You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

AA - 1

Quote

1

செல்வியின் திருமணம்

நகர வீதிகள் எங்கும் மின்விளக்குகள் நட்சத்திரங்களாய் ஜொலித்துக் கொண்டிருந்தன. வானை இடித்து விடுமோ என்று எண்ணங்கொள்ளச் செய்யும் அளவிற்கு உயர்ந்த கட்டடங்கள், காதுகளைக் குத்தகைக்கு எடுத்துக்கொண்ட கைப்பேசிகள், சாலைகளில் சரமாரியாய் ஓடும் வாகனங்கள், இடைவிடாமல் காதுகளைத் துளைக்கும் ஹாரன் சத்தங்கள், தனித்தீவாய் மாறிவிட்ட வீடுகள், தொலைக்காட்சியில் தொலைந்து போன உறவுகள் என இத்தனை வேகமாய் மாறிவிட்ட நம் இன்றைய வாழ்க்கையில், தறிக்கெட்டு ஓடும் காலக் குதிரையின் கயிற்றை யார் கட்டுப்படுத்துவது?!

அது நிச்சயம் சாத்தியமற்ற ஒன்று. ஆனால் நம் கற்பனை குதிரைகளுக்குக் காலமோ நேரமோ கிடையாது. அவை சிலநேரங்களில் பின்னோக்கியும் ஓடும்.  சிலநேரங்களில் நிகழ்காலத்தைவிட்டு விலகி முன்நோக்கியும் ஓடும். நம் கதைக்காக அந்தக் கற்பனை குதிரையை நிகழ்காலத்தை விடுத்து இருபத்தி ஐந்து ஆண்டுகள் பின்னோக்கி ஓடச் செய்வோமாக...

கண்ணுக்கெட்டிய தூரம் பசுமை படர்ந்திருந்தது. அடர்ந்து விரிந்து கிடந்த மரங்கள். காக்கை, குருவியின் சத்தங்கள். வழியெங்கும் ஆடு, மாடுகளின் நடைபயணங்கள். வீடுகளை வளைய வந்துக்கொண்டிருக்கும் கோழிகள் என அந்த ஆதித்தபுர கிராமமே அழகிற்கு இலக்கணமாய் விளங்கியது.

பொழுது சாய்ந்த போதும் வீதிகளில் அமர்ந்திருந்தப் பெண்கள் புரணி பேசிக்கொண்டிருக்க, அவர்கள் ரகசியமாய் பேசிய போதும் அந்தப் பேச்சுக்கள் நம் காதுகளிலும் கொஞ்சம் விழத்தான் செய்தன.

"ஏன்டி பொன்னம்மா? இதென்னடி கொள்ளையா இருக்கு, செல்விக்கு போயும் போயும் இப்படி ஒரு வாழ்கையா?!"

"அவ நல்ல பொண்ணுதானே செண்பகம்"

"நல்ல பொண்ணுதான்டி... ஆனா அவதான் கொஞ்ச நாளாவே பித்து பிடிச்ச மாதிரி நடந்துகிட்டு இருந்தாளே... தெரியாதாடி உனக்கு?"

"ஆமாம் ஆமாம்" என்று மூன்றாமவள் தலையசைக்க, செல்வியைப் பற்றி அந்த ஊரே இப்படித்தான் பேசிக் கொண்டிருந்தது. அவளைப் பெண் பார்க்க வந்தவர்கள் எல்லோருமே வீதிகளில் இவர்களின் பேச்சுகளை காதில் வாங்கிக் கொண்டு திரும்பிப் போய்விடுவது வழக்கமான ஒன்றாய் நடந்து கொண்டிருந்தது.

ஆனால் இன்று செல்விக்கு நடைபெற்றது போல் அந்த ஊரில் யாருக்குமே அப்படி ஒரு திருமணம் நடந்திருக்காது. அது திருவிழாவோ என்று சந்தேகம் கொள்ளும் அளவிற்கு அந்தத் திருமணம் கோலாகலமாய் அரங்கேறியது.

அதுவும் ஊர்த் தலைவர் சண்முகவேலனின் மகன் சிவசங்கரன் என்பது அந்தத் திருமணத்தில் முக்கிய அம்சம். ஊரில் பெண் பிள்ளையைப் பெற்றவர்கள் எல்லோரும் அப்படி ஒருவன் மருமகனாய் வரமாட்டானா என்று ஏங்கி கொண்டிருந்த நிலையில், அவன் செல்வியை திருமணம் செய்து கொண்டதைத் தாங்க இயலாமல் எல்லோருக்கும் வயிற்றெரிச்சல் ஏற்படுவது சகஜம்தானே!

சிவசங்கரன் வீடுதான் அந்த ஊரிலேயே அழகிய பெரிய வீடு. பின்புறம் மாட்டுக் கொட்டகை, மறுபுறம் கிணறு, முன்புறமோ அடர்ந்த மரங்கள், செடிகள் என அந்த வீட்டின் வெளிப்புற தோற்றமே அத்தனை அம்சமாய் காட்சியளிக்க, முற்றத்தின் வழியாக நிலவின் ஒளி தடை ஏதுமின்றி அந்த வீட்டினுள் நுழைந்து வெளிச்சத்தை பரப்பிக் கொண்டிருந்தது.

அதேநேரம் மாடியில் உள்ள கடைசி அறையில் சிவசங்கரன் தனக்கே உரிய கனவுலகத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்தான். ஜன்னலின் வழியே வீசும் புன்னை மரக்காற்று அவனுக்கு ரம்மியமான சூழ்நிலையைத் தோற்றுவித்தது.

 செல்வியை திருமணம் செய்ய வேண்டும் என்ற அவனுடைய நீண்டநாள் ஆசை இன்று ஈடேறிவிட்டிருக்க, அவனோ மனதிற்குள் ஆனந்த பிரவாகத்தில் மூழ்கி திளைத்துக் கொண்டிருந்தான் என்றே சொல்ல வேண்டும்.

சிவசங்கரன், அளவிற்குக் கொஞ்சம் அதிகமான உயரம். மாநிற மேனி. கட்டுடலான தேகம். நேர்த்தியாக வளைந்து அவன் கம்பீரத்தை சொல்லாமல் சொல்லிக் கொண்டிருக்கும் முறுக்கு மீசை. அடர்த்தியான புருவங்களுக்கு இடையில் பாலமாய் அமைந்திருக்கும் திருநீறு. இவை எல்லாவற்றையும் மீறி அவனை மிடுக்காகக் காட்டும் வேட்டிச் சட்டை என எந்த ஒரு பெண்ணையும் கணநேரத்தில் கவர்ந்துவிடும்படியான தோற்றம் அவனுடையது.

அவன் செல்வியுடன் தொடங்க போகும் தன் வாழ்க்கை பயணத்தை எண்ணி பலநூறு கனவுகளோடு காத்துக் கொண்டிருந்த சமயம் அந்த அறையின் நிசப்தத்தை கலைத்தது மட்டுமல்லாது சிவசங்கரனின் மோனநிலையையும் கலைத்து செல்வியின் வருகையை அறிவித்தது அவளின் கொலுசொலி.

சிவசங்கரனின் நெஞ்சம் வேகமாய் படபடத்து கொள்ள, அவளோ பாராமுகமாய் நின்றிருந்தாள். ஆனால் சிவசங்கரனின் பார்வை செல்வியின் மீதே லயித்திருந்தது. சிறுவயதிலிருந்து இன்று வரை அவன் பார்த்து வளர்ந்த அவளின் வளர்ச்சியில் எத்தனை மாற்றங்கள்?

பதின்மூன்று வயதில் மூன்றாம் பிறை போல் ஓர் அழகெனில், பதினாறு வயதில் அவளின் அழகு வளர்ந்து முழு நிலவைப் போல் ஒளிவீச, சட்டென்று இன்று அவள் முகம் இருளைக் கிழித்து கொண்டு உதிக்கும் சூரியனைப் போல் அதீத பிரகாசமாய் ஜொலித்து கொண்டிருந்தது. கண்கள் கூசும்படியான அந்தப் பிரகாசமான அழகை அவன் எத்தனை நேரம் அப்படியே ரசித்துக் கொண்டிருந்தான் என்பது அவனுக்கே தெரியாது.

செல்வி,  மாநிறமான மேனி கொண்டவள்தான். அதேநேரம் எல்லாப் பெண்களும் பொறாமை கொள்ளும்படியான உயரம், ஒல்லியான தேகம், கருநாகம் போல் நீண்டு தொங்கும் தலைமுடி, சோழர் சிற்பம் போல் தெளிவான முகஅமைப்பு!

அத்தனை சீக்கிரத்தில் அவள் கண்கள் யாரையும் நிமிர்ந்து பார்த்துவிடாது. அப்படி அந்தக் கண்கள் நிமிர்ந்து பார்த்துவிட்டால் அந்தப் பார்வையின் தாக்கத்தையும், விழியின் அழகையும் அவ்வளவு சீக்கிரம் யாராலும் மறந்துவிட முடியாது. அப்படி ஒரு கூர்மையான, அகல விரிந்த, வசீகரமான விழிகள் அவளுக்கு. 

இத்தனை ஆண்டுகளில் அவள் மேனி பொன் நகைகளைப் பார்த்ததேயில்லை. ஆனால் இன்று அவள் பூட்டியிருந்த நகைகள் யாவும் அவள் அழகோடு இயைந்து பேரழகியாய் அவளை மிளிரச்செய்தது.

சிவசங்கரன் மெல்ல தன் மூச்சை இழுத்துவிட்டுக் கொண்டு, ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்த நிலவிற்குத் தடை சொல்லிவிட்டு கதவை அடைத்தான். அவனுக்கே உரிய மிடுக்கான நடையில் செல்வியின் அருகே வந்து நின்றான்.

அவள் கைகளில் இருந்த பால் டம்ளரை அவன் வாங்க முற்பட, அவள் நடந்து கொண்ட விதம் அவன் பலமான இதயத்தையும் உலுக்கிவிட்டதே! அவள் கைகள் நடுங்கி பால் கீழே கொட்டியது என விவரிக்கப்பட வேண்டிய காட்சி அங்கு வேறுவிதமாய் அரங்கேறியது.

அவன் கைகள் அவளின் கைகளின் மேல் பட்டதும் அவளே அந்தப் பால் டம்ளரை தரையில் விட்டெறிந்தாள். சிவசங்கரனுக்கு தான் கண்ட காட்சி மெய்தானா என்று நம்பவே சிலமணிநேரங்கள் பிடித்தன.

 அவன் ஒருவாறு தன்னிலை மீட்டு அவளிடம், "என்னாச்சு உனக்கு?" என்று அதட்டலாய் கேட்க, அவளிடமிருந்து பதில் ஏதும் வரவில்லை.

மீண்டும் அதே கேள்வியை இன்னும் சத்தமாய் அவளின் தோள்களை உலுக்கியபடி கேட்டான். அந்த நொடி உக்கிரமாய் அவனை நிமிர்ந்து பார்த்தவள்,

"பேய் பிடிச்சிருக்கு... இல்ல இல்ல பைத்தியம் பிடிச்சிருக்கு" என்று தன் குரலை உயர்த்திக் கத்தினாள்.

அவன் கண்டக் காட்சியை அவனால் நம்பவே முடியவில்லை. அவளா அப்படி தன்னிடம் நடந்து கொண்டாள்? அதுவும் தன்னைப் பார்த்தாலே தலை நிமிராமல் மிரட்சியோடு நிற்கும் செல்வியா இவள்?! அவன் அதிர்ச்சியின் உருவமாய் நின்றான்.

2

நாணயம்

சிலவிநாடிகள் யோசனையில் ஆழ்ந்தவன், அவளுக்கு இந்த புது சூழல் பயத்தையும், குழப்பத்தையும் ஏற்படுத்தி இருக்கக்கூடும் என்று மனதை தேற்றிக் கொண்டு... மீண்டும் அவளைப் பொறுமையோடு நெருங்கினான்.

அவள் தலை கவிழ்ந்தபடி நின்றிருக்க, அவளின் தோள் மீது கைவைத்தவன், "என்னமா நடந்தது? யாராவது ஏதாவது சொன்னாங்களா?!" என்று கொஞ்சம் அமைதியாகவே அவளிடம் கேட்டான்.

ஜடம் போல தலையை மட்டும் அசைத்து அவள், ‘இல்லை’ என்றாள். அவன் சிலநொடிகள் யோசித்துவிட்டு சற்று தயக்கத்தோடு,

"இந்த கல்யாணத்துல உனக்கு விருப்பம்தானே செல்வி?!" என்று வினவ, அந்தக் கேள்வியை இங்கே இப்போது கேட்பது அத்தனை அபத்தம் என்று தெரிந்தும் கேட்டான்.

அவளோ அவன் முகத்தை எந்தச் சலனமுமின்றி ஏறிட்டுப் பார்க்க, அவளின் கண்களின் கூர்மை அவனின் இதயத்தைக் கிழித்தது. அவள் நீண்ட பெருமூச்சொன்றை வெளிவிட்டு அவன் கேள்விக்கு பதிலளித்தாள்.

"இந்த கல்யாணம் நடக்கலைன்னா எங்க அம்மா நாண்டுகிட்டு செத்துருவேன்னு சொல்லிச்சு... அதான் நான் செத்தாலும் பரவாயில்லன்னு இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டேன்" வெகுநிதானமாக அவள் சொல்ல அவன் சுக்குநூறாய் உடைந்தான்.

விழிகள் சிவப்பேற அவளை ஆழ்ந்து நோக்கியவன், "என்னடி சொன்ன? திரும்பச் சொல்லு" என்று உச்சபட்ச கோபத்தோடு கேட்க,

"உங்க குடும்பத்துல வாக்கப்படுறதும் நா சாகுறதும் ஒன்னுனு சொன்னேன்" என்று இன்னும் அழுத்தமாக சொன்னாள்.

அவள் சொன்ன சொற்கள் அவன் நாடி நரம்புகளில் பாய்ந்த குருதியை உஷ்ணமாய் மாற்ற, எத்தனை நேரம்தான் அவனும் தன் கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டிருக்க முடியும்?

அவள் கன்னங்களில் தன் விரல்கள் பதியுமாறு அரைந்தான். அவனின்  கரத்தின் வலிமையைத் தாங்க முடியாதவளாய் நிலை தவறி கீழே விழுந்தாள்.

வீழ்ந்து கிடந்தவளை அவன் உக்கிரமாய் பார்க்க, அவள் முகமோ எவ்வித உணர்ச்சிகளையும் வெளிப்படுத்தவில்லை கண்ணீர் உட்பட! அவன் அடித்த அடி அவளுக்கு வலித்திருக்குமோ தெரியாது. ஆனால் அவளது கூர்மையான பார்வையும் அவளுடைய சொற்களும் அவனை வெகுவாய் காயப்படுத்தி இருந்தது.

இதற்கு மேலும் அதிர்ச்சியை தாங்க இயலாதவனாக படுக்கையில் சரிந்தான். சில மணிநேரங்கள் முன்பு அழகாய் பூத்திருந்த அவன் கனவுகள் அத்தனையும் வாடி வதங்கிப் போனது.

அவன் படுக்கையில் கிடந்தாலும் அவனை உறக்கம் தழுவவில்லை. தன் மீது அவளுக்கு அப்படியென்ன கோபம்? அவளைத் திருமணம் செய்து கொள்ளுவதற்காக அவன் குடும்பத்தில் உள்ள எல்லோரையும் எதிர்த்துக் கொண்டுவிட்டான். இப்பொழுது தன் செயலை நினைத்தால் அவனுக்குச் சிரிப்புதான் வந்தது.

சிவசங்கரனின் தந்தை சண்முகவேலன் அந்த ஊரின் தலைவர். அவர்களது நிலபுலன்களை கவனிப்பதற்கும், ஊர் பஞ்சாயத்துகளைத் தீர்த்து வைப்பதற்குமே அவருக்கு ஒருநாள் போதாது. எனவே அவரின் குடும்பப்பொறுப்புகள் எப்பொழும் அவர் அம்மா, மனைவி பின் மருமகள் என்று வீட்டுப் பெண்களிடமே இருந்தது.

கடைசி மகள் பரமேசுவரியை பிரசவித்துவிட்டு சிவசங்கரனின் தாய் மறைந்துவிட, அவனது பாட்டி ஆதிபரமேசுவரியே தாயில்லாத குறையி தெரியாமல் அவனை வளர்தார்.

அவரும் சிலகாலங்களில் நோய்வாய்ப்பட்டு இறந்துவிட அன்றிலிருந்து தந்தையின் பின்னோடு நடந்தவன், இளையவனாய் இருந்தும் பொறுப்புகளை தானே முன் வந்து சுமக்க ஆரம்பித்தான்.

அவனுக்கு இரண்டு சகோதரிகளும் இரண்டு அண்ணன்மார்களும் இருந்தனர். அக்கா மனோரஞ்சிதம், தங்கை பரமேசுவரி. அண்ணன்கள் வேல்முருகன், மாணிக்கம். மூத்தவர்களாய் இருந்தும் சிவசங்கரனைபோல் பொறுப்பை சுமந்து பழகாதவர்கள்.

ஏதோ பெயருக்காக வேலை செய்வதுபோல் அப்பாவின் எதிரில் நடிப்பவர்கள். அவர்களின் மனைவி கனகவல்லி, கண்ணம்மா. மூத்த மகன் வேல்முருகனை திருமணம் செய்து கொண்டு வந்த கனகவல்லி தன் கணவனைக் கைப்பொம்மையாய் மாற்றிக் கொண்டுவிட, இயல்பாகவே வீட்டின் ராஜ்ஜியம் அவள் கைக்குப் போனது.

அதன் காரணமாய் அடுத்து வந்த மருமகளான கண்ணமாவையும் அவளே ஆட்டிப்படைக்கத் தொடங்கினாள். வேல்முருகனுக்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் இருந்தனர். மாணிக்கத்திற்கு இரண்டு மகன்கள். அதிலும் அவனின் கடைசி மகன் முருகன் படுசுட்டி.

அவனின் அக்கா மனோரஞ்சிதம் ஒரு முரடனைத் திருமணம் செய்து கொண்டு வெளியூரில் இருக்கிறாள். அவளுக்கும் இரண்டு மகன்கள். அந்த வீட்டின் கடைக்குட்டி தங்கை பரமேசுவரியோ இன்று உயிருடன் இல்லை.

இந்த அழகான கூட்டு குடும்பத்திற்குள் இளையவன் சிவசகரனின் திருமணம் பெரும் புயலை உருவாக்கியிருந்தது. அதிலும் கனகவல்லிதான் இவர்களின் திருமணத்தை இன்று வரை எதிர்த்துக் கொண்டிருப்பவள்.

அவளுக்கோ அவள் தங்கை அமுதவல்லியை சிவசங்கரனுக்கு மணமுடித்து வைக்க வேண்டும் என்ற பேரவா! வீட்டில் பொறுப்பானவன் சிவசங்கரன். போதாகுறைக்கு அவன் சண்முகவேலனுக்கு ரொம்பவும் செல்லமகன் வேறு. சொத்துக்களில் அவனுக்கு அதிக பங்கு போய்விடுமோ என்ற அச்சத்தில் அவனுக்கு தன் தங்கையை மணமுடித்து அவனின் பங்கையும் தன்வசம் வைத்துக் கொள்ள திட்டம் தீட்டி வைத்திருந்தாள்.

அவளின் அந்தத் திட்டத்தை சுக்குநூறக்கும் விதமாய் சிவசங்கரன் செல்வியைத்தான் மணமுடிப்பேன் என்று பிடிவாதமாய் நின்றான். செல்வியின் தாய் மங்களம் சண்முகவேலனுக்கு சொந்தத்தில் தங்கை முறை என்றாலும் அவள் கணவனை இழந்து ஏழ்மையில் வாடுபவள். சிறு கூரைவீடு, கொஞ்சம் நிலமே அவர்களின் சொத்து.

இந்தக் காரணங்கள் எல்லாவற்றையும் சிவசங்கரனின் பிடிவாதம் உடைத்தெறிந்தது. எப்படியோ தன் குடும்பத்தினரிடம் எதிர்த்துப் போராடி தான் நேசித்தவளையே அவன் மணமுடித்திருக்க, யாருக்காக அவன் இத்தனையும் செய்தானோ அவள்,

'உன்னை திருமணம் செய்தது உயிரை விடுவதற்குச் சமானம்' என்று கூறிவிட்டாள். அந்தச் சொல் உயிர் வரை பாய்ந்து அவனைக் கொல்லாமல் கொல்ல, விழிகள் மூடிப் படுத்து கிடந்தவனுக்கு வெகுளியாய் பார்த்து ரசித்த அவளின் அந்த முகமே முன்வந்து நின்றது.

ஆனால் இன்று ஏனோ அந்த வெகுளித்தனம் அவளிடம் இல்லாமல் போயிருந்தது. மெல்ல அவள் புறம் பார்வையைத் திருப்பினான். அவளோ சுவரில் சாய்ந்தமேனிக்கு உறங்கியிருக்க, அவனின்  விழிகள் அவளை அடித்ததை எண்ணி அந்நொடி வருந்தி நீரை உகுத்தன. மனம் எதையெதையோ எண்ணிக்கொண்டிருந்தாலும் பார்வை என்னவோ

அப்பொழுதுதான் அவனது கவனத்தை ஈர்த்தது அவள் கழுத்தில் இருந்த டாலர். மஞ்சள் கயிற்றில் பிணைக்கப்பட்டிருந்த அந்த டாலரில் அவன் குடும்பத்தின் குலதெய்வம் ஆதிபரமேஸ்வரியின் சிலை தத்துரூபமாய் இருந்தது.

அதெப்படி அவள் கழுத்தில்? என்றெண்ணி வியப்புற்றான். அது அவன் குடும்பத்து பெண் வாரிசுகள் மட்டுமே அணிந்து கொள்ளும் டாலராயிற்றே. ஆனால் அது அவள் கழுத்தில் தொங்கிக் கொண்டிருந்தது அவனுக்குப் புரியாத புதிராய் இருக்க,

இந்தப் புதிருக்கான விடையை அவள் மட்டுமே சொல்ல முடியும். ஆனால் ஆழ்ந்த  உறக்கத்தில் கிடக்கும் அவளை எழுப்ப மனமின்றி தலையணையை நிமிர்த்திச் சாய்த்தபடி பெருமூச்சுவிட்டான். அவன் பாட்டி அந்த டாலரைப் பற்றி ஏதோ சொன்னது மின்னலடித்தது போல் அவனுக்கு ஞாபகம் வந்தது.

'அந்த டாலரை அணிந்து கொண்டிருக்கும் பெண்களுக்கு ஆளுமைத் திறன் இயல்பாகவே வந்துவிடும் என்றும், அவர்கள் நினைத்ததை நடத்தும் வல்லமை படைத்தவர்களாய் இருப்பார்கள்' என்றும் சொல்லியிருக்க,

அந்த நொடி சிவசங்கரனுக்கு செல்வியின் வித்தியாசமான நடவடிக்கைக்கு அந்த டாலர் காரணமாக இருக்குமோ என்று சந்தேகிக்க தோன்றியது. இப்படியாக யோசித்துக் கொண்டிருந்தவன் சிறிது நேரத்தில் தன்னை மறந்து நித்திரையில் மூழ்கினான்.

***

செல்லம்மா தன் கதையின் முதல் அத்தியாயத்தை முடித்துவிட்டு எழுதுகோலைக் கீழே வைத்துவிட்டு நிகழ்காலத்திற்குள் நுழைந்தார். முடிவில்லாத என் கதையினைத் தொடங்கிவிட்டேன். இதன் அந்தத்தை நான் எங்கனம் தேடுவேனோ என்றவர் சிந்தித்திருக்க,

அவர் கண்களில் கண்ணீர் ஆறாய் பெருகி ஓட ஆரம்பித்தது. அந்தச் சமயம் அவரின் சிந்தனையைக் கலைக்கும் விதமாய் அறைக்கதவு தட்டப்பட்டது.

You cannot copy content