You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

மதிப்புக்குரியவள் - அத்தியாயம் 4

Quote

அத்தியாயம் – 4

“ரஞ்சன் கிளம்பிடாத இரு... உன்கிட்ட கொஞ்சம் பேசணும்” என்று அஜய் அவனை நிறுத்திப் பிடித்தான்.  

உறவினர்கள் நண்பர்கள் எல்லோரும் கிளம்பி சென்ற பிறகு, “நீ மேலே போ... நான் வரேன்” என்றவன் பியர் பாட்டிலும் கிளாஸுமாக வர, “கீழே அண்ணியோட சொந்தகாரங்க எல்லாம் இருக்காங்க” என்று ரஞ்சன் பதறினான்.  

“அவங்களுக்கு எல்லாம் தனியா வாங்கி கொடுத்துட்டேன்... நீ வா உக்காரு. நம்ம அடிப்போம்” என்றவன் சம்மணம் போட்டு தரையில் அமர்ந்து கொள்ள,

“வேணாம் அண்ணா, கார் ஓட்டிட்டு போகணும்” என்று மறுத்தான்.

“எதுக்கு ஓட்டிட்டு போற, நைட்டு இங்கேயே தங்கிடு”

“அது சரியா வராது. ஏற்கனவே உங்க சொந்தகாரங்க நிறைய பேர் இங்க தங்கி இருக்காங்க”

“அதனால்தான் ஆனந்திகிட்ட பாயும் தலகாணியும் எடுத்துட்டு வர சொல்லி இருக்கேன். நம்ம இரண்டு பேரும் இப்படியே பாயை விரிச்சு போட்டு படுத்துக்கலாம்”

அப்போதும் ரஞ்சன் தயக்கத்துடன் நின்றான்.

“இப்போ உட்கார போரியா இல்லையா”  

மெதுவாக அருகே அமர்ந்தவன், “இல்ல, கல்யாண நாள் அதுவுமா அண்ணி கூட டைம் ஸ்பென்ட் பண்ணலன்னு கோவிச்சுக்க மாட்டாங்களா?” என்று கேட்க,

 “அதெல்லாம் கோவிச்சுக்க மாட்டா. அதுவும் இல்லாம அவங்க அம்மா அக்காலாம் வந்திருக்காங்க. எப்பயாச்சும்தான் அவங்களும் வராங்க. அவங்க கூட அவ தனியா பீரியா பேசிட்டு இருப்பானுதான் விட்டுட்டு வந்தேன்.

அதுவும் இல்லாம நல்ல லவ்வுங்கிறது கூடவே கையை பிடிச்சுக்கிட்டு இருக்கிறது இல்ல. தேவையான நேத்துல விலகி வந்து அவங்களுக்கான தனிப்பட்ட ஸ்பேஸ் கொடுக்கிறதும்தான். அதேபோல ஆனந்தியும் என்னுடைய பெர்சனல் ஸ்பேஸ்ல எப்பவும் மூக்கை நுழைச்சது இல்ல” என்று அஜய் பேசிக் கொண்டே பியரை ஊற்றித் தந்தான்  

“நீங்களும் அண்ணியும் மேட் பார் ஈச் அதர் பேர் ண்ணா”

 “ஆனா நீயும் கவியும் அந்த மாதிரியான பேர் இல்லடா.” என்று அஜய் கம்மிய குரலில் சொல்லிவிட்டு, “பேசாம அவ கேட்ட மாதிரி டிவோர்ஸ் பண்ணிட்டு உன் வாழ்க்கையை நீ பாரு. உனக்கான ஒருத்தியை தேடி கண்டுபிடி. கல்யாணம் பண்ணிக்கோ. நீயும் எங்களை போல சந்தோஷமா வாழுடா” என, ரஞ்சன் முகம் சுருங்கியது. 

மனம் தாங்காமல் அருகே இருந்த பாட்டிலை எடுத்து மொத்தமாக வாயில் சரித்துக் கொண்டான்.

 “டேய் டேய் பொறுமையா குடிறா”

சொல்லச் சொல்ல கேட்காமல் மொத்தமாகக் குடித்துவிட்டு நிமிர்ந்தவன், “கவிதாவை தவிர வேற எந்த பொண்ணையும் என்னால இனிமே நினைச்சு கூட பார்க்க முடியாது. சத்தியமா முடியாது” என்றான்.

 “பெரிய பூவே உனக்காக விஜய் இவரு. ஒரு தடவைதான் காதல் பூ பூக்கும். அது பூத்து குலுங்கிருச்சுனு டயலாக் பேசிட்டு இருக்கான். டேய் அவ உன்னை ஒரு பொருட்டா கூட மதிக்காம தூக்கி போட்டுட்டு போயிட்டா. நீ என்னவோ அவளை தவிர உன் வாழ்க்கைல வேற யாருக்கும் இடம் இல்லன்னு சொல்லிட்டு இருக்க.

உனக்கு புரியுதா இல்லையா? அவ வாழ்க்கைல உனக்கே இடம் இல்லடா. லீகலா டிவோர்ஸ் வேணும்னு கேட்குற. அதை கூட அவ முன்னாடியே கேட்காம ஏன் இப்போ கேட்குறானு உன் மரமண்டைக்கு உறைக்கலையா?” என்று  அஜய் கடுப்பாகக் கத்த, ரஞ்சன் அவனைக் குழப்பமாகப் பார்த்தான்.

“அவ வேற எவன் கூடவோ கமிட் ஆகிட்டாடா. அந்த உறவுக்கு இந்த கல்யாணம் இடைஞ்சலாகிட கூடாதுன்னுதான் மூணு வருஷம் கழிச்சு வந்த இப்போ டிவோர்ஸ் கேட்குறா. அவ மூவ் ஆன் ஆகிட்டா ரஞ்சன். நீயும் அவளை மறந்துட்டு அடுத்த வேலையை பாரு”

அஜய் சொன்னதை எல்லாம் நிதானமாக கேட்டிருந்த ரஞ்சனின் உதடுகள் துடித்தது.

 “இல்ல அண்ணா, கவிதா அப்படி எல்லாம் செய்ய மாட்டாங்க” என்று மனக்குமுறலுடன் கூற, அஜய் தலையிலடித்துக் கொண்டான்.   

“ரியாலிட்டிக்கு வாடா. மூணு வருஷமாகிடுச்சு... இட்ஸ் ரியலிய லாங் டைம். வேற மனுஷங்க வேற வாழ்க்கைனு அவ கடந்து போயிருக்க நிறைய வாய்ப்பு இருக்கு.”

அஜய் பேசப் பேச ரஞ்சனால் தாங்க முடியவில்லை. எதார்த்தம் இதுதான் என்றாலும் மனம் ஏற்க மறுத்தது. யாரோ இதயத்தை அழுத்தி பிழிவது போல வலித்தது.

“இல்ல அப்படி எல்லாம் இருக்காது” என்று மீண்டும் முனகினான்.   

“ஏன் இருக்காது? உன் கூட இருந்த காலகட்டத்துல அவ எப்பயாச்சும் உன்னை லவ் பண்ணதா சொல்லி இருக்காளா?”

ரஞ்சனிடம் பதிலில்லை.

“பதில் சொல்லு. சொல்லி இருக்காளா?” என்றவன் அழுத்தமாகக் கேட்க, அவன் மறுப்பாகத் தலையசைத்தான்.

“சரி நீயாச்சும் அவகிட்ட நான் உன்னை காதலிக்கிறேன்னு சொல்லி இருக்கியா?”

அவன் தலை அதற்கும் மறுப்பாக ஆடியது.

“அப்புறம் எந்த நம்பிக்கைல அவ உன்னையே நினைச்சுட்டு வாழ்ந்துட்டு இருப்பானு நீ நினைக்குற”

‘எந்த நம்பிக்கையில்?...’ ரஞ்சனுக்கும்  அதற்கு பதில் தெரியவில்லை.

“நீ  அவளுக்காக காத்திட்டு இருந்தா உன் வாழ்க்கையே வீணா போயிடும்டா”

அஜய் மேலும் பேச ரஞ்சனின் உதடுகள் இறுக பூட்டிக் கொண்டன.

“சாரி, உன் மனசை கஷ்டபடுத்தணும்னு நான் நினைக்கல”

அவனிடம் எந்த பதிலும் இல்லை. எந்தவிதமான உணர்வுகளும் இல்லை. தலையைத் தாழ்த்தி இருந்ததால் அழுகிறானா என்று கூட தெரியவில்லை

“ரஞ்சன்” என்று அஜய் அவன் கைகளைத் தொட்ட நொடி, சரேலென்று எழுந்து கொண்டான்.

“நான் வீட்டுக்கு கிளம்புறேன்”

“குடிச்சு இருக்கடா, எப்படி கார் ஓட்டிட்டு போவ நீ?”

“காலையில ஆபிஸ்க்கு வண்டியை எடுத்துட்டு வந்துருங்க” என்றவன் பேன்ட் பாக்கெட்டிலிருந்த சாவியை சுவரின் மீது வைத்துவிட்டு விடுவிடுவென்று இறங்கிச் சென்றுவிட்டான்.

அஜய் இதை எதிர்பார்க்கவில்லை.  

“ரஞ்சன்... ரஞ்சன் நில்லு... டேய்” என்று எழுந்து அவனை பிடிப்பதற்குள் வேகமாக முன்னேறிச் சென்றுவிட்டான்.

நடந்ததை எல்லாம் பார்த்த ஆனந்தி, “என்ன அஜய், என்னாச்சு? ரஞ்சன் இங்கேதானே தங்க போறாருனு சொன்னாங்க. ஏன் கிளம்பி போறாரு” என்று விசாரித்தாள்.

 “இல்ல பேசிட்டே இருக்கும் போது கவி வாழ்க்கைல வேற யாராவது வந்திருப்பாங்கனு சொன்னேன்...” என்று சொல்லி முடிப்பதற்குள், “என்ன அஜய் நீ” என்று கணவனை அதிருப்தியுடன் பார்த்தாள்.

அஜயிற்கும் என்ன செய்வதென்று புரியவில்லை. அடுத்த நாள் அலுவலகத்திற்குச் சென்று பேசிக் கொள்ளலாம் என்று நினைத்தான். ஆனால் ரஞ்சன் அலுவலகத்திற்கே வரவில்லை. செல்பேசியும் அணைத்து வைக்கப்பட்டிருப்பதாக வந்தது.

வேலைகள் முடிந்ததும் அஜய், ரஞ்சனின் காரை எடுத்து கொண்டு அவன் அடுக்குமாடிக் குடியிருப்பிற்குச் செல்ல, கதவு பூட்டப்பட்டிருந்தது.

காவாலாளியிடம் கேட்டதற்கு, “நான் காலையில இருந்து சாரை பாக்கவே இல்லயே” என்றான்.

“அப்போ நைட்டு வரலையா?”

“அது நைட்டு ட்யூட்டி செக்யூரிட்டிகிட்டதான் சார் கேட்கணும்”

யோசனையுடன் நின்ற அஜய் பின்னர் கார் சாவியை நீட்டி, “ரஞ்சன்கிட்ட இந்த சாவியை கொடுத்துட முடியுமா?” என்று கேட்க, அவனும் சரியென்று வாங்கிக் கொண்டான்.

ஆனால் அடுத்த இரண்டு நாளும் ரஞ்சன் அலுவலகத்திற்கு வரவில்லை. செல்பேசி இணைப்பும் கிடைக்கவில்லை.

பயந்து போன அஜய் அன்று மதியமே அண்ணா நகரிலுள்ள ரஞ்சனின் தாத்தா வீட்டிற்கு வந்தான். கவியைப் பார்க்க அடிக்கடி அவன் அங்கே வருவதுண்டு.

அந்த பெரிய கேட்டின் முன்பாக காரை நிறுத்த, கவிதாவின் நினைவு வந்தது. இருவரும் இதே காம்பவுண்டில் பேசி சிரித்ததை எல்லாம் மனம் அசைபோட்டது.

அவனைப் பார்த்ததுமே காவலாளி புன்னகையுடன் கேட்டை திறந்துவிட்டார்.

‘பிரகாஷ் இல்லம்’ என்று பெரிதாக பொரிக்கப்பட்டிருந்தது. 

“கவி ஓடாதே... ஓடாதன்னு சொல்றேன் இல்ல”

“முடிஞ்சா பிடிச்சு பாரு”

அவளை பிடிக்கிறேன் பேர் என்று அஜய் ஓட முடியாமல் தடுக்கி அவள் மீதே சாய்ந்தான். அந்த விசாலமான புல்தரையில் இருவரும் ஒருவர் மீது ஒருவர் விழுந்துவிட்டனர்.

இந்த காட்சியை ஜன்னல் வழியாகப் பார்த்த காமாட்சி அதிர்ந்து வெளியே ஓடிவந்தார்.

 “சீ சீ என்னது இது அசிங்கமா... எழுந்திருடி... என்ன வயசாவது உனக்கு. ஆம்பள பையன் மேல விழுந்து எந்திருச்சு. இப்படியா, சை” என்று கன்னாபின்னாவென்று திட்ட, அஜய் சங்கடத்துடன் நின்றான்.

அவர் பேச்சில் சீற்றமான கவிதா, “ம்மா போதும். நான் ஒன்னும் அவன் மேல விழணும்னு விழல. தெரியாம நடந்து போச்சு. நீ சும்மா ஓவரா சீன் போடாத” என்று சொல்லி முடிப்பதற்குள் கன்னத்தில் பளீரென்று ஒரு அறை விழுந்தது.

 “ஆன்ட்டி” என்று அஜய் பதற, “காமாட்சி” என்று கம்பீரமான அதட்டல் பின்னிருந்து வந்தது.

ஜெயபிரகாஷ். உஜாலா விளம்பரம் போல வெள்ளை வெளேரென்று தலைமுடி. உயரமும் கம்பீரமுமான தோற்றம். அந்த மனிதரை பார்த்ததுமே, “பாருங்க தாத்தா, எப்படி பேசுறாங்கனு” என்று கவிதா ஓடிச் சென்று அவர் அருகே நின்றாள்.

கவிதா யார் பேச்சையாவது மறுவார்த்தை இல்லாமல் கேட்பதாக இருந்தால் அது அவருடைய பேச்சை மட்டும்தான். அவளின் மதிப்புகுரிய நபர்கள் பட்டியலில் அவருக்குத்தான் முதலிடம்.     

“இப்போ என்ன தப்பு பண்ணிட்டானு அவ மேல கையை நீட்டுன நீ. குழந்தைங்க காமாட்சி அவங்க” என்று அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே இடையிட்ட கவிதா,

“நாங்க ஒன்னும் குழந்தைங்க இல்ல. எங்க வயசுக்கு உண்டான அறிவும் தெளிவும் எங்களுக்கு இருக்கு. நான் அஜயை பிரண்டாத்தான் பார்க்குறேன். அவனும் என்னை அப்படித்தான் பார்க்குறேன்” என்றாள்.

 “பாருங்க ஐயா. உங்க முன்னாடியே எவ்வளவு திமிரா பேசுறானு” என்று காமாட்சி மகளைக் கடுமையாக முறைத்தார்.

“இதுக்கு பேர் திமிரு இல்ல காமாட்சி, தெளிவு. நீ இப்படியொரு பொண்ணை பெத்ததுக்கு பெருமை படணும்” என்று சொல்லி கவிதாவை பார்த்த ஜெயபிரகாஷ் கண்களில் அளப்பரிய ஏக்கமும் ஆற்றாமையும் வெளிப்பட்டது.

மகள், மனைவி, பேரன், பேத்தி என்று எல்லோருமே பிரகாஷிற்கும் இருந்தும் இல்லாத நிலைமைதான். சபலத்தால் அவர் செய்த ஒரு தவறு, அவரை தன் குடும்பத்திடமிருந்து மொத்தமாகப் பிரித்துவிட்டது.

 தனிமையில் தவித்துக் கொண்டிருந்த பிரகாஷின் வாழ்வில் வந்த ஒளிதான் கவிதா. அங்கே சமையல் வேலை செய்யும் காமாட்சியின் மகள். அப்பா, குடும்பம் என்று எந்த ஆதரவும் இல்லாத பெண்.

அதனால் கவிதாவும் அம்மாவுடன் அங்கேதான் வசித்தாள். அவள் ஒருமுறை பள்ளியில் சொல்லிக் கொடுத்த ஆங்கிலப் பாடலைப் பாட முயன்று கொண்டிருந்தாள். ஆனால் அந்த வார்த்தைகளின் உச்சரிப்புகளை அவள் தாறுமாறாக பாடுவதை பார்க்க பிரகாஷிற்கு சிரிப்பு வந்தது.

“நான் நல்லாதானே பாடுனே. ஏன் சிரிக்குறீங்க?” குட்டி பெண்ணாக இருந்தாலும் அவள் துணிச்சலாக கேள்வி கேட்டாள். பிரகாஷ் அவளின் தைரியத்தை ரசித்தார்.

“இல்ல நீ பாடுனது தப்புமா”

“அப்போ சரியா பாடுறது எப்படி தாத்தா?”

அவள் கேட்ட விதம் அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. அவரே அவளுக்கு சரியாகப் பாட சொல்லி கொடுத்தார். அப்படியே பிடித்து கொண்டவள் அச்சு பிசகாமல் அவருக்கு அதே உச்சரிப்புடன் பாடிக் காட்டினாள்.

வியப்படைந்த பிரகாஷ் கவிதாவின் படிப்பைத் தன்னுடைய பொறுப்பில் எடுத்து கொண்டார். பள்ளி, கல்லூரி கட்டணம் என்று அத்தனையும் செய்தார். அவள் வியாபாரம் செய்யப் போவதாகச் சொன்ன போது முழு மூலதனமும் போட முன்வந்தார். ஆனால் கவிதா அதனை ஏற்கவில்லை.

இருப்பினும் ஆர்டர்கள் அதிகமாக அதிகமாக அவளுக்கு நெருக்கடி ஏற்ப்பட்டது. குடோன் ஒன்றை வாடகைக்கு எடுக்க வேண்டியிருந்தது.  பணம் நிறைய தேவைப்பட்டது.

நண்பர்களின் உழைப்பெல்லாம் வீணாகிவிடக் கூடாது என்று யோசித்த கவிதா, பிரகாஷிடம் உதவி கோரினாள்.

அவர் பணம் தர தயாராக இருந்தாலும் கவிதா அதனை இலவசமாகப் பெற்றுக் கொள்ளத் தயாராக இல்லை. அன்றிலிருந்து ‘கவி வியர்ஸ்’ பிரகாஷ் குழுமங்களில் இணைக்கப்படுவதாக முடிவானது.

 “இது சரியா வராது கவிதா” அஜய் வேண்டாமென்றான்.

“இதெல்லாம் கொஞ்ச நாளைக்குதான் அஜய். நம்ம கம்பனி நல்லா வளர வரைக்கும்” என்று கவிதா அவனை ஒரு மாதிரி சமாதானம் செய்து சம்மதிக்கவும் வைத்துவிட்டாள்.

அடுத்த இரண்டு மாதத்தில் அவர்கள் நிறுவனமும் நல்ல வளர்ச்சியைக் கண்டது.

அந்த சமயத்தில்தான் எதிர்பாராவிதமாக பிரகாஷ் குழுமத்தின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. வழக்கு போட்டது ஜெயபிரகாஷின் மருமகன் ராகவன். அந்தச் சொத்து, வியாபாரம் என அனைத்திலும்  அவர்கள்  குடும்பத்திற்கும் உரிமை உண்டு  என்று வழக்குப் பதிவு செய்தான்.

“ஐயோ! இப்படியொரு சிக்கல் வரும்னு நான் யோசிக்கவே இல்ல அஜய். ஒருவேளை கேஸ் ஜெயிச்சு கம்பனி பொறுப்பு எல்லாம் தாத்தா கையைவிட்டு போயிட்டா”

“முடிஞ்சுது. கவி வியர்ஸ் நம்ம மறந்துட வேண்டியதுதான்”

“ஏண்டா நெகட்டிவா பேசுறா?”

“நெகட்டிவா பேசல. பிராக்டிக்கலா பேசுறேன். இந்த சொத்தெலாம் ஜெயபிரகாஷ் அப்பா சூரியபிரகாஷ் உருவாக்கினது. சட்டப்படி பார்த்தா தாத்தா சொத்து பேரனுக்குனுதான் தீர்ப்பாகும்.”

“அப்படினா...” என்று கவிதா குழம்பி கொண்டிருக்கும் போது செல்பேசி அழைப்பில் ஜெயபிரகாஷ் மருத்துவமனையில் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகச் செய்தி வந்தது. இருவரும் அடித்துப் பிடித்துக் கிளம்பிச் சென்றனர்.

அவர்கள் சென்ற சமயத்தில் அறையில் நிறைய மருத்துவர்கள் இருந்தனர். பிரகாஷ் கவிதாவை பார்க்க வேண்டுமென்றார். அவளை மட்டும் உள்ளே அனுமதித்தனர்.

அஜய் வெளியே காத்திருந்தான். அப்போது எதிரே கசங்கிய சட்டையுடன் ஒல்லியாக ஒருவன் மிகுந்த சோகத்தில் நிற்பதைக் கவனித்தான்.

‘இவனை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே’ என்று யோசித்த அஜயிற்கு எங்கே எப்போது அவனை பார்த்தோம் என்று நினைவு வரவில்லை.

ஆனால் அவன்தான் தன் நெருங்கிய தோழியின் கணவனாகப் போகிறான் என்று அஜய் கற்பனை கூடச் செய்திருக்க மாட்டான்.  அங்கிருந்துதான் அவர்களின் கதை தொடங்கியது.       

shanbagavalli has reacted to this post.
shanbagavalli

You cannot copy content