You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Amara - Episode 13

Quote

13

சரியாக ஒரு மாதத்திற்கு பிறகு…

ஹரீஷ் இயக்கிய படத்தின் பாடல்கள் வெளியிடுவதற்கான விழா ஏற்பாடுகள் நடந்தேறிக் கொண்டிருந்தன.

அன்று மாலை வேளையில் சென்னையின் பிரமாண்டமான அரங்கம் ஒன்றில் அந்த விழா நடைபெற இருக்க, அதனைக் கண்டுகளிக்க ஹரீஷின் தந்தையும் தாயும் அவர்களுடன்  சரத்தின் மகள் தீபிகாவும் வந்திருந்தாள். பாலமுருகனின் பணி ஓய்வின் போது ஹரீஷ் தீபிகாவின் சந்திப்பு நிகழ்த்தப்பட்டது.

பார்க்க மிகவும் அழகாக இருந்தாள். இருப்பினும் அவன் மனதை அந்த அழகு கொஞ்சமும் ஈர்க்கவில்லை. அவன் நினைப்பில் அமிர்தா மட்டுமே இருந்தாள்.

அன்று போதையிலிருந்து விழித்த ஹரீஷ் தன் அம்மாவின் அழுகைகள் வருத்தங்கள் பார்த்து குடிப்பதில்லை என்று உறுதி தந்தானே ஒழிய அவளை மறக்க முடியவில்லை.

அந்த ஒரு மாதமாக பட வேலைகளில் இரவும் பகலும் அவனுக்கு ஓடிவிட்டது. இதற்கிடையில் தீபிகாவின் அறிமுகம் தவிர்க்க முடியாமல் நடந்தேற, அவன் விருப்பமின்மையைச் சொல்ல முடியாத நிலையில் சிக்கிக் கொண்டான்.

“கொஞ்ச நாள் டைம் வேணும்” என்று பூசி மொழுகி வைத்தான். ஆனால் தீபிகா சினிமா உலகில் ஆர்வமுடையவள் என்பதால் ஹரீஷின் சமாளிப்பை அவள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அவனிடம் நெருங்கிப் பழக அவள் முயன்று கொண்டிருந்தாள். அவளைத் தவிர்க்கவும் முடியாமல் தன் விருப்பமின்மையைச் சொல்லவும் முடியாமல் அவன் தவித்துக் கொண்டிருந்தான்.

அவளோ அவன் விலகலைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல், “என்னையும் ஃபங்கஷனுக்கு இன்வைட் பண்ண மாட்டீங்களா?” என்று கேட்டு எப்படியோ விழாவிற்கு வரும் அனுமதி சீட்டைப் பெற்றுக் கொண்டாள்.

அதன் காரணமாகவே அவளும் அங்கே வந்திருந்தாள். அவர்களை வரவேற்று அமர வைத்தவன் தீபிகாவைப் பார்த்து சங்கடமாக உணர்ந்தான். இருப்பினும் அதனை முகத்தில் காட்டிக் கொள்ளவில்லை.

விழா ஏற்பாட்டின் மும்முரத்தில் அவளிடம் சில உபசரிப்பான வார்த்தைகளைப் பேசிவிட்டு விலகி வந்துவிட்டான். அதன் பின் சில நிமிடங்களில் விழா தொடங்கிவிட்டது.

அப்போது ஜெயா தன் கைப்பேசி எடுத்து பேசிவிட்டு, “அமிர்தா வேர் ஆர் யூ? வந்துட்டியா… உள்ளே வா” என்று இரகசியமாகப் பேசி கொண்டிருக்க, ஹரீஷின் இதயம் வேகமாகத் துடித்தது.

அமிர்தா வந்திருக்கிறாளா? அனிச்சையாக அவன் விழிகள் பின்னோடு திரும்பி நோக்கின. அவளைத் தேடின.

சில நிமிடத்தில் கருப்பு நிற புடவையில் தேடலாக விழிகளைச் சுழற்றிக் கொண்டு உள்நுழைந்தாள் அவனின் தேவதை. இயல்பான ஒப்பனைகளும் எளிமையான உடையலங்காரத்தில் வந்திருந்த போதும் அவன் கண்களுக்கு அவள் தேவதையாகதான் தெரிந்தாள்.

அந்த நொடி அவளைத் தவிர அரங்கம் முழுக்க உள்ள அனைத்தும் அவனுக்கு மங்கிவிட்டது. திருமணமான பெண்ணை இப்படி இரசிக்கிறோமே என்று அவன் மனம் இடித்துரைத்தாலும் விழிகள் அவன் பேச்சைக் கேட்கவில்லை.

ஜெயா உடனே தன்னுடைய காரியதரிசியிடம் சொல்லி அவளுக்கும் ஒரு இருக்கையை ஏற்பாடு செய்து அமர வைத்துவிட்டாள். அதுவும் அவன் அருகிலேயே.

அமிர்தா அவனைப் பார்த்து புன்னகையாகத் தலையசைத்த போதும் ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

ஏன்? இந்த ஒரு மாதத்தில் அவனும் அவளைத் தொடர்பு கொள்ளவில்லை. அவளும் அவனைத் தொடர்பு கொள்ளவில்லை.

இப்போதும் கூட அவள் தன்னுடைய அருகாமையை விரும்பாதது போலவே அவனுக்குத் தோன்றியது. தன் புறம் திரும்ப கூட அவள் மறுக்கிறாள்.

அவனுக்குப் புரியவில்லை. அவளைத் தான் தவிர்ப்பதில் ஒரு காரணம் இருக்கிறது. ஆனால் தன்னிடம் நட்பாகப் பழகிய அவள் எதற்கு தன்னை விட்டு விலக வேண்டும். தவிர்க்க வேண்டும். அப்படியெனில் அவளும் தன்னைப் போல காதலை உணர்ந்திருப்பாளோ?

இருப்பினும் திருமணம் ஆகிவிட்ட காரணத்தால் அந்த உணர்வை அவள் மறைக்க முற்படுகிறாளோ?

இபப்டியாக அவனுக்குள் ஆயிரமாயிரம் எண்ணவோட்டங்கள். தற்சமயம் அவள் மனதில் என்ன ஓடி கொண்டிருக்கும் என்ற கேள்விகள்.

இந்நிலையில் அவனைப் பேசுவதற்கு அழைக்க, அவன் படபடப்புடன் மேடையேறிச் சென்றான். என்னவெல்லாம் பேச வேண்டுமென்று முன்னமே அவன் தயார் நிலையில்தான் வந்திருந்தான். ஆனால் அவளைப் பார்த்த பின் ஏற்பட்ட ஹார்மோன்களின் ஆர்பரிப்பில் மனம் அல்லாடியது.

மைக் முன்பு நின்றவன் அமிர்தாவைப் பார்த்துவிட கூடாது என்று எண்ணிய போதும் அது அவனுக்குச் சாத்தியப்படவில்லை. அவள் அவன் பார்வைக்கு நேர் எதிராகவே அமர்ந்திருந்தாள். அவன் பார்வையும் அவளிடம்தான் சென்று நின்றது.

சில நொடிகள் வார்த்தைகள் வராமல் திண்டாடியவன் மூச்சை இழுத்து விட்டுக் கொண்டு பேச ஆரம்பித்தான்.

“காதல் ரொம்பவும் அற்புதமான உணர்வு” என்று எடுத்த எடுப்பிலேயே பேச, அங்கிருந்தவர்கள் எல்லாம் திகைப்புடன் அவனைப் பார்த்தனர்.

அவன் மேலும், “நான் இந்தப் படத்தை இயக்கல… காதலிச்சேன்… ஒவ்வொரு காட்சியையும் காதலிச்சிருக்கேன்… அந்தக் காதலை நீங்க படம் பார்க்கும் போது உணர்வீங்க… அப்படி நீங்க உணர்ந்திட்டா… அதுதான் இந்தப் படத்தோட சக்ஸஸ்… என்னோட சக்ஸஸ்” என்று இஷ்டத்திற்கு உளறிக் கொட்டிக் கொண்டிருந்தான்.

அவன் வரிக்கு வரி படத்தைப் பற்றிப் பேசாமல் காதலைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தான். அதையும் பின்னே அமர்ந்திருந்த இரசிகர் கூட்டம் கைத்தட்டி ஆரவாரித்துக் கொண்டிருந்தது.

அவன் பேச்சை முடித்து இறங்கும் வரை அமிர்தா தவிப்புடன் நெளிந்து கொண்டிருந்தாள். அவன் ஒவ்வொரு வார்த்தையும் அவளைப் பார்த்து மட்டுமே பேசிக் கொண்டிருந்தான்.

அவன் பேசி முடித்து மேடையை விட்டு இறங்கி இருக்கைக்கு வந்ததும் ஜெயா அவனிடம், “ஏன் ஹரீஷ்? நம்ம எடுத்தது த்ரில்லர் மூவிதானே… நீ இப்போ எதுக்குக் காதலைப் பத்தி அளந்துவிட்டுட்டு வந்திருக்க?” என்று சந்தேகமாகக் கேட்க,

“த்ரில்லராக இருந்தாலும் இந்தக் கதையோட பேஸ் நாயகன் நாயகியோட உணர்வுபூர்வமான காதல்தானே” என்றான்.

“ஆனா நீ நாயகன் நாயகி பத்தி ஒரு வார்த்தை கூட பேசலயே”

“தனித்தனியா பேசல… ஒட்டுமொத்தமா பேசிட்டேன்” ஹரீஷ் சமாளிப்பதைக் கேட்டு அமிர்தா வாயை மூடிச் சிரித்துக் கொண்டாள்.

“நீ என்ன பேசனன்னு எனக்கு இப்பவும் சத்தியமா புரியல” என்று ஜெயா கடுப்புடன் சொல்ல,

“புரிய வேண்டியவங்களுக்கு… புரிஞ்சிருக்கும்” என்றவன் பார்வை அமிர்தாவைத் தொட்டு மீண்டது.

“புரிய வேண்டியவங்கன்னு… யாரைச் சொல்ற” என்று ஜெயா விடாமல் குறுக்கு கேள்வி கேட்க,

“நான் ஆடியன்ஸை சொல்றேன்” என்றவன் அதற்கு மேல் சமாளிக்க முடியாமல் சாய்ந்து அமர்ந்து கொண்டான்.

அதன் பின் படத்தின் பாடல்கள் வெளியிடப்பட்டன. சீடி போன்ற வடிவத்தில் வடிவமைக்கப்பட்ட அந்த அட்டையின் மேலுறை திறக்கப்பட, அதில் நாயகன் நாயகி முத்தக்காட்சியின் படம் இடம்பெற்றிருந்தது. அதனைக் கண்ட மாத்திரத்தில் ஹரீஷ் மற்றும் அமிர்தாவின் விழிகள் அனிச்சையாக சந்தித்துக் கொண்டன.

அடுத்த கணமே சுதாரித்து அவள் பார்வையைத் திருப்பி கொண்டுவிட்டாள்.

ஹரீஷிற்கு என்ன நிகழ்கிறது என்றே புரியவில்லை. அவளுக்கு தன் மீது காதல் உள்ளதோ? அப்படியிருந்தாலும் கூட அதனை எங்கனம் ஏற்க முடியும்?

விழா முடிந்ததும் படப்பிடிப்புக் குழுவினர்கள் தவிர மற்ற எல்லோரும் புறப்பட்டுவிட்டனர். ஹரீஷ் ஜெயாவிடம் தம் பெற்றோர்களை அறிமுகம் செய்து வைத்தவன், “இவங்க பேர் தீபிகா” என்று மொட்டையாகச் சொல்ல,

அவளே முந்தி கொண்டு, “நான் ஹரீஷோட ஃபியான்ஸி” என்று வார்த்தையைச் சேர்த்துக் கொண்டாள்.

‘காட்… டேம் இட்’ என்று உள்ளுர அவன் கடுப்பாக, ஜெயாவோ ஆச்சரியத்துடன், “சொல்லவே இல்ல ஹரீஷ்” என்று கேட்டாள்.

தந்தை தாய் முன்பாக என்ன சொல்வது என்று தவிப்பில் நின்றவன் அப்போதே அமிர்தாவின் விழிகள் நேரடியாக அவனைத் தாக்குவதைக் கவனித்தான். அவள் கண்களில் தகிக்கும் உஷ்ணம் அவனைக் குழப்பமுற செய்தது.

‘இவளுக்குக் கல்யாணமாகிடுச்சு… இதுல நான் யாரை கல்யாணம் பண்ணா இவளுக்கு என்ன? எதுக்கு இப்படி கண்ணாலேயே எரிக்கிற மாதிரி பார்க்குறா?’ என்று யோசிக்கும் போது,

“நாங்க கிளம்பறோம் ஹரீஷ்… லேட்டாகிடுச்சு… தீபிகாவை வேற டிராப் பண்ணிட்டு போகணும்” என்று பாலமுருகன் சொல்ல அவர்களை வழியனுப்பி விட்டுத் திரும்பினான்.

காரில் சென்ற பாலமுருகன் யோசனையுடன், “அந்த கருப்பு கலர் புடவை கட்டியிருந்த பொண்ணு… அப்படியே அமி மாதிரி இல்ல” என்று கூற,

“ஆமா…அந்த மாதிரி ஜாடை கொஞ்சம் இருந்துச்சு” என்று கீதா இயல்பாக உரைத்தார்.

“எனக்கென்னவோ அப்படி தோணல… அப்படியே அமியைப் பார்த்த மாதிரி” என்று பாலமுருகன்  தெரிவிக்க,

“உங்க பார்வைக்கு அப்படி தெரியுதா இருக்கும்… ப்ச் அதை விடுங்க… ஃபங்கஷன் வேற முடிய லேட்டாகிடுச்சு… டயர்டா இருக்கு… சீக்கிரம் வீட்டுக்குப் போகணும்” என்று கீதா அத்துடன் அந்தப் பேச்சை முடித்துவிட்டார். குறிப்பாக அமிர்தாவின் பேச்சைத் தவிர்க்க முற்பட்டார்.

அவளைப் பார்த்ததும் அவருக்கும்கூட அச்சு அசல் அமியைப் பார்த்த உணர்வுதான். ஆனால் ஹரீஷ் அவளைக் காதலித்ததைப் பற்றி கணவருக்குத் தெரிந்துவிட கூடாது என்ற பயம் ஒரு புறமென்றால் அவளை மீண்டும் பார்த்துவிட்டு ஹரீஷ் அவள் பின்னோடு சென்றுவிடுவானோ என்று உள்ளுர படபடப்பு வேறு.

அதுவும் அவன் மேடையில் நின்று கொண்டு அமிர்தாவைப் பார்த்தபடி காதல் கலாட்சேபம் செய்ததெல்லாம் அவரின் பதட்டத்தைத் தாறுமாறாக ஏற்றியிருந்தது.

ஒரு வகையில் ஹரீஷின் மனமும் கூட அத்தகைய நிலைப்பாடில்தான் இருந்தது. அவளுக்குத் திருமணமாகிவிட்டது என்பதை அந்த சில நொடிகள் அவன் மறந்தே போய் விட்டான்.

காதல் கண்களை, மூளையை எல்லாவற்றையும் மழுங்கடிக்கும் போதை. அந்தப் போதை உணர்வை அவனால் கட்டுக்குள் கொண்டு வரவே முடியவில்லை. அவளுடன் பேசியே தீர வேண்டுமென்று அவன் உள்ளம் துடித்தது.

விழா முடிந்த கையோடு அமிர்தாவைத் தேடிக் கொண்டு போக, அங்கே ஜெயா காரில் சாய்ந்து கொண்டு தன் கைப்பேசியில் விரல்களால் அலைந்தபடி எதையோ பார்த்துக் கொண்டிருந்தாள்.

 அவள் அருகே சென்ற ஹரீஷின் விழிகள் சுற்றும் முற்றும் அமிர்தாவைத் தேடிக் கொண்டிருந்தன.

ஜெயா தலையை நிமிர்ந்து, “யாரைத் தேடுற ஹரீஷ்?” என்று கேட்கவும்,

“யாரையும் இல்ல… சும்மாதான்… கிளம்பணும்…” என்று சமாளிக்க,

“ம்ம்ம்… ஃபங்க்ஷன் நல்லா போச்சு இல்ல” என்று ஜெயா சொல்ல,

“யா… இட்ஸ் கிரேட்… நான் இவ்வளவு கிரண்டா எதிர்பார்க்கல” என்றவன் மேலும், “தேங்க்ஸ்… எல்லாம் உங்களாலதான்” என்று நன்றி தெரிவித்தான்.

“தேங்க்ஸ் எதுக்கு ஹரீஷ்… இந்த படம் நல்லா போச்சுன்னா நம்ம இரண்டு பேருக்கும் இலாபம்தானே” என்றவள் சொல்ல,

“ம்ம்ம்” என்று ஆமோதித்தவன், “ஓகே நான் கிளம்புறேன்… பை” என்று அவளிடம் விடைபெற்றுவிட்டு திரும்பி தன் கார் நோக்கி நடந்தான். ஆனால் மீண்டும் என்ன எண்ணினானோ?

திரும்பி வந்து, “அமிர்தா எங்கே?” என்று கேட்க,

“கிளம்பிட்டாளே… அவளுக்கு இன்னும் ஒன் ஹவர்ல ஃப்ளைட்” என்றவள் சொன்னதும் அவன் முகத்தில் அப்படியொரு ஏமாற்றம். அதனைக் கூர்ந்து கவனித்த ஜெயா லேசாக அவன் கண்கள் கலங்கிவிட்டதையும் பார்த்தாள்.

“நீ அமிர்தாவை லவ் பண்றியா?” என்று ஜெயா பட்டென்று கேட்க அவன் அமைதியாகிவிட்டான். அவன் மறுக்கவும் இல்லை. ஏற்கவும் இல்லை.

“ஓ மை காட்… அப்போ உன் ஃபியான்ஸி?” என்று ஜெயா கேட்டதுதான் தாமதம்.

“ஷி இஸ் நாட் மை ஃபியான்ஸி… வீட்டுல பேசி இருக்காங்க… பட் எனக்குக் கொஞ்சம் கூட விருப்பம் இல்ல” என்றவன் சொல்ல ஜெயா யோசனையுடன்,

“ஸ்டில் நீ அமிர்தாவைதான் லவ் பண்றியா…அப்போ நீ ஸ்டேஜ் ஏறி தத்து பித்துன்னு உளறனுது எல்லாம் அமிர்தாவைப் பார்த்துதானா?” என்று கேட்கவும் அவன் முகம் குன்றி போனது. கண்களில் கண்ணீர் பெருகிவிட்டது.

“என் வாழ்க்கையில நான் நினைச்சதெல்லாம் நடந்திருக்கு… அதுவும் ரொம்ப கஷ்டபடாமலே… அப்ப எல்லாம் நான்தான் லக்கியஸ்ட் பெர்ஸன்னு நினைப்பேன்… ஆனா இல்லை.”

”நான்தான் உண்மையிலேயே அன் லக்கியஸ்ட் பெர்ஸன்னு இப்ப தோனுது… அமிர்தா என் வாழ்க்கையில இல்லன்னு நினைக்கும் போதே… ஏன் டா வாழ்றோம்னு இருக்கு… இனிமே என் வாழ்க்கைல எத்தனை பெரிய வெற்றி வந்தாலும் இந்த ஒரு தோல்வி என்னைக் குத்திக்கிட்டே இருக்கும்.”

”பட் ஐ டிஸர்வ் திஸ்… நான் இத்தனை நாளா காதலை ரொம்ப ஈஸியா எடுத்துக்கிட்டேன்… அதுக்காக இந்தத் தண்டனை எனக்குத் தேவைதான்” என்றவன் வேதனையுடன் சொல்லிவிட்டுக் கைக்குட்டை எடுத்து தன் முகத்தைத் துடைத்துக் கொண்டான்.

யாரிடமாவது தன் மனபாரத்தைக் கொட்டிவிட வேண்டும் என்ற பதட்டத்தில்தான் ஜெயாவிடம் அவன் எல்லாவற்றையும் சொல்லிவிட்டான். அவன் பேசியதை எல்லாம் வியப்படங்காமல் கேட்டு கொண்டிருந்தவள்,

“நீ அமிர்தா விஷயத்துல இவ்வளவு சீரியஸா இருக்கியா ஹரீஷ்?” என்று வினவினாள்.

“என்ன இருந்து என்ன… அமிர்தாவோட லைஃப்ல நான் இல்லைதானே” என்றவன் வருத்தத்துடன் முடிக்க,

“ஹரீஷ்… ஐம் சாரி… ஒரு பெரிய மிஸ்டேக் நடந்து போச்சு” என்றாள்.

“என்ன மிஸ்டேக்?” என்றவன் புரியாமல் கேட்க,

“ஆக்சுவலி அமிர்தாவுக்கு கல்யாணம் எல்லாம் ஆகல… அவளுக்குக் குழந்தையும் இல்ல… மைக் எங்க காலேஜ் ஃப்ரண்ட்… ஜென்னி அவனோட பொண்ணு” என,

“வாட்?” அவன் அதிர்ந்துவிட்டான்.

“இவ்வளவு வருஷத்துல அமிர்தா யார்கிட்டயுமே இம்பிரஸ் ஆகல… நாங்கெல்லாம் ஜோடியா சுத்தினா கூட அவ எப்பவுமே சிங்கள் நெவர் மிங்கிள்னுதான் சுத்திக்கிட்டு இருப்பா.”

”ஆனா அவ எப்படி உன்கிட்ட இம்பிரஸானான்னு அவளுக்கே தெரியல… ஒரு நாள் என்கிட்ட உன்னை லவ் பண்றதைப் பத்தி சொன்னா… அதேநேரம் உன்னை மாதிரி ஒருத்தரைக் கல்யாணம் பண்ணிகிட்டா… நீ ஈஸியா அவளை ப்ரேக் அப் பண்ணிட்டு போயிடுவியோன்னு அவளுக்கு ஒரு பயம். எனக்கும் அது சரின்னு பட்டுச்சு…” என்று ஜெயா சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவன் முகம் தீவிரமாக மாறியது. 

“ஓ… அதனாலதான்நான் அன்னைக்கு அவகிட்ட பிரபோஸ் பண்ணுவேன்னு தெரிஞ்சே… அவ இப்படியொரு டிராமா பண்ணாளா?” என்று கேட்க,

“அவாயிட் பண்ண இல்ல ஹரீஷ்… உன்னை டெஸ்ட் பண்ண”  என்றதும் அவன் புரியாமல், “டெஸ்ட் பண்ணவா?” என்று கேட்டான்.

“அதாவது… அமிர்தா உனக்கு எப்பவுமே இல்லன்னு தெரிஞ்சும் கூட நீ அவளையே நினைச்சிட்டு இருந்தன்னா… உன் லவ் ஸ்டராங்கானதுன்னு ப்ரூவாயிடும்னு நினைச்சா… அப்புறமா உன்கிட்ட சாரி கேட்டு ப்ரபோஸ் பண்ணலாம்னு... ஆக்சுவலி அவ இன்னைக்கு விழாவுக்கு வந்ததே அதுக்காகத்தான்… ஆனா அந்தப் பொண்ணு தன்னை உன்னோட ஃபியான்ஸின்னு சொன்னதைக் கேட்டு அவ மூட் அப்சட்டாகி இப்பவே நான் கிளம்புறேன்னு சொல்லி கிளம்பிட்டா” என்று ஜெயா முடிக்க, அவன் முகத்தில் அப்படியொரு எரிச்சல்.

“ஷிட்” என்று தலையைப் பிடித்துக் கொண்டவன் அடுத்த கணமே ஜெயாவை நிமிர்ந்து பார்த்து,

“சரி… எத்தனை மணிக்கு ஃப்ளைட்” என்று கேட்க,

“இப்பதான் மெசேஜ் பண்ணா… அவளுக்கு டிக்கெட் கிடைச்சிடுச்சாம்… இன்னும் அரை மணி நேரத்துல கிளம்பிடுவா… நீ இப்போ கிளம்புனாலும் வேஸ்ட்தான்” என்றாள்.

“ஏர்போர்ட்ல மீட் பண்ண முடியலன்னா என்ன? நான் இலண்டன்ல போய் அவளை மீட் பண்றேன்… பிரபோஸ் பண்றேன்” என்றவன் துடிப்புடன் சொல்ல, அவன் கண்களில் மீண்டும் அந்தப் பழைய உற்சாகமும் துறுதுறுப்பும் மீண்டிருந்தது.

“நீ அவ்வளவு தூரமெல்லாம் போக வேண்டாம் ஹரீஷ்… அவ மும்பைலதான் இருக்கா”

“மும்பைலயா?”

“ம்ம்ம்… கான்ஸர் ட்ரீட்மெண்ட்ல இருந்த அவங்க அம்மா லாஸ்ட் மந்த் இறந்துட்டாங்க… அவங்க குடும்ப சொத்து வீடு, கார் எல்லாம் மும்பைல இருக்கு… அதெல்லாம் லீகலா ஒரு ஆர்பனேஜூக்கு மாத்திறதுக்காக வந்திருக்கா…”

”போன வாரம்தான் வந்தா…  பிரோஸிஜர்ஸ் எல்லாம் முடிச்சிட்டுதான் கிளம்புவா” என்று ஜெயா தெரிவிக்க,

“அமிர்தாவுக்கு அவங்க அம்மா மட்டும்தான் இல்ல” என்று கவலையுடன் கேட்டான் ஹரீஷ்.

“ம்ம்ம்… எப்படியாவது அவங்களைக் குணப்படுத்திடணும்னு ரொம்ப கஷ்டப்பட்டா… ப்ச்… அவங்களுக்கு லங் கேன்ஸர் லாஸ்ட் ஸ்டேஜ்… இப்போ அமிர்தாவுக்கு யாருமே இல்ல”

“நான் இருக்கேன்… எப்பவும் அவ கூட இருப்பேன்” என்று தீர்க்கமாக ஹரீஷ் சொல்ல ஜெயா புன்னகைத்துவிட்டு,

“நீ கண்டிப்பா லக்கியஸ்ட் பெர்ஸன் ஹரீஷ்… ஆல் தி பெஸ்ட்” என்று அவனுக்குக் கைக் கொடுத்து வாழ்த்தி அனுப்பினாள் ஜெயா.

akila.l has reacted to this post.
akila.l

You cannot copy content