You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

மதிப்புக்குரியவள் - அத்தியாயம் 9

Quote

அத்தியாயம் - 9

‘கர்ர்ரர்ர்ர் கர்ர்ரர்ர்ர்’ என்ற ராகவன் பக்கத்து இருக்கையில் நாராசமாகக் குறட்டைவிட்டுக் கொண்டிருக்க, ரஞ்சன் காரை ஓட்டியபடி திரும்பி நோக்கினான். அவரின் சட்டைப் பையில் அவனுடைய கைப்பேசி எட்டிப் பார்த்தது. காரில் ஏறியதுமே அதனைப் பிடுங்கி அணைத்து வைத்துவிட்டார்.

ரஞ்சன் மெல்ல அதை எடுக்கலாமா என்று யோசித்தான். ஆனால் அவர் விழித்துவிட்டால்... ஒருவேளை விழித்ததும் எங்கே என்று கேட்டால்.... அந்த நொடியே அவ்வெண்ணத்தைக் கைவிட்டு தலையைச் சாலை புறம் திருப்பிக் கொண்டான்.

அவர் உறங்கிய பிறகுதான் அவனால் கொஞ்சமாக மூச்சு விட முடிந்தது. சற்று முன்பு கேட்ட அசிங்கமான திட்டுக்களுக்கு இந்த நாராசமான குறட்டைச்சத்தம் எவ்வளவோ பரவாயில்லை என்று நினைத்துக் கொண்டான். இன்னும் ஒரு மணிநேரத்திற்கு அவர் இப்படியே உறங்கிக் கொண்டிருந்தால் ஊரைச் சென்று சேர்ந்துவிடலாம்.

ஜோலார்பேட்டையிலுள்ள சந்திராபுரம். அதுதான் அவர்களின் ஊர்.

பெரிய பச்சை பலகையில் ஜோலார்பேட்டை என்று மின்னியதைப் பார்த்தான். பாட்டி சாரதா  பிறந்த ஊர். அவருக்கு இரண்டு அண்ணன் ஒரு தம்பி. சாராதா தன்னுடைய பத்தாவது வயதில் அப்பாவையும் பதினான்காம் வயதில் அம்மாவையும் இழந்தார் .அதன் பிறகு அவருக்கு எல்லாம் தமையன்களும் தம்பி குடும்பமும்தான். 

அவர்கள் குடும்பத்தொழில் விவசாயம். நிலபுலன்கள் என்று மானாவாரியாக இருந்தாலும் பெரிதாக நீராதாரம் இல்லாத நிலங்கள். அவ்வப்போது நன்றாக விளையும். ஆனால் மழை பொய்த்து போகிற காலங்களில் நிறைய நஷ்டம் ஏற்படும்.

அண்ணன்கள் அண்ணிகள் அவர்கள் குழந்தைகள் என்று எல்லோரும் ஒன்றாக ஒரே வீட்டில்தான் வசித்தனர். குடும்பத்தின் பொருளாதாரச் சூழல் எல்லோரையும் சார்ந்திருந்த நிலையில் சாரதாவும் குடும்பத்திற்காகத் தன்னுடைய பங்கைக் கொடுக்க வேண்டியிருந்தது. இதனால் அவர் பத்தாவதுக்கு மேல் படிப்பைத் தொடரவில்லை.

இப்படியான ஒரு சந்தர்ப்பத்தில்தான் உறவினரின்  திருமண விழா ஒன்றில் சாரதாவை பார்த்தார் ஜெயபிரகாஷின் தந்தை. பொறுப்பில்லாமல் ஊர் சுற்றும் மகனுக்கு அடக்க ஒடுக்கமான மனைவியாகத் தேடிக் கொண்டிருந்தவருக்கு சாரதாவை மிகவும் பிடித்துவிட்டது. நேரடியாக சாரதாவின் அண்ணன்களிடம் திருமணத்திற்குப் பேசினார்.

அவர்கள் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத பணக்கார வீட்டுச் சம்பந்தம் என்பதால் உடனடியாக ஒப்புக்கொண்டனர். திருமணமும் நடந்து முடிகிறது. சாரதா சென்னையிலுள்ள கணவனின் வீட்டில் குடியேறினார். ஆடம்பரமான வீடும் வாழ்க்கையும் ஆரம்பத்தில் ஆர்வத்தைத் தூண்டினாலும் பின்னாளில் அது பெரிய ஏமாற்றத்தைக் கொடுத்தது.

அந்த உலகத்திற்குத் தன்னை பொருத்திக் கொள்ள முடியாமல் சாரதா மிகவும் தவித்துப் போனார். அதேநேரம் பிரகாஷும் மனைவியிடம் அன்பாகவும் பாசமாகவும் நடந்து கொள்ளவில்லை. தனிமையும் விரக்தியும் மட்டுமே அந்த வாழ்க்கையில் அவருக்கு மிஞ்சுகிறது.  

அவன் பொறுப்பில்லாத பணக்கார வீட்டுப் பிள்ளையைப் போல நினைத்த இடத்திற்குப் போவது நினைத்த நேரத்தில் வருவது கன்னாபின்னாவென்று பணம் செலவழிப்பது என்று சுற்றிக் கொண்டிருந்த நிலையில்தான் அப்பாவின் உடல்நிலை மோசமாகிறது.

‘பட்டிக்காட்டுப் பெண்’ என்று அவளை ஒதுக்கும் பிரகாஷை நெருங்கவும் முடியாமல் அங்கிருந்து செல்லவும் முடியாமல் அவதியுற்றார். நிர்வாக பொறுப்புகளை பிரகாஷ் கவனிக்கத் தொடங்குகிறார். பின்னர் அப்பாவும் மரணிக்கிறார். அதன் பின் மெது மெதுவாக அவருக்கும் சாரதாவிற்கும் இடையிலான உறவு சுமுகமானது. அன்பான கணவனாக மாறுகிறார்.

அவர்களுக்கு ஜெயராணி என்று அழகான மகள் பிறக்கிறாள். ராணிக்கு ஐந்து வயதாகிறது.  இரண்டாவது குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டுமென்று பிரகாஷும் சாரதாவும் ரொம்பவும் ஆசைப்படுகின்றனர். மருத்துவரைச் சென்று சிகிச்சை எடுத்துக் கொள்கின்றனர். அந்தச் சமயத்தில் மகளுடன் ஊருக்குச் சென்ற சாராதா அங்கே தான் கருத்தரித்த விஷயத்தை அறிகிறாள்.

மகிழ்ச்சியில் தலை கால் புரியவில்லை. கணவனிடம் உடனடியாகச் சொல்ல வேண்டுமென்று துடிக்கிறாள். அதுவும் அவரை நேராகப் பார்த்துச் சொல்ல வேண்டுமென்று விரும்பிய சாரதா, சென்னைக்கு விரைகிறார்.

வீட்டை அடைந்ததும் கணவரின் கார் வாசலில் நிற்பதைப் பார்க்கிறார்.ஆசை ஆசையாகத் தான் கருத்தரித்த தகவலைச் சொல்ல நினைத்த சாரதாவிற்கு அங்கே பேரதிர்ச்சி காத்திருந்தது.

 பிரகாஷ் தன அலுவலகத்தில் பணிபுரியும் பெண்ணுடன் சல்லாபத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த காட்சியைப் பார்க்க நேர, சாரதா அங்கேயே சுக்குநூறாக உடைந்து நொறுங்குகிறார். அழுது புலம்பி ஒரு நிலைக்கு மேல் மயக்கம் போட்டுச் சரிகிறார். அந்தத் துரோகத்தை அவரால் தாங்க முடியவில்லை. மகளுடன் கிளம்பி மீண்டும் ஊருக்கே திரும்பிவிடுகிறார்.

 பிரகாஷ் அவரை தேடி வந்து மன்னிப்பு கோருகிறார். தெரியாமல் ஒரே  ஒருமுறை சபலப்பட்டுவிட்டதாக அவர் கூறும் காரணங்களை சாரதாவால் ஏற்க முடியவில்லை. அதன் பின் அவர் முகத்தில் கூட சாரதா விழிக்கவில்லை. அதேநேரம் கணவனின் துரோகத்தைத் தாங்க முடியாமல் சாப்பாடு தண்ணீர் என்று எதுவுமே இல்லாமல் அழுது கொண்டே இருந்ததில் அவர் வயிற்றிலிருந்த கரு தானாகவே  கலைந்துவிடுகிறது. அந்தக் கோபமும் அவருக்குக் கணவன் மீதே திரும்பியது.

இதெல்லாம் நடந்து ஐம்பது வருடங்கள் கடந்துவிட்டன. இன்று வரையில் பிரகாஷை சாரதா மன்னிக்கவே இல்லை. ஆரம்பத்திலேயே திருமண வாழ்க்கை கொடுத்த ஏமாற்றத்தின் வலி எல்லாம் ஒன்றாகச் சேர்ந்து அந்த வாழ்க்கைக்கு மீண்டும் அவரை திரும்பச் செல்ல விடாமல் தடுத்துவிட்டது.

ஏன் சென்னைக்கே அவர் அதன் பிறகு செல்லவில்லை. பிரகாஷின் தயவில்லாமல் மகளை வளர்த்து ஆளாக்கினார். மகளைக் கல்லூரிக்கு அனுப்பிப் படிக்க வைத்தார். படித்து முடித்ததும் தன் இரண்டாவது அண்ணன் மகனான ராகவனுக்கே மணம் முடித்துக் கொடுத்தார். அவனுக்கு அப்போதுதான் காவல்துறையில் வேலை கிடைத்திருந்தது.

பழக்கமில்லாத பெரு நகரத்தில் தான் மணம் முடித்துச் சென்று கஷ்டப்பட்டதை போல மகளும் கஷ்டப்பட கூடாது என்று நினைத்ததாலேயே சாரதா, சொந்த ஊரில் சொந்த அண்ணன் மகனுக்கே மகளை மணம் முடித்து வைத்தார். ஆனால் பாட்டி நினைத்தது போல அம்மாவின் வாழ்க்கை சந்தோஷமானதாக இருந்ததா? அப்பா அவரை அப்படிப் பார்த்துக் கொண்டாரா?.

அம்மாவின் நினைப்பு ரஞ்சனை கலங்கடித்தது. எதிரே வந்த ஸ்பீட் பிரேக்கரை கவனிக்காமல் கார் எகிற, ராகவனின் உறக்கம் தடைப்பட்டது.

பதறியடித்து எழுந்து கொண்டவர், “டேய் எருமை எப்படிறா ஓட்டுற, கண்ணு தெரியல உனக்கு” என்று திட்ட, “சாரிபா கவனிக்கல” என்றான்.

“நீ எதைத்தான் கவனிக்குற, சரி சரி வண்டியை ஓரமா நிறுத்து. ஏய் நிறுத்துடா. அவசரமா வருது” என்றதும் காரை ஓரமாக நிறுத்த, ராகவன் சிறுநீரைக் கழித்து விட்டு வந்து உட்கார்ந்தார்.

“என்ன, நீ போலயா. போ நீயும் போயிட்டு வா”

“இல்ல.பக்கத்துல வந்துட்டோம். இன்னும் கொஞ்ச நேரம்தான். நான் வீட்டுக்குப் போய் போயிக்கிறேன்”

“இதெல்லாம் அடக்கி வைக்க கூடாது. போ. இறங்கி போயிட்டு வா”

“எனக்கு அவசரம் இல்ல. நம்ம வீட்டுக்கு போயிடலாம்” என்றவன் தொடர்ந்து காரை ஓட்டி கொண்டு வர, “வீட்டுக்கு எல்லாம் அப்புறம் போயிக்கலாம். கடையில் நிறுத்து” என்றார்.

“ஏற்கனவே ரொம்ப டைமாகிடுச்சு பா”

“நிறுத்துனா நிறுத்துன்னு சொன்னேன்”

“இல்ல நான் வேணா வாங்கிட்டு வந்து தரேன். வீட்டுலேயே குடிங்களேன்” என்று ரஞ்சன் சொன்னதற்கு ராகவன் கடுமையாக முறைக்க, வேறு வழியில் அடுத்து வந்த டாஸ்மாக் கடையில் நிறுத்தினான்.

“இங்கேயே நில்லு வந்துடுறேன்” என்று ராகவன் உள்ளே செல்ல, அவன் சலிப்புடன் காத்திருந்தான். கொட்டாவியாக வந்தது.

காலை தொடங்கிய பயணம். வக்கீலைப் பார்த்துப் பேச வேண்டுமென்று அங்கேயே அரைநாள் ஓடிவிட்டது.  அதன் பின் அங்கே நிறுத்து இங்கே நிறுத்து என்று சொல்லி நான்கைந்து மணி நேரத்தில் முடிய வேண்டிய பயணத்தை பதினாலு மணி நேரத்திற்கும் மேலாக நீட்டித்துவிட்டார். இப்போது இது வேறு.

அவனால் முடியவில்லை. உடல் ஓய்விற்குக் கெஞ்சியது. அவன் கண் அசந்த நேரத்தில் தள்ளாடியபடி வந்து கதவைத் திறந்தவர், “டேய் எருமை, எழுந்திரு... எழுந்திருச்சு வண்டியை எடு” என்று லொட்டு லொட்டென்று தட்டினார்.

அந்தச் சத்தம் தலையில் உரலை வைத்து இடிப்பது போலிருந்தது. சிரமப்பட்டு கண்களை நன்றாகத் திறந்து கொண்டு காரை ஓட்டத் தொடங்கினான்.

 குடிபோதையில் ஏதேதோ உளறிக் கொண்டே வந்தவர் பின்னர் அப்படியே கண்களை மூடிக் கொண்டார். அவன் ஒரு வழியாக வாச வீட்டிற்கு வந்து சேர்ந்தான். ஊரின் எல்லையிலேயே பாட்டியின் வீடு இருந்தது. எல்லாம் முன்பு விவசாய நிலமாக இருந்த இடங்கள். அண்ணன் தம்பி மகன்கள் எல்லோரும் சொத்தை பிரித்துக் கொண்ட பின் அனைவரும் தனித்தனியாக அங்கே வீட்டைக் கட்டிக் கொண்டனர்.

ராகவன் தன்னுடைய பங்கைப் பிரித்து வாங்கியதுமே விற்றுவிட்டார். போலிஸ் வேலையிலிருந்த காரணத்தால் எப்போதாவது மட்டுமே அவர்கள் அங்கே வந்து செல்வது வழக்கம்.அதனால் அந்த இடம் தேவைப்படாது என்று நினைத்தார். ஆனால் பாட்டி தன்னுடைய பங்கு நிலத்தில் கடனை வாங்கி சிறிய ஓடு வீடு ஒன்றைக் கட்டிக் கொண்டார்.

சிறு வயதில் அந்த வீட்டிற்கு வருவது என்றால் அவனுக்கு அவ்வளவு இஷ்டம். அதற்காகவே விடுமுறை நாட்கள் எப்போது வரும் என்று ஏங்குவான். ஆனால் இப்போது அது மட்டும்தான் அவர்களுக்கு இருக்கும் ஒரே வீடு.

அவன் வாசல் கதவை இரண்டு முறை தட்டினான். கண்களைத் தேய்த்துக் கொண்டே சாரதா வந்து திறந்தார். புடவை தலைப்பையை தோளில் சுற்றிக் கொண்டிருந்தார். முதுமையின் சாயல் அவர் முகத்தில் தெரிந்ததே ஒழிய உடலில் இல்லை. நிமிர்ந்த கம்பீரமான தோற்றம். பேரனைப் பார்த்ததும் எதிர்பாராத ஆச்சரியத்துடன்,

“ரஞ்சு கண்ணா நீயா. ஆமா நீ எப்போ வந்த. வரேன்னு ஒரு போன் கூட பண்ணலையே” என்றார்.

“அது நான்” என்று திணறியவன், “இருங்க அப்பா கார்ல இருக்காரு, கூட்டிட்டு வரேன்” என்று அவரை கைதாங்கலாகத் தோளில் சாய்த்து நடத்திக் கூட்டிவந்தான்.

“வேற புழைப்பே கிடையாது உங்க அப்பனுக்கு. ஆமா இவனை எங்கே பார்த்த நீ. இரண்டு நாள் முன்னாடி எங்கே போறேன் என்னனு ஒன்னும் சொல்லாம கூட கிளம்பி போயிட்டான்”

“சென்னைலதான் பாட்டி”

“உன்னைய பார்க்க வந்திருந்தானா?”

“ஆமா” என்றவன் மெதுவாக அவரை ஓரமாக இருந்த கட்டிலில் கிடத்தினான். அந்த நொடி சட்டைப் பையிலிருந்த அவன் பேசி நழுவியது. அதனை அவன் எடுத்துக் கொள்ள,

“சரி சாப்பாடு எடுத்து வைக்குறேன் வா” என்று அழைக்க, அவனுக்கும் பயங்கரமாகப் பசித்தது. முகம் கை கால்கள் எல்லாம் கழுவி உடை மாற்றிக் கொண்டு வந்தமர்ந்தான்.

சாரதா அனைத்தையும் சூடு செய்து எடுத்து வந்து பேரனுக்கு பரிமாறினார்.

“நீ வருவன்னு தெரிஞ்சிருந்தா கோழி குழம்பு வைச்சிருப்பேன்”

“இதுவே போதும் பாட்டி” என்று சாப்பிட தொடங்கியவன், “ஆமா ரத்னா தூங்கிட்டாளா?” என்று கேட்டான்.

“அப்பவே தூங்கிட்டா”

“சரி நீங்களும் போய் படுங்க. நான் சாப்பிட்டு எல்லாத்தையும் எடுத்து வைச்சுடறேன்”

“இருக்கட்டும் நீ சாப்பிட்டு முடி”

“சொல்றேன் இல்ல, ரொம்ப லேட்டாகிடுச்சு நீங்க போய் படுங்க”

மெதுவாக கைகளை ஊனி எழுந்து கொண்டவர் அந்த சிறிய அறை நோக்கி நடந்துவிட்டு மீண்டும் எதையோ நினைத்து கொண்டு  திரும்பி வந்தார்.

 “ஆமா உன் முகமே சரி இல்ல. உங்க அப்பன் ஏதாவது நீ வேலை செய்ற இடத்துலவந்து பிரச்னை பண்ணான்னா? காசு எதுவும் கேட்டானா” என்று கேட்க, “அதெல்லாம் ஒன்னும் இல்ல, நீங்க போய் படுங்க” என்றான்.

“பாட்டிக்கிட்ட எதுவும் மறைக்காதடா” என, அவன் முகம் லேசாக மாறியது.

“ரஞ்சு”

“எதுவா இருந்தாலும் காலையில் பேசிக்கலாம் பாட்டி. நீங்க இப்ப போய் படுங்க” என்று அவரை அனுப்பி வைத்தவன், சாப்பிட்டு முடித்து தட்டை எல்லாம் கழுவி முடித்தவன், முகப்பறை மின்விளக்கை அணைத்தான்.

அந்த அறையில் இருள் சூழ்ந்தது. ஆனால் அம்மாவின் படத்திலிருந்த சிறிய விளக்கின் ஒளி இலேசாக மின்னியபடி இருந்தது. மெல்லிய வெளிச்சத்தைப் பரப்பியது. பூ பொட்டுடன் அழகாக மிளிர்ந்த அம்மாவின் முகத்தை ஏக்கத்துடன் பார்த்தான்.

பின்னர் சத்தமில்லாமல் இருள் சூழ்ந்திருந்த பின்கட்டிற்கு வந்தான். நிலாவின் வெளிச்சத்தால் கொஞ்சமாக அந்த இடம் ஒளிர்ந்து கொண்டிருந்தது. துணி துவைக்குக் கல்லில் அமர்ந்து கொண்டு  தன் செல்பேசியை இயக்கினான். மணி 01; 10 என்று காட்டியது. கூடவே அம்மாவின் உருவத்தைப் போன்றிருந்த தங்கையின் முகம் ஒளிர்ந்தது. அவள்தான் ரத்னா. அவனை விடப் பத்து வயது சிறியவள்.

நஞ்சுக்கொடி கீழே இறங்கியதால் தங்கையின் பிரசவித்தால் இரத்தப்போக்கு ஏற்பட்டு அம்மா இறந்துவிட்டார். ஆனால் அது மட்டுமே காரணம் இல்லை. தாமதமாக மருத்துவமனை சென்றதே முக்கிய காரணம் என்று மருத்துவர் சொன்னது அவன் நினைவில் இருந்தது.

அதன் பிறகு தங்கையை வளர்த்தது எல்லாம் பாட்டிதான். தன்னை போல அல்லாமல் தங்கை வாழ்க்கையாவது சந்தோஷமாக இருக்க வேண்டுமென்பதே அவனின் ஒரே எண்ணம்.

அது தாத்தாவால்தான் முடியும் என்று எண்ணியவன், இந்நேரத்தில் அழைத்து அவரை தொந்தரவு செய்ய வேண்டாமென்று யோசித்து, “நான் பத்திரமா இருக்கேன். எனக்கு ஒரு பிரச்னையும் இல்ல. சூழ்நிலை எல்லாம் சரியானது நானே உங்களுக்கு கால் பண்றேன்” என்று குறுந்தகவலைத் தட்டச்சு செய்து அனுப்பினான்.

அதன் பின்பு அவன் கை கவிதாவின் எண்ணைத் தேடி எடுத்தான். அதில் புன்னகை முகமாக இருந்த அவள் டிபியை பார்த்ததுமே மனதில் ஒருவிதப் பரவச உணர்வு ஏற்பட்டது. இந்த உணர்வு அவளைப் பார்த்த முதல் நாளிலிருந்தே அவனுக்கு இருக்கிறது. ஏன் எப்படி என்று அவனுக்குத் தெரியவில்லை. அவள் முகத்தை உற்றுப் பார்த்திருந்தவனுக்கு அவளிடம் பேச வேண்டும் போல இருந்தது.

‘எப்படி இருக்க?’ என்று கேட்க வேண்டும் போல மனம் தவித்தது. அப்போது அவனை அறியாமல் அழைப்பு சின்னத்தின் மீது கைப்பட்டுவிட்டது.

‘அய்யயய்யோ கால் போயிடுச்சே’ என்று பதறியவன் உடனடியாக அழைப்பைத் துண்டித்துவிட்டான். அதற்குள் இதயம் படக் படக் என்று அடித்துக் கொண்டது. அவன் தன்னை ஒருவாறு ஆசுவாசப்படுத்திக் கொள்வதற்குள் அவள் திருப்பி அழைத்துவிட்டாள்.

‘எடுப்பதா வேண்டாமா? எடுத்தால் என்ன பேசுவாள்? திட்டுவாளோ?’ என்று நிறையத் தயக்கம். தவிப்பு.

அழைப்பு அடித்துக் கொண்டே இருந்தது. அதனை ஏற்று அவன் பயத்துடன் காதில் வைக்க, “ஏன் கால் பண்ணிட்டு உடனே கட் பண்ண” என்றாள்.

“இல்ல சாரி, கைப்பட்டு தெரியாம வந்திருச்சு”

“தெரியாம வந்திருச்சா? அப்போ நீ எனக்கு கால் பண்ணனும்னு நினைக்கலையா”

“இல்ல இல்ல நினைச்சேன். அனால் இந்த நேரத்துல கூப்பிட்டா உங்க தூக்கம் கலைஞ்சிடுமோனு”

“நான் தூங்கல. கொஞ்சம் ஆபிஸ் வொர்க் இருந்துச்சு பார்த்துட்டு இருந்தேன்”

“அப்படியா?” என்று இழுத்தவன், “உங்களுக்கு ஒன்னும் பிரச்னை இல்லையே” என்றான்.

“எனக்கு என்ன பிரச்னை”

“இல்ல அது எங்க அப்பா தள்ளிவிட்டு நீங்க கீழே விழுந்து மயங்கிட்டீங்க”

“அதுவா, ஆமா நெத்தில வீங்கிரூச்சு. ஆனா பரவாயில்ல”

“சாரி” என்று அவன் மெதுவாக கூற, “சாரி எல்லாம் இருக்கட்டும். நீ எப்போ சென்னைக்கு திரும்பி வர” என்று கேட்டாள்.

“தெரியல” என்றவன் சொல்ல, “என்ன தெரியலயா? இன்னும் இரண்டு நாள் ரிசப்ஷன் இருக்கு. ஞாபகம் இருக்கா இல்லையா.அப்புறம் ஆபிஸ் பொறுப்பை எல்லாம் உன்கிட்ட கொடுக்கணும்னு உங்க தாத்தா சொல்லிட்டு இருக்காரு. நீ என்னடானா உங்க அப்பாவோட ஊருக்கு ஓடிட்ட” என்று கடிந்து கொண்டாள்.

“எனக்கு அப்போ என்ன செய்றதுன்னு தெரியல”

“என்ன செய்றதுன்னு தெரியலயா. உன்னை நம்பி...” என்று பல்லை கடித்தவள் அதே சீற்றத்துடன், “இத பாரு நீ என்ன பண்ணுவ  ஏது பண்ணுவ எனக்கு ன்னு எல்லாம் தெரியாது. நீ ரிசபஷ்ன் அன்னைக்கு காலையில சென்னைல இருக்கணும். சொல்லிட்டேன்” என்று அதிகாரமாகக் கூறிவிட்டு அழைப்பைத் துண்டித்துவிட்டாள்.

அவன் என்ன சொல்ல வருகிறான், என்ன நிலைமையில் இருக்கிறான் என்று எதுவுமே அவள் கேட்கவில்லை. இன்னும் கேட்டால் அது அவளுக்கு முக்கியமே இல்லை. அவளுக்கு என்ன நடந்தாலும் அந்த வரவேற்பு நிகழ்ச்சி நடக்க வேண்டும். அதன் மூலம் இந்த வியாபார உலகத்தின் முன்பாக அவள் பிரகாஷ் பேரன் மனைவியாக அறிவிக்கப்படுவாள். அவரின் ஒட்டுமொத்தச் சொத்திற்கும் அவளும் பங்குதாரராகிவிடலாம். ‘கவி வியர்ஸ்’ அவள் கையை விட்டுப் போகாது. அவ்வளவுதான்! அவளுக்குத் தேவை.

ஆனால் அவள் நினைத்தது எதுவும் நடக்கவில்லை. ரஞ்சன் அந்த வரவேற்பு நிகழ்ச்சிக்குச் செல்லவில்லை. ஒருபக்கம் பிரகாஷ் ஏமாற்றத்தில் இருக்க, கவிதா கடுமையான கோபத்தில் இருந்தாள். அதுவும் அவனை நேரில் பார்த்தால் துண்டுத் துண்டாகக் கிழித்துப் போடுமளவுக்கான கோபம்!

You cannot copy content