You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

வெங்கட் 💙 ஸ்ரீலட்சுமி (நிஜமோ நிழலோ நாவல்)

Quote

“விடுங்க வெங்கட்… இப்போதான் எல்லாமே சரியாயிடுச்சு இல்ல… அதுவும் இல்லாம வீட்டுல யாருக்கும் இதை பத்தி தெரியாது… அத்தை மாமாவுக்கு கூட மாறா உங்க உடம்புல புகுந்த விஷயத்தை எல்லாம் நான் சொல்லல… நாமளும் இந்த விஷயத்தைப் பத்தி பேசவே வேண்டாம்”

“சரி நாம பேச வேண்டாம்… ஆனா உன் கன்னத்திலிருக்க காயத்தைப் பத்தி கேட்டா” என்றவன் குற்றவுணர்வுடன் அவளைப் பார்க்க, 

“கேட்டாவா…?  அர்ச்சனாவும் லலிதாவும் ஆல்ரெடி இது என்ன காயம்னு கேட்டு என்னை ஒரு வழி பண்ணிட்டாங்க…  எப்படியோ சமாளிச்சுட்டேன்” என்றாள்.

அவனோ அவள் கன்னத்தை வருடியடி வருத்தத்துடன் பார்க்கவும், “ப்ச்… இது ஒன்னும் உங்களால இல்ல… நீங்க ஒன்னும் கில்டியா ஃபீல் பண்ண வேண்டாம்” என்றாள் அவள்.

“என் உடம்பால நான் செஞ்ச காரியத்துக்கு நான் பொறுப்பாளி இல்லன்னா… அப்போ உனக்கும் அப்படிதானே ஸ்ரீ” என்று அவன்  கேட்ட நொடி அவள் மௌனமானாள்.

“என்கிட்ட பேசுனது பழகினது எல்லாம் மாயாதான்னா… அப்போ உனக்கு இந்தக் கல்யாணத்துல சுத்தமா விருப்பம் இல்லயில்ல” அவன் கேட்ட கேள்விக்கு அவள் எந்த பதிலும் சொல்லவில்லை. அந்த அறையை சில நொடிகள் மௌனம் ஆட்சி செய்தது.

ஸ்ரீஅந்த அமைதியைக் குலைத்தாள்.

அவள் வெங்கட்டை நிமிர்ந்து பார்த்து, “உண்மைதான் வெங்கட்… உங்களைக் கல்யாணம் செஞ்சுக்கும்போது நான் நிறைய குழப்பத்தோடுதான் பண்ணிக்கிட்டேன்” என, வெங்கட் முகத்தில் அபரிமிதமான ஏமாற்றம் தெரிந்தது.

அதனை கவனித்த ஸ்ரீ, “ஆனா இப்போ நான் ரொம்ப தெளிவா இருக்கேன் வெங்கட்.

வாழ்ந்தா உங்களை மாதிரி ஒருத்தரோடதான் வாழணும்” என, அவன் விழிகள் ஆச்சரியத்தில் பெரிதானது.

“உண்மையா சொல்றியா ஸ்ரீ”

“ம்ம்ம்” என்று புன்னகையுடன் தலையசைத்தவள் மேலும்,

“இங்கே இருக்க நிறைய பேருக்கு அவங்க அவங்க நினைச்ச மாதிரி வாழ்க்கை அமையறது இல்ல…மாயாவோட வாழ்க்கை ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே முடிஞ்சு போச்சு… மகேந்திரனுக்கு அவன் நினைச்சது எதுவுமே நடக்கல… பாவம்… அவன் வாழ்க்கையில கிடைச்சது எல்லாமே ஏமாற்றம்தான்… ஆனா எனக்கு…

நான் நினைக்காமலே இப்படியொரு வாழ்க்கை அமைஞ்சிருக்கும் போது நான் எதுக்கு அதை விட்டுக் கொடுக்கணும்… எனக்கு கிடைச்சிருக்க வாழ்க்கையை சந்தோஷமா நான் வாழணும்னு முடிவு பண்ணிட்டேன்… எத்தனை காலம்னு எல்லாம் தெரியாது… ஆனா இருக்கிற காலம் வரைக்கும் உங்ககூடதான் இருக்கணும்னு விருப்பப்படுறேன் வெங்கட்” என்றவள் அவனிடம் சொன்ன மறுகணம்,

“எனக்கும்தான்” என்றபடி அவளை இறுக்கமாக அணைத்துக் கொண்டு, “தேங்க்ஸ் ஸ்ரீ… லவ் யூ” என்று சொல்லிக் கொண்டே அவள் முகம் முழுக்க முத்தத்தால் ஆராதிக்க அவள் அவன் கரங்களுக்குள் கரைய தொடங்கினாள்.

நிறைய குழப்பங்கள் போராட்டங்களுக்குப் பிறகு அவர்கள் இருவரும் தங்கள் உறவைக் குறித்த தெளிவான தீர்மானத்திற்கு வந்திருந்தனர்.

 

 

You cannot copy content