You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Amara - Episode 24

Quote

24

கடற்கரை மணலில் கால்கள் புதைய நின்றிருந்த தேவாவின் விழிகள் இலக்கில்லா தூரத்தை வெறித்துக் கொண்டிருந்த நிலையிலும் அவன் உதடுகள் தாமாகவே வார்த்தைகளை உதிர்த்தன.

துறுதுறு விழிகளுடன் சிறு வயதில் சந்தித்த அந்தச் சின்ன பெண்ணின் அழகை வர்ணித்துக் கொண்டிருந்தான்.

“அவ பேரு அமின்னு சொன்னா” என்றவன் அந்தக் காட்சிகளைத் தன் மனக்கண்ணில் கொண்டு வந்து நிறுத்தியிருந்தான்.

தன் பெற்றோரைத் தொலைத்து விட்ட அவளுடன் தன் வாழ்க்கை பயணம் எங்கே தொடங்கியது. அவர்களின் நட்பு எப்போது காதலாக கனிந்தது. எப்படி திருமண பந்தத்தில் இணைந்தது என்றவன் விவரணையாகச் சொல்லிக் கொண்டிருக்க அமிர்தா பூரிப்புடன் கேட்டுக் கொண்டிருந்தாள்.

“இப்போ என்னைய வுட்டு அவ எங்கேயோ கண் காண தூரத்துலகீறா… ஆனா எனக்கு தெரியும்… என் அமியால என்னை வுட்டு இருக்க முடியாது… ஏன்? என்னை நினைக்காம கூட அவளால… உஹும் இருக்க முடியாது… எங்களுக்குள்ள எம்மா பெரிய சண்டை பிரச்சனை வந்து போதும் கூட என்னைய வுட்டு போனோம்னு அவ நினைச்சதே இல்ல” என்றவன் சொல்லும் போதே அவன் விழிகள் நீரூற்றாக மாறிவிட,

“தேவா கம்மான்” என்றவன் தோள்களில் தடவி ஆறுதல்படுத்தியவள்,

“இது ஒரு சின்ன பிரிவு… நிச்சயம் அமியும் நீங்களும் சேர்ந்திருவீங்க” என்று கூற,

அவன் தன் விழிகளைத் துடைத்துக் கொண்டே, “எனக்கு தெரியும் மேடம்… என் அமியோட நான் கண்டிப்பா சேர்ந்திருவேன்… எனக்கு நம்பிக்கை கீது… ஆனா இந்த நிமிசம் அவ என்ன மாரியான கஸ்டத்தை அனுபவக்கிறாளோன்னு யோசிக்கும் போதுதான் மனசெல்லாம் பதறுது…”

”அவளுக்கு எதுவும் ஆயிட கூடாதுன்னு மனசு கிடந்த தவிக்குது… அதுவும் நேத்துல இருந்த என் கண்ணெல்லாம் கலங்கினே கீது… அவளுக்கு என்னவோன்னு கவலையா கீது” என்றவன் தன் உணர்வுகளை விவரிக்க,

“நிச்சயமா நீ பயப்படுற மாதிரி ஒன்னு இருக்காது தேவா… நாம நல்லதையே நினைப்போமே!

அதுவுமில்லாம நீ சொன்ன கதையை வைச்சு பார்க்கும் போது அமி நிச்சயமா சாதாரண பொண்ணு இல்ல… அவ தைரியமான பொண்ணு… போராட்ட குணமுடையவ… இப்படியான பெண்கள் எப்பவுமே அவங்க தைரியத்தை அவ்வளவு சீக்கிரத்துல விட்டு கொடுத்திர மாட்டாங்க.”

”எப்படிப்பட்ட பிரச்சனையா இருந்தாலும் அதுல இருந்து வெளியே வர உறுதியோட போராடுவாங்க” என்று அமிர்தா அழுத்தம் திருத்தமாகக் கூற தேவா மௌனமாக தலையசைத்தான். அந்த நம்பிக்கை அவனுக்குள்ளும் இருக்கிறது. அதேநேரம் காதல் என்ற உணர்வு அவனை நொடிக்கு நொடி பலவீனப்படுத்திக் கொண்டிருந்தது.

மீண்டும் கடலை வெறித்தான்.

ஒவ்வொரு முறையும் கரையைத் தொட்டுவிட்டுப் பின்வாங்கும் அலைகளின் போராட்டம் போலதான் வாழ்க்கை. திரும்ப திரும்ப ஒரே கூட்டுக்குள் சுற்றும் மனித வாழ்வின் தேடல் முடிவு பெறுவதே இல்லை.

முடிவில்லாமல் அலைகளைப் போல ஏதோ ஒரு தேடலை நோக்கி மனிதன் போராடிக் கொண்டே இருக்கிறான். அத்தகைய தேடலும் போராட்டமும்தான் அத்தனை வலி வேதனைகளிலும் அமராவை எழ வைத்தது. ஆல்வினைத் தாக்கும் தைரியத்தைக் கொடுத்தது.

தன் நம்பிக்கையை இழந்துவிட்ட போதும் மீண்டும் மீண்டும் தோற்றுப் பின்வாங்கினாலும் கரையை நோக்கி ஆசையாக ஓடி வரும் அலைகளைப் போல அவள் தன் முயற்சியை மேற்கொண்டாள்.

எப்படியாவது இந்தச் சிறையிலிருந்து தப்பிவிட மாட்டோமா என்ற சிறிய நப்பாசையால் கழிவறை மேலிருந்த ஜன்னல்களின் கண்ணாடி துண்டுகளை உடைத்து ஆல்வின் கழுத்தில் சொருகும் வீரியத்தைப் பெற்றாள்.

ஆனால் அதே வீரியத்துடன் தன் கனவை நோக்கிப் பயணிக்கும் ஆல்வினின் பலமும் சாதாரணமானது அல்ல. எதிர்பாராத அந்தத் தாக்குதலில் அதிர்ந்தவன் அடுத்த வினாடியே சுதாரித்துக் கொண்டுவிட்டான்.

தன் கழுத்தை நெருக்கிய அவள் கரத்துடன் இணைக்கப்பட்டிருந்த வென்ஃப்லானை அழுத்திப் பிடிக்க, “ஆஆஆஆஆ… அம்மா” என்று அவள் வலியால் துடித்த ஒரு கணம் போதுமானதாக இருந்தது ஆல்வினுக்கு.

“ப்ளடி பிட்ச்” என்று சீறியபடி அந்தக் கண்ணாடி துண்டைப் பறித்துவிட்டு அவளை இழுத்துத் தள்ள, அவள் துவண்டு படுக்கையில் விழுந்தாள்.

கண்ணாடித் துண்டைப் பிடித்திருந்த அவள் கரத்தில் குருதி ஒழுகவும் அதனைப் பார்த்த ஆல்வின் உடனடியாக அங்கிருந்து நகர்ந்து முதல் உதவி பெட்டியுடன் திரும்பி வந்தான்.

அவன் அடிப்பட்ட அவள் கரத்தைப் பற்றிக் காயத்தை ஆராய்ந்து சுத்தம் செய்து மருந்து கட்டிவிட முனைய அவள் தன் கரத்தை இழுத்துக் கொண்டு,

“உன் மருந்தும் வேணாம் ஒன்னியும் வேணாம்… பேசாம என்னைக் கொன்னுடு… நான் நிம்மதியா செத்துப் போறேன்” என்றவள் விரக்தியுடன் கூற அவனின் உதடுகள் ஏளனமாக வளைந்தன. 

“நெவர்” என்று கூறிவிட்டு அவள் கரத்தை இழுத்துப் பிடித்துக் கட்டு போட்டுவிட்டு எழுந்து கொண்டவன், கழிவறையின் மேலிருந்து ஜன்னல் உடைப்பட்டு கண்ணாடி துண்டுகள் தரையில் சிதறியிருப்பதைப் பார்த்துவிட்டு திரும்பி வந்து அவளை முறைத்தான்.

அவன் கண்களில் அப்படியொரு வெறியும் கோபமும் பிரதிபலிக்க லேசாக அவள் மனதை அச்சம் பற்றிக் கொண்டது.

ஆனால் அவன் அமைதியாக அந்தக் கண்ணாடித் துண்டுகளை முழுவதுமாக சுத்தம் செய்து எடுத்துக் கொண்டு வெளியேறிவிட அவள் மூச்சை இழுத்துவிட்டுக் கொண்டாள்.

ஆனால் மீண்டும் அவள் எதிர்பாராமல் திரும்பி வந்த ஆல்வின் ஒரு நீண்ட கயிற்றுடன் வர அவள் பதறிப் போனாள்.

“வேணாம்… யோவ் வேணாம்யா… டேய்… என்னை வுடுறா” என்றவள் மறுப்பதை ஒரு பொருட்டாகவும் மதியாமல் அவள் கரங்களையும் கால்களையும் பிணைத்து இறுக்கமாக அந்தப் படுக்கை கம்பிகளுடன் கட்டிவிட,

“இதுக்கு என்னை நீ கொன்னே போட்டிரலாம்” என்றவள் சத்தமிட்டபடி தன் கை கால்களை அசைக்கப் போராடி பார்க்க, அவளால் எதுவுமே செய்ய முடியவில்லை.

“இனிமே இப்படி பண்ண மாட்டேன்யா… என்னை வுட்டுருயா… வலிக்குதுயா” என்றவள் கெஞ்சிக் கதற ஆல்வின் கொஞ்சமும் அவள் பேசுவதை காதில் வாங்காமல் வெளியேறிவிட, அவளுக்குப் படப்படபானது.

“யோவ்வ்வ்… என்னால முடியலையா… கட்டை அவுத்துவுடுய்யா… வலிக்குது” என்றவள் சத்தமாகக் குரல் கொடுக்க, அவள் குரலின் ஒலி அவள் காதுகளிலேயே பயங்கரமாக எதிரொலித்தது.

ஒரு நிலைக்கு மேல் கத்த கூட தெம்பில்லாமல் அவள் ஓய்ந்து போக, மீண்டும் கதவு திறக்கும் ஓசைக் கேட்டது.

“ப்ளீஸ்யா… நான் இனிமே இந்த மாரி பண்ண மாட்டேன்… கட்டை அவுத்து வுடுய்யா” என்றவள் தவிப்புடன் கெஞ்ச ஆல்வின் எகத்தாளமாக ஒரு பார்வை பார்த்தான். அவன் கையில் ஏதோ ஒரு மருந்து குப்பி இருந்தது. அதனைக் கொண்டு வந்து மேஜை மீது வைத்துவிட்டுத் தெனாவட்டாக சிகரட்டைப் பற்ற வைத்து வாயில் வைத்துக் கொண்டு,

“போன போகுதுன்னு உன்னை நடமாட விட்டா… என்னையே கொல்ல பார்ப்பியாடி நீ” என்று கேட்க அச்சத்தில் அவள் முகம் வெளிறிப் போனது.

அந்தக் கண்களில் மின்னிய குரோத உணர்வு கண்டு பீதியடைந்தவளின் தொண்டைக் குழியில் வார்த்தைகள் கைதாகி நின்றன.

ஆல்வின் அவள் அருகே வந்து நின்று குனிந்து பார்த்து, “நான் உன்னைச் சாதாரணமா எடை போட்டுட்டேன்… உன் ஜீன் மாதிரி நீயும் ரொம்ப வீரியமானவதான்” என, அவள் அவனைப் புரியாமல் ஏறிட்டாள். அப்போது அவன் உதட்டில் தவழ்ந்த வன்மமான புன்னகையில் அவள் முதுகு துண்டு சில்லிட்டது.

“உன்னைக் கொல்ல முடியாது… அதேநேரத்துல உன்னை கண்ட்ரோல் பண்ணியும் ஆகணுமே” என்றவன் தன் கரத்திலிருந்து மருந்து குப்பியைக் காண்பித்து,

“இந்த கெமிக்கலை உன் இரண்டு கண்ணுலயும் கொஞ்சமா போட்டா போதும்… உன் கண்களோட திசுக்களைப் பாதிச்சு… உனக்கு மொத்தமா கண் பார்வை போயிடும்” என, அந்த வாரத்தைகளைக் கேட்ட நொடி அவள் விதிர்விதிர்த்துப் போனாள்.

“வேணாம் வேணாம்… அப்படி அல்லாம் பண்ணிடாதே… சத்தியமா இந்த மாறி நான் இனிமே எதுவும் அறிவுகெட்டத்தனமா செய்ய மாட்டேன்… என்னை வுட்டுரு” என்று அவள் படபடப்புடன் கெஞ்ச.

“டோன்ட் வொர்ரி… இது உன் கண்ணை மட்டும்தான் டேமேஜ் பண்ணும்… மத்தபடி உன் உயிருக்கு எந்த ஆபத்தும் வராது… நான் வரவும் விட மாட்டேன்” என்றவன் அந்த மருந்து குப்பியை அவள் விழி அருகில் எடுத்து வந்தான்.

“வேணாம்… ப்ளீஸ்… வேணாம்” என்றவள் தன் கை கால்களை அசைக்க முயன்று முடியாமல் அவதியுற்றாள்.

ஆனால் அவளுக்கு இரக்கம் காட்டும் எண்ணம் ஆல்வினுக்குத் துளி கூட இல்லையென்பது அவனின் அலட்சிய பார்வையிலேயே தெரிந்தது.

அவள் குருடாகிவிடுவதால் அவனின் ஆய்விற்கு எந்தவித பாதிப்பும் இல்லையெனும் போது அதனைச் செய்ய ஆல்வின் கொஞ்சமும் தயங்கவில்லை. அதுவும் அமாரவின் தைரியத்தையும் போராட்ட குணத்தையும் முடக்கிப் போட தனக்கு இதைத் தவிர வேறு வழியில்லை என்றவன் தீர்க்கமாக முடிவெடுத்த பின்னரே அவன் அத்தகைய காரியத்தைச் செய்ய துணிந்தான்.

அமியின் விழிகளில் அந்த இரசாயன துளிகளைச் சொட்டிய கணமே அவள் தன் உயிரே போகுமளவுக்கு அலறித் துடித்தாள். கதறினாள். கத்தினாள். ஒன்றும் பயனில்லை. அவள் உலகம் அந்தக் கணத்திலிருந்து இருட்டாகிப் போனது. 

அமராவின் அலறல்களையும் துடிப்பையும் பொருட்படுத்தாமல் அவள் கை கால்களில் பிணைத்திருந்த கட்டைப் பிரித்துவிட்டு அங்கிருந்து அகன்றுவிட்டான். அந்த அறையையும் தாண்டிக் கேட்ட அமராவின் வலிமிகுந்த கதறல் ஆல்வினை இம்மியளவு கூட கரைக்கவில்லை. அவன் தன் இலட்சிய பயணமான ‘அமரா’ ப்ரொஜெக்டில் வெல்வதற்காக எந்த எல்லைக்குப் போகவும் தயாராக இருந்தான்.

ஆனால் அமிர்தாவின் கைகளில் கிடைத்திருக்கும் கோப்பு அவர் விதியையே மாற்ற காத்திருந்தது என்பதை அவன் நிச்சயம் அறிந்திருக்க மாட்டான்.

அந்தக் கோப்புகளின் முதல் சில பக்கங்களில் ஆழமான அறிவியல் வார்த்தைகளும் கூடவே அவற்றின் விளக்கங்களும் பார்த்தவளுக்கு அதனைப் படித்து புரிந்து கொள்ளவது மிகவும் கடினமாக இருந்தது. இருப்பினும் அவள் முயன்று அதன் அர்த்தங்களை தேடித் தேடிப் படித்துப் புரிந்து கொண்டவளுக்கு அது மனிதனின் மரபணு சம்பந்தப்பட்ட ஆய்வு என்று விளங்கியது.

மேலும் அவள் பக்கங்களைத் தள்ளிப் பார்க்க அது பல்லாயிரம் வருட காலமாக அந்தமான் தீவுகளில் வசிக்கும் ஆதிவாசி குழுவினைக் குறித்து விவரங்கள் அதில் அடங்கியிருந்தன. அதுவும் அவர்களின் பழக்க வழக்கங்களும் வாழ்க்கை முறைகள் பற்றி மிகவும் விரிவாக எழுதப்பட்டிருப்பதைப் படிக்கப் படிக்க அவள் குழம்பிப் போனாள்.

அடுத்தடுத்துப் பக்கங்களைத் திருப்பிக் கொண்டே வந்தவள் ஒரு நொடி அப்படியே ஆச்சரியத்தில் மூழ்கிவிட்டாள். அந்தக் கோப்பில் அந்தத் தீவின் அடர்ந்த காட்டுப் பகுதியின் படங்களுடன் அந்த அதிசயமான ஆதிவாசி குழுவினரின் கடவுள்கள், அவர்கள் வசிக்கும் கூடாரங்கள் மேலும் அவர்கள் குழுவாக நிற்கும் புகைப்படங்களும் இணைக்கப்பட்டிருந்தன.

 அவற்றை எல்லாம் பொறுமையாகப் பார்வையிட்டவளின் கண்களில் அந்தக் குழுவிலிருந்த சிறுமியின் முகம் ஸ்தம்பிக்க வைத்துவிட்டது.

வெகுநேரம் அதனைப் பெரிதாக்கி உற்றுப் பார்த்தவளுக்கு அந்தச் சிறுமியின் ஜாடையும் துறுதுறு விழிகளும், பாலமுருகன் ஒருமுறை காட்டிய அமரா தொலைந்த புகார் கடிதத்துடன் இணைக்கப்பட்ட படத்துடன் பொருந்திப் போனது.

சட்டென்று அவள் விழிகள் அந்தக் கோப்பின் தேதி மற்றும் வருடத்தைக் கண்டு ஒரு நொடி திகைத்து மீண்டன. நிச்சயமாக அது அமராவாக இருக்க முடியாது.

பின்னர் அமராவைப் போலிருக்கும் இந்தச் சிறுமி யார்?

அப்போது அவள் மூளையில் தட்டிய யோசனையுடன் அந்த ஆதிவாசியினரின் படத்தையும் அவர்கள் வசிக்கும் காட்டுப் பகுதியையும் பார்த்தாள். சமீப காலமாக அவள் கனவில் வரும் அடர்ந்த காடு நினைவுக்கு வர, அவளுக்குப் புரிந்து போனது.

அந்தக் குழுவிலிருக்கும் சிறுமி தான்தான்!

அப்படியெனில் தான் ஒரு ஆதிவாசி இனத்தவள்!

You cannot copy content