You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

மதிப்புக்குரியவள் - அத்தியாயம் 5

Quote

அத்தியாயம்- 5

அஜய் அந்தப் பங்களாவிற்குள் நுழைந்தான். முகப்பறை காலியாக இருந்தது. ரஞ்சன் அங்கேயும் வந்திருக்க வாய்ப்பில்லை என்று தோன்றியது.

அப்போது பிரகாஷ் குரல் மிருதுவான தொனியில் அறையிலிருந்து கேட்டது.

“கொஞ்சம்தான் இருக்கு, சாப்பிட்டுடுமா”

அஜய் அறை பக்கமாக வந்தான். கதவு திறந்திருந்தது. பிரகாஷ் உடல்நிலை சரியில்லாத தன் மனைவிக்குக் கஞ்சி ஊட்டிக் கொண்டிருந்தார்.

“போதுங்க எனக்கு” என்று சாரதா மறுக்க, “கிண்ணமே சின்னது. இதுலயும் நீ பாதியை மிச்சம் செஞ்சா எப்படி சாரதா?” என்று செல்லமாக பிரகாஷ் கடிந்து கொண்டார்.

“நான் நடமாடிட்டு வேலை செஞ்சுட்டு இருந்தா கூட பரவாயில்ல. ஒரே இடத்துல படுத்துட்டு இவ்வளவு எல்லாம் எப்படி சாப்பிடுறது... அதான் போதும்”

“சரி மாத்திரையாச்சும் போடு” என்றவர் கிண்ணத்தை ஓரமாக வைத்துவிட்டு தண்ணீரும் மாத்திரையும் எடுத்துத் தந்தார். இதனைப் பார்த்திருந்த அஜய் முகத்தில் புன்னகை விரிந்தது.

“சார்” என்று மெதுவாக அழைக்க, “அஜய் வா... வா” என்று அவனைப் பார்த்ததும் பிரகாஷ் உற்சாகமாக வரவேற்றார்.    

அதேநேரம் சாரதா, “ஆமா யாருங்க?” என்று குழப்பத்துடன் கேட்டார்.

“ஆ அது... நம்ம ராஜசேகர் பையன்” என்று பிரகாஷ் சமாளிக்க, “ஓ சேகரன் பையனா? எப்படி இருக்க தம்பி? நல்லா இருக்கியா. வீட்டில் எல்லோரும் எப்படி இருக்காங்க?” என்று அவர் அஜயிடம் விசாரிக்க, அவனுக்கு ஒன்றும் புரியவில்லை.

பிரகாஷ் கண் காட்டவும், “நல்லா இருக்காங்மா” என்றான்.

“சரி சரி நான் தம்பிகிட்ட பேசிட்டு வரேன். நீ ரெஸ்ட் எடு” என்றவர் அறைகதவை மூடிவிட்டு வெளியே வர, “யாரு சார் ராஜசேகர், என்னை ஏன் அவரோட பையன்னு சொன்னீங்க” என்று அஜய் புரியாமல் வினவினான்.

“சொல்றேன் வா” என்றவர் அவனை சோபாவில் அமர்த்திவிட்டு இருவருக்கும் காபி எடுத்து வரும்படி வேலையாளிடம் பணித்தார்.

அதன் பின் அவன் எதிரே வந்து அமர்ந்தவர், “சாரி அஜய், சாரதாவுக்கு பழைய விஷயங்கள் மறந்துட்டு வருது. உன்னை கவிதா பிரண்டுனு சொன்னா கவிதா யாருன்னு கேட்பா” என்றார்.

“எப்பத்துல இருந்து இப்படி இருக்காங்க?”

“இரண்டு மூணு மாசமாதான். போன வாரம் ரஞ்சனையே யாருன்னு கேட்டுட்டானா பாத்துக்கோ. என்னவோ அவ ஞாபகத்துல நான் இருக்கிறதே பெரிய விஷயம்தான்” என்று பெருமூச்சுடன் அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, “அப்போ ரஞ்சன் இந்த வாரம் வரலையே” என்று கேட்டான் அஜய்.

“வரலயே ஏதாவது வேலை பிஸில இருப்பான்னு நினைச்சேன்.”

“அவனுக்கு best entrepneur award அறிவிச்சது பத்தி சொன்னானா?”

“அப்படியா?” என்று முகம் மலர்ந்தவர் அஜயின் முகமாற்றத்தை கண்ட நொடி, “என்னாச்சு அஜய்? ஏதாவது பிரச்னையா? ஆமா ரஞ்சன் எங்கே” என்று கேட்டார்.  

“ரஞ்சன் எங்கேனு தெரியல சார். போனும் ஸ்விட்ச்ட் ஆப்ல இருக்கு. அதான் ஒரு வேளை இங்கே வந்திருப்பானோ தேடிட்டு வந்தேன்”

“என்ன சொல்ற? எங்கே போனா அவன்.” என்று பிரகாஷ் பதற,

“கவிதாவை தேடிட்டு போயிருப்பானு தோணுது சார்“ என்று அஜய்.

“கவிதாவை தேடிக்கிட்டா?” என்றவர் அதிர்ச்சியாக, “ஆமா சார்” என்றவன் கவிதா அனுப்பிய மின்னஞ்சலையும் அவன் இரண்டு நாள் முன்பு ரஞ்சனிடம் பேசிய விஷயங்களையும் விவரித்தான்.

“எல்லாம் என்னலாதான். நான்தான் தேவையில்லாம அவனை தூண்டிவிட்டுட்டேன். ஆனா அவ எந்த நாட்டுல எங்கே இருக்கானு தெரியாம... எப்படி அவளை தேடி கண்டுபிடிப்பான்”

“கவிதா தமிழ்நாட்டுலதான் இருக்கா.” என்று பிரகாஷ் சொல்ல அஜய் திகைப்புற்றான்.

“தமிழ்நாட்டுலையா?”

 “ஆமா, என் பிரண்டு ராஜு குடும்பத்தோட கொடைக்கானல் போயிருந்த போது அவளை பாத்திருக்கான். போய் பேசலாம்குறதுக்குள்ள ஆளை காணோமா?”

“அப்படினா கவி வெளிநாட்டுல இல்லையா?” என்று ஆச்சரியத்துடன் வினவினான் அஜய்.

“போன வாரம் வரைக்கும் நானும் அப்படிதான் நம்பிட்டு இருந்தேன் அஜய்”

“உங்க பிரண்டு பார்த்ததும் நிச்சயமா கவிதாதானா? கன்பார்மா?”

“அவன் உறுதியா சொல்றான். கவிதாவைத்தான் பார்த்தேன்னு.”

“இந்த விஷயம் ரஞ்சனுக்கு தெரியுமா?” 

“தெரியும், சொன்னேன். உடனே நான் கொடைக்கானல் போறன்னு சொன்னான். நான்தான் அவசரப்படாதே. நம்மாளுங்க சில பேரை அனுப்பி தேட சொல்லறேன். அவங்க கவியை கண்டுபிடிச்சதும் தகவல் சொல்லுவாங்க. அப்புறமா நம்ம போவோம்னு சொன்னான். அதுக்குள்ள கிளம்பி போயிட்டு இருக்கான்”

“உங்க ஆளுங்களுக்கு கான்டாக்ட் பண்ணி ரஞ்சன் அங்கே வந்தானானா கேளுங்களேன்”

“சரி” என்றவர் உடனடியாகத் தன் செல்பேசி எடுத்துப் பேசினார்.

“என்ன சொல்ற சேது வரலையா?” என்றவர் முகம் அதிருப்தியாக மாறியது. அழைப்பைத் துண்டித்தவர், “ரஞ்சன் வரலையாம்” என,

“அவங்க ரஞ்சனை பார்க்காம இருந்திருக்கலாம். ஆனா எனக்கு என்னவோ அவன் அங்கேதான் இருப்பானு தோணுது” என்று அஜய் கூற, பிரகாஷின் முகம் துவண்டது.

“நான் ரஞ்சன்கிட்ட அவர் கவிதாவை பார்த்த விஷயத்தை மட்டும்தான் சொன்னேன். குழந்தையைப் பத்தி எல்லாம் எதுவும் சொல்லல”

“அது கவிதாவோட குழந்தையதான் இருக்கணும்னு எந்த கட்டாயமும் இல்லயே சார்” என்று அஜய் கூற,

“அப்படி ஒரு வேளை இருந்துட்டா... ரஞ்சன் எப்படி இந்த விஷயத்தைத் தாங்குவான்” என்று கேட்டு அவர் தலையைப் பிடித்துக் கொள்ள, “டென்ஷனாகாதீங்க சார், தண்ணி குடிங்க” என்று அஜய் அவருக்குத் தண்ணீர் பருக தந்தான்.

 அதனைக் குடித்து முடித்து ஆசுவாசமாக மூச்சை இழுத்து விட்டார்.

உடனே அஜய், “நான் கொடைக்கானல் போறேன்” என்றான்.

“ஆனந்தி கர்ப்பமா இருக்க நேரத்துல” என்று பிரகாஷ் தயக்கத்துடன் பார்க்க,  

“ஆனந்தியோட அம்மா அப்பா எல்லாம் கூட இருக்காங்க சார்... இப்போதைக்கு ரஞ்சனுக்குதான் என்னோட சப்போர்ட் தேவைப்படுது. நான் அவன் கூட கண்டிப்பா இருக்கணும்” என்ற அஜய் மறுநாள் மதியம் அலுவலகத்தில் பேசிவிட்டு கொடைக்கானல் செல்ல ஆயத்தமானான்.

“சாரி ஆனந்தி. இந்த மாதிரி சமயத்துல உன்னை விட்ட்டுட்டு போக கூடாது. ஆனா ரஞ்சன் இப்போ இருக்க மனநிலைல அவன் தனியா போயிருக்கிறதை நினைச்சா பயமா இருக்கு”

“எனக்கு புரியுது அஜய். நீங்க போய்ட்டு வாங்க... ரீச்சானதும் கால் பண்ணுங்க” என அவன் மனைவியின் நெற்றியில் முத்தமிட்டுவிட்டு, தன் காரை கிளப்பினான். அது நெடுஞ்சாலையில் பறந்தது.

*

“கவி நீ எடுத்த முடிவு ரொம்ப தப்பு” அஜய் கண்டனமாகப் பேச,

“என் முடிவு தப்புன்னு நீ எப்படி சொல்ற” என்றவள் மிக நிதானமாக திருப்பி கேட்டாள்.

“பின்ன, கல்யாணம்கிறது விளையாட்டு காரியமா? நீ பாட்டுக்கு யாரு என்னனு தெரியாதவனை கல்யாணம் பண்ணிக்க ஓகே சொல்லிட்டு வந்திருக்க” என்று அஜய் கடுப்பாக கத்தினான்.

“ஏய் ஏய் எதுக்குடா இப்படி கத்துற, வா ரிலேக்சா ஒரு டீ குடிச்சிட்டே பேசுவோம்”   

“எது, டீ குடிச்சிட்டே பேசுவோமா? இது உன் வாழ்க்கைடி” என்று பல்லைக் கடித்தான். அப்போதும் கவி துளி பதற்றம் கூட இல்லாமல் இருந்தாள்.

“பிரகாஷ் சார் உன்னை படிக்க வைச்சாரு. உனக்கு அவர் மேல நிறைய மதிப்பு இருக்கு. அதெல்லாம் ஓகேதான். ஆனா அதுக்காக அவர் கேட்டாருனு  எப்படி கவி முன்ன பின்ன தெரியாதவனை கல்யாணம் பண்ண ஒத்துக்கிட்ட”

“அஜய் ஸ்டாப் இட். எனக்கு தாத்தா மேல மரியாதை இருக்குதான். அவர் என்ன சொன்னாலும் கேட்பேன்தான். இல்லன்னு சொல்லல. ஆனா இந்த டெசிஷனை எடுத்தது அவருக்காக இல்ல. நம்ம கம்பனிக்காக...

ஏற்கனவே அவர் நிலைமை மோசமா இருக்கு. திடீர்னு அவருக்கு ஏதாவது ஆகிட்டா மொத்த சொத்தும் அந்த ராகவன் கைக்கு போயிடும். பிரகாஷ் க்ரூப் ஆப் கம்பனீஸ் பத்தி எனக்கு கவலை இல்ல. எனக்கு கவி வியர்ஸ் முக்கியம். அது என்னோட கனவு அஜய். அதை நான் எவனோ ஒரு பரதேசிகிட்ட விட்டு கொடுக்க முடியாது

அன் இன்னொரு விஷயம், நீ சொல்ற மாதிரி கல்யாணம்கிறது என் மொத்த வாழ்க்கை எல்லாம் இல்ல. அது என் லைப்ல ஒரு பார்ட் மட்டும்தான். அந்த பார்ட்ல வர போறவன் எப்படி இருந்தாலும் பாத்துக்கலாம்ன்னு முடிவு பண்ணிட்டேன்

சரி வா டீ குடிச்சுட்டு வரலாம்” என்றாள். அஜய் அவளை முறைத்தபடி நிற்க,

“நீ வரலனா போ, நான் போய் குடிச்சுட்டு வரேன்” என்றவள் சர்வசாதாரணமாகச் சொல்லிவிட்டுக் கிளம்பி டீ குடிக்கச் சென்றுவிட்டாள்.

திருமண செய்து கொள்ளும் முடிவையே சொடுக்கு போடும் நேரத்தில் எடுத்தவளால் அதனை முறித்துக் கொள்ளும் முடிவை எடுக்க எவ்வளவு நேரம் ஆகப் போகிறது.

இப்போதும் அவள் ரஞ்சனை விட்டுச் செல்லும் முடிவை ஏன் எடுத்தால்... யாருக்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டேன் என்று சொன்ன அவள் கனவை எப்படி விட்டுக் கொடுத்தாள்... இத்தனை வருட அவர்கள் நட்பைக் கூட துச்சமாக எப்படி விட்டுப் போனாள்?.

அவளை நேரில் பார்த்தால் இந்த கேள்வி எல்லாம் கேட்க வேண்டுமென்று என்று அவன் உள்ளம் பரபரத்துக் கொண்டிருந்தது. அவளைச் சீக்கிரம் பார்க்க வேண்டும் என்ற துடிப்புடன் காரை இயக்கிக் கொண்டு வந்தான்.

எதிரே மலைகளின் இளவரசி கம்பீரமாக உயர்ந்து நின்றிருந்தாள். அடிவாரத்தில் சிலுசிலுவென்ற சாரலுடன் பொங்கி ஊற்றிக் கொண்டிருந்த அருவியின் முன்பு, மக்கள் கூட்டம் கூட்டமாக நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தனர்.

அந்த இயற்கைக் காட்சி அத்தனை நேரம் அவனுக்குள் இருந்த தவிப்பை எல்லாம் மட்டுப்படுத்தியது. தன் காரை ஓரங்கட்டியவன் ஏலக்காய் மணம் வீசிய சூடான தேநீரை வாங்கிக் கொண்டான்.

அதன் வாசனையை முகரும் போதே தோழியின் நினைவு வந்தது. ஒவ்வொரு மிடறாக அவள் ரசித்துப் பருகுவதைப் பார்த்துப் பார்த்தே அவனும் தேநீர் பிரியனாகிவிட்டான். ஆக்கவிட்டாள்.

தேகத்தை தழுவும் குளிர்ந்த காற்றுடன் குடிக்கும் அந்த தேநீருக்கு தனி ருசிதான்.

அதனை நிதானமாகப் பருகியவன் மனைவிக்கு அழைத்து, “மலைக்குக் கீழே இருக்கேன். இன்னும் ஒன்னு இரண்டு மணிநேரத்துல மலை ஏறிடுவேன. கிளைமட் ரொம்ப சூப்பரா இருக்கு தெரியுமா? நீயும் கூட வந்திருந்தா நல்லா இருந்திருக்கும்” என்றான்.

“நீங்கதான் என்னைக் கூப்பிடவே இல்ல”

“இந்த மாதிரி நிலைமைல உன்னால எப்படி வர முடியும். அதுவும் இல்லாம நான் என்ன வேகேஷனுக்கா போயிருக்கேன்”

“டென்ஷன் ஆகாதீங்க, நான் சும்மாதான் கேட்டேன். ஆமா ரஞ்சன்தான் போனை ஸ்விட்ச்ட் ஆப் பண்ணி வைச்சு இருக்காரே. நீங்க எப்படி அவரை கண்டுபிடிக்க போறீங்க”

“எல்லாம் கண்டுபிடிச்சிட்டேன். அவன் கிரெடிட் கார்ட் டீடைல்ஸ் மூலமா எங்க தங்கி இருக்கானு தெரிஞ்சிடுச்சு”

“ஓகே பார்த்து போங்க. போய் சேர்ந்ததும் ஒரு மெசஜ் போடுங்க”

“நீயும் நேரத்துக்கு சாப்பிட்டு படு” என்றவன் அதன் பின் காரை எங்கேயும் நிறுத்தவில்லை. நேராக ரஞ்சன் தங்கியிருந்த ரிசார்ட்டை சென்றடைந்தான்.

இருள் சூழ்ந்துவிட்ட போதும் அந்த இடம் வண்ண விளக்குகளால் மின்னிக் கொண்டிருந்தது. மலை முகட்டின் மீது அழகாக ஜொலித்தது. பாதை முழுவதும் செடிகள் பூத்துக் குலுங்க, காரை உள்ளேவிட்டான்.

அப்போது ரஞ்சன் ஃபயர் கேம்பில் தனியாக அமர்ந்திருந்ததை கவனித்தான். அங்கே மூட்டப்பட்டிருந்த நெருப்பு அணைந்து வெறும் கங்குகள் மட்டுமே மிச்சமிருந்தன.

அஜய் அவன் தோளைத் தொடவும், “அண்ணா நீங்களா? நீங்க எப்படி இங்க?” என்று நம்ப முடியாமல் பார்த்தான் ரஞ்சன்.

 “நானேதான், ஏன்டா சொல்லாம கொல்லாம வந்த. போனை வேற ஸ்விட்ச்ட் ஆப் பண்ணி வைச்சு இருக்க”

“அதில்ல அண்ணா வந்து” என்று பேச எத்தனித்தவனைச் சீற்றமாகக் கைகாட்டி நிறுத்திய அஜய், “அப்படி கூப்பிடாத என்னை, உண்மையில் என்னை நீ அண்ணானா நினைச்சிருந்தா இப்படி சொல்லாம கொல்லாம வந்திருப்பியா” என்று முறைத்தான்.

“ச்சேச்சே, அப்படிலாம் இல்ல ண்ணா”

“அப்புறம் ஏன்டா சொல்லாம வந்த?”

“மனசு சரி இல்ல. கொஞ்சம் தனியா இருக்கணும்னு போல இருந்துச்சு”

“அது மட்டும்தான் சார் கொடைக்கானல் வர காரணமோ?”

எரிந்து முடிந்த அந்தக் கங்குகளைப் பார்த்தபடி, “இல்ல கவிதாவை பார்க்கணும்னுதான்” என்றான்.

“அவ எங்கே இருக்கானு தெரிஞ்சாதானே நீ அவளை போய் பார்க்க முடியும்”

“எங்கே இருக்காங்கனு தெரியாது. ஆனா எப்படி பார்க்கணும்னு தெரியும்.”

“கண்டுபிடிச்சிட்டியா?” என்று அஜய் ஆச்சரியம் கொள்ள, ரஞ்சன் தலை ஆமோதிப்பாக ஆடியது. கூடவே அவன் கண்களில் மின்னல் ஒன்று வெட்டியது.

You cannot copy content