You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Amara - Episode 8

Quote

8

தேவா எழுந்து பார்த்த போது அந்த வீடே வெறிச்சோடி இருந்தது. இன்னும் இரவில் அடித்த போதை தெளியாததில் தலையை உலுக்கிக் கொண்டு என்ன நடந்தது என்று சுற்றும் முற்றும் பார்த்தான்.

அவனுக்கு ஒன்றும் நினைவில்லை. இரவு என்ன நடந்தது என்று யோசிக்க யோசிக்க தலை ஒரு மாதிரி பாரமாக அழுத்தியது.

“அமி… அமி…” என்றவன் அழைத்துப் பார்க்க பதில் குரல் ஒலிக்கவில்லை.

“எங்க போய்கினா… நைட் என் கூடத்தானே?” என்றவன் அந்த நொடியே படுக்கையைப் பார்த்து அதிர்ந்தான்.

இரவு நடந்தது எல்லாம் அப்போதே அவன் நினைவிற்குக் கொஞ்சம் கொஞ்சமாக வந்தது. அவன் வீட்டிற்கு புறப்படும் போது தயா, “தேவா நில்லு” என்று தடுத்துவிட்டு,

“கொஞ்சம் இரு… வேலை ஒன்னு இருக்கு… முடிச்சிட்டுப் போலாம்” என்றார்.

அவன் பதில் பேசாமல் நிற்க நேரத்தைக் கடத்திய தயா, “இந்தா நீ ஒரு பெக் போடு… செம சரக்கு… சும்மா ஜிவுன்னு ஏறும்” என,

“அமிக்கு நான் குடிச்சிட்டுப் போனா பிடிக்காது… வேணா ண்ணா” என்று மறுத்தான்.

“நம்ம தேவா பெஞ்சாதிக்குப் பயப்படுறான் டா” என்று தயா நக்கலடித்துச் சிரிக்க சுற்றியுள்ள அவன் ஆட்களும் சேர்ந்து சிரித்தனர்.

“புது பொண்டாட்டி இல்ல… அதான்” என்று தயா மேலும் கிண்டல் செய்ய தேவா அதை எல்லாம் கண்டுக்கொள்ளவில்லை.

“நான் கிளம்புறேன் ண்ணா” என்றவன் செல்ல எத்தனிக்க,

“தேவா நில்லு” என்று தயா அவனைப் போகவிடாமல் தடுத்தான்.

“இந்த அண்ணனுக்காக ஒரே ஒரு பெக்… ஒன்னே ஒன்னு” என்று தயா இறங்கி கேட்க தேவா அவர் கேட்டு கொண்டதிற்கிணங்க ஒரே ஒரு குவளை ஊற்றித் தந்ததைக் குடித்துவிட்டான்.

அதன் பின் அவன் அங்கே நிற்காமல் பைக் ஏறி அதனை இயக்கிய போது தலை கிறுகிறுத்தது

“ஒரு கிளாஸுக்கா இப்படி சுத்துது” அவன் தலையை உலுக்கிக் கொண்டே மீண்டும் தன் பைக்கை இயக்கினான்.  ஆனால் அது இயங்க மாட்டேன் என்று மறுக்க,

“இரு தேவா… நம்ம வண்டிலேயே வூட்டுக்குப் போயிடு... ராஜுவைக் கொண்டு போய் வுட சொல்றேன்” என்று தயா பெருந்தன்மையாகக் கூற,

“அதெல்லாம் பரவாயில்ல ண்ணா” என்ற தேவாவின் மறுப்பைப் பொருட்படுத்தாமல் தயா ராஜுவை அழைத்துத் தன்னுடைய காரில் அவனைக் கொண்டுவிட சொன்னான்.

தேவாவிற்கு தலைச் சுற்றவும் ராஜு அவனைப் பின்புற இருக்கையில் சாய்ந்து அமர்ந்து கொள்ள வைத்தான். அதன் பின் ராஜுவிடம் தயா கண் ஜாடையில் ஏதோ தெரிவிக்க அவனும் தலையை அசைத்து காரை இயக்கினான்.

அவன் காரை நடுவழியில் நிறுத்துவிட அப்போதிருந்த மனநிலைக்கு தேவாவிற்கு நடப்பது ஒன்றும் தெரியவில்லை. அந்தக் கணம் யாரோ ஒரு பெண் அவனை இடித்துக் கொண்டு அமர்ந்தாள்.

அவன் சிரமமப்பட்டு கண்களைத் திறந்து பார்க்க, “நம்ம வேணிதான் தேவா… தெரு முனையில இறங்கிக்கும்” என்று ராஜு விளக்கமாகக் கூற தேவாவிற்கு எல்லாம் அரை போதை நிலையில்தான் மூளைக்குச் சென்று சேர்ந்தது.

ராஜு வேணியிடம் கண்ணைக் காட்டிவிட்டு காரை ஓட்டத் தொடங்க அவள் தேவாவிடம் அத்துமீறத் தொடங்கியிருந்தாள்.

முதலில் அவனுக்கு எதுவும் புரியவில்லை. சட்டென்று அவனுக்கு நெருக்கமாக இருந்த அந்தப் பெண்ணின் முகத்தை பார்த்த நொடி மூளை சுதாரித்து கொள்ள அவளை இழுத்துத் தள்ளிவிட்டு,

“மவளே சங்கறுத்துப் போட்டிருவேன்… என் அமியைத் தவிர எவளையும் செத்தாலும் தொட மாட்டேன்” என்று கூற அவள் மிரண்டு ஒதுங்கி அமர்ந்தாள்.

“அடிங்க வண்டியை நிறுத்துடா” என்ற தேவாவின் குரல் கர்ஜனையாக ஒலிக்க ராஜு மிரண்டு வண்டியை நிறுத்த அவன் இறங்கிவிட்டான்.

தேவா காரை விட்டு இறங்கி விட, “இரு தேவா நான் வூட்டுல கொண்டு போய் வுடுறேன்” என்று ராஜு சொல்ல சொல்ல அவன் தள்ளாட்டத்துடன் நடந்து சென்று கொண்டே இருந்தான்.

நேராக தன் வீட்டை அடைந்தவன் கதவை உடைக்காத குறையாக, “அமி அமி” என்று தட்டிக் கொண்டே இருந்தான். பதிலும் இல்லை. யாரும் கதவையும் திறக்கவில்லை.

வெகுநேரம் கழித்து கதவு திறக்கப்பட கதவின் மீது சாய்ந்திருந்தவன் தடுமாறி அவள் மேலேயே விழ அமி மிரண்டு போனாள். அப்போதே அவன் குடித்திருக்கிறான் என்பதை அறிந்து அருவருப்புடன் அவனைத் தள்ளிவிட்டு,

“எருமை… குடிச்சிருக்கியா?” என்று கேட்க,

“கொஞ்சமா” என்றவன் போதை நிலையில் தடுமாறியபடி பதில் சொல்ல,

“செருப்பாலடி… குடிச்சிட்டு வந்து எந்த தகிரியத்துல கதவைத் தட்டின” என்று அவள் சீற்றமாகக் கேட்டாள்.

“நீ வந்து திறப்பங்குற தகிரியத்துலதான்டி என் செல்ல குட்டி” என்றவன் நெருங்கி அவள் கன்னத்தைக் கிள்ள,

“சீ பே” என்று அசூயை உணர்வுடன் அவனை விலக்கிவிட்டு அவள் படுக்கையறைக்குள் சென்று படுத்துக் கொண்டாள்.

அவன், “அமி குட்டி” என்று ஒரு மாதிரி குழறிக் கொண்டே உள்ளே வர,

“ஒழுங்கு மருவாதையா போய் வெளியே படுத்துகோ… சொல்லிட்டேன்” என்றவள் சொல்லிவிட்டுப் போர்வைக்குள் சுருண்டு கொள்ள அவனோ அவள் சொல்வதை காதில் வாங்காமல் அருகில் வந்து அவளை அணைக்க முற்பட்டான்.

“தேவா வுடு… வுடுறா” என்றவள் அவனை விலக்கி விட அவன் பிடியோ இரும்பு பிடியாக இருந்தது.

“இன்னா பண்ற நீ… குடிச்சிட்டு வந்தா என் பக்கத்துல வர கூடாதுன்னு நான் ஏற்கனவே உன்னான்ட சொல்லிகீறேன் இல்ல”

“இல்லன்னா மட்டும்… நீ என்னைப் பக்கத்துல விட்ருவியா என்ன? ஒரு வாரமாச்சுடி… நானும் காஞ்சு கருவாடா போயிருக்கேன்” என்றவன் அவளை இழுத்துப் படுக்கையில் தள்ளிவிட்டான்.

“தேவா… நான் ஏற்கனவே காண்டுல இருக்கேன்… என்னை வுடு… எனக்குப் பிடிக்கல”

“இன்னாடி பிடிக்கல… நான் உன் புருஷன்டி”

“தேவா வேணாம் தேவா” என்ற அமியின் எதிர்ப்புகள் கோபங்கள் எதுவும் தேவாவை நிறுத்தவில்லை.

“எனக்கு வோணும்டி” என்றவன் சற்றே மூர்க்கத்தனமாக  அணைத்துப் பிடிக்க அதற்கு மேல் அமியால் போராட முடியவில்லை. மனதளவில் நொறுங்கிப் போனவளுக்கு உடலால் எதிர்க்கும் சக்தியில்லை.

இரு வாரங்களாக அவர்களுள்குள் உண்டான சண்டையின் காரணமாக அவள் தள்ளி வைத்த கடுப்பை எல்லாம் சந்தர்ப்பம் பார்த்து அந்தப் போதை நிலையில் கொஞ்சம் அதிகமாகவே காட்டிவிட்டான். 

விடிந்த பிறகே தான் செய்த காரியம் அவன் மூளைக்கு உரைத்தது.

‘என்னடா இப்படி பண்ணிட்ட தேவா’ என்றவன் தன்னைத்தானே திட்டியபடி தலையிலடித்துக் கொண்டுவிட்டு,

‘ஒரு கிளாஸ் குடிச்சதுக்கேவா… அப்படி என்ன எழவு சரக்கோ அது’ என்று எழுந்து படுக்கையை விட்டு வெளியே வர, அமியை எங்கேயும் காணவில்லை. அவன் உள்ளம் படபடத்தது.

பக்கத்து வீட்டுப் பெண்ணிடம், “யக்கா… அமியைப் பார்த்த” என்று விசாரிக்க,

“காலங்காத்துல எங்கேயோ கிளம்பி போனா… எங்கடி போறன்னு கேட்டேன்… ஒன்னும் சொல்லாம போயிட்டா” என்று சொல்ல,

“ஐயோ!” என்றவன் தலையைப் பிடித்துக் கொண்டான்.

“இன்னா…  திரும்பியும் உங்க இரண்டு பேருக்குள்ள சண்டையா?” என்றவள் கேட்க,

“அதல்லாம் இல்ல க்கா” என்றவன் அவசரமாக வீட்டிற்குள் சென்று உடையை மாற்றிக் கொண்டு அவளைத் தேடிச் சென்றான்.

அவள் முன்பு இருந்த வீட்டிற்குச் சொல்ல, அங்கிருந்த குடித்தனவாசிகளோ அவனை ஆர்வமாக வரவேற்று, “வா தேவா… எங்க அமியைக் கூட்டியாரல” என்று கேட்கவும் அவனுக்கு திக்கென்றானது.

இங்கேயும் அவள் இல்லையென்றால் எங்கே சென்றிப்பாள் என்றவன் என்ன யோசித்தும் அவனால் யூகிக்கவே முடியவில்லை. பித்துப் பிடித்தவன் போல பைக்கை எடுத்துக் கொண்டு அவளைத் தேடி அலைந்தான்.

காலையில் ஆரம்பித்த தேடல் மாலை சூரியன் அஸ்தமனத்தை நெருங்கியும் முடியவில்லை. அவனுக்குப் பைத்தியம் பிடிக்காத குறைதான்.

அப்போதுதான் இரண்டு நாள் முன்பு அவளை சந்திக்க வந்த இன்ஸ்பெக்டர் ரவியின் நினைவு வந்தது. ஒரு வேளை அவள் தன்னை வேண்டாமென்று விட்டுவிட்டு தன் அப்பாவிடம் செல்ல முடிவெடுத்துவிட்டாளோ?

அந்த எண்ணமே அவனைச் சுக்குநூறாக நொறுக்கிப் போட்டது. இதற்கிடையில் தயா அவனைக் கைப்பேசியில் அழைத்து நேரில் வர சொன்னான்.

அவன் துவண்டு சோர்ந்த முகத்துடன் வந்து நின்றதைப் பார்த்து, “இன்னா தேவா… இப்படி வந்து நிற்குற… என்னாச்சு?” என்று கேட்க

“காலையில இருந்து அமியைக் காணோம் ண்ணா… தேடினுகீறேன்” என்றவன் சொல்லவும் தயா மனதில் எழுந்த உற்சாகத்தை அடக்கி கொண்டு,

“நம்ம ஏரியா முழுக்க நல்லா தேடிப் பார்த்தியா?” என்று கேட்டான்.

“தேடிட்டேன் ண்ணா… கிடைக்கல” என்றவன் சோர்வுடன் உரைத்தான்.

அவனை ஏறஇறங்க பார்த்த தயா, “எவனாயாச்சும் இழுத்துன்னு கிழுத்துன்னு ஓடி இருக்க போறா… ஏன்னா நம்ம ஏரியால இதெல்லாம் சகஜம்தானே” என, தேவாவின் இரத்தம் கொதித்தது.

“என் அமி அப்படி அல்லாம் செய்ய மாட்டா” என்றவன் உறுதியாகச் சொல்ல,

“ஏன் செய்ய மாட்டா… அல்லாம் செய்யவா… நீதான் ஏதோ அவகிட்ட பார்க்காததைப் பார்த்த மாதிரி உருகுற… அவ உன்னை மனுஷனா கூட மதிச்ச மாதிரி எனக்குத் தெரியல.

தே**மூ… எங்க எவன் படுக்கையில கீறாளோ?” என்று தயா வக்கிரமான தன் எண்ணங்களை வார்த்தைகளை விட்ட மறுகணமே சீற்றமாக எகிறிக் கொண்டு வந்த தேவா அவன் கழுத்தைப் பிடித்து,

“மவனே சாவடிச்சு போட்டிருவேன்… என் அமியைப் பத்தி இப்படியெல்லாம் பேசுனன்னா” என்றான்.

சுற்றியிருந்த தயாவின் ஆட்கள் தேவாவைப் பிடிக்க வர அவன் தயாவைக் கீழே தள்ளிவிட்டு, “கொலை வெறில இருக்கேன்… எவனாவது கிட்ட வந்தீங்க… சாமானை எடுத்து சொருகிடுவேன்” என்று இடுப்பிலிருந்து கத்தியை எடுத்துக் காட்டிவிட்டு அகன்றான்.

தயாவை அவன் ஆட்கள் தூக்கிவிட்டு, “இரு ண்ணா… அவனைக் கொன்னு புதைச்சிட்டு வரேன்” என்று சீறலாகச் சொல்ல,

“தேவா மேல எவனும் கை வைக்கக் கூடாது… எனக்கு தேவா வேணும்… அவன்தான் என்னோட பலம்… நீங்கெல்லாம் போய் அந்த தே** வெட்டி குழி தோண்டிப் புதைச்சிட்டு வாங்க… அப்பத்தான் அவ ஓடி போயிட்டான்னு இவனை நம்ப வைக்க முடியும்” என்று கண்களில் வெறியுடன் சொல்ல அவர்கள் ஒட்டுமொத்தமாக அமியைத் தேடிச் சென்றனர்.

தேவா மறுபுறம் அமியைத் தேடி ஓய்ந்து போய் மெரீனா கடற்கறைக்கு வந்திருந்தான். அவர்கள் காதலித்த காலத்தில் அங்கேதான் வருவார்கள். கைகளைப் பிடித்துக் கொண்டு கடலை வெறித்தபடி அமர்ந்திருந்த நாட்கள் அவன் நினைவுகளில் நிழலாடின.

“அமி… எங்கடி போன… என்னை வுட்டுப் போயிட்டியா… நான் வேணாம்னு போயிட்டியா” என்றவன் மணலில் மண்டியிட்டு கரத்தைக் குத்தி ஆவேசமாகக் கத்தி அழுதான்.

அப்போது மின்னலடித்தது போல எதிரே இருந்த பெண் அமியாகத் தெரிய அவன் கண்களைத் துடைத்து கொண்டு உற்றுப் பார்த்தான்.

அவள் அமியேதான்.

கடலை வெறித்தபடி அமர்ந்திருந்தாள்.

akila.l has reacted to this post.
akila.l

You cannot copy content