியிருந்தது. இரவில் கேட்கும் கூகை கோட்டான்களின் சத்தம் மட்டும் ஆங்காங்கே கேட்டுக் கொண்டிருக்க, செல்வி படுக்கையில் உறக்கம் வராமல் புரண்டுக் கொண்டிருந்தாள். அந்த சிறிய அறையில் சிம்மினிவிளக்கு மெலிதாய் எரிந்து கொண்டிருக்க, ஒரு மங்கிய வெளிச்சம் அங்கே பரவிக்கிடந்தது. சட்டென்று செல்வி ஏதோ எண்ணத்தில் கண்விழிக்க ஜன்னலோரத்தில் ஓர் நிழலுருவம் ஆடியது. அவள் அதனைப் பார்த்து அஞ்சி நடுங்கிய சமயம், "செல்வி" என்று அவளின் தோழியின் குரல். கொஞ்சம் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு விளக்கின் திரியைத் தூண்டி பிரகாசமாய் எரிய வைத்தாள். வெளியே பரமுவின் முகம் தெரிய செல்விக்கு ஆச்சர்யம் கலந்த அதிர்ச்சி. மங்களத்திற்கு தெரியாமல் சத்தமின்றி கதவைத் திறந்துக் கொண்டு வந்தவள் தன் தோழி பரமுவைப் பார்த்த நொடி அவளை இறுக அணைத்துக் கொண்டாள். அந்த இரு தோழிகளின் கண்களில் பிரிவின் வலியும் ஆனந்தக் களிப்பும் ஒன்றாய் கலந்து கண்ணீராய் வழிந்தோடியது. செல்வி கண்களைத் துடைத்தபடி, "இந்த ராத்திரி வேளையில போய் ஏன் வந்த புள்ள?" என்று கேட்க, பரமு கோபமான பார்வையோடு, "அது இருக்கட்டும். நீ ஏன்டி என்னைப் பார்க்க வரல" என்று பதில் கேள்வி எழுப்பினாள். பரமு நெருங்கிய தோழியாகவே இருந்தாலும் அந்த சம்பவத்தை செல்வியால் அவளிடம் பகிர்ந்து கொள்ள முடியவில்லை. அதுவும் அவள் தமையன் செய்த அந்த இழிவான காரியத்தை எப்படி அவளிடம் சொல்வது. அவள் தன் மனவலியை மறைத்துக் கொண்டு, "உங்க மதனி நான் வந்ததைப் பாத்து கோபப்பட்டாங்க" என்று பொய்யுரைத்தாள். "என் மதனிங்களுக்கு நான் நிம்மதியாவே இருக்க கூடாது... என் வாழ்கையை நாசம் பண்ண கங்கனம் கட்டிட்டு திரியிராங்க... கூட என் அண்ணன்களும் ஒத்து ஊதுராங்க" "என்ன பரமு சொல்ற?" "நான்தான் அன்னைக்கே சொன்னேன் இல்ல... எனக்கு கல்யாணம் பண்ண ஏற்பாடு பன்றாங்கன்னு... அது உண்மைதான்... எங்க அக்காவுக்கு கட்டி வைச்ச மாதிரியே ஒரு முரடனை தேடி கண்டுபிடிச்சு கூட்டிட்டு வந்திருக்காங்க. நாளைக்கு எனக்கு கல்யாணம்... அதுவும் யாருக்கும் தெரியாம" என்றவள் சொல்லிக் கொண்டே போக செல்வி அதிர்ந்து போனாள். "நாளைக்கேவா?" என்று செல்வி கேட்க, "ஹ்ம்ம்ம்" என்றாள் பரமு. "இப்ப நீ என்ன பண்ணலாம்னு இருக்க" அச்சப்பார்வையோடு செல்வி கேட்க, "நான் இருந்தாதானே கல்யாணம் நடக்கும்... அதான் தப்பிச்சு வந்துட்டேன்" என்று பரமு அவள் செய்த செயலின் மோசமான விளைவுகளைப் பற்றி யோசிக்காமல் குழந்தைத்தனம் மாறாமல் பதிலுரைத்தாள். "தப்பு பரமு. வீட்டுக்கு போ... இதெல்லாம் நல்லதுக்கில்ல" "முடியாது செல்வி... எங்க அக்கா மாதிரி ஒரு முரடனை கட்டிக்கிட்டு காலம் பூரா அடுப்படியில் வெந்துட்டு நரக வேதனையோட வாழ்றதுக்கு செத்தே போயிடலாம்" என்று பரமு சொல்ல, "அப்படி எல்லாம் பேசாதே பரமு" என்று பதறினாள் செல்வி. "இனிமே நாம இரண்டு பேரும் பார்க்க முடியுமோ தெரியல... அதான் ஊரை விட்டுப் போகிறதுக்கு முன்னாடி கடைசியா உன்னைப் பாத்துட்டு போலாம்னு வந்தேன்" என்றாள் பரமு. அவள் தெரிந்து சொன்னாலோ தெரியாமல் சொன்னாலோ?! ஆனால் அதுதான் அந்த இரு தோழிகளின் கடைசி சந்திப்பாய் அமைந்தது. "நீ இந்த வேளையில ஊரைத் தாண்டி யாரை நம்பி போயிட்டிருக்கே... உனக்கு பயமா இல்லையாடி" என்று செல்வி கேட்க அந்த நொடி பரமுவின் உள்ளம் பயத்திற்கெல்லாம் அப்பாற்பட்டிருந்தது. அவள் காதலனின் வீடு ஊர் எல்லையில் இருக்கிறதென்றும் அங்கே சென்றால் தன்னுடைய பிரச்சனை சரியாகிவிடும் என்று பரமு சொல்ல அதில் செல்விக்கு சிறிதும் உடன்பாடில்லை. அவளின் எண்ணத்திற்கு எதிர்மறையாய் பேச வேண்டாம் என மௌனம் காத்தாள். பரமேசுவரி தனியாய் புறப்பட செல்வி அவளைத் தனியாய் அனுப்ப மனமின்றி ஆதிபரமேஸ்வரி ஆலயம் வரை துணையாக வருவதாக அவளின் கைப்பிடித்துக் கூடவே வந்தாள். வாய் ஓயாமல் பேசும் அந்த இரு தோழிகளும் அமைதியே உருவமாய் உள்ளூர பிரிவின் வலியைச் சுமக்க தயாராகி நடந்துவந்து கொண்டிருக்க, அவர்கள் பயணம் அங்கே முடிவுற்றது. ஆதிபரமேஸ்வரி ஆலயத்தை அந்த இரு தோழிகளும் வந்தடைந்திருந்தனர். இருவரின் விழிகளும் அந்த நொடி குளமாகியிருந்தது. இருவரும் பிரிய போகிறோமா என்ற வலியோடு ஒருவரை ஒருவர் இறுக்கமாக அணைத்துக் கொண்டிருக்க, பாவம்! அந்தத் தோழிகளுக்கு தெரியாது. அந்த உறவு அன்றோடு மடிந்துவிடப் போகிறதென்று! செல்வி பிரயத்தனப்பட்டு தன் தோழியின் மீதான அணைப்பை விலக்கிக் கொண்டவளுக்கு அவளை ஏனோ வழியனுப்ப மனம் வரவில்லை. ஆனால் பரமுவோ புறப்பட ஆயுத்தமாகியிருந்தாள். அவள் புறப்படுவதற்கு முன்னதாக தன் கழுத்தில் தொங்கிக் கொண்டிருந்த ஆதிபரமேஸ்வரி டாலரை கழட்டி செல்வியின் கழுத்தில் போட்டாள். "பரமு" என்று புரியாமல் அவளைப் பார்க்க, "என்னுடைய ஞாபகமாய் இந்த டாலர் உன் கழுத்திலேயே இருக்கட்டும் கழட்டவே கூடாது... எங்க பாட்டி சொல்லும் இதைப் போட்டிருந்தா நமக்கு தனி தைரியம் வருமாம்... இது உனக்குத்தான் தேவைப்படும்" என்றாள். "இது உங்க குடும்ப டாலர் பரமு" "இருக்கட்டுமே... இது உனக்குத்தான் பொருத்தமா இருக்கும் செல்வி" என்று பரமு சொல்லி விடை பெற்று கொள்ள, செல்விக்கு பரமுவின் வார்த்தைகள் புரியவில்லை. பரமு தீர்க்கதரிசியாய் செல்வி வாழ்வைக் கணித்தே அதை அவளுக்கு அணிவித்தாள். பரமு முன்னேறி நடந்துசென்று அந்த இருளில் மறைந்துவிட செல்வி அந்தக் கோயிலின் கல்தூணில் அப்படியே சாய்ந்து வெதும்பிக் கொண்டிருக்க, அங்கே அவளுக்குத் துணையாய் இருந்தது ஆதிபரமேஸ்வரியின் சிலை மட்டுமே. அங்கிருந்து செல்ல முடியாமல் தன் தோழியை எண்ணி அவள் கோயிலிலேயே அமர்ந்திருக்க, அப்போதுதான் முதல்முறையாய் செல்விக்கு ஒரு வித்தியாசமான உணர்வு ஏற்பட்டது. ஒருவிதமான ஆபத்தின் அறிகுறிக்கான அறிவிப்பு அது. அந்த எண்ணம் தோன்றிய மறுகணம் உள்ளுக்குள் ஒரு பய உணர்வு அவளைத் தொற்றிக் கொண்டது. மறுகணமே செல்வி தயங்காமல் பரமு சென்ற திசையில் ஓடினாள். ஏதோ ஆபத்து நிகழப் போவதை அவள் மனம் திரும்ப திரும்ப அறிவுறுத்திக் கொண்டே இருந்தது. பரமுவின் கொலுசு சத்தமும்... சில காலடி சத்தங்களையும் அந்த இருள் அடர்ந்த அமைதியில் தெளிவாய் கேட்டது. அந்தச் சத்தம் வந்த திசையை வைத்து தன் தோழியை தேடிக் கொண்டு நடந்தாள். பரமுவுக்கு ஏதோ ஆபத்தென்று அவள் உள்ளுணர்வு ஓயாமல் அபாய ஒலி எழுப்பிக்கொண்டேயிருக்க, அப்போதுதான் வயலினூடே அமைந்திருந்த ஓலை கொட்டாயில் சில ஆண்களின் பேச்சுக் குரல் கேட்டது. அந்த ஓலைகள் பின்னியிருந்த சந்து இடுக்குகளில் செல்வி பார்த்த காட்சி அவளை அப்படியே உறைய செய்தது. அவள் விழியை அவளாலேயே நம்பவே முடியவில்லை. தண்ணீரில் இருந்து தரையில் வீழ்ந்த மீன் போல பரமு துடித்து உயிருக்காகப் போராடி கொண்டிருக்க, நான்கு பேர் அவளைச் சுற்றி கல்தூண்களாய் சமைந்திருந்தனர். நடந்த நிகழ்வை செல்வியால் ஒருவாறு யூகிக்க முடிந்தது. வயலுக்கு அடிக்கும் பூச்சி மருந்தை பரமு பயத்தில் குடித்திருக்க வேண்டும். சுற்றி நின்றவர்களின் முகங்கள் இருளில் மூழ்கியிருக்க, அவர்களின் உடலமைப்பை வைத்து அவர்கள் செல்வியின் அண்ணன்மார்களும் அப்பாவும் என்பதை அறிந்து கொண்டாள். அவளைக் காப்பாற்றமாட்டார்களா என்று செல்வி ஏங்கியபடி நிற்க, அவர்களின் சம்பாஷணைகள் அவள் காதில் விழுந்தது. "குடும்ப கௌவரத்தை கெடுக்க வந்தவ... செத்து தொலையட்டும்" "ஊருக்குள்ள கேட்டா என்ன சொல்றது" "பாம்பு கடிச்சிடுச்சின்னு சொல்லிடுவோம்" "இன்னும் உயிர் துடிச்சிட்டே இருக்கு" "கழுத்தில மிதிச்சி மூச்சை நிறுத்துடா.. நன்றி கெட்டவ" என்று கடைசியாய் பேசியது பரமுவின் தந்தை சண்முகவேலன் என்பதை அறிந்தவள் உச்சபட்ச அதிர்ச்சியில் நின்றாள். அந்த நொடி அங்கே நின்றிருந்தது மனிதர்கள் அல்ல. சாதிவெறி பிடித்த மிருகங்கள் என்பதைப் புரிந்து கொண்டவள் அந்தக் காட்சியை காண முடியாமல் தலைதெறிக்க ஓடியவள், ஊருக்குள் சொல்ல எண்ணி கால்இடறி கற்பாறையில் தலை மோதி ரத்தம் வடிய மயங்கி விழுந்தாள். பரமுவின் மரணம் கிராம மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. ஏதோ உண்மை மறைக்கப்பட்டிருப்பதை மக்கள் விவாதிக்க உண்மை தெரிந்த செல்வி தன்னிலை மறந்து பித்து பிடித்தவளாய் மூன்று மாதம் கிடந்தாள். மெல்ல மெல்ல செல்வி அந்த நிலையில் இருந்து மீண்டு வந்தபோது ஊரே அவளுக்குப் பைத்தியக்காரி பட்டம் கட்டியிருந்தது. இனி அவள் சொல்லும் உண்மை கூட எல்லோருக்கும் வேடிக்கையாகவே இருக்கும். மங்களமோ குணமான செல்விக்கு உடனே மணமுடிக்க ஆயத்தம் செய்தாள். செல்விக்கு திருமணத்தின் மீது ஆசையில்லாத போதும் அந்த ஊரைவிட்டே போய்விட அதுதான் நல்ல வழியாக இருக்கும் என நினைத்தாள். ஆனால் ஊர்மக்களின் அவப்பேச்சால் செல்வியின் திருமண ஏற்பாடுகள் தடைபட்டுக் கொண்டே போனது. இனி செல்விக்கு திருமணம் நடக்காதோ என்று மங்களம் மனம் நொந்து கிடக்க, சண்முகவேலன் சிவசங்கரனுக்கு சம்பந்தம் பேச வர அதை தன் மகளின் அதிர்ஷ்டமாய் கருதினார் மங்களம். யாருடைய முகங்களை எல்லாம் பார்க்கவே கூடாதென்று நினைத்தாளோ அந்தக் குடும்பத்திற்கே மருமகளாய் செல்லும் நிலை செல்விக்கு நேரிட்டதை என்ன சொல்ல? சிவசங்கரனை கணவனாய் ஏற்றுக்கொள்ள அவளுக்கு ஒரு காரணம்கூட இல்லை. ஆனால் அவனை வெறுக்க அவளிடம் ஆணித்தனமான காரணம் இருந்தது. அவள் அவனோடு வாழ்வதைவிட வாழாவெட்டி என்ற பெயரை சுமப்பதே மேல் எனக் கருதினாள். பிறந்த வீட்டிற்கு செல்வி வந்து ஒருவாரம் கடந்திருந்தது. மங்களம் சிவசங்கரன் வராததை எண்ணி வருத்தம் கொண்டவர் தானே அவளை அழைத்துக் கொண்டு போய் அவள் புகுந்துவீட்டில் விடுவதாகச் சொன்னார். செல்வி எதைப்பற்றியும் யோசிக்காமல் பின்புறம் இருந்த கிணற்றின் மேல் ஏறி நின்றுக் கொண்டு, "அந்த குடும்பத்தில நான் வாழறதுக்கு பதிலா... கிணத்தில குதிச்சி சாகலாம்" என்று மிரட்ட மங்களம் அதிர்ந்து போனாள். அவள் மகளின் இந்தப் பிடிவாதமும் தைரியமும் மங்களத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. காரணம் விளங்காமல் மங்களம் மகளின் வாழ்வை எண்ணி மனமுடைந்து போனார். நிலைமை இப்படி இருக்க மீண்டும் செல்விக்கு பரமுவின் மரணத்தின் போது ஏற்பட்ட அதே உணர்வு தோன்றிற்று. அது செல்வியை பொறுத்தவரை ஆபத்தின் அறிகுறி. ஆனால் உண்மையில் அது மரணத்தின் வருகையை செல்விக்கு உணர்த்தும் அவளுடைய தனித்துவம் வாய்ந்த மனோபலம். “எப்படி இது சாத்தியம்?” என்ற கேள்விக்களுக்கெல்லாம் ஆத்மபலம் அப்பாற்பட்டது. அங்கே எதுவும் சாத்தியமாகும். **** ஒரு வாரம் கடந்து போக, சிவசங்கரன் செல்வியை வீட்டிற்கு அழைத்து வராததைப் பற்றி யாரும் கவலைப்படுவதாக இல்லை. கனகவல்லி மட்டும் நடப்பவற்றை உன்னிப்பாய் கவனித்துக் கொண்டிருந்தாள். சிவசங்கரன் செல்வி உறவுக்கு இடையில் ஏதோ கண்ணாமூச்சி விளையாட்டு நடந்து கொண்டிருக்கிறது என்றளவுக்கு அவள் யூகித்திருக்க, செல்வியை அழைத்து வராததைக் குறித்து சிவசங்கரனிடம் வெளிப்படையாகக் கேட்டும் வைத்தாள். ஆனால் சிவசங்கரனின் பதில் அப்போதைக்குத் தப்பித்து கொள்ளும் காரணியாக இருந்ததே தவிர அது சற்றும் ஏற்புடையதாக இல்லை. மொத்தத்தில் சிவசங்கரனும் செல்வியும் தானாகவே பிரிந்துவிட்டனர் என்பதில் அவளுக்கு பெரும் மகிழ்ச்சி. இனி அவர்களை என்றுமே சேரவிடாமல் பார்த்து கொள்ளவும் அவள் தயாராகி கொண்டிருந்தாள். பிரிய வேண்டும் என சிவசங்கரனும் செல்வியும் முடிவெடுத்துவிட்ட நிலையில் விதியின் தீர்மானம் முற்றிலும் எதிர்மறையாய் இருந்தது. செல்வியின் மனம் மீண்டும் மீண்டும் எச்சரித்துக் கொண்டே இருந்தது. ஆனால் அதை அவள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. உண்மையிலேயே அந்த உணர்வின் தீவிரத்தை அவள் உணரவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். அவளோ தான் கணவனைப் பிரிந்து இந்த உலகத்தில் எப்படி வாழப்போகிறோம் என்ற திட்டமோ கவலையோ சிறிதுமின்றி நன்றாக உறங்கிக் கொண்டிருந்தாள். ஆனால் சிறு வயதிலேயே கணவனை இழந்து கை குழந்தையோடு நின்ற மங்களத்திற்கு இளமையில் தனிமையை அனுபவிப்பது எத்தனை கொடுமையானது என்று நன்றாகவே தெரியும். அப்படி ஒரு சூழ்நிலையில் தன் மகள் என்றுமே அவதியுறக் கூடாது எனப் பல கடவுள்களை அவர் உருகி உருகி வேண்டியிருக்க, கடைசியில் எல்லாம் வீணாய்ப் போனதே. இன்று அவருடைய பயத்திற்கு ஏற்றாற் போலவே செல்வியும் தன் கணவனைப் பிரிந்து வாழப் போகிறாளா, என்று எண்ணியவருக்கு அந்த அதிர்ச்சியைத் தாங்கும் சக்தி இல்லை. இருள் மறைந்து மங்கலான சூரிய வெளிச்சம் தெரிய விடியலை வரவேற்றபடி காக்கை குருவிகள் எல்லாம் ஒலி எழுப்பிக் கொண்டிருந்தன. செல்வியும் மெல்ல தன் கண்களைக் கசக்கி கொண்டு விழித்தவள் சிலையென சுவற்றில் சாய்ந்திருந்த தன் அம்மாவினைக் கண்டாள். "ம்மா" என்றழைத்து அவள் அருகில் செல்வி செல்ல அப்படியே ஜீவனற்ற உடலாய் மங்களம் தரையில் சாய்ந்தார். இந்த பரந்த பூவுலகில் அவளுக்கான ஒரே உறவு என்று கருதிய தன் தாயும் உயிர் நீத்த அதிர்ச்சியில் அவள் கிட்டதட்ட மறித்துப் போனவளாய் அப்படியே அமர்ந்துவிட, இந்தச் செய்தி அறிந்துவந்த சிவசங்கரன்தான் எல்லாப் பொறுப்பையும் ஏற்று அவரின் இறுதிச்சடங்குக்கு ஏற்பாடு செய்தான். ஊர் மக்கள் மங்களத்தின் இறுதிச் சடங்கில் பங்கேற்றனர். சிவசங்கரனே முன்னிருந்து மகனை போன்று... எல்லாச் சடங்குகளையும் செய்து முடித்தான். சம்பந்தி என்ற உறவுமுறைக்காகக் கடைசிவரை இருந்துவிட்டு சிவசங்கரன் வீட்டாரும் புறப்பட அந்த நிலைமையில் தன் மனைவியை விட்டுச் செல்ல மனமின்றி அவள் கூடவே தங்கினான். கனவு போன்று நிகழ்ந்துவிட்ட தன் தாயின் மரணத்தை செல்வியால் இன்னும் நம்பமுடியவில்லை. அவள் உடைந்து போய் அமர்ந்திருக்க... அவனோ அவளை எப்படி தேற்றுவது என்று புரியாமல் தவித்துக் கொண்டிருந்தான். நேரங்கள் செல்ல செல்ல அவள் மௌனமும் கலையவில்லை. அவன் தவிப்பும் மாறவில்லை. அவன் மனதில் தோன்றிய எண்ணத்தை மெல்ல செல்வியிடம் வெளிப்படுத்தினான். "நீ இங்க இருந்தா இப்படியே அழுதுட்டு கிடப்ப... வா நம்ம வீட்டுக்கு போயிடலாம்" செல்வியோ சுவரில் சாய்ந்தபடி கண்ணீர் தடத்தோடு கற்சிலையாய் கிடந்தாள். அவன் மீண்டும், "செல்வி... நான் சொன்னது கேட்டுச்சா இல்லையா... ஏதாச்சும் பதில் சொல்லு" என்றவன் கேட்க அவளோ அப்போதும் எந்தவித அசைவுமின்றி இருந்தாள். அவன் தன் பொறுமையிழந்து அவள் தோள்களை உலுக்கி, "செல்வி" என்று பதட்டத்தோடு அழைக்க, இம்முறை உயிர் பெற்றவளாய் அவன் கரத்தை அவள் அவசரமாய் விலக்கி விட்டுத் தள்ளி வந்தாள். "நீ எழுந்திருச்சு வா... நம்ம வீட்டுக்கு கிளம்பலாம்" என்றவன் மீண்டும் சொல்ல, உக்கிரமாய் அவனை ஏறிட்டவள், "இவளுக்கு வேற கதி இல்ல... இனிமே உன் தலைவிதி அங்கதான் வாழணும்னு சொல்றீங்க இல்ல" என்று அவள் கேட்க அவன் அதிர்ந்து போனான். "எந்த மாதிரி நேரத்திலயும்... உனக்கு என் மேல இருக்கிற கோபம் மட்டும் மாறாது இல்ல" என்றவன் தோற்று போன பார்வையோடு கேட்க, "நான் செத்தாலும் மாறாது" என்றவள் உணர்ச்சி பொங்க கத்தினாள். அவன் தாளமுடியாமல் துயரோடு அப்படியே சுவரில் சாய்ந்தவன், "உனக்கென்னடி பாவம் செஞ்சேன் நானு... என்னைப் போட்டு படுத்தற... ஏன்டா இந்த உலகத்தில வாழறோம்னு இருக்கு... உனக்கு நல்லது நினைச்சேன் பாரு... என்னை சொல்லணும்" என்றவன் மனமுடைந்து கண்ணீர் வடித்தான். அவன் கண்ணீரை அவள் சிறிதும் மதியாமல், "நீங்க எனக்கு நல்லது நினைக்க தேவையே இல்ல... உங்க பாசமும் தெரியும் உங்க வேஷமும் எனக்கு நல்லா தெரியும்" என்றாள். அவளை ஏக்கமாய் பார்த்தவன், "பரமு கூட இருந்தபோது உன்கிட்ட ஒரு வெகுளித்தனம் இருந்துச்சு... அதெல்லாம் இப்ப எங்கடி போச்சு... நீ ஏன்டி இப்படி மாறிட்ட" என்று ஏக்கமாக வினவ, அவன் பரமு பெயரை சொல்லவும் அவளின் கோபம் தன் எல்லையை மீறியது. அந்த நொடியே வெறியேற அவன் அருகில் வந்து அவன் சட்டையைப் பிடித்து உலுக்கியவள், "பரமு யாரு? அவளுக்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம்... செய்றதெல்லாம் செஞ்சிட்டு எப்படி ஒன்னும் தெரியாதவன் மாதிரி நடிக்கிறீங்க.. மனுஷனா நீங்க எல்லாம்" என்றவள் உணர்ச்சிவசப்பட்டு கண்ணீரோடு கத்தினாள். அந்தச் சமயம் பார்த்து வீட்டிற்குள் நுழைந்த மனோரஞ்சிதம் அந்தக் காட்சியை பார்த்து அதிர்ந்தாள். அவசரமாய் அவள் செல்வியை ஓரம் தள்ளிவிட, அவள் தரையில் சென்று விழுந்தாள். "பைத்தியமாடி உனக்கு... புருஷன்கிற மரியாதை துளி கூட இல்லாம... சட்டைய பிடிக்கிற... ஏதோ அம்மாவை இழந்து நிக்கிறியேன்னு பாக்கிறேன்... இல்லாட்டி போன... செவில திருப்பி இருப்பேன்" என்று கோபமாய் பொறிந்தாள். சிவசங்கரன், "விடுக்கா... ஏதோ மனசு கஷ்டத்தில இப்படி நடந்துக்கிட்டா" என்று தன் அக்காவை சமாதானம் செய்தான். மனோரஞ்சிதம் அப்போது செல்வியின் முகத்தைப் பார்த்து, "இப்ப கூட உனக்குதான்டி பரிஞ்சி பேசறான்... அவன் கிட்ட போய் இப்படி நடந்துக்க உனக்கு எப்படி மனசு வருதோ?!" என்று சொல்ல செல்வி எதுவும் பேசாமல் அமர்ந்திருந்தாள். மனோரஞ்சிதம் செல்வியின் இறுக்கமான முகத்தைப் பார்த்துவிட்டு சிவசங்கரனைக் கைபிடித்து விட்டிற்கு வெளியே அழைத்து வந்தாள். "செய்யறதெல்லாம் செஞ்சிட்டு எப்படி உட்கார்ந்திருக்கா பாரு... இவ எல்லாம் தனியா கிடந்து கஷ்டபட்டாத்தான் புத்தி வரும்... நீ வா போகலாம்" என்று அவனை அழைத்துக் கொண்டு போக எத்தனிக்க, சிவசங்கரன் அவளுடன் போகாமல் அந்த வீட்டின் திண்ணையில் சட்டமாய் அமர்ந்தபடி, "நான் வரல... நீ போ" என்றான். அவனை ஏற இறங்க பார்த்தவள், "ஏன்டா... உனக்கு மானம் ரோஷம்... வெட்கம்... இதெல்லாம் இருக்கா இல்லையா?!" என்று கேட்க, "நிறைய இருக்குக்கா... ஆனா அதை எல்லாத்தையும்விட அதிகமா மனிதாபிமானம்னு ஒண்ணு இருக்கே... இந்த நிலைமையில அவளை விட்டுட்டு நான் எப்படி வருவேன்" என்றான். தன் தம்பியின் வார்த்தைகளில் மனோரஞ்சிதம் நெகிழ்ந்து போனாள். அவன் அருகில் அமர்ந்தவள் பொறுமையாக, "உனக்கும் அவளுக்கும் என்னதான்டா பிரச்சனை?" என்றவர் தன் குரலைதாழ்த்தி கேட்க, சிவசங்கரனுக்கும் அந்த நொடி தன் மனபாரத்தை யாரிடமாவது இறக்கி வைக்க வேண்டுமென்று எண்ணம் தோன்ற, அவன் தன் தமக்கையிடம் நடந்த எல்லாவற்றையும் சொல்லி முடித்தான். அதிர்ச்சியாய் அவன் முகத்தை ஏறிட்டவள், "அப்போ... நீங்க இரண்டு பேரும் இன்னும் சேர்ந்து வாழவேயில்லையா?" என்று கேட்க இல்லையென்பது போல் அவன் தலையை மட்டும் அசைத்தான். அப்படியே தலையைப் பிடித்துக் கொண்டவள், சற்று நிதானித்து அவனை நிமிர்ந்து பார்த்தாள். "வேண்டாம் சங்கரா... இப்படி ஒரு வாழ்க்கையை நீ வாழவே வேண்டாம்... உனக்கு ஆயிரம் பொண்ணுங்க கிடைப்பாங்க... நீ பேசாம இவளை தலைமுழுகிடு" என்றாள். சிவசங்கரன் கோபமாய் தன் தமக்கையை முறைத்து, "வாயில ஏதாச்சும் வந்திர போது... சொல்லிட்டேன்... தனிமரமா நிக்கிறா... அவளைப் போய் தலைமுழுகிடுங்கிற... நானும் இல்லன்னா அவள் நிலைமை என்னன்னு யோசிச்சியா?" , என்றவன் பொறிந்து தள்ள, "அவதான் இப்படி புத்திக் கெட்டத்தனமா நடந்துக்கிறாளேடா... அப்புறம் உன் வாழ்க்கை சந்தோஷம்... எல்லாம்", என்று தாங்க முடியாமல் பொருமினாள் மனோரஞ்சிதம். "தப்பு என் பேர்லதான் க்கா... அவ விருப்பம் இருக்கா இல்லையான்னு கேட்காம நான்தான் அவளை அடம்பிடிச்சி கல்யாணம் பண்ணிக்கிட்டேன்... அந்த பாவத்துக்காகவாச்சும் சாகிற வரைக்கும் அவளைக்கூட இருந்து பார்த்துக்கிறேன்" என்றதும் மனோரஞ்சிதம் தன் தம்பியின் சொல்லில் நெகிழ்ந்தாள். "நீ ரொம்பப் பெரிய மனிஷன்டா... உன் மனசு எல்லோருக்கும் வராது" என்று சொல்லி அவன் தலையை வருடி பெருமிதம் கொண்டாள். அப்போது அவன் தன் தமக்கையைப் பார்த்து, "அவ சாப்பிடவேயில்ல... அப்படியே உட்கார்ந்திட்டிருக்கா.... அவகிட்ட கொஞ்சம் பேசி சாப்பிட வைக்கா" என்க, "சரி... நான் அவளைச் சாப்பிட வைக்கிறேன்... நீ நம்ம வீட்டுக்கு போய் தூங்கி காலை எழும்பி வா" என்றாள் ரஞ்சிதம். "இல்லக்கா நான் இப்படியே திண்ணையில் படுத்துக்கிறேன்" "சொல்றது கேளுடா... இன்னைக்கு செல்விக்கு துணையா நான் இங்கே இருந்துக்கிறேன்... நீ புறப்படு" என்றவள் சொல்ல தன் தமக்கையின் சொல்லுக்கு மதிப்பு கொடுத்து அவன் புறப்பட எத்தனித்தவன், தன் தமக்கையின் புறம் திரும்பி, "நான் சொன்னது எதையும் அவகிட்ட கேட்டு அவ மனசை கஷ்டபடுத்தாதே" என்று சொல்லிவிட்டு சென்றான். அந்தச் சொற்களில் தன் மனைவி மீது அவன் கொண்ட அளவிட முடியாத அன்பை ரஞ்சிதத்தால் உணர்ந்து கொள்ள முடிந்தது. சிவசங்கரன் செல்வியின் மீது கொண்ட காதலை எல்லோரும் உணர்ந்த போதிலும், அது செல்விக்கு மட்டும் இன்று வரை புரியவே இல்லை. மனோரஞ்சிதம் வீட்டிற்குள் நுழைந்து செல்வியிடம் ஏதேதோ பேசி அவளைத் தேற்ற முயற்சி செய்து கொண்டிருக்க, அவள் மௌனமாகவே அமர்ந்திருந்தாள். மனோரஞ்சிதம் அவளிடம், "பாவம்டி என் தம்பி... இருந்தாலும் நீ அவனை இவ்வளவு கஷ்டப்படுத்தக் கூடாது... அவன் உன்னை எம்புட்டு ஆசைப்பட்டு கட்டிக்கிட்டான் தெரியுமா?" என்றவர் விரக்தியான பார்வையோடு சொல்ல, அப்போது செல்வி தன் பார்வையை அவள் புறம் திருப்பி, "உங்க தம்பி ஆசைப்பட்டாருன்னு என்னை கட்டி வைச்சீங்களே... அதேபோலத்தானே என் பரமுவும் ஒருத்தரை ஆசைப்பட்டா... அவ ஆசைப்பட்ட வாழ்க்கையை மட்டும் ஏன் அமைச்சு கொடுக்காம... அவளை கொன்னுட்டீங்க மதினி" என்றவள் நிறுத்தி நிதானமாகக் கேட்க ரஞ்சிதம் அதிர்ச்சியில் வாயடைத்துப் போனார். அவள் மேலும், "உங்க தம்பி சட்டையில நான் கை வைச்சிட்டன்னு நீங்க எவ்வளவு கோபப்பபட்டீங்க... ஆனா உங்க தங்கச்சிக்கு எவ்வளவு பெரிய அநியாயம் நடந்திருக்கு... நீங்க அதைப்பத்தி கவலைப்பட்ட மாதிரியே தெரியலயே" என்று அடுத்த கேள்வியை அவள் மீது ஈட்டியாய் பாய்ச்ச, "என்ன பேசற செல்வி நீ" என்று ரஞ்சிதம் பதறினாள். "நான் என்ன பேசறேன்னு உங்களுக்கு புரியல... மனசைத் தொட்டு சொல்லுங்க... பரமு பாம்பு கடிச்சுதான் செத்தாளா?" மனோரஞ்சிதம் திகிலுணர்வோடு அப்படியே சிலையாய் சமைந்திருக்க, மேலும் செல்வி, "என்ன மதினி?அப்படியே வாயடச்சி போயிட்டீங்க? இவளுக்கு இதெல்லாம் எப்படி தெரியும்னா” என்றவள் இடைவெளிவிட்டு, “பரமுவுக்கு நடந்த அந்தக் கொடுமையை நான் என் இரண்டு கண்ணால பார்த்தனே" என்று சொல்லும் போதுதான் மனோரஞ்சிதத்திற்கு லேசாய் புரிய ஆரம்பித்தது. இதை மனதில் வைத்துக் கொண்டு அவள் தன் தம்பியை வெறுக்கிறாளோ என்று புரிய, செல்வி தொடர்ந்து பேசினாள். "ஆனா ஒண்ணு... உங்க அண்ண தம்பிங்க செஞ்ச பாவம் அவங்கள சும்மாவே விடாது" என்றவள் சபிப்பது போல் சொல்லவும் ரஞ்சிதம் அவள் கன்னத்தில் அறைந்து, "நீயும் அதே குடும்பத்திலதான் வாக்கபட்டிருக்க... அதை மறந்திடாதே" என்று எச்சரித்தார். அவள் கோபமான பார்வையோடு, "உங்க தம்பியாலதான் நானும் அந்த பாவப்பட்ட குடும்பத்தில வாக்கப்பட வேண்டியதா போச்சு... இல்லன்னா நான் பாட்டுக்கு நிம்மதியா கிடந்திருப்பேன்" என்றவள் சொல்ல, "பையத்தியம் மாதிரி பேசற... அவன் மட்டும் இல்லன்னா உன் வாழ்க்கையே சூன்யமா போயிருக்கும்" என்றாள். "இப்ப மட்டும்" என்று சொல்லி அவள் அலட்சியமாய் பார்க்க, "அய்யோ செல்வி! நீ சங்கரனை தப்பா புரிஞ்சிட்டிருக்க... அவன் ரொம்ப நல்லவன்... என் மத்த அண்ணனுங்க மாறி இல்ல... நீ முடிஞ்சி போனது பத்தி எல்லாம் யோசிச்சி உன் வாழ்க்கையும் கெடுத்துட்டு, அவன் வாழ்க்கையையும் நாசம் பண்ணிடாதே" "இப்ப என்ன சொல்ல வர்றீங்க... நான் உங்க தம்பிக்கு பொண்டாட்டியா வாழ்ந்து நான் வேற பாவத்தை சுமக்கணுமா... சத்தியமா நான் அதுக்கு சம்மதிக்க மாட்டேன்" என்று தீர்க்கமாய் சொல்லி முடித்தாள். "போடி பைத்தியக்காரி... அவன் உன்னை பொண்டாட்டியா ஆக்கிக்கனும்னா எப்பவோ அதை செஞ்சிருப்பான்... ஆனா அவன் உன் விருப்பத்துக்கு மதிப்பு கொடுத்து கண்ணியமா ஒதுங்கி நிற்கிறான்... அவனைப் போல புருஷன் கிடைக்க நீ எந்த ஜென்மத்திலயோ புண்ணியம் செஞ்சிருக்க" "ஆமா ஆமா புருஷன்... சொந்த தங்கச்சியை கொன்னவன் எல்லாம் மனுஷ பிறவியே இல்ல... அப்புறம்தானே புருஷன்" என்றவள் சீற்றமாய் சொல்ல, "என்னடி உளர்ற? அவன் எங்கடி பரமுவை கொன்னான்... அவனுக்கு இப்ப வரைக்கும் பரமு சாவை பத்தின விஷயமே தெரியாது" "இதை என்ன நம்ப சொல்றீங்களா?" "நீ ஒரே பக்கமா பார்த்தா உண்மை புரியாது... பரமு செஞ்ச தப்பை வேல்முருகன் ண்ணே பாத்துட்டு வீட்டுல பெரிய பிரச்சனையைக் கிளப்பிடுச்சு... அன்னைக்கு மட்டும் சங்கரன் இல்லன்னா அப்பவே பரமுவை அடிச்சி கொன்னுருப்பாங்க... சங்கரனை ஊருக்கு அனுப்பற மாதிரி வேலையா டவுனுக்கு அனுப்பிச்சிட்டு... பரமுவுக்கு கல்யாண ஏற்பாடு பண்ணாங்க... அந்த மாப்பிள்ளையோ என் வீட்டுக்காரன் மாதிரி முரடன்... என்ன செய்யும் பாவம்... ஊரை விட்டு ஓடிடலாம்னு பார்த்த புள்ள... கடைசில பிணமாதான் வீட்டுக்கு வந்துச்சு" என்று சொல்லியபடியே அவள் கண்ணீர் வடிக்க, செல்வியோ குழப்பமடைந்தாள். "என்ன சொல்றீங்க மதனி? பரமு உயிருக்கு துடிச்சிட்டு இருக்க... கல்லாட்டம் இரக்கமே இல்லாம சுத்தி நாலு பேர் நின்னு வேடிக்கை பார்த்திட்டிருந்தாங்க... பாவிங்க" "அந்த பாவில ஒருத்தன் என்னைக் கட்டிக்கிட்ட புருஷன்" என்றாள் மனோரஞ்சிதம். மனோரஞ்சிதம் சொன்னதை கேட்டு செல்வியின் முகத்தில் தெளிவு ஏற்படவில்லை. "நான் சொல்றதில உனக்கு நம்பிக்கை வரல இல்ல... கூட பிறந்தவளை கொல்லத் துணியிறவனா நீ இவ்வளவு அவமானப் படுத்தியும் அமைதியா இருக்கான்... நீ சங்கரனை படுத்தின பாட்டுக்கு மத்த அண்ணனுங்களா இருந்தா... உன்னை படாதபாடு படுத்திருப்பாங்க... நீ அவனை இந்தளவுக்கு வெறுத்தும் என் தம்பி உன்னை எப்படி நடத்துனான்னு... நல்லா யோசிச்சி பாரு செல்வி" என்றாள் மனோரஞ்சிதம். "அப்போ பரமுவுக்கு நடந்தது எதுவும் உங்க தம்பிக்கு தெரியாதா?!" சந்தேகித்து அவள் கேட்க, "சங்கரன் என்னவோ சந்தேகப்பட்டு கேட்டான்... ஆனா எங்க அப்பன் எது சொன்னாலும் அவனுக்கு வேதவாக்கு... அப்படியே பொய்யை உண்மைன்னு நம்பிட்டான்... அதுக்கு மேல பரமு சாவை பத்தி அவன் எதுவும் பேசல" என்றாள். "நீங்க ஏன் மதினி உங்க தம்பிகிட்ட இதைப் பத்தி தெரிஞ்சும் சொல்லல?!" "சொன்னா என்ன நடக்கும்... சொந்த அண்ணனுங்களையே கண்ட துண்டமா வெட்டிடுவான்... அப்புறம் பரமு வாழ்க்கை மாதிரி அவன் வாழ்கையும் வீணா போயிடும்" என்றதும் செல்வி ஆழ்ந்த யோசனையில் மூழ்கிட ரஞ்சிதம் அவளிடம், "நீயும் அவன்கிட்ட இதைப் பத்தி பேசாம இருக்கிறதுதான் நல்லது... பைத்தியக்காரி மாதிரி கண்டதை நினைச்சுகிட்டு உன் வாழ்கையையும் கெடுத்துகிட்டு சங்கரன் வாழ்க்கையையும் சேர்த்து அழிச்சிடாதே... நான் உன்னைக் கையெடுத்து கும்பிடறேன்" என்றாள் வருத்தம் நிரம்பிய கோபத்தோடு. மனோரஞ்சிதம் சொன்னதை எல்லாம் கேட்டு முதல்முறையாய் செல்வியின் மனதில் மாற்றம் உருவானது.

Cancel “தூரமில்லை விடியல்” என்னுடைய புத்தம் புது தொடர் துவங்கப்பட்டுள்ளது. வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா