You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

குரு - ஷிவானி (கொஞ்சம் வஞ்சம் கொண்டேனடி நாவல்)

Quote

இப்படியாக அவர்கள் இருவரும் உரையாடி முடித்திருந்தனர். ஷிவானி பேசியை அணைத்துவிட்டு ஏதோ யோசனையில் அப்படியே ஆழ்ந்தபடி வாசற் படிக்கெட்டில் அமர்ந்து கொண்டிருந்தாள்.

குரு வந்து நிற்பதைக் கூட அவள் உணராமல் இருக்க,

"ஷிவானி" என்றழைத்தான் குரு.

அவனை அவள் நிமிர்ந்து பார்க்க, "சாப்பிட்டியா?" என்று கேள்வி எழுப்பினான் குரு.

"இல்ல... தோ போய் சாப்பிடணும்" என்றவள் எழுந்து கொள்ள,

"போய் சாப்பிடுங்க... அப்பதான் நீங்க எந்த லட்சணத்தில சமைக்கிறீங்கன்னு உங்களுக்குத் தெரியும்" என்றான் கோபமாக!

"என்ன சொல்றீங்க மாம்ஸ்?" அவள் விழிகளை அகல விரித்தபடி கேட்க

"ஹ்ம்ம்... சுரக்காய்ல உப்பில்லைனு சொல்லுதேன்" என்றவன் எகத்தாளமாய் உரைத்தான்.

"நான்தான் சுரக்காயே சமைக்கலையே மாம்ஸ்... அப்புறம் எப்படி?" என்றவள் சொல்லி தோள்களைக் குலுக்க கடுப்பேறியது அவனுக்கு.

குரு  தலையிலடித்துக் கொண்டு, "ஏம்ல... உனக்கு நான் சொல்றது விளங்கலயா இல்ல விளங்காத மாதிரியே நடிக்கிறீகளா?"

"என்ன்னு கொஞ்சம் புரியிற மாதிரி சொல்றீங்களா?" இப்போது அவள் பதிலுக்கு முறைத்தாள்.

"நீ படுகேவலமா சமைச்சிருக்கேன்னு சொல்லுதேன்... உன் மரமண்டையில உறைச்சுதா" என்றவன் முதத்திற்கு நேராய் தன் கரத்தை நீட்டி இடித்துரைக்க அவனை ஏற இறங்கப் பார்த்தவள் அலட்டிக் கொள்ளாத பார்வையோடு

"சும்மா என்னை டீஸ் பண்ண சொல்லாதீங்க... எல்லோரும் நல்லா இருக்குன்னுதானே சொன்னாங்க... ஏன் நீங்களும் உங்க ஃப்ரண்டும் கூடதான் சாப்பிடீங்க" என்றவள் கேட்க,

"சாப்பிட்டோமா?  செத்து பிழைச்சோம்ல... சமைக்க தெரியலன்னா ஏன்ல சமைக்குத... உன்னையெல்லாம் யாருல சமைக்க சொன்னா... நல்ல வேளை... அப்பத்தா இதெல்லாம் எனக்கு செரிமானம் ஆவாதுன்னு சாப்பிடல... இல்லன்னா அவுக நிலைமை" என்று பொரிந்து தள்ளினான்.

"போங்க மாம்ஸ்... சும்மா ஓவரா கலாய்க்காதீங்க... நான் செஞ்சதெல்லாம் இன்டிர்நேஷனல் டிஷ்... உங்களுக்கு அதோட டேஸ்டு பிடிக்கலன்னு சொல்லிட்டுப் போங்க... ஆனா என் சமையலைப் பத்தி குறை சொல்லாதீங்க... சொல்லிட்டேன்" என்றவள் சொல்லிட்டு அவனை நிராகரித்துத் திரும்பி நடக்க,

"ஏ ஷிவானி" என்றவள் கரத்தைப் பிடித்து நிறுத்தி,

"உனக்குதான் எதுவும் உருப்படியா வரலல... பேசாம என்னைக் கட்டிக்கிட்டு என்கூட இங்கனயே இருந்திருங்க" என்றவன் சொல்ல அவள் கோபமாய் அவன் கரத்தை உதறிவிட்டாள்.

"அதெல்லாம் முடியாது... என்னோட எய்ம் பெரிய பைஃவ் ஸ்டார் ஹோட்டலில் பெரிய சீஃப் குக்காகணும்... அப்புறம் ப்யூச்சர்ல பெரிய ஹோட்டல் நடத்தணும்" என்றவள் தன் லட்சியத்தை உரைக்க,

"விளங்கிடும்" என்றவன் அலுத்துக் கொண்டான்.

"என்ன சொன்னீங்க?" என்று அவள் முகம் கடுகடுக்க அவனை முறைக்க,

"உன்னைய சீஃப் குக்கா போட்டா அந்த ஹோட்டல் விளங்கிடும்னு சொன்னேன்" என்றவன் அவளைப் பார்த்து எள்ளி நகைத்தான்.

"அதைப் பத்தி எல்லாம் நீங்க கவலைபடாதீங்க... ஓகே" என்று சொல்லிய மறுகணம் அவள் கோபம் தாளாமல் செல்ல பார்க்க மீண்டும் அவள் கரத்தைப் பிடித்து தன்னருகில் இழுத்தான்.

இம்முறை வெகுநெருக்கமாய் அவன் தேகத்தை அவள் உரசி நிற்க,

"மாம்ஸ்" என்றவள் திகைப்புற்றாள்.

"ஏன்ல என்னைப் போட்டு படுத்துத... உனக்கு என்னல வேணும்... பெரிய ஹோட்டல் கட்டணும்... அம்புட்டுதானே... செய்வோம்ல... நம்ம மெஸ்ஸை பெரிய ஹோட்டலா மாத்திடுவோம்... நீ அதுக்கு ஓனரா இருந்துட்டு போ... என்னையும்... ஹோட்டலையும் நீ பார்த்துக்கிடு" என்று இறங்கிய தொனியில் சொல்லியபடி அவளை கிறக்கமாய் பார்த்தான்.

அவள் எந்தவித எதிர்வினையும் காட்டாமல் அவனை வெறுமையாய் பார்த்தவள்,

"நீங்க நினைச்சதெல்லாம் நடக்காது... அன்ட் நான் நாளைக்கு சென்னைக்கு போறேன்...  அடுத்த நாள் காலையில மலேசியா ப்ளைட் ஏறப் போறேன்" என்று சாதாரணமாய் சொல்ல, குரு அதிர்ச்சியில் அவளை விட்டு விலகி வந்தான்.

ஷிவானி மேலும், "டேட் போஃன்ல அதைப் பத்திதான் சொல்லிட்டிருந்தாரு... டிக்கெட் கன்பாஃர்ம் ஆயிடுச்சாம்... ஸோ... " என்று இடைவெளி விட்டு அவனைப் பார்த்தவள்,

"ஐ ஹேவ் டூ கோ" என்றாள் அழுத்தமாக!

"என்கிட்ட ஒருவாரம் இருக்கேன்னு சொன்னீக... மறந்துட்டீகளா?!" என்று அவன் தவிப்பாய் வினவ அவள் வேதனையான பார்வையோடு,

"டிக்கெட் கன்பாஃர்ம் ஆன பிறகு நான் என்ன பண்ண முடியும் மாம்ஸ்?" என்றாள்.

"ப்ச்... நாளைக்கு சின்ன அக்கா மாமாவெல்லாம் உன்னைய பார்க்க வர்றாங்களே?" என்றவன் தெரிவிக்க, அது அவளை நிறுத்த முடியுமா என்று அவனுக்குக் கிடைக்கபெற்ற ஒரு சின்ன காரணம்தான்.

"சீக்கிரம் வந்துட்டா... பார்த்துட்டு கிளம்பறேன்... இல்லன்னா நெக்ஸ்ட் டைம்" என்றவள் தீர்க்கமாய் சொல்ல,

"அப்போ நாளைக்கு கண்டிப்பா புறப்படுறீக" அதிர்ச்சி மாறாமல் அவளைக் கேட்டான்.

அவள் தலையைக் கவிழ்ந்து கொண்டு, "ஹ்ம்ம்" என்றாள் எட்டிப் பார்த்த கண்ணீரை மறைத்து கொண்டு!

"அப்போ நீங்க சொன்ன மாதிரி என்னைய நோஸ் கட் பண்ணிட்டு போகப் போறீக" என்றவனின் உதட்டில் வலி மிகுந்த ஓர் நகைப்பு.

அந்த புன்னகை அவளைக் கூர்மையாய் குத்திக் கிழிக்க அவள் எந்த வார்த்தையால் தன் மனநிலையை விளக்க முடியும் என்று  ஊமையாய் நின்றுவிட்டாள்.

குரு பொறுமையிழந்து சட்டென்று அவள் கன்னத்தை தன் கரங்களால் தாங்கிக் கொண்டவன், "உனக்கும் என்னைய கட்டிக்கணும்னு ஆசை இருக்கு தானே?!" என்று கேள்வி எழுப்ப அவள் முகம் வெளிறி போனது.

இம்முறை இல்லையென்று பொய் சொல்ல அவள் மனம் ஓப்புக்கொள்ளவில்லை. "டேட் சம்மதிச்சா" என்று மேலே சொல்ல முடியாமல் அவள் தடுமாறி நிறுத்த, அவன் பட்டென தன் கரத்தை பின்வாங்கிக் கொண்டு வேகமாய் அந்த இடத்தை விட்டு அகன்றான். ஷிவானியின் மனம் இப்போதைக்கு எந்த முடிவையும் சரியாய் எடுக்க முடியாமல் மதில் மேல் பூனையாய் கிடந்து தவித்தது. 

You cannot copy content