You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

ஆரண்யா 💛 நல்லசிவம் (ஆர்ணயம் அவள் நாவல்)

Quote

அவள் முகத்திலோ பெயருக்கு கூட ஒப்பனை இல்லை. அதில் போதையேற்றும் அவளது விழிகள், நேராக இறங்கிய நாசி, அளவாக வடித்து வைத்த உதடுகள். 

தற்சமயம் அதில் ஐஸ்க்ரீம் ஒட்டியிருந்ததை எல்லாம் கடக்க முடியாமல் பெருமூச்சுடன் கடந்தவனின் விழிகளை அதற்கும் கீழாக செல்லவிடாமல்  நிறுத்தி கடவாளமிட்டு கொண்டவன் விழிகள் அவள் முகத்தில் வந்து நிலைக்க அதில் கோடாக புன்னகை விரிந்து கிடந்தது.

அதே புன்னகையுடன், “என்ன சிவம் ஐஸ்க்ரீம் சாப்பிட வந்தீங்களா?” என்று சாதரணமாக கேட்க, அவனுக்கு ஆச்சரியமாகிவிட்டது.

கோபப்படவோ அல்லது அமைதியாக எழுந்து சென்று விடவோ செய்வாள் என்றுதான் எதிர்பார்த்தான். ஆனால் அவள் சாதாரணமாக பேசுகிறாள். புன்னகைக்கிறாள்.

எதற்கும் இவள் அசரமாட்டாளா என்று உள்ளுர வியந்தவன் அவள் கேள்விக்கு பதிலாக,

“இல்ல உன்கிட்ட பேசி புட்டு போலாம்னு வந்தேன்” என்றான்.

“என்கிட்ட பேசணுமா... அந்த கேஸ் முடிஞ்சிருச்சுனு இல்ல கேள்விப்பட்டேன்... அப்புறம் என்ன” என்றாள்.

“அது முடிஞ்சிருச்சு.. இது வேற”

“வேற கேஸா”

“இல்ல வேற விஷயம்... ரொம்ப முக்கியமான விஷயம்”

“முக்கியமான விஷயமா... இங்கேயே உட்கார்ந்து பேசலாமா இல்ல வீட்டுக்கு போய் பேசலாமா?” என்று கேட்டவளை விழி விரித்து ஆச்சரிய புன்னகையுடன் நோக்கினான்.

“ஏன் சிரிக்குறீங்க சிவம்?”

“இல்ல அன்னைக்கு நான் பேசுன விதத்துக்கு வேற எவளாச்சுமா  இருந்தா தெறிச்சு ஓடி இருப்பாப்ல... இல்ல கோபப்பட்டு கத்தியாவது இருப்பாப்ல... ஆனா நீ என்னடானா இரண்டுமே செய்யாம வீட்டுக்கு போய் பேசலாமானு சகஜமா கூப்பிடுத”

“அன்னைக்கு நீங்க ஒன்னும் அவ்வளவு மோசமா எல்லாம் நடந்துக்கல... ஸோ உங்க மேல ஒன்னும் எனக்கு தப்பான அபிப்பிரியாம் எல்லாம் இல்ல” என்று நிதானமாக கூறியவள் மேலும்,

“இந்த ஐஸ்க்ரீம் கரைஞ்சிடுச்சு... நான் வேற சொல்ல போறேன்... உங்களுக்கும் ஒன்னும் சொல்லட்டுமா?” என்று விசாரித்தாள்.

“இல்ல நான் ஐஸ்க்ரீம் சாப்பிட மாட்டேன்” 

“அப்போ ஜுஸ் மாதிரி எதாச்சும்”

“எனக்கு எதுவும் வேண்டாம்” என்றதும் அவள் திரும்பி கடையிலிருந்த பையனிடம்,

“டேய் ஷாகுல்... எனக்கொரு ஸ்டாரபெரி” என்றாள். அவன் மீண்டும் புன்னகைக்க,

“திரும்பியும் எதுக்கு சிரிக்குறீங்க... என்னைய பார்த்தா காமெடி பீஸ் மாதிரி தெரியுதா” என்றாள்.

“அப்படி எல்லாம் தெரியல... இந்த ஐஸ்க்ரீம் கடையே உன்னாலதான் நடக்குதோனு யோசிக்குதேன்... கடையோட மொத்த வியாவாரத்துல முக்காவாசி நீதான் பண்ணுவ போல” என்றவன் சொன்னதும் முதலில் சிரித்தவள் பின் புருவத்தை நெறித்து,

“ஆமா நான் இந்த கடைல எப்பவும் ஐஸ்க்ரீம் சாப்பிடுவனு உங்களுக்கு எப்படி தெரியும்... ஆர் யூ ஸ்டாக்கிங் மீ?” என்று அவனை பார்வையால் அளவெடுக்க,  

“ம்ம்ம் அப்படியும் வைச்சுக்கிடலாம்” என்றவன் பதிலை கேட்டு அவள் முறைத்து கொண்டிருக்கும் போது அந்த கடைக்கார பையன் பழைய கண்ணாடி குவளையை எடுத்து விட்டு புதியதை வைத்து விட்டு போனான்.

அதனை மெதுவாக எடுத்து ருசித்து கொண்டே தன் பார்வையை அவனிடம் நிறுத்தி, “சரி என்னவோ விஷயம் பேசணும்னு சொன்னீங்க இல்ல... சொல்லுங்க” என அவனுக்கு தவிப்பானது.

எப்படி எல்லாமோ சொல்ல வேண்டுமென்று விமானத்தில் ஏறிய நொடியில் இருந்து வார்த்தைகளை கோர்த்து கொண்டு வந்தான். ஆனால் அவள் எதிரே அமர்ந்ததும் அவனுக்கு யோசித்த வார்த்தைகள் எதுவுமே வரவில்லை. சொல்லலமா வேண்டாமா என்று அவன் மூளை வேறு அப்படியும் இப்படியுமாக கபடி ஆடியது.

  ஒரு வேளை அவள் கோபப்பட்டு இருந்தால் அல்லது முரண்டு பிடித்திருந்தால் கட்டாயப்படுத்தியாவது இழுத்து பிடித்து  சொல்லி இருப்பான். ஆனால் அவன் எதிர்பார்த்த எதுவுமே செய்யாமல் இலகுவாக அவள் என்ன விஷயம் என்று கேட்பதே அவனை தடுமாற வைத்தது.

இத்தனை நேரம் அவளிடம் இருந்த இலகுத்தன்மை சட்டென்று கோபமாக மாறி விடுமோ என்று பதட்டமாக இருந்தது. எதற்காகவும் யாருக்காகவும் அவன் இப்படி  பதட்டப்பட்டது இல்லை.

எதிரே இருப்பவன் யாராக இருந்தாலும் அவன் தான் செய்வதுதான் சரி சொல்வதுதான் நியாயம் என்று பேசிவிட்டு போவான். ஆனால் இவள் முன்பு வார்த்தையே வரமாட்டேன் என்று முரண்டியது.

“சிவம்” என்றவள் அப்போது கன்னத்தில் ஒரு பக்கமாக கை வைத்து  பிடித்து கொண்டு, “என்ன நான் பாதி ஐஸ் க்ரீம் சாப்பிட்டு முடிச்சிட்டேன்... நீங்க பேச வந்த விஷயத்தோட முதல் வார்த்தையை கூட சொல்லல” என,

“சொல்லணும்னுதான் நானும் நினைக்குதேன்... ஆனா வார்த்தையே வரமாட்டேங்குது”

“அன்னைக்கு பயங்கரமா பேசுனீங்க... இன்னைக்கு ஏன் பேச முடியல”

“அன்னைக்கு நான் வந்த விசயம் வேற... இன்னைக்கு நான் உம்மகிட்ட பேச வந்த விஷயம் வேற”

“நீங்க என்ன விஷயம்னு சொன்னாதானே அது என்னனு எனக்கும் தெரியும்”

 “ம்ம்ம் சொல்லுதேன்” என்று அவன் மூச்சை இழுத்து விட்டு கொண்டே அவளை பார்த்து,

“எனக்கு வயசு நாற்பது” என்றதுமே அவள் வியந்து, “இஸ் இட்... ஆனா பார்த்தா அந்தளவு தெரியலயே” என்றாள்.

அவன் பெருமூச்செறிந்துவிட்டு, “நான் பேச வந்த விஷயத்தை முழுசா பேசி முடிச்சிடுதேன்... பொறவு நீ என்ன வேணா கருத்து சொல்லும்” என,

“ம்ம்ம்ம் ஓகே முடிங்க” என்று தலையசைத்தவள் மீண்டும் தன் ஐஸ்க்ரீம் உண்ணும் பணியை தொடர அவனும் அவளை பார்த்தபடி தொடர்ந்தான்.

“நான் இதுவரைக்கும் எந்த பொம்பள புள்ள பின்னாடியும் சுத்துனது இல்ல”

“சீரியஸாவா?” என்றாள். அவன் தலையை சாய்த்து முறைக்கவும்,

“ஓகே ஓகே நீங்க கன்டினியூ பண்ணுங்க” என்று அவள் கை காட்ட அவன் மீண்டும், “சீரியஸாவே... நான் இதுவரைக்கும் எந்த பொம்பள புள்ள பின்னாடியும் சுத்துனது இல்ல... ஏன் திரும்பி கூட பார்த்தது இல்ல

ஏன்னு எனக்கு இப்ப வரைக்கும் காரணமும் தெரியல... ஆனா இம்புட்டு நாள் இல்லாம உன்னைய பார்த்த பொறவு என் மூளை என் கட்டுப்பாட்டுல இல்லவே... உன்னைய பத்தி யோசிக்க கூடாது வேணானு நினைச்சாலும் முடியல

உன்னைய தவிர வேற எதை பத்தியும் என்னால யோசிக்க முடியல... வேலை வேலன்னு சுத்திட்டு கிடந்த என் உலகம் இப்போ கிறுக்காட்டுமா உன்னைய சுத்திட்டு கிடக்கு 

உன்னைய பார்க்கணும்னு மனசு கடந்து ஏங்குது... தவிக்குது...  ஏதோ டவுன் பஸ் பிடிச்சு வர மாதிரி ப்ளைட பிடிச்சு வந்த உன்னைய பார்த்துட்டு போயிட்டு இருக்கேனா பார்த்துக்குடுவேன்

என்னால நீ இல்லாம இருக்க முடியும்னு தோணல... பேசாம என்னைய கண்ணாலம் கட்டிக்கிடு... உன்னைய நான் நல்லா பார்த்துக்கிடுதேன்... எனக்கு தெரியும் உனக்கு பறக்கணும்னு எம்புட்டு ஆசைனு... எந்த ஊருக்கு இல்ல எந்த நாட்டுக்கும் வேணாலும் பறந்து போ... ஆனா நீ போய்ட்டு திரும்பி வரும் போது உன்னோட... கூடா நான் இருக்கணும்னு விருப்பப்டுதேன்” என்றவன் சட்டென்று நிறுத்தி திருத்தமாக, “இல்ல நாந்தேன் இருக்கணும்” என்றான் அழுத்தமாக.

அவன் பேசி முடிக்கும் வரை அவள் முகத்தில் விரிந்திருந்த புன்னகை சிறிதளவு கூட குறையவில்லை. சில இடங்களில் அதன் அளவு பெரிதானதையும் மீண்டும் பழைய நிலைக்கு மாறியதையும் கவனித்தவன் அப்போதைக்கு அவன் மனதில் உள்ள அனைத்தையும் முழுவதுமாக கொட்டிவிட்டான்.

You cannot copy content