You don't have javascript enabled
Monisha NovelsRomanceRomantic thriller

Solladi sivasakthi-23&24

23

பிரிவும் துயரும்

சிவசக்திக்கு அவனின் பிரிவு மீள முடியாத துயரில் ஆழ்த்தியது. ஏற்கனவே தாயை இழந்து, பின்பு துணையாய் இருந்த அண்ணனையும் இழந்து வாடியிருந்தாள். இன்று காதல் என்ற பெயரால் அவளை முடிந்த வரை சக்திசெல்வன் காயப்படுத்திவிட்டுக் காணாமல் மறைந்தான்.

பெண்களை ஏமாற்றும் மாயைக் காதல் என்ற எண்ணத்தைக் கொண்டிருந்த சிவசக்திக்கு இப்பொழுது அது மீண்டும் உண்மையோ என்று தோன்றியது. ஆனால் அவன் மீது கோபம் மட்டும் ஏனோ வரவில்லை. மாறாய் அவனின் ஒவ்வொரு செயலுக்கும் ஏதோ காரணம் இருக்கும் என்று எண்ணினாள்.

சதுரங்க விளையாட்டில் கூட என் ராணியை விட்டுக் கொடுக்க முடியாது என்று சொல்லி தோல்வியுற்றவனா தன்னைத் தவிக்க விட்டுச் சென்றான். இத்தனை செய்தவன் உண்மையிலேயே வெறுத்திருந்தாள் தன்னுடைய டைரியை கொடுக்காமலே சென்றது ஏன்? என்ற கேள்வி அவளுக்குள் எழுந்தது. அவன் தன் மனதில் உள்ளதையும் வெளிப்படுத்தாமல் அவளையும் பேச விடாமல் செய்ததன் காரணம் அவளுக்குப் பிடிபடவேயில்லை.

தொடக்கத்திலிருந்தே சக்திசெல்வன் ஏதோ ஒரு யுக்தியால் சிவசக்தியிடம் விளையாடிக் கொண்டேதான் இருக்கிறான். அவளை அலைக்கழித்தும், கோபம் கொள்ள வைத்தும், தவிக்க விட்டும் வேடிக்கை பார்த்தான். இன்று அவளின் நம்பிக்கையின் முழுஉருவமாய் நின்றவன் ஒரு சில நொடிகளில் அவளில் இதயத்தைக் கண்ணாடிக் குவளையை உடைத்தெறிவது போல நொறுக்கிவிட்டுச் சென்றதன் காரணத்தை யார் அறியக் கூடும்.

சிவசக்தியால் அவனை நினைக்காமல் இருப்பதே கடினம் எனும் பொழுது முற்றிலும் மறப்பது சாத்தியமே இல்லை. அவள் வாழ்வைச் சுற்றியுள்ள ஒவ்வொரு பொருட்களிலும் அவனுடைய நினைவுகளை நிரப்பிவிட்டுச் சென்றுவிட்டான். அவளை இனி சக்தி என்று யார் விளித்தாலும் முதலில் நினைவுக்கு வரப் போவது அவனின் முகம் மட்டுமே.

சிவசக்தி எல்லோர் முன்னிலையிலும் அழுது தன் சோகத்தை வெளிப்படுத்தவில்லை. ஆனால் இயல்பு நிலைக்கு அவளால் திரும்பவே முடியவில்லை. ஜெயாவிற்குதான் அவள் தோழியைப் பற்றி நன்றாகத் தெரியும். சக்தி மனமுடைந்து போயிருப்பதைப் புரிந்து கொண்டு அவள் என்னதான் தேற்ற முயற்சித்தாலும் அது வெறும் வார்த்தைகளே.

சக்திசெல்வன் நிச்சியம் திரும்பி அவளைத் தேடி வருவான் என்ற காத்திருப்பு அவளுக்குள் இன்னும் உயிராகத் துடித்துக் கொண்டிருந்தது. நாட்கள் கடந்து செல்ல அவளின் நம்பிக்கை மட்டும் மாற்றம் பெறவில்லை.

சிவசக்தி இல்லத்தில் முழுக்க அவனைப் பற்றியே எல்லோருமே ஓயாமல் பேசிக் கொண்டிருக்க, அவனின் நினைவுகளைச் சுமந்தபடி சிவசக்தி மட்டும் ஊமையாய் மாறிப் போனாள்.

மரியாவிற்காக அவன் பரிந்துரைத்த வேலை அவளுக்குள் பெரும் மாற்றத்தையும் நம்பிக்கையையும் விதைத்தது. சமையலறைக்குள் அடைந்து கிடந்த கமலாவிற்கு அவளின் திறமை இப்போது நன்கு விளங்கிற்று. வேலை செய்யும் இடத்தில் அவளுக்குப் பாராட்டுக்கள் குவிந்தன. வனிதா தன் கணவனோடு எப்படியோ சமாதானமாகி விட்டாள்.

அது இன்பகரமான விஷயமே என்றாலும் இனி கண்ணன் அந்த வீட்டில் வளைய வரமாட்டான். சேட்டைகள் புரிய மாட்டான். அவளிடம் சாக்லேட் கேட்டு அடம்பிடிக்கமாட்டேன்.

சக்தி என்று அவளை உரிமையோடு அழைத்துச் சண்டைப் புரிய மாட்டான். அந்த வீடே அவன் சென்ற பிறகு பல மாற்றங்களைப் பெற்று வெறிச்சோடிப் போனது. இதெல்லாம் ஒரு புறம் இருந்தாலும் மாவட்டத்தில் முதல் மாணவியாய் வந்து ஆனந்தி எல்லோருக்கும் பெருமைச் சேர்த்தாள். அவள் கனவிற்குத் தடையில்லாமல் மதிப்பெண்கள் குவித்திருந்தாள்.

அத்தகைய இன்பமயமான தருணத்தில் ஆனந்தி சிவசக்தியிடம்,

“எல்லாரும் எனக்கு விஷ் பண்றாங்க… ஏன் சக்தி அண்ணா மட்டும் எனக்கு ஒரு விஷ் கூடப் பண்ணல?” என்று ஏக்கத்தோடு கேள்வி எழுப்பினாள்.

“சக்தி ஏதாச்சும் முக்கியமான வேலையில இருப்பாரு… கண்டிப்பா உன்னை வந்து பார்த்து விஷ் பண்ணுவாரு” என்று சமாதானம் உரைத்தாள். பொய்தான் என்றாலும் அப்போதைக்கு அது ஆனந்திக்கு ஆறுதலை ஏற்படுத்திவிடும்.

ஆனால் சிவசக்தியின் முடியாத தேடலுக்கு யார் ஆறுதல் கூறுவது. சக்திசெல்வன் சொன்னது போல எஸ். எஸ். டிரஸ்ட்டில் இருந்து அவள் படிப்பிற்கான செலவை ஏற்றுக் கொண்டனர். ஆனந்தி மருத்துவப் படிப்பு கலந்தாய்விற்கான ஏற்பாடுகளில் மும்முரமாய் இருந்தாள்.

சிவசக்தி எப்போதும் போல் பள்ளித் தொடங்கியதும் வேலைக்குள் மூழ்கிவிட்டால் எல்லாம் இயல்பு நிலைக்குத் திரும்பிவிடும் என்று எண்ணினாள்.

ஆனால் பள்ளியிலும் பார்க்கும் ஒவ்வொருவரும் சிவசக்தியிடம் சக்திசெல்வனைக் குறித்த கேள்வியை எழுப்பினர். அவளுக்கே பதில் தெரியாத போது எங்ஙனம் அவள் பதிலுரைப்பது.

போதாக் குறைக்கு அவன் கட்டிய கைக்கடிகாரத்தைப் பார்க்கும் போதெல்லாம் அவனின் நிராகரிப்புதான் ஞாபகத்திற்கு வந்தது. சில நேரங்களில் காலங்கள் கடந்தாலும் எனக்காகக் காத்திரு என்று சூட்சமமாய்ச் சொல்லிவிட்டுச் சென்றானோ என்று அவளின் மனம் ஆறுதலுக்காகக் கற்பனைச் செய்து கொண்டது.

சிவசக்தி அவனின் பிரிவினால் ஏற்பட்ட விரக்தியை போக்கிக் கொள்ளும் விதமாய் அவளின் இலட்சியமான ஐ. ஏ. எஸ் தேர்விற்குத் தயாராக முடிவு எடுத்தாள். அவனால் உண்டான வெறுமையைப் பூர்த்திச் செய்யவும் அந்த வலியை மறக்கவும் அவள் தேர்ந்தெடுத்த யுக்தி நன்றாகவே வேலையையும் செய்தது.

சிவசக்தி எப்படிச் சக்திசெல்வனின் பிரிவைச் சமாளிக்கப் போகிறாளோ எனக் கவலையுற்றிருந்த ஜெயாவிற்கு, அவள் இன்னும் உறுதியோடு துவண்டு போகாமல் ஆக்கப்பூர்மாய் முன்னேற்றப் பாதையில் பயணிப்பது வியப்பை அளித்தது.

சிவசக்தியின் ஏமாற்றம் அளவிடமுடியாது. இருப்பினும் அவள் அத்தகைய வேதனையைக் கடந்து வரச் செய்த முயற்சிகள் வார்த்தைகளால் விவரிக்க முடியாது. ஆனால் இதனால் எல்லாம் சக்திசெல்வனை மறந்து விடுவாளா என்பதெல்லாம் நிச்சயம் அவளே நினைத்தாலும் இயலாத காரியம். அவன் அவளின் ஒவ்வொரு அணுவிலும் நிலைப்பெற்றிருக்க, ஏன் சக்தி இப்படி அவளைத் தவிக்கவிட்டுச் சென்றான்? என்ற கேள்வி மலையென வளர்ந்து நின்றது.

ஐ. ஏ. எஸ் தகுதிக்கான முதன்மை தேர்வில் சிவசக்தி தேர்ச்சிப் பெற்றாள். அந்த இன்பகரமான செய்தி எல்லோரையும் மகிழ்வித்தது. அந்த இன்பத்தை முழுமையாய் அனுபவிக்க முடியாமல் பார்வதிக்கு உடல் நிலை மோசமானது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது இருதய வலி என்று மருத்துவர்கள் ஆராய்ந்து சொல்லிவிட்டனர். இதய அடைப்பு இருப்பதாகவும் அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் எனச் சொல்லப்பட்டது. அதிகப்படியான பணத் தேவையை இல்லத்தில் உள்ள எல்லோருமே தங்களால் இயன்றளவுக்கு உதவினர். ஆனால் தேவை பூர்த்திச் செய்யப்படவில்லை.

பார்வதியின் உறவுகளுக்கு உதவும் மனதில்லை. வந்து பார்க்க கூட நேரம் கிடைக்கவில்லை. பார்வதி நிலைமையைப் புரிந்து கொண்டு இப்போதைக்குத் தனக்கு அறுவை சிகிச்சை வேண்டாமெனப் பிடிவாதமாய் நின்றாள்.

இருதய அறுவை சிகிச்சை நிபுணராய் இருந்த கவிதா சந்திரன் சிவசக்தியிடம்,

“இப்போதைக்கு மருந்து மாத்திரை எழுதித் தர்றேன்… அதைத் தொடர்ச்சியாய் கொடுங்க… மூணு மாசத்துக்குள்ள சர்ஜரிக்கு ஏற்பாடு செய்தால்தான்… பேஷன்ட் உயிரைக் காப்பாற்ற முடியும்” என்றுதிட்டவட்டமாய்ச் சொன்னாள்.

மருத்துவர்களும் கடவுள் விதியைத் தீர்மானிப்பது போலப் பார்வதியின் உயிருக்குக் கெடு விதித்தனர். சிவசக்தி பணத்திற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தாள்.

பிரச்சனை வரும் போதெல்லாம் தன்னை அதிலிருந்து மீட்கக் கண் முன்னே தோன்றாமல் கரம் நீட்டிய சக்திசெல்வனை நினைவுகூர்ந்தாள். அவன் செய்த பல உதவிகளையும் உதாசினப்படுத்தியதை எண்ணிப் பார்க்க இன்று குற்றவுணர்வில் தவிக்கலானாள்.

பார்வதியின் ஆரோக்கியத்தைச் சிவசக்தி கண்ணும் கருத்துமாய்ப் பேணிக் காத்தாள், எனினும் சிகிச்சைக்காக முயற்சியையும் கைவிடாமல் மேற்கொண்டிருந்தாள்.

ஜோதி சார் இதற்கிடையில் சிவசக்திக்கு இன்னொரு சிரமமான வேலையைச் செய்யச் சொன்னார். அது வேறொன்றுமில்லை. ஜெயாவை திருமணத்திற்குச் சம்மதிக்க வைப்பது. எப்போதும் கல்லூரியில் தன் இலட்சியமே திருமணம் செய்து கொள்வதுதான் என்று சொன்ன ஜெயா இப்போது சக்தியிடம் முடியாது என முரண்டு பிடிக்கிறாள்.

பெண் பார்க்கும் படலம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்க விருப்பமில்லை எனத் தன் தந்தையிடம் சொல்ல முடியாமல் ஜெயா அலங்கரித்துக் கொண்டாள். அவள் பூட்டியிருந்த பொன் நகைகள் அவள் அழகுக்கு மெருகூட்டினாலும் எப்போதும் தவழும் புன்னகையை நாம் காண இயலவில்லை.

சிவசக்தி அவள் தோழி ஜெயாவை நோக்கி,

“ஏ… ஜெயா… ஏன் மூஞ்சை உர்னு வைச்சிருக்க?” என்றாள்.

“எல்லாத்துக்கும் நீதான் காரணம்… பேசினியோ கொன்னுடுவேன் பாத்துக்கோ” என்று சீறிக் கொண்டு இருந்தாள்.

“நான் என்ன பண்ணேன்… அப்பா சொன்னதை உன்கிட்ட சொன்னேன்… அவ்வளவுதான்” என்றாள்.

“என் வாழ்க்கையே நாசமாய்ப் போகப் போகுது” என்று ஜெயா புலம்பினாள்.

“காலேஜ்ல நான்தான் முதல் ஆளா கல்யாணம் பண்ணிப்பேன்னு சவால் விட்ட… இப்போ என்னாச்சு? ”

“இப்பவும் நான் கல்யாணத்துக்கு வேண்டாம்னு சொல்லல… இந்த மாப்பிளையைதான் வேண்டாம்னு சொல்றேன்”

“அப்பா நல்லா விசாரிச்சிருக்கிறாரு… அவரே நேரடியா பேசி பிடிச்சி போனதினால்தான் இந்த மாப்பிள்ளையை முடிவு பண்ணி இருக்காரு” என்றாள்.

“அதனாலதான் வேண்டாங்கிறேன்… மிஸ்டர். ஜோதி எனக்கு அவர மாதிரியே ஒரு மாப்பிள்ளையைப் பாத்திருக்காரு… அவனும் ஒரு ஸ்கூல் கரஸ்பான்டென்ட்…

வார்த்தைக்கு வார்த்தை என்னை மாதிரியே பொறுப்பானவன்னு வேற சொல்றாரு… ஒரு காட்ஸிலாக்கிட்ட இருந்து தப்பிச்சு டைனோஸர் கிட்ட மாட்டிக்க எனக்கு விருப்பமில்லை… நோ வே” என்றாள். இதை ஜெயா கோபத்தோடு சொல்ல சக்தியால் சிரிப்பை அடக்க முடியவில்லை.

“நீ ரொம்ப ஓவரா பேசிற” என்று சக்தி மீண்டும் சிரித்தாள்.

ஜெயா மீண்டும் கோபத்தோடு, “போதாக் குறைக்கு அவனோட பேர்… ஐ ஹேட் இட்” என்றாள்.

“பேர் எல்லாம் ஒரு விஷயமா ஜெயா… நாமே ஒரு யூகத்தில முடிவு பண்ணிக்கிறதை விட்டுட்டு… பேசி பழகி தெரிஞ்சிக்கலாமே… அவசரப்பட்டுக் காரணத்தைக் கற்பிச்சிக்கிட்டு, தேவையில்லாம நிராகரரிச்சு நம்ம வாழ்க்கையைக் கெடுத்துப்பானேன்… நான் செய்த தப்பை ப்ளீஸ்… நீயும் செய்யாதே… பேசி பாரு… அப்புறமா முடிவெடு” என்று சிவசக்தி சொல்லும் போது அவள் குரலில் சோகமும் அவனை ஏன் நிராகரித்தோம் என்ற குற்றவுணர்வும் ஆழமாய் வெளிப்பட்டது.

ஜெயா கண்கள் கலங்க சக்தியினை அணைத்துக் கொண்டாள். சக்தி ஜெயாவின் கண்ணீரை அலங்காரம் கலையாமல் நேர்த்தியாகத் துடைத்துவிட்டாள்.

“ஐம் ஒ. கே… நீ அழாதே” என்று சொல்லி சிவசக்தி சமாதானம் செய்த அதே நேரத்தில் ஜெயாவின் அம்மா அவர்களை வெளியே அழைத்தாள்.

ஜெயா முகத்தில் கலக்கத்தோடு வெளியே செல்ல இயல்பாய் சிரித்தபடி ஒரு ஆடவன் அமர்ந்திருந்தான்.

ஜெயா நிமிர்ந்து பார்க்கலாமா எனத் தயங்கி கொண்டிருக்க சக்தி அந்த ஆடவனை நோக்கி,

“ஜெயா உங்ககிட்ட தனியா பேசனுமாம்” என்றாள்.

ஜெயா சக்தியின் கையில் கிள்ள, அதைப் பொருட்படுத்தாமல் சிவசக்தி புன்னகைப் புரிந்தாள்.

அந்த ஆடவன் சகஜமாய்ச் சிரித்தபடி, “ஒகே பேசலாமே” என்று தலையசைத்தான். மற்ற எல்லோரும் இயல்பாய் எடுத்துக் கொள்ள நம் ஜோதி சார் மட்டும் கொஞ்சம் கோபமாய் முறைத்தார்.

அந்தப் பெரிய ஹாலிற்குப் பின்புறம் வாசலில் அந்த ஆடவன் ஜெயாவை நோக்கியபடி  நிற்க அவள் சக்தியின் கையை விடாமல் அழுத்தமாய்ப் பிடித்துக் கொண்டிருந்தாள்.

“ஜெயா விடுடி” என்று சக்தி ரகசியமாய்ச் சொல்லஅந்த ஆடவன் நம் இரு தோழிகளை நோக்கி,

“நீங்க இரண்டு பேரும் திக் பிரண்ட்ஸ் போல… எப்பவுமே பிரியவே மாட்டீங்களோ?” என்றான்.

சக்தி அந்த ஆடவனை நோக்கி, “அது ஒண்ணுமில்ல… என் பின்னாடி ஒலிஞ்சியே இவளுக்குப் பழக்கம்,” என்று சொல்லிவிட்டு ஜெயாவை நோக்கி,

“எனக்கு இந்த அவமானம் தேவைதானா… கையை விடு” என்று சொல்லிவிட்டு அவர்களைத் தனியே விடுத்து நழுவி கொண்டு வந்தாள்.

24

அக்னி பரிட்சை

அந்த ஆடவன் ஜெயாவிடம் அவனைக் குறித்த விவரங்களை உரைத்துவிட்டு, “உனக்கு என்னைப் பிடிச்சிருந்தா ஒகே சொல்லு… இல்லென நோ சொல்லிடு” என்றான் புன்னகையோடு!

நம் தோழி ஜெயா வெட்கப்படுவதெல்லாம் சாத்தியமற்ற ஒன்று. அவள் அவனைக் கூர்மையாய் நோக்கி,

“உங்களைப் பார்த்தா ஒரு ஸ்கூல் கரஸ்பான்டென்ட் மாதிரி தெரியலையே?” என்று சந்தேகமாய்க் கேள்வி எழுப்பினான்.

அவன் சிரித்து விட்டு, “வழுக்கைத் தலை, கஞ்சி போட்ட சட்டை போட்டு விறைப்பா… முறைச்சிக்கிட்டே இருந்தால்தான் நம்புவியா… எனக்குத் தகுதி இருக்கிறதால எங்கம்மாவிற்குப் பிறகு பொறுப்பை நான் ஏத்துக்கிட்டேன்… என் ஸ்கூல்ல நான் என் ஸ்டைல்ல நடத்துகிறேன்” என்றான்.

“எங்கப்பாவை கலாய்க்கிற மாதிரி தெரியுதே” என்று ஓரப் பார்வையில் பார்த்தாள்.

“அப்படி எல்லாம் இல்ல… எனக்கு ஜோதி சார் மேல ரொம்ப மரியாதை இருக்கு… அதுவும் அவரோட நேர்மையும் கம்பீரமும் எனக்கு ரொம்பப் பிடிக்கும்… அவரோட பொண்ணு நீயும் அவரை மாதிரி நேர்மையா?” என்று சொல்லி முடிக்கும் முன்னரே ஜெயா,

“நேர்மையா… அப்படின்னா… நான் எங்கப்பா மாதிரி கிடையாது” என்று துணிவாய் உரைத்தாள்.

“நான் அப்படி இல்லன்னு சொல்றதும் ஒருவகையில் நேர்மைதானே… உன் பேச்சும் தைரியமும் குறும்பும் எனக்குப் பிடிச்சிருக்கு ஜெயா… உன் முடிவு என்ன?” என்று அவளை நோக்கி வினவினான்.

ஜெயா அவளுக்கே உரிய வேடிக்கைத்தனத்தோடு அவனை நோக்கி,

“ஆனா எனக்கு உங்க பேர் பிடிக்கலயே… இராமசாமின்னு இந்தக் காலத்தில போய் யாராச்சும் பேர் வைப்பாங்களா? ரொம்பப் பழைய பேர்” என்றாள்.

அவள் வெளிப்படையாகப் பேசியதை எண்ணி குலுங்கி குலுங்கி சிரித்தவன்,

“அப்பாவுக்குப் பெரியாரை பிடிக்கும்… ஈ. வே. ராமசாமிங்கிற அவர் பெயரை எனக்கு வைச்சிட்டாரு… நீ ஷார்ட்டா ராம்னு கூப்பிடு… பேரு பழசுதான்… ஆனா நான் மார்ட்டனா இருப்பேன்… நீ வேணா நம்ம பசங்களுக்கு மார்டனா பேர் வைச்சிக்கோ” என்றான்.

ஜெயா அவன் சொன்னதைக் கேட்டு வெட்கப்படுவதா இல்லை கோபப்படுவதா என்று புரியாமல் திகைத்து நிற்க அவன் மேலும்,

“சரி ஜெயா… நீ யோசிச்சு பொறுமையா முடிவெடு” என்று கூறிவிட்டுப் புன்னகை மாறாமல் தலையசைத்து விட்டுச் சென்றான்.

இனிதே முடிந்து விட்ட பெண் பார்க்கும் படலத்தில் ஜெயா தன் படுக்கையின் மீது யோசித்தபடி அமர்ந்திருந்தாள்.

“ஜெயா… ஒகேவா இல்ல நோவா ?” என்று சக்தி கேட்டுக் கொண்டிருக்க அவளின் முகத்தில் புன்னகை மலர்ந்தது.

“அப்போ மிஸ்டர். இராமசாமி உனக்கு ஒகே” என்றாள் சக்தி.

“கால் ஹிம் ராம்” என்றாள்.

“ஓ… ஷார்ட்டா கூப்பிடிறளவுக்குப் பழகிட்டீங்க” என்று சக்தி சொல்ல, “போ சக்தி” என்று தலையணையைத் தூக்கி அவள் மீது வீசினாள்.

சிறிது நேரம் இரு தோழிகளும் கேலியோடும் கிண்டலோடும் பேசிக் கொண்டிருந்தனர்.

பின்னர்ச் சக்தி கடைசியாக ஜெயாவிடம்,

“சரி அதை விடு ஜெயா… கொஞ்ச சீரியஸான மேட்டர்… நீதான் ஹெல்ப் பண்ணனும்” என்றாள்.

“என்ன மேட்டர்?” என்று புருவத்தைச் சுருக்கினாள் ஜெயா.

“நம்ம ஸ்கூல் லாஸ்ட் பேச் ப்ளஸ் டூ ஸ்டூடன்ட்ஸுக்கு பாராட்டு விழா ஏற்பாடு பண்ணி இருக்கோம்ல… அதுக்கு சக்தியை இன்வைட் பண்ண சொல்லி அப்பா சொன்னாரு… நீதான்…” என்று சக்தி மேலே சொல்லாமல் நிறுத்தினாள்.

“சக்தி ப்ரோ நம்மகிட்ட அவரோட கான்டெக்ட் நம்பரே கொடுக்கலயே… நாமும் கேட்க மறந்துட்டோம்… அவரும் கொடுக்க மறந்திட்டாரு” என்றாள்.

“சக்தி மறக்கல ஜெயா… ஏனோ நம்மகிட்ட கொடுக்க விருப்பப்படல… நீ அவர் ரெஸ்ஸுயும்ல இருந்த மெயில் ஐடிக்கு மெஸஜ் பண்ணிடு” என்றாள்.

“சக்தி ப்ரோ… ரொம்பவும் வித்தியாசமானவர்னு நினைச்சேன்… ஆனா அவரும் பெண்கள் உணர்ச்சிகளோடு விளையாடற சராசரியான ஆண்தான்னு தோணுது” என்று தன் எண்ணத்தை வெளிப்படுத்தினாள்.

சிவசக்தியின் முகம் கோபத்தில் சிவக்கக் குரலை உயர்த்தி,

“ஸ்டாப்ட் இட் ஜெயா… இப்படி எல்லாம் உன் இஷ்டத்துக்கு சக்தியை பத்தி கற்பனை பண்ணி நீயா எதாவது பேசாதே… புரிஞ்சிதா… நீ மறக்காம மெயில் அனுப்பிடு… ஆனா பாராட்டு விழாவைப் பத்தி மட்டும் அனுப்பு… நான் கிளம்பிறேன்” என்று உரைத்து விட்டுப் பேகை எடுத்துக் கொண்டு புறப்பட்டுச் சென்றாள்.

ஜெயா அவளைத் தடுக்காமல் அதிர்ச்சியில் அமர்ந்திருந்தாள். அவளின் கோபம் இவளுக்குப் புதிதல்ல. ஆனால் சக்திசெல்வனின் மீது இவள் கொண்டுள்ள நம்பிக்கை பொய்யாகிவிடுமோ என்ற கவலை ஜெயாவை ஆட்கொண்டது.

சிவசக்தி சொன்னது போல் ஜெயா பாராட்டு விழா பற்றிய செய்தியை அனுப்பிவிட்டாள். ஆனால் அந்தச் செய்தி சக்திசெல்வனைச் சென்றடைந்ததா என்பதை நாம் காத்திருந்து பார்ப்போம்.

மீனாக்ஷியும் மோகன்ராமும் அதிகமாய் விவாதிப்பது தொழிலைப் பற்றியும் இல்லையெனில் அரசியல் விவகாரங்களைப் பற்றியும்தான். ஆனால் இன்று அதிசமாய் அவர்களின் ஒரே புத்திரன் சக்திசெல்வன் குறித்துப் பேசிக் கொண்டிருந்தனர்.

மோகன் ராம் சிகரெட்டை கையில் வைத்து புகையை ஊதியபடி,

“சக்திக்கு என்னாச்சு ?… அவன் ஆக்டிவிட்டிஸ் ரொம்ப மாறி இருக்கு” என்று மீனாக்ஷியை நோக்கி கேள்வி எழுப்பினார்.

இதைக் கேட்டதும் பிரச்சாரத்திற்காகத் தீவிரமாய் எழுதிக் கொண்டிருந்த மீனாக்ஷி கையிலிருந்த எழுதுகோலை மேஜை மீது வைத்தாள்.

“அவன் எப்பவும் போலத்தான் இருக்கான் மோகன்” என்றாள்.

“நான் அவன் கூடவே இல்லனாலும் எனக்கு அவனை நல்லா தெரியும்… அவனிடம் அந்தப் பழைய துருதுருப்பு இல்ல… எதையோ அவன் அதிகமா மிஸ் பன்றான்” என்று மோகன் தன் கணிப்பைத் தெரிவித்தார். எப்போதோ ஒரு முறை பார்த்தாலும் தன் மகன் குறித்துச் சரியாகவே யூகித்து வைத்திருந்தார்.

மீனாக்ஷி கோபமாய்த் தம் இருக்கையில் இருந்து எழுந்து,

“நத்திங் மோகன்… ஹி இஸ் ஆல்ரைட்” என்றாள்.

மோகன் புகையை இழுத்துவிட்டபடி,

“நோ ஹி இஸ் நாட்” என்று மீனாக்ஷியை கண்டு முறைத்தார்.

இதற்கு மேல் கணவனிடம் மறைக்க விருப்பமில்லாமல் மீனாக்ஷி அவன் மகனின் காதல் கதையைப் பற்றி விவரமாய் உரைத்தாள்.

மேலும் மீனாக்ஷி தன் கணவனை நோக்கி,

“நான்தான் சக்திகிட்ட அந்தப் பொண்ணுகிட்ட ஒரு வருஷம் பார்க்காம பேசாம… அவளை நிராகரிக்க… சொன்னேன்… அந்தப் பொண்ணு அதே காதலோட உன்னை அப்புறமும் நினைச்சிட்டிருந்தா… உங்க கல்யாணத்துக்கு ஒகே சொல்றேன்னு சொன்னேன் மோகன்… முதலில் முடியவே முடியாதுன்னு சொன்னான்… அப்புறம் உன் காதல் மேலயும் காதலி மேலயும் நம்பிக்கை இல்லையான்னு கேட்டேன்… கடைசியா எப்படியோ சம்மதிச்சிட்டான்” என்றாள்.

மோகன் யோசனையில் ஆழ்ந்துவிட்டு மீண்டும் அவர் மனைவியை நோக்கி,

“நீ எதுக்கு இந்த விஷயத்தை இவ்வளவு சிக்கலா மாத்திட்டிருக்க… அவன் கேட்காமலே அவன் விருப்பத்தை நிறைவேத்திற நீ இதை மட்டும் ஏன் தடுக்கற… என்ன காரணம்?” என்று வினவினார்.

“அந்தச் சிவசக்திக்கு ரொம்பத் திமிரு… சக்தியை ரொம்பவும் அலைய விட்டுட்டா… அவனைப் பிரிஞ்சி கஷ்டப்படட்டும்… அப்பதான் அவனோட அருமை அவளுக்குப் புரியும்… அப்புறம் என்னைக்கும் சக்தியை காயப்படுத்தியும் பார்க்க மாட்டா… அவனைப் பிரிஞ்சும் போக மாட்டா?” என்று மீனாக்ஷி கண்களில் அனல் தெறிக்க உரைத்தாள்.

“நீ செய்த இந்தக் காரியம் நம்ம சக்தியையும் காயப்டுத்திருக்குன்னு உனக்குப் புரியலயா மீனாக்ஷி” என்று குரலை உயர்த்திக் கேட்டு கோபமாய் முறைத்தார்.

“இப்போ எதுக்குச் சத்தம் போடிறீங்க… அவனுக்கு என்ன செய்யனும்… எப்போ செய்யனும்னு எனக்கு நல்லா தெரியும்… அந்தப் பொண்ணைப் பத்தி ஒரு வார்த்தை கூடச் சொல்லாம மறைச்சிருக்கான்… இந்தத் தண்டனை அவனுக்கும் சேர்த்துத்தான்… சக்தி இப்போதைக்குச் சென்னையில் இருக்க வேண்டாம்… டெல்லியில் இருக்கிற ஹோட்டல் அட்மினிஸ்ட்டிரேஷனை கவனிச்சிக்கிட்டோம்… நீங்க அடுத்த மாசம் லண்டன் போறீங்க இல்ல… அவனையும் கன்வின்ஸ் பண்ணி அழைச்சிட்டு போயிடுங்க” என்றாள்.

“அவனை நான் எங்க அழைச்சிட்டு போறேன்னு சொன்னாலும் நோன்னு சொல்லுவ… இப்போ என்ன புதுசா?… சக்தி மேல நம்பிக்கை இல்லயா… நீ சொன்னதை மீறி போயிடுவானோன்னு சந்தேகமா?” என்று தன் கையிலிருந்த சிகரெட்டை ஹேஷ் டிரேவில் அணைத்தார்.

“சந்தேகமா… நெவர்… சக்தி எந்த முடிவு எடுத்தாலும் உறுதியா இருப்பான்னு எனக்கு நல்லா தெரியும்… அவன் கொஞ்சம் அப்செட்டா இருக்கான்… சேஞ்ச் ஆஃ பிளேஸ்… அவன் மைன்ட்டை மாற்றலாம் இல்லயா?” என்று மீனாக்ஷி உரைக்க மோகனும் மௌனமாய்த் தலையசைத்து ஆமோதித்தார்.

மனைவியின் பிடிவாதமும் மகனின் வேதனைக்கும் இடையில் அதற்கு மேல் அவர் செய்வதற்கு ஒன்றுமில்லை. அன்று சதுரங்க விளையாட்டில் சிவசக்தி அவனைத் தோற்கடித்த பின்னர்ச் சக்திசெல்வன் மீனாக்ஷியை தொடர்பு கொண்டு பேசி இருக்கிறான்.

சிவசக்தியிடம் மீனாக்ஷி பேசிய விவரங்கள் குறித்துப் பெரும் வாக்குவாதம் நிகழ்ந்திருக்கிறது. அந்த உரையாடலில் மீனாக்ஷி சக்திசெல்வனிடம் தன் முடிவை தினித்து அதை ஏற்றுக் கொள்ளவும் வைத்துவிட்டாள்.

சிவசக்தியை நிராகரிக்க வேண்டுமே என்ற தவிர்க்க முடியாத சூழலில் சிக்கி கொண்டு அவன் தவித்துக் கொண்டிருந்தான். போயும் போயும் அந்தத் தருணத்தில் அவள் தன் காதலைச் சொல்ல வருவாளா?

சக்திசெல்வன் அவள் எண்ணத்தைக் கணித்துவிட்டான். அவள் அவ்வாறு காதலை வெளிப்படுத்திவிட்ட பிறகு எப்படித் தான் நிராகரிக்க முடியும்? அதனால் சக்திசெல்வன் அவளைப் பேச அனுமதியாமல் அவள் கோபத்தைத் தூண்டிவிட்டு அன்று தான் நினைத்ததைச் சாதித்துவிட்டான். கடைசி நிமிடம் வரை சிவசக்தி தன் காதலை சொல்லத் தவிக்க அவன் முடிந்தவரை அவள் சொல்வதைக் கேட்காமலே புறப்பட்டுவிட்டான்.

இதைத்தான் வெண்ணெய் திரண்டு வரும் நேரத்தில் தாழி உடைந்தது என்பார்களோ?

என்ன? இத்தனை நாளாய் சக்திசெல்வன் காத்திருந்த தருணம் கைகூடி வர, அவனே அவள் மனதை உடைக்கும்படி நேரிட்டதுதான் பெரும் சோகமே! 

சிவசக்தி இப்படி அவளே அறியாமல் காதலை நிரூபிக்கும் அக்னி பரிட்சைக்கு உட்படுத்தப்பட்டு விட்டாள். இந்த அக்னி பரிட்சையில் இருவரும் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்ளாத வரை எந்தப் பிரச்சனையும் இல்லை. அப்படிச் சக்திசெல்வன் சிவசக்தியை சூழ்நிலை காரணமாய் நேரதிரே சந்தித்தால் அவளை அவன் தவிர்க்க நேரிடலாம். அது அவளைக் காயப்படுத்தும். ஏன் கோபமாகவும் மாறி அவர்களின் நிரந்தரப் பிரிவிற்கு வழி வகுக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content