You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

மதிப்புக்குரியவள் - அத்தியாயம் 26

Quote

அத்தியாயம் – 26

கவிதா தன்னுடைய பெட்டியில் துணிகளை எல்லாம் அடுக்கிக் கொண்டிருக்க, வெளியே அழைப்பு மணி அடித்தது. ரஞ்சன் திறந்து கொள்வான் என்று அவள் வேலையைத் தொடர, மீண்டும் அழைப்பு மணி அடித்தது. அதன் பிறகு இன்னும் இரண்டு முறை அடிக்கவும் அறையை விட்டு வெளியே வந்தாள்.

ரஞ்சனைக் காணவில்லை. வேறு வழியில்லாமல் அவளே சென்று கதவைத் திறந்தாள். எதிரே பதினாறு வயது இளம் பெண்.

எங்கேயோ பார்த்த முகம் போல இருந்தது. அவள் யாரென்று கேட்பதற்குள், “நான் ரத்னா, ரஞ்சன் தங்கச்சி” என்றாள்.

“இப்பதான் ஞாபகம் வருது... ஒரே ஒரு தடவை பார்த்திருக்கோம் இல்ல... உள்ளே வா” என்றவள் கதவை நன்றாகத் திறந்துவிட்ட நொடி, “ரத்னா நீ எப்போ வந்த?” என்று அவசரமாகத் தன் மேற்சட்டையை அணிந்து கொண்டே வந்தான் ரஞ்சன்.

"அண்ணா" என்று ஓடி வந்து அவனைத் தழுவிக் கொண்டவளிடம், "நீ மட்டும் தான் வந்தியா?" என்று ரஞ்சன் கேட்கும்போதே, "இல்ல, தாத்தாவும் பாட்டியும் பின்னாடி வராங்க” என்றாள் ரத்னா.

அந்த நொடியே கவிதாவின் முகம் மாறியது. அதனை ரஞ்சனும் கவனித்தான்.

உடனடியாக அறைக்குள் சென்று கதவை மூடிக் கொண்டாள்.  ‘நீ தாத்தா தாத்தான்னு பாசமா கூப்பிடுற அந்த மனுஷன்...’ அவள் விரல்கள் தன்னிச்சையாக நடுங்கின. அம்மாவின் ஆவேசமும் ஆதங்கமும் கலந்த குரல் அவள் காதுகளில் ரீங்காரமிட்டது.

அதேநேரம் கதவும் தட்டப்பட்டது. “கவிதா...” ரஞ்சனின் குரல்.

அவள் பதில் சொல்லவில்லை.

“தாத்தா உங்ககிட்ட பேசணும்னு சொல்றாரு...”

அவள் கண்களை மூடிக்கொண்டாள். மீண்டும் கதவு தட்டப்பட்டது. “கவிதா...” இந்த முறை, பிரகாஷின் குரல்.

அவள் உடலுக்குள் ஒரு மெல்லிய அதிர்வு ஓடியது.

“நீ கதவைத் திறக்க வேண்டாம்... என் முகத்தையும் பார்க்க வேண்டாம்... ஒரு மன்னிப்பு மட்டும் கேட்டுட்டு கிளம்புறேன்.” என்றார் பிரகாஷ் தழுதழுத்த குரலில்.

கவிதா கதவைத் திறந்தாள். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பார்த்ததற்கும் இப்போதுக்கும் நிறைய வித்தியாசம். முதுமையின் தாக்கத்தால் இன்னும் தளர்ச்சியடைந்து காணப்பட்டார். மௌனமாக அவரை உள்ளே அனுமதித்து கதவை மூடினாள்.

“நீ என்னை பார்க்கவே மாட்டேன்னு நினைச்சேன்”

“பார்க்கவே கூடாதுன்னுதான் நானும் நினைச்சேன்... ஆனா உங்க குரலைக் கேட்டதும், என் சின்ன வயசு ஞாபகமெல்லாம் வந்துருச்சு. அதுவும் இல்லாம வெளியே உங்க பேரன் பேத்தி இருக்கும் போது நீங்க என்கிட்ட கெஞ்சறது... தெரியல, கோபம் இருந்தாலும் உங்க மேல இருக்கிற மரியாதை எனக்குக் குறையல” என்று சொல்ல, அவர் கண்கள் பனித்தன.

“என்னை மன்னிச்சிடுமா” என்று அவர் கைகூப்பவும், “தாத்தா ப்ளீஸ், இப்படியெல்லாம் பண்ணாதீங்க. கையை இறக்குங்க... இறக்குங்க” என்றாள்.

“இல்ல, நான் செஞ்சது மன்னிக்கவே முடியாத தப்பு... இன்னும் சொல்லப்போனா துரோகம்.”

“சரி விடுங்க... நீங்க உங்க பேரனுக்காகச் செஞ்சீங்க.”

“ஆமா, அவனுக்கு நல்லது செய்றதா நினைச்சு உனக்கு அநியாயம் செஞ்சுட்டேன்.”

“எனக்கு நீங்க அநியாயம் எல்லாம் செய்யல” என்றதும் அவர் குழப்பத்துடன் பார்த்தார்.

“ஒருவேளை நீங்க இதைச் செய்யலனா நான் நியூயார்க் போயிருக்கவும் மாட்டேன். ஸ்ரீதரை பார்த்திருக்கவும் மாட்டேன்...” என்றவள் கண்களின் ஓரம் கசிந்த நீரைத் துடைத்துக்கொண்டாள்.

“கவிதா” என்றவர் தவிப்புடன் பார்க்க, “விடுங்க எல்லாம் முடிஞ்சு போச்சு” என்று விரக்தியாகப் பேசினாள்.

அவர் மனம் ஆறவே இல்லை. வேதனையுடன் அவளைப் பார்த்துவிட்டு மீண்டும் கதவை நோக்கிப் போக, “ஒரு நிமிஷம்” என்று நிறுத்தினாள்.

“உங்ககிட்ட ஒரே ஒரு கேள்வி கேட்கணும். ரஞ்சன் கேட்டான்னு என்னை ஏமாத்திக் கல்யாணம் பண்ணி வச்சது கூடப் பரவாயில்லை. ஆனா ரஞ்சனோட அப்பா ஒரு கொலை பண்ணியிருக்காரு... அதை மறைச்சு, பணபலத்தை வச்சு அவரைக் காப்பாத்துனீங்களே... அது எப்படி நியாயமாகும்? நான் பார்த்த பிரகாஷ் தாத்தா இப்படிப்பட்டவர் இல்லையே?” என்று அவள் பேசியதைக் கேட்டவர் முகம் இருளடைந்தது.

“இந்தக் கேள்வி என் மனசுல உறுத்திட்டே இருந்துச்சு... கேட்டுட்டேன். மத்தபடி நீங்க இதுக்கு பதில் சொல்லணும்னு எந்தக் கட்டாயமும் இல்லை.”

அவர் தொண்டையைக் கனைத்தபடி, “இந்தக் கேள்விக்கு நான் பதில் சொல்றேன்... ஆனா நான் சொல்றது ரஞ்சனுக்கு ஒருநாளும் தெரியக்கூடாது. இந்த விஷயத்தை யாருமே தெரிஞ்சுக்கிறதை அவன் விரும்ப மாட்டான், முக்கியமா நீ” என்றார்.

அவர் என்ன விஷயத்தை சொல்ல இப்படி பீடிகை போடுகிறார் என்று யோசனையுடன் பார்க்க, “ரஞ்சன் அம்மா இறந்த பிறகு ரத்னாவைக் கூட்டிட்டுச் சாரதா ஊருக்கு வந்துட்டா. அவன் மட்டும்தான் அவங்க அப்பா கூட இருந்தான். ராகவன் பத்திதான் உனக்குத் தெரியுமே... ரொம்ப ஸ்ட்ரிக்ட்.

எதுக்கெடுத்தாலும் ரஞ்சனை அடிச்சுட்டே இருப்பான். இந்த நிலைமையில்தான் அவங்க வீட்டுல ஒரு வேலைக்காரன் சேர்ந்தான். அவன் ரஞ்சனுக்கு துணையா இருந்தான். அவன் அடி வாங்கும்போது எல்லாம் ஆறுதலா பேசுனான். இப்படியே ஒரு நாள் ஆறுதல் சொல்ற பேர்ல அவனை அப்யூஸ் பண்ண ஆரம்பிச்சுட்டான்... இது ஒரு நாள் ரெண்டு நாள் இல்ல, கிட்டத்தட்ட ரெண்டு வருஷமா...” என்றவர் சொல்லிக்கொண்டிருக்கும் போதே, “ஓ மை காட்!” என்று அதிர்ச்சியில் வாயை மூடிக்கொண்டாள்.

“ராகவனுக்கு எப்படியோ விஷயம் தெரிஞ்சுருச்சு. ஆனா அதுக்குள்ள அந்த வேலைக்காரன் தப்பிச்சு ஊரை விட்டே ஓடிட்டான். வேலூருக்கு மாற்றலாகிப் போனப்போதான் அவனைத் திரும்பவும் பார்த்திருக்கான்”

“அப்போ ராகவன் லாக்-அப்ல வச்சு அடிச்சுக் கொன்னது இந்த ஆளைத்தானா?”

“ஆமாம்... இந்த உண்மையை ரஞ்சன் அன்னைக்கு என்கிட்ட சொல்லித் தான் அவங்க அப்பாவைக் காப்பாத்தச் சொன்னான்” என்றவர் மூச்சு வாங்கி நிறுத்தினார்.

அவள் புரிந்தது போலத் தலையசைத்தாள்.

“ராகவன் நல்லவன் எல்லாம் இல்லை, ஆனா ரஞ்சனைப் பொறுத்தவரைக்கும் அவங்க அப்பா கெட்டவனும் இல்லை. அவங்களுக்குள்ள சுமூகமான உறவே இல்லைனாலும் ரஞ்சன் அவங்க அப்பாவை நேசிச்சான். அவனுக்காக அவர் கொலை பண்ணப்போ இன்னும் அவர் மேல இருந்த அன்பு அதிகமாச்சு. அந்த அன்பை அவன் காட்டினதில்லை. இதெல்லாமும் ஒரு நாள் மாறுச்சு, ஒரு அதிசயம் நடந்துச்சு. ரஞ்சன் மேடையில பேசுனதைப் பார்த்து ராகவன் அப்படியே மகனை கட்டிப்பிடிச்சுக்கிட்டான்...” என்றவர் நெகிழ்ச்சியுடன் சொல்லக் கேட்டு அவள் வியப்புற்றாள். அன்று அந்த காட்சியை அவளும் பார்த்தாள்தானே.

“அடுத்த நாளே ராகவன் இறந்துட்டான், அளவுக்கு அதிகமா குடிச்சு”

“என்ன சொல்றீங்க?”

“தன் புள்ளையை அவன் எப்படிப் பார்க்கணும்னு நினைச்சானோ, அப்படிப் பார்த்துட்டான்ற திருப்தி. குற்றவுணர்வுல குடிச்சுட்டு இருந்தவன், அன்னைக்குச் சந்தோஷமா குடிச்சுட்டுச் செத்துப் போயிட்டான். என்னைப் பொறுத்தவரைக்கும் அது நல்ல சாவுதான்.”

அவளுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.

“இதெல்லாம் உன்னாலதான் நடந்துச்சு... ரஞ்சன் இன்னைக்கு இந்த நிலைமையில இருக்கவும் நீதான் காரணம்.”

“நீங்களுமே அவனை மாதிரியே பேசாதீங்க. நான் அவனுக்கு சில விஷயங்கள் சொல்லித் தந்தேன்தான். ஆனா அவனோட வளர்ச்சிக்கு அவன்தான் காரணம். அவன் உழைப்பு, முயற்சி இதெல்லாமும்தான் காரணம்.”

“இன்னமும் நீ அவனுக்கு என்ன செஞ்சிருக்கன்னு உனக்கு புரியல. அந்த வேலைக்காரனை நம்பினதால ஏற்பட்ட மோசமான அனுபவத்தால அவன் மனுஷங்களையே நம்பாம இருந்தான். நீ அவன் வாழ்க்கையில வர்ற வரைக்கும் அவனுக்கு ஒரே ஒரு ஃப்ரெண்ட் கூட இல்லை. ஆனா இன்னைக்கு அவன் சாதாரணமா எல்லோர் கூடவும் பழகுறான், பேசுறான், பல கோடி ரூபாய் பிசினஸ் நடத்திட்டு இருக்கான்னா அதுக்கு நீதான், நீ மட்டும்தான்மா காரணம்.”

அவள் நெகிழ்ந்து போனாள்.

“அவனுக்கு ஏன் என்னை பிடிச்சது? நான் காலேஜ்ல அவன் கூடப் பேசுனது கூட இல்லையே.”

“ஆனா அவனுக்காக நீ சண்டை போட்டுருக்க. அவனை கிண்டல் செஞ்சவங்களை எதிர்த்துக் கேள்வி கேட்டுருக்க. அவன் என்கிட்ட சொன்னான்... இதெல்லாம் ஒரு காரணமான்னு உனக்குத் தோணலாம். ஆனா அவனை மாதிரி உள்ளுக்குள்ளேயே உடைஞ்சு போயிருந்த ஒருத்தனுக்கு இது ரொம்பப் பெரிய விஷயம். வாழ்க்கை முழுக்கவும் நீ அவன் கூட இருக்கணும்னு ஆசைப்பட்டதுக்கு அவனுக்கு இந்த ஒரு காரணம் போதாதா?. எனக்குத் தெரிஞ்சு அவனுக்கு உன் மேல இருந்தது வெறும் ஈர்ப்போ காதலோ மட்டும் இல்லை... இட்ஸ் பியான்ட் தட்” என்றவர் சொல்லிவிட்டுச் செல்ல, அவள் உறைந்து நின்றாள்.

இத்தகைய துயரத்திலிருந்தெல்லாம் தன்னால்தான் அவன் மீண்டெழுந்தான் என்பதை நினைக்கவே அவளுக்கு மலைப்பாக இருந்தது.

அதுவும், 'உன்னைக் காதலிச்சதுக்காக நான் அவமானப்படுறேன்' என்று அவனிடம் சொன்ன வார்த்தைகள் இப்போது அவள் நெஞ்சைச் சுட்டன.  அத்தனை காயங்களுக்குப் பிறகும் அவன் தனக்காக நின்றிருக்கிறான்.

 மீண்டும் கதவுத் தட்டும் சத்தம். முகத்தைத் துடைத்துக்கொண்டு வெளியே வர, ரத்னா நின்றிருந்தாள்.

“ரத்னா வேண்டாம்” என்று ரஞ்சன் அதட்டும் போதே அவள் தன் கையிலிருந்த சிறிய பரிசுப் பொருளை கவிதாவிடம் நீட்டினாள்.

“இதை அண்ணன் உங்களுக்காகத்தான் வாங்குச்சு” என்று சொல்லும்போதே ரஞ்சன் அதனை பறித்துக் கொண்டான்.

தமையனை முறைத்தவள், “அவங்களுக்காகத்தானே வாங்குன, அப்போ கொடுக்க வேண்டியதுதானே?” என்றாள்.

“இப்போ அதை நான் கொடுக்குற மனநிலையிலும் இல்லை, அவங்க வாங்கிக்கிற மனநிலையிலும் இல்லை” என்று கூறிவிட்டு அவன் அதனை மீண்டும் தன் அறைக்குள் கொண்டு போய் வைத்தான்.

“அதுல என்ன இருக்கு?” என்று கவிதா ரத்னாவைக் கேட்க, “எனக்குத் தெரியாது... ஆனா இந்த மாதிரி பீரோ நிறைய உங்க பேர் போட்டு வச்சிருக்கான். அதுல இது ஒன்னு, அவ்வளவுதான்” என்றவள் ஆதங்கத்துடன், “ஆனா நீங்கதான் எங்க அண்ணனோட காதலைப் புரிஞ்சுக்கவே மாட்டேங்கிறீங்க” என்றாள்.

கவிதா எதுவும் பேசவில்லை.

“ரத்னா போதும” என்று அதட்டிய ரஞ்சன், “தாத்தா, இவளை முதல்ல கூட்டிட்டுப் போங்க. பிளைட்டுக்கும் டைம் ஆகுது, நாங்க கிளம்பணும்” என்றான்.

“நானே கிளம்பிட்டேன்” என்று ரத்னா உதட்டைச் சுழித்துக் கொண்டே வெளியேறிவிட, “நாங்க கிளம்புறோம்... நீயும் பார்த்துப் போயிட்டு வாம்மா” என்று பிரகாஷ் அவளிடம் சொன்னார்.

அப்போதுதான் சாரதா அவளைக் கவனித்தார். அவர் திகைப்புடன், “ராணி... ராணிம்மா... நீ இங்கேதான் இருக்கியா?” என்று கவிதாவை அணைத்துக் கொண்டார். அவளுக்கு ஒன்றும் புரியவில்லை.

“ஐயோ, அது ராணி இல்லை... சாரதா சொல்றதைக் கேளு... ராணி நம்ம வீட்டுல இருக்கு” என்று பிரகாஷ் அவரைச் சமாதானம் செய்து அழைத்துச் செல்வதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டது.

அவர்களை வழியனுப்பி விட்டு ரஞ்சன் உள்ளே வர, “ஆமா உங்க பாட்டிக்கு என்னாச்சு? அவங்க ஏன் என்னை ராணின்னு கூப்பிட்டாங்க?” என்று கேட்டாள்.

“எங்க அம்மா பெயர் ஜெயராணி... பாட்டி அவங்களை ராணின்னுதான் கூப்பிடுவாங்க. பாட்டிக்கு அல்சைமர் வந்ததுல இருந்து இப்போ யார் முகமும் ஞாபகத்துல இல்லை. என்னையும் ரத்னாவையும் கூட ஞாபகம் இல்லை. தாத்தாவை மட்டும் ஞாபகம் இருக்கு, அப்புறம் எங்க அம்மா ராணி... என்னவோ உங்களைப் பார்த்ததும் அவங்களுக்கு எங்க அம்மா மாதிரி தெரிஞ்சுருக்கு” என்றான்.

அவன் சொன்னதைக் கேட்டவளுக்கு நெஞ்சை அடைத்தது.

“எல்லாம் எடுத்து வச்சுகிட்டீங்களா? கிளம்பலாமா?” என்ற அவன் கேள்விக்கு அவள் தலையை மட்டும் அசைத்தாள்.

“அஜய் அண்ணா டிராஃபிக்ல மாட்டிகிட்டாராம்... நம்ம கிளம்பிடுவோம், அவர் நேரா ஏர்போர்ட் வந்துடுவாரு” என்றவன் சொன்னதெல்லாம் அரைகுறையாகத்தான் அவள் மூளைக்குள் பதிவானது.

“கிளம்பலாமா?” என்று கேட்டு அவள் பெட்டியை அவன் எடுத்துக்கொண்டான். அந்த வீட்டைச் சுற்றி ஏக்கமாகப் பார்வையைச் சுழலவிட்டாள். அவன் வீட்டைப் பூட்டினான்.

மின்தூக்கியில் ஏறியதும் பழைய நினைவுகள் எல்லாம் மொத்தமாக அவளை அடித்து சாய்த்தன.

ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்கக் முடியாத ஒரு இறுக்கம். தவிப்பு... பத்து, ஒன்பது, எட்டு என்று எண்கள் குறைந்து கொண்டே வந்தன.

ஐந்தாவது தளம். திடீரென ஒரு குலுக்கல். மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதில் கவிதா ரஞ்சனின் கையைப் பற்றிக் கொண்டாள்.

அவனது கையின் வெப்பம் அவளை ஏதோ செய்தது. சட்டென உணர்வு பெற்று கையை விடுவித்துக் கொண்டாள்.

அவன் முகத்தில் எந்தவித சலனமும் இல்லை. ஆனால் அவள் விரல்கள் பற்றிய இடத்தில் ஒருவித சில்லிட்ட உணர்வு.

அந்த ஒரு பிடியில்... அந்த ஒரு நொடியில்... ஆயிரம் வார்த்தைகளில் சொல்ல முடியாத ஒரு நெருக்கம் அவர்களுக்கு இடையில் வந்து போனது.

மின்தூக்கி மீண்டும் இயங்கியது.

கதவு திறக்க, இருவரும் எந்திரத்தனமாக நடந்தனர்.

காரில் ஏறி விமான நிலையம் வந்து இறங்கும் வரை அவர்களுக்குள் வெறும் மௌனம் மட்டுமே. ஆனால் அது பழைய கசப்பான மௌனம் அல்ல. வார்த்தைகளால் சொல்ல முடியாத பல உணர்வுகளின் மௌனம்!

 

You cannot copy content