You don't have javascript enabled
Monisha NovelsRomanceRomantic thriller

Vilakilla vithigal AVAN-8

8

‘அந்த பெண் யாராக இருக்கக் கூடும்?’ டீக்கடையில் தொடங்கி குழாயடிகள் வரை தெரு முழுக்க துர்காவைப் பற்றிய வதந்திகள் உலவத் தொடங்கின. சிலர் நேரடியாகக் கேட்டனர். சிலர் மறைமுகமாக புரணி பேசினார்கள்.

துர்காவைத் தங்க வைத்திருப்பது உண்மையில் வித்யாவிற்கு நெருப்பின் மீது நிற்பது போன்றுதான் இருந்தது. யாரும் பாரதியைப் பற்றி ஒரு வார்த்தை கூட தவறாகச் சொல்லிவிட முடியாது. அவன் குணநலன் அப்படி!

அங்கு வசிப்பவர்களுக்கும் அவனை நன்றாகத் தெரியும் எனினும் அப்படியான பேச்சுக்களுக்கும் வதந்திகளுக்கும் நாம் இடம் கொடுப்பது சரியாக வராது என்பது வித்யாவின் எண்ணம்!

இரண்டு நாட்கள் வேறுவழியில்லாமல் பொறுமை காத்தவர் அன்று பாரதியிடம் இது குறித்து நேரடியாகப் பேசிவிட்டார்.

“அந்த பொண்ணை ஏதாச்சும் காப்பகத்துல இல்ல ஹாஸ்ட்டல சேர்த்துடலாம் பாரதி இங்கே நம்ம வீட்டுல வைச்சிருக்கிறது சரியா வராது” என்ற அவர் மகனிடம் கூற.  

“இல்ல ம்மா… இப்போ அந்த பொண்ணு இருக்க மனநிலையில வெளியே எங்கேயும் தங்க வைக்குறது ஃசேப் இல்ல… கொஞ்ச நாளைக்கு துர்கா இங்கேயே இருக்கட்டும்” என்றான்.

“என்னடா பேசிட்டு இருக்க… வயசு பொண்ணை போய் நம்ம வீட்டுல எப்படிறா தங்க வைக்க முடியும்”

“ஏன்? என் மேல உங்களுக்கு நம்பிக்கை இல்லையா?”

“நான் அப்படி சொல்லல பாரதி… இருந்தாலும் அந்த பொண்ணு” என்று வித்யா தயக்கமாக இழுக்க,

“துர்காவோட ட்வல்த் மார்க் ஷீட் வாங்கி ஏதாச்சும் காலேஜ்ல அவளை சேர்த்துவிடுவோம்… அவ இந்த பிரச்சனையில இருந்து மனசளவில மீண்டு வரட்டும் ம்மா… அப்புறமா அனுப்பிவிடலாம்” அவன் உறுதியாகக் கூறிவிட்டு அகன்றுவிட்டான்.

துர்கா குளிக்கச் சென்ற சமயத்தில்தான் இருவருக்கும் இடையில் இந்த விவாதம் நிகழ்ந்தது. ஆனால் குளித்து முடித்து வந்தவள் வாயிலில் நின்று அவர்கள் பேச்சைக் கேட்டு அப்படியே சிலையாக நின்றுவிட்டாள்.

அதுவும் பாரதி அவளை அனுப்பக் கூடாது என்று சொன்னது அவன் மீதிருந்த அவளின் சந்தேகத்தை வலுப்படுத்தியது.

ஒட்டு மொத்த ஆணினமே தவறு என்ற மனநிலையில் இருக்கும் அவளுக்கு பாரதியின் வார்த்தைகளின் பின்னணயில் இருந்த கரிசனம் புரிந்திருக்க வாய்ப்பில்லை.

‘அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்’ என்பது போலத்தான் அவள் விழிகளுக்கு பாரதியின் பேச்சு செயல்பாடுகள் அனைத்தும் தவறாகவே தெரிந்தது.

இன்னொரு புறம் காலணி முழுக்க துர்கா யாரென்ற சலசலப்பு எழ ஆரம்பித்திருந்ததில் தியாகு,

“யாரும்மா அந்த பொண்ணு?!” என்று கேட்க, வித்யாலட்சுமி  அவரிடம் துர்காவை பற்றிய விஷயங்களை முழுவதுமாக சொல்லி விட்டார்.

“அந்த பொண்ணுக்கு என்னம்மா வயசு இருக்கும்?”

“நம்ம வசு வயசுதான்… ரொம்ப நல்ல பொண்ணு… அவங்க ஸ்கூலில் ஃப்ரஸ்ட் மார்க்… இன்னும் நல்லா ட்ரைன் பண்ணி இருந்தா ஸ்டேட் ஃப்ரஸ்ட் கூட வந்திருப்பா” என்று வித்யா துர்காவை பற்றி பெருமையாகக் கூற எண்ணியது வசுமதிக்கு எதிராக முடிந்தது.  

“புள்ளைன்னா அப்படி இல்ல இருக்கணும்… எனக்கும் ஒன்னு வாச்சிருக்கு பாரு… பேசாம இவளை காப்பகத்தை அனுப்பிட்டு அந்த புள்ளைய நான் தத்து எடுத்துக்கிறேன்” என்றவர் மும்முரமாகத் தொலைக்காட்சியில் ஆழ்ந்திருந்த வசுவை பார்த்துக் குத்தலாகக் கூற, அவள் முகம் இஞ்சியைத் தின்றது போலக் காரமாக மாறியது.

 “ரொம்ப சந்தோஷம்… தத்து எடுத்துக்கோங்க… எனக்கு என்ன வந்துச்சு?” என்றவள் கடுப்பாக ரிமொர்ட்டை தூக்கி வீசிவிட்டு வெளியேறிவிட்டாள்.

“பார்த்தியா ம்மா… எவ்வளவு திமிருன்னு… கொஞ்சமாச்சும் எக்ஸாம்ல பெயிலாகிட்டோம்னு கவலை இருக்கா… பே ன்னு அந்த டிவியை வெறிச்சு பார்த்திட்டு இருக்கா” என்று அவரும் கடுகடுத்தார்.

 “என்ன அண்ணே… இப்படி சொல்லிட்டீங்க… சின்ன பொண்ணு… மனசு கஷ்டப்படும் இல்ல”

“அப்படியே கஷ்டப்பட்டாலும்… நீ வேற ம்மா அவளை பத்தி எனக்கு நல்லா தெரியும்” என்றார்.

இவர்கள் இங்கே பேசிக் கொண்டிருக்கையில் வசுமதி பாரதியிடம் சென்று,

“உங்க வீட்டுக்கு வந்திருக்கலாம் இல்ல… அந்த பொண்ணு… யாரு அவ?” என்று இடுப்பில் கை வைத்தபடி தீவிரமாக கேட்க,

“யார் சொன்னா உனக்கு?” என்று வினவினான்.

“யார் சொல்லணும்… இன்னைக்கு நம்ம தெருவோட ஹெட்லைன்ஸ் அந்த பொண்ணுதானே… அது இருக்கட்டும்… என்னவோ கஷ்டப்பட்டு படிச்சு ஸ்கூல் அவ பிரஸ்ட் வந்தாளாம்… நல்லா ட்ரைன் பண்ணி இருந்தா ஸ்டேட் பிரஸ்ட் வந்திருப்பாளாம்… ஆன்டி அப்படியே புகழ்ந்து தள்ளுறாங்க” வசுமதி பொங்குவதைப் பார்த்து பாரதியின் முகத்தில் குறுநகை படர்ந்தது.

“என்ன அண்ணா? நான் கேட்டுட்டே இருக்கேன்… நீங்க சிரிச்சிட்டு இருக்கீங்க… எவ அவ? நான் அவளை பார்க்கணும்” வசுமதியின் முகத்தில் கொழுந்துவிட்ட பொறாமை தீயை ஆழ்ந்து அளவெடுத்தவன்,

“முதல உன் கோபத்தை விடு… அந்த பொண்ணு ரொம்ப பாவம்… அவகிட்ட நீ கொஞ்சம் ப்ரெண்ட்லியா பேசு” என்றான்.

“நான் எதுக்கு அவகிட்ட ப்ரெண்ட்லியா பேசணும்… அதெல்லாம் முடியாது”

“சரி நீ பேச வேண்டாம்… நானும் உன்கிட்ட பேச போறதில்ல” பாரதி முகத்தை திருப்பிக் கொள்ள,

“என்ன அண்ணா நீங்க… நேத்து வந்த எவளோ ஒருத்திக்காக என்கிட்ட பேச மாட்டீங்களா?” என்று சிறு பிள்ளை போல அவள் சிணுங்கவும்,

“நான் ஒன்னும் அந்த பொண்ணுக்காக சப்போர்ட் பண்ணி உன்கிட்ட பேச மாட்டேன்னு சொல்லல… உன்னோட இந்த அரகன்ஸ் கேரக்டர் பார்த்துதான் பேசமாட்டேன்னு சொல்றேன்… ஆதரவில்லாமல் எல்லாத்தையும் இழுந்துட்டு நிற்குற ஒரு பொண்ணுகிட்ட உன் கோபத்தையும் வெறுப்பையும் காட்டணும்னு நினைக்கிறது சரியா வசு? எப்போ உன் மனசுல இவ்வளவு வஞ்சம் உருவாச்சு…

 எல்லார்க்கிட்டயும் சிரிக்க சிரிக்க பேசுற என் தங்கச்சி வசு இது இல்லயே” அவர் சொன்னதை வசுமதி பொறுமையாக யோசித்துவிட்டு,

“சாரி அண்ணா… நான் இனிமே அப்படிப் பேச மாட்டேன்…  ஆமா… அந்த பொண்ணு பேர் என்ன… நான் அவகிட்ட ப்ரெண்ட்லியா பேசுறேன்” என்றாள். 

“துர்கா” என்றவன் சொன்ன நொடி அவளும் குதுகலமாகத் தலையசைத்துவிட்டு உள்ளே சென்றாள்.

வசுமதி துர்காவிடம் பழகுவதன் மூலம் அவளுக்கு ஒரு நல்ல நட்பு கிடைக்கும். துர்காவிற்கு வாழ்வின் மீது நம்பிக்கையும் பிடிப்பும் உருவாகும் என்று பாரதி நினைத்தான். ஆனால் அவன் நினைத்ததற்கு நேர்மாறாக வசுமதி அழுது தேம்பிக் கொண்டே வெளியே வந்தாள்.

“என்னாச்சு வசு… ஏன் அழுகுற?”

“அந்த பொண்ணை என்னைப் பார்த்து வெளியே போ ன்னு கோபமா கத்திடுச்சு”

“நீ அவகிட்ட சண்டை ஏதாச்சும் போட்டியா வசு?” என்று

“நீங்கதான் சொன்னீங்களே… அவகிட்ட ப்ரெண்டிலியா பழகுன்னு… அதான் நான் அவகிட்ட பேசலாம்னு போனேன்… ஆனா அவ என் முகத்தை கூட பார்க்காம… எனக்கு உன்னை பிடிக்கல… போ ன்னு கத்திட்டா” நடந்ததைச் சொல்லிவிட்டு வசுமதி தாங்க முடியாமல் அழுது தீர்க்க,

“சாரி வசு… தப்பு என் பேர்லதான்… அந்த பொண்ணு சரியான மனநிலையில இல்ல… அதான் உன்கிட்ட அப்படி பேசிட்டா… நீ அழாதே… நான் அவகிட்ட பேசுறேன்” என்று அவளுக்கு சமாதானம் உரைத்தான். ஆனாலும் வசுவின் மனம் ஆறவேயில்லை.

“நீங்க போய் அவகிட்ட பேசுங்க… ஆனா நான் இனிமே அவகிட்ட பேசமாட்டேன்” என்று கோபமாகச் சொல்லிவிட்டு அங்கிருந்து அகன்றுவிட, பாரதி நேராக வீட்டிற்குள் சென்றான்.

துணி துவைக்கும் கல்லின் மீது கால்களை மடக்கி விரக்தி நிலையில் அமர்ந்திருந்தவள் முன்னே சென்றவன், “துர்கா” என்று அழுத்தமாக அழைக்க, அவள் பதறிக் கொண்டு எழுந்து நின்றாள்.

“ஏன் வசுகிட்ட கோபமா பேசுன… அவ இப்போ என்ன பண்ணிட்டா உன்னை… உன்கிட்ட ப்ரெண்ட்லியா பேசலாம்தானே வந்தா”

“என்கிட்ட யாரும் பேச வேண்டாம்… நான் யாருக்கிட்டயும் பேச மாட்டேன்”

“சரி பேச வேண்டாம்… ஆனா அவ மனசை காயப்படுற மாதிரி எரிஞ்சு விழுந்தது தப்பு… அவளும் உன்னை மாதிரிதானே”

“அவ ஒன்னும் என்னை மாதிரி இல்ல… அவளுக்குன்னு குடும்பம் இருக்கு… வீடு இருக்கு… சப்போர்ட் பண்ணி பேச உன்னை மாதிரி ஒரு அண்ணன் இருக்கான்” என்று சொல்லி முடிக்கும் போது அவள் விழிகளில் கண்ணீர் வழிந்தோடியது.

அவள் வேதனையைக் கண்டு தானும் வருந்தியவன், “ஏன் அப்படி யோசிக்குற துர்கா? உனக்கு நாங்கெல்லாம் இருக்கோம்… இந்த வீடும் உன் வீடு மாதிரிதான்… என்னை உன் அண்ணனா நினைச்சுக்கோயேன்” என்றவன் சொன்னதுதான் தாமதம்.

அவளுக்குக் கோபம் கட்டுக்கடங்காமல் பெருகியது.

“அண்ணனா… சீ… அந்த உறவுக்கு அர்த்தம் தெரியுமா உங்களுக்கு எல்லாம்… நான் எவனையும் இனிமே அண்ணன்னு கூப்பிட மாட்டேன்… எவனும் எனக்கு அண்ணன் கிடையாது… அண்ணன் கூப்பிட்டா மட்டும் உனக்கு நான் தங்கச்சியாக ஆகிட முடியுமா இல்ல நீதான் என்னை தங்கச்சியா நினைச்சிட போறீயாக்கும்… உனக்கும் அதே கேவலமான ஆம்பள புத்திதானே” என்று சொல்லி அவனை எரிப்பது போலக் கொந்தளிப்பாகப் பார்த்தாள்.

“துர்காஆஆஆஆ மைன்ட் யுவர் டங்” என்று பாரதி ஆக்ரோஷமாகக் கத்த, அவனை கிஞ்சிற்றும் மதிக்காமல் அவள் திரும்பி நின்று கொண்டாள்.

பாரதியால் ஏனோ அவளிடம் கோபமாகப் பேச முடியவில்லை.

“எனக்கு உன் நிலைமை புரியுது துர்கா… நீ அனுபவிச்ச வேதனையும் பார்த்த மனுஷங்களும் அப்படி இருக்கலாம்… ஆனா அதுக்காக இங்கே எல்லா ஆம்பளைங்களும் தப்பானவங்க இல்லை” என்றவன் நிதானமாக எடுத்துரைக்க,

சட்டென்று அவன் புறம் திரும்பி அவனை பார்வையால் ஊடுருவியவள், “நீ ரொம்ப நல்லவன் மாதிரி பேசாதே சரியா? உன் புத்தியெல்லாம் எனக்கு நேத்து நைட்டே தெரிஞ்சு போச்சு” என்றாள்.

மரியாதையற்ற அவளின் விளிப்புகளாலும் அவதூறான பேச்சுக்களாலும் குழம்பி நின்றவன் புருவங்கள் முடிச்சிட, “என்ன தெரிஞ்சுது உனக்கு?” என்று வினவினான்.

“நான் உன் புத்தி தெரிஞ்சுதான் பேசுறேன்… நேத்து நைட் என்னை காப்பாத்தறன்னு சொல்லிட்டு உன் கை என் மேல எங்கெல்லாம் பட்டுதுன்னு எனக்கு தெரியும்டா” என்று அவள் சொன்னதைக் கேட்டு அதிர்ந்தவன் அப்போதும் தன் பொறுமையைக் கைவிடாமல்,

“நீ என்னை தப்பா புரிஞ்சிட்டு இருக்க துர்கா… நான் அந்த மாதிரி எண்ணத்துல உன்னை தூக்கல… உன்னை காப்பத்தணும்னு மட்டும்தான் நினைச்சேன்” என்றான்.

“உன் நாடகத்தை இதோட நிறுத்து… காலையில நீயும் மிஸ்ஸூம் பேசிட்டு இருந்ததை நான் கேட்டேன்… என்னை காப்பகத்துக்கு அனுப்பலாம்னு அவங்க சொல்றாங்க… ஆனா நீ வேண்டாம்னு சொல்றேன்… ஏன்?” என்று கேட்டு அவனை கேவலமாக ஒரு பார்வை பார்த்தவள் தானே அந்த கேள்விக்குப் பதிலும் உரைத்தாள்.

“உனக்கு உன் ஆசையை தீர்த்துக்கணும் அதானே… நீயும் அவனுங்க எல்லாரையும் போலதான்?” என்று அவள் முகம் சுளித்தபடி கூற, அவள் வார்த்தைகள் சுளீரென்று அவன் இதயத்தில் விழுந்தன. அவன் தாடை இறுகியது.

கடுங்கோபத்தோடு அவளை நோக்கியவன்.

 “ஏய் என்ன பேசிட்டு இருக்க நீ… நான் ஒன்னும் நீ நினைக்கிற மாதிரி இல்ல… எங்க அம்மா எனக்கு பொண்ணுங்களை மதிக்க சொல்லி கொடுத்திருக்காங்க… நீ சொல்ற மாதிரி கீழ்த்தனமா எல்லாம் என்னால யோசிக்கக் கூட முடியாது… சை! கொஞ்ச நேரத்துல எவ்வளவு கேவலமா பேசிட்ட நீ” என்று பொருமியவனால் அவள் சுமத்திய பழிகளை ஜீரணிக்கவே முடியவில்லை.

ஆனால் அவளோ அவன் வேதனையைத் துளியும் உள்வாங்கவில்லை. தனக்கு நடந்த அநியாயம் மட்டுமே அவள் நினைவில் அழுத்தமாகப் பதிந்திருந்தது. அவள் மனதின் ஒவ்வொரு மூலையிலும் அவநம்பிக்கை மட்டுமே நிறைந்திருந்தது.

“நான் எங்க அம்மாகிட்ட உன்னை அனுப்ப கூடாதுன்னு சொன்னதுக்கு நீ சொன்ன மாதிரி எந்த சீப்பான ரீசனும் கிடையாது? உன்னை அந்த இஞ்சினியர் கொலை கேஸ்ல இருந்த காப்பத்ததான் நான் அப்படிச் சொன்னேன்” என்று அவன் சொல்லிவிட்டு விறுவிறுவென அங்கிருந்து அகன்றுவிட்டான்.. அவளுக்கு குப்பென்று வியர்த்தது. அவள் பாதங்களுக்கு கீழ் பூமி நழுவியது.

செய்வதறியாது அவள் திகைத்து நின்றுவிட்டாள். பாரதிக்கு விஷயம் தெரிந்திருக்கக் கூடும் என்று அவள் நினைக்கவில்லை.

அவனிடம் இது குறித்துப் பேச வேண்டுமென்று அவள் உள்ளம் தவிக்க, அவனோ இரவு உணவிற்குத்தான் வீட்டிற்கு வந்தான். அப்போதும் கூட அவள் முகத்தை தப்பித் தவறி கூட திரும்பி பார்க்கவில்லை.

“நான் ஜமால் கூட போய் படுத்துக்கிறான் மா” என்றவன் சொல்ல,

“வேண்டாம் பாரதி” என்றார்.

“ஏன் ம்மா?”

அவனைத் தனியாக அழைத்து வந்தவர், “டே… இந்த ரெண்டு நாளா கொஞ்சம் தெளிஞ்சுட்டான்னு நினைச்சேன்… ஆனா மதியானத்துல இருந்து என்னவோ பேயறைஞ்ச மாதிரி இருக்காடா? எனக்கு பயமா இருக்கு… திரும்பவும் அவ பாட்டுக்கு அன்னைக்கு மாதிரி கிளம்பிட்டானா?” என்றவர் மேலும்,

“இன்னைக்கும் இங்கேயே படுத்துக்கோ பாரதி” என்று கெஞ்சாத குறையாகக் கேட்டதில் வேறுவழியின்றி வாசலில் படுக்கையை விரித்தான்.

அவன் படுத்து கண்களை மூடினாலும் அவள் பேசிய வார்த்தைகள்தான் அவனுக்குள் எதிரொலித்தன. 

உதவி செய்ய எண்ணியது ஒரு குற்றமா?

இதே எண்ணம்தான் சுழன்று கொண்டிருந்தது. அவனுக்குத் தூக்கம் வருமென்று தோன்றவில்லை. அமைதியற்று தவிக்கும் மனதை ஆறுதல் படுத்த அவனுக்குத் தெரிந்த ஒரே வழி… இசை மட்டும்தான்.

“எட்ட இருக்கும் சூரியன் பார்த்து

மொட்டு விரிக்குது தாமரை

தொட்டு விடாத தூரம் இருந்தும் சொந்த பந்தமும் போகல

பாம்பா விழுதா? ஒரு பாகுபாடு தெரியலயே

பாம்பா இருந்தும் நெஞ்சம் பயப்பட நினைக்கலயே

என் கட்டையும் ஒரு நாள் சாயலாம்

என் கண்ணில உன் முகம் போகுமா?”

பாடல் ஒலித்துக் கொண்டிருந்த சமயம் அவன் மீது படர்ந்த நிழலுருவத்தில் துணுக்குற்று தமது விழிகளை அவன் திறக்க, அந்த மங்கிய நிலவொளியில் சந்தனத்தில் குழைத்து வடித்த பெண் சிற்பம் ஒன்று உயிர் கொண்ட சரீரமாக அவன் அருகே நின்றிருந்தது.        

கருப்பு வெள்ளை ஓவியத்திற்குள் கலங்கரை விளக்கம் போல ஆளை விழுங்கும் ஆழியாக உள்ளிழுக்கும் அவ்விழிகளில் மின்னல் கீற்றாக பளபளத்த அவளது கண்ணீர்த் துளிகள் இரண்டும் அவன் நெற்றிப் பொட்டில் பட்டுத் தெறிக்க, சட்டென்று அவன் மயக்கம் தெளிந்து விழித்தெழுந்தான்.

சுற்றிலும் அவன் பார்த்த காட்சி விசித்திரமாக இருந்தது. செல்வச் செழிப்பாக சகல வசதிகளும் நிறைந்திருந்த அவ்வறைக்கு தான் எப்போது எப்படி வந்தோம் என்று புரியாமல் அவன் மூளை குழம்பியது.

இன்னும் மயக்கத்தில் ஆழ்ந்திருப்பது போன்ற பிரமை. கனவா நினைவா என்று பிரித்தறிய முடியாத காட்சிகளில்  அவனை மேலும் ஆச்சரியமூட்டச் செய்தது அவன் முன்னே நின்றிருந்த கலைநயம் பொருந்திய பெண்ணோவியம்.

இரவு உடையில் அவள் தரித்திருந்த மெல்லிய வஸ்திரத்தில் அவள் பெண்ணா அல்லது மெழுகு சிலைதானோ என்ற பிரமை கூட உருவானது.  

“பாரதி ஆர் யு ஓகே” என்று கேட்டபடி தம் வழுவழுப்பான கரங்களால் அவன் கன்னங்களை ஸ்பரிசித்தவளின் முகத்தில் காதல் உணர்வு ததும்பியது.

அடர்ந்த மை கொண்டு தீட்டிய அவ்விரண்டு விழிகள் அவனிடம் மெய்மறந்ததென்றால், அவனோ அப்பார்வையில் காந்தமாய் உள்ளிழுத்துக் கொள்ளப்பட்டான்.

அவளின் பூவிதழ் அவன் இதழை நெருங்கி அழுந்த முத்தமிட்ட நொடியே அவன் ஆழ்ந்திருந்த மாயை திரை சட்டென்று விலகியது.

நினைவுகளிலிருந்து மீண்டு நிகழ் காலத்திற்குள் பிரவேசித்தவன் அவள் தந்த முத்தத்தில் மயக்க நிலையிலிருந்து மொத்தமாக விடுபட்டான்.  

 அனிச்சை செயலாக அவளை விலக்கி தள்ளிவிட்டவன், “யார் நீ? என்ன பண்ற?” என்று கேட்டுக் கொண்டே தம் இதழ்களை துடைத்துவிட்டுக் கொண்டான்.

“இப்போ துடைச்சிட்டா ஆச்சா… நீ மயக்கத்தில இருக்கும் போது இந்த மாதிரி ஒரு நூறாச்சும் கொடுத்திருப்பேனே… அதெல்லாம் என்னடா பண்ணுவ?” என்று பரிகாசம் செய்து அவள் நகைத்த விதம் அவனுக்கு எரிச்சலை மூட்டிய அதேநேரம் அவள் சொன்னதைக் கேட்டு முகம் சுளித்தான்.

“ஆமா… யார் நீ ன்னு கேட்ட இல்ல? ஐ ஹம் நந்தினி” என்றவள் சகஜமாக தம் கரத்தை நீட்டி அவள் அறிமுகம் செய்து கொள்ள, அவனோ அவளைக் குழப்பமாக ஏறிட்டான். அவனுக்கு அவளை யாரென்றே தெரியவில்லை.

2 thoughts on “Vilakilla vithigal AVAN-8

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content