You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

AA - 10

Quote

இருள் சூழ்ந்தது

செல்லம்மாவும் ஆதியும் புறப்பட்டு சென்ற பிறகு கருணாகரனின் வீட்டில் பெரும் அமைதி சூழ்ந்தது. யாரும் யாரிடமும் பேசவில்லை. இரவு உணவு முடிந்தவுடன் எப்போதும் போல் விஷ்வா தன் அறைக்குள் செல்ல எத்தனிக்க, கருணாகரன் அவனை அழைத்தார்.

"சொல்லுங்கப்பா" என்றவன் அவர் முன் வந்து நிற்க,

"உட்காரு விஷ்வா... உன்கிட்ட கொஞ்சம் பேசணும்" என்றார்.

விஷ்வா அவர் என்ன பேசப் போகிறார் என்று ஒருவாறு கணித்திருந்தான். அவன் யோசனையோடு அவர் எதிரில் அமர,

"ஆதியை கல்யாணம் பண்ணிக்கிறதில் உனக்கென்னடா பிரச்சனை?" என்று நேரடியாகவே கேட்டார்.

"ப்ளீஸ்ப்பா... என்னை விட்டுடுங்க... அவள கல்யாணம் பண்ணிக்கிறதில் எனக்கு சுத்தமா உடன்பாடில்ல... இதைப்பத்தி இனிமே பேசாதீங்க... வேற ஏதாவது விஷயம் இருந்தா மட்டும் சொல்லுங்க" என்றவன் சொல்லிவிட்டு எழுந்து கொள்ள,

கருணாகரனும் அவனுக்குச் சரியாய் எழுந்து நின்று,

"ஏன் விஷ்வா? நான் இதுநாள் வரைக்கும் உனக்கு பிடிக்காத விஷயத்தை செய்யுன்னு சொல்லிருக்கேனா? ஆனால் ஆதியை நீ வேண்டாம்னு சொல்றதுதான் ஏன்னு எனக்கு புரியல... அவகிட்ட அப்படி என்னடா குறை?" என்றவர் திட்டவட்டமாய் கேட்டார்.

அவன் வெறுப்போடு, "அவகிட்ட குறையெல்லாம் இல்ல... எல்லாமே அதிகம்... திமிரு... கர்வம்... தலைகணம்... வாய்... போதாக்குறைக்கு தான்தான் எல்லாம்னு ஒரு நினைப்பு... அவளைப்போய் கல்யாணம் பண்ணிக்க சொன்னா?" என்றவன் ஆங்காரமாய் தன் குரலை உயர்த்தினான்.

"உன் எண்ணம் ரொம்ப தப்பு விஷ்வா... நீ நினைக்கிற மாதிரியெல்லாம் ஆதி இல்ல... அவ எல்லோர்கிட்டேயும் ரொம்ப இயல்பா பழகுவா... அன்பா பேசுவா... எல்லா பிரச்சனையும் புத்திசாலித்தனமா ஹேன்டில் பண்ணுவா... அனாவசியமா கோபப்படமாட்டா... அப்படியே அவ கோபப்பட்டாலும் அதுல ஒரு நியாயம் இருக்கும்" என்று கருணாகரன் பொறுமையோடு தன் மகனிடம் ஆதியைப் பற்றி எடுத்துரைக்க, விஷ்வாவிற்கு அவற்றையெல்லாம் கேட்க கேட்க எரிச்சல் மூண்டது.

"நீங்கதான் அவளை மெச்சிக்கணும்" என்று கடுப்பானவன்,

"அவ எப்படி வேணா இருக்கட்டும்... ஆனா என்னால அவளை கல்யாணம் பண்ணிக்கவே முடியாது" என்று அழுத்தம் திருத்தமாய் தன் முடிவைச் சொன்னான். ஆனால் கருணாகரன் விடாமல்,

"என்னைக்கு இருந்தாலும் நீ யாரோ ஒரு பொண்ணை கல்யாணம் பண்ணிக்க போற... அது ஏன் ஆதியா இருக்க கூடாது?" என்றவர் கேட்க,

"ஹ்ம்ம்... நீங்க சொல்றது கரெக்ட்...ஆனா நான் அவளை பொண்ணுங்க லிஸ்டிலேயே சேர்க்கலயே" என்று தடலாடியாய் அவன் சொல்ல, அந்த நொடி கருணாகரனின் பொறுமை உடைந்து போனது.

"என்ன பேசற விஷ்வா நீ? ஆதியைப் பத்தி நீ இந்த மாதிரி எல்லாம் பேசறது எனக்கு சுத்தமா பிடிக்கல" என்று அவரும் தன் குரலை உயர்த்தினார். அவர்களுக்கு இடையில் காரசாரமான விவாதம்போய் கொண்டிருக்கச் சாரதா மனதில் அச்சம் தொற்றிக் கொண்டது.

அவர் எப்படி இவர்கள் பேச்சை நிறுத்துவது என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தார். அப்போது விஷ்வா தன் தந்தையிடம்,

 "உங்களுக்கு என்னை விட அவதானே முக்கியம்" என்றான்.

"என்னடா சொல்ல வர்ற நீ?" என்று கேட்டு கருணாகரன் சீற்றமாக,

"நான் எல்லா விஷயத்திலும் உங்களுக்கு இரண்டாம் பட்சம்தான்னு சொல்ல வர்றேன்... ஆதிதானே உங்களுக்கு முதல்ல"

"ஏன்டா முட்டாள்தனமா இப்படி யோசிக்கிற?"

"நீங்கதான் செல்ஃபிஷா நடந்துகிறீங்க... ஆதியை இந்த வீட்டுக்கு மருமகளா கொண்டு வரணும்கிற எண்ணத்தில மாலதி வீட்டில உங்க இஷ்டபடி பேசி என் விருப்பத்தை நடக்கவிடாம பண்ணிட்டீங்க இல்ல" என்று அவன் மனதில் புதைந்திருந்த வேதனையை வார்த்தைகளாய் கொட்டினான்.

"மாலதி வீட்டில ஒத்துக்காததிற்கு நான் காரணம் இல்ல... அவங்கதான் பிடிவாதமா முடியாதுன்னு சொல்லிட்டாங்க... அதுக்குமேல நான் என்னடா பண்ண முடியும்"

"உங்களுக்கே மாலதியை எனக்கு கட்டி வைக்க விருப்பமில்லைனு வெளிப்படையா சொல்லிடுங்க... அதை விட்டுவிட்டு அவங்களுக்கு விருப்பமில்லன்னு... சப்பைக்கட்டு கட்டாதீங்க"

சாரதா சற்று துணுக்குற்று அவர்கள் இடையில் வந்து, "சரி போதும்.. இந்தப் பேச்சை இத்தோட விடுங்க" என்று அவர்கள் பேசுவதை நிறுத்த முயற்சித்தார். ஆனால் விஷ்வா அமைதி அடையவில்லை.

"விட முடியாதும்மா... நான் மனசில இருக்கிறதை பேசணும்... ஆதியை இந்த வீட்டுக்கு மருமகளா ஆக்கிக்கனும்னு என் ஆசையை நொறுக்கிட்டீங்க இல்ல... நீங்க ரொம்ப சுயநலவாதிப்பா" என்று விஷ்வா கோபத்தில் கருணாகரன் மீது வார்த்தைகளை வீச,

அதைப் பொறுத்துகொள்ள முடியாமல் சாரதா அவன் கன்னத்தில் அறைந்தார். விஷ்வா சீற்றமாய் அம்மா என்று அலற சாரதா,

"என் கண்ணு முன்னாடியே நிக்காதே இங்கிருந்து போடா" என்று அதட்டினார். அவனால் அதிர்ச்சி தாங்க முடியவில்லை. தன் அம்மா அப்படி குரல் உயர்த்திப் பேசி அவன் பார்த்ததே இல்லை.

உடனடியாக அவன் கோபமாய் மாடி படிக்கெட்டுகளில் ஏறிச் சென்றுவிட கருணாகரன் சாரதாவை நோக்கி, " நீ செஞ்சது தப்பு சாரதா" என்றார்.

"என்னங்க தப்பு... அவன் பாட்டுக்கு உங்ககிட்ட மரியாதை இல்லாம பேசிட்டிருப்பான்... என்னைப் பாத்துக்கிட்டு சும்மா இருக்க சொல்றீங்களா?" என்று சாரதா கோபம் குறையாமல் பேச, கருணாகரன் பதிலுரை எதுவும் சொல்லாமல் அவரும் தன் அறைக்குள் புகுந்தார்.

சாரதா அதே கோபத்தோடு மாடி படிக்கெட்டு ஏறிச் சென்றார் விஷ்வாவை காண...

அவனோ தான் செய்த தவற்றை உணராமல் கற்சிலை போல் சுவரில் சாய்ந்தபடி நின்றிருந்தான்.

"விஷ்வா" என்று சாரதா அதட்டலாய் அழைக்க அவன் அவரை ஏறிட்டுப் பார்க்க கூடத் தயாராக இல்லை. ஆனால் அவர் சொல்ல நினைத்ததை அவனிடம் தெளிவாக எடுத்துரைத்தார்.

"இதுவே கடைசி தடவையா இருக்கட்டும்... இனிமே உங்க அப்பாக்கிட்ட நீ இப்படி மரியாதை இல்லாம பேசினா... நான் என்ன பண்ணுவேன்னே தெரியாது" என்க, விஷ்வா இப்போது அவரை நேர்கொண்டுப் பார்த்து,

"அவரு என் விஷயத்தில் பாரபட்சமாய் நடந்துக்கிட்டாரு... அதைச் சொன்னது... தப்போ?" என்று கோபமாய் கேட்டான்.

“தப்புதான் ப்பா...உன்னை மாதிரி ஒருத்தனை வளர்த்து ஆளாக்கி இருக்கிறாரே தப்புதான்... அவரையாடா பாரபட்சமா நடந்துக்கிட்டாருன்னு சொன்ன... பைத்தியக்காரா.. சொந்த பிள்ளைக்கு மேல உன்னை பாத்துக்கிட்டாரே"

விஷ்வாவிற்கு அவன் அம்மாவின் வார்த்தைகள் ஏதோ தப்பாக கேட்டது போல் தோன்றச் சந்தேகமாய், "என்ன சொன்னிங்க?" என்று கேட்டான்.

"நீ அவருக்கு பிள்ளையே இல்லன்னு சொன்னேன்... அவரோட குணமும் பரந்த மனப்பான்மையும் உனக்கு துளி கூட இல்லைன்னு சொல்றேன்"

"அம்மா ப்ளீஸ்... கோபத்தில் கூட இப்படி எல்லாம் பேசாதீங்க... சொல்லிட்டேன்" என்று விஷ்வா ஆவேசமாய் கத்தினான்.

"கோபத்தில சொன்ன வார்த்தை இல்ல... மனசில நான் இத்தனை நாளா உன் கிட்ட சொல்லாம மூடி மறைச்சிருந்த உண்மை... நீ எப்போ இப்படி எல்லாம் பேசிட்டியோ... அப்பவே முடிவு பண்ணிட்டேன்... உன்கிட்ட எல்லாத்தையும் சொல்லணும்ன்னு"

சாரதாவின் வார்த்தைகள் விஷ்வாவின் மனதைப் போட்டு பிசைந்தது. என்ன சொல்ல போகிறார் என்று புரியாது பேச்சற்று அவன் நிற்க, அவர் தொடர்ந்தார்.

"சுயநலவாதி... எப்படிறா நீ அந்த மனுஷனைப் பார்த்து அப்படி சொல்வ... இன்னைவரைக்கும் அந்த மனுஷன் உனக்கு என்னடா குறை வைச்சாரு... நீ ஆசைப்பட்ட பொண்ணை கல்யாணம் பண்ணிக்கனும்னு அவரோட சுயகெளரவத்தை விட்டுவிட்டு எவ்வளவு இறங்கி பேசினாருன்னு தெரியுமாடா உனக்கு... அவர பாத்தா சொல்ற சுயநலவாதின்னு...

நல்லா கேட்டுக்கோ... நீ இரண்டு வயசா இருக்கும் போதே உன் சொந்த அப்பா நம்மை வேண்டாம்னு ஒதுக்கிட்டாரு... ஏன் தெரியுமா? உங்க தாத்தா என்னை ரொம்ப தைரியமா வளர்த்துட்டாராம்... யாரு தப்பு செஞ்சாலும் தயங்காம கேளுன்னு சொன்னாரு... என் புருஷன் தப்பு செஞ்சதை நான் தட்டிக்கேட்டேன்... நீ பொம்பள... உனக்கு பேச தகுதியில்ல.. நீ அடுப்பங்கறையிலதான்டி இருக்கணும்ன்னு சொன்னாரு... நான் முடியாதுன்னு சொன்னேன்... உன்னை மாதிரி திமிரு பிடிச்சவளோட வாழ முடியாதுன்னு என்னை ஒதுக்கிட்டு வேற கல்யாணம் பண்ணிக்கிட்டாரு...

வாழாவெட்டிங்கிற பட்டத்தோட இருந்த என்னைப் பார்த்து உங்க தாத்தா தினம் தினம் நம்ம பொண்ண தைரியமா வளர்த்ததுதான் இதுக்கெல்லாம் காரணமோன்னு கூனிக்குறுகி போனாரு...

அப்போ உங்க தாத்தா பத்திரிகையிலதான் இந்த மனுஷன் வேலை செஞ்சிட்டிருந்தாரு... உங்க தாத்தாவோட வேதனையைப் புரிஞ்சிக்கிட்டு என்கிட்ட பேசினாரு... நான் உங்களுக்கு வாழ்க்கை கொடுக்கனும் என்ற எண்ணத்தில இப்படி கேட்கல... ஆனா ஒரு பெண் தைரியமா வளர்ந்துட்டா இப்படி தனியா கஷ்டபடனும்னு அவசியமில்ல... உங்களைப் புரிஞ்சிக்காத ஒருத்தருக்காக நீங்க ஏன் இப்படி தனியா கஷ்டப்படணும்... ஊர் உலகத்தைப் பத்தி கவலைபடாதீங்க...

மனசில தோன்ற முடிவை துணிச்சலோட எடுங்கன்னு... அப்போ அவர் சொன்ன விதமும் அதிலிருந்த நியாயமும் பிடிச்சிருந்தது... உன்னோட இரண்டு வயசில நான் இவரை மறுமணம் பண்ணிக்கிட்டேன்... கல்யாணம் ஆனதும் அவர் என்ன சொன்னாருன்னு தெரியுமாடா... நமக்கு விஷ்வா மட்டும் போதும்... இன்னொரு குழந்தை பிறந்து தப்பி தவறி பாசத்தில பிரிவினை ஏற்பட்டுட்டா... அது உன் வாழ்க்கையைப் பாதிக்கும்னு சொன்ன அந்த மனுஷனைப் பார்த்து சுயநலவாதின்னு எவ்வளவு சுலபமா சொல்லிட்ட... சே!" என்றவர் சொல்லி முகம் சுளிக்க விஷ்வா உள்ளூர நொறுங்கினான்.

சாரதா நிறுத்தாமல் மேலும் அவனிடம், "ஆதியைப் பார்த்து என்னடா சொன்ன... திமிரு பிடிச்சவளா... ஒரு பெண் இந்த சமுதாயத்தில சுதந்திரமா செயல்பட்டா இதுதான் அவளுக்குக் கிடைக்குற பேர்... இல்ல...அது எப்படிடா... நீ உன் பெத்த அப்பன் கூட வளரலனாலும் அவரு குணம் உனக்கு அப்படியே இருக்கு... அவர் ரத்தம் உன் உடம்பில ஓடுது பாரு அதான்... இந்த மனுஷன்கூட இத்தனை வருஷமா இருந்தும் அவரோட குணம் உனக்குத் துளி கூட வரல இல்ல... உனக்கு நான்தான் அம்மான்னு சொல்லிக்கவே அவமானமா இருக்குடா" என்க, விஷ்வாவின் உதடுகள் அவமானத்தில் துடித்தன.

"நான் இந்த விஷயத்தை மட்டும் உன்கிட்ட சொன்னேன்னு அவருக்கு மட்டும் தெரிஞ்சா... அவரால தாங்கிக்கவே முடியாது" என்று சாரதா வேதனையோடு சொல்லி முடிக்க, விஷ்வாவிற்கு எதிரே நின்றிருந்த தன்னுடைய அம்மாவின் முகம்கூட தெரியாமல் கண்ணீர் மல்கியது.

சாரதா அதற்கு மேல் அங்கே நிற்காமல் வேகமாய் படியிறங்கி சென்றுவிட, விஷ்வா அப்படியே தரையில் சரிந்து அமர்ந்தான்.

ஆண்வர்க்கம் அழக் கூடாது... அது வீரத்திற்கு இழுக்கு என இலக்கியங்கள் சொல்வது இங்கே விஷ்வாவின் சூழ்நிலைக்கு சற்றும் பொருந்தாது. அவன் கண்ணீர் வடித்தான் என்று சொல்வதைவிட அவன் கண்ணீரில் நனைந்தான் என்றுதான் சொல்ல வேண்டும். அவன் கருணாகரனிடம் அறிவிழந்து பேசிய வார்த்தைகளை நினைக்க நினைக்க அவனை அவனே நொந்துக் கொண்டான்.

கருணாகரன் மட்டும் இல்லை என்றால் ஆதி மாதிரி தானும் அப்பா என்ற உறவே இல்லாமல் வளர்ந்திருப்போம் என்ற எண்ணமே அவனுக்கு பெரும் வலியை ஏற்படுத்த, அந்த நினைப்பு ஆதியின் மீது முதல்முறையாய் பரிதாபத்தை உண்டு பண்ணியது.

அவள் மீது காட்டிய வெறுப்பு இன்று அவனுக்குள் குற்றவுணர்வை உருவாக்கியது. அவனின் அப்போதைய வலியையும் வேதனையையும் வெறும் வார்த்தைகளினால் வடித்துவிட முடியாது.

அன்று வானத்தில் பிரகாசமாய் இருந்த சந்திரன்கூட அவன் வேதனையைக் காண சகியாமல் மேகத்தின் பின்னே மறைந்து கொள்ள அந்த இடமே இருள் சூழ்ந்தது. இன்று அவன் தெரிந்து கொண்ட உண்மையும் அதனால் அவன் அனுபவித்த மோசமான வலியின் காரணத்தினாலும்...

இனிவரும் அத்தியாயங்களில் விஷ்வா தன் இயல்பிலிருந்து முற்றிலும் மாறுபட்டவனாய் தோன்றப் போகிறான்.

*******

ஆதியை விஷ்வாவிற்கு திருமணம் செய்விக்க வேண்டும் என்ற செல்லம்மாவின் எண்ணம் ஈடேறாமல் போனதில் அவர் ரொம்பவும் மனதளவில் நொந்து போயிருக்க, அந்தக் கோபத்தை எல்லாம் மொத்தமாய் அவர் ஆதியிடம்தான் காண்பித்தார்.

ஆனால் அவளோ மனதில் சிறு சஞ்சலமோ கவலையோகூட இல்லாமல் எப்போதும் போல அலுவலகத்திற்குப் புறப்பட்டு கொண்டிருந்தாள். அதேசமயம் அந்த வாரம் வெளியிடப்பட வேண்டிய அத்தியாயத்தைப் பற்றி ஆதி கேட்க, அதற்கும் செல்லம்மாவிடம் மௌனமே பதிலாய் வந்தது.

ஆதி தன் அம்மாவின் மேஜை மீது இருந்த தாள்களைப் பிரித்துப் பார்த்து அவளுக்குத் தேவையானதை எடுத்துக் கொண்டு தன் அம்மாவிடம் சொல்லிக்கொள்ளாமல் புறப்பட்டாள்.

அலுவலகத்தைச் சென்றடைந்த ஆதி அந்த வார அத்தியாயத்தை அமுதாவிடம் கொடுத்துச் சரிபார்க்கச் சொல்லிவிட்டு, ஜேம்ஸை தன் அறைக்கு அழைத்தாள். அவனும் அவள் பின்னோடு வந்து என்னவென்று விசாரித்தான்.

"ஜேம்ஸ்.. நீங்க பெர்ஸ்னலா எனக்கு ஒரு உதவி செய்யணும்... முடியுமா?!" என்றவன் கேட்க,

"கண்டிப்பா செய்றேன்... தயங்காம சொல்லுங்க" என்றான் ஜேம்ஸ்.

"அது... நம்ம ஆஃபிஸுக்கு வந்து ஒருத்தன் கலட்டா பண்ணிட்டு போனானே... அவன் பேரு... ஆ... சரவணன் அவனோட குடும்பத்தை பத்தின முழு விவரங்கள் வேணும்" என்று ஆதி கேட்க உடனே ஜேம்ஸ்,

"ஓ... எஸ்... ஆதி... விசாரிச்சிடலாம்" என்றான்.

"தேங்க் யூ... பட் சீக்கிரமா?!" என்று ஆதி சொல்ல அவன் தலையாட்டிவிட்டு வெளியே சென்றான்.

ஆதி அவளுக்கும் சரவணனுக்கும் இடையில் ஏதோ ஒரு உறவு இருக்குமோ என்று யூகித்தாள். அதனால்தான் அவனைப் பற்றி விசாரிக்க வேண்டுமென்ற எண்ணம் அவளுக்குத் தோன்றிற்று.

அதேசமயத்தில் அமுதா செல்லம்மா எழுதிக் கொடுத்த அந்த வார அத்தியாயத்தைச் சரிபார்க்கத் தொடங்கியிருந்தாள்.

Quote

Super ma 

You cannot copy content