You don't have javascript enabled
Romance

Sivaranjani’s Avanum Nanum

சிவரஞ்சனியின் சிறுகதை

அவனும் நானும்

நான் ஜனனி, இப்போதுதான் ஷூட்டிங் முடிந்து இல்லம் திரும்புகிறேன். நான் தனியாகச் செல்கிறேன் என்னுடன் துணைக்கு வாருங்கள். ஷூட்டிங் என்றதும் சினிமா என்று எண்ணிவிட வேண்டாம். சூப்பர் சிங்கர் ஷூட்டிங்.

அதில் நான் ஒரு போட்டியாளர். இன்று அரை இறுதிச் சுற்றிற்குத் தேர்வாகி பலத்த கரகோஷங்களையும், நடுவர்கள் மற்றும் சிறப்பு விருந்தினராக வந்திருந்த இசையமைப்பாளரின் அளவில்லா பாராட்டுதல்களையும் அள்ளிச் சுமந்தபடி வந்துக் கொண்டிருக்கிறேன்.

ஆனால் என் மனத்திலோ துளியும் மகிழ்வில்லை. இன்னும் சொல்லப் போனால், இந்த மகிழ்வில்லாத மனம்தான் அந்த சோகப் பாட்டினை மனமுருகி பாட வைத்து வெற்றியையும் பெற்றுத் தந்தது.

இதோ என் இல்லம் வந்துவிட்டது.வீட்டைத் திறந்ததும் இருளைவிட அதிகமாக இருள் பூசிக்கொள்கிறது என் மருகும் மனம். நான் தனிமையையும், துயரையும் துண்டாட நினைத்து ஏதேதோ செய்கிறேன்.ஆனால் வெறுமை என்னை வென்றாடி என் தலையில் அமர்ந்து அதைக் கொண்டாடுகிறது.

நேரம் இப்போது இரவு 11.00.நித்திரையைத் தழுவச் சொல்லி,என் கண்களிடம் கெஞ்சினேன். ஆனால் மனதில் நிரம்பி வழியும் அவனது நினைவுகள் மிஞ்சி கண்களை கண்ணீரே தழுவுகிறது.

அடடே அன்பர்களே! இன்று நீங்கள் உள்ளீர்கள்! என் கதையைக் கேளுங்கள்! உங்களுக்கும் பொழுது போகும். எனக்கும் ஆறுதல் கிட்டும்.

சென்னை மாநகரம்! என் வாழ்வை கட்டமைத்தத்தில் என் பெற்றோருக்கு அடுத்த நிலையில் சென்னையே உள்ளது. தமிழ் நாட்டின் மேற்கு பகுதியிலுள்ள ஒரு சிறு ஊரில் பிறந்து வளர்ந்த நான், ஆரம்ப காலங்களில் சென்னையைப் பார்த்து பயந்திருக்கிறேன். சற்றே பதட்டம் கொண்டிருக்கிறேன். ஆனால் சென்னை எனக்கு எத்தனையோ அற்புதங்களை அள்ளித் தந்தது. அதில் அவனும் ஒன்று.

என் ஊர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஒரு சிற்றூர். அப்பா சிறுதொழில் செய்து வருகிறார். அம்மா இல்லத்தரசி. தற்போதுள்ள பெண்களின் தன்னம்பிக்கை, சுயசார்பு போன்ற சிந்தனைகளெல்லாம் எங்கள் குடும்பத்தில் இல்லை என்றே சொல்ல வேண்டும்.

அவர்கள் அன்பானவர்களே! ஆனால் பெண்களை சுயசார்புடன் வாழ வைப்பதைவிட அவர்களை பாதுகாப்பதில்தான் அதிக அக்கறை செலுத்துவார்கள்.

எந்த ஒரு மிகச்சிறு பிரச்சினையிலும் சிக்கிவிடக் கூடாது. யார் வாயிலும் விழக்கூடாது. இத்தகையதாகத்தான் இருக்கும் அவர்களின் சிந்தனை.சற்றே பிற்போக்குத்தனமாகத் தோன்றலாம்.அதிகம் வெளியில் பார்க்காத அவர்களின் சுருங்கிய அனுபவமே அதன் காரணம்.

என்னைப் படிக்க வைத்ததே கூட நல்ல மாப்பிள்ளை தேட மட்டுமே.கேம்பஸ் இன்டெர்வியூவில்,ஒரு நல்ல கம்பெனியில் வேலை கிடைத்தும் கூட,சென்னையில் பிளேஸ்மென்ட் என்றதும் மறுத்துவிட்டனர் என் பெற்றொர்.

என் தாய்மாமா சென்னைக்கு அருகில் உள்ள ஸ்ரீபெரும்புதூரில் வசிக்கிறார். அவர்தான் என் பெற்றோரிடம் கெஞ்சி மிஞ்சி,தான் பார்த்துக்கொள்வதாக வாக்குறுதி அளித்து என்னை வேலையில் சேர வைத்தார்.

3 மாதங்கள் ட்ரைனிங். துரைப்பாக்கத்தில் உள்ள அந்த கம்பெனியின் அகாடமியில் போட்டிருந்தனர். ஒரு பிஜி பார்த்து, சகலமும் விசாரித்து,என் பெற்றோர், தாத்தா பாட்டி ,மாமா, அத்தை என்று குடும்பமே புடை சூழ வந்து அந்த பிஜி நிர்வாகிகளை ஒரு மாதிரியாகப் பார்க்க வைத்து, எனக்கு தேவையானவற்றை செய்து கொடுத்துவிட்டு, அள்ளி அள்ளி அட்வைஸ் தெளித்துவிட்டு, ஆழமான அக்கறையுடனும், ஆற்றமாட்டா துயருடனும், சிறு கண்ணீருடன் விடை பெற்றனர் என் பெற்றோர்.

அதுவரை நான் போட்டிருந்த தைரிய முகமூடி சுக்குநூறாக உடைந்தது. என்னைச் சுற்றி இருந்தது கான்க்ரீட் காடுகள்தான் எனினும் அத்துவானக்காடு போல் தோற்றமளித்தது.

சுற்றி இருந்த மனிதர்களும் அவ்வளவு ஏன்…

என் கல்லூரியிலேயே என்னுடன் படித்து என்னுடன் தேர்வாகி,என்னோடு தங்க இருக்கும் தோழிகளே கூட எனக்கு வேற்று கிரக மனிதர்களைப்போல் அந்நியமாகத் தோன்றினார்கள். கைபேசி என்ற பெயரில் கையில் உலகம் இருந்தாலும், நான் நிலவில் தனித்து விட்டதைப்போல் உணர்ந்தேன். அனைத்தையும் தூக்கி எறிந்துவிட்டு ஓடிச் சென்று அன்னையைக் கட்டிக்கொள்ளத் தோன்றியது சில கணங்கள்.

பின்பு சுதாரித்துக்கொண்டு வேலையில் மூழ்கினேன்.அன்றிரவு அழுது தீர்த்தேன்.அதில் சற்று தெளிந்திருந்தேன்.பின்னர் என் மொத்த கவனத்தையும் வேலையில் திருப்பினேன். அதுவரையில் என் பெற்றோர் இல்லாமல் எங்கும் பயணப்படாத நான்,என் தோழிகளுடன் ஊருக்குச் சென்று வர பழகினேன்.சற்றே தன்னம்பிக்கை வளர்ந்தது.

ட்ரைனிங் முடிந்து அன்று என் மாமா வீட்டிற்குச் செல்வதாக உத்தேசம். அன்று ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் நடு வழியில் பேருந்து கிடைக்காமல் மாட்டிக்கொண்டேன். என் கைபேசியும் அணைந்துவிட்டிருந்தது. நேரம் இரவு 9 மணி.

என் வீட்டில் இச்சூழல் கேள்வியுற்று பதறுவார்கள் என்று ஒரு புறம், எவ்வாறு வீடு திரும்புவது என்று ஒரு புறம், அணைந்துவிட்ட கைபேசி ஒருபுறம் என்று வாட்ட, அழுதுவிடுவேன் என்பதுபோல் நின்றிருந்தேன்.

 கடவுளே! உனக்கு என் மீது கருணையே இல்லையா? என்று மனதில் பினாற்றிக்கொண்டிருந்தேன்.என் மீது கொண்டிருந்த கருணையால்தான் அச்சூழல் என்று பின்னாளில் புரிந்தது.

என் அருகில் நின்றிருந்தவனிடம் கைபேசி கேட்டேன்,ஒரே ஒரு கால் பேசிவிட்டுத்தருவாதாகக் கூறி. என் மாமாவிற்கு அழைத்து அங்கு வந்து அழைத்துச் செல்லுமாறு கேட்க,அவரோ ஏதோ வேலையாக வேலூர் சென்றுவிட்டு இப்போதுதான் திரும்பி வந்து கொண்டிருப்பதாக கூறினார்.

விரைந்து வந்து அழைத்துச் செல்வதாகவும்,அதுவரை பாதுகாப்பாக இருக்குமாறும்,ஏதேனும் வழி கிடைத்தால் இல்லம் செல்லுமாறும் கூறினார். என் பெற்றோரிடமும் பேசிவிடுமாறு கூறி வைத்துவிட்டேன்.

கண்களில் கண்ணீர் எட்டிப்பார்க்க எத்தனித்துக் கொண்டிருந்தது. அதனை அவன் கவனித்துவிட்டான் போலும்,அவன் கைபேசியை திருப்பித்தந்த நொடியில்.

“இப் யூ டோண்ட் மைண்ட்,நீங்க எங்க போகணும்னு சொல்றீங்களா? என்னால முடிஞ்சா ஏதாவது ஐடியா சொல்றேன்” என்று வினவினான்.

“இட்ஸ் ஓகே.தேங்க்ஸ்.ஐ வில் டேக் கேர்” என்று மறுத்தேன். அவனும் விட்டுவிட்டான். சற்று நேரத்தில் சிறிது மழை குறைய அவன் கிளம்ப முற்பட்டான்.

அப்போது ஒரு நொடி என் முகம் நோக்கியவன் என்ன நினைத்தானோ திரும்பி என்னிடம் வந்து, திரும்ப உங்க மாமா கிட்ட பேசுங்க என்று அவன் கைபேசியை கொடுக்க, மறுக்கத்தோன்றவில்லை.எனக்கும் அவரிடம் பேச வேண்டும் போல் இருந்தது.

அவரை அழைத்துப் பேசினால், அவரும் டிராபிக் இல் மாட்டி,வண்டி இன்ச் இஞ்சாக நகர்வதாகக் கூறினார்,என்ன முயன்றும் கண்ணீர் கண்களை முற்றுகை இட்டுவிட்டது.

அவர் ஏதேனும் வழி கிட்டுமா என்ற ரீதியில் வினவிக்கொண்டேயிருக்க, நான் பதலளித்துக்கொண்டே வந்தேன். இறுதியாக கால் டாக்சி முயன்று பார்க்க சொன்னார் மாமா. நானும் சரி என்று கூறி வைத்துவிட்டேன். பின் நான் கேட்கும் முன் அவனே கால் டாக்சி புக் பண்ணிட்டு குடுங்க என்றான்.

அன்று இருந்த நெட்ஒர்க் பிரச்சினையில் சில எண்கள் கிடைக்கவில்லை. கிடைத்த எண்ணிலும் எதிர்மறை பதில்களே வந்தன. இதனை கவனித்த அவன்,நானும் ஸ்ரீபெரும்புதூர்தான் போகணும், பேசாம என் கூட வாங்களேன் என்றான்.

நான் தயங்கவே, அவனே என் மாமாவை தொடர்பு கொண்டு,அவனது முழு விவரம் தெரிவித்து என்னைக் கூட்டிச் செல்ல அனுமதி கேட்டான்.

அவன் அக்காவின் குழந்தைக்கு முதல் பிறந்தநாளாம் அன்றைய தினம்.அவன் அதற்காகத்தான் சென்றுகொண்டு இருந்திருக்கிறான். பணியில் கொஞ்சம் மழையில் கொஞ்சம் என்று அவ்வளவு நேரமாகி விட்டதுபோலும்.நாங்கள் அவனை நம்புவதற்குத் தேவையான அனைத்து தகவல்களையும் என் மாமாவிடம் என் காதுபட கூறினான்.

அப்போதுதான் அவன் போரூரில் உள்ள ஒரு சாப்ட்வெர் நிறுவனத்தில் பணிபுரிவதாக தெரியவந்தது. புனே, பெங்களூரு, ஹைட்ரபாத் என்று சுற்றி விட்டு இப்போது 3 மாதங்களுக்கு முன்தான் இங்கு சேர்ந்துள்ளான் போலும்.

என் மாமாவே அவனுடன் வருமாறு கூறவே,நான் பாதி நிம்மதியுடனும், பாதி தயக்கம் மற்றும் பயத்துடனும் அவனுடன் கிளம்பினேன் .நல்லவேளையாக ஜெர்கின் அணிந்திருந்தேன்.மழை நிற்கவெல்லாம் இல்லை.பலமாக பெய்வது,சற்று குறைவாக பெய்வதுமாகவே இருந்தது.

மழை குறைந்ததும் கிளம்பினோம்.மிகுந்த சிரமப்பட்டுதான் ஓட்டினான்.அங்கங்கு தேங்கி இருந்த நீர், பலத்த காற்று, மின்வெட்டு என்று பலமுனைத் தாக்குதல்கள்.

ஒருவழியாக வீடு வந்து சேர்ந்தோம். இறக்கி விட்டதும் தேங்க்ஸ் என்று கூறி நான் விடைபெற,

“இருங்க உங்க வீட்ல சொல்லி விட்டுட்டு போறேன்” என்று கூறி,என்னுடனே வந்தான்.

என் அத்தைக்கு என்னைப் பார்த்ததும்தான் உயிரே வந்தது போல் அத்தனை மகிழ்வும் நிம்மதியும். என் அத்தையும் மாமாவும் அவர்களின் நட்பு வழியிலும்,அங்கிருந்து கால் டாக்ஸி அனுப்பவும் கூட எத்தனையோ வழிகளில் முயன்று கொண்டு இருந்திருக்கின்றனர்.அதற்குள் அவன் நம்பிக்கையாக பேசவே அவனுடன் வர சம்மதித்து விட்டனர் போலும்.

என் அத்தையிடமும் அவன் தன்னை அறிமுகம் செய்து கொண்டு அங்கிருந்த சூழலை அவனே விளக்கி அனைத்தையும் கூறி விட்டு, “ஏற்கனவே செம்ம டென்ஷன்ல இருக்காங்க.ஏன் போன் சார்ஜ் போடல,அது இதுனு திட்டாதீங்க பாவம்,இன்னும் சாப்பிடல போல சாப்பிட சொல்லுங்க,ஏதாச்சும் தப்பா சொல்லிருந்தா சாரி” என்று கூறி விடைபெற்றான்.

பின்னாளில்தான் தெரிய வந்தது,அன்று அவன் சொன்னதெல்லாம் உண்மைதான் ஒன்றைத்தவிர.அவன் அன்று அங்கு வருவதை கேன்சல் செய்துவிட்டு திரும்பிவிடத்தான் இருந்திருப்பான் போலும்.எனக்காகவே வந்திருக்கிறான்.

இந்த அக்கறையும் கனிவும் என்னை இதமாய்த் தாக்கி இம்சித்தது. அதன் பின் இரு குடும்பமும் நண்பர்களாகி விட்டோம். எனக்கும் போரூரிலேயே போஸ்டிங் போட்டனர். பயண நேரம் சற்று அதிகம்தான் என்றாலும் என் மாமா வீட்டில் இருந்தே போய் வந்துகொண்டிருந்தேன்.இவ்வாறு 4 மாதங்கள் கடந்திருந்தன.

அன்றைய தினத்திற்குப்பின் நான் அவனை சந்திக்கவேயில்லை நான் மறுபடியும் அவனை சந்தித்த வேளையில் என் மனம் சிந்திக்க மறந்து நின்றது.

என் அத்தை ஒருநாள்,அலுங்காமல் குலுங்காமல் ஒரு அணுகுண்டு போட்டார். எனக்கு மாப்பிள்ளை பார்த்திருப்பதாகவும்,எல்லாம் பொருந்திவிட்டதாகவும், பெண் பார்க்கும் வைபவத்திற்கு நாம் ஊருக்குச் செல்ல வேண்டும் என்றும் கூறினார்.

என்னிடம் எதுவும் கூறாமல் எவ்வளவு தூரத்திற்குச் சென்றுள்ளனர் என்று கோபமாக வந்தது.என் அம்மாவிடம் போனில் பொரிந்து தள்ளினேன்.இத்தனை வருடங்களில் என் அம்மாவிடம் இவ்வளவு எதிர்த்துப் பேசியதும்,சற்று கடினமாக பேசியதும் இதுவே முதல் முறை.

இறுதியாக எனக்கு திருமணம் இப்போது வேண்டாம் என்றும் இன்னும் 3 வருடங்கள் போகட்டும் என்றும் திட்டவட்டமாகக் கூறி வைத்துவிட்டேன். காரணமில்லாமல் அவன் முகம் வேறு மனதில் வந்து வந்து சென்றது. இது இன்னும் எரிச்சலை ஏற்றியது.

என் அத்தை என்னிடம் பேச வந்தார். என் அம்மாதான் தூது விட்டிருக்கிறார் என்று எண்ணிக் கொண்டு, என்ன பேசினாலும் திருமணத்திற்கு மட்டும் ஒத்துக்கொள்ளக்கூடாது என்று மனதில் சங்கல்பம் செய்து கொண்டேன்.

என் அத்தை ஏதேதோ பேசினார். நானும் அமைதியாக அழுத்தமாக மறுத்துக்கொண்டே வந்தேன்.அவர் பேசிய எதுவும் பலனளிக்காமல் போகவே, இறுதியாக மாப்பிள்ளையின் புகைப்படம் எடுத்து வந்து பார்க்கும்படி கூறினார்.

மாப்பிள்ளை குறித்த பிரச்சினை இல்லை, இப்போது நான் திருமணத்திற்கு மனதளவில் தயாராக இல்லை என்று கூறினேன்.

அந்த புகைப்படத்தைப் பார்த்த பின்பும் இதே போன்று தோன்றினால்,இனி நாங்கள் வற்புறுத்த மாட்டோம் என்று அத்தை பூடகமாக சிரிக்கவே, நான் புகைப்படத்தைப் பார்த்தேன்.

என்னால் நான் கண்டதை நம்ப முடியவில்லை. அடிக்கடி அவன் முகம் மனதில் வந்து போனதால்,புகைப்படத்திலும் அவன் பிம்பம் தெரிகிறதோ என்று குழம்பிப் போய், என் அத்தையையும் புகைப்படத்தையும் மாறி மாறி பார்த்தேன். அத்தை,

“இவரு” என்று நான் சந்தேகமாக இழுக்கவே,

“ம்ம்ம்ம்ம் இந்த இவரு அந்த அவரேதான்,இப்போ சொல்லு,அம்மாகிட்ட என்ன சொல்லட்டும்” என்று குறும்பாக கேட்டார் அத்தை.

நான் ஸ்தம்பித்து அமர்ந்துவிட்டேன். நான் திருதிருவென விழித்தேன்.நான் ஏதோ சொல்ல எத்தனிக்க,என் அத்தை என்னை இடை மறித்தார்.அவர் அன்று கூறியது இதுதான்.

“இப்போதானே வேண்டாம்னு சொன்னோம்,போட்டோ பார்த்திட்டு ஓகே சொன்னா என்ன நெனச்சுப்பாங்களோனு யோசிச்சு குழப்பிக்காதடா. மேரேஜ்னனாலே பொண்ணுங்களுக்கு நிறைய குழப்பமும் தயக்கமும் பயமுமே கூட வரும். அதுக்கெல்லாம் இன்னும் கொஞ்சம் பக்குவமும் கான்பிடென்சும் வரணும்னுதான் நீ 3 வருஷம் போட்டும்னு சொல்றனும் புரியுது. இவரை பார்த்த உடனே,உனக்கு எல்லா குழப்பமும் தயக்கமும் போயிரும்னும் தெரியும்.அவர் அவ்ளோ நல்ல பையன்.

அவரை எங்க எல்லாருக்குமே பிடிக்கும்போது உனக்கு பிடிக்கறதுல என்ன இருக்கு. நாங்க லவ்னெல்லாம் யோசிக்க மாட்டோம். அப்டியே இருந்தா கூட,உன்னை தப்பாலாம் நெனைக்கமாட்டோம்.லவ்ன்ற பேர்ல லைபை கெடுத்துக்கக்கூடாது, பிரச்சனைல மாட்டிக்க கூடாதுன்னுதான் கவலை.மத்தபடி உன் சந்தோஷம்தாண்டா ரொம்ப முக்கியம்.

உங்க அவரு,பொண்ணு பார்க்கறதுகூட வேண்டாம்னு சொன்னாரு.உனக்கு எம்பேரசிங்கா இருக்குமாம். உன்னை கேக்க சொல்லி 100 முறை சொல்லிட்டாரு!

அன்னைக்கு, அதான்மா மழை பொழிஞ்சுதே,மழையவிட அதிகமா உன்மேல அக்கறைய பொழிஞ்சாரே,அப்போவே உன் மூஞ்சில லைட்டா பல்பு எரிஞ்சுது, அதை பிரைட்டா எரிய வைக்கத்தான் சர்ப்ரைஸா இருக்கட்டுமேனு இந்த பொண்ணு பார்க்கும் படலம் நாங்க வெச்சோம்.

இப்போ சொல்லு,இந்த கல்யாணம் வேணுமா வேண்டாமா?”

நான் நாணிச் சிரித்தபடி என் அத்தை மடியிலேயே படுத்துக்கொண்டேன். என்னை வேண்டிய அளவு ஓட்டிவிட்டு,சம்மதம்தானே என்று கேட்டு,நான் ஆமோதிப்பாய் தலை அசைக்கவே மிகுந்த பூரிப்புடன் நெட்டி முறித்துவிட்டுச் சென்றுவிட்டார்.

அவனும் எங்கள் சமூகத்தைச் சேர்ந்தவன்தான் என்றும்,அவனும் திருமணம் வேண்டாம் என்று ஒத்தி வைத்துக்கொண்டே வந்தவன், நான் என்றதும் ஒத்துக்கொண்டான் என்றும் கேள்வியுற்றேன். தலையில் கிரீடம் வைத்து, நீதான் மகாராணி என்று அறிவித்ததுபோல் மகிழ்ச்சியாக இருந்தது.

அதன்பின் அவன் பெண்பார்க்கும் படலம் நடக்க விடவில்லை. இயல்பாய் ஒரு உறவினரின் வீட்டிற்குச் செல்வதுபோல் எங்கள் குடும்பம் அவர்களின் வீட்டிற்கும் அவர்களின் குடும்பம் எங்கள் வீட்டிற்கும் போய் வந்தோம்.ஒரு வாரத்தில் நிச்சயதார்த்தம் முடிந்தது.இரு மாதங்களில் திருமணம் என்று முடிவானது .

அந்த இரண்டு மாதங்களும் நான் எப்போதும் மிதப்பது போலவே அப்படி ஒரு ஏகாந்த வெளியில் இருந்தேன்.நேரம் கிடைத்த போதெல்லாம் அவனது அழைப்புகளும், எங்களது ஸ்வீட் நத்திங்க்ஸும், அதில் நிறைந்திருந்த அவனது காதலும்,குறையாதிருந்த கண்ணியமும் என்னை அவனுள் கரைத்துக்கொண்டிருந்தது.

வாட்ஸாப்பில் போட்ட காதல் மொக்கைகளால் இருவரின் கைபேசி கீபேட்கள் தேய்ந்துகொண்டிருந்தன.சொல்ல மறந்துவிட்டேன்.அவன் என்னைவிட நன்றாகப் பாடுவானான்.

நிறைய இரவுகளில் அவன் பாடலே எனக்கு தாலாட்டு. விடியல்களில் அவன் பாடலே என் பூபாளம்.அதில் எனக்கு மிகவும் மனதிற்கு நெருக்கமான பாடல், “எந்தப் பெண்ணிலும் இல்லாத ஒன்று,ஏதோ உன்னிடம் இருக்கிறது “.

அனைவரும் ஓட்டுவார்கள் என்று தெரிந்துமே அதனை அவன் அழைப்பிற்கான ரிங் டோனாக வைத்திருந்தேன்.

அவனோ என் குரலில், ” இதுதானா ” பாடலை என் அழைப்பிற்கான ரிங் டோனாக வைத்து, சிறப்பாக வைத்து செய்யப்பட்டான் போலும்.

நேரம் கிடைத்த பொழுதெல்லாம் என் மாமா வீட்டிற்கு வந்து என்னைப் பார்த்துவிட்டுச் செல்வான். அவ்வாறு வரும் வேளையில்,நிச்சயம் மல்லியோ முல்லைச் சரமோ வாங்கி வருவான்.

என் மாமா, அத்தையும் அதனை அவன் கைகளிலிருந்தே பெற்றுக்கொள்ள அனுமதிப்பர்,சொல்லப்போனால் வழிவகுப்பர்.

மல்லிகையைவிட அதிகமாய் என் மனதில் மணம் வீசும். அவனும் நானும் எங்கள் குடும்பத்தினரும் அவ்வப்பொழுது சென்னையிலுள்ள பிரசித்தி பெற்ற கோவில்களான, பார்த்தசாரதி கோவில், அஷ்டலக்ஷ்மி கோவில், கபாலீஸ்வரர் கோவில், வடபழனி முருகன் கோவில் என்று சென்று வருவோம்.

அப்போது அவன் கைகளிலிருந்தே குங்குமம் வைக்கச் செய்வான். அவன் என் கையிலிருந்து எடுத்துக்கொள்வான். குங்குமத்திற்குப் போட்டியாக நானும் சிவந்து போவேன்.

கோவில்களுக்கு அருகில் இருந்ததால் மெரீனாவிற்கும் எல்லியாட்ஸ் பீச்சிற்கும் கூட சென்றோம். எங்கள் குடும்பத்தினரே எங்களை தனியாக சிறிதுதூரம் சென்றுவரும்படி கூறியும் கூட மறுத்துவிட்டான். உனக்கு போகணும்னா போலாம் என்று வாட்ஸாப்பிலும் கேட்டுக்கொண்டான் என்னிடம். ஆனால் எனக்கும் அது தேவைப்படவில்லை.

நான் கடலலையில் பரவசத்துடன் கால் நனைப்பதை அவன் பரம சுகத்துடன் பார்த்துக்கொண்டிருந்தான். அதுவே மேலும் பரவசம் கூட்டியது.என்னுள் கடலைவிட ஆழமாக இறங்கியிருந்தான்.

திருமணம் என்றாலே சில சண்டை சச்சரவுகள் வராமல் இருப்பதில்லை. அதற்கு எங்கள் குடும்பமும் விதி விலக்கில்லை. பத்திரிக்கையில் பெயர் போடுவதில் இருந்து, பந்தக்கால் நடுவது வரை,சிறிதும் பெரிதுமாக சச்சரவுகள் வந்த வண்ணம் இருந்தன.

பெண்வீட்டார் ,மாப்பிள்ளை வீட்டார் அது குறித்த ஈகோக்கள்,உறவுகளுக்குள் எனக்கு முன்னிரிமை வழங்கவில்லை போன்ற குற்றசாட்டுகள் இவ்வாறு ஒவ்வொரு சிறு விழாவிலும் சம்பிரதாயங்களிலும் யாரேனும் பிரச்சினையை கிளப்புவர்.அதனை சிலர் ஊதிப் பெரிதாக்குவர்.

ஆனால் அனைத்து இடங்களிலும் எங்களின் இணக்கமும் புரிதலும்,சில இடங்களில் நாங்கள் காத்த அமைதியும் சில இடங்களில் நாங்கள் கொடுத்த அழுத்தமும் பெரிய அளவில் பிரச்சினை வராமல் சுமுகமாக கடந்து வந்தோம்.இதில் என் மாமா அத்தை,அவனின் அக்கா மாமாவின் பங்கு நிறைய உண்டு. நாங்கள் அறுவரும் அழகான அணி போல் ஆகிவிட்டோம். கொசுறாக என் மாமாவின் 10 வயது மகன் வருணையும், அவன் அக்காவின் 1 வயது மகள் நிவாஷினியையும் சேர்த்துக்கொண்டோம்.

இருவருக்கும் வேலை போரூரில் என்பதால்,அங்கேயே வீடு பார்த்து தேவையான பொருட்கள் அனைத்தையும் தனித்தனியாக இணைந்து வாங்கினோம்.

மொத்தத்தில் அந்த இரு மாதங்களும் காலில் ரெக்கை கட்டி அனைவரும் பறந்துகொண்டிருந்தோம். எந்த ரணகளத்திலும் நாங்கள் எங்கள் காதல் பணியினை ஒழுங்குகிரமமாக கிளுகிளுப்புடன் செய்தோம்.

ஒரு வழியாக எங்களின் திருமணம் இனிதே நடைபெற்றது. அவன் என் கழுத்தில் மூன்று முடிச்சுகள் போட்டவுடன், அதுவரை என் மனதினை இறுக்கிய இனம் புரியா முடிச்சுகள் அவிழ்ந்து அப்பாடா என்பது போல் பரம நிம்மதியாகவும்,என் பெற்றோர், தம்பி, குடும்பம்,என் இனிஷியல், குலதெய்வம் என்று என் இத்தனை வருட அடையாளங்களை நொடியில் இழப்பதுபோல் அழுகையாகவும் ஒரு கலவையான உணர்வில் சிக்குண்டேன்.

அதன்பின் மாலை மாற்றுவது பொட்டு வைப்பது,அக்னி வலம், பெரியோருக்கு பாத பூஜை, ஆசீர்வாதம், பால் பழம், விளையாட்டு, உணவு ஊட்டுவது, போட்டோ ஷூட் என்று ஒவ்வொன்றும் சம்பிரதாயமாக நடைபெற்றாலும், அவை என்னையும் அவனையும் இறுக்கமாக இடைவெளியின்றி பிணைத்துக்கொண்டே வந்தன. இரு குடும்பமாய்த் தோன்றியதெல்லாம் மாறி, ஒரே குடும்பம் என்ற எண்ணம் மேலோங்கியது.

திருமணம் முடிந்து 20 நாட்கள் நாங்கள் ஊரில் இருந்து விருந்து மற்றும் இன்ன பிற சம்பிரதாயங்கள் அனைத்தும் முடித்து ஒரு நன்னாளில் போரூரில் பால் காய்ச்சி குடியேறினோம்.

அந்த 20 நாட்களில் அவன் இரு குடும்பகளிலும் உறவுகளை சமன் செய்த விதத்தில் சிறு சிறு பூசல்களும் மன வருத்தங்களும் கூட மறைந்து நல்ல நட்பு நிலைக்கு வந்துவிட்டனர்.

அவன் என்னை ஒரு போதும் அதிகாரம் செய்ததில்லை. அவன் அன்பிலும்,சமயோசித்தத்திலும்,பக்குவத்திலும் என்னை ஆளுமை செய்தான். அவன் கோபமும் எனக்கு ரசிக்கும்படியாகவே இருந்தது. அதில் அத்தனை நேர்மையும் நியாயமும் இருக்கும்.

என்னிடம் கோபம் கொண்டு திட்டியபோதெல்லாம் எனக்கு மறுத்துப் பேசத் தோன்றியதில்லை. நான் அவ்வாறு அமைதி காப்பது அவன் கோபத்தைக் கரைத்துவிடுகிறது என்பான். என் நியாயமான கோபங்களையும் அவன் இவ்வாறே கையாண்டான். என் மூட் ஸ்விங்கில் வரும் அநியாய கோபங்களைக் கூட அணைத்து அடக்கிவிடுவான்.

அவன் எது சொன்னாலும் கண்ணை மூடிக்கொண்டு கேட்பேன் என்ற ரீதியில் என்னை மயக்கிவிட்டான் என்றே சொல்ல வேண்டும்.அவ்வாறு நான் அவன் சொன்னதற்காக ஒத்துக்கொண்ட செயல்தான் என் இன்றைய துயரின் காரணம்.

போரூரில் அவனுடன் இருந்த ஒன்றரை வருடங்கள் சொர்க்கம் என்றுதான் கூறவேண்டும்.அவனுடன் இரண்டறக் கலந்தபின் ஆண்பால் பெண்பால் கூட மறந்து அவனும் நானும் ஒன்றே என்றுதான் இருந்தது இருவரின் மனதிலும்.

அவன் அரவணைப்பில் உறக்கம், நெற்றி முத்தத்தில் விழிப்பு, மெலிதான அணைப்பும்,கிண்டலும் சீண்டலுமான உரையாடலுடன் சமையல், என் தலைவலிக்கு அவனது தேநீர், மாதாந்திர முடியாத நாட்களில் அவன் சமையல், காய்ச்சலில் அவனது மடி, சண்டை,அதன் பின்னான சமாதானம், எங்களின் ஊர் பயணங்கள்,எங்கள் பெற்றோரின் வருகை என்று அவன் அருகில் நாட்கள் பறந்தோடியது.

அவன் அருகில் எந்த எதிர்மறை எண்ணங்களும் என்னைத் தீண்டுவதில்லை. யாரையும் குறை சொல்லத் தோன்றியதில்லை. அவன் என் மனதில் விதைத்த அன்பு விதையில் என் மனதில் அன்பு விருட்ஷமாய் வளர்ந்தது. அனைவரையும் அன்பால் பார்க்கும் மனம் பெற்றேன்.

என் துயரில் என்னை சேயாக்கி, செல்லம் கொஞ்சி எனைத் தாங்கினான். அவன் துயரில் என்னைத் தாயாக்கி என் மடியில் ஆறுதல் வாங்கினான். அதனால் துன்ப நேரங்களிலும் மனம் துவழாமல், அதிலும் ஒரு சுகம் காணப் பழகியது.

என் பிறந்த நாளில் அவன் தந்த இன்ப அதிர்ச்சியில் ஆனந்தக் கூத்தாடினேன். எனக்கே தெரியாமல் என்னை அழகாக போட்டோ எடுத்திருக்கிறான்.அதுவும் நிறைய.சில வீடியோக்கள். அதனை எனக்கு ஒரு குறும்படமாகக் காட்டினான். அவன் வழியாய் என் மனம் அழகானது போல்,அவன் கண் வழியே நான் அத்தனை அழகாய்த் தெரிந்தேன்.அன்று மாலை என் குடும்பத்தினர், என் சில நண்பர்கள் அனைவரும் வந்து இன்ப அதிர்ச்சி அளித்தனர்.

அன்று இரவு என்னிடம் வந்து, இது அவனுடன் நான் கொண்டாடும் முதல் பிறந்தநாள் என்பதால் இதெல்லாம் செய்ததாகவும், இனி வரும் பிறந்த நாட்களையும் இதே போல் எதிர்பார்க்கக்கூடாது என்றும், வருடங்கள் போகப் போக அதில் கூடும் பொறுப்புகளால்,உன் பிறந்தநாளையே கூட மறக்க நேரிடலாம். அதற்காக வருந்தக்கூடாது என்றும்,அன்பின் வெளிப்பாட்டின் வடிவங்கள் மாறலாம்,அன்பு மாறாதென்றும் கூறினான். இதில்தான் நான் அதிகம் கவிழ்ந்தேன். அதற்கு அவனுக்கு நிறைய பரிசுகள் அவன் கன்னங்கள் பெற்றன.

எங்கள் முதல் திருமண நாளன்று கூட பரிசு தந்தான். அது வேறு விதமாக இருந்தது. ஒரு புடவை,சிறிதாய் ஒரு செயின், அதை அவனே போட்டுவிட்டான். அதை எப்போதும் கழட்டக்கூடாது என்றும், அவன் அருகில் இல்லாத போது, அவனை மனம் தேடும்போது இதனை பிடித்துக்கொள்ளுமாறும் கூறினான்.

அவனுக்கும் ஒன்று வைத்திருந்தான். அதனை என் கையால் போட்டுக்கொண்டான். கொசுறாக, கழட்டக்கூடாது என்றால் எந்த சூழ்நிலையிலும் என்று அர்த்தமல்ல, முடிந்தவரை என்று கூறினான். அவன் வார்த்தை எனக்கு வேத வாக்காகிவிட்டதை உணர்ந்திருக்கிறான் அல்லவா? அதன் வெளிப்பாடு இது.

அவன் எனக்கு எவ்வாறு உள்ளான் என்று நான் உங்களிடம் கூறிக்கொண்டிருக்கிறேன்.அதே போல் நான் அவனுக்கு எவ்வாறு உள்ளேன், அவன் வாழ்வில் நான் அவனுக்கு எவ்வளவு முக்கியம் என்பதை ஒரு கடிதமாக எழுதிக் கொடுத்தான். நெகிழ்வில் கண்ணில் நீர் கட்டிவிட்டது எனக்கு.

அவனது கடுமையான முகங்களை எல்லாம், எனக்கு டிரைவிங் பயிற்றுவிப்பதிலும் என்னை மிகுந்த தன்னம்பிக்கையுடன் மாற்றுவதற்கும் பயன்படுத்தினான். அதில் வெற்றியும் கண்டான்.அடையாளம் தொலைகிறதே என்று வருந்தினேன் அல்லவா?ஆனால் அதைவிட அழகான ஒரு புது அடையாளத்தை எனக்கு அளித்தான்.

அனைத்தையும் அளித்துவிட்டு, இன்று என் உயிரை உருவிக்கொண்டு ஆன்சைட் செல்கிறேன் என்று என்னை தனியே தவிக்கவிட்டு வெளிநாடு சென்றுவிட்டான். அந்த ஊரின் சீதோஷ்ண நிலை எனக்கு ஒத்துக்கொள்ளாது என்று கூறிவிட்டுச் சென்றுவிட்டான். இனி இரண்டு வருடங்கள் கழித்துதான் வருவான்.

2 வருடங்கள் கண்மூடித் திறப்பதற்குள் போய் விடும் என்றும், இங்கே எனக்கு எப்படி வசதியோ அப்படியே இருந்துகொள்ளுமாறும் கூறினான்.அதாவது, இங்கே தனியே இருப்பதோ, இல்லை முன்போல் என் மாமா வீட்டில் இருந்து வருவதோ இல்லை வேலையை விட்டுவிட்டு ஊரில் சென்று இருப்பதோ எதுவாகினும் அது என் விருப்பம் என்று கூறினான். எனக்கு பகீர் என்று இருந்தாலும் அவன் கூறியதால் ஒத்துக்கொண்டேன்.

அவன் சென்று 4 மாதங்கள் ஆகிறது.என்னால் தாங்க முடியவில்லை. இது இவ்வளவு வாட்டும் என்று தோன்றாமல் போய் விட்டது. என் கல்லூரி காலங்களில் நியூயார்க் நகரம் பாடலைக் கேட்டு கிண்டல் அடித்துள்ளேன். ஒரு வார பிரிவிற்கு இத்தனை அலப்பறையா என்று, ஆனால் அதைவிட பன்மடங்கு அலப்பறை செய்கிறது என் மனம்.

என் துயரிற்கு வடிகால் வேண்டும், என் மனதிற்கு மாற்றம் வேண்டும் என்றே சூப்பர் சிங்கர் போட்டியில் சேர்ந்தேன். எந்த ஜோனர் தந்தாலும் அதில் உள்ள ஒரு சோகப் பாடலை எடுத்து பாடி வருகிறேன் இதுவரை. என் வலி மிகுந்த மனம் அதிக உணர்வூட்டம் தருகிறது போலும்.இதுவரை வெற்றிதான்.ஒரு கட்டத்தில் வேலையையும் இதனையும் சமாளிக்க முடியாமல் வேலையை விட்டுவிட்டேன்.

அவன் சென்றதிலிருந்து அவனுடன் நான் சரியாக பேச முடியவில்லை. பேசுவதில்லை. பெரும்பாலும் வேறு யார் மூலமாகவோ தான் பேசுகிறோம். பேசினால் அழுதுவிடுவேன் என்று தோன்றும் சமயங்களில் பேசமாட்டேன்.

அதோடு என் வேலை,அவன் வேலை, ஷூட்டிங், ரிஹர்சல் அந்த நாட்டிற்கும் நம் நாட்டிற்கும் உள்ள நேர வித்தியாசம் நெர்வர்க் பிரச்சினை என்று அவனிடம் பேச முடிவதில்லை.

‘ஹாய் பாய்’ ரேஞ்சில்தான் இருந்தது எங்கள் பேச்சு. ஸ்கைப்பிலும் இதுவரை பேசமுடியவில்லை .சூப்பர் சிங்கர் பார்த்திருப்பான் போலும். அதன் பின் அவன் பேச எவ்வளவோ முயற்சித்தும் முடியவில்லை போலும். எப்படி இருக்கிறேன் என்றாவது ஒரு வார்த்தை பேசிவிட்டச் செல்லலாம் என்று என் அம்மாவிடம் வருந்தியிருப்பான் போலும்.அடுத்தநாள் டெடிகேஷன் ரவுண்ட்.அதில் நான் பாடிய பாடல் இதுதான்,

“அன்பே சுகமா,

உன் தாபங்கள் சுகமா,

தலைவா சுகமா சுகமா

உன் தனிமை சுகமா சுகமா

மடியில் கணினி சுகமா

அதில் தெரியும் என் முகம் சுகமா,

உந்தன் பணிகள் சுகமா

வரும் எந்தன் நினைவுகள் சுகமா”

எப்படியும் அவன் பார்ப்பான் என்ற நம்பிக்கையில் சில வரிகளை இவ்வாறு மாற்றி பாடினேன். ரிஹர்சலில் சொல்லாமல் திடீரென்றுதான் டேக் இல் பாடினேன், அனைவரும் அதிர்ந்தாலும் சிரித்து ஓட்டி பாட்டில் இருந்த பீல் ஆகா ஓகோ என்று பாராட்டினார்கள். அவன் தேங்க்ஸ் சொன்னதாக தகவல் வந்தது.

கால் இறுதிச் சுற்றிற்கு போகும் முன் சென்னையில் நாங்கள் சென்று வந்த இடத்திற்கெல்லாம் நான் சென்றேன்.நாங்கள் சென்னையில் செல்லாத இடமே இல்லை எனலாம். ரோட்டோரக்கடையிலிருந்து, பர்மா உணவு, கிண்டியிலுள்ள ஐ டி சி செவென் ஸ்டார் ஹோட்டல் வரை, பணியாரம் முதல் பிஸ்சா வரை சென்னையில் கிடைக்கும் அனைத்து உணவுகளையும் உண்டிருக்கிறோம்.

புத்தகக் கண்காட்சியில் அள்ளிக்கொண்டு வந்திருக்கிறோம். மாரத்தானில் பங்கேற்று ஒரு கிலோமீட்டர் கூட ஓட முடியாமல் பல்ப் வாங்கினோம்.பீனிக்ஸ் மாலில் அன்றில் பறவைகளாய் சுற்றினோம்.வண்டலூர் பூங்காவில் வெள்ளை புலியுடன் செல்ஃபீ எடுத்தோம்.மெரினா,ரங்கநாதன் ஸ்ட்ரீட், சரவணாஸ்டோர்ஸ்,போத்திஸ்,பாண்டி பஜார்,இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்.

இப்படி சென்னையில் எதைக் கண்டாலும் அவன் நினைவுகளே,மெரினா சென்றேன்.கடலை பார்த்து மனம் லேசாகலாம் என்று.அன்று அவனைத் தழுவிய பின் என்னைத் தீண்டிய காற்றில் ஆக்சிஜன் அதிகமாய் இருப்பதாய்த் தோன்றியது.ஆனால் இன்று காற்றில் ஆக்சிஜன் இல்லாததுபோல் மூச்சடைக்கிறது.அதே அழுத்தத்தில் போய் தான் அந்தப் பாடலைப் பாடினேன்.

“வானம் எங்கும் உன் பிம்பம்

ஆனால் கையில் சேரவில்லை

காற்றில் எங்கும் உன் வாசம்

வெறும் வாசம் வாழ்க்கை இல்லை

உயிரை வேரோடு கிள்ளி

என்னைச் செந்தீயில் தள்ளி

எங்கே சென்றாயோ கண்ணா

ஓ என் ஜீவன் ஓயும் முன்னே ஓடோடி வா”

என் மனதை அப்படியே பிரதிபலித்த பாடல் வரிகளும் வலியும்,அதற்குத்தான் இன்று அத்தனை கரகோஷங்களும் நடுவர்கள் மற்றும் இசையமைப்பாளரின் ஸ்டாண்டிங் அவேசனும்.

மீதமுள்ள காலத்தை எப்படிக் கடத்துவதோ தெரியவில்லை. மிகவும் வலிக்கிறது. மனதினை யாரோ இரக்கமில்லாமல் அறுப்பது போல் உள்ளது. என் மீதான கடவுளின் கருணைக்கு தற்காலிக ஓய்வு போலும். இதற்கு முன் ஓவர் டைமில் வேலை பார்த்துக்கொண்டிருந்தது.

ஒரு வாரம் கழித்து…

இன்று அரை இறுதி போட்டி. சுந்தரி கண்ணால் ஒரு சேதி பாடலைப் பாடினேன். அதற்கும் ஸ்டாண்டிங் அவேசன் கிடைத்தது. ஆனால் இறுதிச் சுற்றிற்குத் தேர்வான முதல் போட்டியாளர் நான் இல்லை. அடுத்த போட்டியாளரும் நான் இல்லை. மூன்றாம் போட்டியாளரிற்கு என்னையும் இன்னொருவரையும் நிற்க வைத்து, கவுண்ட் டவுன், அது இது என்று சற்று பிபி ஏற்றிவிட்டு இறுதியில் அறிவித்தபோது அதிலும் நான் இல்லை. அந்த நிகழ்ச்சி தொகுப்பாளினி,இந்த முடிவு உங்களுக்கு சந்தோஷத்தை தரலைன்னா கூட, உங்களுக்கு வேற ஒரு சந்தோசம் காத்திருக்கு என்று பீடிகை போட்டார்.ஒரு வீடியோ போட்டார்கள்.அதில் அவன்.என்னவன்!!!

இன்றைய தினம் என் பிறந்தநாள். 4 மாதங்களுக்குப் பிறகு இன்றுதான் அவன் முகம் பார்க்கிறேன்.இன்றும் நெகிழ்வில் கண்ணீர் முட்டியது. அவன் கண்களில் வலியுடனும் முகத்தில் சோகத்துடனும்,இதழில் புன்னகையுடனும் பேசினான்.

“ஹாய் அனி! ஐ மிஸ் யூ சோ மச்.ஐ நோ யூ வில் ஆல்சோ மிஸ் மீ.டுடே அதெல்லாம் மறந்திட்டு ஹாப்பியா இரு.மெனி மோர் ஹாப்பி ரிட்டர்ன்ஸ் ஆப் தி டே.ஹாப்பி பர்த்டே.ரொம்ப நல்லா பாடிருக்க.கீப் ராக்கிங்.பை”

இதுதான் அவன் கூறியது. அவன் குரலில் இத்தனை தொய்வும், முகத்தில் இத்தனை சோர்வும் நான் பார்த்ததே இல்லை.என் பிரிவு அவனையும் வாட்டியுள்ளது என்பது சிறு மகிழ்வையும்,பெரு வலியையும் தந்தது.எனினும் எனக்கு இது மிகப்பெரிய இன்ப அதிர்ச்சி.

எவ்வளவு முயன்றும் இன்று அவனுடன் பேச முடியவில்லை. அவனிடமிருந்து வாழ்த்து பெற முடியாதோ என்று மிகவும் வருத்தத்திலும் ஏக்கத்திலும் இருந்தேன். மிகுந்த மகிழ்வுடனும் நெகிழ்வுடனும் சிறு கண்ணீருடனும் சூப்பர் சிங்கர் குழுவிற்கு என் நன்றிகளை அள்ளி வீசிக்கொண்டிருந்தேன்.

திடீரென்று தொகுப்பாளினி என் கண்களைக் கட்டினார்.”உங்க நன்றியை ஸ்டாக் வச்சுக்கோங்க.இன்னும் சர்ப்ரைஸ் முடியல” என்றார். இதை விடப் பெரிய சர்ப்ரைஸ் இல்லை என்றும்,கேக்தானே எனக்கு தெரியும் என்றும் கூறினேன்.

“ஆமா கேக்தான்.பட் கேக்கை பார்த்திட்டு அது சர்ப்ரைஸா இல்லையானு சொல்லுங்க ” என்றார்.

ஒரு வேளை அவன் முகம் போட்ட கேக்காக இருக்குமோ போன்று பல எண்ணங்கள் ஓடி மறைந்தன. அவர் என் கண்களை அவிழ்த்துவிட்டார்.உண்மையில் நான் கேக்கினைப் பார்த்து பேரின்ப வெள்ளத்தில் மூழ்கினேன்.ஏனெனில் அதனை சுமந்து நின்றது என்னவன். அத்தனை மலர்ந்த முகத்துடனும் நிறைவுப் புன்னகையுட னும் என்னவன்.

நான் வாயை மூடி முகத்தை மூடி, சிரித்து, அழுது,இங்கும் அங்கும் சென்று என்று முழுதாக 2 நிமிடம் தேவைப்பட்டது இதயத்தில் இறங்கிய இன்ப இடியின் அதிர்வில் இருந்து் வெளியில் வர.இன்பத்தில் தொண்டை அடைக்கும் என்று இன்றுதான் உணர்ந்தேன்.என் இன்ப அலை அரங்கம் முழுதும் தொற்றிக்கொண்டது போலும்.அனைவரும் நெகிழ்ந்து சிரித்தனர். பின்னர் தொகுப்பாளினி என்னிடம் வந்தார்,

” கேக் எப்படிங்க.76 கே ஜி” என்றார், நான் விழித்தேன்.

“உங்க ஹப்பி 74 கே ஜி.கேக் 2. கே ஜி.74 கே ஜி கேக்கை பார்வையிலேயே சாப்பிட்டு முடிச்சிட்டீங்க.இப்போ கொஞ்சம் கருணை காட்டி அந்த கேக்கை வெட்டினா நாங்களும் ஹாப்பியா இருப்போம்ல” என்று வாரினார்.

வழக்கம் போல் அவர் உண்ணும் விஷயத்தில் குறியாக இருக்கிறார் என்று அனைவரும் அவரை வைத்து செய்தனர். பின்னர் கேக் வெட்டி கொண்டாடிவிட்டு, நகர எத்தனித்த பொழுது,என்னை மீண்டும் நிறுத்தி, நானும் இறுதிச் சுற்றிற்கு தகுதி பெற்றிருப்பதாக அடுத்த இன்ப அதிர்ச்சி அளித்தனர்.

அதோடு நில்லாமல், என்னவனும் நன்றாக பாடுவான் என்று அறிவித்து இறுதிச் சுற்றில் நாங்கள் இருவரும் இணைந்து ஒரு ஸ்பேஷல் டூயட் பெர்பார்மன்ஸ் கொடுக்கப்போவதாக அறிவித்து நிகழ்ச்சியை முடித்தனர். அனைவரிடமும் விடைபெற்றுக் கிளம்பிய போது,வீட்டுக்கு போங்க இன்னொரு சர்ப்ரைஸ் இருக்கு என்றார்.

இருவரும் மாறி மாறி சிரித்தபடி வெட்கப்பட்டபடி ஒன்றும் பேச நா எழும்பாமல் இல்லம் வந்து சேர்ந்தோம். மறு கணம் நான் அவனது இறுகிய அணைப்பில் இருந்தேன்.அவன் அணைப்பின் தீவிரத்தில் உடல் வலித்தது. ஆனால் மனதிற்கு மயில் பீலி வருடலாய் இருந்தது. அவன் மகிழ்வினையும் நிறைவினையும் கண்ணீராகவும் முத்தங்களாகவும் மொழி பெயர்த்தான். நானும் அவனை வழி மொழிந்தேன்.

எப்படிடா என்று கேட்டேன். வேலையை விட்டுவிட்டு வந்துவிட்டதாய் கூறினான். இது பேரதிர்ச்சி எனக்கு.அவன் காரணம் கூறியதும் உலகை வென்றுவிட்ட பெருமிதமும் அவனுக்கான வருத்தமும் என்னுள்.

என் பொலிவிழந்த முகமும், என் குரல் கொண்ட சோகமும் அவனைக் கடுமையாய்த் தாக்கியதாய்க் கூறினான். அதிகம் ஒப்பனை செய்து பழக்கமில்லாதவள் நான். ஆனால் ஷூட்டிங்கிற்காக எனக்கு ஒப்பனை,சிகை அலங்கார மாற்றம் என்று செய்து என்னை அழகாக மாற்றிவிட்டார்கள் என்றே எண்ணியிருந்தேன். அதற்காக மகிழ்வான் என்று கூடத் தோன்றியது. ஆனால் அவன் பொலிவிழந்த முகம் என்றுவிட்டான்.

இத்தனை அழகிய ஒப்பனைக்குப் பின்னால் இருந்த அழுகையைக் கூட அவன் மனம் துல்லியமாக உணர்ந்ததை எண்ணி அத்தனை பெருமிதமாக இருந்தது.

அவனும் என் பிரிவுத் துயரில் உழன்று கொண்டிருந்த நேரம் என் வலியும் கண்டு, தாழ முடியாமல், அந்த ப்ராஜெக்ட்டிலிருந்து விலகி இங்கு வர முயற்சித்திருக்கிறான். அதனை அவர்கள் மறுத்து, வேண்டுமென்றால் வேலையை விட்டுவிடுமாறு கூறவே,விட்டு விட்டு வந்துவிட்டான் போலும்.

ஏன்டா? என்று கேட்டதற்கு,பணம் அதிகம் சேர்த்தால் இன்னும் வசதியாக , இன்னும் என்னை மகிழ்ச்சியாக வைத்திருக்க எண்ணியதாகவும், ஆனால் நம் மகிழ்ச்சி நாம் இருவர்தான் என்று புரிந்து வந்துவிட்டதாகவும் கூறினான்.

உண்மைதான். சரியான உணவு, உறக்கம், உடல்நிலை இல்லாத சூழலிலும் அவன் அருகில் உற்சாகமாக மகிழ்வுடன் இருப்பேன். அவனும் அவ்வாறே. இனி வாழ்வாதாரத்திற்கு ஒரு வேலையைத் தேடிக்கொண்டு அன்பாக வாழ்வைத் தொடரப்போகிறோம்.

2 மாதங்கள் கழித்து….

‘மக்களே நான் ஜனனி ப்ரண்ட் ஜெயா . இவங்க இப்போ சினிமால பாடிட்டு வந்திருக்காங்க. சூப்பர் சிங்கர் பைனல்ஸ்ல இவங்க குடுத்த பெர்பார்மென்ஸ்ல சும்மா ஆடியன்ஸ் கதி கலங்கிப் போய்ட்டாங்க. இந்த அம்மணி கண்ணை மூடிட்டு க்யூட் எஸ்ப்ரஸன் குடுத்து பாட்றதும், சார் அதை ரசிக்குறதும், மேடம் அவர் பாட்ல மயங்கி மெய் மறந்து நிக்குறதும், இவ பாட வேண்டிய லைனை அவர் பாடறதும்னு ஒரே ஒரு பாட்டுல ஒரு ரொமான்டிக் படமே ஓட்டிட்டாங்க மக்களே. அதைப் பார்த்தே நிறைய கான்செர்ட்க்கு இவங்களை கூப்புட்றாங்க. இவ தான் சூப்பர் சிங்கர் வின்னர். சினிமாலயும் பாடியாச்சு .கூடிய சீக்கிரம் ரஹ்மான் மியூசிக்ல பாடப்போறாங்களாம்.இப்போ கான்செர்ட்க்கு போறோம் பை மக்களே!’

To share your views please click here

You cannot copy content