You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

மதிப்புக்குரியவள் - அத்தியாயம் 20

Quote

அத்தியாயம் – 20

துணிகளை எல்லாம் மடித்துப் பெட்டியில் அடுக்கி வைத்த கவிதா, பின்னர் தன்னுடைய பேக் பேக்கை எடுத்து அதிலுள்ள பாஸ்போர்ட், லேப்டாப், பர்ஸ் போன்றவற்றைச் சோதித்துப் பார்த்தாள்.

இங்கிருந்து சென்று விடுவதுதான் சரி என்று அவள் மனம் திரும்பத் திரும்பச் சொன்னது. ஆனாலும் ஸ்ரீதரைப் பார்க்காமல் எப்படிப் போவது? ஒருவேளை அவன் மீண்டும் கண் விழிக்காமலே போய்விட்டால்... ‘இல்லை! அப்படி யோசிக்கக் கூடாது.’

‘ஸ்ரீக்கு ஒன்றும் ஆகாது...’ என்று மனதிற்குள் ஜபித்துக் கொண்ட போதும், அங்கே தங்குவதற்கு அவளுக்கு விருப்பமில்லை. அவள் பையை மாட்டிக்கொண்டு பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியே வந்தபோதுதான், தன்னுடைய செல்போனை எடுத்து வைக்காதது நினைவுக்கு வந்தது. மீண்டும் அறைக்குள் சென்றாள்.

எங்குத் தேடியும் அதைக் காணவில்லை. ஒருவேளை மருத்துவமனையிலேயே விட்டுவிட்டு வந்திருப்பாளோ? ஆனால் அங்கே எடுத்துச் சென்ற ஞாபகமே அவளுக்கு இல்லை. தேடித் தேடி ஒரு கட்டத்தில் சோர்ந்து அமர்ந்த போது, அது போர்வைக்கு அடியில் கிடப்பதைக் கவனித்தாள்.

“அப்பாடா கிடைச்சிருச்சு!” என்று பெருமூச்சு விட்டவள், அதை எடுத்துப் பார்த்தபோது சுத்தமாக சார்ஜ் இல்லை. போன் அணைந்து கிடந்தது. அதை சார்ஜில் இணைத்து உயிர்ப்பித்த மறுகணமே, ஸ்ரீயும் அவளும் சேர்ந்து எடுத்த புகைப்படம் திரையில் அழகாய் மின்னியது. அந்த நொடியே அங்கிருந்து போக வேண்டுமென்ற அவளது எண்ணம் தளர்ந்து போனது.

இந்த நிலையில் அவனை இப்படி விட்டுப் போவது சரியில்லை என்று அவள் உள்ளம் சொல்ல, சோர்வுடன் அப்படியே படுக்கையில் அமர்ந்தாள். மீண்டும் அந்தப் படத்தைப் பார்த்த போதுதான், அதில் குவிந்து கிடந்த அஜயின் மிஸ்டு கால்களைக் கவனித்தாள்.

உடனடியாக அவனுக்கு அழைத்தாள்.

“ஏன் உன் போன் ஸ்விட்ச் ஆஃப் ஆகிடுச்சு? ஆமா, அங்கே என்னதான் நடக்குது? ஏன் ரஞ்சன் போலீஸ் ஸ்டேஷன்ல இருக்கான்?” என்று அஜய் சரமாரியாகக் கேள்விகள் கேட்டான்.

“அவன் செஞ்ச வேலைக்கு வேற எங்க இருப்பான்?” என்றாள் கவிதா.

“என்ன செஞ்சான்?”

“நீதானே சொன்ன... ஸ்ரீகிட்ட உண்மையைச் சொல்லச் சொல்லி? நானும் சொன்னேன். அவன் கோபத்துல ஸ்ரீ ரஞ்சனை அடிக்க, ரஞ்சன் பதிலுக்கு இவனை அடிக்கன்னு ரெண்டு பேரும் மாத்தி மாத்தி அடிச்சுக்கிட்டாங்க. இப்போ ஸ்ரீ ஹாஸ்பிட்டல்ல இருக்கான்.”

“அந்தளவுக்கு ரஞ்சன் ஸ்ரீயை அடிச்சுட்டானா?” என்ற கேள்விக்கு கவிதா பதில் சொல்லவில்லை.

“சரி, இப்போ ஸ்ரீ எப்படி இருக்கான்?”

“எனக்குத் தெரியாது.”

“தெரியாதா?”

“ஆமா, ‘அவன் அக்கா நானே பார்த்துக்கிறேன், நீ கிளம்பு’ன்னு சொல்லிட்டாங்க. நான் கிளம்பிட்டு இருக்கேன்.”

அஜயிற்கு என்ன பேசுவதென்று புரியவில்லை.

“சரி ஓகே, நான் கிளம்பணும். உன்கிட்ட அப்புறம் பேசுறேன்.”

“ஏய் ஏய் இரு... போனை வச்சிராதே!”

“என்ன?”

“இல்ல, ரஞ்சன் மேல அட்டெம்ப்ட் மர்டர் கேஸ் போட்டிருக்கிறதா ஸ்டேஷன்ல சொன்னாங்க.”

“இப்பவும் உனக்கு அவனைப் பத்திதான் கவலையா? நான் இங்கே என்ன நிலைமைல இருக்கேன்னு தெரியுமா உனக்கு?”

“இல்ல கவி, நான்...”

“பேசாதே... எதுவும் பேசாதே. இனிமே எனக்குக் கால் பண்ணாத!” என்றவள் அந்த அழைப்பைத் துண்டித்துவிட்டாள். அஜய் சொல்ல வந்ததை அவள் முழுமையாகக் கேட்கக்கூடத் தயாராக இல்லை.

“என்னாச்சு அஜய்?” என்று ஆனந்தி கேட்க, “ஸ்ரீ ஹாஸ்பிட்டல்ல இருக்கானாம்... அதான் அவ செம கோபத்துல பேசுறா,” என்றவன் நடந்த விஷயத்தைச் சொன்னான்.

“கவிதா சொன்னதை வச்சுப் பார்த்தா கூட, ஸ்ரீதர் அடிச்ச பிறகுதான் ரஞ்சன் கை நீட்டியிருக்கான். இது எப்படி அட்டெம்ப்ட் மர்டர் ஆகும்?” என்று கேட்டாள் ஆனந்தி.

“எனக்குத் தெரியல. ஸ்ரீதர் ஃபேமிலி கொடைக்கானல்ல பெரிய ஃபேமிலி. எஸ்டேட், ஃபேக்டரின்னு அவங்களுக்குப் நிறையச் செல்வாக்கு இருக்கு. சோ, போலீஸை அவங்க இன்ஃபுளுயன்ஸ் பண்ணிருக்க சான்ஸ் இருக்கு. அதுவும் இல்லாம ஸ்ரீதரோட ஹெல்த் கண்டிஷன் எப்படி இருக்குன்னு தெரியல.”

“அப்பக் கூட ரெண்டு பேரும் மாத்தி மாத்தி அடிச்சுக்கிட்டதுக்கு எப்படி அட்டெம்ப்ட் மர்டர் கேஸ் போடுவாங்க? திஸ் இஸ் நாட் ஃபேர் நீங்க உடனே லாயருக்குப் போன் பண்ணுங்க.”

“ஆனா கவிதா...”

“உங்களுக்குக் கவிதா எவ்வளவு முக்கியம்னு எனக்குத் தெரியும். ஆனா கவி ஆன்லைன் ஸ்டோரோட எம்.டி ஜெயில்ல இருக்காருன்னு தெரிஞ்சா, நம்ம மொத்த மார்க்கெட்டும் கொலாப்ஸ் ஆகிடும்.”

ஆனந்தி சொன்னதும் உண்மைதான். ஆனால் ரஞ்சனைக் காப்பாற்றினால், அது கவிதாவிற்கு எதிராகச் செய்வது போல ஆகிவிடுமோ என்று அவனுக்கு யோசனையாக இருந்தது.

“இப்படியே உட்கார்ந்திருக்கப் போறியா அஜய்?” என்று ஆனந்தி கடுகடுக்க,

“என்னை என்ன பண்ணச் சொல்ற? இதெல்லாம் அவனா அவன் தலையில வாரிப் போட்டுக்கிட்டதுதானே?” என்றான்.

“அதெல்லாம் அப்புறம் பேசிக்கலாம், நீ லாயருக்குக் கால் பண்ணு,” என்றவள் அழுத்தமாகக் கூற, அவன் தங்கள் நிறுவனத்தின் வழக்கறிஞரிடம் பேசிக் கொண்டிருக்கும் போதே, “அஜய்! அஜய்!” என்று கூச்சலிட்டாள் ஆனந்தி.

“லாயர்கிட்டதான்டி பேசிட்டு இருக்கேன்...”

“அது இல்ல அஜய்... நம்ம ஆபீஸ் குரூப்ல...” என்று சொல்லிக் கொண்டே தன்னுடைய போனை நீட்டினாள்.

“என்னாச்சு? ரஞ்சன் ஸ்டேஷன்ல இருக்க விஷயம் தெரிஞ்சிடுச்சா என்ன?” என்று கேட்டுக் கொண்டே அதைத் திறந்தவன், “கடவுளே!” என்று அப்படியே தலையைப் பிடித்துக்கொண்டான்.

கவிதா தன்னுடைய பெட்டிகளை எடுத்துக்கொண்டு கீழே வர, குழந்தையின் அழுகுரல் அந்த விசாலமான வரவேற்பறையில் எதிரொலித்தது. அமலாவின் மகள் ஷ்ரேயாதான் அது. பணிப்பெண் அவளைச் சமாதானப்படுத்த முடியாமல் தவித்துக் கொண்டிருப்பதைப் பார்த்த கவிதா, “ஏன் ஷ்ரேயா இப்படி அழுறா?” என்று கேட்டாள்.

“அம்மா வேணும்னு அழுதுட்டே இருக்கா மேடம். நானும் எப்படி எப்படியோ சமாதானம் செஞ்சு பார்த்துட்டேன், ஆனா அழுகையை நிறுத்த மாட்டேங்குறா.”

“சரி கொடு, நான் ட்ரை பண்றேன்” என்று கவி குழந்தையை வாங்கிய சில நொடிகளில் அழுகை நின்றுவிட்டது.

“நல்லவேளை பாப்பா அழுகையை நிறுத்திட்டா,” என்று அந்தப் பணிப்பெண் ஆசுவாசமாகப் பெருமூச்சு விட்டாள்.

“சரி, நீ பாப்பாவுக்குச் சாப்பிட ஏதாச்சும் எடுத்துட்டு வா, நான் ஊட்டி விடுறேன்” என்றவள், “ஷ்ரே குட்டி, சாப்பிடலாமா?” என்று வேடிக்கை காட்டி ஊட்டியும் விட்டாள்.

அதன் பிறகும் அவளை விட்டு ஷ்ரேயா நகரவே இல்லை; அவளையும் நகர விடவில்லை. ஒரு வழியாக அவளை உறங்க வைத்துவிட்டு கவிதா கிளம்பும் சமயத்தில், “ஸ்ரீ சார் உங்ககிட்ட பேசணுமாம் மேடம்” என்று பணிப்பெண் போனை எடுத்துக்கொண்டு ஓடி வந்தாள்.

அந்த வார்த்தையைக் கேட்டதும் கவியின் கண்கள் மின்னின. “குழந்தையைப் பார்த்துக்கோ” என்று கூறிவிட்டு போனை வாங்கிக்கொண்டு வெளியே வந்தவள், “ஸ்ரீ... ஸ்ரீ...” என்று மட்டும் சொன்னாள். அதற்கு மேல் அவளுக்கு வார்த்தைகளே வரவில்லை.

“உன்னைப் பார்க்கணும்...” என்று அவன் சொல்லும் போதே மூச்சுச் சத்தம் அதிகமாகக் கேட்டது.

“நீ ரொம்ப ஸ்ட்ரெயின் பண்ணிக்காத... நான் கிளம்பிட்டேன், இதோ வந்துட்டே இருக்கேன்,” என்ற போதே ராஜேஷின் குரல் கேட்டது.

“அவனால ரொம்பப் பேச முடியாது... ஆனா இப்போ அவன் ஓகேதான்” என்று அவர் சொன்ன நொடி, அவள் பெருமூச்சுடன், “தேங்க் காட்! இப்பதான் எனக்கு மூச்சே வருது” என்றாள்.

“அமலா உன்கிட்ட அப்படிப் பேசுனதுக்கு ஐ ஆம் சோ சாரி,” என்று அவர் வருந்த,

“அவங்க நிலைமையில இருந்து பார்த்தா அந்தப் கோபம் நியாயமானதுதான்” என்றாள் கவிதா.

“நான் அதை ஒத்துக்க மாட்டேன். நீ அவ தம்பிக்குச் செஞ்சதை எல்லாம் மறந்துட்டு, அவ இப்படி நன்றிகெட்டத்தனமா உன்கிட்ட பேசியிருக்கக் கூடாது.”

“விடுங்க டாக்டர், பரவாயில்லை.”

“சரி ஓகே, நீ சீக்கிரமா கிளம்பி வா.”

“வர்றேன்... ஆனா டாக்டர், பாப்பா ‘அம்மா அம்மா’ன்னு அழுதுட்டே இருக்கா. பானுவால அவளைச் சமாளிக்கவே முடியல. நான் வேணா அவளைக் கூட்டிட்டு வரட்டுமா?”

“சரி, கூட்டிட்டு வா. நான் பக்கத்துல எங்கேயாவது தங்குறதுக்கு ஏற்பாடு பண்றேன்” என்று ராஜேஷ் சொன்னதுமே, அவள் பணிப்பெண்ணிடம் குழந்தையின் பொருட்களைப் பையில் அடுக்கித் தரச் சொன்னாள்.

அவர்கள் மருத்துவமனை வந்து சேர இரவாகிவிட்டது. கவிதா உள்ளே நுழைந்ததும், அவள் கையிலிருந்த ஷ்ரேயா நேராக அமலாவின் கைக்குத் தாவிவிட்டாள்.

“குட்டி அழுதுட்டீங்களா? சாரிடா” என்று மகளைச் சமாதானம் செய்த அமலா, கவிதாவையும் சங்கடத்துடன் ஏறிட்டு, “நான் உன்கிட்ட அப்படிப் பேசியிருக்கக் கூடாது, சாரி,” என்றாள்.

“அதெல்லாம் விடுங்க, பரவாயில்லை... இப்போ ஸ்ரீ எங்கே?”

“இன்னும் ஐ.சி.யு-லதான் இருக்கான்” என்று அந்தப் பிரிவைச் சுட்டிக்காட்ட, கவிதாவின் முகம் சோர்ந்து போனது. ராஜேஷ் அவளிடம் வந்து நிற்கவும், “ஸ்ரீயைப் பார்க்க முடியாதா?” என்று ஆவலாக கேட்டாள்.

“இப்போ முடியாதும்மா. ஆனா காலையில ரூமுக்கு மாத்திடுவாங்க, அப்போ போய்ப் பார்க்கலாம்.”

“ஸ்ரீ இப்போ எப்படி இருக்கான்?”

“ஓகேதான். லங்ஸ்ல இருந்த தண்ணியை எல்லாம் எடுத்துட்டாங்க. ஆக்சிஜன் லெவலும் நார்மல் ஆகிடுச்சு. காலையில அவன் இன்னும் பெட்டராகிடுவான்” என்று ராஜேஷ் சொன்னதைக் கேட்டு, அமைதியுடன் அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தாள்.

காலையிலிருந்த அவளின் மனப்போராட்டம் கொஞ்சம் அடங்கியிருந்தது. அப்படியே அந்த நாற்காலியில் அமர்ந்தபடி உறங்கியும் போனாள்.

ராஜேஷ்தான் அவளைத் தட்டி எழுப்பினார். “ரூமுக்கு மாத்திட்டாங்க, போய்ப் பார்க்கலாம்.”

அவள் அவசரமாக முகத்தைத் துடைத்துக்கொண்டு அறைக்குள் சென்றாள். அவன் படுக்கையில் சோர்வாகக் கிடந்தான். அவனை அப்படிப் பார்த்ததும் அவளுக்குத் தாங்கவில்லை.

“ஸ்ரீ...” என்றவள் ஆர்வமாக அவன் கையைப் பிடிக்கச் சென்றாள்.

“நீ கொஞ்ச நேரம் வெளியே இரு... நான் எங்க அக்கா, மாமாகிட்ட மட்டும் தனியாப் பேசணும்,” என்றான் ஸ்ரீ.

அவள் குழப்பத்துடன் அவனைப் பார்க்க, “கொஞ்ச நேரம் மட்டும்...” என்று அவன் அழுத்திச் சொல்லவும், கவிதா ஏமாற்றத்துடன் வெளியே வந்து அமர்ந்தாள்.

சில நிமிடங்களுக்குப் பிறகு வெளியே வந்த அமலா, அப்படியே நாற்காலியில் அமர்ந்து முகத்தை மூடிக்கொண்டு விம்மினாள்.

“அழாதே அம்மு, அவன் ஏதோ கோபத்துல பேசுறான்” என்று ராஜேஷ் சமாதானம் செய்ய, “அவனை நான் இன்னொரு அம்மா மாதிரிதானேங்க பார்த்துக்கிட்டேன்?” என்று சொல்லி அழுதாள் அமலா.

அவர்கள் அருகே வந்த கவிதா, “என்னாச்சு?” என்று மெதுவாகக் கேட்டாள். “நீ போய் அவன்கிட்ட பேசு கவிதா... பேசி அவனுக்குப் புரிய வை,” என்றார் ராஜேஷ்.

“என்ன புரிய வைக்கணும்?”

“அவன் அக்கா செஞ்சது எல்லாமே அவன் நல்லதுக்குத்தான்னு புரிய வை,” என்று ராஜேஷ் சொல்லவும், கவிதாவிற்கு ஓரளவுக்கு விஷயம் விளங்கியது.

கவிதா அறைக்குள் சென்றபோது, ஸ்ரீ ஜன்னல் கண்ணாடி வழியே எதையோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.

“ஸ்ரீ...” என்று அவன் கையைப் பிடித்த நொடி, அவன் பார்வை அவள் பக்கம் திரும்பியது. அவனது கண்களில் கண்ணீர் தேங்கி நின்றது.

“ஸ்ரீ...” என்று மீண்டும் அழைக்க, “பொய் சொல்லிட்ட இல்ல நீ?” என்றான் மெல்லிய குரலில்.

“உனக்குத் திரும்பவும் கேன்சர் வந்திருக்குன்னு சொன்னா நீ தாங்க மாட்டேன்னுதான்...” என்று அவள் முடிப்பதற்குள், “அந்தப் பொய் இல்ல” என்றான். அவள் முகம் வெளிறியது.

உடனடியாகத் தன்னைச் சமாளித்துக்கொண்டு அவன் அருகே அமர்ந்தாள். அவன் கைகளைத் தன் கைகளுக்குள் பொத்திக் கொண்டு, “உன்னோட கேன்சருக்கும் நம்ம காதலுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை,” என்றாள்.

“நிஜமாவா?” என்று அவன் ஆச்சரியத்துடன் கேட்க, “ஆமா ஸ்ரீ,” என்றாள்.

“அப்போ எங்க அக்கா உன்கிட்ட பேசவே இல்லையா?”

“ஸ்ரீ... நீ ஏதோ குழப்பத்துல இருக்க.”

“இல்ல, இப்பதான் நான் ரொம்பத் தெளிவா இருக்கேன். எனக்குத்தான் உன் மேல லவ் இருந்திருக்கு, ஆனா உனக்கு என் மேல இருந்தது வெறும் பரிதாபம்தான்!”

“போதும் நிறுத்துறியா, இப்போ உனக்கு என்ன தெரியணும்? உங்க அக்கா என்கிட்ட பேசுனாங்களா? ஆமா, பேசுனாங்க. உன்னை நினைச்சு நான் பரிதாபப்பட்டேனா? ஆமா, ரொம்ப... அதனாலதான் உன்கிட்ட ‘ஐ லவ் யூ’ சொன்னேனா? ஆமா, ஆரம்பத்துல அதனாலதான் சொன்னேன்,” என்று கவிதா சொல்லவும் ஸ்ரீ கண்கலங்கியது.

“அதைத்தானே நானும் சொன்னேன்...” என்றான்.

“வெயிட், நான் முழுசா சொல்லி முடிக்கல. எல்லா காதலுக்கும் ஒரு தொடக்கம் இருக்கும். ஆரம்பத்துல உன் மேல காதல் இல்லைதான். ஆனா நீ என்கிட்ட பழகப் பழக, அந்த உணர்வை நான் உணர ஆரம்பிச்சேன். அதுக்கப்புறம் நமக்குள்ள நடந்தது எதுவுமே பொய்யில்லை. I was completely into you... சத்தியமா இப்போ உன் மேல எனக்குப் பரிதாபம் இல்ல, என் மேலதான் இருக்கு. உன்னை நான் இழந்துடுவேனோன்னு நினைச்சு நான் எனக்காகப் பரிதாபப்படுறேன். ஏன் நாம முன்னாடியே லவ் பண்ணாம போனோம்னு என்னையே நான் திட்டிக்கிறேன்” என்று அவள் சொன்னதைக் கேட்டவன் நெகிழ்ந்து போனான்.

“ஐ ஆம் சாரி... நான் அப்படிச் சொல்லியிருக்கக் கூடாது” என்று கண்ணீருடன் அவள் கைகளில் முத்தமிட்டான்.

அவள் மெதுவாக, “உங்க அக்காவும் மாமாவும் செஞ்சதுல உன் மேல இருக்க அக்கறைதான் இருந்துச்சு. அவங்க மேல கோபப்படுறதுல நியாயம் இல்ல” என்றதும் அவன் எரிச்சலானான்.

“என் நல்லது சரி... உன் வாழ்க்கை? உன் வாழ்க்கையைப் பலி கொடுக்க அவங்களுக்கு யாரு உரிமை கொடுத்தா? செத்தாலும் நான் அவங்களை மன்னிக்க மாட்டேன்.”

“என் வாழ்க்கையை யாரும் பலி கொடுக்கல ஸ்ரீ.”

“சீரியஸ்லி? பாசம், அன்புன்னு சொல்லிட்டு சாகப் போற ஒருத்தன் வாழ்க்கையில உன்னைத் தள்ளிவிட்டிருக்காங்க. இதுக்கு ஓடுற ட்ரெயின்ல இருந்து உன்னைத் தள்ளிவிட்டிருந்தா ஒரே நிமிஷத்துல உயிர் போயிருக்கும். இப்போ நீ வாழ்க்கை முழுக்கவும்  எனக்காக அழணுமேடி. உனக்கு இதெல்லாம் தேவையா”

“என்ன பேசுற நீ? உன்னை நான் காதலிக்கலன்னா உனக்காக நான் அழ மாட்டேனா?”

“அது இவ்வளவு வலியா இருக்காது.”

“நீ ரொம்ப யோசிக்கிற ஸ்ரீ.”

“நீ என்ன சொன்னாலும் நான் அவங்களை மன்னிக்க மாட்டேன். இனிமே அவங்க என் கண் முன்னாடி...” என்று சொல்லும் போதே அவன் பேச முடியாமல் மூச்சு வாங்கினான்.  

“ஸ்ரீ ஸ்ரீ நீ ஓகே வா... நான் வேணா டாக்டரை கூப்பிடவா”

“என்னால மேல பேச முடியல,” என்று அவன் பின்னால் சாய்ந்து கண்களை மூடிக்கொள்ள, “ஓகே, ஓகே பேச வேண்டாம். நீ ரெஸ்ட் எடு,” என்று அவனது தலையணையைச் சரி செய்தாள்.

“அவங்களை இங்கிருந்து போகச் சொல்லு,” என்றான் ஸ்ரீ கண்களை மூடிக்கொண்டே.

“ஸ்ரீ...”

“போகச் சொல்லு, ப்ளீஸ்.”

அவள் வெளியே வந்து தயக்கத்துடன் அவன் சொன்னதைச் சொல்லவும், அமலா கணவனின் தோளில் சாய்ந்து, “அவன் என்னை மன்னிக்கவே மாட்டானா?” என்று தேம்பித் தேம்பி அழுதாள்.

“அப்படியெல்லாம் இல்லை, அவன் இப்போ கோபத்துல இருக்கான், அவ்வளவுதான். நான் திரும்பவும் பேசுறேன், நீங்க கவலைப்படாதீங்க,” என்று கவிதா ஆறுதல் சொன்னாள்.

“வேண்டாம் கவி. எங்களைப் பத்திப் பேசி அவனை நீ இன்னும் டென்ஷன் படுத்த வேண்டாம். அவனா மனசு மாறட்டும். நாங்க பக்கத்துல இருக்க ஹோட்டல்ல தங்குறோம். அவன் ஹெல்த் கண்டிஷனை மட்டும் அப்பப்போ மெசேஜ் பண்ணு” என்றார் ராஜேஷ்.

“இல்ல, நான் என் தம்பியை விட்டு வர மாட்டேன்,” என்று அமலா பிடிவாதமாகச் சொல்ல, “அமலா, நம்ம குழந்தையைப் பத்தி யோசி. அவ இன்னும் சாப்பிடக் கூட இல்ல,” என்று ராஜேஷ் சொன்னதும், கணவன் தோளில் சோர்வாகப் படுத்திருந்த மகளைப் பார்த்த அமலாவின் பிடிவாதம் தளர்ந்தது.

அவர்கள் கிளம்பியதை கவிதா பரிதாபத்துடன் பார்த்தாள்.

அடுத்த நாள் காலை, தண்ணீர் பிடித்து வருவதாக ஸ்ரீதரிடம் சொல்லிவிட்டு வெளியே வந்த கவிதா, ராஜேஷிடம் பேசினாள். “இன்னைக்கு இன்னும் பெட்டரா இருக்கான். ஆனா ஹாஸ்பிட்டல்ல இருக்க பிடிக்காம டிஸ்சார்ஜ் பண்ணச் சொல்லி அடம்பிடிக்கிறான்,” என்றாள்.

“இந்த நிலைமையில எப்படி டிஸ்சார்ஜ் பண்ண முடியும்?”

“வீட்டுல இருந்தே பார்த்துக்கிற மாதிரி ஏற்பாடு பண்ண முடியாதா?”

“நான் கூட இருந்தா பரவாயில்லை... ஆனா என்னையும் அமலாவையும் வர வேண்டாம்னு சொல்றானே?”

“எனக்குப் புரியுது, ஆனா ஸ்ரீயை என்னால சமாளிக்க முடியல.”

“சரி, நான் அங்கே இருக்க டாக்டர்கிட்ட பேசிட்டு சொல்றேன்,” என்று ராஜேஷ் கூறிவிட்டுச் சென்றார்.

கவிதா அறைக்குத் திரும்பிய போது, அங்கே ரஞ்சன் நின்றிருந்தான். அவளைப் பார்த்ததுமே கோபம் உச்சத்தைத் தொட, “உனக்கு இங்க என்ன வேலை? ஒழுங்கா வெளியே போடா” என்று கத்தினாள்.

அதே சமயம் பின்னோடு வந்த அஜய், “கவிதா” என்று அழைத்தான்.

“ஓ... சார்தான் போய் ஜாமீன்ல எடுத்துட்டு வந்ததா?” என்று அவனிடம் சீறினாள்.

“இல்ல, நான் ஜாமீன்ல எடுக்கல” என்றான் அஜய்.

“அப்புறம் யார் எடுத்தது? இவன் தாத்தாவா?” என்று கவிதா கேட்க, “நான்தான்” என்றான் ஸ்ரீ.

அவள் அதிர்ந்து திரும்ப, “நான்தான் என் வக்கீல்கிட்ட பேசி ரஞ்சனை வெளியே எடுக்கச் சொன்னேன்,” என்றான் ஸ்ரீ படுக்கையில் இருந்தபடியே.

“எதுக்கு?” என்றாள் கவிதா.

“கொலை முயற்சி கேஸா? சீரியஸ்லி...எங்க அக்காவுக்குத்தான் அறிவு இல்லைன்னா, உனக்குமா?” என்று ஸ்ரீ கேட்க, இடையில் ரஞ்சன் பேசினான்.

“இல்ல இது எல்லாமே என்னோட தப்பு. என்னோட முட்டாள்தனம். கவிதா போகச் சொல்லும் போதே நான் போயிருந்தா இது எதுவுமே நடந்திருக்காது.”

“அப்படியெல்லாம் இல்லை, இது எப்ப வேணா நடந்திருக்கலாம்,” என்றான் ஸ்ரீ.

“ஆனா இது என்னோட தப்புதான், ஐ ஆம் சாரி ஸ்ரீதர்” என்ற ரஞ்சனின் பார்வை கவிதாவின் முகத்தைத் தவிப்புடன் பார்த்தது.

கடுப்பான கவிதா, “மன்னிப்பு கேட்டாச்சு இல்ல? கிளம்பு” என்றாள்.

“நான் கிளம்புறேன்,” என்ற ரஞ்சனைத் தடுத்து, “ஒரு நிமிஷம், நான் கொஞ்சம் பேசணும்,” என்றான் ஸ்ரீ.

“நோ வே! நீ அதிகமாப் பேசக் கூடாதுன்னு டாக்டர் சொல்லியிருக்காரு” என்று கவிதா கண்டிப்புடன் சொல்ல,

“ஏன், அதிகமாப் பேசுனா இன்னைக்கே செத்துடுவேனா?”

“ஸ்ரீ!”

“நான் பேசணும் கவி,” என்றதும் அவள் பல்லைக் கடித்தபடி, "சரி” என்று சம்மதித்தாள்.

“சரின்னு சொல்லிட்டு இங்கேயே நிற்கிற?”

“வேற எங்கே நிற்கணும்”

“கொஞ்ச நேரம் வெளியே இரு, நான் ரஞ்சன்கிட்ட தனியாப் பேசணும்.”

“முடியவே முடியாது?” என்று அவள் பிடிவாதமாக மறுக்க, அஜய் அவளை இடைமறித்து, “தனியாப் பேசணும்னா பேசிட்டுப் போறாங்க விடு... நீ என் கூட வா, நான் உன்கிட்ட கொஞ்சம் பேசணும்,” என்று கையைப் பிடித்து வெளியே இழுத்து வந்தான்.

அறைக்கு வெளியே வந்ததும் அவன் கையை உதறிவிட்ட கவிதா, “அவங்க ரெண்டு பேரும் தனியாப் பேசிக்க என்னடா இருக்கு?” என்றாள்.

“எனக்கு என்ன தெரியும்? அதை உன் ஹஸ்பெண்ட்கிட்டயும் லவ்வர்கிட்டயும்தான் கேட்கணும்,” என்றான் அஜய். அவள் உக்கிரமாக முறைத்தவள், “இது ஹாஸ்பிட்டல்ங்கிற ஒரே காரணத்துனாலதான் நான்உன்னை சும்மா விடுறேன்... இல்லன்னு வைச்சுக்கோ”

“நானும் இது ஹாஸ்பிட்டல்ங்கிற காரணத்துனாலதான் உன்கிட்ட பொறுமையா பேசிட்டு இருக்கேன்” என்று அஜய் பதிலுக்கு சீறினான்.

“நான் என்ன பண்ணேன்?” என்று அவள் புருவத்தை நெறித்தாள்.

“பின்ன என்னடி? ரஞ்சன் அடிச்சதுனாலதான் ஸ்ரீ ஹாஸ்பிட்டல்ல இருக்கான்னு என்கிட்ட பொய் சொன்ன? ஸ்ரீக்கு ஆல்ரெடி கேன்சர் இருந்த விஷயத்தை ஒரு தடவை கூட நீ சொல்லலையே?”

“சொல்லி என்ன ஆகப் போகுது?” என்று அலட்சியமாக சொல்லியபடி அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தாள் கவிதா.

“அப்போ ரஞ்சன் மேல கொலை கேஸ் போட்டு ஜெயில்ல தள்ளுறதுதான் உன் திட்டமா?”

“அந்தத் திட்டம் என்னோடது இல்ல, ஸ்ரீ அக்காவோடது. ஆனா அவனுக்கு அது தேவைதான். ஹி டிசர்வ் தட்”

“கவி!”

“அவன் ஜெயிலுக்குப் போக வேண்டியவன்தான்,” என்று அவள் சொல்ல, “முதல்ல இதைப் பார்த்துட்டுப் பேசு,” என்று தான் வைத்திருந்த ஆங்கில நாளிதழை அவளிடம் நீட்டினான் அஜய்.

அதன் அட்டைப் படத்தைப் பார்த்த கவிதா திகைத்துப் போனாள். இந்தியாவின் பிரபலமான அந்தப் பத்திரிகையின் அட்டைப் படத்தில் ரஞ்சனின் புகைப்படம் இருந்தது. அதன் மேலே ‘யங்கஸ்ட் பிசினஸ் மேன் ஆஃப் தி இயர்: ரஞ்சன் கவிதா’ என்று தலைப்பிடப்பட்டிருந்தது.

“நேத்துதான் இந்த மேகசின் பப்ளிஷ் ஆகியிருக்கு. இந்த நேரத்துல அவன் ஜெயில்ல இருந்தா என்ன நடக்கும்னு யோசிச்சியா? கவி வியர்ஸ் ஆரம்பிச்சது நீயா இருக்கலாம், ஆனா இன்னைக்கு அதோட அடையாளம் இந்த ரஞ்சன் அதாவது இந்த ரஞ்சன் கவிதா. நேத்து மட்டும் நாலு நேஷனல் சேனல் இவனோட இன்டர்வியூ கேட்டு கால் பண்ணிருக்காங்க. அவன் ஜெயில்ல இருக்கான்னு சின்ன நியூஸ் கசிஞ்சா கூட என்ன நடக்கும்னு யோசிச்சுப் பாரு,” என்றான் அஜய்.

அவன் பேசி முடிக்கும் வரை அமைதியாக இருந்தவள், “நான் ஏன் யோசிக்கணும்? எனக்கும் இந்த விஷயத்துக்கும் என்ன சம்பந்தம்?” என்றாள்.

“நீ இப்படித்தான் சொல்லுவேன்னு எனக்குத் தெரியும். அதனாலதான் நான் ஸ்ரீகிட்ட பேசுனேன்,” என்று அஜய் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, ரஞ்சன் அறையை விட்டு வெளியே வந்தான்.

அந்த நொடியே எழுந்து நின்ற கவிதா தன் கையிலிருந்த பத்திரிக்கையை நாற்காலியின் மீது விசிறினாள்.

அஜய் ஏதோ பேச வர, கையை காட்டி தடுத்தவள், “எப்படியோ உன் கம்பெனி எம்.டி-யோட கௌரவத்தைக் காப்பாத்திட்ட இல்ல, கிளம்பு” என்று ரஞ்சனை முறைத்தபடியே கடந்து உள்ளே சென்றாள்.

You cannot copy content