You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

AA - 34

Quote

இரக்கமற்ற இரவு

அந்த இரக்கமற்ற இரவில் வானம் இடிமுழக்கத்தோடு மின்னலை வாளாய் வீசிக் கொண்டிருக்க செல்வியின் விழிகள் தன் கணவனின் வரவை எதிர்பார்த்துக் காத்திருந்தது.

அதற்கு ஓர் முக்கிய காரணமும் இருந்தது. காலையில் இருந்து அவளுக்குள் ஏற்பட்டிருந்த சோர்வும் மயக்கமும் அவளுக்குள் ஜனித்திருக்கும் உயிரின் அறிகுறியை அவளுக்கு உணர்த்தியிருக்க,

அதை அவனிடம் பகிர்ந்துக் கொள்ள வேண்டி அவள் உள்ளம் தவியாய் தவித்துக் கொண்டிருந்தது.

அதை அவனிடம் தெரிவிக்கும் போது அவன் எந்தளவுக்குப் பூரித்து போவான் என்று எண்ணும் போதே அவள் மனம் இன்பக்கடலில் மூழ்கி திளைக்க, இன்று பார்த்து அவன் வராமல் தாமதித்து கொண்டிருந்தான்.  

இரவு நடுநிசியை எட்டியிருக்க வாசலில் நின்றிருந்த செல்வியை சற்றும் பொருட்படுத்தாமல் வேல்முருகன் வீட்டிற்குள் இருந்து வெளியே வந்து நின்றான்.

சிவசங்கரன் இன்னும் ஏன் வரவில்லை என்ற எண்ணம் அவனுக்குள்ளும் உதித்தது போலும். என்றும் இல்லாத திருநாளாய் தம்பிக்காக காத்துக்கொண்டிருந்தான் வேல்முருகன்.

அதற்கான காரணத்தை செல்வி ஒருவாறு யூகித்தாள். அன்று மாலை கனகவல்லி வேல்முருகனிடம் சொத்துக்கள் அனைத்தையும் பாக பிரிவினை செய்ய சொல்லி நச்சரித்துக் கொண்டிருந்தாள்.

சண்முகவேலன் நடமாட முடியாத நிலையில் இருக்க அனைத்துப் பொறுப்புகளும் இப்பொழுது சிவசங்கரன் கைக்குப் போய்விட்டது.

ஆதலால் வீட்டில் இளையவனின் அதிகாரத்திற்குட்பட்டு இருக்க கனகவல்லி விரும்பவில்லை. குடும்பத்தில் கையாளாகாதவனாய் நிற்கும் அவமானத்திற்குரிய நிலையை கனகவல்லி தன் கணவனிடம் ஓயாமல் சுட்டிக்காட்டியபடி இருக்க,

அதற்கெல்லாம் முடிவுகட்ட எண்ணியே வேல்முருகனும் வீட்டின் திண்ணையில் அமர்ந்து தன் தம்பிக்காகக் காத்துக்கொண்டிருந்தான்.

அந்தச் சமயத்தில் ஊரில் உள்ள ஒருவன் பதட்டத்தோடு வீட்டின் வாசலை அடைந்து, "சங்கரன் அண்ணே தோப்புக்குள்ள யார் கூடயோ பிரச்சனை பண்ணிட்டிருக்காரு" என்று வேல்முருகனிடம் தெரிவிக்க,

"சங்கரனா?!" என்று அதிர்ச்சியாய் கேட்டான் வேல்முருகன். இந்தத் தகவல் செல்வியின் செவிகளையும் எட்டி அவள் மனதை கலவரப்படுத்த,

"ஆமா நான் பாத்தேன்" என்று உறுதிப்பட சொன்னான்.

"யார் கூட?" வேல்முருகன் குழப்பமான பார்வையோடுக் கேள்வி எழுப்ப,

"சரியா தெரியல... தூரத்தில இருந்து அண்ணனை மட்டும்தான் பாத்தேன்... தோப்புக்குள்ளே போக பயமா இருந்துச்சு... அதான் வந்துட்டேன்"

இதைக் கேட்ட செல்விக்கு ஒன்றும் புரியவில்லை. சிவசங்கரனுக்கு அப்படி யாரிடமும் தேவையில்லாமல் வம்புக்கு போகும் பழக்கமில்லை.

வேல்முருகனும் கிட்டதிட்ட இதையேதான் எண்ணிக் கொண்டிருந்தான். உடனே அவன் கையில் விளக்கொன்றை ஏந்திக் கொண்டு புறப்பட்டுச் சென்றுவிட செல்வியின் கலக்கம் அதிகமானது.

செல்வி பொறுமை இழந்தவளாய் அவளும் அந்தத் தோப்பின் வழி நோக்கி நடந்தாள். சிவசங்கரன் வராததினால் ஏற்பட்ட பயம் அவளுக்கு அதீத தைரியத்தை ஏற்படுத்த, அந்த இருளும் இடி மின்னலும் அவளை அச்சமுறச் செய்யவில்லை.

அந்தப் பதட்டத்தில் செல்வி எந்த விளக்கையும் கைகளில் எடுத்துக் கொள்ளாமல் நடக்க அவ்வப்போது வீசிய மின்னல் ஒளியே அவளுக்கு வழிகாட்டியது.

அதேநேரம் இடி மின்னல்களுக்கிடையில் இந்த அடர்ந்த மரங்களுக்குள் நடந்து செல்வது அத்தனை உசிதமில்லாத போதும் அவளுக்கு அதைத் தவிர்த்து வேறு வழியுமில்லை.

அந்த இரவில் அவள் எப்படி அந்த இருளடர்ந்த தோப்பிற்குள்  நடந்து சென்றாள் என அவளுக்கே தெரிந்திருக்கவில்லை. எல்லாம் கணவன் என்ற ஒற்றைத் தாரக மந்திரம் அவளுக்கு அத்தகைய சக்தியையும் துணிச்சலையும் வழங்கியிருந்தது. அந்தத் தோப்பிற்குள் அவள் முன்னேறிச் செல்ல இருளின் தாக்கம் பயங்கரமாய் அவளை மிரட்டியது.

அதே நேரம் கணிரென ஒலித்த சிவசங்கரனின் குரல் அந்த இருளையும் அமைதியையும் குலைத்துக் கொண்டு கேட்க அந்தச் சத்தமே அவள் வழியைத் தீர்மானித்தது. எப்படியோ அவன் இருந்த இடத்தை அவள் சென்றடைய,

அவள் அங்கே பார்த்தக் காட்சி அவளின் இதயத்துடிப்பை ஒரு நொடி நிறுத்திவிட்டது.

சிவசங்கரன் கோயிலை ஆராய்ச்சி செய்ய வந்த மனோகரனின் கழுத்தை அழுத்திப் பிடித்தபடி நிற்க அவன் பிடியை விலக்கிவிட வெள்ளையப்பன் முயன்றுக் கொண்டிருக்க அன்னம்மா கைகளில் விளக்கை ஏந்தியபடி, "வேண்டாம் தம்பி!" என்று பதட்டத்தோடு கத்திக் கொண்டிருந்தார்.

ஒரு சில விநாடிகள் செல்வி அதிர்ச்சியில் நின்று பின் தன்னிலை மீட்டுக் கொண்டு,

  "ஏன் இப்படி செய்றீங்க? அவரை விடுங்க" என்று தன் குரலை உயர்த்தி படபடப்பாய் உரைத்தாள்.

மனோகரன் சிவசங்கரனின் இரும்புப்பிடியில் தன் கழுத்தெலும்புகள் நொறுங்கிப் போய்விடுமோ என்று எண்ணிக் கொண்டிருக்கையில், செல்வியின் குரல் சிவசங்கரனின் பிடியை தளர்த்த அவன் தற்காலிகமாய் உயிர் பிழைத்துக் கொண்டான்.

சிவசங்கரனின் பார்வை செல்வியை கவனிக்க அவளோ சிலர் அடிப்பட்டு அங்கே விழுந்து கிடப்பதைப் பார்த்துக் குழப்பமடைந்தாள்.

அவர்கள் யாரும் இந்த ஊரைச் சேர்ந்தவர்கள் அல்ல என்பது நன்றாய் தெரிந்தது. காலையில் வெள்ளையப்பனிடம் சிவசங்கரன் வெளியாட்களின் நடமாட்டத்தைப் பற்றி கேட்டு மிரட்டியதை நினைவுபடுத்திக் கொண்டாள்.

கர்ப்பமாய் இருக்கும் காரணத்தால் ஏற்கனவே அவளுக்கு தலைசுற்றி கொண்டிருக்க இதையெல்லாம் பார்த்தவளுக்கு இன்னும் அதிகமாய் தலைசுற்றியது.

அவள் மயக்கநிலைக்கு போக எண்ணிய போது கர்ஜனையாய் சிவசங்கரனின் குரல் அவளை நிலைநிறுத்தியது.

"அறிவுகெட்டவளே... எதுக்குடி இங்க வந்த?" என்று மிரட்டலாய் கேட்க, அவனின் குரலின் உக்கிரம் அவளைப் பதில் சொல்ல முடியாத அளவுக்குத் தொண்டையை அடைத்தது.

மனோகரன் அருகில் வந்து வெள்ளையப்பன் ஆசுவாசப்படுத்தி,

"அண்ணி வந்ததினால நீங்க தப்பிச்சீங்க சார்" என்று சொல்ல அந்த இருளில் அப்போதுதான் செல்வியை மனோகரன் கவனித்தான்.

செல்வி பதில் பேசாமல் நிற்க சிவசங்கரன் மேலும்,

"பைத்தியமாடி நீ... இந்த இருட்டில தன்னந்தனியாய் தோப்புக்குள்ள வந்திருக்க... ஒன்னுகிடக்க ஒன்னு ஆச்சுன்னா" அக்கறையும் கோபமும் ஒரு சேர தெறித்தது அவன் குரலில். அப்பொழுது செல்வி கொஞ்சம் சுதாரித்து,

"நீங்க ஏதோ பிரச்சனை பண்ணிட்டு இருக்கீங்கன்னு" என்று அதற்கு மேல் வார்த்தை வராமல் தடுமாற,

சிவசங்கரன் தலையில் கை வைத்துக் கொண்டு தவிப்பில் ஆழ்ந்தான். அதே நேரம் வெள்ளையப்பன் சிவசங்கரன் பின்னோடு நின்று,

"எதுக்கு அண்ணே இந்த வீண் வம்பு... பேசாம அண்ணிய கூட்டிட்டு வீடு போய் சேர வழிய பாருங்க" என்க,

அப்போது அன்னம்மா தன் மகனின் சட்டையைப் பிடித்தபடி,

"பாவி பயலே... எப்படிறா நீ என் வயித்துல பிறந்த... காசு பணத்துக்காக இப்படி எல்லாம் கூட செய்வாங்களா? பிறந்த போதே செத்து ஒழிஞ்சு போயிருந்தா நல்லா இருந்திருக்கும்" என்று சொல்ல வெள்ளையப்பன் எரிச்சலோடு,

"போ அந்தாண்ட உனக்கென்ன தெரியும் என் கஷ்டம்" என்று உரைத்தபடி தன்னை பெற்றவள் என்றும் பாராமல் அவரை பிடித்து கீழே தள்ளினான்.

இதைப் பார்த்து கொண்டிருந்த செல்வி பதற, அன்னம்மா தரையில் வீழ்ந்து அவர் நெற்றி ரத்தக்காயமானது.

இதனைப் பார்த்த சிவசங்கரன் ரௌத்திரமாய் மாறி  வெள்ளையப்பனின் கன்னத்தில் அறைந்தான். வெள்ளையப்பன் அவன் அடித்த அடியில் திணறிப் போய் விழ அப்போது சிவசங்கரன் மனோகரனின் புறம் திரும்பி,

"நீ இந்த ஊரை விட்டு இப்பவே போறதுதான் உனக்கு நல்லது... இல்லன்னா உன் கழுத்தில தலை இருக்காது பாத்துக்கோ" என்று ஆவேசமாய் மிரட்டலானான்.

மனோகரன் இளக்காரமான சிரிப்போடு,

"நான் என்ன வேலையை ஆரம்பிச்சனோ அதை செய்து முடிக்காம இந்த ஊரைவிட்டு போகமாட்டேன்... உனக்கு  தேவையானதை எல்லாம் நான் செய்றேன்... என் விஷயத்தில குறுக்கே வராதே" என்றான்.

"இந்த ஊருக்குள்ள உன்னை விட்டு வைச்சதுக்கு நீ என்னையும் விலை பேசுவ... இந்த ஊரையும் சேர்த்தே விலை பேசுவ... கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி உன்னை உயிரோட விட்டேன் பாரு... அது பெரிய தப்புடா" என்று சிவசங்கரன் சீற்றத்தோடு பொங்க,

"என் ஆயுசு கெட்டி... அதான் நான் தப்பிச்சிட்டேன்... உனக்கு அல்பாயுசுதான்... நீ என் கையிலதான் சாகப்போற" என்று மனோகரன் சொல்லிவிட்டு... அன்னம்மாவின் காயத்தில் வழியும் இரத்தத்தைத் துடைத்துக் கொண்டிருக்கும் செல்வியை பார்த்து,

"ஏ பொண்ணு... ஒழுங்கா உன் புருஷனை நல்ல வார்த்தை சொல்லிக் கூட்டிட்டு போயிடு... அப்புறம் ரொம்ப வருத்தபடுவ" என்றான்.

செல்விக்கு அங்கே நடப்பது ஒன்றும் புரியவில்லை என்றாலும் மனோகரனின் வார்த்தைகள் கோபத்தை உண்டாக்க,

"உன் மாதிரியான ஆளெல்லாம் அவரை ஒண்ணுமே செய்ய முடியாது... கோபத்தில அந்த மனுஷன் ஏதாச்சும் செய்யறதுக்கு முன்னாடி இங்கிருந்து நீ ஓடி போயிடு" என்றவள் மனோகரனுக்கு பதிலடிக் கொடுக்க சிவசங்கரனின் இதழ்களில் ஓர் கர்வப்புன்னகை!

மனோகரன் கடுகடுத்த முகத்தோடு நிற்க, சிவசங்கரன் அடித்த அடியிலிருந்து நினைவுபெற்று எழுந்த வெள்ளையப்பன் தோப்பிற்குள் புகைமூட்டம் ஏற்படுவதையும் நெருப்பு ஜுவாலையால் அந்த இடத்தின் இருள் மறைந்து வெளிச்சமாகிக் கொண்டு வருவதையும் கவனித்தான்.

மனோகரனின் தோளை மிரட்சியோடு தட்டி, "சார் தோப்புக்குள்ள நெருப்பு பத்திகிச்சு" என்று சொல்லும் போது அவர்கள் எல்லோரும் கண்ட காட்சி பயங்கரமாய் இருந்தது.

தூரமாய் பரவிக் கொண்டிருந்த நெருப்பு வெகுவிரைவாய் அவர்களை நோக்கி வர வெள்ளையப்பன் தன் தாயைப் பற்றிக்கூட கவலையில்லாமல், "சார் வாங்க ஓடிடலாம்" என்று மனோகரனை அழைத்தான்.

சிவசங்கரன் அந்தக் காட்சியைக் கண்டு அதிர்ச்சியோடு நின்றுவிடாமல் செல்வியின் கைகளைப் பிடித்துக் கொண்டு அன்னம்மாவை மெல்ல எழுப்பி அழைத்துக் கொண்டு, "சீக்கிரம் வாங்க… இந்தப் பக்கமா போனா வெளியே போயிடலாம்" என்று அவர்களை நெருப்பு பரவாத திசையில் நகர்த்திச் செல்ல,

மனோகரன் நின்ற இடத்திலிருந்து நகராமல் வெள்ளையப்பனிடம் ஏதோ ரகசியமாய் சொல்ல, "அய்யோ சார்... இப்போ உயிர் பிழைச்சா போதும்... மத்த வேலை எல்லாம் அப்புறம் பாத்துக்கலாம்" என்று சொல்லி அவனை அழைத்துக் கொண்டு போக நினைத்தான்.

ஆனால் அந்த நேரத்தில் மனோகரன் விசித்திரமாய் ஒரு காரியம் செய்தான். அதை வெள்ளையப்பா கவனித்து கொண்டிருக்க எதிர்புறத்திலும் தீ மரங்களை தம் கோரபசிக்கு இரையாக்கிக் கொண்டு வந்தன.

அன்னம்மா திரும்பி பார்த்தபடியே வந்து கொண்டிருக்க அந்த அனல் பரவிக்கிடந்த புகைமூட்டத்தில் வெள்ளையப்பனும் மனோகரனும் நெருப்பைச் சமாளிக்க முடியாமல் தவிக்கலாயினர்.

அந்த கோரத் தீயால் ஓர் மரத்தின் கிளை முறிந்து விழ, எதிர்பாராவிதமாய் அது மனோகரன் வெள்ளையப்பன் இருவர் உயிரையும் பலியாக்கிக் கொண்டது.

கணநேரத்தில் நடந்த அந்தச் சம்பவத்தை பார்த்து, "வெள்ளையப்ப்ப்ப்ப்பா....." என்று அன்னம்மா கதறித் துடித்தார்.

அதுதான் அவர் தொண்டை குழியிலிருந்து எழும்பிய கடைசி ஒலி. அத்தோடு அவரின் நா பேசும் சக்தியை இழந்தது. அவர் அப்படியே நினைவிழுந்து சரிந்துவிடச் செல்வியும் சிவசங்கரனும் என்ன செய்வதென்று புரியாமல் திகைத்தனர்.

தாமதித்தால் தப்பிப்பது சிரமம் என்ற நிலையில் சிவசங்கரன் அன்னம்மாவை தன் தோள் மீது தூக்கிப் போட்டுக் கொண்டு செல்வியின் கரத்தை இறுக்கமாய் பிடித்துக் கொண்டான்.

நெருப்பு பரவி வரும் திசையை அந்த புகைமூட்டத்திலும் கணித்தவன் ரொம்பவும் லாவகமாய் அவர்கள் இருவரையும் வெட்ட வெளியான இடம் பார்த்துக் கொண்டு வந்து சேர்ந்தான். அவர்கள் வந்து நின்றது ஊருக்கு வெளிப்புறத்திற்குச் செல்லும் வழி.

மற்றொரு பக்கம் தீ பரவிய காட்சியைப் பார்த்த ஊர் மக்கள் எல்லாம் அதிதீவிரமாய் அணைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டிருந்தனர். ஆனால் அது அத்தனை சுலபமான காரியம் அல்ல. ஏற்கனவே அந்தத் தோப்பின் வழித்தடம் மக்களால் உபயோகப்படுத்தப்படாமல் இருக்க அந்த நெருப்பு எல்லோருக்குள்ளும் கிலியை ஏற்படுத்தியது.

ஊருக்கு மறுபுறத்தில் சிவசங்கரன் அன்னம்மாவை பத்திரமாய் இறக்கிவிட்டான். செல்விக்குள் இருந்த படபடப்பை கவனித்தவன் அவளை கட்டியணைத்துக் கொண்டு,

"பயப்படாதே செல்வி... ஒண்ணுமில்ல... நாம தப்பிச்சிட்டோம்" என்றபடி அவளை ஆசுவாசப்படுத்த

அவளோ தன்னவனின் அணைப்பில் சகலமும் மறந்து கிடந்தாள். அவனுமே அவளை விடாமல் தன்னிலை மறந்து அவளை ஆரத்தழுவிக் கொண்டிருந்தான். அந்த நொடி அவளுக்குள் இருந்த கலக்கமும் பயமும் மறைந்து நிம்மதி படர்ந்தது.

அப்போது அவளுக்குத் தெரியாது... இனி அதைப் போல ஒரு நிம்மதியும் அணைப்பும் அவளுக்கு கிடைக்க போவதே இல்லை என்று...

நெருப்பின் உக்கிரம் குறையாமல் இருக்க அந்த நேரத்தில் வானின் இடிமுழக்கம் பயங்கரமாய் கேட்டது.

செல்வியைக் கட்டியணைத்துக் கொண்டிருந்த சிவசங்கரன், "தெய்வாதீனமா இப்போ மழை வந்தால் நல்லா இருக்கும்" என்று சொல்லி கொண்டிருக்கும் போதே சிவசங்கரனின் காதில் தன் அண்ணன் வேல்முருகனின் அபயகுரல் ஒலித்தது.

அவளை விடுவித்து விட்டு நிமிர்ந்து பார்த்தவன், "அண்ணன் குரல் கேட்குதில்ல செல்வி" என்றான்.

"எங்கே?" அவள் குழப்பமாய் அவனை ஏறிட்டுப் பார்க்க,

"சங்கரா... சங்கரா..." என்று  வேல்முருகனின் குரல் கேட்க

சிவசங்கரன் அவளிடம்,  "அண்ணே உள்ளே மாட்டிக்கிட்டாரா?" என்று சொல்லி பதறியவன், படுஉக்கிரமாய் எரியும் நெருப்பை துளியும் பொருட்படுத்தாமல் தோப்பிற்குள் போக எத்தனிக்க,

அவன் கரத்தை பிடித்து தடுத்தவள், "நானும் வர்றேன்" என்றாள்.

"விடு செல்வி... இது விளையாட்டு காரியம் இல்ல" என்று அவன் சொல்ல அவள் கையை விடுவதாக இல்லை. அந்த நேரத்தில் அவள் பிடிவாதத்தை தாங்க முடியாமல் கையை உதறி அவளைக் கீழே தள்ளிவிட்டவன்,

"என் மேல சத்தியமா நீ பின்னாடி வரக் கூடாது" என்று முடிவாய் சொல்லிவிட்டு சென்றான்.

நெருப்பிற்குள் இருந்து மீண்டும் மீண்டும் வேல்முருகனின் மரண ஓலம் கேட்க அன்று தன் அண்ணனை காப்பாற்ற சென்ற சிவசங்கரன் திரும்பவேயில்லை.

சில நொடிகளிலேயே வேல்முருகன் தப்பி பிழைத்தோம் என்று வெளியே வர செல்வியின் கண்கள் அவளின் கணவனை ஆவலாய் தேடிக் கொண்டிருந்தது.

"மாமா... எங்கே அவரு?" என்று செல்வி கண்ணீரோடு கதற வேல்முருகன் முகத்தை மூடிக் கொண்ட அழத் தொடங்கினான்.

என்ன நடந்தது என்று யூகிக்க முடியாத அந்தத் தருணத்தில் செல்வியும் உடனடியாய் யோசிக்காமல் அந்த நெருப்பிற்குள் புகுந்தாள்.

அந்த அனலையும் புகைமூட்டத்தையும் சமாளிக்க முடியாமல் போக செல்வி அந்த அடர்ந்த நெருப்பிற்குள் மயங்கி சரிய, அன்றே அவனோடு முடிந்திருக்க வேண்டிய அவள் விதியை இயற்கை மாற்றித் தீர்மானித்தது.

அந்த நெருப்பை பெரும் மழை வந்து சில மணிநேரங்களில் அணைத்துவிட எல்லாம் ஆதிபரமேஸ்வரியின் சக்தி என மக்கள் பெருமிதம் கொண்டனர். சிவசங்கரன் அந்த தீந்தழிலில் கரைந்து போனான். செல்வி உயிரோடு மீட்கப்பட்டாள்.

அவள் அவனிடம் தான் கர்ப்பமாக இருக்கிறோம் என்று சொல்ல எண்ணிய செய்தியை சொல்லும் தருணம் கடைசிவரை அமையாமலே போனது.

அந்த விஷயத்தைக் கேட்டு அவன் முகத்தில் ஏற்பட்டிருக்கும் ஆனந்தத்தை அவளால் பார்க்க முடியாமலே போனது. அந்த இன்பத்தைக் கேட்டறியாமலே அவன் வாழ்வும் முடிந்து போனது.

அந்த ஊரில் உள்ளவர்கள் சொன்னது போல் தான் துரதிஷ்டசாலிதான் என செல்வி ஆழமாய் எண்ணிக் கொண்டாள்.

ஏற்கனவே செல்விக்கு உள்ள அவப்பெயர்கள் பரவிகிடக்க இன்னும் அந்த விபத்துக்கும் அவளின் துரதிஷ்டமே காரணம் எனப் பழி சுமத்தினர்.

சிவசங்கரனைக் கொன்றது அங்குப் பரவிய தீயா? அல்லது அவன் அண்ணன் மனதில் எரிந்து கொண்டிருந்த பொறாமைத் தீயா? நியாயம் கேட்கவோ அந்த ஊரில் செல்விக்கு உரிமையும் சூழ்நிலையும் அமையவில்லை.

ஆனால் வேல்முருகன் தயவில் வாழக் கூடாதெனவும், பாவச் சாயல் படிந்த அந்தக் குடும்பத்தில் தனக்குப் பிறக்க போகும் குழந்தை வளரக் கூடாது என ஆழமாய் தீர்மானித்து ஆதித்தபுரத்தைவிட்டு வெளியேறினாள் செல்வி.

என்னதான் ரகசியம்

சிவசங்கரன் மரணித்தாலும் முதுமையில்லாத இளமையோடு இன்றும் செல்வியின் நினைவுச்சிறையில் வாழ்ந்துக் கொண்டிருந்தார். செல்வி ஒவ்வொரு முறையும் அந்தச் சம்பவத்தை நினைவுபடுத்திக் கொள்ளும் போதும் அவரின் உயிரின் அடி ஆழத்தில் இருந்து வலிக்கும்.

தன் கணவனுக்கு நேர்ந்த அந்தக் கோரமான மரணத்தை ஏற்றுக் கொள்ள முடியாமல் அவர் நொறுங்கிப் போக,

இம்முறை அந்த நினைவுகள் அவரை நிலைகுலைத்ததென்றே சொல்ல வேண்டும். அதேநேரம் செல்லம்மாவின் மனம் அந்த ஞாபகங்களைத் தாண்டி நிறைய கேள்விகளை எழுப்பிக் கொண்டிருந்தது.

இன்னமும் தான் ஏன் இந்த விஷயத்தை ஆதியிடம் மறைக்க நினைக்கிறோம்...

அந்த  ஊரும் உறவுகளும் வேண்டாமென்று எண்ணித் தள்ளி இருந்த காரணம் இனி அவசியமற்ற ஒன்றாய் மாறிவிட்டது.

ஆதிதான் இப்போது அந்த ஊரையும் உறவுகளையும் தேடி சென்றுவிட்டாளே!

அதேநேரம் அவளுக்கு தன் தந்தையின் மரணத்தைக் குறித்து கேள்வி எழுப்ப எல்லாம் உரிமையும் இருக்கிறது. இனியும் தான் எந்த விஷயத்தையும் தன் மகளிடம் மறைப்பதில் அர்த்தம் இல்லை என்று எண்ணியவர் அவளிடம்  நடந்தேறிய எல்லா உண்மைகளையும் சொல்ல முடிவெடுத்திருந்தார்.

அதேநேரம் ஆதிக்கு ஏதேனும் ஆபத்து நேர்ந்திருக்குமே எனில் அன்று அந்த கோரத் தீக்குள் தான் சிக்கி கொண்டிருக்கும் போதே நேர்ந்திருக்கும். அப்போதே தன்னோடு அவளும் கருகி இருக்கக் கூடும்...

அப்படி எதுவும் நடவாமல் எத்தனையோ இன்னல்களுக்கு இடையில் உருபெற்று இந்த உலகை வந்தடைந்தாள் எனில் நிச்சயம் அவளுக்கு நேரிடும் எந்த இடரையும் அவள் கடந்து வருவாள் என்று செல்லம்மாவிற்கு நம்பிக்கை உண்டாக,

அப்பொழுது  ஓர் தெளிவும் தைரியமும் ஏற்பட்டிருந்தது அவருக்கு. ஆனால் ஆதித்தபுரத்தில் உதிக்கும் ஒவ்வொரு விடியலும் ஆதியின் நம்பிக்கையைக் குலைத்துக் கொண்டே வந்தது. அந்தத் தொழிற்சாலைக்கான வேலையைத் தான் இனி தடுத்து நிறுத்திவிட முடியுமா என்ற குழப்பம் ஒரு புறமும்... அந்தக் கோயிலின் ரகசியத்தை இந்த மக்களுக்கு எப்படி எடுத்துரைப்பது என்று கவலை மறுபுறமும்... அவளை அழுத்திக் கொண்டிருந்தது.

இப்படியான எண்ணத்திற்கிடையில் அன்று செல்லம்மா மகளை அவள் கைப்பேசியில் அழைத்துப் பேசினார்.

ஆதி நம்பிக்கையற்ற நிலையிலேயே அந்த அழைப்பை ஏற்றுப் பேச, தன் தாயின் குரலில் ஒளித்த தீர்க்கமும் தெளிவும் ஆதிக்கு புது தெம்பையும் உத்வேகத்தையும் கொடுத்தது.

அவள் தந்தையின் இறப்பு அன்று நடந்த விஷயங்களை செல்லம்மா அவளுக்கு விவரிக்க அவளின் முகப்பாவனை மாறிக் கொண்டே வந்தது. அதைக் கோபம் என்று சாதாரணமாய் ஒரு வார்த்தையில் சொல்லிவிட முடியாது. ரௌத்திரத்தின் உச்சத்தைத் தொட்டது அவள் மனநிலை.

வேல்முருகன்தான் தன் அப்பாவின் மரணத்திற்குக் காரணம் என்று ஏற்கனவே அவள் யூகித்திருந்தாள். ஆனால் நடந்த விஷயம் விதி வசமல்ல என்றும் அது திட்டமிட்டு செய்யபட்ட சதி என்றும் தோன்றியது.

அந்தப் பயங்கரமான தீயையும் பொருட்படுத்தாமல் தன் அண்ணனை காப்பாற்ற சென்ற அவள் தந்தையின் பாசமும் தைரியமும் அவளை வியப்பின் உச்சிக்கே கொண்டு சென்றது.

அவள் தன் தந்தையைப் பார்த்து பேசிப் பழகும் வாய்ப்பு கிடைக்காத போதும் சிவசங்கரன் ஆதியின் மனதில் வானின் உயரத்தையும் மிஞ்சி கொண்டு நின்றான். அதேபோல வேல்முருகனின் மீது ஏற்பட்ட வஞ்சமும் அத்தனை உயரமாய் வளர்ந்து நின்றது என்று சொன்னாலும் மிகையாகாது.

ஆதி தன் அம்மா சொன்னதை வைத்து சம்பவம் நடந்த அன்று, முதலில் புறப்பட்ட வேல்முருகன் எங்கே சென்றிருக்க கூடும்...

அன்று நெருப்பு ஏற்பட்டது இயற்கையாகவே நடந்ததா?

எப்படி வேல்முருகன் தீயில் மாட்டிக் கொண்டார்?

காப்பாற்றச் சென்ற தன் அப்பாவிற்கு என்ன நேர்ந்தது?

அன்னம்மா வெள்ளையப்பன் மனோகரன் இறந்த வரைக்குமான விஷயங்களை சொன்னார். அதற்குப் பிறகு நடந்த விஷயங்களை அவள் அம்மாவும் சொல்லியாயிற்று.

ஆனால் இன்னமும் ஆதி கேள்விக்கான விடை முழுமையாய் கிட்டவில்லை. அந்த விடையை வேல்முருகன்தான் சொல்ல முடியும். ஆதி அதன்பின் தன் பெரியப்பாவை குறி வைத்துச் செயல்பட தொடங்கியிருந்தாள்.

அதற்கு முதலில் ஆதித்தபுரத்தில், அந்த ராசயன தொழிற்சாலை கட்டுவதற்கு எதிராக தன் சட்ட ரீதியான உரிமையை நிலைநாட்ட எண்ணியவள், கருணாகரன் மூலமாக ஒரு வக்கிலிடம் பேசினாள்.

எல்லாமே அவளுக்குச் சாதகமாக நடந்து கொண்டிருந்தது. வேல்முருகனுக்கு எதிராக சரவணனைத் திருப்பி தனக்கு சாதகமாய் மாற்றிக் கொள்ள வேண்டும் என்று எண்ணியிருந்தாள். ஆனால் இரண்டு நாட்களாய் அவனை அவளால் பார்க்க முடியவில்லை.

அதற்காக அவள் செய்த முயற்சிகள் எல்லாம் வீணாகியிருந்தது. இருப்பினும் அன்று அவனைபார்த்துவிட வேண்டுமென்று தீர்மானமாக எண்ணியவள் பொழுது விடிந்ததிலிருந்து அவனை வீடு முழுவதும் தேடிவிட்டாள். ஆனால் அன்றும் அவனைக் காண முடியாமல் அவளுக்கு ஏமாற்றமே மிச்சமாயிருக்க, மும்முரமாய் சமையல் வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மனோரஞ்சிதம் மற்றும் வசந்தாவிடம்,

"ஏன் அத்தை... சரவணனை இரண்டு நாளா ஆளையே பார்க்க முடியலியே... ஏதாவது முக்கியமான வேலைக்குப் போயிருக்காரா?" என்று ஆதி கேள்வி எழுப்பினாள்.

ஆதி அப்படி கேட்டதும் மனோரஞ்சிதம் அவளை அத்தனை சீற்றமாய் பார்க்க, வசந்தா சமிக்ஞை செய்து அவளைப் போக சொல்லித் தலையசைக்க அவளுக்கு எதுவும் விளங்கவில்லை.

ரஞ்சிதத்தை குழப்பமாய் பார்த்தவள், "என்னாச்சு அத்தை... ஏதாச்சும் என் மேல கோபமா?" என்றுக் கேட்க அவள் முகத்தை ஏறிட்டும் பார்க்காமல்,

"நான் யாரும்மா உன் மேல கோபப்பட... நீ இங்க வந்த வேலையை மட்டும் பாரு... எதுக்கு சரவணனைத் தேடிட்டு இருக்க?" என்று வெடுக்கென அவர் பேசிவிட ஆதி அப்படியே திகைத்து நின்றுவிட்டாள்.

அப்போது வசந்தா இடையிட்டு, "ஏன் அத்தை இப்படி பேசிறீங்க.. ஆதி என்ன பண்ணுவா பாவம்?" என்று கேட்க,

"அப்போ ஆதிக்கும் சரவணன் செய்கிற எதுக்கும் சம்பந்தமில்லைனு சொல்ல வர்றியா வசந்தா" என்று ரஞ்சிதம் பதில் கேள்வி கேட்க,

"சரவணன் என்ன செஞ்சான்?" என்று குழப்பமாய் ஆதி வசந்தாவின் முகத்தைப் பார்த்தாள்.

"அது வந்து" என்று வசந்தா இழுக்க,

"ப்ச் எதுவாயிருந்தாலும் சொல்லுங்கக்கா" என்றாள் ஆதி.

"அவன் இரண்டு நாளா வீட்டுக்கு நேரம் கழிச்சுதான் வர்றான்... அதுவும் குடிச்சிட்டு" என்று சொல்ல ஆதி அதிர்ந்தாள்.

வசந்தா மேலும், "அவன் கொஞ்சம் முரடன்தான்... போக்கிரித்தனம் பண்ணுவான்... ஆனா குடிக்க எல்லாம் மாட்டான்" என்க,

அப்போது ஆதி தன் அத்தையின் புறம் திரும்பி, "ஓ... உங்க பிள்ளை குடிக்க நான்தான் காரணம் நினைக்கிறீங்க... அதானே உங்க கோபம்" என்று பளிச்சென்று கேட்டாள்.

அதற்கு மனோரஞ்சிதம் பதில் பேசாமல் அமைதியாய் நிற்க பின்னோடு வந்த கனகவல்லி, "அப்படி இல்ல ஆதி... அவன் மனசுல உன்னை நினைச்சிட்டானே… அதான் காரணம்" என்றார்.

ஆதி பதிலின்றி மௌனமாய் நிற்க மனோரஞ்சிதம் இப்போது இறங்கிய தொனியில் அவள் தோளினைத் தொட்டு,

"நீ மட்டும் சரவணனைக் கட்டிக்கிட்டா அவன் நிச்சயம் மாறிடுவான் ஆதி" என்று சொல்ல ஆதியின் முகம் வெளிறி போனது.

"நீ மட்டும் சம்மதிச்சன்னா" என்று ரஞ்சிதம் மீண்டும் ஆதியை பரிதவிப்போடு பார்க்க, அந்தப் பேச்சை அவள் மேலும் வளர்க்க விரும்பவில்லை. மூவரின் மீதும் தன் பார்வையைப் படரவிட்டவள் ரஞ்சிதத்தை பார்த்து,

"நான் சொல்றதைத் தப்பா எடுத்துக்காதீங்க அத்தை... நான் விஷ்வாவைதான் விரும்பிறேன்... நான் அவனைத்தான் கல்யாணம் பண்ணிக்கனும்னு ஆசைப்படறேன்... அம்மாவோட ஆசையும் கூட அதுதான்" என்க,

அந்த நொடியே ஏமாற்றத்தினால் ரஞ்சிதத்தில் விழிகள் நீரைச் சுரந்தது. வசந்தா இந்தப் பதிலை எதிர்பார்த்தாள்.

ஆதி அப்போது, "அத்தை... ப்ளீஸ் அழாதீங்க... நான் சரவணன்கிட்ட பேசி புரிய வைக்கிறேன்" என்று சொல்லிவிட்டு அந்தச் சூழ்நிலையை மேலும் மோசமாக்க விரும்பாமல் அவள் அங்கிருந்து அகன்றுவிட,

கனகவல்லி ரஞ்சிதத்திடம் ஆறுதல் வார்த்தை சொல்லி தேற்றினார்.

ஆதி வேதனையோடும் கோபத்தோடும் நேராய் விஷ்வாவைப் பார்க்க அவன் அறைக்குச் செல்ல, அவன் அப்போது மேற்சட்டையில்லாமல் ஷார்ட்ஸோட உடற்பயிற்சி செய்துக் கொண்டிருந்தான்.

"விஷ்வா" என்றழைத்து விறுவிறுவென அறைக்குள் நுழைந்தவள் அவன் சட்டை இல்லாது இருந்ததைப் பார்த்த அந்த நொடியே பார்வையை வேறுபுறம் திருப்பிக் கொண்டுவிட, அவனோ அவளை பார்த்தவுடன் முகம் மலர, "ஹாய் டார்லிங்... காலையிலேயே என்னைப் பார்க்க ஓடோடி வந்திருக்க... நைட்டெல்லாம் என் நினைப்பில தூக்கம் வரலியோ?!" என்றான்.

ஏற்கனவே அவள் கோபமாய் வர அவனின் பேச்சு எரிச்சல் மூட்டியது.

"மூஞ்சி... நான் கொஞ்சம் உன்கிட்ட பேசணும் ஷர்ட் போட்டுட்டு வா" என்று சொல்லி வெளியேறப் பார்க்க, அவளை வழிமறித்து நின்றான். அவள் அவனை நேர்கொண்டு பார்க்க முடியாமல் முகத்தைத் திருப்பி கொள்ள,

"என்ன ஆதி? எப்பவும் ஐஸ் டூ ஐஸ் பார்த்து பேசுவ... இப்ப என்னவோ தடுமாற... என்ன? என் ஆர்ம்ஸ் பாடியெல்லாம் பார்த்து உன் மனசு தடுமாறுதா?" என்றவன் எகத்தாளமாய் கேட்ட நொடி கடுப்பானவள்,

"என் நிலைமை புரியாம இப்படி நான்ஸென்ஸ் மாறிப் பேசாதே... போய் ஒழுங்கா ஷர்ட்டைப் போட்டுட்டு வா" என்று அவள் சொல்லி  அறையைவிட்டு வெளியேற எத்தனிக்க, அவளைப் போகவிடாமல் தன் கரத்தால் அவளை இழுத்து அணைத்தான் விஷ்வா. அதுவும் அதே கோலத்தில்...

அவனின் அகண்ட மார்பும் புஜமும் கட்டுடல் மேனியும் அவன் கேட்டது போல அவளை முதல் பார்வையிலேயே ஈர்த்தது என்னவோ உண்மைதான்.

இப்போது அவனின் இந்த நெருக்கம்  அவள் ஹார்மோன்களை எல்லாம் துயில் கலைத்திட, "இடியட் விடுடா என்னை" என்று நொடி நேரத்தில் அவனிடமிருந்து விலகி வந்தாள்.

அதேநேரம் அவனும் அத்தனை இறுக்கமாய் அவளை அணைக்கவில்லை என்பதுதான் உண்மை. அவள் உடலெல்லாம் அவனின் வியர்வை வாசம் வீச,

"இன்னொரு தடவை இப்படி நடந்துக்கிட்ட... ஐ வில் கில் யூ ராஸ்கல்" என்றுக் கொதிப்படைந்தாள்.

"கில் யூன்னு சொல்றதுக்கு பதிலா லவ் யூன்னு சொல்ல கூடாதா?!" தன் உடலைத் துண்டால் துடைத்தபடி சற்றும் அலட்டிக் கொள்ளாமல் கேட்டான்.

"ஆமா இப்ப அதான் ரொம்ப முக்கியமா?!"

"எனக்கு அதான் முக்கியம்" என்றவன் சொல்லி தோள்களைக் குலுக்க,

"தென் யூ கோ அவே மேன்" என்றவள் சொல்லி முறைத்துப் பார்த்தாள். "கிளம்புன்னு சொல்றியா?!"

"எஸ்" என்றாள் அவன் முகத்தைப் பாராமலே!

அவள் முன்னே வந்து நின்றவன், "நெவர் அட் ஆல்... உன்னை விட்டுட்டு நான் எங்கேயும் போகமாட்டேன்... அப்படி நான் போறதா இருந்தா... அது என் மரணமாதான் இருக்கும்" இறுகிய பார்வையோடு அவன் இப்படி சொல்ல ஒரு நொடி உறைந்து நின்றவள் யோசிக்காமல் அவன் கன்னத்தில் பளீரென்று அறைந்துவிட்டாள்.

"ஆ!... வலிக்குதுடி" என்றவன் கன்னத்தைப் பிடித்துக் கொள்ள,

"டோன்ட் அகையின் ஸே திஸ் வார்ட் (திரும்பியும் இப்படி சொல்லாதே)" என்று அழுத்தமாய் சொல்லியவளின் கண்களில் நீர் தளும்பி நின்றது. அவன் சொன்ன அந்த வார்த்தை அவள் தந்தையை நினைவுபடுத்திவிட அவளுக்குள் பெருகிய வலியையும் வேதனையையும் கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லை.

அவள் அந்த அறையைவிட்டு விறுவிறுவென நடந்து வெளியேறிவிட விஷ்வா தன் சட்டையை எடுத்து அணிந்து கொண்டு அவசரமாய் அவள் பின்னோடு ஓடி வந்து, "ஆதி ஸ்டாப்" என்றவன் அழைக்கவும் அப்படியே அவள் தேங்கி நின்றாள்.

அவள் முகத்தில் நிரம்பியிருந்த வேதனையை உணர்ந்தவன்,

"ஐம் எக்ஸ்டிர்ம்லீ சாரி... இனிமே அப்படி சொல்ல மாட்டேன்" என்று சொல்லியபடி அவள் விழி நீரைத் துடைத்து விட்டான்.

"ஐம் ஸாரி டூ" என்றவள் அவன் விழிகளை ஏறிட்டு பார்க்க அவர்களின் பார்வைகள் கட்டுண்டன.

ஆதி சிரமப்பட்டு அவனிடம் இருந்து தன் விழியைப் பிரித்துக் கொண்டு முன்னே நடக்க அவனும் அவளோடு நடந்தான்.  

"ஆமா ஏதோ பேசணும்னு சொன்னியே" என்று விஷ்வா அவள் சொன்னதை நினைவுப்படுத்திக் கேட்க , "ஹ்ம்ம் பேசணும்" என்றாள்.

"என்ன விஷயம் ஆதி?"

"சரவணன்கிட்ட ஏதாவது சொன்னியா?"

"நான் அவன்கிட்ட எதுவும் சொல்லலை...அவன்தான் என்கிட்ட தேவையில்லாம பேசினான்"

"என்ன பேசினான்?" என்றவள் கேட்டு குழப்பமாய் அவனைப் பார்க்க,

"நான் இந்த ஊரை விட்டு போகணுமாம்... உன்னை விட்டு போகணுமாம்... இல்லாட்டி இந்த உலகத்தை விட்டே போயிடுவேன்னு" சொன்னான்.

"இத பத்தி நீ ஏன் என்கிட்ட சொல்லை விஷ்வா"

"அவனுக்கு காதல் கைக் கூடலன்னு டிப்பிரஷன்... அவனைப் பார்க்கவே பாவமா இருந்துச்சு... அதை நான் பெரிசா எடுத்துக்கல”

விஷ்வா சொன்னதை எல்லாம் கேட்டு ஆதி தீவிரமாய் சிந்தித்துக் கொண்டிருக்க, "ஏ ஆதி" என்றழைத்து அவள் சிந்தனையை அவன் தடைப்படுத்த,

"சொல்லு விஷ்வா" என்றாள்.

"சும்மா சொல்ல கூடாது... செம அடி... சும்மா நச்சுன்னு இருந்துச்சு" என்றவன் அவள் நிலைமை புரியாமல் கல்மிஷமாய் சிரித்துக் கண்ணடிக்க... அவள் மனநிலையும் கொஞ்சம் மாறியிருந்தது.

"சாருக்கு இன்னும் ஒன்னும் வேணுமோ?!" என்று சொல்லி சிரித்துக் கொண்டே அவனை மீண்டும் அடிக்க தயாராவது போல் தன் இருகரத்தை தேய்த்தாள்.

"ஹ்ம்ம் கொடு... ஆனா கையில வேண்டாம்" என்று சொல்லியவனின் பார்வை அவள் உதட்டில் நிலைகுத்தி நிற்க,

"நீ ரொம்ப நேஸ்ட்டியா பேசுற... போடா" என்றுச் சொல்லிவிட்டு வெட்க புன்னகையோடு கடந்து செல்ல,

"அப்போ கொடுக்க மாட்ட" நின்ற இடத்தில் இருந்ததே கேட்டான்.

"நெவர்" என்றவள் திரும்பி ஓர் பார்வைப் பார்த்துச் சொல்ல,

"யூ வில்... பேபி" என்றான் தீர்க்கமாக!

"ஐ வோன்ட்" அவன் முகம் பாராமலே தன் கரத்தை அசைத்து பதில் உரைத்துவிட்டு அகன்றாள்.

இவர்களின் காதலும் மோதலும் ஒருபுறமிருக்க, ஆதியின் தேடலும் நிற்காமல் நடைப்பெற்றுக் கொண்டிருந்தது. அதுவும் ஆதி எதிர்பார்த்து காத்திருந்த தமிழ்வேந்தன் வருவதாக ஜேம்ஸிடம் இருந்து தகவல் வந்தது.

ஆதி அவர்கள் இருவரையும் கோயிலில் நடமாட்டம் இல்லாத மதிய வேளையில் வரும்படி சொல்லியிருந்தாள்.

ஆதிபரமேஸ்வரி கோயிலைப் பற்றிய ஆயிரம் வருஷம் பழமையான ரகசியம் என்ன? அன்று தன் அப்பாவோடு பிரச்சனை செய்த அந்தத் தொல்பொருள் ஆராய்ச்சியாளரின் மனதில் உள்ள எண்ணம் என்னவாக இருக்கும் என்று தமிழ்வேந்தனால் நிச்சயம் கணிக்க முடியும் என்று ஆதி அழுத்தமாய் நம்பினாள்.

ஆதிபரமேஸ்வரி ஆலயம் குடமுழுக்கு விழாவுக்காகப் புதுப்பிக்கப்பட்டு ரொம்பவும் கம்பீரமாக காட்சியளித்துக் கொண்டிருந்தது. ஆதியும் விஷ்வாவும் கோயில் வாசலில் காத்திருக்க அங்கே ஓர் கார் வந்து நின்றது.

ஜேம்ஸோடு நல்ல உயரமான கம்பீர உருவத்தோடு கண்ணனை போன்ற கருமை நிறத்தோடு ஆதியை நோக்கி வந்தவர்தான் தமிழ்வேந்தன்.

ஆதியே உயரமான தோற்றமாய் இருப்பினும் அவரைப் பார்க்க அவளே கொஞ்சம் தலைநிமிர்த்தி பார்க்க வேண்டியதாக இருந்தது.

"ஹெலோ சார்... ஐம் ஆதி" என்றாள்.

"வணக்கம்... நீங்கதான் ஆதியா?" என்றுக் கேட்டு ஆச்சர்யம் பொங்க அவளை ஆழ்ந்து பார்த்தவர்,

"ஆதின்னதும் நான் வேற மாதிரி உருவத்தைக் கற்பனை பண்ணி இருந்தனே" என்று அறிமுக புன்னகையோடு தன் மன எண்ணத்தை தெரிவித்தார்.

அப்போது ஆதி ஜேம்ஸை பார்த்து, "நீ என்னைப் பத்தி சொல்லவே இல்லையா ஜேம்ஸ்" என்று அவள் வினவ,

"சார் பேசிட்டு வந்ததை ஆர்வமாய் கேட்டதில்ல உங்களைப் பத்தி சொல்ல மறந்துட்டேன்" என்றான் ஜேம்ஸ்.

"பரவாயில்ல... உங்க கட்டுரைகளை நான் படிச்சிருக்கேன் ஆதி... ரொம்பவும் அருமை... ஆனா அந்த எழுத்தில இருந்த முதிர்ச்சியும் கம்பீரமும் ஆதிங்கிற பெயரும் ஒரு ஆண் உருவத்தையே முன்னாடி நிறுத்திடுச்சு... அந்த கற்பனையை உடைத்தெறிந்த உங்க தோற்றம் அழகான ஆச்சர்யத்தில ஆழ்த்திடுச்சு... ரொம்ப நல்ல அனுபவம்… நீங்க என் கற்பனைக்கு அப்பாற்பட்டு இருக்கீங்க... சரி உங்க உண்மையான பெயர் என்ன?" என்று தமிழ்வேந்தன் கேட்கவும்,

"ஆதிபரமேஸ்வரி" என்றாள்.

"அருமை... இந்த பெயர்தான் உங்களுக்கு ரொம்பவும் பொருத்தமா இருக்கு" என்று தமிழ்வேந்தன் சொல்ல

விஷ்வா பின்னோடு நின்றுக் கொண்டு "கூப்பிட்டு முடிக்கிறதுக்குள்ள ஒருநாள் முடிஞ்சிடுமே" என்றான் ஆதியின் காதில் மெலிதாக.

அவனைப் பார்த்து முறைத்துவிட்டு கோயில் வாசலுக்கு அவர்களை அழைத்து வந்தாள். கதவு வெளிப்புறம் பூட்டி இருக்க சங்கரி சாவியோடு மூச்சிறைக்க வந்து சேர்ந்தாள்.

"எப்படி சாவியை வாங்கிட்டு வந்த?" என்று கேட்டபடி ஆதி பூட்டை திறக்க, "விளக்கேத்த போறேன்னு பொய் சொல்லித்தான்" என்றாள்.

ஆதி தமிழ்வேந்தனை மட்டும் உள்ளே அழைத்துச் சென்றுவிட்டு மற்ற எல்லோரையும் வெளியில் காத்திருக்க சொல்ல, ஜேம்ஸ் முதற்கொண்டு எல்லோருமே அதிர்ச்சிக்கு உள்ளாயினர். அப்படி என்னதான் ரகசியம்?

 

shiyamala.sothy has reacted to this post.
shiyamala.sothy
Quote

Super ma 

You cannot copy content