You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

சரவணன் 💜 இந்துமதி (ரெயின்போ கனவுகள்)

Quote

அவன் படுக்கையில் அமர்ந்து கொண்டு அவளைப் பார்க்க, “சாரி மாமா… நான் உங்ககிட்ட எல்லாத்தையும் அப்பவே சொல்லி இருக்கணும்தான்… ஆனா அந்தச் சமயத்துல எனக்கு உங்களை” என்றவள் தடுமாறிவிட்டு பின்,

“நீங்க என்னைப் பிடிக்காமதான் கல்யாணம் பண்ணிக்கிட்டீங்கன்னு நினைச்சேன்… அதுவும் முதல வேண்டாம்னு சொல்லிட்டு அப்புறம் சம்மதம் சொன்னீங்களா? ஒருவேளை என் அம்மாவோட கட்டாயத்துனாலதான் இந்தக் கல்யாணத்தைப் பண்ணிகிட்டீங்கன்னுகூட தோணுச்சு… அதனாலதான் உங்ககிட்ட என் பிரச்சனையைச் சொன்னா புரிஞ்சிப்பீங்களோ இல்லை தப்பா நினைப்பீங்களோன்னு ஒரு பயம்” என்றவள் சந்தேகமாக இழுக்க,

அவள் பேசியதைக் கேட்ட அவன் கோபம் இன்னும் அதிகரிக்கவே செய்தது.

அவள் கையிலிருந்த புத்தகத்தைப் பறித்து மீண்டும் வேகமாக எதையோ எழுதிக் கொடுத்தான்.

‘நான் உன்னைக் கட்டாயத்தின் பேர்ல கல்யாணம் செஞ்சிக்கிட்டேன்னு உனக்கு யாரு சொன்னா? நான் உன்னை மனசார விரும்பிதான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்… நீ உன் நோட்ல எழுதி வைச்சிருந்த வரியெல்லாம் படிச்சு உனக்காக ரொம்ப வருத்தப்பட்டேன்… ஆனா அதுக்காக நான் இரக்கப்பட்டோ இல்ல பரிதாபப்பட்டோ உன்னை கல்யாணம் பண்ணிக்கட்டதா நினைச்சிக்காதே…

எனக்கு உன் அழுகையில வலியைத் தாண்டி உன் குழந்தை மனசு தெரிஞ்சுது… உன்னைக் கல்யாணம் பண்ணி நல்லா பார்த்துக்கணும்னு நினைச்சேன்… உன் சந்தோஷம் துக்கம் எல்லாத்துலையும் நான் உன் கூட துணையா நிற்கணும்னு நினைச்சேன்… ஆனா நீ என்னை ஒரு மனுஷனா கூட மதிக்கல”

அதைப் படித்தவள் அதிர்ந்து அவன் முன்னே வந்து, “என் நோட்டை நீங்க படிச்சீங்களா மாமா” என்றுக் கேட்க அவன் தலையை மட்டும் அசைத்தான். அப்போதும் அவன் அவள் முகம் பார்க்கவில்லை.

“என்கிட்ட முன்னாடியே இதெல்லாம் சொல்லி இருக்கலாமே” என்றவள் ஆதங்கத்தோடு வினவ, அவன் மீண்டும் அந்த நோட்டைப் பிடுங்கி கோபத்தோடு பதில் எழுதினான்.

“ஒரே ஒரு முறையாச்சும் நான் பேச வந்த விஷயத்தைப் பொறுமையா கேட்டு இருக்கியா நீ? இல்ல என் முகத்தையாச்சும் பார்த்திருக்கியா… பேச முடியாத என்னால நீ என் முகம் பார்க்காம என் மனசுல இருக்கிறதை எப்படி சொல்ல முடியும்… நீயே சொல்லு…

என்னால மட்டும் பேச முடிஞ்சி இருந்தா எப்பவோ என் மனசுல இருக்கிறதை எல்லாம் உன்கிட்ட சொல்லி இருப்பேன்”

அவன் எழுதியதைப் படித்தவள் உள்ளுர நொறுங்கிப் போனாள். கண்ணீர் கரை புரள அந்தக் கடைசி வரிகள் அவளை ஆழமாக குத்தி கிழித்தன.

மன்னிப்பு என்ற வார்த்தைக்கு கூட தான் தகுதியற்று போய்விட்டோம் என்று தோன்றவே ஊமையாக அவள் அழுதிருந்தாள்.

அவள் அழுது முடிக்கும் வரை அவன் அமைதி காத்தான். அந்தளவு அவனுமே அவள் செய்கைகளிலும் நிராகரிப்புகளிலும் காயப்பட்டு இருந்தானே. அந்தச் சூழ்நிலை அவன் மனதிலிருந்த ஆதங்கங்களை கோபமாக வெளியிட்டுவிட்டது.

ஆனால் இப்போது அவள் உடைந்து அழுவதைப் பார்க்க மனம் தாங்காமல் அவள் கரத்தைப் பிடித்து அமர செய்தவன் அவள் கண்ணீரைத் துடைத்துவிட எத்தனிக்கும்போது அவன் கரத்தைப் பற்றிக்கொண்டவள்,

 “உங்க அன்புக்கும் காதலுக்கும் நான் கொஞ்சம் கூட தகுதியானவ இல்லன்னு எனக்கு தெரியும் ஆனா நீங்க எழுதினதை எல்லாம் படிச்ச பிறகு உங்க கூட நான் ரொம்ப வருஷம் வாழணும்னு ஆசை படுறேன் மாமா” என்ற நொடி அவன் எந்த மாதிரியான உணர்விற்கு ஆட்பட்டான் என்று அவனுக்குப் புரியவில்லை.

You cannot copy content