You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Amara - Episode 28

Quote

28

அடுத்து வந்த மாதத்தில் ஆல்வினுடன் அமுதா இணைந்து வேலை செய்யும் சூழல் அமைந்தது. ஒரு வகையில் ஆல்வின் அப்படியொரு சூழலை உருவாக்கியிருந்தான்.

பெரும்பாலும் ஆல்வின் வேலை சார்ந்து மட்டுமே அவளிடம் பேசுவான். அவன் ரொம்பவும் மென்மையாக அதேநேரம் சரளமான ஆங்கிலத்தில் பேசுவான்.

இதனால் அமுதாவிற்கு அவன் மொழி வசப்படுவது அத்தனை சிரமமாக இருந்தது. அவள் என்னதான் உற்றுக் கவனித்தாலும் அவன்  என்ன சொல்கிறான் என்று பிடிப்படவில்லை.

அவள் திரும்ப திரும்ப புரியவில்லை என்று கேட்பதும் அவன் அவளுக்கு மீண்டும் மீண்டும் புரிய வைக்க முயல்வதுமாக அவர்களின் உரையாடலும் வேலையும் தொடர…

‘ஐயோ ஐயோ… என்னைச் சரியான ட்யூப் லைட்டுன்னு நினைச்சுக்க போறான்’ என்று அமுதா தனக்குத்தானே புலம்பிக் கொள்ள, ஆல்வின் தன் மெல்லிய குரலில்,

“வாட் டூ யூ செட்?” என்று கேட்க,

“நத்திங்” என்று சமாளித்தாள். ஆனால் ஆல்வின் அவள் முனகுவதை கூட மிகத் துல்லியமாக அவளின் வாயசைப்பை வைத்துக் கணித்துவிடுவான். இருப்பினும் ஏதும் அறியாதவன் போல நகர்ந்துவிடுவான்.

இவ்வாறாக அந்த வாரம் முழுக்க அமுதா அவனுடன் சிக்கிச் சின்னாபின்னாமான அதேநேரம் அவனைப் பற்றி அவ்வப்போது தமிழில் வாயிற்குள் கவுன்ட்டர் அடித்துக் கொண்டிருந்தாள்.

ஒரு முறை தென் அமெரிக்கா காடுகளில் கிடைத்த முதலை இனத்தின் வகையாறாவான நீந்தும் உயிரினத்தின் தொல்படிமம்  கண்டுபிடிக்கப்பட்டதை விவரித்துக் கொண்டிருந்தவன் அதனை மரபணு சோதனைக்கு உட்படுத்துதல் குறித்து தங்கள் குழுவிற்கு விளக்கமளித்துக் கொண்டிருக்க, அமுதாவிற்கோ அவன் சொல்வது பாதிக்கு மேல் கேட்கவில்லை. கேட்டவையும் சரியாகப் புரியவில்லை.

“போஸ்ட் கம்பம் மாதிரி உயரமா நின்னுக்கிட்டு இவ்வளவு மெல்லமா பேசுனா… லோவர் பெர்த்ல இருக்க எனக்கெல்லாம் எப்படி புரியுமோ?” எப்போதும் போல அவள் மெல்லிய குரலில் புலம்பிக் கொண்டிருக்க, அவள் வாயசைப்பை ஆல்வின் இம்முறையும் மிகத் தெளிவாகக் கவனித்துவிட்டான்.

ஆனால் காட்டிக் கொள்ளவில்லை. தன் விவரிப்பை முடித்து எல்லோரும் தங்கள் தங்கள் இடத்திற்கு நகர்ந்த பிறகு, “அமுதா ஒன் மினிட்” என்று அவளை மட்டும் நிறுத்தி வைத்து,

“நான் சொன்னதுல என்ன புரியல அமுதா… சொல்லுங்க… நான் திரும்பியும் எக்ஸ்ப்ளைன் பண்றேன்” என்று தெளிந்த தமிழில் கேட்க, அவள் ஸ்தம்பித்துவிட்டாள்.

இப்போது அவன் தமிழ் பேசினானா அல்லது தன் காதில்தான் ஏதாவது தவறாக விழுந்துவிட்டதா என்றவள் குழம்பிக் கொண்டிருக்க,

“அமுதா… என்னாச்சு?” என்றவன் கேட்கவும்,

“உங்களுக்கு தமிழ் தெரியுமா ஆல்வின்?” என்று அவள் திகைப்புற்றாள்.

“ம்ம்ம்… ஓரளவு தெரியும்… நானும் தமிழ்தான்… என்னோட முழு பெயர் ஆல்வின் தேவராஜ்… ஆக்சுவலி நான் சுமாரா தமிழ் பேசுவேன்… பட் ரைட்டிங் அவ்வளவா வராது” என்றவன் நீளமாகப் பேச அவள் அதிர்வுடன் ஏறிட்டாள்.

அவன் மேலும், “பட்… வாட் இஸ் தட் போஸ்ட்… க… ம்பம்… ஹவ் டஸ் இட் லுக் லைக்” என்று விளக்கம் கேட்கவும் அவள் தொண்டையை அடைத்தது.

எச்சிலை விழுங்கிக் கொண்டே, “சாரி ஆல்வின்” என்றவள் திணற,

“இந்த போஸ்ட் கம்பம் எப்படி இருக்கும்?” என்று மீண்டும் அதே கேள்வியைக் கேட்டான்.

“அது… உயரமா இருக்கும்…  ரோட் லேம்ப்…” என்றவள் சொல்லவும் அவன் பார்வையை உயர்த்தி,

“ஏ… ஹேம் ஐ லுக்கிங்… லைக் தட்” என்று அவன் அதிர்ச்சியுடன் கேட்டு அவளை ஆழ்ந்து பார்க்க,

“நோ… நாட் லைக் தட்… ஐ டின்ட் மீன் இட்… சும்மா” என்றவள் திக்கித் திணறி சமாளிக்க, அவளின் தடுமாற்றத்தை அவன் புன்னகையுடன் இரசித்தான்.

“ஐம் சாரி ஆல்வின்” என்றவள் குற்றவுணர்வுடன் தலை கவிழ,

“ஐ டோன்ட் வான்ட் யுவர் சாரிஸ்” என்றவன் அழுத்தமாகக் கூற அவள் முகம் மாறியது. கண்கள் கலங்கின.

ஆனால் அவன் தொடர்ச்சியாக, “அதுக்கு பதிலா… லெட்ஸ் கோ ஃபார் டின்னர்” என, அவள் திக்கு முக்காடிப் போனாள். அவனிடம் என்ன பதில் சொல்வதென்று புரியாமல் அவள் அமைதி காக்க,

“ஆக்சுவிலி… நீங்கதான் நான் வொர்க் பண்ற முதல் தமிழ் பெர்ஸன்… அதான்… ஆஅ… உங்களுக்கு விருப்பம் இல்லன்னா வேண்டாம்… ஃபைன்” என்றவன் அவள் முக உணர்வுகளை அளந்தபடி கூற,

“இல்ல… ஃபைன்… போலாம்” என்று அவள் சம்மதமாக தலையசைக்க, அவன் இதழ்கள் விரிந்தன.

அவர்களின் அந்தச் சந்திப்பிலேயே இருவரின் பழக்கமும் அடுத்த நிலையை எட்டியிருந்தது.

அமுதாவிற்கு அவன் தமிழ் என்பது அப்படியொரு இன்ப அதிர்ச்சி என்றால் அவன் அவளிடம் இயல்பாகப் பழகுவதிலும் பேசுவதிலும் அவள் தன் மனதைத் தொலைத்திருந்தாள்.

ஒரு வகையில் ஆல்வினுக்கும் குடும்பம் இல்லையென்று அறிந்த அமுதாவின் மனம் அவனிடம் மொத்தமாகச் சாய்ந்திருந்தது. அவனுடன் இருக்கும் ஒவ்வொரு நொடிகளையும் அவள் ஆழமாக நேசிக்க தொடங்கிவிட, அவனுக்குமே அதே நிலைதான்.

அதற்கு பிறகு நிறைய முறை தனியே சந்தித்துக் கொள்ளவும் பேசிக் கொள்ளவும் அவர்களாகவே வாய்ப்பை உருவாக்கிக் கொண்டனர். மெல்ல மெல்ல மனதளவில் நெருங்கியவர்கள் தங்களின் நட்பின் எல்லைக் கோட்டினைத் தகர்த்திருந்தனர்.

எப்போதும் தன் இலட்சியத்தின் பின்னே ஓடும் அவனுக்கு அமுதாவின் உறவு அவன் ஓட்டத்திற்கான இளைபாறுதலைக் கொடுத்தது. வாழ்க்கையை இரசிக்க கற்றுக் கொடுத்தது. அவனுக்குள் நிறைய மாறுதல்களை உருவாக்கியிருந்தது.

அதுவும் பெண்களே இல்லாத உலகம் அவனுடையது. அவனுடைய சித்தப்பா அருள்ராஜோ பெண்கள் ஏமாற்றுகாரர்கள் முட்டாள்கள் பேராசைக்காரர்கள் என்று கூறி அவனைப் பெண்களிடமிருந்து அதிகம் விலக்கியே வைத்திருந்தார். ஆதலால் அவனாகச் சென்று எந்தப் பெண்களிடமும் பழக்கம் வைத்துக் கொள்ளமாட்டான். எந்தப் பெண்களையும் தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கைக்குள் அனுமதிக்கவும் மாட்டான்.

ஆனால் அவன் அமுதாவிடம் பழகிய காரணமே வேறு. இப்போது அந்தக் காரணமே மாறியிருந்தது. ஒரு வகையில் பெண்கள் மீதான அபிப்பிராயங்களும் கூட.

இப்படியொரு சிக்கலான மனநிலையில் அவன் சிக்கிக் கொண்டிருக்கும் போதுதான் அமுதா, “நான் நிறைய யோசிச்சு குழம்பிதான் இந்த முடிவுக்கு வந்திருக்கேன்… என்னால இதுக்கு மேல என் உணர்வுகளை மறைக்க முடியல” என்று நிறுத்தி அவன் கண்களை நேராகப் பார்த்து,

“ஐ லவ் யூ ஆல்வின்” என்றாள்.

ஆல்வின் முகம் வெளிறிவிட்டது. தானும் அவள் மீது காதல் வயப்பட்டிருக்கிறோம் என்று அந்த நொடி அவன் மூளைக்கும் தெள்ளதெளிவாக உரைத்துவிட, உடனடியாக அவளுக்கு எந்தப் பதிலையும் அவன் கூறவில்லை.

அதேநேரம் அவன் மனம் அவளைக் காயப்படுத்த விரும்பவில்லை. அவளின் உண்மையான காதலை தன் சுயநலத்திற்காகப் பயன்படுத்திக் கொள்ள அவன் விழையாத காரணத்தால் அவளிடம் மௌனம் சாதித்தான்.

ஒரு வேளை அவன் அமுதாவைக் காதலிக்காமல் இருந்திருந்தால் அவன் இவ்வளவு எல்லாம் யோசித்திருக்க மாட்டான். அவளின் நம்பிக்கையைப் பெறுவதற்காக உடனடியாக சம்மதம் சொல்லி இருப்பான்.

ஆனால் இப்போது அவனால் முடியவில்லை.

அவள் காதலுக்கு எந்தப் பதிலும் சொல்லாமல் இரண்டு மூன்று வாரங்களைக் கடத்திவிட்ட போதும் அவன் மனம் அவளை நொடிக்கு நொடி தேடுவதை அவனால் மறுக்கவோ மறைக்கவோ முடியவில்லை.

அதற்கு மேல் தன் உணர்வுகளைக் கட்டுப்படுத்த இயலாமல் ஆல்வின் தன் தூக்கத்தைத் தொலைத்துவிட்டு இரவெல்லாம் சிகரட்டை புகைத்தபடி பின்வாயிலில் அமர்ந்திருக்க, “ஆல்வின்” என்று அழைத்தபடி அவன் பின்னே வந்து நின்றார் அருள்ராஜ்.

தன்னுடைய தவிப்பினை மறைத்துக் கொண்டவன், “என்ன சித்தப்பா நீங்க இன்னும் தூங்கலையா?” என்று இயல்பாகப் பேச்சு கொடுக்க,

“நீ இன்னும் தூங்கலையா ஆல்வின்?” என்று திருப்பி கேட்டார்.

“இல்ல… சும்மா யோசிச்சிட்டு இருந்தேன்”

“அமுதாவைப் பத்தியா?” என்றவர் நேரடியாக கேட்டுவிட அந்த நொடியே அவன் முகம் அவனின் உணர்வுகளை அப்பட்டமாய் காட்டிக் கொடுத்துவிட்டது.

“ஆர் யூ இன் லவ் வித் ஹெர்?” என்று அவர் கேட்கவும்,

“நோ” என்றவன் அவசரமாக மறுக்க,

“பொய்” என்றார்.

“இல்ல சித்தப்பா… நான் அந்தப் பொண்ண லவ் பண்ணல… அவதான் என்கிட்ட பிரப்போஸ் செஞ்சா… நான் என்ன சொல்றதுன்னு தெரியாம” என்றவன் தடுமாறியபடி பேச,

“ஓகே சொல்லிடு ஆல்வின்” என்று சிறு தயக்கம் கூட இல்லாமல் சொன்னவர்,

“அவ உன்னை முழுசா நம்பணும்… அதுதான் நமக்கு முக்கியம்… எல்லாத்துக்கும் மேல நமக்கு நம்ம ப்ராஜெக்ட்தான் முக்கியம் ஆல்வின்… வேற யாரும் இல்ல… வேற எதுவும் நமக்கு முக்கியம் இல்ல” என்றார் தீர்க்கமாக.

அவன் முகம் இருளடர்ந்து போனது. அவன் பதிலேதும் சொல்லாமல் மௌனமாக நிற்க, “தேவை இல்லாத எமோஷன்ஸ்க்கு இடம் கொடுத்து… உன் தூக்கத்தைக் கெடுத்துக்கிட்டு…  ஹெல்த்தை ஸ்பாயில் பண்ணிக்காதே” என்றவர் சொல்லிவிட்டு இறுதியாக,

“ஆனா எவளா இருந்தாலும் அவ எப்படி இருந்தாலும் பொண்ணுங்களை மட்டும் நம்பாதே ஆல்வின்… உருகி உருகி காதலிக்கிறேன்னு சொல்வாளுங்க… அப்புறம் தூக்கிப் போட்டுட்டுப் போயிட்டே இருப்பாளுங்க” என்றபடி உள்ளே சென்றுவிட்டார். அவரது காதலின் கசந்த அனுபவங்கள் அவரை அப்படி பேச வைத்தது. 

பலமுறை பெண்களைப் பற்றி அவர் இவ்விதமாகச் சொல்லியும் இருக்கிறார். ஆனால் இம்முறை அவரின் கருத்தை ஆல்வினால் ஏற்க முடியவில்லை. அமுதா அப்படி இல்லையென்று அவன் மனதிற்கு ஆழமாகத் தோன்றியது.

அதன் பின் ஆல்வின் அமுதாவின் காதலை மனதார ஏற்றுக் கொண்டான். அடுத்த இரண்டு மாதத்தில் கிறித்துவ முறைப்படி அவளைத் திருமணமும் முடித்துக் கொண்டான். அருள்ராஜிற்குத் தெரியாமல்.

அமுதாவை வீட்டிற்கு அழைத்து வந்து இருவருக்கும் பரஸ்பரம் அவன் அறிமுகம் செய்விக்க, ஒருவரைப் பார்த்து ஒருவர் அதிர்ந்தனர்.

அருள்ராஜ் கோபத்துடன் ஆல்வினை ஏறிட, அமுதாவோ அதிர்ச்சியுடன் ஏறிட்டாள்.

தனக்கு சொந்த பந்தங்களே இல்லையென்று சொல்லிவிட்டு திடீரென்று சித்தப்பா என்று ஒருவரை அறிமுகம் செய்ததில் அவளுக்கு ஏதோ நெருடியது. அதுவும் அவர் முகத்தைப் பார்த்ததும் அவள் சற்றே மிரட்சியுற்று பின்வாங்க, அருள்ராஜ் அவளை வெறுப்புடன் நோக்கிவிட்டு அகன்றார்.

“அவர் அப்படிதான்… பொண்ணுங்கனா அவருக்குப் பிடிக்காது” என்று ஆல்வின் தெரிவிக்க,

“உங்களுக்கு ஒரு சித்தப்பா இருக்கிறார்னு ஏன் நீங்க என்கிட்ட சொல்லவே இல்ல?” என்றவள் அவனைக் கேட்க,

“சொல்றதால என்ன ஆக போகுது… அவர் இருந்தும் இல்லாத மாதிரிதான்… பெரும்பாலும் அவர் ரூமை விட்டு வெளியே வர மாட்டார்” என்றவன் மிகச் சாதாரணமாகச் சொல்ல,

“அப்போ அவர் இங்கேதான் இருப்பாரா?” என்று அமுதா அதிர்ச்சியுடன் கேட்க,

“ஆமா” என்றவன் அவள் தோளை அணைத்துப் பிடித்தபடி, “நீ அவரைப் பத்தி விடு… நான் நம்ம ரூமைக் காட்டுறேன்… வா” என்று உள்ளே அழைத்துச் சென்று தன்னுடைய அறையைக் காட்டினான்.

ஆனால் அவளின் ஆரவ்மெல்லாம் அந்த நொடி வடிந்து விட அவள் முகத்தில் எவ்வித களிப்பும் இல்லை.

“உங்க சித்தப்பாவோட முகம்… எப்படி… என்னாச்சு?” என்றவள் வினவ,

“அது ஒரு விபத்து… அவர் ஒரு எக்ஸ்பிரீமெண்ட் பண்ணும் போது… முகத்துல ஸல்பியூரிக் ஆசிட் பட்டுடுச்சு… அதோட அவர் வாழ்க்கைல எல்லாமே முடிஞ்சு போச்சு… அவரைப் பார்க்கிற எல்லோரும் பயந்து ஒதுங்கிப் போனாங்க… ஆசிட்டால சிதைஞ்சுப் போன முகத்தோட சித்தப்பாவால இந்த உலகத்தை ஃபேஸ் பண்ண முடியல…”

”இந்த வீட்டை விட்டு அவர் வெளியே போகிறதை நிறுத்திட்டாரு… தன்னைத்தானே பூட்டிக்கிட்டாரு” என்று அவரைப் பற்றிய கதையை அவன் வருத்தத்துடன் சொல்லி முடிக்க,

“நீங்க இதெல்லாம் என்கிட்ட முன்னாடியே சொல்லி இருக்கலாம்தானே” என்று கேட்டாள்.

“இப்போ சொல்லாததால என்னவாகிடுச்சு… ஜஸ்ட் லீவ் தட் மேட்டர்” என்று ஆல்வின் அவளிடம் சட்டென்று வெறுப்பைக் காட்டிவிட்டு அந்த அறையை விட்டு வெளியேறிவிட, அமுதா அதிர்ந்து நின்றுவிட்டாள்.

அங்கிருந்து தன் சித்தப்பாவின் அறைக்குச் சென்ற ஆல்வின் அவர் அமர்ந்திருந்த நாற்காலி முன்பாக மண்டியிட்டு அமரவும், அவர் அவன் கன்னத்தில் பளாரென்று அறைந்துவிட்டார்.

“நன்றி கெட்டவனே… இதுக்காகதான் உன்னைக் கஷ்டப்பட்டுப் படிக்க வைச்சு இந்த நிலைக்குக் கொண்டு வந்தனா” என்றவர் சீற்றமாகச் சத்தமிட,

“சித்தப்பா நான் சொல்றதைப் பொறுமையா கேளுங்க” என்று அவன் அவர் கையைப் பிடித்தான்.

“தேவையில்லை… போயிடு” என்றவர் அவன் கரத்தை உதறிவிட்டு எழுந்து கொள்ள,

“சித்தப்பா ப்ளீஸ் நான் சொல்றதைக் கேளுங்க” என்றவர் முன்பாக மறித்து நின்றவன்,

“அந்த சென்ட்டினல் தீவு மக்கள் பத்தி இதுவரைக்கும் அமுதாக்கிட்ட இருந்த ஒரு சின்ன டீடையில் கூட வாங்க முடியல… அவங்களைப் பத்தி நான் பேசினாலும் அவ எப்படியாச்சும் அவாயிட் பண்ணி பேச்சை மாத்திடுறா.”

”அவகிட்ட எப்படி பேசி நம்ம நினைச்சதை சாதிக்கிறதுன்னு எனக்கு புரியல… அவளை வழிக்குக் கொண்டு வர எனக்கு இதைத் தவிர வேற வழித் தெரியல” என்றான்.

“பொய் சொல்லாதே… நீ அந்த அமுதாவை உண்மையிலேயே விரும்புற”

“ஆமா நான் விரும்புறேன்தான்… இல்லன்னு சொல்ல மாட்டேன்… ஆனா அதுக்காக நம்ம அமரா ப்ரொஜெக்ட் நான் விட்டுக் கொடுக்க மாட்டேன்… யாருக்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டேன்… அது என்னுடைய லைஃப் டைம் ட்ரீம்” என்றவன் அழுத்தமாகச் சொன்னதில் அருள்ராஜின் மனம் லேசாய் சமாதான நிலையை எட்டியிருக்க,

ஆல்வின் மேலும், “நான் அடுத்த வாரம் அமுதாவை இந்தியா கூட்டிட்டுப் போகப் போறதா சொல்லி அந்தமான் கூட்டிட்டுப் போகப் போறேன்… அங்கே போய் எப்படியாச்சும் அந்தச் சின்ன பொண்ணைக் கூட்டிட்டு வரேன்… இட்ஸ் ஆ ப்ராமிஸ்” என்றவன் உறுதிக் கொடுத்தான்.

அருள்ராஜின் சந்தேகம் ஒருவாறு நீங்கியிருந்தது. ஆனால் ஆல்வின் நினைத்தது போல அமிர்தாவை அங்கிருந்து தூக்கி வருவது அத்தனை சுலபமான காரியமில்லை என்று அங்கே சென்ற பின்தான் அவனுக்குப் புரிந்தது.

akila.l has reacted to this post.
akila.l

You cannot copy content