You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

AA - 19

Quote

குடமுழுக்கு திருவிழா

ஆதி பரமேசுவரி ஆலயத்தைப் புதுப்பிக்கும் வேலைகளை சண்முகம் மும்முரமாக கவனித்துக் கொண்டிருந்தார். பசுமாடு லட்சுமி இறந்து போன விஷயம் அவரை ரொம்பவும் பாதித்திருந்தது.

ஏதோ ஒரு மோசமான நிகழ்வு நடக்கப்போவதாக அவர் உணர்ந்திருந்த நிலையில் கோயில் குடமுழுக்கு வேலையைத் துரிதபடுத்திக் கொண்டிருந்தார்.

சிவசங்கரனும் வேல்முருகனும் அந்த வேலையைப் பொறுப்பாய் கவனித்துக் கொண்டிருந்தனர். ஆதிபரமேஸ்வரி ஆலயம் அந்த ஆதித்தபுரம் கிரமத்திற்கு மட்டும் சொந்தமானதில்லை. அங்குச் சுற்றியுள்ள பல கிராமங்களிலிருந்து அந்தக் கோயிலுக்கு வழிபடப் பல பக்தர்கள் வருவது வழக்கம்.

ஆதலால் இந்த விழாவிற்கான ஏற்பாடுகளைப் பற்றியும் பல ஊர்மக்களுக்கு செய்தி சென்றிருந்தது. அந்த குடமுழுக்கு திருவிழாவில் கலந்து கொள்ள பல்லாயிரம் பேர் ஆர்வமாய் இருந்தனர். ஒரு பக்கம் ஆலய திருப்பணி விழா மறுபக்கம் தொல்பொருள் ஆராய்ச்சியாளராய் இருக்கும் மனோகரன் சண்முகவேலனின் அனுமதியோடு கோயில் கல்வெட்டுகளை ஆராய்ந்துக் கொண்டிருந்தான்.

அவன் கல்வெட்டாராய்ச்சி செய்துக் கொண்டிருப்பதைப் பார்த்த சிவசங்கரன்,

"நீங்க எதிர்பார்த்த விஷயங்கள் இந்தக் கல்வெட்டுகளில் இருக்கா?" என்றுக் கேட்க,

அவன் கள்ளத்தனமாக சிரித்து விட்டு, "இந்தப் பழமையான எழுத்துக்களைப் பார்க்கிறப்ப இந்தக் கோயில் ஆயிரம் வருடப் பழமையானதா இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனா ரொம்ப முக்கியமான விஷயம் என்னென்னா இந்தக் கல்வெட்டுகளில் எதுவும் வெளிப்படையா எழுதி இல்ல. நல்ல தமிழ் இலக்கியவாதிகள்தான் இதுக்கு அர்த்தம் சொல்ல முடியும்" என்றான்.

"அப்படி என்ன இங்க ரகசியம் இருக்கப் போகிறது?" என்று சங்கரன் அலட்சியமாய் வினவ,

'ரகசியம் இல்ல அதிசயம்' என்று மனதில் மனோகரன் எண்ணிக் கொண்டானே ஒழிய அதை வெளிப்படையாகச் சொல்லவில்லை.

"இந்த கோயிலின் பழமையான வரலாறு தமிழனோட வரலாற்றுக்கான சான்றாய் இருக்க உதவலாம்... அதுவும் இல்லாம நம் முன்னோர்களைப் பற்றி நாம தெரிஞ்சிக்க வேண்டியது ரொம்ப அவசியம்... அதை நம் வருங்கால சந்ததிகளுக்குக் கொண்டுபோய் சேர்க்கணும் " என்று மனோகரன் விளக்க சிவசங்கரன் அதிசயித்து அவன் புருவங்களை உயர்த்தினான்.

மனோகரன் சொன்னது நூறு சதவீதம் உண்மையாக இருந்தாலும், அது அவனிடம் சொற்களாகவே இருந்தது. நம் முன்னோர்கள் நமக்காகப் படைத்துவிட்டுபோன அதிசயங்கள் எல்லாம் சில சுயநலவாத கூட்டங்களால் காலங்காலமாய் ரகசியங்களாய் புதையுண்டு கிடக்கின்றன.

சில வழிமுறைகளை நாம் வழிபாடு என்ற முறையில் இன்றளவிலும் நாம் தொடர்ச்சியாய் பின்பற்றிய போதும் அதன் அறிவியல் பின்னணியை நாம் அறிந்துகொண்டோமா என்பது கேள்வி குறிதான். அப்படி ஒரு வழிமுறையில் ஒன்றுதான் குடமுழுக்கு திருவிழா. அந்தத் திருவிழா நடைபெறுவது மனோகரன் எண்ணத்திற்கும் சாதகமாய் இருந்தது.

அன்று மதியம் சிவசங்கரன் உணவிற்காக வீட்டிற்கு வந்தான்.

அங்கே கனகவல்லியும் கண்ணம்மாவும் அமர்ந்திருக்கச் செல்வியைத் தேடி வீட்டைச் சுற்றி வந்தவன் கடைசியில் அவள் மாட்டு கொட்டகையில் ஈஸ்வரனை தடவிக் கொண்டு அமர்ந்திருப்பதைக் கவனிக்கலானான்.

அவள் பின்பக்கமாய் வந்தவன் தன் கரத்தால் அவள் கண்களை மூட, அவளின் விழிகளில் நீர்த்துளிகள் படர்ந்திருப்பதை உணர்ந்து அதிர்ந்துவிட்டான்.

  "என்னாச்சு செல்வி?" என்று பதறியபடி அவள் முகத்தைத் திருப்ப, அவளோ பதில் பேசாமல் மௌனமாகவே அவனை ஏறிட்டாள்.

அவள் கன்னமெல்லாம் கண்ணீர் தடயங்களாய் இருக்க, அவள் முகத்தில் சொல்லவொண்ணாத சோகம் படர்ந்திருந்தது. அவள் நிலையைப் பார்த்து வருத்தமுற்றவன் அவளிடம் பலமுறை என்னவென்று விசாரிக்க அவள் பதிலேதும் உரைக்கவில்லை.

சிவசங்கரன் தன் பொறுமையிழந்து, "சரி நீ சொல்ல வேண்டாம்... நான் போய் மதனிங்களை கேட்கிறேன்" என்று  அவன் சொல்லிவிட்டு போக முயற்சி செய்ய அவள் அவன் கரத்தை அழுத்திப் பிடித்து கொண்டாள்.

"அப்போ என்னன்னு சொல்லு" என்றவன் அழுத்தமாய் வினவ, அவள் தன் வேதனையை விழுங்கிக் கொண்டு,

"அது... நான் இனிமே முருகனை பாத்துக்க கூடாதாம்... சாப்பாடு ஊட்ட கூடாதாம்... எனக்கு குழந்தைப் பெத்துக்க வக்கிலயாம்... என் கண்ணுபட்டு குழந்தைக்கு ஏதாவது ஆயிடுமா?" என்று சொல்லி தன் கணவனின் தோள்களில் சாய்ந்து மீண்டும் அழ ஆரம்பித்தாள்.

"பைத்தியம்... நமக்கு கல்யாணம் முடிஞ்சி ஒரு வருஷம் கூட முடியல... அவங்கதான் அறிவுகெட்டத்தனமா சொல்றாங்கன்னா... அதைப்போய் நினைச்சுகிட்டு நீ அழுதிட்டிருக்கவ" என்றவன் சொல்ல,

"நான் அதை எல்லா நினைச்சு கவலைப் படலங்க... முருகனை என் கூட பேசக் கூடாதுன்னு சொன்னதுதான் எனக்கு ரொம்ப கஷ்டமாயிருக்கு" என்று சொல்லி அவள் கவலை கொள்ள, அவன் அவள் தலையை தடவி ஆறுதலாய் தேற்றினான்.

அவள் மனம் ஒருவாறு அமைதியடைய, சட்டென்று தான் இப்படி வெட்டவெளியில் கணவனை அணைத்துக் கொண்டு நிற்கிறோம் என்று எண்ணி துணுக்குற்றவள் நிமிர்ந்து சுற்றும் முற்றும் அச்சத்தோடுப் பார்த்தாள்.

"என்ன செல்வி?" என்று சிவசங்கரன் புரியாமல் கேட்க,

"நம்மள  இப்படி யாராச்சும் பாத்தா என்ன நினைப்பாங்க?" என்று சொல்லி அவனைவிட்டு விலக எத்தனித்தாள்.

"யார் என்ன நினைக்க போறாங்க? நான் உன் புருஷன்" என்று அழுத்தமாய் உரைத்து அவளை விடாமல் இறுக்கி அணைக்க,

"அச்சோ விடுங்க... அக்கா வந்துட போறாங்க... அப்புறம் நம்மள இப்படி பார்த்தா?" என்றவள் அஞ்ச, அவனோ தன் பிடியை தளர்த்துவதாக இல்லை.

அவளோ அவனிடம் போராடி விலகித் தள்ளி செல்ல, "செல்வி வேண்டாம்... ஓடாதே" என்று அழைத்துக் கொண்டே சிவசங்கரன் அவளைத் துரத்தினான்.

செல்வி அந்த நிமிடம் அவனிடம் சிக்காமல் ஒரு குழந்தையாக மாறி தன் கவலைகளை மறந்து ஓடிக் கொண்டிருந்தாள்.

அந்தச் சமயம் எதிர்பாராவிதமாய் அவள் அறியாமல் மாணிக்கத்தின் மீது மோதிவிட, அவனின் தோற்றத்தையும் பார்வையையும் பார்த்து கலவரப்பட்டவள் அவசரமாய் தன் கணவனின்  பின்புறம் போய் ஒளிந்து  கொண்டாள்.

சிவசங்கரன்  தன் தமையனைத் தயக்கமாய் பார்க்க மாணிக்கம் முறைப்போடு,

"ஏன்டா சங்கரா? அப்பா உன்னை கோயில்ல தேடிட்டிருக்கிறாராம்... நீ என்னடான்னா" என்று நிறுத்தி மறைந்து நின்றுக் கொண்டிருந்த செல்வியை வன்மமாய்  ஒரு பார்வை பார்த்தான். சிவசங்கரன் உடனே,

"தோப்பில் வேலை சரியா செய்றாங்களான்னு பாக்கலாம்னுதான் வந்தேன்... அப்படியே சாப்பிட்டு போலாம்னு" என்று தயங்கியபடி சொல்ல,

"உன் போக்கே கொஞ்ச நாளா சரியில்ல" என்றான் மாணிக்கம்.

சங்கரன் எரிச்சலோடு, "நான் கோயிலுக்கு வரணும்... அவ்வளவுதானே நீங்க போங்க" என்று தன் தமையனைப் பார்த்து உரைக்க

அப்போது மாணிக்கம் பின்னோடு ஒளிந்திருந்த செல்வியை நோட்டம் விட்டபடி நகர, அதனை உணர்ந்தவளுக்கு மனமெல்லாம் பதைத்தது.

அவள் தவிப்போடும் பயத்தோடும் நிற்க சிவசங்கரன் அவள் காதை திருகி அவளை தன் முன்புறம் கொண்டு வந்து,

"என்னத்துக்கு அந்த ஓட்டம் ஓடினவ?!" என்றுக் கேட்டு அவளைப் பார்த்து முறைத்தான்.

"தப்புதாங்க... வலிக்குது விடுங்க" என்று அவள் கெஞ்ச சற்றுநேரம் அவள் அப்படிக் கெஞ்சுவதை ஆசை தீர ரசித்துவிட்டு அவளை விடுவித்தான். அவளோ தப்பித்தோம் பிழைத்தோம் என ஒரே ஓட்டம் ஓடிவிட்டாள்.

எத்தனையோ பிரச்சனைகள் செல்வி சிவசங்கரனை சூழ்ந்திருந்த போதும் அவர்களின் நெருக்கமும் காதலும் அவற்றை எல்லாம் மறக்கடித்தது. அதேநேரம் அது அளவில்லாமல் நாளுக்கு நாள் பெருகி கொண்டே போனது.

அன்று சூரியனின் வருகைக்காக பூமியில் உள்ள ஜீவராசிகள் எல்லாம் ஏங்கிக் கொண்டிருக்க, அந்த ஒளியை விரும்பாதவனாய் சிவசங்கரன் தன் போர்வையை மூடிக் கொள்ள செல்வி அவனிடம் சண்டையிட்டபடி அந்தப் போர்வையை உதறித் தள்ளிவிட்டு வெளியே வந்தாள்.

"விடிஞ்சு போச்சு... வாசலில தண்ணித் தெளிச்சு கோலம் போடணும்" என்றவள் தன் நீளமான முடியைச் சுருட்டிக் கொண்டையிட்டாள்.

"அதெல்லாம் மதனிங்க போடுவாங்க" என்று செல்வியின் கைகளை சிவசங்கரன் பற்றி இழுக்க, "கையை விடுங்க.. நேரமாச்சி நீங்களும் எழுந்திரிங்க" என்க,

"இராத்திரி எல்லாம் என் தூக்கத்தைக் கெடுத்துட்டு... இவ்வளவு சீக்கிரம் எழுந்திருக்க சொல்றியே... மனசாட்சியே இல்லயாடி உனக்கு" என்றுக் கேட்டு கள்ளத்தனமாய் புன்னகையித்தான்.

அவள் கோபம் பொங்க, "யாரு... நானா உங்க தூக்கத்தைக் கெடுத்தேன்" என்றுக் கேட்டபடி தலையணையை அவன் மீது தூக்கியடித்தாள்.

"உன்னை" என்று மீண்டும் அவளைப் படுக்கை மீது தள்ளி அவன் சரசங்கள் புரிய அவள் அவனிடம் மாட்டிக் கொண்டுத் திண்டாடினாள்.

அந்தச் சமயத்தில் அவர்களின் அறைக் கதவு தட்டும் சத்தம் கேட்கச் சலிப்புற்றவன், "யார்றா அது" என்று கேட்டுவிட்டு அவளை விடுவிக்க,

"போங்க நீங்க" என்று நாணியபடி அவள் படுக்கையிலிருந்து எழுந்து கொண்டாள்.

அப்போது, "சங்கரா" என்று வேல்முருகனின் குரல் சத்தமாய் கேட்க, அவன் பதட்டமாக எழுந்தமர்ந்தான்.

செல்வி தன் உடையை சரி செய்துக் கொண்டுவிட்டு அவனைக் கதவை திறக்கச் சொல்லி சமிக்ஞை செய்ய... சங்கரன் ஓர் மேற்துண்டை எடுத்து  போர்த்திக் கொண்டு கதவைத் திறந்தான்.

வேல்முருகன் கோபமாய் அவனை முறைத்து, "உனக்கும் உன் பெண்ஜாதிக்கும் கோழி கூவுன சத்தம் கூட கேட்கலயா?" என்றுக் கேட்க,

"அது வந்து அண்ணே" என்று தலையைத் தொங்கப் போட்டான் சங்கரன்.

"சரி அது இருக்கட்டும்... உன்னை அப்பா கூப்பிட்டாரு" என்று உரைக்க,

"எதுக்கு அண்ணே?" என்று சந்தேகமாய் கேள்வி எழுப்பினான்.

"ரஞ்சிதத்து வீட்டில ஒரே பிரச்சனையாம்... என்ன ஏதுன்னு சரியா தெரியல" என்க, அந்த நொடி சங்கரன் தன் தமக்கையை எண்ணிக் கவலையுற,

வேல்முருகனே மேலும், "அப்பாவோட நீயும் ரஞ்சிதத்து வீட்டுக்குப் போய் பார்த்துட்டு வாங்க... நான் இங்க வேலையெல்லாம் பார்த்துக்கிறேன்" என்றதும் அவனும் சம்மதித்து புறப்படத் தயாரானான்.

மனோரஞ்சிதத்தின் புகுந்த வீட்டில் பிரச்சனை வருவது வழக்கமான ஒன்றுதான் என்றாலும், இம்முறை பிரச்சனை எல்லையை மீறி இருந்ததாகத் தகவல் வர சண்முகவேலன் ரொம்பவும் கவலையுற்றிருந்தார்.

அவர் என்னவோ ஏதோ என்று பதறியபடி கோயில் வேலைகளை ஒதுக்கிவிட்டு சிவசங்கரனை அழைத்துக் கொண்டு புறப்பட்டுவிட,

இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு வேல்முருகனை தன் அம்மா வீட்டிற்கு அழைத்துச் சென்று விட்டாள் கனகவல்லி.

செல்விக்கு வீடே வெறிச்சோடி போனது. ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு யுகமாய் கடந்தது. முருகனையும் செல்வியிடம் சேரவிடாமல் கண்ணம்மா தன்னால் இயன்றவரை முயற்சி செய்தாள்.

செல்வியை தனிமை வாட்டி வதைக்க... உறக்கம் வராமல் அவள் அவதிப்பட்டுக் கொண்டிருந்தாள். அவள் அப்படி விழித்திருந்த சமயம் யதார்த்தமாய் பரமு கொடுத்த டாலர் கழுத்தில் இல்லாததைக் கண்டறிந்தாள். அவள் பதறித் துடித்து அந்த அறை முழுக்க டாலரை தேடிப் பார்த்தாள். அவள் மனமெல்லாம் வேதனையில் உழன்றது.

அது பரமுவின் ஞாபகம் என்பதால் செல்வியால் அந்த டாலர் தொலைந்ததை அசட்டையாய்விட முடியவில்லை. ஆதலால் அந்த இரவின் மங்கலான வெளிச்சத்திலும் அந்த டாலரை தீவிரமாய் தேடியவள் வெளியே மாட்டுக் கொட்டகையில் விட்டிருப்போமோ என்ற குழப்பத்தில், விளக்கை எடுத்துக் கொண்டு அங்கேயும் தேடச் சென்றாள்.

வானில் பாதி சந்திரன் மிளிர்ந்து கொண்டிருந்ததால் அந்த இடத்தில் இருளும் வெளிச்சமும் ஒருசேரக் கலந்திருந்தது.

செல்வி அந்த நிலையிலும் விடாமல் அந்த டாலரை எப்படியோ கண்டெடுத்து பெருமூச்சுவிட்டவள் அதை உடனடியாக கழுத்தில் மாட்டினாள். அந்த நேரம் மாட்டு கொட்டகையிலிருந்த ஈஸ்வரன் அவளைப் பார்த்த குதூகலித்து அவளின் மீது வந்து உரசினான்.

"என்னடா ஈஸ்வரா?" என்று கேட்டவள் தன் கரத்தால் அவன் முதுகில் தடவிக் கொடுக்க,

அவன் தன் ஆனந்தத்தைத் துள்ளி குதித்துக் காண்பித்து கொண்டிருந்தான். அதனைப் பார்த்து ரசித்தவளுக்குச் சட்டென்று ஏதோ ஒரு இனம் புரியாத வேதனை ஆட்கொண்டுவிட்டது.

அந்த எண்ணத்தை செல்வியால் அசாதாரணமாய் தவிர்க்க முடியவில்லை. மீண்டும் ஏதோ ஓர் மரணத்திற்கான வருகையால்தான் தன் மனம் சஞ்சலப்படுகிறது என்பதை உணர்ந்தவளுக்கு நடக்கப் போகும் நிகழ்வைத் தடுக்க முடியாது என்பதும் புரிந்தது.

அந்த இருள் மூழ்கிய இரவில் தன் கலக்கத்தை யாரிடம் தெரிவிப்பது என்று புரியாமல் யோசித்தவள் தன் வேதனையை ஈஸ்வரனிடம் கொட்டி தீர்த்தாள்.

"ஏதோ தப்பா நடக்கப் போகுது... ஆனா நான் இதை யார்கிட்ட போய் சொல்லுவேன்... அவருக்கு ஏதாவது ஆயிடுமோன்னு வேற பயமா இருக்கு... எந்தக் கெட்டது நடந்தாலும் அது எனக்கே நடக்கட்டும்... அவருக்கு வேண்டாம்" என்றவள் ஈஸ்வரனை தடவியபடி கண்ணீர் சிந்தினாள். அவள் மனவலி புரிந்தும் புரியாமல் ஈஸ்வரன், "ம்மா" என்று குரல் கொடுக்க

அவள் மீண்டும், "அவரு இல்லாம எனக்கு பைத்தியமே பிடிச்சிரும் போலிருக்கு ஈஸ்வரா" என்று மேலும் தன் வேதனையைச் சொல்லி அவள் புலம்ப, அவளின் தவிப்பிற்கு  பதில் வந்தது. ஆனால் அவளுக்குப் பதில் உரைத்தது ஈஸ்வரன் இல்லை.

Quote

Super ma 

You cannot copy content