மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumMembersActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumMonisha Completed novels: Aathiyum AnthamumAA - 30Post ReplyPost Reply: AA - 30

Quote from monisha on April 30, 2021, 7:15 PM

மீண்டும் ஆலயத்தில்...
வீட்டின் வாசல் புறத்தில் அமைந்த திண்ணையில் அமர்ந்தபடி ஆதியோடும் விஷ்வாவோடும் மனோரஞ்சிதம், வசந்தா, கனகவல்லி மூவரும் சிரித்து உரையாடிக் கொண்டிருந்தனர். விஷ்வா அவ்வப்போது அவர்கள் பேச்சில் கலந்துக் கொண்டு ஆதியை கேலி செய்துக் கொண்டிருந்தான். மணிமாறனின் வரவு அவர்களின் அந்தச் சந்தோஷத்தை நீடிக்க விடாமல் செய்தது. வரும்போதே அவன் சற்று போதையில்தான் இருந்தான். வசந்தாவிற்கு தன் கணவனை அந்த நிலையில் பார்த்ததுமே ஏதோ விபரீதம் நிகழப் போகிறது என்பது புரிந்தது. அவள் எண்ணத்திற்கு ஏற்றாற் போல் மணிமாறனும் நேராக வந்து ஆதியின் முன்பு நிற்க, அவள் அவன் மீது வந்த குடிபோதை வாடையில் முகத்தைச் சுளித்து கொண்டாள். அவனோ அடங்கா கோபத்தோடு அவளை ஏறிட்டு, "நீ அந்த சோமு வீட்டுக்கு போனியாமே... அந்த ஆளுக்கும் என் மாமாவுக்கும் ஒத்து வராது... இந்த வீட்டிலே இருந்துகிட்டு, அந்த ஆள் கூட சேர்ந்துகிட்டு என் மாமா பேரைக் கெடுக்கக் கூட்டு சதி பண்ண பாக்கிறியா?" என்றவன் சத்தமிட ஆதி பதில் பேசாமல் மௌனமாய் நின்றாள். வசந்தா அப்போது கணவனை வழிமறித்து, "எதுவாயிருந்தாலும் அப்புறம் பேசிக்கலாம் மாமா... நீங்க உள்ளர வாங்க" என்று அவனை சமாளித்து வீட்டிற்குள் அழைத்துப் போக முனைய அவன் அசைந்து கொடுக்காமல், "நான் இப்பவே பேசணும்... நீ ஓரமா போவே" என்று அவளைத் தள்ளி நிறுத்தினான். ரஞ்சிதம் அப்போது ஆதியைப் பார்த்து, "அந்த பொசக்கெட்டவன் எப்படியோ போறான்... நீ அந்த தம்பிய அழைச்சிட்டு உள்ளே போ" என்க, அவளும் விஷ்வாவை அழைத்துக் கொண்டு வீட்டிற்குள் போக எத்தனிக்க, "பேசிட்டிருக்கேன் இல்ல... நில்லுடி" என்று சத்தமிட்டான் மணிமாறன். "ஏ மணிமாறா" என்று ரஞ்சிதம் அவனை மிரட்ட, "நீ சும்மா இருக்கியா" என்று தன் அம்மாவை அதட்டியவன் அவனைக் குழப்பமாய் நின்று பார்த்திருந்த ஆதியிடம், "ஒழுங்கா உன் பொருளை எல்லாம் எடுத்துகிட்டு ஊரை விட்டு கிளம்பிடு… அப்புறம் நான் வேற மாதிரி எதாவது பண்ணிடுவேன்" என்றவன் எச்சரிக்க விஷ்வாவிற்கு கோபம் கனலாய் ஏறியது. ஆனால் ஆதி மணிமாறனின் பேச்சுக்கு எந்தவித உணர்வுகளையும் காட்டிக் கொள்ளாமல் அமைதியாகவே நிற்க, மணிமாறனுக்கு கடுப்பானது. "நான் சொல்றது உன் மண்டையில ஏறுச்சா இல்லையா... பொம்பள புள்ளயாச்சேன்னு பார்க்கிறேன்... இல்லன்னா" என்றவன் சொல்லி ஆதியிடம் எகிறிக் கொண்டு வர விஷ்வா இடையில் வந்து, "நீங்க நடந்துக்கிற விதம் ஒன்னும் சரியில்ல" என்று கோபமாய் முறைத்தான். "விஷ்வா ப்ளீஸ்" என்று ஆதி அவன் கரத்தைப் பிடித்து தள்ளி நிறுத்தி அமைதியாய் இருக்க சொல்லி கைக் காண்பித்தாள். இந்தக் காட்சியை கவனித்த மணிமாறன் அவளை கேவலமாய் ஒரு பார்வைப் பார்த்து, "யாருடி இவன்? கொஞ்சம் கூட அடக்க ஒடுக்கமே இல்லாம இவன் கூட சேர்ந்து ஊரைச் சுத்தி வந்திட்டிருக்க... ஹ்ம்ம்... உன்கிட்ட போய் அடக்கத்தைப் பத்தி எல்லாம் பேசறேன் பாரு... அந்த ஓடுகாலிக்கு பிறந்தவதானே நீயி" என்றான். அவன் இவ்விதம் சொன்ன மறுகணம் ஆதி உட்பட எல்லோரும் அதிர்ந்துவிட விஷ்வாவோ சற்றும் யோசிக்காமல் அவன் கன்னத்தில் பளாரென அறைந்துவிட்டான். மணிமாறனோ அந்த அடியால் நிலைதடுமாறி விழப்பார்க்க ரஞ்சிதமும் வசந்தாவும் அவனைத் தாங்கி பிடித்துக் கொண்டனர். அவன் அவர்களை எல்லாம் விலக்கிவிட்டு விஷ்வாவை அடிக்க வர, விஷ்வாவும் பதிலுக்கு அவனை அடிக்கப் போக ஆதி இடையில் வந்து அவனைத் தடுத்தவள், "நீ இந்த விஷயத்தில தலையிட வேண்டாம்... ப்ளீஸ் இங்கிருந்து போ" என்று கத்தினாள். விஷ்வா கோபமாய் அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு அகன்றுவிட, ரஞ்சிதம் அப்போது தன் மகனைப் பார்த்து, "உன்னைய மாறி ஒரு பிள்ளை பெத்ததை நினைச்சா எனக்கு அவமானமா இருக்கு" என்று உணர்ச்சிவசப்பட்டு தலையிலடித்துக் கொண்டார். ஆதி அவரைத் தடுத்து சமாதானம் செய்ய, வசந்தாவும் கனகவல்லியும் அப்போது மணிமாறனைக் கட்டாயப்படுத்தி உள்ளே இழுத்துக் கொண்டு சென்றுவிட்டனர். அப்போது ரஞ்சிதம் ஆதியின் கையைப் பிடித்து, "என் பையன் பேசினதுக்கு நான் உன்கிட்ட மன்னிப்பு கேட்டுக்கிறேன்" என்று அவர் அழுது வடிந்தபடி சொல்ல, "அய்யோ... பரவாயில்ல அத்தை விடுங்க" என்று சொல்லி ஆதி அவரை பிராயத்தனப்பட்டு தேற்றிவிட்டு வீட்டிற்குள் அழைத்துச் சென்றார். பின்னர் அவள் விஷ்வாவை நினைவுகூர்ந்து அவனைத் தேடிக் கொண்டுப் போக, அவன் அறையின் ஜன்னல் வழியாக வெளியே பார்த்தபடி நின்றுக் கொண்டிருந்தான். நிச்சயம் அவன் கோபமாய் இருப்பான் என்று அவளுக்குத் தெரியும். ஆனால் அவன் கோபத்தை எப்படிச் சரி செய்வது? அதுதான் அவளுக்குத் தெரியவில்லை. சில நேரம் யோசனையில் அப்படியே அவன் பின்னோடு நின்றவள் தயக்கத்தோடு, "விஷ்வா" என்று அழைக்க அவள் புறம் திரும்பாமலே, "ஹ்ம்ம் சொல்லு" என்றான் அவன். அவள் வந்து நின்றதை அவன் அறிந்து கொண்டிருந்தான் என்பதை அவன் குரல் தொனி சொன்னது. "நீ தேவையில்லாம இவ்வளவு உணர்ச்சி வசப்பட்டிருக்க வேண்டாம்" என்று ஆதி மெல்ல தன் குரலைத் தாழ்த்தி சொல்ல,  மறுகணமே அவள் புறம் சீற்றமாய் திரும்பியவன், "நான் தேவையில்லாம உணர்ச்சிவசப்பட்டேனா... அவன்தான் ஆன்ட்டியைப் பத்தி தப்பா பேசினான்... ராஸ்கல்" என்று ஆக்ரோஷமாய் கத்தினான். "விஷ்வா ப்ளீஸ் கத்தாதே" என்றவள் தவிப்போடு கூற, "நான் கத்த கூடாது... ஆனா அவன் கத்தும் போதும் மட்டும் அப்படியே கேட்டுக்கிட்டு ஸைலன்ட்டா நின்னுட்டிருந்த" என்று அவன் உணர்ச்சி பொங்க கோபமாய் அவளிடம் வினவ, "அது" என்று பதில் சொல்ல முடியாமல் தடுமாறினாள். "எனக்கு புரிஞ்சி போச்சு... அவன் உனக்கு சொந்தக்காரன்... நான் உனக்கு யாரோ... அப்படிதானே?! அதனாலதானே என்னைத் தலையிட கூடாதுன்னு சொன்ன" என்று குறையாதக் கோபத்தோடுச் சொல்லி முடித்தான். அவள் கடுப்பாகி, "நீ தேவையில்லாம கற்பனை பண்ணி பேசிட்டிருக்க... நான் ஏன் அப்படி சொன்னேன்னு நீ கொஞ்சம் யோசிச்சு பாரு விஷ்வா" என்றவள் சொல்ல, "நல்லா யோசிச்சேன்.. இனிமே நான் தேவையில்லாத விஷயத்தில தலையிடக் கூடாதுன்னு முடிவு பண்ணிட்டேன்" என்றான் தீர்க்கமாக! ஆதி அவனுக்கு எப்படி புரிய வைப்பதென்று புரியாமல் திகைத்து நிற்க விஷ்வா மேலும், "நாளைக்கு காலையில நான் கிளம்பறேன்" என்று முடிவாக உரைத்துவிட்டு முகத்தைத் திருப்பிக் கொண்டான். அவள் அதிர்ந்து நின்றாள். அவள் சற்றும் இந்தப் பதிலை அவனிடம் எதிர்பார்க்கவில்லை. மனம் கனத்து போக அவனிடம் மேலே என்ன பேசுவதென்று புரியாமல் அந்த அறையைவிட்டு வெளியேறினாள். அவன் கோபத்தில் நியாயம் இருந்தாலும், அவள் சூழ்நிலைக்கு அந்தக் கோபம் சரிப்பட்டு வராது. வீரியத்தைவிடக் காரியம் முக்கியமென்று கருதுபவள். எத்தகைய இக்கட்டான நிலையிலும் அவள் உணர்ச்சிவசப்படவோ கோபப்படவோ மாட்டாள். அதுதான் ஆதி. இந்தக் குணம் அவள் படிப்பும், அவள் செய்யும் வேலையும் அவளுக்குக் கற்றுக் கொடுத்த யுக்தி. ஆனால் விஷ்வாவின் இந்த அவசரமும் கோபமும் அவள் குணத்திற்கு நேர்மறையாய் நிற்க, அதனாலேயே இத்தனை நாளாய் அவன் மனநிலையோடு அவளுக்கு ஒத்துப் போவது சிரமமாயிருந்தது. ஆனால் சில நாட்களாய் விஷ்வா ஆதியிடம் பேசும் விதமும் பழகும் விதமும் மாறியிருக்க, அதில் அவள் மனம் லேசாய் அவனிடத்தில் சாய்ந்திருந்தது உண்மை. இப்போது மீண்டும் அவனின் கோபமும் உணர்ச்சிவசப்படும் குணமும் தலைதூக்கியிருக்க, அதனை ஏற்கவும் முடியாமல் மறுக்கவும் முடியாமல் மனதில் ஓர் புதுவிதமான குழப்பம். ஒருபுறம் அவனைச் சமாதானப்படுத்த அவள் மனம் விழைந்தாலும் அது எவ்விதம் என்று அவளுக்குப் புரியவில்லை. ஆனால் முன்பிருந்தது போல் அவன் கோபத்தையும் நிராகரிப்பையும் அசட்டையாய் அவளால் கண்டும் காணாமல் விடமுடியவில்லை. ஒருவிதத்தில் அவனின் கோபத்திற்கு தானும் காரணம் என்ற குற்றவுணர்வு அவள் மனதை அழுத்த, காலையில் அவனிடம் எப்படியாவது பேசி புரிய வைத்துவிடலாம் என்ற முடிவில் இருந்தாள். ஆனால் அவள் பேசுதற்கான வாய்ப்பைக்கூட தராமல் விஷ்வா காலையிலேயே புறப்படுவதற்குத் தயாராய் நின்றுக் கொண்டிருந்தான். "சரி... நான் கிளம்பறேன் ஆதி" என்றவன் சொல்லி அவளை ஆழ்ந்து பார்க்க இனி அவனைத் தடுப்பது உசிதமில்லை என்று எண்ணி, "ஹ்ம்ம்ம்" என்று தலையசைத்தாள். அதற்கு மேல் ஒரு நொடி கூட தாமதிக்காமல் அவன் விரைந்துவிட அவள் மனம் அவன் செல்வதைப் பார்த்தபடி வேதனையில் ஆழ்ந்தது. விஷ்வா சென்றதைப் பார்த்த வசந்தா ஆதியிடம், "நேத்து நடந்த பிரச்சனையாலதான் தம்பி கோவிச்சுட்டு போறாரா?" என்று கேட்டாள். "அப்படி எல்லாம் ஒண்ணுமில்ல... விஷ்வாவுக்கு கொஞ்சம் முக்கியமான வேலை வந்துருச்சு... அதான் கிளம்பிட்டான்" என்று ஆதி சமாளித்ததை வசந்தா புரிந்து கொண்டு மேலே அதைப்பற்றி பேச விரும்பாமல் அமைதியானாள். விஷ்வா சென்று சில நிமிடங்களே கடந்திருக்கும். இருந்தும் அவளுக்கு அந்த நிமிடங்கள் சில யுகமாய் நீண்டிருந்தது. இரண்டு நாட்களாய் அவன் வேறு அவள் நிழல் மாதிரி தொடர்ந்துக் கொண்டிருந்தான். இன்று அவனின் பிரிவு அவளை ரொம்பவும் தனிமைப்படுத்தியது. ஆனால் ஆதி, தான் வந்த வேலையை எண்ணி மனதைத் தெளிவுபடுத்திக் கொண்டவள் அடுத்து என்ன செய்ய வேண்டுமென்று ஓர் முடிவுக்கு வந்தாள். அன்னம்மாளை சந்திக்க வேண்டி ஆதிபரமேஸ்வரி கோயிலுக்குப் புறப்பட்டவள், சங்கரியையும் கோயிலுக்கு வரச் சொல்லி தகவல் அனுப்பினாள். ஆதிபரமேஸ்வரி ஆலயத்தில் சீரமைப்பு பணிகள் நடந்த வண்ணம் இருந்தாலும் வழிபாடுகளும் தங்குதடையின்றி நடந்து கொண்டுதான் இருந்தன. ஆலயத்தின் வாசலில் ஆதி, ஈஸ்வரனைத் தடவியபடி சங்கரிக்காக காத்துக் கொண்டிருந்தாள். அதேநேரம் தன் மனதில் உள்ளதை ஈஸ்வரனிடம் கொட்டிக் கொண்டிருந்தாள். "இருந்தாலும் அந்த விஷ்வாவுக்கு இவ்வளவு கோபம் ஆகாது" என்றவள் முகம் சுணங்க, ஈஸ்வரன் பார்வை அவளைப் புரியாத பார்வை பார்த்தது. "அவன் என் ஃப்ரண்ட் ஈஸ்வரா" என்றவள் சற்று நிறுத்தி யோசனையோடு, "ஆனா அவனை என் ப்ரண்டுன்னு மட்டும் சொல்ல முடியாது... அவன் எனக்கு எனிமியும் கூட... சண்டை போடுவான்... இரிடேட் பண்ணுவான்... சம் டைம்ஸ் ரொம்ப கடுப்பேத்துவான்" என்று நிறுத்தியவள், "இவ்வளவெல்லாம் செஞ்சாலும் எனக்கு அவனை ரொம்ப பிடிக்கும் ஈஸ்வரா... ஐம் டெரிப்பளி மிஸ்ஸிங் ஹிம் நவ்" என்று குழப்பமாக அவள் பேசிக் கொண்டிருக்க இவற்றை எல்லாம் கேட்ட பின்னர் ஈஸ்வரனின் நிலைமை என்னவாகயிருக்கும் என வாசகர்களே யூகித்துக் கொள்ளுங்கள். சரியாக அந்த நேரத்தில் சங்கரி அங்கே வந்திருந்தாள். அவள் மிரட்சியோடு ஆதி அருகில் வந்து நின்று, "ரொம்ப நேரம் காக்க வைச்சிட்டேனோ?!" என்று சொல்ல ஆதி அவள் புறம் திரும்பினாள். சங்கரி மிரட்சியான பார்வையோடு, "ஏன் ஆதி?! ஊர்ல இருக்கிற நாங்களே ஈஸ்வரன் பக்கத்துல போகக்கூட பயப்படுவோம்... நீ இவ்வளவு பக்கத்துல நின்னு அவன்கிட்ட பேசிட்டிருக்க... ஆச்சர்யமா இருக்கு" என்றாள். ஆதி சிறுநகைப்போடு, "எங்க இரண்டு பேருக்கும் ஒரு ஜென்மாந்திர உறவு இருக்கு" என்க, அதன் அர்த்தத்தை சங்கரியால் புரிந்து கொள்ள முடியவில்லை. அதன் பிறகு சங்கரியிடம், "அன்னம்மா இங்கதானே இருப்பாங்கன்னு சொன்ன... எங்க சங்கரி?" என்றவள் ஆவல் ததும்ப கேட்க, "அதானே" என்று சொல்லியபடி சங்கரி அந்த அரசமரத்தடியை ஆராய்ந்து பார்த்தாள். பின் சுற்றுமுற்றும் தேடிப் பார்த்துவிட்டு, "எப்பவும் இந்த மரத்தடியில்தான் உட்காந்திருப்பாங்க.. இன்னைக்கு ஆளையே காணோம்" என்றுச் சொல்ல ஆதியின் முகத்தில் ஏமாற்றம் தொற்றிக் கொண்டது. "கவலைப்படாதீங்க ஆதி... பாட்டி இங்கதான் இருப்பாங்க... நாம எதுக்கும் கோயில் குருக்களைக் கேட்டுப் பார்க்கலாம்" என்று சங்கரி சொல்லி ஆதியை ஆலயத்திற்குள் அழைத்துச் சென்றாள். உள்ளே சென்ற சங்கரி பூஜையில் இருந்த குருக்களிடம் விவரத்தைச் சொல்லி விசாரிக்கும் போது ஆதியின் பார்வை வேறோரிடத்தில் நிலைகொண்டுவிட்டது. அவள் பார்த்த திசையில் அன்னம்மா உணவு உண்டு கொண்டிருக்க, அருகில் விஷ்வா நின்றுக் கொண்டிருந்தான். அதேநேரம் சங்கரியிடம் குருக்கள் சொன்னதும் அவள் காதில் விழுந்தது. "பாவம் பாட்டி... கோயிலுக்கு வர்றவங்க எல்லாம் பழம் பிரசாதம்னு ஏதாச்சும் குடுப்பாங்க.. கோயில்ல வேலை நடந்திட்டிருக்குல்ல… அதனால பக்தர்கள் சரியா வரதில்ல… பாட்டி சரியா சாப்பிட்டுச்சோ என்னவோ... காலையில பார்த்தா மரத்துக்கு அடியில் படுத்துகிட்டு கை காலெல்லாம் நடுங்கிட்டு இருந்திருக்கு… உடம்பு அனலா கொதிச்சிருக்கு.. நல்ல நேரம் கோயிலுக்கு வந்த இந்த தம்பி பாட்டி நடுங்கறத பார்த்து உள்ளே கூட்டி வந்து உட்கார வைச்சிட்டு... பக்கத்தில எல்லாம் விசாரிச்சு இந்த ஊர் டாக்டர் அழைச்சிட்டு வந்து பார்த்தது… போதாக்குறைக்கு பக்கத்துல போய் சாப்பாடெல்லாம் வாங்கிட்டு வந்து தந்திருக்கு" என்று விஷ்வாவை காண்பித்து அவர் சொல்லி முடிக்கும் போது சங்கரி அவனைப் பார்த்தாள். "அவர் உங்க ஃப்ரண்ட் விஷ்வா இல்ல?!" என்றவள் ஆச்சர்யமாய் கேட்க, "ஹ்ம்ம்" என்றாள் ஆதி பெருமிதமாய்! "விஷ்வா செம கேரக்டர்" என்று சங்கரி புகழ்ந்துரைக்க, ஆதி இமைகள் அசையாமல் விஷ்வாவையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவளின் அத்தனை புலனும் செயலற்று பார்வை மட்டும் விஷ்வாவிடமே லயித்திருந்தது. "ஆதி" என்று சங்கரி அழுத்தமாய் அழைத்து அவள் தோள்களை உலுக்க நினைவுபெற்றவள், சட்டென்று தன் பார்வையைத் திருப்பி, "என்ன சொன்னீங்க சங்கரி?" என்றுக் கேட்க, "அன்னம்மாவை பார்க்கணும்னு சொல்லிட்டு இப்படியே நின்னிட்டிருந்தா எப்படி? வாங்க... போய் பேசலாம்" என்றாள். பிறகு இருவரும் அன்னம்மாவை நோக்கிச் செல்ல விஷ்வா அப்போதே ஆதியைப் பார்த்தான். உலகம் ஒரு நொடி தன் சுழற்சியை நிறுத்திவிட்டது போல இருந்தது அவனுக்கு. இருவரும் ஒருவரை ஒருவர் காதலோடு பார்த்துக் கொண்ட அந்த இடைப்பட்ட நேரத்தில், சங்கரி அன்னம்மாவின் அருகில் அமர்ந்து நலம் விசாரிக்க அவர் ஏதோ கையசைத்து 'பே பே' என்க, அவரின் ஊமைப் பாஷை ஒன்றும் சங்கரிக்கும் விளங்கவில்லை. அப்போது விஷ்வா ஆதியைப் பார்த்தபடி ஸ்தம்பித்து நிற்க, "நீ எப்படி விஷ்வா இங்க?" என்று ஆதி வினவினாள். அந்த நொடி தன் கோபத்தை மீட்டுக் கொண்டவன், "ஏன்? இன்னும் நான் போகலயேன்னு வருத்தமா இருக்கோ?!" என்றுக் கேட்க அவளுக்குச் சுருக்கென்றிருந்தது. அப்போது அங்கே வந்த குருக்கள், "இந்தாங்க தம்பி பிரசாதம் எடுத்துக்கோங்க" என்று சொல்ல நெற்றியில் திருநீற்றை எடுத்து இட்டு கொண்டான் விஷ்வா. "மனைவி மக்களோட நீங்க நீண்ட ஆயுள் நல்லா இருப்பேள்" என்று சொல்ல, "எனக்கு இன்னும் கல்யாணம் ஆகல சாமி" என்றான் விஷ்வா. "அப்படின்னா நம்ம ஆதிபரமேஸ்வரி அம்மாவோட கடாட்சத்தால உங்களுக்கு சீக்கிரமே கல்யாணம் ஆயிடும் பாருங்க” "ஆதிபரமேஸ்வரிக்கு என் மேல கடாட்சமும் இல்ல... கரிசனமும் இல்ல" என்றவன் சொல்லி ஆதியைப் பார்த்த பார்வையில் அத்தனை கோபம். அவளுக்கோ தன் மனநிலையை எப்படி அவனிடம் புரியவைப்பதென்ற தவிப்பு. அந்த சமயம் குருக்கள் விஷ்வாவிடம், "அப்படி எல்லாம் சொல்லாதீங்க... நல்லவங்கள ஆதிபரமேஸ்வரி என்னைக்கும் கைவிடமாட்டா" என்று சொல்லி முடிக்க, "நீங்க சொன்னா சரியாதான் இருக்கும் சாமி" என்று சொல்லி தன் பர்ஸில் இருந்து பத்து ரூபாயை அவர் தட்டில் போட்டவன், சங்கரியிடம் இறங்கி பாட்டியைப் பார்த்துக் கொள்ள சொல்லிவிட்டு ஆதியைக் கண்டும் காணாமல் விடுவிடுவென வெளிவாசல் வழியே சென்று மறைந்துவிட்டான். விஷ்வா எதற்குக் கோயிலுக்கு வந்தான் என்று அவன் தெரிவிக்காவிட்டாலும், அதனைச் சொல்ல வேண்டிய பொறுப்பு நமக்கிருக்கிறதே. ஊரைவிட்டுப் புறப்பட்டுவிடலாம் என்று விஷ்வா கிளம்பிய போது, ஆதிபரமேஸ்வரி ஆலயத்தில் ஆதியைப் பார்த்தது நினைவுக்கு வரக் கோயிலுக்குச் சென்றுவிட்டுப் போகலாம் என்று எண்ணத்தோடு வந்தவன், அங்கே அன்னம்மாவின் நிலைமையைப் பார்த்து பரிதாபம் கொண்டு அவருக்கு உதவி புரிந்தான்.  ஆனால் அவன் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. மீண்டும் அதே ஆதிபரமேஸ்வரி ஆலயத்தில் தன் நாயகி ஆதியை சந்திக்கும் துரதிஷ்டவசமான நிலைமை அமையும் என்று! விஷ்வா போன திசையையே ஏமாற்றத்தோடு பார்த்துக் கொண்டிருந்த ஆதி, கோபம் கொண்டு அவனை மனதிற்குள்ளேயே வசமாய் அர்ச்சனை செய்துக் கொண்டிருந்தாள். 'சரியான டெம்பர் பார்ட்டி... திமிரு பிடிச்சவன்... இடியட்... அப்படி என்ன கோபம்... ஒரு செகண்ட் நின்னு பேசியிருக்கலாம்ல' என்றவள் புலம்பி தீர்த்தபடி நிற்க... அப்போது சங்கரியின் தயவால் எழுந்து நின்ற அன்னம்மா ஆதியைப் பார்த்து அதிசயத்து போனார். அவர், "பேபே ... பே" என்று ஆதியைக் காட்டி சங்கரியிடம் வினவ, அவள் புரியாமல், "புரியல பாட்டி... என்ன கேட்கிறீங்க?" என்றாள். அந்த நொடி அன்னம்மாவின் பார்வையையும் கைச்சைகைகளையும், கவனித்துவிட்ட ஆதி புன்னகையோடு, "ஆமா... நான் சிவசங்கரன் செல்வியோடு மகதான்" என்று சைகையோடு பதிலளிக்க பிரமிப்பில் ஆழ்ந்தவர் அவளை ஆரதழுவி கண்ணீர் மல்கினார். சங்கரி வியப்பின் விளம்பில் நின்றாள்.

Cancel “தூரமில்லை விடியல்” என்னுடைய புத்தம் புது தொடர் துவங்கப்பட்டுள்ளது. வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா