You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

மதிப்புக்குரியவள் - அத்தியாயம் 25

Quote

அத்தியாயம் – 25

“ஐ கான்ட் இமேஜின் மை லைஃப் வித்தவுட் யூ பேபி...” முகமெல்லாம் புன்னகை விரிய ஸ்ரீதர் ஒரு பெரிய பூங்கொத்தை நீட்டிக் கொண்டிருந்தான்.

கவிதாவின் கைகள் அதை வாங்கத் துடித்தன. காதலைச் சொல்ல நினைத்தாள். ஆனால், முடியவில்லை. ஏதோ ஒரு கண்ணுக்குத் தெரியாத பாரம் அவளை அழுத்தி, உடல் மரத்துப் போய் உறைந்து நின்றாள்.

“கவிதா... கவிதா...” யாரோ அவளைத் தூரத்திலிருந்து அழைத்துக் கொண்டே இருந்தார்கள்.

மீண்டும் ஸ்ரீதரின் குரல் ஒலிக்கத் தொடங்கியது, ஆனால் இம்முறை அதில் ஆழமான வலி இருந்தது. “எனக்குத்தான் உன் மேல லவ் இருந்திருக்கு கவி... ஆனா உனக்கு என் மேல இருந்தது வெறும் பரிதாபம்தான், இல்லையா?”

‘இல்ல ஸ்ரீ... அப்படியில்லை...’ அவள் சொல்ல முயன்றாள். ஆனால் உதடுகள் அசைய மறுத்தன. கனத்த இருள் சூழ்ந்தது. 

“கவிதா”

கண்களைத் திறக்கக் கூடத் தெம்பில்லை. அவள் உடல் எங்கோ அந்தரத்தில் கழன்று மிதப்பதைப் போல ஒரு பிரமை. பசை போட்டு ஒட்டியது போல உதடுகள் இறுகிக் கொண்டன. சுற்றிலும் பல குரல்கள், எதற்குப் பதில் சொல்வது என்று புரியாமல் தவித்தாள்.

மீண்டும் ஸ்ரீதரின் குரல் மிக அருகில்... அவள் காது மடலில் உரசியபடி, “உன் மனசு ரஞ்சனைத்தான் காதலிக்கிறதா சொல்லுது, இல்லையா கவி?”

அதிர்ந்து விழித்தாள்!

இரு கரங்கள் அவளைத் தாங்கிப் பிடித்திருந்தன. மெதுவாகப் படுக்கையில் கிடத்தின. அவள் கண்கள் முழுமையாகத் திறக்க, மிக அருகில் ஸ்ரீதரின் முகம்.

“ஸ்ரீ....” என்று கதறியபடி அவன் கன்னத்தை வருட, “நான் ஸ்ரீ இல்லை...” என்றவன் அவளுடைய கைகளைத் தன் கன்னத்திலிருந்து எடுத்துவிட்டான்.

அவள் கேட்காமல், “என்னை விட்டுப் போயிடாதடா... ப்ளீஸ்” என்று குழந்தையாய் அவனைக் கட்டிக்கொண்டு கெஞ்சினாள்.

அவன் பதறி விலகிய போதும் அவள் விடவில்லை. “என்னை விட்டுப் போயிடாத” என்று இன்னும் இறுக்கமாக அணைத்துப் பிடித்தாள். ரஞ்சன் அப்படியே உறைந்து போய் நின்றான்.

மருத்துவமனையில் ஸ்ரீதரின் உடலைப் பார்க்க மனமில்லாமல், அந்தச் சூழலை எதிர்கொள்ளத் தைரியமில்லாமல் வெளியே ஓடி வந்தவளை, அவன்தான் தடுத்துப் பிடித்துக் காரில் ஏற்றினான்.

“நீ அவளைக் கூட்டிட்டுப் போ ரஞ்சன்” என்று அஜய் சொல்ல, “எங்கே கூட்டிட்டுப் போறது?” என்று கேட்டான்.

“உன் வீட்டுக்கே கூட்டிட்டுப் போ... அந்தப் பழைய பங்களாவுக்குப் போனா அவளுக்கு இன்னும் கஷ்டமா இருக்கும். அங்கே இருந்தா அவளால இந்த அதிர்ச்சியில இருந்து மீள முடியாது” என்று அஜய் சொன்னதுதான் சரி என்று பட்டது.

வீட்டிற்கு வந்தபோது அவள் சுயநினைவிலேயே இல்லை. காவலாளிகளை உதவிக்கு அழைத்து, வீட்டைத் திறக்கச் செய்தான். மயக்க நிலையில் இருந்தவளைத் தூக்கி வந்து தன் படுக்கையில் கிடத்திய அந்த விநாடியில் தான் அவள் விழித்துக் கொண்டாள்.

“ஸ்ரீ... என்னை விட்டுப் போயிடாத” என்று இன்னும் அவனை அணைத்தபடி நின்றாள். அதுவும் மிக நெருக்கமாக... முதல் முறையாக அவளது அந்தத் தீண்டலும், நெருக்கமும் அவனுக்கு நெருப்பின் மீது அமர்ந்திருப்பது போல இருந்தது.

அவளுக்கு எப்படி உண்மை சொல்வதென்று அவனுக்கு புரியவில்லை.  

தவிப்புடன் அவளை விலக்கியவன், “நிதானமாப் பாரு. நான் ஸ்ரீ இல்லை... ரஞ்சன்” என்று சொன்னான்.

அவன் முகத்தைப் பார்த்தாள். ஆமாம், அது ரஞ்சன் தான். சட்டென்று தன் கைகளை விலக்கிக் கொண்டவள், கால்களை மடக்கிப் படுக்கையின் மூலைக்குப் பின்னோக்கி நகர்ந்து கொண்டாள்.

“கார்ல வரும்போது நீங்க மயங்கிட்டீங்க... அதான் நான் தூக்கிட்டு வந்தேன்” என்று அவன் சொன்னது எதுவுமே அவள் காதில் விழவில்லை. அவனது குரல் எங்கோ தூரத்திலிருந்து கேட்பது போலிருந்தது.

“கவிதா...” ரஞ்சன் அவளருகே அமர்ந்தான்.

அவள் மெதுவாக நிமிர்ந்து, “ஸ்ரீ செத்துட்டான் இல்ல?” என்று கேட்டாள். அந்த வாக்கியத்தில் துளிக் கூட உயிர் இல்லை.

அவன் கண்ணீருடன் மெளனமாகத் தலையசைத்தான். ஆனால் அவள் அழவில்லை. ஒரு நீண்ட பெருமூச்சுடன் அப்படியே வெறித்துப் பார்த்தபடி சாய்ந்து உட்கார்ந்தாள்.

சற்று நேரத்தில் அஜய் மருத்துவமனையிலிருந்து அழைத்தான்.

“கவி எப்படி இருக்கா?”

“அப்படியே சிலை மாதிரி உட்கார்ந்துட்டு இருக்காங்க அண்ணா... அழக்கூட இல்ல. அதுதான் பயமா இருக்கு.”

“இங்கே ஸ்ரீதரோட உடம்பை கொடைக்கானல் எடுத்துட்டுப் போகப் போறாங்க.”

“ஓ...”

“கவிகிட்ட விஷயத்தைச் சொல்லு.”

ரஞ்சன் செல்பேசியை அவளிடம் நீட்டினான். “அஜய் லைன்ல இருக்கான்...”

“என்ன?” என்று மட்டும் கேட்டாள்.

“ஸ்ரீதர் உடம்பை கொடைக்கானல் கொண்டு போறாங்களாம்...”

“ம்ம்ம்.”

“நம்ம அங்கே போக வேண்டாமா?”

“எதுக்கு?”

“நீ ஸ்ரீயோட முகத்தைக் கடைசியா ஒரு தடவை...”

“உயிரில்லாத அந்த உடம்பைப் பார்த்து நான் என்ன பண்ணப் போறேன்?” என்று சொல்லிவிட்டு அதற்கு மேல் பேசத் தயாராக இல்லை என்பதைப் போலத் தலையைத் திருப்பிக் கொண்டாள்.

ரஞ்சன் மீண்டும் அஜயிடம் பேசினான்.

“என்னதான்டா ஆச்சு அவளுக்கு? கடைசி நிமிஷத்துல அவன் பேசணும்னு கூப்பிட்டப்போவும் வரமாட்டேன்னு சொல்லிட்டா... இப்போவும் இப்படியா? பிடிவாதத்துக்கும் ஒரு அளவு வேண்டாமா?” என்று அஜய் குமுறினான்.

“அவங்களுக்கு விருப்பம் இல்லைன்னா விட்ருவோம் அண்ணா... அவங்க மனநிலை இப்போ சரியில்லை” என்று ரஞ்சன் அஜயைச் சமாதானப்படுத்தினான்.

“சரி, அப்போ நான் கிளம்புறேன். ஃபிரண்ட்ஸ் குரூப்ல விஷயம் சொல்லணும்... என்னன்னு மெசேஜ் போடுறதுன்னே தெரியலடா” என்று புலம்பியபடி அழைப்பைத் துண்டித்தான் அஜய்.

அடுத்த இரண்டு நாட்கள்... கவிதா அந்த அறையை விட்டு வெளியே வரவில்லை. உணவும் எடுத்துக் கொள்ளவில்லை. வெறும் தண்ணீரும், கொஞ்சம் பழச்சாறும் மட்டுமே குடித்தாள்.

மூன்றாம் நாள் மாலை, அவள் பால்கனியில் நின்றிருப்பதைப் பார்த்த ரஞ்சன் சற்று நிம்மதியடைந்தான்.

“டீ எடுத்துட்டு வரவா கவிதா?” என்று அவன் கேட்ட கேள்விக்கு அவளிடமிருந்து பதில் இல்லை.

வெளியே காற்று பலமாக வீசியது. சாலைகளில் வாகனங்களின் இரைச்சல், மனிதர்களின் பரபரப்பான நடமாட்டம்... உலகம் அதன் போக்கில் சுழன்று கொண்டிருந்தது. ஆனால் அவளுக்குள் மட்டும் எதுவுமே நகரவில்லை. காலம் அப்படியே உறைந்து நின்றது.

“கவிதா...” என்று மீண்டும் அழைத்தான்.

அவள் மெதுவாகத் திரும்பினாள். இப்போதுதான் அந்த வீட்டை முழுமையாகப் பார்த்தாள்.

“நான் எப்போ இங்கே வந்தேன்?”

“இரண்டு நாளா நீங்க இங்கதான் இருக்கீங்க.”

“அப்படியா?” அவள் பார்வை அந்த அறையைச் சுற்றிச் சுழன்றது. எதுவுமே மாறவில்லை. அவள் பயன்படுத்திய அதே அறை, அதே பொருட்கள்.

“என் டிரஸ்... மத்த திங்ஸ் எல்லாம் எங்க?”

“இங்கேயே கொண்டு வர சொல்லிட்டேன்... எல்லாம் உங்க ரூம்லதான் இருக்கு.”

“ம்ம்ம்.”

“ஒருவேளை... உங்களுக்கு இங்க இருக்கப் பிடிக்கலைன்னா சொல்லுங்க, வேற ஏதாவது ஏற்பாடு பண்றேன்” என்று தயக்கத்துடன் அவளைப் பார்த்தான்.

இரண்டு நாட்களாகத் தான் அவனுடன்தான் தங்கியிருக்கிறோம் என்பது அவளுக்கு அப்போதுதான் உறைத்தது.

“வேற எங்கயாச்சும் தங்குறதுக்கு அரேஞ்ச் பண்ணட்டுமா?” என்று அவன் மீண்டும் கேட்டான்.

‘கோபம்கூட ஒரு வகை கேன்சர் மாதிரிதான் கவி... அது உன்னை உள்ளுக்குள்ளேயே அரிச்சுடும்’ என்ற ஸ்ரீதரின் பழைய வாக்கியம் அவள் நினைவுக்கு வந்தது.

“இங்கேயே இருக்கேன்” என்றவள் சம்மதித்தது அவனுக்குப் பெரிய வியப்பை அளித்தது.

அவன் மென்மையாக, “இரண்டு நாளா நீங்க சரியா சாப்பிடல... கொஞ்சம் டீயாவது குடிங்க. இல்லன்னா டிபன் ஏதாவது கொண்டு வரட்டுமா?” என்று கேட்டான்.

“ம்ம்ம்... குளிச்சுட்டு வந்து சாப்பிடுறேன்” என்றவள், குளித்து முடித்து வந்து அவன் கொடுத்த உணவை அமைதியாகச் சாப்பிட்டாள்.

அன்று மாலை அஜய் வந்தான்.

“கவி எப்படி இருக்கா?”

“இன்னைக்குதான் கொஞ்சம் தெளிவா இருக்காங்க அண்ணா. இப்போதான் சாப்பிட்டாங்க.”

“இப்போ எங்க இருக்கா?”

ரஞ்சன் அவள் அறையைக் காட்டினான். கவிதா மடிக்கணினியுடன் கட்டிலில் அமர்ந்திருந்தாள்.

அஜயைப் பார்த்ததும், “வா அஜய்” என்று இயல்பாக அழைத்தாள்.

‘நல்ல வேளை, கொஞ்சம் தேறியிருக்கா’ என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டவன், “லேப்டாப்ல என்ன பண்ணிட்டு இருக்க?” என்று கேட்டான்.

“டிக்கெட் புக் பண்ணிட்டு இருக்கேன்.”

“எங்கே போக?”

“நியூயார்க்.”

“எதுக்கு”

“என் ஆபீஸ், வீடு எல்லாம் அங்கேதான் இருக்கு. எனக்கு அங்கே நிறைய வேலை இருக்கு.”

அஜய் சட்டென்று கோபமடைந்தான். “இப்போ எதுக்கு நீ நியூயார்க் போகணும்? இங்க என்ன குறை?”

“எனக்கு இங்க இருக்கத் தோணல.”

“நீ எங்கேயும் போகல, இந்த மாதிரி ஒரு மனநிலையில உன்னைத் தனியா அனுப்ப எனக்கு இஷ்டம் இல்லை” என்று சொன்ன அஜய், அவளிடமிருந்து மடிக்கணினியைப் பிடுங்கி வைத்துக் கொண்டான்.

“லேப்டாப் கொடு அஜய்... எனக்கு வேலை இருக்கு.”

“முடியாது” என்று அஜய் அறையை விட்டு வெளியேறினான்.

“என்னை வற்புறுத்தாத அஜய்” என்றாள்.

அவர்கள் பேசுவதைக் கேட்டு உள்ளே வந்த ரஞ்சன், சூழலைப் புரிந்து கொண்டு, “அஜய் அண்ணா சொல்றதைக் கேளுங்க கவிதா... ப்ளீஸ் போகாதீங்க. கவி வியர்ஸ் இனிமே நீங்களே முழுசாப் பார்த்துக்கோங்க. நான் எதிலும் தலையிட மாட்டேன்.” என்றான்.

அஜய்யும் விடாமல், “அதான் ரஞ்சனே சொல்றான் இல்ல... அவன் விலகிக்கிறான்னு. நீ இங்கேயே இரு”

ரஞ்சன் மீண்டும், “நீங்க கேட்ட மாதிரி டைவர்ஸ் நோட்டீஸ்ல சைன் போட்டு தந்துடுறேன். உங்க வாழ்க்கையில இருந்தும் மொத்தமா விலகிக்கிறேன்” என்ற போது அவன் குரல் உடைந்தது. இருப்பினும் விடாமல் கெஞ்சினான்.

“ஆனா ப்ளீஸ், போகாதீங்க”

 கவிதா சோர்ந்து போய் சோபாவில் அமர்ந்தாள்.

அவர்களை நிமிர்ந்து பார்த்த அவளது விழிகள் வறண்டு போயிருந்தன.

 “ப்ளீஸ்... என்னை போக விடுங்க.” மிகவும் மெலிந்த குரலில் சொன்னாள். அந்தக் குரலில் கோபமில்லை, அழுகையில்லை, பிடிவாதமும் இல்லை. சொல்லப்போனால் எந்த உணர்ச்சியுமே இல்லை.

 “நாங்க இவ்வளவு தூரம் சொல்லியும் நீ கேட்க மாட்டேங்கிற...” என்று கடுக்கெனப் பேசத் தொடங்கிய அஜயின் தோளில் ரஞ்சன் கை வைத்து அழுத்தினான்.

“விட்டுருங்க அண்ணா...”

“என்னடா சொல்ற... இவளை இப்படித் தனியாகிடக் கூடாதுன்னு தானே ஸ்ரீதர் அவ்வளவு தூரம் போராடினான்?”

“சில நேரங்கள்ல தனிமைதான் சிறந்த மருந்து அண்ணா... அவங்க விருப்பப்படியே போகட்டும். அவங்க மனசு எப்போ அமைதி அடையுதோ, அப்போ அவங்களே திரும்பி வருவாங்க” என்று ரஞ்சன் சொன்னபோது, கவிதா அவனை முதல் முறையாக ஒருவித நன்றியுணர்வுடன் பார்த்தாள்.

அஜய் விரக்தியில் தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்துவிட்டான்

 

 

 

shanbagavalli has reacted to this post.
shanbagavalli

You cannot copy content