You don't have javascript enabled
Monisha NovelsRomanceRomantic thriller

Vilakilla vithigal AVAN – 7

7

பாரதி அமர்ந்த வாக்கில் மெதுவாக, “துர்கா” என்று விளிக்கவும் அவள் திடுக்கிட்டு நிமிர்ந்தாள்.

அவளின் பயமும் பதட்டமும் அதிகரிக்க, அவளது மெல்லிய விசும்பல் அழுகையாக உருமாறியது.

பயந்து தம் தேகத்தை முடக்கி பின்னே நகர்ந்தவள், “என்னை விட்டுடுங்க ப்ளீஸ்” என்று கைகளைக் கூப்பி அவனிடம் இறைஞ்சினாள்.

அவள் உடலெல்லாம் சிமெண்டு துகள்கள் படிந்திருந்தது. அவள் அணிந்திருந்த மேற்சட்டைக் கிழிந்திருந்தது. அவள் விழிகள் உப்பியிருந்தன. பார்க்கவே ரொம்பவும் பரிதாபகரமான நிலையிலிருந்தாள். அவள் மனநிலை புரிந்து உடனடியாக கீழே நின்றிருந்த தன் தாயை மேலே வருமாறு கையசைத்தான்.

துர்கா அமர்ந்திருந்த கோலத்தைப் பார்த்து வித்யாவும் மிரண்டு விட்டார்.

“துர்கா என்னாச்சு? என்னாச்சும்மா?”

அவர் குரலைக் கேட்ட நொடி அவள் குழந்தை போல தேம்பியபடி அவரை கட்டிக் கொண்டாள்.

“என்னாச்சு துர்கா… என்னாச்சுன்னு நீ சொன்னாதான் தெரியும்” என்றவர் கேட்கவும்,

“எனக்கு சாக கூட பயமா இருக்கு மிஸ்?” என்று அவள் சொன்னதைக் கேட்டு அதிர்ந்துவிட்டார்.

“இப்ப எதுக்கு சாக போறேன் அது இதுன்னு பேசிட்டு இருக்க… ஆமா உங்க அம்மா எங்க?”

அந்த கேள்வியைக் கேட்ட மறுகணம் அவள் தொண்டைக் குழியிலிருந்து அழுகை வெடித்து வெளியேறியது. அவள் உதடுகள் நடுங்கியது.

“என்னாச்சு துர்கா?”

“அம்மா செத்து போச்சு மிஸ்” அழுகையினூடே தழுதழுத்த குரலில் அவள் சொன்னதைக் கேட்டு இருவரின் விழிகளும் கண்ணீரை உதிர்த்தன. 

 அவள் அம்மா இறந்துவிட்ட செய்தி அவருக்கும் பேரிடியாகத்தான் இருந்தது. இருப்பினும் அவர் என்ன செய்வது என்று புரியாமல் மகனை தயக்கமாக ஏறிட, அவனோ முகத்தை மூடி அழுதிருந்தவளை இரக்கமாக பார்ததபடி.

“நான் போய் ஆட்டோ கூட்டிட்டு வரேன்… அந்த பொண்ணை அழைச்சுக்கோங்க ம்மா… நம்ம வீட்டுக்கு போலாம்” என்றான்.

“இந்த கோலத்துல எப்படிடா இவளை வீட்டுக்கு கூட்டிட்டு போறது? காலனில என்ன பேசுவாங்க?!” வித்யா கேட்ட கேள்விக்கு சில நொடிகள் யோசித்தவன்,

“அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன் ம்மா” என்று சொல்லிவிட்டு அருகே இருந்த தன் தோழி வீட்டுக்கு அழைத்து சென்று துர்கா குளித்து அங்கேயே உடை மாற்றிக் கொள்ளவும் ஏற்பாடு செய்தான்.

அவர்கள் வீட்டிற்குத் திரும்பிய போது நன்கு இருட்டிவிட்ட காரணத்தால் யாருடைய பார்வையிலும் துர்கா படவில்லை.

வந்த கணத்திலிருந்து அவள் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. இறுக்கமாக அமர்ந்திருந்தவளை வித்யாவும் கட்டாயப்படுத்தி எதுவும் கேட்டுக் கொள்ளவில்லை. இருப்பினும் போராடி ஓரிரண்டு வாய் அவளை சாப்பிட மட்டும் வைத்தார்.  

“சரிங்க ம்மா… நான் ஜமால் வீட்டுல படுத்துக்கிறேன்… நீங்க கதவை பூட்டிக்கோங்க” என்று பாரதி வெளியேறத் தயக்கமாக மகனின் கரத்தை பற்றிக் கொண்டவர்,

 “வயசு பொண்ணை எப்படிறா நம்ம வீட்டுல வைச்சுக்க முடியும்” என்று கேட்டார்.

“வேற என்னம்மா ஆப்ஷன் இருக்கு நம்மகிட்ட”

“இல்ல டா… காலையில எல்லோரும் இந்த பொண்ணு யாரு என்னன்னு கேட்டா என்ன சொல்றது?”

“அதை பத்தி நாளைக்கு பார்த்துக்கலாம்… நீங்க போய் படுங்க” அவன் சுலபமாகச் சொல்லிவிட்டான். ஆனால் வித்யாவின் மனம்தான் இருப்புக் கொள்ளாமல் தவித்தது.  

துர்காவை பார்த்தால் அவளோ பித்துப்பிடித்தவள் போல அமர்ந்திருந்தாள். இவர் சொல்லும் எந்த சமாதானமும் அவள் செவியை எட்டியதாகக் கூட தெரியவில்லை.

பாயை விரித்தவர் அவள் அருகில் அமர்ந்து மெதுவாக அவள் தோளை வருடிக் கொடுத்து ஆறுதலாகப் பேசினார்.

“எனக்கு உன் வேதனை புரியுது துர்கா… ஆனா அதுக்காக இப்படியே உட்கார்ந்திருந்தா எல்லாம் சரியாகிடுமா… கண்ணை மூடி கொஞ்ச நேரம் தூங்கு… மனசு கொஞ்சமாச்ச்சும் அமைதியாகும்”

என்ன நினைத்தாலோ? அவர் மடியில் அப்படியே தலை சாய்த்துக் கொண்டாள். அந்த ஆதரவும் தாங்கிக் கொள்ள ஒரு மடியும் அவளுக்கு அப்போதைக்குத் தேவையாக இருந்தது.

துர்காவின் நிலையை எண்ணி அவர் உள்ளம் கனத்தது. கிட்டத்தட்ட ஒரு வருடம் முன்பாக இருக்கலாம்.

அவர் ஆசிரியராகப் பணி புரிந்திருந்த தனியார்ப் பள்ளியில் கட்டிடச் சீரமைப்பு பணி நடந்து கொண்டிருந்தது. கற்களையும் சிமண்ட்டுகளையும் தலையில் சுமந்தபடி கட்டிடப் பணியாளர்கள் அவர் வகுப்பைத் தாண்டி செல்வர். அவர்களுள் துர்காவும் ஒருத்தி!  

ஒவ்வொரு முறை அவரின் வகுப்பைக் கடந்து செல்லும் போதெல்லாம் துர்காவின் விழிகள் அவர் பாடம் எடுப்பதை ஏக்கத்தோடு பார்த்தன. அவளது விழிகளில் ததும்பிய ஏக்கமும் தவிப்பும் அவர் மனதை வெகுவாக பாதிக்க. அவளை தனியாக அழைத்துப் பேசினார்.

“நான் ஸ்கூலுக்கு போயிட்டுதான் இருந்தேன் மிஸ்… எங்க அம்மாவுக்கு நான் படிக்கணும்னு ரொம்ப ஆசை… திடீர்னு அவங்களுக்கு ரொம்பவும் உடம்பு முடியாம போயிடுச்சு…

அந்த காண்ட்ராக்டர் அம்மாவுக்கு பதிலா என்னைய வேலைக்கு கூட்டிட்டு வந்துட்டாங்க” துர்கா கண்ணீரோடு தன்நிலைமையை விவரித்ததைக் கேட்ட நொடியே வித்யா அவளுக்கு உதவி செய்ய முன்வந்தார்.

தம்முடன் பணிபுரியும் சில ஆசரிய நண்பர்கள் மூலமாக அந்த ஒப்பந்த பணியாளரிடம் பேசி துர்கா எந்தவித இடையூறும் இல்லாமல் படிப்பை தொடர ஏற்பாடு செய்தார். 

அதுமட்டுமல்லாது அவளுக்கு இனி இது போன்று எந்த பிரச்சனையும் வராமல் இருக்க ஒரு விடுதியில் தன் சொந்த செலவில் சேர்த்துவிட்டார்.

துர்காவின் அம்மாவிற்கு மருத்துவ உதவிகளையும் செய்தார். அவர் நெகிழ்ச்சியோடு வித்யாவிடம் நன்றியுரைக்க.

“உங்களுக்கு என்ன பிரச்சனைன்னாலும் எனக்குக் கால் பண்ணி சொல்லுங்க” என்று தன்னுடைய தொலைப்பேசி எண்ணையும் அவர்களுக்குத் தந்துவிட்டு வந்திருந்தார்.

அதற்குப் பிறகு எத்தனையோ முறை அவர்களைத் தானே சென்று பார்த்து வித்யா தன்னால் இயன்ற உதவிகளைச் செய்திருக்கிறார். துர்காவிற்கு புது துணி மணிகள் எல்லாம் எடுத்து தந்திருக்கிறார்.

பொதுத் தேர்வு முடித்து அவள் விடுதியை காலி செய்துவிட்டு வந்த பிறகுதான் ஏதோ விபரீதமாக நிகழ்ந்திருக்க வேண்டுமென்று வித்யாவின் மனம் சிந்தித்திருக்கும் போதே துர்கா அவர் மடியில் கண்ணையர்ந்துவிட்டாள்.

மெதுவாக அவளைத் தலையணையில் படுக்க வைத்துவிட்டு தானும் படுத்துக் கொண்டார். அவர் விழிகளை மெல்ல உறக்கம் தழுவியது.

ஆனால் துர்காவால் சில நிமிடங்கள் கூட சரியாக உறங்க முடியவில்லை. அமைதியற்ற அவள் மனம் நடந்த சம்பவங்களை எண்ணித் தவித்திருந்தது. உள்ளுர வேதனைகள் அவளை குத்தி கிழித்தன.

உடல் நிலை சரியில்லாமல் அவள் அம்மா இறந்த மறுநாளே அவள் விதி மிக மோசமாக அவளை வஞ்சிக்கத் தொடங்கியது. அவர்களுக்கு என்ற சொந்த வீடு கிடையாது. கூடாரம் போட்டு வேலை செய்யும் இடத்திலேயே அவர்கள் குழுவினர் தங்கிவிடுவார்கள்.

விடுப்பு எடுத்துக் கொண்டு சிலர் தங்கள் ஊருக்குச் சென்றுவிட்டு வருவது அரிதாக நடக்கும். ஆனால் அவளுக்கு அப்படியொரு வாய்ப்பும் கிடையாது. பிறந்ததிலிருந்து சென்னை எல்லையைத் தாண்டி அவர்கள் வேறு எங்கும் சென்றதில்லை.

ஒரு வகையில் அங்கே செலவு செய்து பார்த்துவிட்டு வருமளவுக்கு எந்த உறவோ பிடிப்போ துர்காவின் அம்மாவிற்கு இல்லாமல் இருந்திருக்கலாம்.

துர்காவைப் படிக்க வைக்க வேண்டுமென்ற நோக்கத்தைத் தவிர துர்காவின் அம்மாவிற்கு வேறு எந்த ஆசையுமில்லை. அதற்காகவே  பணி இடங்களில் நிறைய இன்னல்களை அவள் சகித்து கொண்டாள்.

புலம்பெயர்ந்து தொழிலாளர்கள் அனுபவிக்கும் அனைத்து விதமான கொடுமைகளையும் அவளும் அனுபவித்தாள். அடிப்படை உரிமைகளையும் மறுக்கப்பட்டு தாய் நாட்டிலேயே அகதிகள் போல வாழும் பரிதாபகரமான நிலைமைதான்.

இதெல்லாமும் கூட ஒரு வகையில் பொறுத்துக் கொள்ளலாம். ஆனால் ஆண் துணையின்றி தனியாகச் சஞ்சரிக்கும் பெண்ணுக்கு நேரும் அனைத்துவிதமான நெருக்கடிகளையும் கூட அவர் பொறுத்துக் கொள்ள வேண்டியிருந்தது.

துர்கா விடுதியில் தங்கியிருந்ததால் அவளுக்கு நிறைய விஷயங்கள் தெரியாது. ஆனால் ஊருக்கு வந்த போது அவளுக்கு மிக மோசமான அதிர்ச்சிகள் எல்லாம் காத்திருந்தது.

நேராக வீட்டுக்கு வந்து அன்று அவள் கதவைத் தட்டி, “அம்மா… ம்மா” என்று அவள் அழைக்க அழைக்கக் கதவு திறக்கப்படவில்லை. 

வெகுநேரம் தட்டிய பிறகு கதவு திறந்து கொண்டது. அவர்கள் கூடாரத்திலிருந்து வெளியேறியவனை பார்த்து துர்கா அதிர்ந்து நின்றுவிட்டாள்.

துர்காவை அளவெடுத்தபடியே அவன் கடந்த செல்ல,

“உள்ளே வா… எதுக்கு வெளியவே நிற்குற” என்றபடி அவள் கரத்தை பிடித்து உள்ளே இழுத்தவர் சரிந்திருந்த தன் கூந்தலை வாரிச் சுருட்டி கொண்டையிட்டார்.

“அந்த மேஸ்திரி எதுக்கு இங்க வந்துட்டு போறான்”

“வேலை விஷயமா பேசத்தான்”

தன் கையிலிருந்த பேகை வேகமாக வீசியெறிந்துவிட்டு,

 “சீ பொய் சொல்லாதே… உனக்கு இப்படியெல்லாம் செய்ய அசிங்கமா இல்ல…” மிகவும் கேவலமாக தன் தாயை அவள் நிந்திக்க ஆரம்பித்தாள்.

“இவங்கள எல்லாம் எதிர்த்துக்கிட்டு நம்மால இங்க வாழ முடியாது… இந்த அசிங்கத்தை எல்லாம் பொறுத்துக்கிட்டு போய்தான் போகணும்… உனக்கு இதெல்லாம் புரியாது… புரியவும் வேண்டாம்… நீ படிக்கிற பொழைப்பை மட்டும் பாரு”

“பொறுத்து போகனுமா? இப்படியெல்லாம் பேச உனக்கு வெட்கமா இல்லை… இந்த கருமத்தை பண்ணித்தான் நம்ம பொழைக்கனுமா… சை… இதுக்கு நீ செத்து தொலைஞ்சிருக்கலாம்டி மூதேவி”

“நான் செத்துட்டா உன்னைய யாருடி காப்பாத்துவா?”

அந்த நேர ஆக்ரோஷத்தில் அவள் வார்த்தைகளைக் கொட்டிவிட்டாள். ஆனால் அவள் சொன்ன சொல் அடுத்த சில நாட்களில் உண்மையாகிப்போனது.

வேலை செய்து கொண்டிருந்த போது மயங்கி விழுந்தவர் நிரந்தரமாக மீளா துயிலில் ஆழ்ந்துவிட்டார்.

ஏழ்மையும் அழகும் மிக ஆபத்தான இணை. துர்காவைப் போல!

தன் அம்மாவின் மரணத்துயரை கூட அவளை முழுவதுமாக அனுபவிக்கவிடவில்லை. சில கழுகு பார்வைகள் அவளை  வட்டமிடத் தொடங்கின. சதைவெறி கொண்ட அந்த ஜந்துக்களுக்கு அவர்கள் வக்கிரத்தை தீர்த்து கொள்ள ஒரு பெண்ணுடலே போதுமானது எனும் போது  வடநாட்டுச் சாயலில் அழுகு பதுமையாக இருக்கும் துர்கா போன்ற பெண்ணை கண்டால் வேட்டையாடாமல் விட்டுவிடுவார்களா?

ஒரு சிலரைத் தவிர யாருமே அவளுக்கு நம்பகமானவர்களாக இல்லை. முக்கியமாக ஆண்கள் யாரையும் நம்பும் மனநிலையில் அவள் இல்லை.

அப்போது அவள் அம்மாவுடன் பணி புரியும் தேவி அவளை அழைத்து. “துர்கா… உன் பிரச்சனை எனக்கு புரியுது… நான் ஒன்னு சொல்றேன் கேட்கறியா?” என்று பீடிகையோடு ஆரம்பித்தவள்,

“நீ தெரிஞ்சவங்க யார் வீட்டுக்காச்சும் போயிடு” என்று அறிவுறுத்தினார். துர்காவின் மனதிலும் அதே எண்ணம்தான் ஓடிக் கொண்டிருந்தது. பாதுகாப்பாக ஒரு இடம்.

“எனக்கொரு மிஸ்ஸை தெரியும்… அவங்க ரொம்ப நல்லவங்க எனக்கு ஹெல்ப் பண்ணுவாங்க… அவங்க வீடு எனக்கு தெரியாது… ஆனா அவங்க நம்பர் என்கிட்ட இருக்கு… நான் போன் போட்டு பேசுனா அவங்க கண்டிப்பா எனக்கு உதவ வருவாங்க க்கா… ஆனா என்னை வெளியே போக விடமா அந்த மேஸ்திரி கடுப்பேத்திட்டு இருக்கான் க்கா”

“பேசாம நீ மேல இஞ்சனியர் சார் இருப்பாரு… நீ அவரை போய் பார்த்து எல்லாத்தையும் சொல்லு… அவர் ரொம்ப நல்லவரு… உனக்கு ஏதாச்சும் செய்வாரு… அவர்கிட்டயே செல்போன் இருக்கு… நீ வாங்கி அந்த மிஸ்கிட்ட பேசு… அப்படியே உங்க அம்மா சம்பள காசையும் கேட்டு வாங்கிக்கோ… உனக்குச் செலவுக்குப் பயன்படும்”

துர்கா தயக்கமாக யோசித்தபடி நின்றாள்.

“ஏன் துர்கா… நிற்குற போ”

“இல்ல க்கா… தனியா நான் எப்படி?”

“தனியா என்ன? மேலே நம்ம ஆளுங்க எல்லாம் வேலை செஞ்சிட்டு இருகாங்க இல்ல… அதுவுமில்லாம அவங்க படிச்சவங்க… நம்மாளுங்க மாதிரி படிக்காத நாதாரிங்க இல்ல”

தேவி சொன்ன பிறகு அவள் கொஞ்சம் நம்பகத்தன்மையுடன் மூன்றாவது தளத்திற்கு சென்றாள். ஆனால் அங்கே வேலையாட்கள் யாருமே இல்லை. அவ்விடத்தைப் பார்த்த நொடி அவளுக்குக் கிலி பற்றி கொண்டது.

நொடிகளில் யாரோ அவள் இடையை வளைத்துப் பிடிக்க, அவள் வீலென்று அலறினாள். அவள் கத்தலுக்கும் கதறலுக்கும் ஓடி வந்து அவளைக் காப்பாற்ற ஒருவருமில்லை.

“ப்ளீஸ் அண்ணா என்னை விட்டுங்க அண்ணா” அவள் கெஞ்சலுக்கு அழுகைக்கும் அவன் கொஞ்சமும் செவி மடுக்கவில்லை. வெகுநேரமாக அந்த வெறி பிடித்த மிருகத்திடம் அவள் போராடினாள். 

பெண் பித்துப் பிடித்த கூட்டத்தில் படித்தவர்கள் படிக்காதவர்கள் என்ற பேதமில்லை என்பது அவள் மூளைக்கு அப்போதே உரைத்தது. 

அருவருப்பாக அவள் தேகத்தைத் தீண்டிய அவன் பிடியிலிருந்து தப்பிக்க எண்ணி அவன் கரத்தை கடித்துவிட அவன் பிடி தளர்ந்தது. அந்த வாய்ப்பை பயன்படுத்தி அவள் தப்பி ஓடினாள்.

அவளை அடைந்துவிடும் வெறியில் துரத்திக் கொண்டு வந்தவன் அவளை எட்டி பிடித்து அவள் மேற்சட்டையைக் கிழித்துவிட்டான். அவள் பயந்து விலக அவனோ ஓடி வந்த வேகத்தில் சமாளிக்க முடியாமல் கால்கள் தடுக்கி பிடிமானம் இல்லாமல்,

“அம்ம்ம்மா” என்று அலறியபடி மூன்றாவது மாடியிலிருந்து தவறி விழுந்தான். உயிர் போகும் அந்த தருவாயிலாவது தன்னை பெற்றதும் ஒரு பெண் என்று எண்ணியிருப்பானோ?

உடல் சிதறி இரத்த வெள்ளத்தில் அவன் உயிர் துடித்திருந்த காட்சியைப் பார்த்த துர்கா நடுங்கிவிட்டாள். இதயம் படபடவென அடித்துக் கொண்டது.

“ஐயோ! நான் கொலை பண்ணிட்டேன்… போலிஸ் வந்து என்னை பிடிச்சிட்டு போக போகுது… கண்டிப்பா பிடிச்சிட்டு போயிடும்… பேசாம நம்மளும் செத்து போயிட்டா… ஆமா செத்து போயிடனும்… அம்மா இல்லாம நம்மால இங்க வாழ முடியாது”

நடந்த சம்பவத்தில் தாக்கம் அம்மாவின் மரணம் என்று எல்லாமே அவள் மூளையை ஆட்டிப்படைக்கக் தொடங்கியது. அவன் உடல் விழுந்திருந்த இடத்தில் கூட்டம் கூடிவிட்டது. அவனைத் தூக்கி கொண்டு அவர்கள் மருத்துவமனைக்கு விரைந்தனர். 

அவர்கள் யாராவது தன்னை பார்த்துவிடப் போகிறார்களோ என்ற பயத்தில் அடுக்கிவைக்கப்பட்டிருந்த சிமண்ட் மூட்டைக்கு இடையில் ஒளிந்து கொள்ள அவள் எத்தனித்த போது அந்த எஞ்சினியரின் செல்பேசி காலடியில் தட்டுப்பட்டது. பலரிடமும் கைப்பேசி சாதனம் இல்லாத காலகட்டம் அது.

அதனை எப்படி உபயோகிப்பது என்று குழம்பியவள் அவள் நினைவிலிருந்து வித்யாவின் எண்ணிற்கு எப்படியோ முயற்சி செய்து அழைத்தாள். எல்லாமே அவசரகதியில் நடந்து முடிந்துவிட்டது.

சடாரென்று எழுந்து அமர்ந்து கொண்டாள். அந்த இஞ்சினியரின் ரத்தம் சிதறிய உடல் அவள் கண் முன்னே வந்து பயமுறுத்திக் கொண்டிருந்தது. இந்த உண்மை தெரிந்தால் தன்னை காவல்துறையில் பிடித்துக் கொடுத்துவிடுவார்களோ என்ற எண்ணம் அவளை அச்சுறுத்தியது.

எங்கேயோ தூரத்தில் ரயில் போகும் சத்தம் அவள் செவியைத் தீண்டச் சத்தமில்லாமல் எழுந்து கதவைத் திறந்து வெளியே நடந்தாள்.

அதேசமயம் பாரதியும் ஜமாலும் பாயை விரித்து மொட்டை மாடியில் படுத்திருந்தனர். அடிக்கடி அவர்கள் இருவரும் ஒன்றாகப் படுத்துக் கொள்வது சகஜமென்பதால் ஜமால் அவனை எதுவும் கேட்டு கொள்ளவில்லை.

பாரதியின் காதில் ரத்தம் வரும் வரை தன் காதல் கதையைச் சொல்லிவிட்டு அவன் பாட்டுக்கு உறங்கிவிட்டான். ஆனால் பாரதிக்குத்தான் ஒரு பொட்டு உறக்கம் கூட வரவில்லை.

வேதனையின் சாயல் படிந்திருந்த அப்பெண்ணின் முகம் அவனைத் தூங்கவிடாமல் செய்தது. மனதின் கணம் தாங்காமல் தன் ஐ பாடில் பாட்டு கேட்டு கொண்டிருக்கும் போது துர்கா வீட்டிலிருந்து வெளியேறும் காட்சியைப் பார்க்க நேர்ந்தது.  

“எங்க போயிட்டிருக்க இவ?” என்று அவன் யோசித்தது எல்லாம் நொடிகளுக்கும் குறைவாகத்தான்.

அடுத்த கணமே ஜமால் வீட்டின் மாடியிலிருந்து இறங்கி அவர்கள் வீட்டு மதில் மீது ஏறி குதித்தவன் விரைவாக ஓடி வந்து அவள் கரத்தை பிடித்து தடுத்து நிறுத்தி,

“எங்க போற நீ… முதல உள்ள வா” என்றபடி அவளை வீட்டிற்கு அழைத்து போக முற்பட,

“என் கையை விடுங்க நான் போகணும்” என்று அவள் திமிறினாள்.

“போக போறியா… அதுவும் இந்த நட்டு நடுராத்திரில… அறிவிருக்கா உனக்கு” கோபமாக அவளை கடிந்து கொண்டவன்,

“ஒழுங்கா உள்ள போய் படு” என்று சொல்லியபடி அவள் கரம் பற்றி தன் வீட்டின் வாசலுக்கு இழுத்து வந்திருந்தான்.

“நான் எங்கேயும் வரல… என்னை விட்டுங்க…. நான் போறேன்”

“பைத்தியம் மாதிரி பேசாதே… இந்த நைட் நேரத்துல எங்க போவ நீ”

“எங்கேயோ போவேன்… செத்து போவேன்… ட்ரைன் வர ட்ரேக்ல குதிச்சு செத்து போவேன்” அவள் சொன்ன வார்த்தையை கேட்டு நடுநடுங்கி போனான். 

அவள் பார்வையில் இப்போது எந்தவித பயமும் பதட்டமும் இல்லை. அவள் வார்த்தைகளில் துளியும் அச்சமுமில்லை. படபடப்பும் தெரியவில்லை. தன் உயிரை போக்கி கொள்ள வேண்டுமென்ற உறுதி மட்டுமே தென்பட்டது.

“என்னை விட்டுடுங்க ப்ளீஸ்… நான் போறேன்” அவள் தன் கரத்தை அவன் பிடியிலிருந்து மீட்க போராட,

“புரிஞ்சிக்கோ துர்கா… நீ மேல படிக்க நானும் அம்மாவும் ஏற்பாடு பண்றோம்… நீ எதை பத்தியும் கவலை படாதே” அவன் உரைத்த சமாதனங்கள் எதையும் அவள் கேட்க விரும்பாதவளாய்,

“எனக்கு படிக்க வேண்டாம்… ஒன்னு வேண்டாம்… எனக்கு இந்த உலகத்துல வாழ பிடிக்கல… நான் சாகத்தான் போறேன்… உங்க யார் தயவும் உதவியும் எனக்கு வேண்டாம்” இம்முறை அவள் குரல் சற்றே உயர்ந்தது.

“சத்தம் போடாதே துர்கா… யாராச்சும் எழுந்து வந்துட போறாங்க… அப்புறம் பிரச்சனையாகிடும்”

“நீங்க இப்போ என் கையை விடலன்னா நான் சத்தம் போடுவேன்… சத்தம் போட்டு கத்துவேன்”

பாரதிக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை.

“கையை விட போறீங்களா இல்லையா?” அவள் குரல் இன்னும் உயர, வேறு வழியில்லாமல் அவள் கரத்தை விடுத்தான்.

“மிஸ் கிட்ட நான் மன்னிப்பு கேட்டேன்னு சொல்லிடுங்க” அவள் கண்ணீரோடு சொல்லிவிட்டு முன்னே அடியெடுத்துச் செல்ல முற்படுவதற்குள் பின்னிருந்து அவள் வாயை பொத்தி அணைத்துப் பிடித்து வீட்டிற்குள் தூக்கிவந்துவிட்டான்.

அவனுடைய அணைப்பும் பிடியும் அந்த இஞ்சினியரை நினைவுபடுத்தியதில் அவளுக்கு மூச்சுப் பேச்சே வரவில்லை. அரண்டு போனாள். அவள் மிரட்சியோடு அவனைப் பார்த்திருக்கும் போதே அவன் வாசற்கதவை இழுத்து மூடினான்.

அந்த சத்தத்தில் வித்யா விழித்துக் கொண்டு பாரதியை பார்த்து அதிர, அவன் தன் தாயிடம் நடந்த விஷயங்களைச் சொல்லி முடித்தான்.

“நான் வரலன்னா இந்த மேடம் கிளம்பி போயிருப்பாங்க” என்றவன் கடுப்பாக சொல்ல,

“அடிப்பாவி… கொஞ்சம் கண் அசரத்துக்குள்ள இப்படி பண்ணிட்டியே” என்று அதிர்ச்சியாக துர்காவின் அருகில் சென்றவர்,

“என்னதான்டி பிரச்சனை உனக்கு… இப்ப எதுக்கு நீ சாகனும்” வித்யாவின் மிரட்டலில் அவள் தலையைத் தாழ்த்திக் கொண்டாளே ஒழிய நடந்த எதைப் பற்றியும் அப்போதும் அவள் வாய் திறக்கவில்லை.

“சரியான கல்லுளி மங்கி… அப்படியே கல்லாட்டும் நிற்கிறா பாரு”

“விடுங்க ம்மா… பாவம் ரொம்ப பயந்திருக்காங்க… அவளை கூட்டிட்டு போய் படுக்க வையுங்க” என்று பாரதி சொல்லியபடி துர்காவின் புறம் பார்வையைத் திருப்ப, அவளோ  கொலைவெறியில் அவனை முறைத்துக் கொண்டிருந்தாள்.

வித்யா அப்போது அவள் கரத்தை பற்றி இழுத்து, “ஒழுங்கா வந்து படு” என்று அவளை படுக்க வைத்துவிட்டார்.

பின்னர் அவர் பாரதியிடம், “நீயும் இங்கேயோ படுத்துக்கோ பாரதி” என்க, துர்காவின் முகம் சுணங்கியது.

அதனைத் தெளிவாகக் கவனித்தவன், “நான் நம்ம வீட்டு வாசலில படுத்துக்கிறேன்” என்றபடி தலையணையையும் போர்வையையும் எடுத்தபடி எதச்சையாக அவளை திரும்பிப் பார்த்தான்.

அனலாக கொதித்த அவள் விழிகள் அவனை அப்படியே எரித்துவிடத் துடித்தது.

அமைதியாக வெளியே வந்து படுத்துக் கொண்டு சிந்தனையில் ஆழ்ந்தான். அவள் விழியில் தெரிந்த கோபம் அவளது தற்கொலை முயற்சியைத் தான் முறியடித்த காரணத்திற்காகப் போலும் என்று நினைத்துக் கொண்டான். ஆனால் அது அவள் வாழ்வில் ஆண்களினால் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களின் தாக்கம் என்பதை அவன் அப்போது அறிந்திருக்கவில்லை. 

அவனை மிரட்டிய அந்த அழகான விழிகளிடமிருந்து மீண்டு அவன் எப்போது உறங்கி போனான் என்று அவனுக்கே தெரியவில்லை. ஆனால் அந்த விழிகள் அவன் வாழ்க்கை முழுவதும் நிம்மதியற்று தவிக்கக் காரணமாக இருக்கப் போகிறது.

2 thoughts on “Vilakilla vithigal AVAN – 7

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content