You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Amara - Episode 6

Quote

6

ஹீத்ரோ விமான நிலையம். இலண்டன்.

வானில் உயர உயர அந்த விமானம் இலண்டனை விட்டு வெகுதூரம் பறந்து சென்று கொண்டிருக்க, ஹரீஷின் மனமோ அந்நகரத்தை விட்டு பிரிய மனமின்றி அவதியுற்றது.

எது நடந்தாலும் ‘டேக் இட் ஈஸி’ என்று எடுத்துக் கொள்பவனுக்கு இந்த உணர்வு ஏனோ புதிதாக இருந்தது.

அவன் பல பெண்களிடம் காதலைச் சொல்லி இருக்கிறான். நிறைய பெண்கள் அவனிடம் காதலைச் சொல்லி இருக்கிறார்கள். ஆனால் எதுவும் நிரந்தரமான உறவாக அவனுக்கு நீடித்ததில்லை. அதற்கு ஒரு வகையில் அவனுடைய டோன்ட் கேர் ஆட்டிட்டியூட்தான் காரணம்.

ஆனால் அமிர்தாவின் சந்திப்பு அவனை முற்றிலும் வேறுவிதமாக மாற்றியிருந்தது.

சில வாரங்களுக்கு முன்பு இதே விமான நிலையத்திற்குள் மிகுந்த  உற்சாகத்துடனும் ஆவலுடனும் அடியெடுத்து வைத்தவன் இப்போது அதற்கு நேர்மாறான மனநிலையுடன் திரும்பி செல்கிறான்.

அமிர்தாவிடம் அவன் தன் மனதை மட்டுமல்ல. தன் துறுதுறுப்பையும் சேர்த்தே தொலைத்துவிட்டிருந்தான்.

குறும்படங்கள் விளம்பர படங்கள் என்று இயக்கிக் கொண்டிருந்த ஹரீஷுக்கு அவன் திறமையின் காரணமாக ஒரு மிகப் பெரிய படத்தினை இயக்கும் வாய்ப்பு தேடி வந்தது.

பல வருட காலமாக தமிழ் சினிமாவில் வெற்றிப் படங்களை தந்து கொண்டிருக்கும் நிறுவனம்தான் ஜனார்த்தனன் ப்ரொடக்ஷன்ஸ். ஜனார்தனனுக்குப் பிறகு அவருடைய மகன் கைக்கு மாறி இப்போது அவரின் பேத்தி ஜெயதேவியின் கைக்கு இடமாறியிருந்தது.

ஹரீஷைப் போல ஜெயதேவியும் புதுமையை விரும்ப கூடியவள். அதேநேரம் அனுபவத்தைத் தாண்டி புதுவிதமான திறமைகளை ஆதரிக்க வேண்டுமென்பது அவளின் எண்ணம்.

அவர்கள் குடும்ப தயாரிப்பு நிறுவனம் அவளின் நிர்வாகத்திற்குக் கீழ் வந்ததுமே அவள் இளம் இயக்குனர்களைத் தேடி வாய்ப்பு தந்தாள். அந்த வகையில் ஹரீஷின் விளம்பர படங்கள் மற்றும் அவனின் வித்தியாசமான குறும்படங்கள் அவளை மிகவும் கவர்ந்தது.  

ஆதலால் ஹரிஷை அணுகி அவனைத் தன்னுடைய அலுவலகத்திற்கு வர வைத்துப் பேசினாள்.

“உங்களோட ஷார்ட் ஃபில்ம்ஸ் எல்லாம் பார்த்தேன்… ரொம்ப இன்ஸ்பைரிங்கா இருந்துச்சு… இட்ஸ் எக்ஸலேனட்… ஸோ எங்க ப்ரொடக்ஷன் கம்பெனி சார்பாக உங்க கூட ஒரு ப்ரொஜெக்ட் பண்ணணும்னு ஆசைபடுறேன்… ஆக்சுவலி என்கிட்ட ஒரு நல்ல ஸ்டோரி இருக்கு… அதை நீங்க இயக்கி தர முடியுமா?” என்றவள் சுற்றி வளைக்காமல் நேரடியாக சொல்லிய அதேநேரம்,

“உங்களுக்குப் படங்களை இயக்கின அனுபவம் இல்லன்னாலும் உங்களுக்கு அதற்கான திறமை இருக்குன்னு நான் நம்புறேன்… அதனாலதான் நீங்க இந்த ப்ரொஜெக்டை செஞ்சா நல்லா இருக்கும்னு நான் விரும்புறேன்” என்றாள். அது அவன் திறமைக்குக் கிடைக்கும் மிகப் பெரிய அங்கீகாரம் எனினும் அவன் வியப்படையாமல் அமைதியாக யோசித்தான். ஜெயா அவனை ஆழ்ந்து பார்த்து,

“என்ன ஹரீஷ் யோசிக்கறீங்க… இப்படி ஒரு சான்ஸ் கிடைக்காதான்னு எத்தனையோ பேர் காத்திட்டு இருக்காங்க… ஒரு வேளை… எப்படி அனுபவமில்லாம மூவிஸ் டிரைக்ட் பண்றதுன்னு யோசிக்கறீங்ளோ?!” என்று கேட்க,

அவளைச் சாதாரணமாக ஏறிட்டவன், “இல்ல… இது வரைக்கும் நான் எடுத்த ஷார்ட் ஃபில்ம்ஸ்… ஆட்ஸ்… எல்லாமே என்னோட ஓன் ஸ்க்ரிப்ட்ஸ்… அதுதான் என்னோட சக்ஸஸ்னு நான் நினைக்கிறேன்… ஆனா நீங்க வேறொருத்தரோட கதையை எடுக்க சொல்றதுதான் எனக்கு யோசனையா இருக்கு… நீங்க ஸ்க்ரிப்ட் கொடுங்க… நான் படிச்சிட்டு என் முடிவைச் சொல்றேன்” என்றான்.

ஜெயா புன்னகையுடன், “நான் கேட்டதும் உடனே ஒத்துக்காம ஸ்க்ரிப்டைப் படிச்சிட்டுச் சொல்றேன்னு சொல்றீங்க பாருங்க… உங்க கான்பிடென்ட் எனக்குப் பிடிச்சிருக்கு ஹரீஷ்… நீங்க ஸ்க்ரிப்டைப் படிச்சிட்டே சொல்லுங்க” என்று அந்தக் கதை அடங்கிய தாள்களை அவனிடம் கொடுத்தாள்.

அன்று இரவே ஹரீஷ் அந்தக் கதையைப் படித்தான். படிக்க படிக்க அவனுடைய ஆர்வம் பெருகியது. அது ஒரு ரொமேன்டிக் த்ரில்லர். பரபரப்பான அந்தக் கதைக்களத்தில் உணர்வுப்பூர்வமான காதலும் கலந்திருந்ததுதான் அக்கதையின் சிறப்பம்சம். அதனைப் படித்து முடிக்கும் போது அவன் மனம் நெகிழ்ச்சியில் திளைத்தது.

‘வாவ்!’ என்று வியப்புடன் அந்தத் தாள்களை மூடி வைத்தவன் அப்போதுதான் அந்தக் கதையை எழுதியது யாரென்று திருப்பி பார்த்தான்.

‘அமிர்தா’ என்று இருந்தது.

உடனடியாக ஜெயாவிடம் அந்தக் கதையை இயக்குவதற்கு சம்மதம் தெரிவித்தவன்,

“கதையை மூவியா எடுக்க சில சேஞ்சஸ் பண்ணணும்… சில காட்சிகள் கதைக்கு நல்லா இருக்கலாம்… படத்துக்கு ஒத்துவராது” என்றான்.

“அதெல்லாம் நீங்களும் அமிர்தாவும் பேசி முடிவு பண்ணுங்க” என்று ஜெயா சொல்ல ஹரீஷுக்கு அந்த அமிர்தாவைப் பார்க்கும் ஆவல் கூடியது. ஆனால் அவள் இலண்டனில் வசிக்கிறாள் என்று தெரிவித்த ஜெயா படப்பிடிப்பின் போது அவளும் உடன் இருப்பாள் என்று உரைத்தாள்.

அந்தக் கதையின் காட்சிகளும் இலண்டனின் அருகிலுள்ள காட்ஸ்வுடில் நடப்பதாக எழுதப்பட்டிருந்தது. மேற்கு இங்கிலாந்தின் அற்புதமான அழகு என்று விவரிக்கப்படும் அவ்விடத்திலேயே படப்பிடிப்புகள் நடைபெறுவதாக முடிவானது.

எப்போதும் ஹரீஷுடன் இணைந்து பணிப்புரியும் கல்லூரி தோழர்களும் இந்தப் படத்தில் அவன் உடனிருந்து உதவ ஜெயாவும் சம்மதித்தாள்.

அவர்கள் படக்குழு ஹீத்ரோ விமான நிலையத்தில் இறங்கியது தொடங்கி அவர்கள் தங்குவதற்கான ஏற்பாடுகள் என சகலமும் ஜெயாவே உடனிருந்து செய்தது ஹரீஷை வியக்க வைத்தது. இளம் பெண் தயாரிப்பாளர் என்ற வகையில் அவள் மீது ஏற்கனவே உருவாகியிருந்த நன்மதிப்பு மேலும் பெருகியிருந்தது.

இந்நிலையில் அன்றைய இரவு அவர்கள் தங்கியிருந்த ஹோட்டலில் படக்குழுவின் நாயகன் நாயகி உட்பட அனைவருக்கும் சிறப்பு வரவேற்பு விழா ஒன்றையும் ஏற்பாடு செய்திருந்தாள் ஜெயா.

ஹரீஷின் நண்பர்கள் மிகுந்த சந்தோஷத்துடன் தன் நண்பனின் அந்த புது பட வாய்ப்பைக் கொண்டாடி களித்துக் கொண்டிருந்தனர். அந்நகரத்தின் சிறப்பான உணவுகள் தொடங்கி மதுபானங்கள் வரை அனைத்தும் பரிமாறப்பட்டதில் அவர்கள் உற்சாகம் பொங்கிப் பெருகியது.

இலண்டனில் அன்று மைனஸ் நான்கு டிகிரி. இரவு நேர அந்தக் குளிரை மட்டுப்படுத்த ஹரீஷின் தோழர்கள் கொஞ்சம் கொஞ்சமாக மதுவை உள்ளிறிக்கிக் கொண்டிருந்ததில் எல்லோரும் மிதமான போதை மயக்கத்தில் இருந்தனர்.

ஹரீஷும் அவர்கள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு குதூகலித்தான். ஆனால் அந்தக் கொண்டாட்டங்களும் குதூகலங்களும் கொஞ்சம் தம் எல்லைகளை மீறத் தொடங்கியதை அப்போது அவர்கள் யாரும் உணரவில்லை.

போதை நிலையில் ஹரீஷின் நண்பர்களில் ஒருவன் அவர்களைக் கடந்து சென்ற அந்நாட்டுப் பெண்கள் சிலரை ஆபாசமான வாரத்தைகளால் வர்ணித்தான். அதனை அவன் நண்பர்கள் சிலரும் ஆதரித்துப் பேச ஹரீஷ் இடைப்புகுந்து,

“இலண்டன் பொண்ணுகிட்ட செருப்படி வாங்க போறீங்க… அந்தப் பொண்ணுங்க போட்டிருக்க ஹீல்ஸ் ஸைசைப் பார்த்தீங்க இல்ல” என்று எச்சரிக்கை செய்தான்.

“நீ ஹீல்ஸ் ஸைசை மட்டும்தான் பார்த்தியா மச்சான்” என்று ஒருவன் ஹரீஷின் தோளில் அடிக்க,

“டேய்… கொஞ்சம் அடங்குங்கடா” என்று ஹரீஷ் குரலைத் தாழ்த்திக் கூறினான். ஆனால் அவர்கள் கண்டு கொள்ளவே இல்லை.

“சத்தமாவே பேசு மச்சான்… அந்த வெள்ளகாரிக்கு என்ன புரியவா போகுது” அவன் நண்பன் ஒருவன் சொல்லிச் சத்தமாகச் சிரிக்க, ஹரீஷ் உட்பட அவன் உடனிருந்த நண்பர்கள் குழுவும் சேர்ந்து சிரித்தனர்.

அந்தச் சமயத்தில் அவர்கள் அருகே வந்த பெண் ஒருத்தி, “புரியலன்னா யாரை வேணா என்ன வேணா பேசுவீங்களா?” என்று கேட்க, ஹரீஷின் நண்பர்கள் குழு அதிர்வுடன் அவள் புறம் திரும்பியது.

அந்தப் பெண் மேலும், “எப்படி இவ்வளவு அநாகரிகமா பேச முடியுது உங்களால எல்லாம்… ஹும் எல்லாம் அவங்களுக்கு உங்க மொழி புரியாதுங்குற தைரியமா” என்று கேட்க,

ஹரீஷின் நண்பன் ஒருவன் முன்னே வந்து, “சும்மா ஃபன்காக” என்று சமாளிக்க, அவள் பார்வையில் உஷ்ணமேறியது.

“இதுக்குப் பேர் ஃபன்னா… ஹம்… உங்க மனைவி தங்கை இவங்களை எல்லாம் இப்படி பேசிட்டு இட்ஸ் ஜஸ்ட் பார் ஃபன்னுன்னு யாராவது சொன்னா ஏத்துப்பீங்களா மிஸ்டர் நீங்க” என்றவள் காட்டமாகக் கேட்க அவர்கள் எல்லோர் முகமும் இருளடர்ந்தது.

ஹரீஷ் உடனே, “சாரி நாங்க” என்று பேசத் தொடங்கும் போதே,

“உங்க சாரியை தைரியம் இருந்தா அந்தப் பொண்ணுகிட்ட உண்மையைச் சொல்லிட்டுக் கேளுங்க பார்க்கலாம்” என, ஹரீஷால் ஒன்றும் பேச முடியவில்லை.

அவர்களிடம் கோபமாகப் பேசிய அந்தப் பெண் அங்கிருந்து நகர்ந்து ஜெயாவினை அணுக ஹரீஷ் அதிர்ந்துவிட்டான். அவன் நண்பர்கள் குழுவினரும் அதிர்ச்சியுடன் நின்றனர்.

எப்போதும் போல அவர்கள் விளையாட்டாகச் செய்தது இப்படி விபரீதமாக முடியுமென்று யாரும் எதிர்பார்க்கவில்லை.

ஹரீஷ் தவிப்புடன் அந்த இரு பெண்களும் பேசுவதைப் பார்த்திருக்கும் போதே ஜெயா அவனைக் கைக் காட்டி அருகே வருமாறு சைகை செய்தாள். அவன் என்ன செய்வதென்று புரியாமல் மெல்ல நடந்து அவர்களிடம் செல்ல,

“ஹரீஷ்… நீங்க கேட்டுட்டே இருந்தீங்களே யார் அமிர்தா யார் அமிர்தான்னு… இவங்கதான் அது… நம்ம ஸ்டோரி ரைட்டர்” என்று அறிமுகம் செய்ய, ஹரீஷ் முகத்தில் ஈயாடவில்லை.

இப்படியொரு இக்கட்டான சூழ்நிலையிலான இந்த அறிமுகத்தை அவன் சற்றும் எதிர்பார்க்கவில்லை. 

அமிர்தாவின் முகமும் அந்த அறிமுகத்தை விரும்பவில்லை என்று அவளின் வெறுப்பான பார்வையே சொன்னது.

ஜெயா மேலும், “ஷீ இஸ் மை க்ளோஸ் ஃபிரண்ட்… நாங்க இரண்டு பேரும் கனடால ஒன்னா படிச்சோம்… அப்பவே மேடம் நிறைய பொய்ட்ரிஸ் எழுதுவாங்க” என்று தன் தோழியின் புகழைப் பாடிக் கொண்டிருக்க,

‘போச்சு’ என்று ஹரீஷ் நிராதரவான நிலையில் நின்றான். அமிர்தாவோ சங்கடமாகப் புன்னகைத்தாள்.

சில நிமிடங்கள் பேசிய பின்னர் ஜெயா, “நீங்க இரண்டு பேரும் பேசிட்டு இருங்க… வந்துடுறேன்” என்று அவர்களை விட்டு விலகிச் செல்லவும் ஹரீஷ்,

“சாரி அமிர்தா… என் ஃப்ரண்ட்ஸ் அப்படி பேசனது தப்புதான்” என்று சொல்ல,

“அவங்க பேசிட்டிருந்தாங்க… நீங்க கேட்டு இரசிச்சிட்டு இருந்தீங்க… அப்படிதானே ஹரீஷ்” அவள் கேள்வி அவனை நேரடியாக வந்து தாக்கியது.

“சாரி தப்புதான்… அப்படி பேசி இருக்கக் கூடாது… ஆனா நாங்க எப்பவுமே காலேஜ்ல இருந்தே இப்படி ஜாலியா பேசுவோம்… பட் சீரியஸா பெண்களை இழிவுப்படுத்தணும்னு எண்ணமெல்லாம் இல்ல”

“ஓ… ஒரு பெண்ணோட அங்கங்களை விரசமா வர்ணிகிறது இழிவுப்படுத்துறது இல்ல” என்றவள் மேலும் அவனை ஏற இறங்க பார்த்து,

“இதுக்கு பேர்… வெர்பல் ஹரேஸ்மெண்ட்… தெரியுமா உங்களுக்கு” என்று கேட்க அவனால் பதில் பேச முடியவில்லை.

“நீங்க இந்தப் படத்தை இயக்குறதுல எனக்கு சுத்தமா விருப்பம் இல்ல… ஜெயாகிட்ட சொல்லலாம்னு நினைச்சேன்… ஆனா அவளுக்கு உங்க மேல பயங்கரமான நம்பிக்கை மரியாதை… அதை நான் ஸ்பாயில் பண்ண விரும்பல” என்றவள் சொன்ன நொடி ஹரீஷ் நிம்மதி பெருமூச்சுடன்,

“தேங்க்ஸ்” என்றான்.

“இருங்க இருங்க… அதுக்குள்ள தேங்க்ஸ் சொல்லிடாதீங்க… நான் முழுசா சொல்லிடுறேன்” என்றவள் மேலும் தொடர்ந்தாள்.

“நீங்க இந்தப் படத்துல வொர்க் பண்ணணும்னா எனக்கு ஒரு கண்டிஷன் இருக்கு” என்றதும் அவன் அவளைப் புரியாமல் பார்த்தான்.

அவள் அவனை நேராக பார்த்து, “அநகாரிகமா கமென்ட் பண்ண உங்க ஃபிரண்ட்ஸ் யாரும் இந்த ப்ரொஜெக்ட்ல வொர்க் பண்ண கூடாது… ஏன்? இங்கே இருக்கவே கூடாது… அதுக்கு ஓகேனா நீங்க படத்தை டிரைக்ட் பண்ணலாம்” என்று ஒரே போடாகப் போட்டுவிட்டு அவன் பதிலைக் கூட எதிர்பாராமல் அவள் அகன்றுவிட்டாள்.

ஹரீஷ் அதிர்ந்து நின்றான். அவனுடைய ஆரம்ப கால ப்ரொஜெக்ட் தொடங்கி அனைத்திலும் அவர்கள் அவனுடன் இணைந்து பணிபுரிந்து கொண்டிருக்கிறார்கள்.

அவனுடைய வெற்றியைத் தூக்கி நிறுத்தும் தூண்கள் அவர்கள்.

கலக்கத்துடன் அறைக்கு வந்தவனிடம் அவன் நண்பர்கள் என்ன ஏதென்று விசாரித்தனர். தயக்கத்துடன் அமிர்தா சொன்னதை அவன் சொல்ல அவன் நண்பர்கள் யோசித்துவிட்டு,

“நீ இந்தப் படத்துல கண்டிப்பா வொர்க் பண்ணணும் மச்சான்… இது பெரிய சான்ஸ்… விட்டுடாதே… நாங்க இல்லைனாலும் உன்னால நல்லா பண்ண முடியும்… ஆல் தி பெஸ்ட்” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து புறப்பட்டுவிட முடிவெடுத்தனர். ஹரீஷிற்கு வருத்தமாக இருந்தது.

அதேநேரம் அமிர்தாவின் கோபத்தில் நியாயம் இருப்பதும் அவனுக்குப் புரிந்தது. இது போன்று பலமுறை அவர்கள் பேசியதுண்டு. அவ்வாறு அவன் நண்பர்கள் பேசும் போது அவன் திருத்தியதோ தடுத்ததோ இல்லை.

அமிர்தாவின் கோபம் நேரடியாக மண்டையில் தட்டியது போல அவன் தவற்றை உணர்த்தியிருந்தது. அவள் மீது கோபம் வரவில்லை. அவனுக்கு மரியாதைதான் வந்தது.

படப்பிடிப்பு தொடங்கியதும் ஜெயா பொறுப்புகளைத் தன்னுடைய மேனஜரிடம் ஒப்படைத்துவிட்டுப் புறப்பட்டுவிட்டாள். ஆனால் அமிர்தா  அவன் மீதான கோபத்தைத் தேக்கி வைத்து கொண்டு சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் அவனிடம் காட்டிக் கொண்டிருந்தாள்.

எப்போதும் அவன்தான் மற்றவர்களுக்குச் சவாலாக இருப்பான். முதல்முறையாக அவனுக்கே ஒருத்தி சவாலாக இருந்தாள். அவளின் கோபத்தையும் வெறுப்பையும் எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் ஹரீஷ் திணறிக் கொண்டிருந்தான்.

You cannot copy content