You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Amara - Episode 10

Quote

10

தேவாவின் பைக் நேராக வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் வந்து நிற்க, “இன்னா தேவா? ஸ்டேஷன்ல வந்து நிறுத்திகீற” என்று அதிர்ச்சியுடன் கேட்டாள் அமி.

“நீ வா சொல்றேன்” என்று உள்ளே அழைத்துச் சென்றவன் அங்கே அவனுக்குத் தெரிந்த கான்ஸ்டபிள் ஒருவரிடம் இன்ஸ்பெக்டர் ரவியைப் பற்றி விசாரித்தான்.

“அவர் ரவுண்ட்ஸ் போயிருக்காரு” என்று தெரிவிக்க,

“ஒன்னும் பிரச்சனை இல்ல சார்… நாங்க காத்துகின்னு இருக்கோம்” என்றவன் அங்கு ஓரமாகப் போடப்பட்டிருந்த பெஞ்சில் அமியையும் அமர சொல்லிவிட்டு தானும் அமர்ந்து கொண்டான்.

“போலீஸ் ஸ்டேஷன்ல போய் நமக்குப் பாதுகாப்பு கிடைக்கும்னு நினைக்கீறியா… எனக்குத் தோணல… நம்ம கிளம்புவோம்… பஸ் பிடிச்சு… வேற ஊருக்கு ஏதாச்சும் போயிடுவோம்” என்றவள் அவனிடம் மெல்ல தெரிவிக்க,

“எங்க போனாலும் தயா வுட மாட்டான்” என்றான் தேவா. ஆனால் அவளுக்கு அங்கே அமர்ந்திருக்க துளியும் விருப்பமில்லை.

அவர்கள் அங்கே வந்து சில மணிநேரங்கள் கழித்தே ரவி வந்தான்.

தேவா அவனுக்காகக் காத்திருப்பதைப் பற்றி அந்த கான்ஸ்டபிள் தெரிவிக்கவும் அவனை தன் அறைக்கு வரச் சொல்லிவிட்டு உள்ளே சென்று அமர்ந்தான்.

தேவாவும் அமியும் கையில் பையுடன் வருவதைப் பார்த்து, “இன்னா தேவா… ஏதாச்சும் பெரிய சம்பவம் பண்ணிட்டியா?” என்று நக்கலாகக் கேட்க,

“அதல்லாம் இல்ல சார்” என்றவன் மிகவும் பணிவாகப் பதில் சொல்ல,

“என்ன ரொம்ப பணிவா பேசுற… ஆச்சரியமா இருக்கு… சரி சரி… உட்காரு… என்ன விஷயம்னு சொல்லு?” என்றார்.

அமிக்கு அப்போதுதான் அவனை இரயில் நிலையத்தில் பார்த்தது நினைவில் தட்டியது. நடந்த களேபரத்தில் அவள் அந்த சம்பவத்தை முற்றிலுமாக மறந்திருந்தாள்.

தேவா அமர்ந்துவிட்டு, “அமி உட்காரு” என,

“வேணாம் தேவா… நம்ம போயிடுவோம்” என்று அமி மெலிதாக அவனிடம் மட்டும் உரைக்க,

“என்னாச்சு என்ன பிரச்சனை?” என்று ரவி இப்போது கொஞ்சம் தீவிரமாகக் கேட்க,

“அது வந்து சார்” என்று தேவா பேச ஆரம்பிக்க,

“வேணாம் தேவா” என்றவள் தடுத்தும் கேட்காமல் தேவா அமியைப் பற்றிய உண்மை அனைத்தையும் கூறினான். மேலும் தயாவால் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் பிரச்சனையைப் பற்றி விளக்க, ரவி முகவாயைத் தடவிக் கொண்டு,

‘ஓ அப்ப இதான் மேட்டரா… இதைதான் அந்த ஜெய் கான்பிடன்ஷியல்னு சொல்லிட்டு இருந்தானா?’ என்று எண்ணிவிட்டு,

“சரி… இரண்டு பேரும் வெளியே வெயிட் பண்ணுங்க… நான் பேசிட்டுச் சொல்றேன்” என்றவன் உடனடியாக ஜெய்யிற்கு அழைத்து தேவா சொன்னற்றை தெரிவித்தான்.

அன்று அமி தான் அமரா இல்லை என்று திட்டவட்டமாகச் சொல்லிவிட்டுச் சென்ற பிறகு மேலே இந்த விஷயத்தில் என்ன செய்வதென்று ஜெய் புரியாமல் குழம்பியிருந்தான். ஆனால் இப்போது மீண்டும் அவளே வந்து தான்தான் அமரா என்று சொல்வதை எப்படி நம்புவது. இதில் ஏதாவது திட்டம் இருக்குமோ என்று சந்தேகம் எழ,

“சரி ரவி… நீங்க அவங்களை ஸ்டேஷன்ல வெயிட் பண்ண வையுங்க… வந்துடுறேன்” என்றான்.

“சார்… நான் கிளம்பணும்… எனக்கு டியூட்டி முடிஞ்சிடுச்சு” என்று ரவி சொல்ல,

“நான் வர வரைக்கு நீங்க ஸ்டேஷன்ல இருந்து அவங்களைப் பார்த்துக்கோங்க” என்றான் ஜெய்.

“சார்… அதெல்லாம் ரொம்ப கஷ்டம்… ஏற்கனவே மிட்நைட் ஆகிடுச்சு” என்றவன் ஏகத்திற்கும் கடுப்பாக, 

“வேணும்னா கமிஷனரைப் பேசச் சொல்லட்டுமா?” என்று ஜெய் அழுத்தமாகக் கேட்க, ரவியால் பதில் பேச முடியவில்லை.

“பார்த்துக்கோங்க வந்துடுறேன்” என்று ஜெய் அழைப்பைத் துண்டிக்க, “இதென்னடா தலைவலியா இருக்கு” எரிச்சலான ரவி வேறு வழியின்றி தேவாவிடம் அங்கேயே காத்திருக்கும்படி உரைத்தான்.

அடுத்த சில மணிநேரத்தில் ஜெய் அங்கே வந்திருந்தான். அவன் நேராக அமியிடம் வந்து, “அன்னைக்கு நான் அமரா இல்லன்னு சொன்ன… இப்ப வந்து நான்தான் அமரான்னு சொல்ற… ஆல்ரெடி நீ ஒரு ஃபிராடு… உன்னை எப்படி நான் நம்புறது” என்று முகத்திலறைந்தது போல நேரடியாகக் கேட்க, அவள் சீற்றமானாள்.

“நீ நம்பாட்டி போ சார்… எனக்கு ஒன்னும் நஷ்டம் இல்ல” என்றவள் தேவாவின் புறம் திரும்பி,

“இதுக்குதானே வேணான்னு சொன்ன… நீ வா போலாம்.” என்றவன் கையைப் பிடித்து இழுத்தாள்.

“பொறுமையா இரு அமி” என்றவள் கையை விலக்கி நிறுத்தியவன், தான் கொண்டு வந்திருந்த பையைத் திறந்து குழந்தைகள் அணியும் சிறிய ஸ்கர்ட் ஒன்றை எடுத்துக் காண்பித்து,

“இதான் அமி தொலைஞ்ச அன்னைக்குப் போட்டிருந்த டிரஸ்… வசந்தா ஆயா அதைப் பத்திரமா எடுத்து வைச்சிருந்துச்சு” என்றவன் மேலும்,

“இது அமி போட்டிருந்த செயின்… இன்னா கஷ்டத்துலயும் ஆயா இதை விற்கல… பத்திரமா பூட்டி வைச்சுருந்துச்சு… சாவும் போது அமிகிட்ட இதெல்லாத்தையும் கொடுத்துட்டுதான் செத்துப் போச்சு” என்று தேவா சொல்லும் போது அமியின் விழிகளில் நீர் கோர்த்திருந்தது.

 சிலுவையுடன் கூடிய அந்தச் சிறிய சங்கிலியை வாங்கி பார்த்த ஜெய்யிற்கு ஆச்சரியம் தாங்கவில்லை. பாலமுருகன் அமராவைப் பற்றிய கோப்புக்களை அவனிடம் கொடுத்துப் படிக்க சொன்ன போது ஆல்வின் எழுதி தந்திருந்த புகாரில் இந்த விவரங்கள் யாவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஜெய் தீவிரமாக யோசிக்க தேவா மேலும், “இதுக்கு மேலயும் நம்பிக்கை இல்லனா… சினிமால எல்லாம் சொல்லுவாங்களே… டி.என்.ஏ. டெஸ்ட்… அதையும் எடுத்துப்பார்த்துக்கோ சார்” என்றான்.

ஜெய் அவர்களை ஆச்சரியத்துடன் நோக்கிவிட்டு, “ஒரு நிமிஷம் இருங்க” என்று தன் கைப்பேசி எடுத்துக் கொண்டு தனியாக வந்து பாலமுருகனை அழைத்து நடந்த விஷயங்களைத் தெரிவித்தான். அவருக்கும் இந்தத் தகவலை எல்லாம் கேட்டு அடங்கா வியப்பு.

“சார்… உங்களுக்கு அந்த டிரஸ் செயின் எல்லாத்தையும் ஃபோட்டோ எடுத்து வாட்ஸ் அப் பண்றேன் பாருங்க” என, பாலமுருகனும் அவர் கைப்பேசிக்கு வந்தடைந்த குறுந்தகவல் படங்களைப் பார்த்தார்.

அதன் பின்பாக ஒரு நொடி கூட யோசிக்காமல், “அவங்க இரண்டு பேரையும் என் வீட்டுக்கு அழைச்சிட்டு வாங்க” என,

“சார்… மிட் நைட்ல” என்று இழுத்த ஜெயிடம்,

“அந்தப் பொண்ணோட உயிருக்கு ஆபத்திருக்கும் போது அவ என் வீட்டுல இருக்கிறதுதான் சேஃப்” என்று சொல்ல,

“சார்… அந்தப் பொண்ணு அமராவாகவே இருந்தாலும் அவங்க இரண்டு பேரும் கிரிமனல்ஸ்” என்று தயங்கினான் ஜெய்.

“இல்ல… இனிமேயும் அமரா விஷயத்துல ரிஸ்க் எடுக்க முடியாது… அந்தப் பொண்ணை நல்லபடியா ஆல்வின்கிட்ட ஒப்படைக்கிற வரைக்கும் அவ என் பொறுப்பு… நீங்க கூட்டிட்டு வாங்க ஜெய்” என்று திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தார் பாலமுருகன்.

ஜெய் அவர் சொன்னது போல அமியையும் தேவாவையும் அவர்கள் வீட்டிற்கு அழைத்து வந்திருந்தான். பாலமுருகன் அதற்கு முன்பாக மனைவியிடம் விஷயத்தைத் தெரிவிக்க, கீதாவிற்கு அந்தப் பெண்ணைப் பார்க்க வேண்டுமென்று ஆவல் பெருகியது.

அவர்கள் அங்கே வந்த போது விடியற்காலை நான்கு மணி. அமியை நேரில் பார்த்த போது கீதாவிற்கு அப்படியொரு வியப்பு. அந்த கிராஃபிக்ஸ் முகம் அவளுக்கும் அப்படியே பொருந்தியிருந்தது.

அந்தச் சமயத்திலும் வந்தவர்களுக்கு தேநீர் தயாரித்து தந்து அவர் உபசரிக்க பாலமுருகன் அமியிடமும் தேவாவிடமும், “மேலே ஒரு பெட் ரூம் இருக்கு… அதை கிளீன் பண்ணனும்… காலையில கிளீன் பண்ணி தர சொல்றேன்… அதுவரைக்கு இந்த ஆஃபிஸ் ரூம்ல தங்கிக்கோங்க” என்று வீட்டிற்குள் இருந்த அந்தச் சிறிய அலுவலக அறையை காண்பித்தார்.

“என்னங்க… அது ஹரீஷோட ஆஃபிஸ் ரூமாச்சே” என்று இரகசியம் பேசிய மனைவியிடம்,

“அதுக்கு இப்ப என்ன?” என்றவர் முறைத்துவிட்டு அமி தேவாவிடம்,

“இன்னைக்கு ஒரு நாள் இங்கே அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க” என்றார்.

“இன்னா சார்… நீங்க எங்களை உங்க வூட்டுல தங்க வைக்கிறதே பெரிய விசயம்” என்று பேசிய தேவா அவரிடம் நன்றி உரைத்தான்.

ஆனால் அமி நடக்கும் எதையும் நம்ப முடியாத மனநிலையில் இருந்தாள்.

“ரெஸ்ட் எடுங்க” என்று சொல்லி பாலமுருகன் அவர்கள் படுத்து கொள்வதற்கு வேண்டிய தலையணைப் போர்வையைத் தந்துவிட்டுச் சென்றார்.

அந்த அறையில் நிறைய புத்தகங்கள் மேஜை அவற்றின் மீது ஒரு கணினியும் இருந்தது. அதன் மீது நிறைய புத்தகங்கள் கோப்புகள் கலைந்து கிடந்தன. அதனை எல்லாம் பார்த்து கொண்டிருந்த அமி ஒருவித குழப்பமான மனநிலையில் இருந்தாள்.

அங்கிருந்த சோஃபாவில் அமர்ந்து கொண்ட தேவா அமியை இழுத்து, தன்னருகில் அமர வைத்துக் கொண்டான்.

“இதெல்லாம் தேவையா தேவா?” என்றவள் கேட்க,

“உன் அப்பாவைப் பார்க்க போறோம்னு உனக்கு சந்தோஷமா இல்லையா?” என்று கேட்டான்.

“எனக்கு சந்தோஷமாதான் கீது… ஆனா அவரு என்னைப் பார்த்து சந்தோஷப்படுவாரா? ஒரு வேளை நமக்கு இப்படியொரு பொண்ணான்னு நினைச்சிட்டா… உஹும்… எனக்கென்னவோ நாம இங்க இருந்து போயிடலாம்னு தோனுது” என்று சொன்ன அமியைத் தன் தோளில் ஆதரவாகச் சரித்தபடி,

“இன்னாத்துக்குச் சும்மா மனசைப் போட்டுக் குழப்பினுக்கீற… எல்லாம் நல்லதாவே நடக்கும்னு நினை… இப்ப கூட பாரு… கமிஷனர் வூட்டுல வந்து தங்குவோம்னு நினைச்சி பார்த்திருப்போமா… ஆனா நடக்குது இல்ல” என்றான் தேவா.

“எனக்கு அதை நினைச்சா கூட பயமா இருக்கு தேவா… இந்த இடம் இந்த மனுஷங்க” என்றவள் தயக்கமாக இழுக்க,

“எனக்குத் தெரிஞ்சு கமிஷனர் நல்லவருதான்… இல்லாட்டி போனா நம்மல வேறெங்கனாச்சும் தங்க வைக்காம சொந்த வூட்டுலயே தங்க வைப்பாரா?” என்று கேட்க, அமிக்கும் அதுதான் ஆச்சரியமாக இருந்தது.

அவள் விதி அவளை எங்கெங்கோ இழுத்துச் சென்றுவிட்ட நிலையில் மீண்டும் அது ஆரம்பித்த இடத்திற்கே செல்லவிருக்கிறது. நடப்பதை எல்லாம் இப்போதும் கூட அவளால் நம்ப முடியவில்லை.

தாய் தந்தையின் முகம் நினைவில் இல்லாத நிலையில் வசந்தா ஆயாவை மட்டுமே அவள் உறவாகப் பார்த்தாள். அவரும் அவளைச் சொந்த பேத்தியாகதான் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக் கொண்டார்.

அவளைப் படிக்க வைக்க வேண்டும் என்று விருப்பம் கொண்டார். ஆனால் சூழ்நிலை அவர் நினைத்தபடி எல்லாம் நடக்கவில்லை. அவளைப் பற்றிய எந்த விவரங்களும் இல்லாமல் அவளை எப்படி பள்ளியில் சேர்ப்பது என்று ஒன்றும் தெரியவில்லை அவருக்கு.

அதேநேரம் அவளை வேலைக்கு அனுப்பவும் அவருக்கு மனமில்லை. தினமும் இரயில் நிலையத்திற்குச் சென்று பழம் விற்று அவளை ஓரளவு அவளுக்குப் பெரிதாக கஷ்டமில்லாமல் பார்த்து கொண்டார்.

மூன்று வேளை உணவு என்பதே ஆடம்பரம் என்ற நிலையில் வசந்தா முடிந்தளவு அமராவைப் பசி பிணியின்றி கவனித்துக் கொண்டார். அதுதான் அவரால் முடிந்தது. 

பெரும்பாலும் அவளை தேவாவின் துணையுடன்தான் விட்டு செல்வார். அவனுக்கு அம்மா கிடையாது. தந்தை இரண்டாவது மணம் புரிந்து கொண்டார். அவன் சித்தி அவனைக் கொடுமைப்படுத்தவில்லை எனினும் அன்பாகவும் அக்கறையாகவும் பார்த்துக் கொள்ளவில்லை.

அவன் செலவுக்கு வேண்டிய பணங்களை அவனே சம்பாதித்து கொள்ளும் நிலைதான். அவன் தந்தை கூலி வேலைக்குச் செல்வார். மாதத்திற்கு ஒருமுறைதான் வீட்டுப் பக்கமே வருவார். இதனால் அவன் சித்தியும் வீட்டில் இருக்கமாட்டாள். அதனால் சமைப்பது கூட அவன்தான்.

இரவு வேளைகளில் பாட்டி விற்று மீதமிருந்த பழங்களை உண்ணக் கொடுப்பார். இப்படிதான் அவன் வாழ்க்கை ஓடியது. தேவா அருகே உள்ள கடைத்தெருவில் பொம்மைகள் விற்று சம்பாதிப்பான். கடைக்காரனுக்குப் போக மீதம் சில ரூபாய்கள் மட்டுமே அவன் கைக்கு வரும்.

அவனுடன் அமராவையும் அழைத்துச் செல்வான். கிடைக்கும் சில்லறை வருமானத்தில் காய்கறிகள் வாங்கி வந்து அவளுக்கும் சேர்த்து சமைத்துக் கொடுப்பான்.

அவள் கொஞ்சம் வளர்ந்த பின் அவளும் இது போன்ற பொம்மைகள் விற்பது சில்லறைப் பொருட்கள் வியாபாரம் செய்வதென்று தேவாவிற்குத் துணை புரிந்தாள்.

வசந்தா ஆயாவால் ஒரு நிலைக்கு மேல் ஓடி ஓடி உழைக்க முடியவில்லை. அவர் ஓய்ந்து அமர்ந்துவிட அமராவின் ஓட்டம் அங்கிருந்து தொடங்கியது. என்னதான் ஓடி ஓடி உழைத்தாலும் அன்றாடம் சம்பாதிக்கும் பணம் அன்றைய ஜீவனத்திற்கே அவர்களுக்கு சரியாக போய்விடும்.

ஆனால் தேவாவுடன் இருப்பதில் அந்த ஓட்டம் அவளுக்கு அத்தனை சிரமமாக இல்லை. விதி அங்கேதான் அவர்களுக்கு மிகப் பெரிய அதிர்ச்சியைக் கொடுத்தது.

தேவாவின் சித்திக்கு வேறொருவனுடன் தவறான தொடர்பு இருந்தது. அவன் கஞ்சா கள்ளச்சாராயம் போன்ற வியாபாரங்கள் செய்பவன். சரக்குகளை தேவாவின் வீட்டில் அவன் சித்தியின் அனுமதியுடன் பதுக்கி வைத்துவிட்டுப் போவான்.

தேவா வீட்டில் இல்லாத சமயத்தில்தான் இதுபோன்ற பதுக்கல்கள் நடக்கும். அவனுக்கு இதுபற்றி எதுவும் தெரிய வாய்ப்பில்லை. அவன் தந்தை மாதத்திற்கு ஒரு முறையே வீட்டிற்கு வந்து செல்வதால் அவருக்கும் இதெல்லாம் தெரியாது.

இப்படியான நிலையில் தகவல் கிடைத்த காவலர்கள் தேவா வீட்டின் பூட்டை உடைத்து சோதனை செய்தனர். வியாபாரம் முடித்துவிட்டு வீடு திரும்பிய தேவாவைக் கைது செய்தனர். அமி அவனை அழைத்துச் செல்ல வேண்டாமென்று காவலர்களிடம் எவ்வளவோ கெஞ்சினாள். ஆனால் சிறு பெண் அவளால் என்ன செய்ய முடியும்? 

அவனுக்கு உண்மையில் நடப்பது ஒன்றும் புரியவில்லை.

“இந்த வயசுல கஞ்சா, கள்ளச்சாராயம் விற்குறியாடா?” என்று காவலர்கள் அவனை மிரட்டிய போதுதான் அவனுக்கு நடப்பது இன்னதென்று புரிந்தது. தான் எந்த தவறும் செய்யவில்லை என்று கெஞ்சிக் கதறி அழுதான்.

அவன் சித்தி காவல் நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டார்.

“என்னைக் கூட்டினு போயிருங்க சித்தி” என்றவன் கண்ணீர் விட்டு அவர் கையைப் பிடித்து அழ,

“ஏன் டா… இப்படி பண்ண தேவா? உங்க அப்பா வந்தா நான் என்னடா பதில் சொல்லுவேன்” என்று தலையிலடித்து அழுது நடித்தவள் சாமர்த்தியமாக அந்தக் குற்றத்தை அவன் மீதே திருப்பி விட்டாள். அவன் உறைந்து நின்றுவிட்டான்.

“சின்ன பையன் சார்… தெரியாம செஞ்சுட்டான்… அவனை வுட்டுருங்க சார்” என்று முதலை கண்ணீர் வேறு வடித்து மொத்த பழியையும் கொஞ்சமும் மனசாட்சியே இல்லாமல் அவன் மீதே போட்டுவிட்டாள்.

“அவன் இப்படி பண்ணுவான்னு நினைக்கவே இல்ல சார்… நான் என் பிரசவத்துக்காக அம்மா வூட்டுக்குப் போயிருந்தேன் சார்” என்று வாக்குமூலம் வேறு கொடுத்து அவன் வாழ்க்கையைக் குழித் தோண்டிப் புதைத்துவிட்டாள்.

அவள் நிறை மாத கர்ப்பிணியாக இருந்ததால் அவள் பேச்சே எடுப்பட்டது. தேவாவின் அழுகுரல் அங்கிருந்த யாருக்கும் கேட்கவில்லை. இறுதியில் அவன் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டு அவன் சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டான்.

அங்கேதான் தயாவிடம் வேலை செய்யும் சிறுவர்கள் அவனுக்குப் பழக்காமானார்கள்.  தப்பு செய்யாமல் தண்டனை அனுபவிப்பதற்கு அதைச் செய்தால்தான் என்ன? என்ற மனநிலைக்குத் தள்ளப்பட்டான்.

ஒரு வகையில் அமியின் மனநிலையும் அதுதான். தேவா சென்ற பிறகு அவளுக்கு ஒரு கையே உடைந்தது போலானது. ஆயாவும் நாளுக்கு நாள் உடல் நிலை மோசமாகிப் படுத்த படுக்கையாகிவிட்டார்.

வீட்டு வாடகைக்கு, உணவிற்கு, பாட்டியின் மருந்துகள் வாங்க என்று அவளின் பணத்தேவைகள் அதிகரித்தன. பெரிதாக அவளுக்கு வீட்டு வேலைகள் எல்லாம் செய்ய தெரியாததால் அவள் பாட்டியின் பழம் விற்கும் வியாபாரத்தைப் பார்க்கலாம் என்று நினைத்தாள்.

ஆனால் அது ஒன்றும் அத்தனை சுலபமாக இல்லை. கூடைகளைத் தூக்கி சுமக்கவே முடியாத நிலையில் அவளிடம் வியாபாரம் செய்தவர்களை விட அவளை உரசிப் பார்த்தவர்களே நிறைய.

பாட்டி இறக்கும் வரை அவள் இதெல்லாம் சகித்துக் கொண்டு அந்த வேலையை செய்து ஏதோ கொஞ்சம் நஞ்சம் சம்பாதித்து கொண்டிருந்தாள். அதன் பின் யாருக்காக வாழ வேண்டும் எதற்காக வாழ வேண்டுமென்ற பிடிப்புவிட்டுப் போனது.

தனக்காக யாரும் இல்லை என்ற என்ணம் தலையெடுத்த போதுதான் அவள் முதல் முறையாகத் திருடினாள். பணத்தேவைக்காக அல்ல. பெண்களை வெறும் போகப் பொருளாக பார்த்து பொது இடங்களில் ஒழுக்கமற்று நடந்து கொள்ளும் ஆண்களைத் தண்டிக்கும் நோக்கில் திருடினாள்.

பேருந்து இரயில் நிலையத்தில் பெண்களை இடித்துக் கொண்டிருக்கும் ஆண்களின் பர்ஸ்களை அவர்களுக்குத் தெரியாமல் லாவகமாகக் களவாடிவிட்டு வந்துவிடுவாள். அவள் களவாடியது கூட அறியாமல் அவர்கள் தங்கள் அற்ப சந்தோஷங்களே பெரியதென்று இருப்பார்கள்.

எவனெல்லாம் பேருந்தில் இரயிலில் பெண்களை இடிக்கிறானோ அவனுடைய பர்ஸ்களை எல்லாம் உள்ளே புகுந்து களவாடிவிட்டு நழுவிவிடுவாள்.

திருடிய பின் அதற்கான தடயத்தை வைத்துக் கொள்ள மாட்டாள். தன் தேவை போக மிச்ச பணத்தை தன் ஏரியா குழந்தைகளுக்கு புத்தகம் புது துணி வாங்கி செலவழித்து விடுவாள். மேலும் உடல் நிலை சரியில்லாதவர்களுக்கு மருத்துவத்திற்குக் கொடுப்பாள்.

ஒருமுறை அவர்கள் ஏரியாவில் வசிக்கும் சிறுமி, “எங்க அம்மாவுக்கு உடம்பு சரியில்லக்கா… டாக்டர் நிறைய பணம் செலவாகும்னு சொல்லிட்டாரு… எனக்கு அம்மா மட்டும் தான்க்கா… அவங்களும் இல்லாம போயிட்டா” என்று வருத்தப்பட்டு அழ, அமியின் மனமிறங்கியது.

தன் வாழ்கையுடன் அந்தச் சிறு பெண்ணின் வாழ்க்கையைப் பொருத்தி பார்த்தவள் அவளும் தன்னைப் போன்ற அநாதையாகிவிட கூடாது என்று எண்ணி ஒரு பெரிய அரசியல் கட்சி மாநாட்டிற்குள் நுழைந்து அங்கே மதுபோதைகளில் மயங்கி இருந்த ஆண்களின் பர்ஸ்களை ஒட்டுமொத்தமாக களவாடி அவரின் மருத்துவத்திற்குக் கொடுத்துவிட்டாள்.

முதல் முறையாக அந்தத் திருட்டில்தான் தான் செய்து கொண்டிருக்கும் தவற்றையும் உணர்ந்தாள். எந்த வேலையும் கிடைக்காமல் மாநாட்டில் கலந்து கொண்டு அதில் கிடைக்கும் பணத்தில் பசியால் வாடும் தன் குழந்தைகளுக்கு உணவு வாங்க இருந்தவனின் குடும்பத்தின் வயிற்றில் அடித்துவிட்டோம் என்பது பின்னரே தெரிய வந்தது.

அதன் பின் அந்தக் குடும்பத்திற்கு தேவையான பணத்தை அவள் தேடிச் சென்று தந்துவிட்ட போதும் அவளைக் குற்றவுணர்வு துரத்தியது. இத்தனை நாட்கள் தான் செய்த தவறுக்கு தண்டனை அனுபவித்தே தீர வேண்டுமென்று அவளே ஒரு செயினைக் களவாடி பின் அவளே அதனைத் திருப்பி தந்து தன் குற்றத்தை ஒப்பு கொண்டு சிறைக்குச் சென்றாள்.

அந்தச் சிறை வாசத்தில்தான் தேவா வீட்டின் அருகில் வசிக்கும் பெண்ணொருத்தி அவளுக்குத் தோழியானாள். சிறையிலிருந்து வெளியே வந்ததும் விதி மீண்டும் அந்தப் பெண் மூலமாக தேவாவையும் அமியையும் சந்திக்க வைத்தது.

இன்று விதி அவர்களை இங்கே கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது.

ஒரு வேளை இதெல்லாம் வெறும் கனவா? தான் உறங்கிய நிலையில் இருக்கிறோமோ? இப்படியான சிந்தனையில் சட்டென்று அவளை ஏதோவொன்று உலுக்க அவள் எழுந்தமர்ந்து கொண்டாள்.

அப்போது கனவுதானா? என்றவள் சுற்றும் முற்றும் பார்க்க அவள் இன்னும் அதே அலுவலக அறையில்தான் இருந்தாள். தேவாவும் அவளும் ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து உறங்கிவிட்டிருந்தனர்.

எப்போது உறங்கிப் போனோம் என்று யோசனையுடன் முகத்தைத் துடைத்தபடி எழுந்தவளுக்கு இரவு நடந்தது கனவா என்ற குழப்பம் இன்னுமே தீரவில்லை.

ஆனால் தேவாவை நம்பி வந்த பின் இதில் பின்வாங்கவோ பயப்படவோ எதுவுமில்லை என்றவள் மனம் தீர்க்கமாக நம்பியது.

எந்தச் சூழ்நிலையிலும் அவன் உடனிருப்பதே போதும் என்று எண்ணிக் கொண்டவள் அவனைத் திரும்பி பார்த்தாள். அவன் தலையை எடாகுடமாக சாய்த்துப் படுத்திருக்க அவனை சோஃபாவில் நன்றாகச் சாய்த்துப் படுக்க வைத்தாள்.

பின் அவன் முகத்தை வருடி நெற்றியில் முத்தமிட்டாள். சில நிமிடங்கள் அவனையே பார்த்தபடி அமர்ந்திருந்தவள் அந்த அறையை விட்டு வெளியே செல்வதா வேண்டாமா என்று நிறைய குழம்பி விட்டு பின் சரிந்திருந்த கூந்தலைக் கொண்டையிட்டு கொண்டு எழுந்து கதவருகே சென்றாள்.

அவள் கதவை இழுப்பதற்குள் உள்ளே தள்ளப்பட்ட கதவின் வேகத்தில் நெற்றியில் இடிப்பட்டு, “ஆ… அம்மா” என்று தலையைத் தேய்த்துக் கொண்டிருக்க, எதிரே நின்ற அவளைக் கண்டு ஹரீஷ் அதிசயித்தான்.

இரவெல்லாம் அமிர்தாவின் நினைவில் தவித்திருந்தவன் காலையில் எதிரே கிட்டத்தட்ட அதே முகத்தோற்றத்திலான பெண்ணைப் பார்த்து வியப்புறாமல் என்ன செய்வான்?

 

akila.l has reacted to this post.
akila.l

You cannot copy content