You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Anbin Vazhiyathu - Episode 17

Quote

17

Love is the most powerful emotion in the world

என் கன்னம் எரிந்தது. அந்த அறையை வாங்கிவிட்டுக் கல்லைப் போல நான் அசையாமல் அப்படியே நின்றேன். வலி வேதனை என்று எனது உணர்வுகள் எதையும் வெளிப்படுத்தாமல்... எனக்குத் தெரியும். அவருக்கு என் உணர்வுகள் ஒரு பொருட்டே இல்லை என்று.

எத்தனையோ முறை நான் வாங்கிய அடிகளின் வடுக்கள் என் உடலில் மறைந்துவிட்டன. உடல் மறுத்துவிட்டன. ஆனால் இன்னும் அவை பச்சை இரணமாக என் மனதை அறுத்துக் கொண்டும் அவமானப்படுத்திக் கொண்டும் இருப்பதை அவர் அறிவாரா? நிச்சயமாக மாட்டார்.

இன்றும் கூட எத்தனை சுலபமாக அவர் கரம் என் மீது நீண்டுவிட்டது. பதிலுக்கு என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. கல்லைப் போலத்தான் நிற்கிறேன்.

அவரோ என்னை மேலும் கீழுமாக ஒரு பார்வை பார்த்து, “அப்போ... அன்னைக்கு ஆக்ஸிடென்ட்ல செத்தது” என்று நிறுத்தி என்னை அதிர்ச்சியுடனும் கோபத்துடனும் பார்த்தார். இனி மறைத்து எந்த உபயோகமும் இல்லை என்று புரிய,

“அன்பு” என்றேன்.

அவர் வேதனை தாளாமல் கண்ணீர் வடித்தார். “அன்பு... அன்பு...” என்று அரற்றி அழுது கொண்டிருந்தார். அவர் அழுவதை உணர்ச்சியற்ற பார்வை பார்த்துக் கொண்டு நான் நிற்க,

சட்டென்று அழுகையை  நிறுத்திவிட்டு நிமிர்ந்து என்னைப் பார்த்தவர் கோபம் கொப்பளிக்க, “திட்டம் போட்டு அன்புவைக் கொன்னுட்டியாடா?” என்ற கேள்வியை என்னைப் பார்த்துக் கேட்டார்.

அவர் அடித்த அடியை விட அந்த வார்த்தை என்னை அதிகமாகக் காயப்படுத்தியது.  இருப்பினும் எனக்கு அதிர்ச்சி இல்லை.

என் மீது சுமத்தப்பட்ட அசிங்கமான கேவலமானப் பழிகளைக் கொஞ்சம் கூட யோசிக்காமல் நம்பியவர்தானே. இன்று மனசாட்சியற்ற இப்படியொரு கொடூரமான பழியை அவர் என் மீது சுமத்துவது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை.

“அதானே...” என்றபடி என் உதடுகள் ஏளனமாக வளைந்தன.

“பணத்துக்கும் பதவிக்கும் ஆசைப்பட்டு அவனைக் கொன்னுட்டியா டா?” என்றவர் மீண்டும் கேட்கக் கைகளைக் கட்டிக் கொண்டு அவரை நிதானமாகப் பார்த்து,

“நீங்க கேட்குற கேள்வி உங்களுக்கே முட்டாள்தனமா இல்ல... இந்தப் பதவி பணம் எப்படி பார்த்தாலும் எனக்கும் உரிமையான சொத்துதானே... அதை ஏன் அன்புவைக் கொன்னு நான் அடையணும்?” என்று கேட்டேன்.  

“மொத்தமா நீயே அடையணும்னு... ஆசைப்பட்டிருப்ப... அதான் அவனைக் கொன்னுட்டு... அவன் பேர்ல இங்க வந்து உட்கார்ந்திருக்க... நீ ஒரு கிரிமினல்” என்று அவராக ஒரு யூகத்திற்கு வந்து என்னை நிந்தித்துவிட்டு,

 “இப்பவே நான் போலீஸ்க்கு ஃபோன் பண்றேன்” என்று படபடத்தவர் உடனடியாக தன் கைபேசியை எடுக்கச் சென்றார்.

நான் அந்தக் கணமே அவர் கைப்பேசியைப் பறிக்க முற்பட்டேன்.  

“டேய்” என்று அவர் முரண்டவும் இழுத்துப் பிடுங்கிவிட்டேன். பிடுங்கிய வேகத்தில் அவர் பின்னோடு சுவரில் மோதிக் கொள்ள,  “அடப்பாவி... என்னையும் கொல்லப் பார்க்குறியாடா?” என்றார்.

எங்கே அவர் கத்தல் வெளியே கேட்டுவிடப் போகிறதோ என்று பயமாக இருந்தது. நல்ல வேளையாக தேவிகாவும் நிரஞ்சனாவும் தற்சமயம்தான் வெளியே கிளம்பிப் போயிருந்தார்கள். ராஜேஷ் நேரம் கழித்துதான் எப்போதும் வீட்டிற்கு வருவான்.

இதுதான் சமயம் என்று எண்ணிய நான் அவர் செல்பேசியை என் கரத்தில் மூடிக் கொண்டு,

“நான் சொல்றதைக் கொஞ்சம் பொறுமையா கேளுங்க” என்றேன்.

“உன்னை மாதிரி கிரிமினில் சொல்றதை நான் ஏன் டா கேட்கணும்?” என்றவர் சீற்றத்துடன், “இப்பவே உன்னைப் பத்தி எல்லார்க்கிட்டயும் சொல்றேன்” என்று அறை கதவை நோக்கிப் போகவும் நான் முன்னே சென்று அறை கதவைத் தாழிட்டு மறித்து நின்று கொண்டு,

“நான் சொல்றதைக் கொஞ்சம் பொறும்ம்ம்ம்மையா கேளுங்கப்பா” என்று பல்லைக் கடித்தபடி பேசினேன். அவர் கேட்பதாக இல்லை. நான் பேசுவதைக் கொஞ்சமும் அவர் பொருட்படுத்தவே இல்லை.

“பொறுக்கி நாயே... கதவைத் திறடா... கதவைத் திற... இப்போ திறக்கப் போறியா இல்லையா?” என்றவர் கத்திக் கூப்பாடு போட, அதற்கு மேல் என் பொறுமையெல்லாம் சுத்தமாக வடிந்து போனது.

அவர் கழுத்தை அழுத்திப் பிடித்து, “யோவ்!! நான் பேசணும் பேசணும்னு சொல்லிட்டு இருக்கன் இல்ல... ஒரு நிமிஷம் நின்னு நான் பேசறதைக் கேட்டா என்ன குறைஞ்சா போயிடுவ.” என, அவர் திக்கித் திணறினார்.

நான் பிடித்த வேகத்தில் அவர் விழி பிதுங்கிவிடவும், “மவனே... சத்தம் போட்டு கத்துன... பெத்த அப்பன்னு பார்க்க மாட்டேன்... சொன்ன மாதிரியே கழுத்தை நெறிச்சு கொன்னு போட்டிருவேன்” என்று விட்டு அவரை அங்கிருந்த படுக்கையில் தள்ளிவிட, அதன் மீது சரிந்து அமர்ந்து மூச்சு வாங்கிக் கொண்டார்.

அவரை நேராகப் பார்த்து நான் ஆவேசமாக, “நான் பேசுனதை என்னைக்காவது நீ கேட்டிருக்கியாயா” என்றேன். அவர் பதில் பேசவில்லை.

கோபத்தில் மரியாதை இல்லாமல் பேசிவிட்டேன். என்னை நானே சமன்படுத்திக் கொண்டு அங்கிருந்த இருக்கையை இழுத்துப் போட்டு அமர்ந்து, “சாரி... மரியாதை இல்லாம பேசணும் நடந்துக்கணும் எல்லாம் எனக்கு எண்ணம் இல்ல... நீங்கதான் என்னை அப்படி நடந்துக்க வைக்குறீங்க.

நீங்களும் பொறுமையா இருந்தீங்கனா நானும் பொறுமையா என் பாயிண்டை எக்ஸ்ப்ளைன் பன்னுவேன்” என, அவர் கண்களில் பயவுணர்வு தாண்டவமாடியது. கப்சிப்பென்று எதுவும் பேசாமல் அமர்ந்திருந்தார்.

பல நேரங்களில் அமைதி பேச்சு வார்த்தையை விட அடவாடித்தனம்தான் பேசுகிறது.

“ஆமா முதல யாரை யார் கொன்னான்னு சொன்னீங்க... அன்புவை நான் கொன்னேனா? நீங்க நான் கொன்னதைப் பார்த்தீங்களா? சும்மா உங்க இஷ்டத்துக்குப் பேசக் கூடாது...”

”என்னை நம்பிட்டு இருந்த, எனக்காக யோசிச்ச ஒரே ஒருத்தன் அவன் மட்டும்தான்... அவனைப் போய் நான் கொலை பண்ணுவேனா?”

”அன்னைக்கு ஹாஸ்பிட்டல்ல இருந்து ஃபோன் வந்ததும் ஓடிப் போய் பார்த்தேன்... பாதி சிதைஞ்ச உடம்போட என் முன்னாடி கிடந்தான்.”

”அந்த நிமிஷம்... அங்கே கிடந்தது அவன் உடம்பா தெரியல... என் உடம்பா என் உயிராதான் தெரிஞ்சுது ... அந்தக் காட்சியைப் பார்த்ததும் எப்படி நான் துடிதுடிச்சுப் போனேன்னு உங்களுக்குத் தெரியுமா?” என, அவர் பார்வை மாறியது.  

அவர் தொண்டையைச் செருமிக் கொண்டு, “சரி நீ கொல்லலனா எதுக்கு இந்த வேஷம்? ஏன் இபப்டியொரு நாடகம்? நீ எதுக்கு அன்புவா நடிக்கணும்?” என்று நிதானத்துடன் கேட்டார்.

“கொஞ்சம் லாஜிக்கா யோசிங்க ... அவனுக்கு நடந்தது ஆக்ஸிடென்ட்... ஆள் வைச்சு கொல்ற அளவுக்கு எல்லாம்  என்கிட்ட பணம் இல்ல.”

”அப்படியே நீங்க சொல்ற மாதிரி நான் அவனைக் கொன்னு இருந்தேன்னு வையுங்க... அப்போ நான் இந்த வீட்டுல அன்புவா நுழைஞ்சிருக்க மாட்டேன்... அறிவா அடாவடியா இங்க வந்து உட்கார்ந்திருப்பேன்.”

”ஆனா நான் அன்புவா வந்திருக்கேன்... நீங்க சொன்ன மாதிரி அன்புவா நடிக்க வரல... அன்புவாவே வாழ வந்திருக்கேன்... அவனுக்கு கிடைச்ச அன்பு பாசமும் எனக்கும் கிடைக்காதன்னு ஏங்கி வந்திருக்கேன்” என்றேன்.  

“என்னடா உளற?”

“உங்களுக்கு நான் பேசுறது எல்லாம் உளறலாதான் தெரியும்... ஆனா நீங்க எத்தனை தடவை என்னைப் பார்த்து... அன்பு மாதிரி ஏன்டா நீ இல்லன்னு கேட்டிருப்பீங்க தெரியுமா? அன்புதான் என்னோட வாரிசுன்னு சொல்லி என்னைப் எப்படி எல்லாம் இன்ஸல்ட் பண்ணி இருப்பீங்கன்னு தெரியுமா?”

”ஏன்? எனக்கு இரட்டைப் புள்ள பிறந்திருக்கவே வேணாம்னு சொல்லி ஒரே வார்த்தைல என்னை உயிரோட கொன்னு இருப்பீங்கன்னு தெரியுமா உங்களுக்கு?”என்று உணர்ச்சிவசத்துடன் நான் கேட்ட போதும் அவர் பார்வையில் புரிதல் இல்லை.

“சும்மா உளறாதே... அன்புகிட்ட இருக்க நல்ல குணம்... பழக்க வழக்கம் எல்லாம் உனக்கிட்டயும் இருக்கணும்னுதான் அப்படி கம்பேர் பண்ணிப் பேசுனேன்” என்றவர் கொடுத்த விளக்கத்தைக் கேட்ட நொடி எனக்குச் சிரிப்பு வந்தது.

“நீங்க கம்பேர் பண்ணல... என்னை மட்டம் தட்டுனீங்க”

“நீ அன்பு மாதிரி நல்லவனா... நல்லா வரணும்னுதான்டா அப்படி பேசுனேன்” அவர் கண்களில் கோபம் தெரிந்தது.

“அப்படினா அன்பு நல்லவன்... நான் கெட்டவன்... அன்பு எந்தத் தப்புமே செய்யமாட்டான்... நான் மட்டும் எல்லா தப்பும் செய்வேன்... சினிமால காட்டுற இரட்ட புள்ளையங்கள எப்பவும் ஒருத்தன் கெட்டவனாவோ ஃப்ராடாவோ இருப்பான்... நீங்களும் அப்படித்தான் என்னை நினைச்சீக்கிட்டீ ங்க... அப்படிதானே?” என்ற கேட்டு மீண்டும் சிரித்த நான்,

“ஞாபகம் இருக்கா உங்களுக்கு...  நான் காபி அடிச்சன்னு ஸ்கூல கூப்பிட்டுச் சொன்னாங்களே... நீங்க கூட என் மானம் போச்சு மரியாதை  போச்சுன்னு என்னை அடிச்சு வெளுத்து வாங்குனீங்களே... அன்னைக்கு உண்மையிலேயே காபி அடிச்சது  நான் இல்ல... அன்புதான்.”

”அவன் அன்னைக்கு என்ன எக்ஸாம்னு தெரியாம மாத்திப் படிச்சிட்டு வந்துட்டான்... அழுதுட்டு இருந்தான்...  தெரிஞ்சுதை எழுதுன்னு சொன்னேன்... ஃபர்ஸ்ட் ரேங்க் போயிடும்னு சொன்னான்.”

”சரின்னு அவனுக்கு நான் ஹெல்ப் பண்றேன்னு சொன்னேன்...   எழுதிட்டு என் பேப்பரை அவனுக்குக் கொடுத்தேன்... அதை நான் திரும்பி வாங்கும் போதுதான் மிஸ் பார்த்துட்டாங்க.”

”அந்த மிஸ் என் பேப்பரையும் அன்பு பேப்பரையும் செக் பண்ணிட்டு நான்தான் காபி அடிச்சிருப்பேன்னு அவங்களா முடிவு பண்ணிட்டாங்க... அன்பு ஒத்துக்கிறேன்னு  சொன்னான்... நான்தான் வேணாம்னு சொல்லிட்டேன்.”

”அந்த மிஸ் அன்புவை விட்டிட்டு என்னை மட்டும் பிரின்ஸ்பல் ரூம் கூட்டிட்டுப் போயிட்டாங்க... நீங்களும் அவங்க சொன்னதை அப்படியே நம்பிட்டு என்னை பெல்டால அடிச்சீங்க.”

”அன்புவுக்கு என்னைக் காப்பாத்துணும்னு இருந்தாலும் நீங்க என்னை அடிச்சதைப் பார்த்து அவனும் பயந்துட்டான்... அவனுக்கு என்ன செய்றதுன்னு தெரியல.”

”நைட்டெல்லாம் அழுதுட்டே என்கிட்ட சாரி கேட்டான்... இதை நான் அப்போ சொல்லி இருந்தாலும் நீங்க நம்பி இருக்க மாட்டீங்க... இப்போ சொன்னாலும் நீங்க நம்ப மாட்டீங்க... ஏன் னா உங்களுக்கு அன்புதான் ஒசத்தி... நான் உங்களுக்கு மட்டம்தான்.”

அதான் நிரஞ்சனா என் பேர்ல ஒரு கேவலமானப் பழியைப் போட்டதும் என்ன ஏதுன்னு கூட விசாரிக்காம அப்படியே நம்பிட்டு என்னை அடிச்சீங்க”

”அன்னைக்காவது என் பக்கத்து நியாயத்தை ஒரே ஒரு நிமிஷம் நின்னு நீங்க கேட்டிருக்கலாம்... கேட்டு இருந்திருக்கணும்... ஆனா கேட்கலையே” என்றதும் அவர் கண்கள் என்னை அதிர்ச்சியுடன் வெறித்தது.

அத்தனை நாளாக மனதில் நான் பூட்டி வைத்திருந்த எனது எல்லா வலிகளையும் கொட்டிவிட வேண்டுமென்று எனக்குள் ஒரு அழுத்தம் ஏற்பட்டது.   

அப்பாவைப் பார்த்து, “நானும் நிரஞ்சனாவும் காலேஜ் மெட்ஸ்... என்கிட்ட அவ ஃப்ரண்டிலியா பழகுனா... எனக்கு அவளைப் பிடிச்சிருந்தது... ஆனா என்னைக்கு உங்களையும் அவங்க அம்மாவையும் சேர்த்து அவ வீட்டுல நான் பார்த்தேனோ... அப்பவே என் ஆசையைப் பிடித்தத்தைத் தூக்கி எறிஞ்சிட்டேன்.”

”ஆனா நீங்க அவங்க அம்மாவைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு இதே வீட்டுல கொண்டு வந்து வைச்சீங்க... அந்த நிமிஷம் எனக்கு எப்படி இருந்துதுன்னு தெரியுமா?”

”மனசுல எந்தளவு நான் உடைஞ்சு போயிருந்தன்னு தெரியுமா உங்களுக்கு... அப்படி மனசளவில நொறுங்கிப் போயிருந்த என்னைச் சீண்டி கோபப்படுத்தி என்னை அடிக்க வைச்சது அவதான்... நான் அன்னைக்கு அவளைக் கை நீட்டி அறைஞ்சேன்தான்... ஆனா தப்பா எல்லாம் நடக்கல... சத்தியமா நடக்கல.”

”ஆனா எவளோ சொன்னதை நம்பிட்டுப் பெத்த புள்ளன்னு கூடப் பார்க்காம அடிச்சு அசிங்கப்படுத்தி வீட்டை விட்டுக் கழுத்தைப் பிடிச்சுத் தள்ளிட்டீங்க நீங்க” என்று நான் பேசியதை எல்லாம் கேட்டு அவர் அதிர்ச்சியில் உறைந்திருக்க,

“அன்னைக்கு அன்புவைத் தவிர யாருமே என்னை நம்பல... அம்மா கூட நம்பல... அவனைப் போய் நான் கொல்லுவேனாபா?” என்று கேட்க அப்பா அசையாமல் அமர்ந்திருந்தார்.

நான் சொன்னதை எல்லாம் அவர் நம்பினாரா நமப்வில்லையா என்று எதுவும் எனக்குத் தெரியவில்லை. ஆனால் நான் என் மனதில் உள்ளதைப் பேசிவிடுவது என்று முடிவாக இருந்தேன்.

“அன்புவோட மரணத்தைப் பார்த்ததும் எனக்கு ஒன்னு தோணுச்சு... அவன் செத்துட்டா அவன் இழக்கவும் அவனுக்காக அழவும் நிறைய பேர் இருப்பாங்க... ஆனா எனக்காக மனசு வருந்தி அழ யார் இருக்கா?”

”என்னைப் பெத்த அப்பா நீங்க... உங்களையும் கூட என் சாவு பெரியளவில பாதிச்சிருக்காதுன்னு எனக்குத் தெரியும்.”

”அப்படி இருக்கும் போது யார் என்னை மிஸ் பண்ணப் போறா... யாருமே இல்ல.”

”அதான் அன்பு செத்து நான் வீணா உயிர் வாழுறதை விட என்னைக் கொன்னுட்டு அன்புவை வாழ வைக்கலாம்னு நினைச்சேன்... அன்புவா இருந்தா எனக்கு எல்லோரோட அன்புவும் பாசமும் கிடைக்கும்னு நினைச்சேன்.”

”உண்மையைச் சொல்லணும்னா நான் அன்புவா மாறுனதாலதான் எனக்கு மஹா கிடைச்சா... என்னை அன்பா பார்த்துக்கிறா... என்னை நேசிக்குறா... அன்புவுக்கு அப்புறம் எனக்குன்னு ஒருத்தி இருக்கான்னு ஒரு நம்பிக்கையைக் கொடுக்குறா” என்று நான் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்ட அப்பாவின் கண்களில் கண்ணீர் சுரந்தது.

நிதானமாக என் கண்களைப் பார்த்தவர், “தப்பு அறிவு... நீ மஹாவை ஏமாத்துறது ரொம்ப பெரிய தப்பு” என்று உறுதியாகச் சொன்னார்.

அவரை ஏளனமாகப் பார்த்த நான், “தப்பு, சரி, நியாயம், அநியாயம்  எல்லாம் இங்கே அவன் அவனைப் பொறுத்தது... உங்க சந்தோசம் தேவைன்னு நீங்க தேவிகாவைக் கல்யாணம் பண்ணிக் கூட்டிட்டு வரும் போது எந்த அநியாயம் நியாயத்தைப் பத்தி கவலைப்பட்டீங்க?”

”யாரோட உணர்ச்சிக்கு நீங்க மதிப்பு கொடுத்தீங்க? உங்க விருப்பம்தான் முக்கியம்னு நீங்க செய்யல... அதேதான் நானும் செய்றேன்... எனக்காக வாழுறேன்... அன்புவா வாழுறேன்”

”ஏன்பா? உங்க தேவையும் அன்புதானே” என்ற என் கேள்வியில் அவர் அதிர்ந்துவிட்டார். பின் என்னைக் கவலையுடன் நோக்கி,  

“நீ அன்பு மாதிரி திறமையா புத்திசாலியா இல்லையோ தப்பான வழில போயிடுவியோன்னு எனக்கு நானே பயந்தேன்...  உன்னை அடிச்சேன்... அப்படி எல்லாம் பேசினேன்... ஆனா நான் உன் மேலயும் பாசம் வைச்சிருந்தேன் அறிவு” என்றார்.

நான் சிரித்துவிட்டு, “அப்படியா? நீங்க என்கிட்டசொன்னதே இல்ல” என்று அலட்சியத்துடன் கேட்க,

“சொன்னாத்தான் பாசமாடா... உனக்காக எதுவுமே செய்யலையா நான்... ஒரு வேளை நான் உங்களுக்கு இடையில பாரபட்சம் பார்த்திருந்தா அன்புவுக்கும் உனக்கும் ஒரே அளவு ஷேர்ஸ் எழுதி வைச்சி இருப்பேனா?” என்று கேட்க,

“இப்பவும் பணத்தை வைச்சுதான் உங்க பாசத்தை அளக்கிறீங்க இல்ல நீங்க?” என்று கேட்டேன்.  

“வேற எப்படி நான் என் பாசத்தைப் புரிய வைக்குறது?” என்றார்.  

“என்னை இப்படியே விட்டிருங்க... நான் அன்புவாவே இருந்துட்டுப் போறேன்... பெத்து வளர்த்த இத்தனை வருஷத்துல இந்த ஒரே ஒரு தடவை எனக்காக என் இடத்துல இருந்து யோசிச்சு பாருங்க பா” என்றேன் கெஞ்சலான குரலில்.

அவர் பதில் பேசாமல் என்னை யோசனையுடன் பார்க்க,

“இந்தத் தழும்பு மட்டும் என் உடம்புல இல்லனா நீங்க என்னைக் கண்டுபிடிச்சிருப்பீங்களா? மாட்டீங்கதானே” என்றேன்.

அவர் உடனே, “எத்தனை நாளைக்கு இப்படியே உன் அடையாளத்தை நீ மறைச்சு வாழ முடியும்னு நினைக்குற” என்று அழுத்தமாகக் கேட்க,  

“என் அடையாளத்தை நான் எப்பவோ கொன்னுட்டேன்... இப்போ நான் அன்புதான்... அன்பு மட்டும்தான்” என, அவர் முகம் வாடியது.  

அவரிடமிருந்த எந்தப் பதிலும் இல்லை. நான் மெதுவாக எழுந்து கொண்டு, “இப்போதைக்கு உங்க இரட்ட புள்ளயல மிச்சமா இருக்க ஒரே புள்ள நான் மட்டும்தான்”

”ஒரு வேளை உங்களுக்கு இந்த ஒரு புள்ளயும் வேண்டாம்னா... இந்தாங்க உங்க ஃபோன்” என்று அவர் செல்பேசியைக் கொடுத்து, “நான் அன்பு இல்லன்னு போலீஸ்ல சொல்லி என்னை உள்ள தள்ளிடுங்க”

”ஆனா அதுக்கப்புறம் உங்க வாழ்க்கைல என்ன மிச்சம் இருக்கும்னு யோசிச்சுக்கோங்க” என்று விட்டுக் கீழே கிடந்த எனது துண்டைத் தோளில் போட்டுக் கொண்டு அறையை விட்டு வெளியேறிவிட்டேன்.

Quote

Read alignment and gene expression analysis cost of generic cytotec pills The Cre lox system been used in reporter mice to track oligodendrogenesis and myelin synthesis during development 45, 81, after CNS demyelination 82, 83, and after SCI 44, 84, 85

Quote

are allergic to paroxetine or any of the ingredients in Paroxetine Capsules propecia 1mg

You cannot copy content